Sunday, April 22, 2018

ஆஸ்திரேலியா டைரி குறிப்புகள் - 2

கங்காரு

ஆறு வயதில்
அம்புலி மாமா என்று
ஞாபகம்..
அதற்கு பிறகு
தூர்தர்ஷனில்
ஞாயிறு மாலை வரும்
வேர்ல்ட் ஆப் சர்வைவல்
வளர்ந்து வந்த
காலங்களில்
சுற்றுலா போன
எல்லா மிருக காட்சிசாலைகளிலும்
விசாரித்ததுண்டு
பின்னொரு நாளில்
பிராத்தனா பெரிய திரையில்
மனிஷா கொய்ராலாவை
கமலஹாசன் விரட்டி பாடும் போது
பக்கத்தில் பார்த்தது
சிட்னி இறங்கியதும்
நகர தெருயோரங்களில்
காண கிடைக்கவில்லையென
நொந்தது
பார்த்தே ஆகணும்
என ஆசை அலை அலையாய்
அடித்த ஒரு சாலை பயணத்தில்
வண்டி ஓட்டிய நண்பர்..
வேகம் குறைத்து
அந்தா பாருங்க என்றார்
ஆறடி இருக்கும்
ரத்த வெள்ளத்தில்
நடு வழியில்
கேட்பாரற்று வாய்பிளந்து
கிடந்தது
"கங்காரு"

Wednesday, August 09, 2017

ஆஸ்திரேலியா டைரி குறிப்புகள் - 1

போட்ல்ல தான
வந்தீங்கள்
ஓம் என்ற
தலையசைப்பு
யுத்தம்
நின்னு போச்சா
ஓம் என்ற
புருவம்  நெளித்த
பார்வை
அவுஸ்திரேலியா
பிடிச்சு இருக்கு தானே
ஓம் என்ற
வறட்டு புன்னகை
எதாவது கதைக்கணுமே
யோசித்த படி
அவர்களது தமிழில்
வார்த்தை தேட
நீங்கள் இங்க தானே
இறங்கணும்
பாருங்கோ
லிட்கம் ஸ்டேஷன்
வரவே
ஓம் என்ற
அசட்டு சிரிப்புடன்
எழுந்தேன்

Monday, September 07, 2015

அப்பா என்ற விஷ்வநாதன்


சாலையோரம் மழைக்கு ஒதுங்கி
தலை துவட்டிய படி
நிமிர்ந்த அந்த வினாடி
கண்களைத் தாக்கியதில்
எனக்குள் மின்சாரம் பாய்ச்சல்
மின்னலா...
இல்ல இல்லை..
உன் வெட்டும் பார்வை....

விலா எலும்புக்குள்ளும் குளிர் குடிகொள்ள
விரல் இடுக்குகளில் வெப்பம் தேடி
மனம் அலையும் வினாடியில்
உன் கீழுதட்டில் தேங்கி நிற்கும்
மழையின் மிச்ச துளிகளில்
மொத்த மனமும் வெந்தழிந்து போகிறது...

ஓரப் பார்வையால்
ஒத்த உசுரை உறிஞ்சுப்புட்டு போனவளே...
நெஞ்சு செத்துக் கிடக்கையிலே
நிக்காமப் போறவளே.....

தாவணியிலே மேகம் சுமந்து
தாகத்துல்ல நான் கிடக்க தாண்டி போறவளே
தவிச்சு நான் கிடக்கையிலே
தண்ணி குடம் தளும்ப தளும்ப நடக்கறவளே

குறுக்கு சிறுத்தவளே
கொலை குத்தம் ஆகிருமடி
ஈர உதட்டாலே தொட்டணைச்சு
ஈன உசுரை இழுத்து புடிச்சிதான் போயேன்டி

"அட அட ஒருத்தன் ஒருத்தியை எவ்வளவு காதலிச்சு இருந்தா இப்படி கவிதையா வடிச்சுருக்க முடியும்....சொல்லுடா"

"ப்ச் 36 வயசாச்சுப்பா...நான் அதை எல்லாம்  தாண்டி  வந்துட்டேன்னு நினைக்கிறேன்ப்பா"

"யார்டா இவன்...இந்த அளவுக்கு அவ அவனை காதல் இம்சை பண்ணியிருக்காடா...கவனிடா.."

"ப்பா....நீங்க எனக்கு அப்பா"

"ஓ யா...மறந்துப் போச்சு அடிக்கடி  வந்து போப்பா...எனக்கு  புரியுது உனக்கு உன் கேரியர் இருக்கு...உன் குடும்பம் இருக்கு...இருந்தாலும் நான் தான் உனக்கு அப்பா...எனக்கும் உன் நேரம் வேணும்பா"

அப்பா சட்டை பாக்கெட்டில்  இருந்து சிகரெட் எடுத்து நீட்டினார்..நான் வேண்டாம்  என தலையை ஆட்டினேன்.

வாட்... பிராண்ட்  மாத்திட்டீயா..

இல்ல நான் நிறுத்திட்டேன்..6 மாசம் ஆச்சு...அண்ட்  ஐ திங்க் நீங்களும்  நிறுத்தணும்..

பற்ற வைத்த சிகரெட் புகையை வாயைச் சுழித்து  விட்டு விட்டு  என்னைப்  பார்த்து பலமாக  சிரித்தார்..

"மனுசஷனா பிறந்தவன் நெருப்பை அணைய விடவேக் கூடாது...கீப் த பயர் பர்னிங்...."
அப்பா  கிட்ட   அவ்வளவு சீக்கிரம் பேசி ஜெயிச்சிர  முடியாது. ..

சற்று நேரம் எங்களுக்குள் ஒரு அசாதாரண  அமைதி  நிலவியது. ஒரு வித அழுத்தம் அதில்  பொதிந்திருந்தது.

22 வயதில்  எல்லாரும்  வேலை தேடக் கிளம்பிய  போது  ஈ சி ஆர் ரோட்டில் அடுத்த அம்பானியாகும்  என் முயற்சியில்  நான் மூழ்க  துவங்கி  இருந்தேன்... பேலஸ் என்றொரு  பரிசு  பொருள் கடை..அப்பவே அஞ்சு லட்சம்  முதலீடு. ..மிகவும்  திட்டமிட்டு 
அண்ணாமலை பாட்டு மனசுல்ல புல் வால்யூம்ல்ல ஏத்திவச்சுட்டு இறங்கிட்டேன்..
பரிசு பொருளில் எவ்லாம் 100-300 சதவீதம் லாபம்..அந்த கணக்குபடி பாத்தா  இன்னி தேதிக்கு  சென்னையின் அடுத்த சரவணா ஸ்டோர்ஸ் என்  கனவில்  உதித்த பேலஸ் நிறுவனமாக  தான்  இருந்து  இருக்க வேண்டும்...

இப்பவும் நல்லா ஞாபகம்  இருக்கு..ராத்திரி  கடையைச் சாத்திட்டு  வீட்டுக்கு  வர  மனசில்லலாமல்  திருவான்மியூர்  பீசசில்  ஒரு  ஓரமாய்  கையில்  புகையும்  கண்ணில் நீருமாய்  தனித்திருந்தேன்...அப்படி இப்படின்னு  வேலைக்கு போயிருந்தாலும்  மாசம்  கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆறாயிரம் சம்பளம் வாங்கி  இருப்பேன்...இப்போ  சிங்கிள் டீ செலவுக்கு  கூட  வியாபாரம்  பண்ண முடியாம  கடையை  இழுத்து  பூட்டுற  அளவுக்கு  வந்துட்டேன்.. சுய இரக்கம் பீறிட  கன்னம்  எல்லாம்  கண்ணீர்  வழிய துடைக்க  தோன்றாமல் அப்படியே  கடலைப் பாத்துட்டு இருந்தேன்..

மொத்தமும்  மிஷ்டர்  விஷ்வநாதனோடக் காசு...ஹார்ட் பாரோடூ  மணி...மாசம்  பிடித்தமெல்லாம் போக எழாயிரத்தி சொச்சம் பக்கம்  சம்பளம் வாங்குன  அந்த ஸ்கூல் வாத்தியார் மிஷ்டர்  வவிஷ்வநாதன் தான் என் அப்பா...ஆறு லட்சம்...விசு தன் ஒரே மகன் மீது  வைத்த விசுவாசத்தின்  விலை...

