Saturday, November 17, 2007

ஒரு குட்டிச் சுவரின் வரலாறு - 7

முந்தையப் பகுதி படிக்க

இப்போ வருடங்கள் ஓடிப் போயிருச்சு..நடந்து முடிந்த சம்பவங்கள் எல்லாம் சம்பந்தப் பட்டவங்க மனசுல்ல வெறும் ஞாபகங்களாய் மட்டுமே எஞ்சி நிற்கின்றன...

கவுரியை அதுக்கு அப்புறம் நாங்க யாருமே பார்க்கல்ல.. பார்க்குற தைரியம் யாருக்கும் இல்ல.. ஜூனியர்ஸ் அதுக்குப் பின்னாடி அந்த அறையையும் ஏரியாவையும் காலிப் பண்ணிட்டு காலேஜ்க்குப் பக்கமாவே ஒரு வீடு பாத்துட்டுப் போயிட்டாங்க..

குட்டிச் சுவரில் நடக்கும் அவைக் கூட்டங்கள் அதன் பின் அவ்வளவு கலகலப்பாய் அமையவில்லை. ஜுனியர் மக்களில் திருநா மட்டும் அவ்வப்போது வந்து போவான். அப்படி வரும் போது ஜூனியர்களால் அவ்வளவு எளிதில் கவுரியின் இழப்பைத் தாங்க முடியவில்லை என்பது மட்டும் தெரிந்தது.

"ஊட்டி எல்லாம் போயிருந்தா நல்லா இருந்து இருக்கும்ல்ல சீனியர்... கவுரி போயிட்டான்.. அவன் இருந்திருந்து அவனால வர முடியல்லன்னாலும் நம்மை எல்லாம் கண்டிப்பாப் போகச் சொல்லியிருப்பான்..அவனுக்காக ஊட்டிப் போயிட்டு வருவோமா..." பின்னொரு நாளில் திருநா மீண்டும் கேட்க... படுவேகமாய் என் மறுப்பை வெளியிட்டேன்...

"ஏன் சீனியர்?"

அவன் கேள்விக்குப் பதிலாய் சொல்லுவதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. "வேணாம் திருநா விட்டுருவோமே.." ஒப்புக்கு சொன்னேன்.

ஆரவாரங்களும் அடங்காத அமளியும் நிறைந்துக் கிடந்தக் குட்டிச்சுவரின் சத்த சபைகள் பிற்காலங்களில் ஆழ்ந்த சிந்தனைகளும் அதன் விளைவாய் வழியும் மௌனங்களாயும் நகரத் துவங்கின. பொழுதொரு இன்டர்வியூ பின் அதன் பாதகமான முடிவு எனக் காலம் வெகு வேகமாய் நகர்ந்தது.. காலத்தின் வேகத்திற்கு முன் எங்கள் வேகம் குறைந்தது...

வாழ்க்கை தொடுத்தப் போர்களினால் காதல் ஏற்படுத்திய மனப்போர்கள் தோற்று போக ஆரம்பித்த நேரம் அது.

"டேய் அந்தத் தெலுங்குப் பையன் கொண்டப்ப நாயுடு நித்யாவுக்கு லெட்டர் கொடுத்துருக்கான்டா...அவளை அவனும் லவ் பண்ணுறானாம்..." சோழன் புராஜக்ட் முடிவுகளுக்காகக் காத்திருந்த அந்த வாரத்தில் அங்கலாய்ப்பாய் சொன்னான்.

"ஒரு பொண்ணுன்னு இருந்தா அதுவும் கொஞ்சம் அழகா இருந்தா ஒரு நாலு பேர் லெட்டர் கொடுக்கத் தான் செய்வான்... அதுவும் அவங்க ஊரகாரப் பையக் கொடுத்தாத் தப்பா?" நான் தான் பேசினேன்.

"டேய் மாப்பி உனக்கும் எனக்குமே இன்னும் பஞ்சாயத்து முடியல்ல.. அதுக்குள்ளே இவன் வேறவான்னு நான் கடுப்புல்ல இருக்கேன்.. சொல்லிபுட்டேன்..." சோழனின் பதில் கேட்டு எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தோம்.

"உங்க எல்லாரையும் விட ஒரு ரூபாய் அதிகம் சம்பாதிக்கிற வேலைக்கு நான் போயிட்டா.. நித்யா எனக்குத் தான்டா" சோழன் தனக்குத் தானே சமாதானமும் சொல்லிக் கொண்டேன்..

