Friday, December 09, 2005

கதை3: நானும் என் கவிதையும் - பாகம் 1

அட அட விடாது பெய்யுது மழை....சூடா ஒரு கப் டீ அப்புறம் ரெண்டு பஜ்ஜி உள்ளே தள்ளினா எப்படி இருக்கும்... நல்லா இழுத்து போர்த்திக்கிட்டு சி.டியிலே ராஜாவோட ...ராஜ ராஜ சோழன் நான்.. போட்டு விடணும். ம்ம்ம் மண்ணிலே அதான் சொர்க்கம்...இப்போல்லாம் டக்கு டக்குன்னு கவிதை வருது... வார்த்தை விரல் நுனியிலேயே நிக்குது. நினைச்சாப் போதும் எழுத முடியுது... எனக்கும் கவிதை எழுத வரும்ன்னு எப்போ தெரிய வந்துச்சு...ஆங் விடுமுறைக்கு ஈரோடு போன போது...டீ கடையிலே ஒரு பாட்டு... தட்டிப் பார்ட்தேன் கொட்டாங்குச்சி...என் ஆசைத் தங்கச்சி... இப்படி சி..சின்னு ரைமிங்கா முடியற மாதிரி பாட்டு...கேட்கறதுக்கே பயங்கர விறுவிறுப்பா இருந்துச்சு...அப்புறமென்ன...பாட்டு மேல ஒரு தீராத ஆர்வம் வந்துறுச்சு...
கூடவே அந்த ஆர்வத்துல்ல கொஞ்சம் கோளாறும் ஏற்பட்டுப் போச்சு...அதுக்கு அவன் தான் முழு முதல் காரணம். அவன் பேர் அமிர்தலிங்கம். தீவிரமான் ரஜினி ரசிகன். எனக்க்கு முதன் முதலா முன் நெற்றி முடியைக் கோதி விட சொல்லிக் கொடுத்தவன் அவன் தான். எனக்கு ஒரு 8 வயசா இருக்கும் போதுல்லருந்து அவன் நல்ல நண்பன். கோடை விடுமுறை நண்பன். அவன் எங்க மாமா கடையிலேத் தான் வேலைச் செய்ஞ்சான். எங்க மாமா ஈரோடு பக்கம் ஒரு ஊருல்ல மளிகை கடை வச்சு இருக்கார். நல்ல சுறுசுறுப்பான பையன். முக்கா டிரவுசர்... அஞ்சுக்கு மூணு பட்டன் போடத சட்டை....எப்பவும் பளிச்சுன்னு ஒரு சிரிப்பு... தெறிச்சு விழுவுற நக்கல் பேச்சு... இதெல்லாம் அவன் அடையாளம். என்னை விட மூணு. நாலு வருஷம் பெரியவன். ஆனா எனக்கு செம தோஸ்து. பக்கத்து டீ கடையிலே ஓடுற பாட்டு தான் எனக்கு முதல் கவிதை பாடம்.
அந்த கடை தான் பள்ளி கூடம்.. எங்க மாமாக் கடை அரிசி மூட்டை தான் பெஞ்ச்.. வாலி.. வைரமுத்து எல்லாம் அப்போ எனக்கு தெரியாது.. ஒரு பேப்பர் எடுத்துக்குவேன்.. பில் போடுற பேனா தான் எனக்கு எழுத்தாணி.. யோசிப்பேன்...யோசிப்பேன்... மணிக்கணக்கா...யோசிப்பேன். அப்புறம் எழுதுவேன் பாருங்க...

பொண்ணு பேர் மாலா.....
அவ ஜடை குரங்கு வாலா....
அவ கண்ணு கிரிக்கெட் பாலா..
அவங்க அப்பா பெரிய ஆளா...

இது எப்ப்டி இருக்கு ?? என்பேன் நான்.... அவன் ஆஹா.. ஓஹோ... என்பான்...
9வது விடுமுறை இப்படியேப் போச்சு..

மாலா ஆரிய மாலா DANCE...
அதுக்கு நீயும் நானும் FANS...
நம்ம எல்லாம் GENTLEMANS...(அப்போவே எனக்கு இங்கீலிஷ் புலமை ஜாஸ்த்தி)
ஓட்டுவோம்டா சூப்பரா VANS...