இனி இருந்து  ஆகப்போறது  என்ன...போயிடலாம்ன்னு  கடல் இருக்கும் பக்கம்  நடக்க  எத்தனித்த தருணம்...விசுவின் குரல்  கேட்டு  நின்றேன்

"சூசைடா...என் தப்பு  உனக்கு  நீச்சல்  சொல்லித் தராமல் விட்டது...நீச்சல் தெரிஞ்சவனுக்கு கடலைப் பாத்தா  நீந்தி கடக்கணும்னு தோணும்...நீச்சல் தெரியாதவனுக்கு   இந்த அழகான கடல்ல  விழுந்து சாகணும்னு தோணுது"

நான்  பதில்  பேசல்ல

"சாப்பிட்டீயா...வா...அய்யனார் பாஸ்ட்புட் போவோம்..."
ஆட்டுக்குட்டி  போல அப்பா பின்னால் நடந்தேன்..சில்லி சிக்கனும் சிக்கன் ரைசும் பார்சல் வாங்கி  என் கையில் கொடுத்தார்..

வீட்டிக்கு போய்  நான்  சாப்பிட்டு முடிக்கும் வரை ஓரு வார்த்தை அவரும்  பேசல்ல..என்னையும்  பேச விடல்ல...

சாப்பிட்டு மொட்டை மாடிக்கு படுக்க பாயைக் கையில் எடுத்துக்  கொண்டு போனேன்.. கொஞ்ச நேரம் வானம்  பார்த்தப் படி  படுத்து கிடந்தேன்...பாக்கெட்டில் இருந்த கடைசி சிகரெட்டை  பற்ற  வைத்தேன்..

 அப்பாவின் நிழல்  தெரிய நிமிர்ந்தேன்.. அதே வேகத்தில் சிகரெட்டைத் தூர எறிந்தேன்..

நம்ம பக்கத்துல்ல சாவு வீட்டுல்லக் கூட ஆம்பள அழமாட்டான்..அழக்கூடாது...உங்க அப்பா இன்னும் சாகல்ல...

எனக்கு அந்த நிமிஷம்  ஓ ன்னு கதறி அழணும்ன்னு  தோணுச்சு ஆனாக் கண்ணீரைக் கண்ணுக்குள்ளேயே இழுத்து பிடிச்சிகிட்டேன்

அப்பா திரும்பி வந்தார்..அவர் கையிலே என் பிராண்ட்  சிகரெட் பாக்கெட்

"மனுசஷனா  பிறந்தவன் நெருப்பை அணைய விடவேக் கூடாது...கீப் த பயர் பர்னிங்...."
அப்பா  கிட்ட   அவ்வளவு சீக்கிரம் பேசி ஜெயிச்சிர  முடியாது. ..

வருசங்கள் ஓடிப் போச்சு..அந்த முதல் பெருந்தோல்வியை மிஷ்டர்  விஷ்வநாதன் தயவுல்ல தாண்டி  எவ்வளவோ தூரம் வந்துட்டேன்...அதே அளவு தூரம் அப்பாவை விட்டும் வந்துருக்கேன்னும் புரியுது..

"....சோ...அந்தப் பொண்ணு யார்ன்னு சொல்லமாட்டே.."  அப்பா ஆரம்பித்த இடத்துக்கே வந்தார்...

"மிஷ்டர்.விஷ்வநாதன் ....உங்களுக்கு தான்  அந்த கேள்விக்குப் பதில் தெரிஞ்சிருக்கணும்.. இட்ஸ்  யுவர் கவிதை...."

அப்பாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை..டைரியைப் புரட்டிய படி நின்றார்.
அம்மாவின் டைரி  அது...அம்மாவின் கையெழுத்து..

"ப்பா....அம்மாவை அந்தக் கவிதையில்ல வர்ற பொண்ணுக்காகத் தான் விட்டுட்டு  வந்தீங்களா? "

கேட்க நினைத்தக் கேள்வியைக் கேட்க விடாமல் தடுத்தது மிஷ்டர்.விஷ்வநாதனின் சுருக்கம் விழுந்தக் கன்னத்தில்  ஓடிய ஒற்றை கோடு கண்ணீர்..

ப்பா...நான் கிளம்பணும்...அப்பாவின் முகம் பார்க்காமல் சொல்லிக் கொண்டு புறப்பட்டேன்

Tuesday, March 06, 2012

மீண்டும் தென்கிழக்கு வாசமல்லி - 9

இது வரை

சாயங்காலம் நாலு மணி இருக்கும்...என் டெஸ்க் போன் அடிச்சது...டயலர் டிஸ்ப்ளேவுல்ல அவளோட பேர்...கிட்டத் தட்ட அன்னிக்கு அவுட்டிங்ல்ல கையிலே பீர் டின்னோட அவக் குரலை கேட்டது...மறுபடியும் இப்போத் தான் கேக்கப் போறேன்...எதாவது புராஜ்க்ட் சம்பந்தமா இருக்கும்...எடுத்து காதில் வச்சு ஹலோன்னு சொன்னேன்...

"பொண்ணு பாத்துருக்காங்களாம்...கல்யாணமாம்...எப்போ...கார்ட் எல்லாம் அடிச்சாச்சா...? சொல்லவே இல்ல...?"

""

"சரி கார் ஓட்டத் தெரியுமா...என்ன என்னவோ தெரியுது...இது தெரியாதா... என்னை வீட்டுல்ல ட்ராப் பண்ணனும்..வர முடியுமா...ம்ம்ம் வரணும்... டிரைவரை வீட்டுக்குப் போகச் சொல்லிட்டேன்..இன்னும் பத்து நிமிசத்துல்ல நான் கிளம்புறேன்...வந்துருங்க..."

பட்டுன்னு போனை வச்சுட்டா...

முப்பது நிமிசம் கழிச்சி அவளோட புது ஸ்விப்ட் காரை சென்னை ட்ராபிக்கை சமாளிச்சி ஓட்டிட்டு இருந்தேன்...அவ எனக்குப் பக்கத்துல்ல உக்காந்து இருந்தா...இப்பவும் அவ யூஸ் பண்ணுற பர்ப்யூம் என்னன்னு என்னால கண்டுபிடிக்க முடியல்ல...வாசம் ஆளை கிறங்கடிக்க வச்சது..

"ம்ம் ராதாகிருஷ்ணன் சாலை போங்க..."

"வீடு அந்தப் பக்கம் ஆச்சே...இப்படி போனா ரொம்ப சுத்து"

"சுத்திகிட்டே போங்க சார் ஒண்ணும் அவசரமில்ல...."சிரிச்சா..

"ம்ம் ஒரு காபி...உட்லேண்ட்ஸ் ட்ரைவின்ல்ல நல்லாயிருக்கும்...சாப்பிட்டு போலாமா ப்ளிஸ்?"   கார் ஜெமினி மேம்பாலத்தை நெருங்கும் போது ரஞ்சனி கேட்டா


"அப்புறம் பொண்ணு என்னப் பண்றா?"

"எந்தப் பொண்ணு?"

"உங்களுக்கு பாத்துருக்க பொண்ணு"

"தமிழ் லிட்ரேச்சர்ல்ல எம்பில்"

"ஓ...ஐடி பொண்ணு இல்லயா...ஐடி பொண்ணு வேணாமா? இல்ல ஒரு ஐடி பொண்ணும் இந்த சுடுமூஞ்சியை கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டாளா?"
கேட்டுட்டு குறுகுறுன்னு என்னைப் பாத்தா...நான் காபியை மெதுவா உறிஞ்சிட்டு இருந்தேன்..

"அன்னிக்கு ஆஸ்பிட்டல்ல என்னைப் பாக்க வந்தப்போ ஏன் அழுதீங்க?" சடக்கென அந்த கேள்வியைக் கேட்டா

 காபி புரையேறி தும்முனேன்....அவக் கண்ணைச் சிமிட்டினா...அப்புறம் சுதாரிச்சுகிட்டு


“ யார் அழுதா?”


“நான் பாத்தேன்...உங்கக் கண்ணீர் என் கன்னத்து மேல விழுந்துச்சு...எனக்குத் தெரியும் ஐ சா இட் ஐ பெல்ஃட் இட்..இங்கே” கன்னத்துல்ல கை வச்சு காட்டுனா..


“இல்ல...அப்படி எதுவும் நடக்கல்ல”


“நடந்துச்சு...எனக்கு தெரியும் எனக்கு மட்டும் தான் தெரியும்...அண்ட் இட் வாஸ் சோ சுவீட்”


"நான் பாத்தேன்...என்னை ஆஸ்பத்திரியிலே பாக்க வரும் போது...என்ன தூரமா நின்னு பாத்துட்டே இருந்தீங்க...அப்புறம் குனிஞ்சு என் நெத்தி பக்கமா வந்து...அப்போ உங்க கண்ணு கலங்கிப் போயிருந்துச்சு...கண்ணுல்ல இருந்து ஒரு சொட்டு என் கன்னத்துல்ல விழுந்துச்சு.....ஏன் அழுதீங்க,,,? மறுபடியும் மறுபடியும் கேட்டுகிட்டே இருந்தா.. கையிலே இருந்த காபி கோப்பையை உருட்டிட்டே கண்ணால என் மேல ஒரு போர் தொடுத்தாப் பாருங்க எத்தனை முறை வேணும்ன்னாலும் தோக்கலாம் போல இருந்துச்சு அவக்கிட்ட...