"மாப்பூ உன்னிய விட எட்டணா அதிகம் சம்பாதிச்சாலும் சரி.. குறைச்சலா சம்பாதிச்சாலும் சரி.. ஆட்டத்துக்கு நான் வர்றல்ல.. உனக்கு இப்போ வில்லன் நான் இல்லை.. அந்த தெலுங்கு தேசத்துக்காரன் ரைட்டா" கிடைத்தக் கேப்பில் நான் ஜாமீன் வாங்க முயற்சித்தேன்.

கடைசியாய் எல்லோரும் ஒண்ணா எப்போ குட்டிச் சுவரில் சந்திச்சோம்ன்னு எவ்வளவு யோசிச்சாலும் நினைவுக்கு வர்றல்ல.. ஞாபகத்துக்கு வரவும் வேணாம்... இருக்க ஞாபகங்களின் சுமைப் போதும்..

நித்யாவிடம் தன் காதலைச் சொல்லாமலே ஊருக்குக் கிளம்பினான் சோழன்...அவனை வழி அனுப்ப அவன் அறைக்குச் சென்ற போது.. எதேச்சையாய் அவன் பெட்டியைப் பார்த்ததில்.. அதில் அவன் நித்யாவுக்காக வாங்கி வைத்திருந்தப் பரிசுப் பொருட்களின் குவியலையேப் பார்த்தேன்.... அந்தக் குவியலுக்கு நடுவே நித்யா எனக்காக எழுதியதாய் சோழன்சொன்னக் கடிதம் கசக்கி வைக்கப்பட்டிருந்தது...அந்தக் கடிதத்தின் வார்த்தைகளில் இருந்தது காதலா..காமடியா.. சத்யமாய் புரிந்துக் கொள்ள என்னால் முடியவில்லை.. புரிந்துக் கொள்ளவும் நான் தயாராக இல்லை..

சோழனின் பொக்கிஷக் குவியலை நான் பார்த்தது அவனுக்குத் தெரியாது என்றே நான் இதுவரை நம்பிக்கொண்டிருக்கிறேன்..சோழன் ஊருக்குப் போனான்...அவனோடு அவன் காதலும் உடன் போனது... அடுத்த ஆறு மாதங்களில் அவனுக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டதாய் தகவல் சொன்னான்.. இன்று வரை சோழனின் பழையக் காதல் பற்றி நானும் அவனிடம் பேசவில்லை.. அவனும் பேசுவதில்லை..அந்தக் காதல் என்னாச்சு யாருக்கும் தெரியாது...!!

மணியும் சபரியும் நகர வாழ்க்கையோடு மோதி மாசச் சம்பளத்துக்குப் போவதை விட சொந்தமாய் எதாவது செய்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தனர்..அதன் விளைவாய் கரூரில் சொந்தத் தொழிலுக்கு அடிக்கல் நாட்டினர்.. அவர்களின் போராட்டம் ஆரம்பம் ஆனது..

குமாரும் நானும் மட்டும் மீதம் இருந்தோம்...

"மாப்ளே இன்னும் இப்படியே காலம் ஓட்ட முடியாது... எங்க அப்பா அவர் பிசினசைப் பாக்க ஆள் இல்லைன்னு ஓலைக்கு மேல ஓலை அனுப்பிட்டார்... மெட்ராஸ் வாழ்க்கைக்கு மங்களம் பாட வேண்டியது தான் போலிருக்கு" என்று குமாரும் சொன்னப் போது எனக்கு என்னமோச் செய்தது.

அப்போது நான் வேலைத் தேடி வீதி வீதியாக அலைந்த நேரம்.. அமெரிக்காவில் ஓசாமா பிளைட் விட்டு பீதியைப் பக்காவா பில்டப்பு செய்த நேரம்... ஐடி பீல்ட்க்கு ஆல் டைம் ஹ ஆப்பு அடித்து முடிக்கப் பட்டிருந்த நேரம்... ஒரு பக்கம் பிரெஞ்சு... இன்னொரு பக்கம் அட்வெர்ட்டைஸ்மெண்ட்... கம்ப்யூட்டர்ல்ல எதோ ஒரு கோர்ஸ்ன்னு நானும் ஓட ஆரம்பித்தேன்...இந்த ஓட்டத்துக்கும் இன்டர்வியூவில் ஏற்படும் வாட்டங்களுக்கும் ஒரு மருந்த்தகமாக இருந்தது குட்டிச் சுவர் தான்...

குமார் ஊருக்குக் கிளம்பிய அதே சமயம் எனக்கும் என் முதல் வேலைக் கிடைத்தது.. வேலைக் கிடைத்தப் பின் வாழ்க்கையின் திசை மாறியது...