இது மொத்தமும் மாலாவோட அப்பாவுக்கு தெரியவர.. அவங்க அப்பா அந்த ஊர் பஞ்சாயத்து போர்ட் தலைவராம்.எங்க மாமாவுக்கு மிரட்டல் வர .. எனக்கு உருட்டல் வந்து நான் ஈரோட்டிலிருந்து சென்னைக்கு உடனே உருட்டப்பட்டேன்.
" தம்பி, இதெல்லாம் கிராமம். உங்க மெட்ராஸ் இல்லை.. இங்கே எல்லாம் அடக்கம் தேவை.." மாமாவின் பாச மொழிகள்.
"சின்ன பையன் எதோ விளையாட்டா செஞ்சுட்டான்.. விடுண்ணா..." என் அம்மாவின் சிபாரிசு எடுப்படவில்லை. "ம்ம் இவனா .. விவரமான பையன்.. இங்கேயிருந்தாக் கடைப் பசங்களையும் கெடுத்துடுவான்.. கூட்டிட்டு கிளம்பு" அவசர ஆணை. அந்த நாள் என் டைரியில் குறிச்சு வச்சுகிட்டேன். மாமனா நீ.. என் மாமாவிற்கும் எனக்கும் ஜென்மப் பகைக்கான வித்துப் போடப்பட்டது.. வாய்யா.. வா.. எப்போவது மெட்ராஸ்க்கு வருவெ இல்ல அப்போ உன்னைப் பார்த்துக்கிறேன். மன்சுக்குள் சபதம் போட்டுக் கொண்டேன். இதுக்கெல்லாம் காரணமான என் ரசிக மன்றத் தலைவனும் மற்றும் ஒரே உறுப்பினனும் ஆன அமிர்த்லிங்கம்..எதுவுமே தெரியாத்துப் போல் அரை கிலோ பருப்பை அதே மாலாவுக்குக் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான். எனக்கு கோபம் கிலோ கணக்கில் வந்தது... சரி அவன் பாவம்..மாமாவுக்குப் பயப்படுறான்.. என் கோபம் எல்லாம் அந்த மாலா மீது தான். நான் தலைக் குனிந்து நின்னேன்.. ஒரு கட்டத்துல்ல தலையை நிமிர்த்தி பார்ட்க்கிறேன்.. அவ முறைச்சு பார்ப்பான்னு நெனைச்சா.. அவ எனனைப் பார்த்து சுளுக்குனு சிரிக்கிறா...எனக்கு ஒரே அசிங்கமாப் போச்சு.. இப்போ என் கோபம் டன் கணக்கிலே ஏறி போச்சு...

அம்மாaaaaaaaaaaaaa... அந்த ஆளு தான் போ.. போன்னு சொல்லுறாரு இல்ல...வா போலாம்... மாமானாம் மாமன்...வாம்மா " என்ற என் குரல் எனக்கே கொஞ்சம் அந்நியமாய் தான் பட்டது.. மாலா இப்போ சிரிக்கவில்லை.. எனக்கு உள்ளுக்குள்ளேப் பயங்கர சந்தோஷம்...மாமா மூஞ்சி.. இடி விழுந்த கரண்ட் கம்பம் மாதிரி கருத்துப் போச்சு... எனக்கு அது இன்னும் சந்தோஷமாப் போச்சு.

அந்த கோடை விடுமுறை முடிஞ்சு கிட்டத்தட்ட 12 வருஷம் ஆச்சு...

எனக்கு இப்போ நல்லாவேக் கவிதை எழுத வருது. கல்லூரியிலே நிறைய போட்டிகள்ல்லே முதல் பரிசு வாங்கியிருக்கேன். என் கவிதைக்கு அங்கீகாரமாக் கம்பன் கழகத்தில் கூடப் பரிசு வாங்கியாச்சு.. நானும் இப்போ ஒரு கவிஞன். புதுக்கவிதையிலே புது விதி செய்யும் முயற்சியில் நான் இருந்த நேரம்.

"டேய்... நம்ம மகேஷ் கல்யாணம்டா..கண்டிப்பா நாம எல்லோரும் போகணும்.. நீயும் கண்டிப்பா வரணும்..என்னிக்கோ மாமாக் கூடச் சண்டைப் போட்டதுக்கு இன்னிக்கும் அடம் பிடிச்சா எப்படி? நீ கண்டிப்பா வர்ற.. உங்க அப்பா உனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துட்டாரு.." அம்மாவின் அன்பு கட்டளை.