அவளை உற்று பாத்தேன்..பார்வை அவ மேல மொத்தமா பரவியது

கழுத்து காயம் தழும்பு ஆகி போயிருந்துச்சு... உதட்டு காயம் அவ உதட்டை இன்னும் அழகாக் காட்டுச்சு... கன்னத்து காயம் இருந்த தடம் தெரியாம மாறி போயிருந்துச்சு...கழுத்து வரைக்கும் முடி வளந்துருந்துச்சு... அவளோட சிரிப்பு மட்டும் மாறவே இல்ல.......

”என்னப் பண்ணுறீங்க...?”

“பாக்குறேன்...” முணுமுணுத்தேன். மெதுவா என் கையை அவ உள்ளங்கையால பற்றி பிடிச்சா...

”கல்யாணம் நின்னு போகல்ல நானே தான் நிறுத்திட்டேன்...அஸ்வின் நல்லவர்...ஹி அண்டர்ஸ்டாண்ட்ஸ்....”   காபி குடிக்கும் போது அவளே சொன்னா. வெயிட்டர் ஆர்டர் பண்ண போண்டா செட்டை கொண்டு வச்சு வச்சார்.

“ஒரே குழப்பமா இருக்கு...ஒரு வாழ்க்கை முழுக்க நம்ம வச்சிருந்த  நம்பிக்கை ஒரே பொழுதுல்ல தகர்ந்து போகும் போது அந்த குழப்பம் இன்னும் அதிகமாகிடுது...”

”ம்”


“நீங்க சொல்லுங்க....”

“என்ன சொல்லணும்?”

“அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல என் பக்கமா வந்து நிக்கும் போது ஏன் அழுதீங்க...?” மறுபடியும் கேட்டா..



"உங்களுக்குத் தெரியுமா...திருநெல்வேலியிலே நாம சந்திச்சு பிரிஞ்சப்போ.. .உங்க மேல எனக்கு கோவம் கோவமா வந்துச்சு...அந்த கோவம் அப்புறம் அப்படியே படிபடியா மறந்து போயிருச்சு....

""

"எப்பவோவாச்சும் அந்த ஞாபகம் எல்லாம் வரும்.... எங்க வீட்டுல்ல யாரும் என்னை அழ வச்சதும் இல்ல...அதே மாதிரி யாரும் ரொம்ப பெரிசா சிரிக்க வச்சதும் இல்ல...இரண்டையும் செஞ்சது நீங்க மட்டும் தான்...அந்த அனுபவம் எனக்கு புதுசு..."

அவ பேச பேச நான் கேட்டுகிட்டு இருந்தேன்..

"எல்லாப் பொண்ணுக்கும் அடலாசண்ட் ஏஜ்ல்ல வர்ற ட்ரீம் பாய் கான்சப்ட் எல்லாம் எனக்கும் இருந்துச்சு... நெருப்பு மாதிரி  ஒருத்தன் வர்றணும் அவனைப் பாத்த கோவம் வர்றணும்...அவ ஞாபகம் எப்பவும் வர்றணும்..அவன் கூட இருந்தா குறுகுறுன்னு ஒரு சந்தோசம் வர்றணும்..அவன் நினைப்பே சுகமா இருக்கணும்...என் மொத்த பீலிங்க்ஸ்க்கும் அவன் தான் டார்கெட்டா இருக்கணும்.. என் சிரிப்பு என் அழுகை இரண்டுக்கும் அவன் தான் காரணமா இருக்கணும்இப்படி எல்லாம் யோசிச்சு கவிதை கூட எழுதி வச்சிருந்தேன்... அப்பா கிட்டே காட்டுனேன்..  கனவு எல்லாம் வாழ்க்கை ஆகாது கெட் ரியல்ன்னு சொல்லி சிரிச்சுட்டு போயிட்டார்...”


யாரும் அப்படி என் லைப்ல்ல வரவும் இல்ல..ஒரு கட்டத்துல்ல ஐ வாண்டட் டு கெட் ரியல் டூ.. எல்லாத்தையும் உதறிட்டு லைப்ங்கற ரேஸ்ல்ல சொசைட்டி, ஸ்டேட்டஸ்ன்னு ஓட ஆரம்பிச்சி..அப்பா பாத்த பையனைக் கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லும் போது...அகெய்ன்...உங்களை மறுபடியும் சந்திச்சேன்..."

"என்னை மாதிரியே நீங்களும் எல்லாத்தையும் தாண்டி வந்திருப்பீங்கன்னு தான் நினைச்சேன்.. மழை விட்டப் பிறகும் தூவாணம் விடாதுன்னு சொல்லுவாங்களே அதே மாதிரி ஒரு சின்ன க்யுரியாசிட்டி எனக்கு இருந்தது உண்மை தான்னாலும்..லைப்போட ரியாலிட்டி முன்னாடி அதெல்லாம் நிக்காதுன்னு என்னை நானே சமாதானப் படுத்திகிட்டேன்...பட் நீங்க மாறல்ல...அப்படித் தானே...."

என்னை மறுபடியும் குறுகுறுன்னு பாத்தா

" இன்னிக்கு நான் ஆபிஸ்க்கு வந்ததே வேலைய ரிசைன் பண்ணத் தான்... யாருக்கும் தெரியாது... ஐ ஹேவ் புட் இன் மை பேப்பர்ஸ்(I HAVE PUT IN MY PAPERS)...நான் போறேன்ப்பா... இந்த நாட்டை விட்டே போறேன்...YOU SET ME FREE AND NOW I AM GONNA BE GONE"   சொல்லிட்டு என்னைப் பாத்து சிரிச்சா


"ம்" கொட்டவும் முடியாமல் காபி தம்ளரில் விரலை வைத்து தட்டிக்கிட்டு உட்காந்து இருந்தேன்...

""என்ன ஒரு பதிலையும் காணும்...சும்மா சொல்ல்க் கூடாது தேவதாஸ் ரோல் உனக்கு நல்லாவே செட் ஆகும் போலிருக்கு...நாட்டை விட்டு போறேன்னு சொன்னதுக்கு என்ன ஒரு ரியாக்ஷன்டா சாமி...செம லவ் பண்ணுர போலிருக்கு"

"ம்ம்ம் சரி சரி இந்த சோக முகத்தை கழுவிட்டு...எங்க அப்பா கிட்ட வந்து உங்க பொண்ணை நான் லவ் பண்ணுறேன்....கல்யாணம் பண்ணி கொடுங்கன்னு வந்து கேளு...ப்ச் அப்பா மூணு நாள் ஊர்ல்ல இல்ல..கோயிலுக்கு போறோம்...சன்டே வீட்டுக்கு வா...உனக்காக காத்திருப்பேன்...அப்பாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ஒத்துக்குவார்....சரியா?"

அதிகப்படியான சந்தோசமோ துக்கமோ இரண்டுமே ஒரு மனுசனை அமைதியாக்கிடும் போலிருக்கு ...அவளை அப்பவே அங்கேயே கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கணும் போல இருந்துச்சு...


"I  DEFINITELY MISSED YOU....." எழுந்து வந்து என் நெத்தியிலே அவ முத்தம் கொடுத்தா...அவக் கண்ணுல்ல இருந்த கண்ணீர் என் கன்னத்துல்ல விழுந்துச்சு..

“அந்த தமிழ் எம்பில் பொண்ணு அதை என்னப் பண்ணப் போறீங்க....?”

“உனக்கு ஓகேன்னா சைட்ல்ல வச்சிக்குறேன்...என்னால சமாளிக்க முடியும் என்ன சொல்லுற?”

“இழுத்து வச்சு அறுத்துருவேன்....இப்படி எல்லாம் ஏடாக்கூடமா பேசுற நாக்கை...”

“உனக்கு வேணாம்ன்னா வேணாம்...அதுக்கு எதுக்கு இவ்வளவு வயலன்ஸ்”

“I DUN WANT TO LOSE YOU AGAIN ..."  அப்படி சொல்லிட்டு தோளோடச் சாஞ்சுகிட்டா..அந்த ஒரு நிமிசம் உலகத்துல்ல அது வரைக்கும் படைக்கப்பட்ட படைக்கப்பட போற எல்லாம் ஜீவராசிகள்ல்ல ஆசிர்வதிக்கப்பட்டவன் நான் தான்னு நினைச்சேன்..இவளுக்காக எவ்வளவு வேணும்ன்னாலும் போராடலாம்...உன்னை இதே சிரிப்போட வாழ்க்கை முழுக்க பாத்துப்பேன் ரஞ்சனி எனக்கு நானே சத்தியம் பண்ணிகிட்டேன்.