ஒரு கட்டத்தில் வாழ்க்கையே எந்திரமாகிப் போனது...பல ஆண்டுகளுக்குப் பின் குமார் தனக்குத் திருமணம் என்று அழைப்பிதழ் வைக்க வந்திருந்தான்.. வீட்டில் எல்லாரையும் அழைத்துவிட்டு...வாசலில் போய் நின்றவன். எதோ நினைத்தப் படி மறுபடி வீட்டுக்குள் வந்தான்.

'மாப்பூ பைக் சாவி கொடுடா..." என்றான்

என்னிடம் சாவியை வாங்கி வண்டியக் கிளப்பியக் குமார் என்னையும் ஏறுமாறு சைகைக் காட்டினான். நானும் ஏறி உட்கார்ந்தான். பைக் சீறி பாய்ந்தது. நேராக எங்கள் குட்டிச்சுவர் பக்கம் போய் வண்டியை நிறுத்தினான்.

குட்டிச் சுவரில் ஆங்காங்கே கொஞ்சமாய் விரிசல்கள்.. நாங்கள் பைக்கில் இருந்து இறங்குவதற்குள் சர சரவென ஒரு ஆறு ஏழு பைக்கள் எங்களைத் தாண்டி வந்து பிரேக் அடித்து நின்றன..அதில் இருந்து இறங்கிய ஜமாமொத்ததினரும் அப்படியேத் தாவிக் குட்டிச்சுவரில் போய் ஏறி அமர்ந்தார்கள்.. பாக்கெட்டிலிருந்து தம் எடுத்து பற்ற வைத்து ஆளுக்கு ஆள் மாற்றினார்கள்...அப்படியே கேலிக் கூத்துக் கும்மாளம் என அரட்டைக் கச்சேரியை ஆரம்பித்தார்கள்...

நானும் குமாரும் ஒருத்தரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டோம்....

குட்டிச் சுவரின் வரலாற்றில் அடுத்த அத்தியாயம் ஆரம்பம் ஆகிவிட்டது என்று புரிந்தது....

ஆங்கிலத்தில் சொல்வதுப் போல ....THE SHOW MUST GO ON FOLKS !!!!

27 comments:

CVR said...

Alls well that ends well!! :-)
உங்கள் வாழ்க்கயின் பக்கங்களை பக்கத்தில் இருந்து படித்தது போல் ஒரு உணர்வு
பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி!! :-)

ஆதவன் said...

இப்படி எல்லோர் வாழ்க்கையிலும் இருக்கும் போல இருக்கே.... பழைய ஞாபகங்களை கிளறி விட்டுடீங்க தேவ்

நாகை சிவா said...

//குட்டிச் சுவரின் வரலாற்றில் அடுத்த அத்தியாயம் ஆரம்பம் ஆகிவிட்டது என்று புரிந்தது....//

உண்மை.

இலவசக்கொத்தனார் said...

அடுத்து என்ன அலுவலக அட்டகாசங்களா? :))

கோபிநாத் said...

மனசை தொட்டுட்டிங்க அண்ணே..(கூடவே கிளறி விட்டுடீங்க) ;)

Divya said...

குட்டிச் சுவரின் வரலாறு கலகலப்பு, கும்மாளம், கிண்டல், கோபம், இழப்பு,சோகம்...........என்று எல்லாம் சேர்ந்த ஒரு கலவையாக இருந்திருக்கிறது,

உங்கள் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்து போனது இந்த வரலாறு!!

Divya said...

\\சோழன் தனக்குத் தானே சமாதானமும் சொல்லிக் கொண்டேன்..\\

சமாதானம் சொல்லிக் கொண்டான்........எழுத்துபிழை என்று நினைக்கிறேன்!

Divya said...

\\அந்தக் குவியலுக்கு நடுவே நித்யா எனக்காக எழுதியதாய் சோழன்சொன்னக் கடிதம் கசக்கி வைக்கப்பட்டிருந்தது...அந்தக் கடிதத்தின் வார்த்தைகளில் இருந்தது காதலா..காமடியா.. சத்யமாய் புரிந்துக் கொள்ள என்னால் முடியவில்லை.. \\

அண்ணா நைசா உங்களுக்கு நித்யா எழுதின காதல் கடிதத்தையும் படிச்சுட்டீங்க போல!!! சபாஷ்!

அனுசுயா said...