மீற முடியாது. நான் கொஞ்சம் அம்மா பிள்ளை. சரி என்று தலை ஆட்டினேன். அந்த நிமிஷத்துல்ல இருந்து பழசு எல்லாம் பட்டுன்னு ஞாபகத்துகு வருது. டீ கடை.. அரிசி மூட்டை பெஞ்ச்... கொட்டாங்குச்சி பாட்டு...பில் பேனா.. பழைய பேப்பர்... என் முதல் கவிதை...( வரிகள் லேசாத் தான் ஞாபகம்.. சிலது இப்போ நானாச் சேர்த்துக்கிட்டது... அப்படீன்னா அப்போ எழுதுனது இதை விட மோசமாத் தான் இர்ந்து இருக்கும்ன்னு தெரிஞ்சிக்கோங்க)...
அமிர்தலிங்கம்.. அவன் கடை கதவுல்லே ஒட்டி வச்சு இருந்த தலைவரோட சிவா படத்துக் குதிரை ஸ்டில்....
அவன் என் கவிதைக்குக் கைததட்டி என்னை உசுப்பு ஏத்தியது..
அப்புறம் மாலா....மேல யோசிக்கிறேன்...முடியல்ல.. ம்ம்மாலா இப்போ எப்படி இருப்பா? அவக் கண்ணு இப்போ எப்படி இருக்கும்?

நினைப்பு அவளையேச் சுத்திச் சுத்தி வந்தது... பாவாடைத் தாவணிப் போட்டுக் குத்துவிளக்கு மாதிரி இருப்பாளோ இல்லை சுடிதார் போட்டுத் தூக்கலா இருப்பாளோ? (சென்னையிலே JEANS பார்த்துப் பார்த்துச் சலிச்சுப் போச்சு...) மனசுக்குள்ளே ஒரு சுகமானத் தவிப்பு... என்னையும் அறியாமல் மனசு ரெக்கை கட்டிப் பறக்க ஆரம்பிச்சுது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிக்குறேன்.. என் சட்டைப் பைக்குக்குள் அவளுக்காக எழுதுன கவிதை... இந்த கவிதையை அவளுக்குக் காட்டணும்.. இதோ ரயில் வந்துடுச்சு... மீதிக் கதையை ஊருக்குப் போயிட்டு வந்துச் சொல்லுறேன்... கொஞ்சம் பொறுத்துக்க்ங்க்....

(இதன் தொடர்ச்சியை நானும் என் கவிதையும் - பகுதி 2ல் படித்துக் கருத்து பதியுங்கள் - நன்றி)

நிறைவுப் பகுதிக்கு இங்கே நானும் என் கவிதையும் - பாகம் 3 இங்கேச் சுட்டவும்

5 comments:

நளாயினி said...

நல்ல அம்மா பிள்ளை கதையை பாதியிலை விட்டிட்டு போறதா? ஆஆஆ

Anonymous said...

நீங்கள் நன்றாக எழுதுவீர்கள் என்று கேள்விப் பட்டேன்.அது உண்மைதான்.TR மாதிரி கவிதை எல்லாம் கதையில் வருகின்றதே!படித்ததும் சிரிக்க வைத்து விட்டீர்கள்.மாலாவின் கதை என்ன ஆகும் என்று ஆவலோடு அனைத்து பாகங்களையும் படிக்க தொடங்குகின்றேன்!

வெற்றி said...

தேவ்,
அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

Unknown said...

//நீங்கள் நன்றாக எழுதுவீர்கள் என்று கேள்விப் பட்டேன்.//
ஆஹா

//அது உண்மைதான்.//
அப்பாடா.. தப்பிச்சேன்

//TR மாதிரி கவிதை எல்லாம் கதையில் வருகின்றதே!படித்ததும் சிரிக்க வைத்து விட்டீர்கள்.மாலாவின் கதை என்ன ஆகும் என்று ஆவலோடு அனைத்து பாகங்களையும் படிக்க தொடங்குகின்றேன்!//

நிச்சயம் படிங்க படிச்சுட்டு உங்க கருத்துக்களைச் சொல்லுங்க.. நன்றி துர்கா

Unknown said...

//தேவ்,
அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். //

நன்றி வெற்றி.

அப்புறம் வெற்றி இது மூன்று பாகம் கொண்ட கதை மூன்று பாகங்களும் ஏற்கனவே வெளியிட்டாச்சு. படிச்சிட்டுச் சொல்லுங்க வெற்றி.