வெள்ளிகிழமை விடிய விடிய குடிச்சுட்டு ஒரே கூத்து...வாட்டர் டேங்க் மேல ஏறி நின்னு டைட்டானிக் பாணியிலே ஐ யாம் த கிங் ஆப் த வேர்ல்ட் டயலாக் எல்லாம் சொன்னேனாம்...சனிக்கிழமை காலையிலே டாம் சொன்னான்..

அவனுக்கு என் மேல செம கடுப்பு தான்..ஆனா அந்தக் கடுப்பையும் தூக்கி சாப்பிட்டுருச்சு நட்பு...

“மச்சான்... இந்தப் பொண்ணுங்களுக்கு டேஸ்டே இல்லன்னு திரும்ப திரும்ப ப்ரூவ் பண்ணுறாங்கடா... எனக்கு என்னடா குறைச்சல்..அரவிந்த சாமி கலர்...
பாடி வேணும்ன்னா கொஞ்சம் வீக்...அதுல்ல நீ அடிச்சுட்ட...ஆனா என்னால டெவலப் பண்ண முடியும் மச்சி..இரண்டே வாரம் ஜிம் போனா போதும்...போடா..அப்படி எங்கிட்ட இல்லாதது என்னடா உங்கிட்ட இருக்கு....?”
டாம் புலம்பி தள்ளிட்டு கடைசியா முழு போதையில்ல என்னைக் கட்டிப்பிடிச்சு உம்மா கொடுத்துட்டு “நல்லாயிருக்கணும்டா நீங்க...நீ என் மச்சான்...அவ நான் லவ் பண்ண பொண்ணு ஆனா இந்த நிமிசத்துல்ல இருந்து அக்கா...ரைட்டா?”

ஞாயிறு மாலைக்குள் நிறைய வேலை பாக்கி இருந்தது...எங்க வீட்டை சமாளிக்க என்னப் பண்ணலாம்ன்னு நிறையவே யோசிக்க வேண்டியிருந்தது...

போன்ல்ல எதோ எஸ் எம் எஸ் வந்துருந்துச்சு எடுத்து பாத்தேன்...ரஞ்சனி கிட்டே இருந்து தான் வந்துருச்சு...

கல்யாணமாகி மூணு வருசம் கழிச்சு என் பொண்டாட்டி தமிழ் லிட்டரேச்சர் கிட்ட அந்த எஸ் எம் எசை ஒரு தாள்ல்ல எழுதிக் காட்டி அர்த்தம் கேட்டேன்...

WHEN THE BRIDGES BETWEEN US ARE BURNT FOREVER WE MAY STAND APART ON THE SHORES HATING EACH OTHER.....

"யாரையாவது ரொம்ப லவ் பண்ணீங்களாப்பா...” என் தலையை ஆதரவா கோதிவிட்டு கேட்டாள்...

“இல்லயே”

“அப்படின்னா இது ஒண்ணுமில்ல....ராத்திரிக்கு எத்தன சாப்பாத்தி போடணும் உங்களுக்கு....காலையிலே பிளைட் எத்தன மணிக்குன்னு கேட்டப்படி அவ சமையலறைக்குள்ளே போயிட்டா...

பிகு:

அந்த எஸ் எம் எஸொட அர்த்தம் சத்யமா இன்னி வரைக்கும் எனக்குப் புரியவே இல்ல...புரிஞ்சவங்க யாராவது இருந்தா நீங்களாவது சொல்லுங்க...

அதுக்கு அப்புறம் இந்த நிமிசம் வரைக்கும் நான் மறுபடியும் ரஞ்சனியை சந்திக்கல்ல..எங்கே இருக்கான்னு தேடவும் இல்ல....ஆனா மறுபடியும் அவ போயிட்டா....அவ ஞாபகம் எப்பவாது வரும்...கொஞ்ச நேரம் இருக்கும் அப்புறம் போயிடும்...மல்லிவாசம்....ஆனா எதோ ஒண்ணு சொல்லுது எங்கேயாவது எப்போவாது அவளை நான் மறுபடியும் சந்திப்பேன்னு...அப்படி சந்திச்சா அந்தக் கதையையும் உங்க கிட்ட சொல்லாம யார் கிட்ட சொல்லப் போறேன்..

நன்றி இத்தோடு பாகம் 2 நிறைவு.

Saturday, February 25, 2012

மீண்டும் தென்கிழக்கு வாசமல்லி - 8

இது வரை

மூணு நாள் வீட்டுச் சாப்பாடு அம்சமா இருந்துச்சு...அம்மா சாப்பாட்டுல்ல எப்பவும் அன்பு இருக்கும் அதுவும் எனக்குன்னு ஒரு படி அதிகாமவே
இருக்கும்..அது தான் அந்த ருசிக்கான ரகசியம்

நம்ம விசிட்க்காக அம்மா மார்கெட்ல்ல சொல்லி நல்ல் பனங்கிழங்கு வாங்கி வச்சிருந்தாங்க...காலையிலே ருசியான் நுங்கு சர்பத் வேற அப்பா வாங்கிட்டு கொடுத்தாப்புல்ல....ஸ்ப்ப்ப்பா தின்னவ்வேலி ஜில்லாக்குன்னு சாப்பாட்டுல்ல ஒரு தனி விசேசம் உண்டு அதை அனுபவிச்சி சாப்பிட்டு பாத்தவனுக்கு தான் தெரியும்

அம்மா வைக்கிற  கறி குழம்புக்கு இணை ஏது!!...ஞாயித்துக் கிழமை காலை டிபன் இட்லியும் கறி குழம்பும் தான்...எத்தனை இட்லி சாப்பிட்டேன்னு எனக்கு கணக்கு வைக்கவே முடியல்ல...அம்மா பாட்டுக்கு இட்லியை வச்சு குழம்பை ஊத்திட்டே இருந்தாங்க...வயித்துல்ல இருந்த இடத்தை எல்லாம் நிரப்பி அதுக்கு மேல தொண்டை வரைக்கும் அடைச்சாச்சு... எவ்வளவு நாள் ஆச்சு இப்படி வக்கனையாச் சாப்பிட்டு...வீட்டுச் சாப்பாடு வீட்டுச் சாப்பாடு தாம்...ம்ம்

இதுக்கு பிறகு...சூடாக் கொஞ்சம் போல கருப்பட்டி காபியைத் தம்ளர்ல்ல ஊத்திக்கிட்டு பூரசமரத்துப் பக்கம் வந்து நின்னேன்... பக்கத்துல்ல மல்லிச்செடி தழைச்சு வளந்துருந்துச்சு. ..  கிளையெல்லாம் பூத்துக் குலுங்குச்சு...மல்லிவாசம் அப்படியே ஆளை தூக்கி அசர அடிச்சது...மனசு அப்படியே அந்த வாசத்துல்ல லயிச்சு கிடக்கையிலே செல்போன் சிணுங்குச்சு..டாம் தான் போன்ல்ல பேசுனான்....

கிட்ட இருந்து போன் வந்து சரியா 18 மணி நேரத்துல்ல நான் சென்னை போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி பார்க்கிங்க்ல்ல நின்னுட்டு இருந்தேன்... அங்கே டாம்...கேஜி...லட்சுமிபதி...நாணா...சுதா எல்லாரும் அங்கேயேத் தான் இருந்தாங்க...எல்லார் முகத்துல்லயும் கவலை ரேகை கோரத் தாண்டவமாடிகிட்டு இருந்துச்சு..

“மூச்சு பேச்சு இல்லடா...கஷ்ட்டம்ன்னு தான் சொல்லுறாங்க...ஐசியுல்ல வச்சிருக்காங்க...”

“ம்”

”ரத்தம் நிறைய போயிருச்சாம்...எதுவும் 48 மணி நேரம் கழிச்சு தான் சொல்ல முடியும்ன்னு சொல்லுறாங்கடா”

"ம்”

”லோடுலாரிகாரன்...திருப்பத்துல்ல வச்சு அடிச்சுருக்கான்...ஓவர் ஸ்பீடு...சரக்குப் போட்டிருப்பான் போல...வண்டி எல்லாம் சுத்தமாக் காலி...ஸ்பாட் அவுட்ன்னு முடிவு பண்ணிட்டாங்க...ஒரு ஆட்டோக்காரர் தான் பாத்து தூக்கிட்டு வந்துருக்கார்....”