முதல்ல குட்டிசுவர படிக்க அரம்பிச்சப்ப சாதாரணமா இருந்தது போக போக சில அத்தியாயங்கள்ள சினிமாதனமா எப்பபாரு தண்ணி பொண்ணுங்கனு இருந்தது நான்கூட தேவ்கிட்ட என் கருத்த சொன்னேன். ஆனா கடைசியா ஆகும் போதுதான் ஒரு சோகம் அப்புறம் வாழ்க்கை தேடல்கள்னு ரொம்ப இயல்பா நிஜமான பீலிங்கோட முடிச்சிருக்காரு. நல்லா இருந்தது தேவ் வாழ்த்துக்கள். :)

Anonymous said...

அண்ணா 4-7 எல்லாத்தையும் படிச்சு முடிச்சுட்டு கமெண்ட் போடுறேன்.மத்த பகுதிகளுக்கு மறுமொழி போடமால் போனதற்கு மனிக்கவும்.நடுவுல சோகம்,நகைச்சுவை என்று வாழ்க்கையில நடக்குற அனைத்து உணர்ச்சி பிழம்புகளையும் உங்க கதையில் பார்க்க முடிந்தது.ரொம்பவே ரசிச்சு படிச்சேன் அண்ணா.கடைசியில முடிவு ரொம்ப realistic ஆக இருந்தது.வாழ்த்துக்கள்

SierrA ManiaC said...

The show must go on. How simple and poetic! I cannot control my tears.

கப்பி பய said...

:)

ரொம்ப சுவாரசியமா குட்டிச் சுவரின் பக்கங்களைப் பகிர்ந்துகிட்டீங்க தேவ் அண்ணே..கொஞ்சம் கொசுவத்தியும் சுத்த வச்சுட்டீங்க :)

தேவ் | Dev said...

//CVR said...
Alls well that ends well!! :-)
உங்கள் வாழ்க்கயின் பக்கங்களை பக்கத்தில் இருந்து படித்தது போல் ஒரு உணர்வு
பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி!! :-)//

சிவிஆர், இதை டைரிக் குறிப்புன்னு கூடச் சொல்லலாம்...நிஜமும் நிழலும் கலந்த ஒரு படையல் தான் இந்த்க் குட்டிச் சுவரின் வரலாறு.

தேவ் | Dev said...

//ஆதவன் said...
இப்படி எல்லோர் வாழ்க்கையிலும் இருக்கும் போல இருக்கே.... பழைய ஞாபகங்களை கிளறி விட்டுடீங்க தேவ்//

வாங்க ஆதவன்.. குட்டிச் சுவரின் வரலாறு நம்மைப் போன்ற மக்களுக்கானப் படைப்பு தாங்க.. ரசிச்சு படிச்சதுக்கு என் நன்றியினைத் தெரிவிச்சுக்குறேன்.

தேவ் | Dev said...

//நாகை சிவா said...
//குட்டிச் சுவரின் வரலாற்றில் அடுத்த அத்தியாயம் ஆரம்பம் ஆகிவிட்டது என்று புரிந்தது....//

உண்மை.//

உண்மையிலும் உண்மை..சிவா...நேற்று நாங்கள்..இன்று இவர்கள்.. நாளையும் கண்டிப்பாக யாராவது வருவார்கள்...

தேவ் | Dev said...

//இலவசக்கொத்தனார் said...
அடுத்து என்ன அலுவலக அட்டகாசங்களா? :))//

அதுக்குத் தான் நம்ம ஆபிசர் இருக்காரே,..அதுக்குள்ளே அவரை மறந்துட்டீங்களா? கச்சேரிப் பக்கம் வரச் சொல்லி அவருக்கு ஓலை அனுப்ப வேண்டியது தான் :-)

தேவ் | Dev said...

//கோபிநாத் said...
மனசை தொட்டுட்டிங்க அண்ணே..(கூடவே கிளறி விட்டுடீங்க) ;)//

நன்றி கோபி. ம்ம் அந்த நாள் ஞாபகம் உன் நெஞ்சிலும் வந்தததா??

தேவ் | Dev said...

//Divya said...
குட்டிச் சுவரின் வரலாறு கலகலப்பு, கும்மாளம், கிண்டல், கோபம், இழப்பு,சோகம்...........என்று எல்லாம் சேர்ந்த ஒரு கலவையாக இருந்திருக்கிறது,

உங்கள் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்து போனது இந்த வரலாறு!!//

நன்றி திவ்யா.. ம்ம் இதை விடவும் பெட்டரா எழுத முயற்சி பண்ணுறேன்.. அதுவரைக்கும் வெயிட்டீஸ்

தேவ் | Dev said...