“ம்”

தொண்டக்குழிக்குள்ளே எதோ ஒரு பந்து உருளுறது மாதிரி இருந்துச்சு...டாம் பேச பேச என்னாலே   "ம்" ங்கற வார்த்தையைத் தவிர வேற எதுவும் வெளியே கொண்டு வர முடியல்ல...நான் அடிப்பட்டி ஆஸ்பத்திரியிலே படுத்தப்போக் கூட பெரிசா தெரியல்ல... உணர்வில்ல...இப்போ என்னவோ போலிருந்துச்சு... உயிர்ங்கறது உடம்புல்ல எங்கே இருக்குன்னு இன்னும் மருத்துவம் கண்டுபிடிக்கல்ல.. உடம்பு வலிக்கு மருத்துவம் பல மருந்து சொல்லிருச்சு...ஆனா உயிர் வலிக்கு என்ன மருந்தோ இன்னும் தெரிஞ்சுக்க முடியல்ல..

டாம் மட்டும் அப்பப்போ உள்ளே போய் விவரத்தை விசாரிச்சுட்டு வந்து சொல்லிகிட்டு இருந்தான்...கொஞ்ச நாளா விட்டிருந்த சிகரெட் பழக்கத்தை அந்த நிமிசம் மறுபடியும் ஆரம்பிக்கச் சொல்லி மனசு பரபரப்பா ஆச்சு...ஆஸ்பத்திரின்னும் பாக்கமா ஒரு ஓரமா போய் ஊதிட்டு வந்து உக்காந்தேன்...

தம்மடிக்கும் போது மனசு நிக்காம தறிகெட்டு ஓடுச்சு....பூரச மரத்தடியிலே வச்சு நடந்த அந்த முத சந்திப்புல்ல தொடங்கி....மல்லி செடியை நட அவப் பாவாடையை இடுப்புல்ல தூக்கி சொருகிட்டு நின்ன அழகான ஒரு மாலை பொழுதுன்னு நீண்டு... அவளுக்கு வைத்தியும் அவத் தங்கச்சி மூக்களகியும் சேந்து சைக்கிள் ஓட்டச் சொல்லிக் கொடுத்தது...அதை ஹகிரவுண்ட் கட்டச் சுவத்துல்ல உக்காந்து நான் ரசிச்சது... அப்புறம் என் முட்டாத் தனத்தாலே அவளை அழ வச்சேனே..அந்த அழுகை..அங்கே வந்து மனசு பெரூமூச்சு விட்டுச்சு...முழுசா எரிஞ்ச சிகரெட் விரலைச் சுட்டுருச்சு...நினைவுக்கு வந்து திரும்பவும் பார்க்கிங் ஏரியா நோக்கி மெதுவா நடக்க ஆரம்பிச்சேன்..

எல்லாத்தையும் உங்க கிட்டச் சொன்ன அவுட்டிங்க் போன அன்னிக்கு கெத்தா மண்ணுல்ல எழுதிட்டு கிளம்பிப் போனக் கதையை மட்டும் தான் சொன்னேன்...அதுக்கு அப்புறமும் அன்னிக்கு ஒரு கதை நடந்துச்சு...சொல்லக் கூடாத ஒரு கதை...ம்ம்ம் மனசுல்ல அந்தக் கதை தான் ஓட ஆரம்பிச்ச்து....நீங்களும் கேளுங்க...

அவுட்டிங்க்ல்ல எல்லா நிகழ்ச்சியும் முடிஞ்சு கூட்டமெல்லாம் சாப்பாட்டுக்கு எதிர்பாத்து உக்காந்து இருந்த நேரத்துல்ல...மேடையிலே எல்லா விளக்கையும் மொத்தமா அணைச்சுட்டாங்க...பவர்கட் போல ஜெனரேட்டர் போட்டு விடுவாங்கன்னு எல்லாரும் உக்காந்து இருந்தோம்....அப்போ

சல்மான் கான் ஐஸ்வர்யா ராய் நடிச்சு அப்போதைக்கு ரொம்பவும் பிரபலமான ஹம் தில் தே சுக்கே சனம்(HUM DIL DE CHUKE SANAM) படத்துல்ல ஒரு பாட்டு வரும் பாருங்க.... டோல் பாஜே(DHOL BAAJE)ன்னு...அந்த பாட்டுக்கு ஐஸ் அப்படி ஒரு ஆட்டம் போட்டிருப்பா...சல்மான் சவுண்டே இல்லாம இருப்பான அந்த பாட்டுல்ல... அந்த பாட்டோட மெட்டு மெல்லிய ஒலியா பரவ ஆரம்பிச்சது...அப்படியே பாட்டும் ஆரம்பம் அச்சுது.... பாக்கப் போனா அந்த படம்  நம்ம பாக்யராஜ் எடுத்த அந்த 7 நாட்கள் படத்தைச் சுட்டு எடுத்தது தான்...ஆனா பாட்டு எல்லாம் பட்டாசுங்க..அதுல்லயும் ஐஸ் ஆட்டம் செம மத்தாப்புங்க..


அந்த இசைக்கு ஏத்தாப்புல்ல மேடையிலே ஒவ்வொரு விளக்கா எரிய...வெளிச்சம் பரவ...

ஒய்யாரமா...மஞ்சளும் கருப்பும் கலந்த கலர் காக்ரா சோளியிலே நடந்து வந்தது....ரஞ்சனி...எனக்கு நாக்கு உலந்து மேல் உதட்டுக்கு உள் பக்கமா ஓட்டிகிச்சு..

ஒட்டியாணம் கட்டிய இடுப்பை இசையின் வேகத்துக்கு தகுந்த மாதிரி வெடுக் வெடுக்னு அவ வெட்டி ஆட ஆரம்பிச்சதும்...அவன் அவன் சோத்தை மறந்து விசிலைப் போட்டு மண் தரைன்னும் பாக்கமா உக்காந்து ரசிக்க ஆரம்பிச்சுட்டான்க...

வளைந்து நெளிந்து அவ ஆட ஆட எனக்கு குளிர் ஜூரமே வந்துரும் போலிருந்துச்சு....ப்சங்க எல்லாம் மொத்தமா பிளாட் ஆயிட்டாங்க...அடிச்ச சரக்கோட மப்பு நிறைய பேருக்கு இறங்கிப் போச்சு..பொண்ணுங்களும் உற்சாகமா சவுண்ட் விட்டு அவளை இன்னும் ஏத்தி விட்டாங்க

மேடையிலே ஒரு பிரளயமே நடந்துகிட்டு இருந்துச்சு....ஆட்டம்ன்னா ஆட்டம் அப்படி ஒரு ஆட்டம்....சாரி ஐஸ்...போட்டின்னு வந்தா நீ ரஞ்சனிகிட்ட இருந்து ஒரு ஆயிரம் மைல் தளளி நிக்கற்து உனக்கு நல்லது...உன் இமேஜூக்கு நல்லதுன்னு ஐஸ்வர்யா கிட்டப் போய சொல்லமுடியாததால்ல எனக்கு நானே சொல்லிகிட்டேன்...

கையிலே கேமரா இல்ல...பரவாயில்ல கண்ணையே கேமராவா மாத்தி அவளை வளைச்சு வளைச்சு போட்டோவா எடுத்து மைன்ட்ல்லே பிரிண்ட் போட்டு மைண்ட் சுவத்துல்ல மாட்டிவச்சுட்டு  இருந்தேன்...

ஆட்டத்தைப் பாத்தவங்க எல்லாரும் வாயைப்  பிளந்தப் படியே நிக்க ஆட்டம் முடியும் போது மொத்த பேரும் உச்சக் கட்ட பரவச நிலையைத் தாண்டிப் போயிட்டாங்க...மேடைக்கு கீழே அவன் அவன் தனியா ஒரு நாட்டியக் கச்சேரியே நடத்திட்டு இருந்தான்...சுருக்கமா சொல்லணும்ன்னா அவ ஒரு மந்திரக் கயிறு போட்டு மொத்தப் பேரையும் ஆட வச்சுட்டா..

பாட்டு முடியும் போது...மென்மை வன்மைன்னு கலந்து அதுல்ல பெண்மையைக் கொஞ்சம் சேர்த்து...கவிதையாச் சொல்லணும்ன்னு பாத்தேன்...முடியல்ல...எப்படி சொல்லுறது...தமிழ்ல்ல வார்த்தையே பத்தாது அவ அப்போ என்னப் பாத்த பார்வையை வருணிக்க...இளையராஜால்ல ஆரம்பிச்சி ரஹமான் வரைக்கும் எல்லாரும் என் பக்கமா வந்து அந்த நிமிசத்தைக் கொண்டாட என்னமோ எல்லாம் வாசிச்சாங்க தெரியுமா...நம்புங்க நான் செத்துட்டேன்...அவ இன்னொரு முறை பாக்க மாட்டாளான்னு தவிச்சுட்டேன்...ஓவருன்னு நீங்க நினைச்சா..கம்மின்னு நான் சண்டைப் போடுவேன்...அவ ஒரு தேவதை...சோ லவ்லி தேவதை...


தேன்ல்ல தலை குப்புற விழுந்த வண்டு மாதிரி அவ அழகுல்லயும் அபிநயத்திலும் மொத்தமா கவுந்த நான் அவளைத் தேடி மேடைக்குப் பின்னாடி போனேன்..


அவளைப் பாத்த நேரத்துல்ல வார்த்தை எல்லாம் விசா வாங்கிட்டு கிளம்பி போயிருச்சு...கெத்து எல்லாம் செத்து வெத்தா உடம்பு மட்டும் நிக்குது....அவ முகத்துல்ல இருந்து உதறி விட்ட வேர்வைத் துளி என் முகத்துல்ல பட்டு சிதற்...அதுக்கும் மேலயும் என்னால முடியல்ல..


வார்த்தைங்க தோத்து போற இடத்துல்ல செயல்கள் சட்டுன்னு ஜெயிக்குமாம்...அவத் தோளைத் தொட்டு என் பக்கம் திருப்புனேன்...அவக் கண்களை அவ்வளவு பக்கத்துல்ல அதுக்கு முன்னாடி நான் பாத்தது இல்ல...கடைசியா..எதோ ஒரு படத்துல்ல மீனாவோட கண் க்ளோஸ் அப்பை தான் அவ்வளவு பக்கத்துல்ல பேரின்ப விலாஸ் தியேட்டர்ல்ல முத வரிசையிலே உக்காந்து பாத்ததா ஞாபகம்...இவக் கண்ணைப் பாத்து திணறி போயிட்டேன்...

அவ அசையாம நின்னா...சின்ன சத்தமோ சலனமோ இல்ல அவகிட்ட....இன்னும் கொஞ்சம் துணிஞ்சு என் உதட்டை அவ உதட்டுக்கு ரொம்ப பக்கமா கொண்டு போயிட்டேன்....அவளோட வாசம் வச்சு அவ என்ன ப்ர்ப்யூம் யூஸ் பண்ணுறான்னு என்னாலே யூகிக்க முடியல்ல...அதுவா முக்கியம்...அவ கண்ணை மூடவே இல்லை...என்னை இன்னும் ஆழமாப் பாத்துட்டு இருந்தா...

மழையிலே நனைஞ்சு ஈரமா இருக்க செர்ரீ பழம் மாதிரி அவ உதடு இரண்டும் எனக்கு ரொம்பவே பக்கத்துல்ல இருந்துச்சு....என் கை இரண்டும் அவ தோளை அழுத்திப் பிடிச்சி இருந்துச்சு...கட்டிப்பிடிச்சும் பிடிக்காமலும் இருந்தா எப்படி இருக்குமோ அந்த ஒரு மாதிரி நிலையிலே இரண்டு பேரும் நின்னுட்டு இருந்தோம்...அவ மூச்சு காத்து என் முகத்துல்ல பட்டுட்டு இருந்துச்சு...அது கொஞ்சம் சூடா இருந்துச்சு....அவ விலகவும் இல்ல...என்ன எதிர்க்கவும் இல்ல

அவ உதட்டை என் உதட்ட்டோடச் சேத்து பூட்ட்ப் வினாடிக்கும் நேரம் கம்மியா தான் இருந்துச்சு...அந்த நேரம் எனக்குள்ளே என்னமோ முழிச்சுகிச்சு....சட்டுன்னு அவக் கிட்ட இருந்து விலகிட்டேன்...அவளை ஒரு முறை பாத்தேன்...அவ கண்ணுல்ல சின்னச் சலனமோ கலவரமோ எதுவும் இல்ல...ரொம்ப ஆழமான அமைதி மட்டுமே என்னால பாக்க முடிஞ்சது...நான் அதுக்கு மேல அங்கே நிக்காம திரும்பி இருட்டுல்ல இறங்கை நடக்க ஆரம்பிச்சேன்... திரும்பி பாக்காமல் தான் நடந்தேன்...ஆனாலும் அவப் பார்வை என் முதுகை துளைச்சு முன்னாடி வர்ர மாதிரியே இருந்துச்சு எனக்கு...

நான் செஞ்ச வரைக்கும் ரைட்டா?? செய்யாம விட்டது தப்பா??ன்னு எனக்கு தெரியல்ல...ஒண்ணு மட்டும் புரிஞ்சது....I WAS TRULY MADLY DEEPLY AND VERY BADLY IN LOVE WITH HER...i WOULD DIE FOR HER....

மூணாவது நாள்...

அவளை அப்பவே பாக்கணும் போல இருந்துச்சு... ஒரு பூங்கொத்தை வாங்கிட்டு அவ ரூமுக்குத் போனேன்...மல்லிகைப் பூங்கொத்து...

நான் போன நேரம் அங்கே யாரும் இல்ல..ரூம் கதவு சாத்தியிருந்துச்சு.. கதவை மெல்லத் தட்டிட்டு...உள்ளே போனேன்....ஆஸ்பத்திரி பச்சை கலர் ட்ரெஸ்ல்ல அவளைப் பாக்க என்னவோ போலிருந்துச்சு... குழந்தை மாதிரி குவிஞ்சு படுத்து நல்லாத் தூங்கிட்டு இருந்தா...அப்படியே நின்னு அவ முகத்தைப் பாத்துட்டே இருக்கணும்ன்னு தோணுச்சு..பாத்துட்டே நின்னேன்....

தேவதை தூங்குறா....என்னையுமறியமா குனிஞ்சு அவ நெத்தியிலே முத்தம் வைக்க போனேன்..அப்புறம் அந்த முத்தத்தையும் என் உதட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைச்சுட்டு நிமிந்தேன்......

தலையிலே எதோ சர்ஜரி பண்ணியிருப்பாங்க போல...கட்டுப் போட்டிருந்தாங்க... முடி எல்லாம் எடுத்துருந்துச்சு...கழுத்து பக்கம் நீளமான காயம்... உதடு கன்னங்களில் வெட்டு காயம்...அவத் தூக்கத்தை கலைக்க விருப்பமில்லாம அப்படியே கிளம்பி வந்துட்டேன்... பூங்கொத்துல்ல பேர் எழுதாம மேசையில்ல வச்சுட்டு வந்தேன்.....

கால் போனப் போக்குல்ல நடந்து சுத்திட்டு ராத்திரி ரொம்ப லேட்டாத் தான் ரூமுக்கு வந்தேன்...டாம் அவங்க மாமா வீட்டுக்குப் போயிட்டான்... அவளோட முகம் மறுபடியும் மறுபடியும் மனசுக்குள்ளே வந்து வந்து போயிட்டு இருந்துச்சு...

மொட்டை மாடியிலே வெட்ட வெளியிலே வந்து நின்னேன்.....ரொம்ப் ரொம்ப வருசத்துக்கு அப்புறம் வானத்தைப் பாத்து கையெடுத்து கும்பிட்டு கத்துனேன்....

"கடவுளே அவளை இங்கேயே என் கூட இருக்க விடு....உன் ராஜ்ஜியத்துல்ல  பல்லாயிரக் கோடிக்கணக்கான தேவதைகள் இருக்காங்க...எனக்கு என் வாழ்க்கையிலே இவ மட்டும் தான் சாமி தேவதை....ப்ளிஸ் அவளை என் கிட்ட கொடுத்துரு....."

“பொழச்சுக்குவா அவளுக்கும் ஒண்ணும் ஆகாது...ஒண்ணும் ஆகாது... எனக்கு நானே திருப்பித் திருப்பிச் சொல்லிகிட்டேன்..."

அடுத்த பகுதியில் வாசம் நிறையும்....

Tuesday, February 21, 2012

மீண்டும் தென்கிழக்கு வாசமல்லி - 7

இது வரை..

வேலைன்னு வேலைன்னு மனசும் உடம்பும் ஒரெடியாக் களைச்சுப் போயிருந்துச்சு...சட்டையைக் கழட்டி வெத்து உடம்பா கண்ணாடி முன்னாடி நின்னு பாத்தா அங்கே இங்கேன்னு எங்கே பாத்தாலும் உடம்புல்ல ஊளைச் சதை..இதே கணக்குல்ல போனா வர்ற புள்ளையார் சதுத்திக்கு நம்மளை புள்ளையாரா உக்கார வச்சிருவாங்க போலிருக்கேன்னு ஒரு எண்ணம் தோணுச்சு,, பல மாசம் கழிச்சு ஜிம் பக்கம் எட்டிப் பாத்தேன்...எடை மெஷின்ல்ல ஏறி நின்னா முள் முக்கி முனகி சதமடிக்கரதுக்கு இன்னும் 2 கிலோ தான் பாக்கின்னு காட்டிச்சி....