//Divya said...
\\சோழன் தனக்குத் தானே சமாதானமும் சொல்லிக் கொண்டேன்..\\

சமாதானம் சொல்லிக் கொண்டான்........எழுத்துபிழை என்று நினைக்கிறேன்!//

ம்ம் முந்தைய வரியைச் சேர்த்துப் படிக்கவும்.. சரியாக இருக்கிறதா?

தேவ் | Dev said...

//Divya said...
\\அந்தக் குவியலுக்கு நடுவே நித்யா எனக்காக எழுதியதாய் சோழன்சொன்னக் கடிதம் கசக்கி வைக்கப்பட்டிருந்தது...அந்தக் கடிதத்தின் வார்த்தைகளில் இருந்தது காதலா..காமடியா.. சத்யமாய் புரிந்துக் கொள்ள என்னால் முடியவில்லை.. \\

அண்ணா நைசா உங்களுக்கு நித்யா எழுதின காதல் கடிதத்தையும் படிச்சுட்டீங்க போல!!! சபாஷ்!//

அது காதல் கடிதமா? காமெடி கடிதமா? நித்யாத் தான் சொல்லணும் :-)

தேவ் | Dev said...

//துர்கா|thurgah said...
அண்ணா 4-7 எல்லாத்தையும் படிச்சு முடிச்சுட்டு கமெண்ட் போடுறேன்.மத்த பகுதிகளுக்கு மறுமொழி போடமால் போனதற்கு மனிக்கவும்.நடுவுல சோகம்,நகைச்சுவை என்று வாழ்க்கையில நடக்குற அனைத்து உணர்ச்சி பிழம்புகளையும் உங்க கதையில் பார்க்க முடிந்தது.ரொம்பவே ரசிச்சு படிச்சேன் அண்ணா.கடைசியில முடிவு ரொம்ப realistic ஆக இருந்தது.வாழ்த்துக்கள்//

நன்றி துர்கா

தேவ் | Dev said...

//SierrA ManiaC said...
The show must go on. How simple and poetic! I cannot control my tears.//

Thanks Prassanaa Hope u enjoyed reading this series

தேவ் | Dev said...

//கப்பி பய said...
:)

ரொம்ப சுவாரசியமா குட்டிச் சுவரின் பக்கங்களைப் பகிர்ந்துகிட்டீங்க தேவ் அண்ணே..கொஞ்சம் கொசுவத்தியும் சுத்த வச்சுட்டீங்க :)//

நன்றி கப்பி.. கொசுவர்த்திச் சுத்த வச்சேனா..ம்ம்ம் ??!! :-)))

G.Ragavan said...

போன வாட்டி சோகம்னு சொன்னீங்க. சரீன்னு இந்த வாட்டி சந்தோசமா முடிச்சிட்டீங்க. அதுனால பொழைச்சீங்க :)

நிமல்/NiMaL said...

உங்கள் பதிவுகளுக்கு இன்றுதான் வந்தேன்... உங்கள் பதிவுகள் சிறப்பாக இருக்கின்றன...
முக்கியமாக உங்கள் தொடர்கள் மிகவும் விறுவிறுப்பு...

"ஒரு குட்டிச் சுவரின் வரலாறு", உங்களின் கடந்த காலமாகவும், எங்களின் நிகழ்காலமாகவும் இருக்கிறது...

தொடர்ந்து வருவேன்...
வாழ்த்துக்கள்...

தேவ் | Dev said...

//G.Ragavan said...
போன வாட்டி சோகம்னு சொன்னீங்க. சரீன்னு இந்த வாட்டி சந்தோசமா முடிச்சிட்டீங்க. அதுனால பொழைச்சீங்க :)//

மிரட்டல் பெரிய பெரிய இடத்துல்ல இருந்து எல்லாம் வந்தா என்னங்கப் பண்ணுறது...:)))

தேவ் | Dev said...

//நிமல்/NiMaL said...
உங்கள் பதிவுகளுக்கு இன்றுதான் வந்தேன்... உங்கள் பதிவுகள் சிறப்பாக இருக்கின்றன...
முக்கியமாக உங்கள் தொடர்கள் மிகவும் விறுவிறுப்பு...

"ஒரு குட்டிச் சுவரின் வரலாறு", உங்களின் கடந்த காலமாகவும், எங்களின் நிகழ்காலமாகவும் இருக்கிறது...

தொடர்ந்து வருவேன்...
வாழ்த்துக்கள்...//

நன்றி நிமல்... வாழ்க்கையை அதன் போக்கில் சென்று ரசியுங்கள்... வாழுங்கள்... எல்லாக் காலமும் இன்பமயமாகவே இருக்கும்... தொடர்ந்து வாருங்கள்.. கருத்துக்களைப் பகிருங்கள்