அடுத்த சில வாரங்கள் ஜிம்மே கதின்னு கிடக்க ஆரம்பிச்சேன்... அதிகாலையிலே திருவான்மியூர் பீச்ல்ல ஓட்டம்...அதுக்கு பிறகு பெசண்ட் நகர்ல்ல விளையாட்டு...நேரம் கிடைக்கும் போது கொஞ்சமா சைக்கிளிங்... வாரமிரு முறை வேளச்சேரியில நீச்சல்... சிதறி கிடந்த சிந்தனைய எல்லாம் உடம்பை இறுக்கறதுல்ல காட்ட ஆரம்பிச்சேன்..உடம்பு குறைய ஆரம்பிச்சது... மனசு நிறைய ஆரம்பிச்சது...

ஆபிஸ்ல்ல  அநாவசியமா பேச்சு வளத்துக்கறது சுத்தமா நின்னுப் போச்சு....முக்கியமா நாளுக்கு நாலுன்னு ஊதுன்ன தம்மை மொத்தமா நிறுத்துனேன்...சரக்கு மட்டும் எப்போவது பீர்...அதுவும் ஆசைக்கு..        

போஜனப் பிரியனே உன் தொண்டையிலே கத்தியை வை...டாம் ரூம்ல்ல வச்சிருந்த பைபிள்ல்ல எப்பவுவோ படிச்ச ஒரு செய்தி...இப்போ நம்ம வாழ்க்கைக்கு செட் ஆச்சு...ராத்திரி சாப்பிடுற பாஸ்ட் புட் ஐட்டம் எல்லாம் கட்..கேப்பை கேழ்வரகு கூழ்...சப்பாத்தின்னு அளவா வளமா சாப்பிட ஆரம்பிச்சேன்...

வாழ்க்கையை ரசிக்க ஆரம்பிச்சேன்...தலைவர் படத்தை மட்டுமே பாத்தவன் ஜாக்கிசான் படத்தை மட்டுமே இங்கிலீஸ் படம் என பதினைஞ்சு வயசு வரைக்கும் நம்பியவன்..பின்னர் பலான பிட் படங்களும் ஆங்கில படம் தான் என ஒத்துகிட்டவன்...இப்போ உலக படமெல்லாம் பொறுமையா பாக்க ஆரம்பிச்சேன்...எப்பவோ அப்பா வாங்கி நான் எடுத்துட்டு வந்த பொன்னியின் செல்வன் புக் எல்லாம் வாசிக்க ஆரம்பிச்சேன் வாழ்க்கை அழகாத் தெரிஞ்சது...

அன்னிக்கு ஆபிஸ் போனப்போ அவ டெஸ்க் சுத்தி எல்லாரும் கூட்டம் போட்டுட்டுருந்தாங்க...

"வாவ்....பியுட்டி புல்....(WOW BEAUTIFUL)"

"மார்வலஸ்!!!" ( MARVELOUS)

"அச்சோ என்ன அழகு!!!"

இப்படி மாத்தி மாத்தி யாராவது எதாவது சொல்லிட்டே இருந்தாங்க....அவ
லேப்டாப்ல்ல எதோ படம் காட்டிட்டு இருந்தா...

“உர்ரே...ஆர்பிவோட வுட் பி சின்ன வயசுல்லு யுஎஸ் போயிருந்தாரா...அப்புடு திஸ்க்குன்ன போட்டோ எல்லாருக்கும் ஆர்பி காட்டுரார்ரா...பலேகா உந்திரா.. அதுல்லு வாஷிங்டன்லு செர்ரி பிளாசம் பிக்ஸ்(CHERRY BLOSSOM PICS) சூப்பர்கா உந்திரா...நீயும் சூடுரா....”

“நாங்க எல்லாம் நேர்ல்ல போய் ஒயிட் அவுஸ்ல்ல வைன் ஊத்தி  குடிச்சுட்டே அதை எல்லாம் சூடிக்குறோம்....வெறும் போட்டோவுல்ல பாத்து என்ன ஆகப் போகுது”

“லேதுரா...ஆர்பி அம்மாயிக்கு அஸ்வின் பாபுகாரு மேலு பிரேமம் ஜாஸ்திரா அதே காரணத்துல்லு அம்மாயி அவர் ட்ரிப் போட்டோஸ் அல்லாருக்கும் காட்டி சந்தோஷம் ஆவுறார்ரா...லவ்ரா லவ்....அதே நேனு சின்னப் அப்புடு ஸ்கூல்லு பிக்னிக் வெள்ளின அப்புடு  திஸ்சுக்குன்ன போட்டோ எல்லாம் சுதாக்கு காட்டி நா மீத்து அவருக்கு லவ் வருமா ட்ரை சேஸ்தானுரா ஓகேவா?”

“என்னடா நீ ஸ்கூல் படிக்கும் பிக்னிக் போனியா எங்கே போன...போட்டோ இருக்கா காட்டுரா பாப்போம்....”

அவனும் பிக்காசாவைத் திறந்து கால் சட்டை போட்ட ஒரு தேவாங்கு குரூப்க்கு நடுவில்ல நின்னுட்டு இருந்த போட்டாவை எல்லாம் ஒவ்வொண்ணா ஒரு கதையோட காட்டுனான்...அவன் சொன்ன கதை எல்லாம் தனியா ஒரு மெகா சிரியலே எடுக்காலாம்...அவ்வளவு மொக்கை....”

“ஏண்டா  அது வாஷிங்க்டண்டா அவன் அவன் ஆஹா ஓஹோன்னுவான் அர்த்தமிருக்கு...நீ காட்டுற போட்டா எல்லாம் எங்கேயோ கடப்பாவுல்ல கக்கா போற காட்டுல்ல எடுத்த மாதிரி இருக்கு...அசிங்கமா திட்டிற போறா...மூடி வை”

“அல்லாம் புரியுது...அது ஏமி கக்கா போற காடு....உர்ரே பாபு அல்லாம் உனக்கு காமெடியா உந்தி....பிரேமம் பாபு...ட்ரூ லவ்...நாக்கு அம்மாயி மீத்து காதல்ரா...சத்தியம்ரா  ?”

“டேய் லட்சுமிபதி யார் தான் யாரை லவ் பண்ணல்ல..ஓலகம் வேகமா போனாலும் அவன் அவன் ஓரமா உக்காந்து லவ் பண்ணிட்டு தான் இருக்கான்...லவ் செய்யி...ஆனா வீட்டுல்ல பாக்குற பொண்ணாப் பாத்து கட்டிக்கோ... உங்க ஊர்ல்ல தான் ஐடி அல்லுடுன்னா பணத்தைக் கோணி பையிலும் பவுனை சிமெண்ட் பையிலும் போட்டு தருவாங்களேப்பா..அதுவும் ஆன்சைட் அல்லுடுன்னா மார்கெட் வேல்யூவே தனி... அப்புறம் எதுக்கு பாவா லவ் பிரேமம் காதல் எல்லாம்...மணி வேஸ்ட் டைம் வேஸ்ட் டோட்டல் லைப் வேஸ்ட்...நல்ல ரம்பா ரோஜா மாதிரி பிகரா பாத்து செட்டில் ஆவுடா...”

“உர்ரே....மேரேஜ் அரெஞ்ச் சேசானு ரா....அதுல்லு லவ் மாத்ரம் எவ்வுருராலும்   அரஞ்ச் செய்ய லேதுரா...அர்தம் ஆயிந்தா LOVE JUST HAPPENS BAVA?”

”அடேய் லட்சுமிபதி...ஐடில்ல ரிசெஷன்(RECESSION) வந்தாலும் உனக்கு கைவசம் இன்னொரு தொழில் இருக்குடா.... நேரா போய் பாலகிருஷ்ணாவைப் பாரு பஞ்ச் டயலாக் எழுதி கொடுத்து பொழப்பை ஒட்டிக்கலாம் இல்லன்னாலும் எங்கூரு கோடம்பாக்கத்துல்ல உன் பஞ்சை லைட்டா பஞ்சர் பாத்து உருட்டி விட்டு காசு பாத்துரலாம்...போடா போய் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கடா பஞ்ச் டயலாக் பேசிகிட்டு...”

அவன் போன பிறகு அவன் சொன்ன விசயத்தை யோசிச்சு பாத்தேன்...அதில் அர்த்தம் இருந்தது...எத்தனை பேருக்குடா மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கை அமையுது...அவன் அவன் அமையிற வாழ்க்கையைப் பிடிச்ச மாதிரி நடிச்சுகிட்டே வாழ்ந்து முடிச்சுடுறான்...

ஊருக்கு போய் ஆறு மாசம் ஆச்சி டிக்கெட் போடணும்... ஏஜெண்டுக்கு போனைப் போடும் போது...  அவத் தான்.. அவக் குரலே தான்..
ஹலோ,,, ஹலோன்னு மறுமுனையிலே கத்திகிட்டு இருந்த ஏஜெண்ட்டைக் கண்டுக்காம போனைப் பாதியிலே வைக்க வச்சது...

“அட்டென்சன்(ATTENTION)....லாஸ்ட் ஒன் இயரா டே நைட் பாக்கமா....பல கஷ்ட்டப் பட்டு நாம உழைச்சு....2 வாரம் முன்னாடி புரொடக்‌ஷன் போன நம்ம அப்ளிகேஷன் பத்தி நிறைய பாஸிட்டிவ் ரிப்போர்ட்ஸ் .. கமெண்ட்ஸ். .ரிவியூஸ்....வி ஹேவ் டன் இட் கைஸ்... த புரொஜக்ட் இஸ் எ ஹியுஜ் சக்சஸ்   ( POSITIVE REPORTS..COMMENTS..REVIEWS. WE HAVE DONE IT GUYS..THE PROJECT IS A HUGE SUCCESS).அது மட்டுமில்ல....இந்த புரொஜக்ட்டோட மொத்த சப்போர்ட் ப்ளஸ் (SUPPORT PLUS)அவங்களோட அடுத்த முக்கிய புரொஜட் மூண்லைட் 3.0(MOONLIGHT 3.0)வும் நமக்கே சைன்(SIGN) ஆயிடுச்சு....சோ இட்ஸ் பார்ட்டி டைம்....போனஸ்....ஹைக்ஸ்...ஆண்ட் கிராண்ட் செலிப்ரேஷன்ஸ்.....த்ரி சியர்ஸ் டூ த விநாடிக்ஸ் டீம்... ஹிப் ஹிப் ஹூரே ஹிப் ஹிப் ஹுரே( SO ITS PARTY TIME...BONUS...HIKES...AND GRAND CELEBRATIONS...THREE CHEERS TO THE VNAUTIX TEAM  HIP HIP HURRAY HIP HIP HURRAY)”

அர்த்தத்தோட சில பேரும் அர்த்தமில்லமா பல பேரும் அர்த்தமே புரியாம இன்னும் சில பேரும் அந்தக் கொண்ட்டாத்துல்ல கலந்துகிட்டு சத்தம் போட்டுட்டு இருந்தாங்க...

இது தான் ஐடி உலகம்...மாட்டுக்கு வருசத்துக்கு ஒரு தடவை பொங்கல்... பேக்டரில்ல இருக்க மெசினுக்கு எல்லாம் வருசத்துக்கு ஒரு தடவை ஆயுதப் பூஜை...  எங்களுக்கு எப்பவாது எதாவது புராஜக்ட் பெரிய லெவல்ல வருமானம் கொண்டாந்து கொடுத்தா மேனேஜ்மெண்ட் வைக்கிற பொங்கல் தான் இந்த ட்ரீட் செலிபேரஷன் அவுட்டிங் எல்லாம்...

எங்க பொங்கலுக்கு எல்லாரும் தயார் ஆயிட்டு இருந்தாங்க...போனஸ் ஹைக் இந்த வார்த்தைகளைத் தவிர அந்தப் பேச்சுல்ல வேற எதுவும் எனக்கு  புரியல்ல புடிக்கல்ல...

அவன் அவன் எந்த பிகரை பொறி வச்சு அவுட்டிங்க்ல்ல புடிக்கலாம்ன்னு ஒரு கணக்கோட திரிய ஆரம்பிச்சாங்க....சொல்ல மறந்துட்டேன்..இந்தக் கேப்ல்ல கம்பெனியிலே நிறைய புது பசங்களும் புது புள்ளகளும் சேந்துருந்தாங்க... ட்ரெயினிஸ்..சம்பளம் கம்மி..ஆனா ஒரே வேலை தான்...

“அவுட்டிங்க் எல்லாம் நான் வர்றல்லப்பா....ஊருக்கு போறேன்....எந்த வேலைக்கும் என்னிய இழுக்காதீங்க சொல்லிட்டேன்...” நான் நாணா.. .டாம்... எல்லார்கிட்டயும் திடமா சொல்லிட்டேன்...எல்லாரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் எனக்கு அதில் இஷ்ட்டமில்ல... வர முடியாதுன்னு சொல்லிட்டேன்.... அவுட்டிங்க்கு முதல் நாள் சாய்ங்காலம் அவ வந்து கேக்குற வரைக்கும்...

“வரமுடியாதுன்னு சொன்னீங்களாம்....சீனியர்ஸ் இப்படி பண்ணா....அப்புறம் ஜூனியர்ஸ் கிட்ட எப்படி டீம் ஸ்பிரிட் எல்லாம் எதிர்பாக்க முடியும்.... எல்லாம் இருக்கட்டும்....நான் கேக்குறேன்... ஒரு பிரெண்ட்டா கேக்குறேன்... ப்ளிஸ் வரணும்...நீங்க வரணும்... ஐ வில் எக்ஸ்பெக்ட் யூ”

அதுக்கு அப்புறமும் நான் எப்படி போகாம இருக்க முடியம்?!!...ஊருக்கு போட்ட டிக்கெட்டை கிடப்பில் போட்டுட்டு கிளம்புனேன் அவுட்டிங்க்கு...

“வர மாட்டேன்னு ஒரு ஒரு வாரமா சீன் காட்டுன” - கேஜி

“ஊருக்கு போற ட்ரெயின் எல்லாம் தண்டவாளத்துல்ல இருந்து தரைக்கு வந்துச்சோ” - நாணா

“சாருக்கு கேக்குறவங்க கேக்கணும் அப்போத் தான் வருவார்....பல வருச நட்பை விட நேத்து பூத்த நட்புக்கு தான் சார் அதிக மரியாதை கொடுப்பார்” - டாம்..

“உர்ரே...பாபு வந்துட்டாருரா.. ஹேப்பிகா உந்தி எதுக்கு சண்ட...ரண்டி என் ஜாய் செய்யி ரண்டி” லட்சுமிபதி செம ஸ்டைலா வந்து இருந்தான்...

யாரோ பாடுனாங்க...யாரோ ஆடுனாங்க...மிமிக்ரி பண்ணாங்க...எதோ ஈவண்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி(EVENT MANAGEMENT COMPANY) என்னமோ பண்ணிட்டு இருந்தாங்க... அவன் அவன் ரவுசா ஆட்டம் போட்டுட்டு இருந்தான்

நிகழ்ச்சியிலே ஒரு கட்டமா நீச்சல் போட்டி வச்சாங்க....சின்னச் சின்ன பசங்க எல்லாம் சட்டைய அவுத்துட்டு டவுசரை மாட்டிட்டு ரெடியா போய் நின்னாங்க... பொண்ணுங்க எல்லாம் கூச்சல் போட்டு ஒரே உற்சாகம்...

கன்னியர் தம் கடைக்கண் பார்வை தம் மீது பட்டு விட்டால் மண்ணில் மாமலையும் ஒரு கடுகாம் குமரருக்கு...பாவேந்தர் பாரதிதாசன் அய்யா அழகாத் தான் எழுதி வச்சிட்டு போயிருக்காரு...எல்லா டீம்ல்ல இருந்தும் ஆள் வந்துட்டாங்க...எங்க டீம்ல்ல மட்டும் யாரும் போகல்ல...ஒருத்தருக்கும் நீச்சல் தெரியல்ல....

எனக்கு நீச்சல் தெரியும்ங்கறது டாமுக்கு தெரியும்...அவன் போட்டுக் கொடுக்க மாட்டான்னு எனக்கு தெரியும்...ஆனா அன்னிக்கு போட்டுக் கொடுத்துட்டான்....

மாட்டேன்ன்னு சொன்னா அவ்வளவு நல்லா இருக்காது...

எப்படியும் கடைசியா வருவேன்னு எதிர்பாத்தானோ என்னவோ தெரியல்ல...அவனை முறைச்சுட்டே போனேன்...

“மாப்பூ...வின்னிங்க் இஸ் நாட் இம்பார்டெண்ட்....பார்டிசிபேசன் மேட்டர்ஸ்(WINNING IS NOT IMPORTANT PARTICIPATION MATTERS)” சவுண்ட் வேற விட்டான்...அதுக்கு கெக்கபிக்கன்னு சிரிக்க நாலு பேர்....

ஜம்பிங் பேட் பக்கம் போய் மெதுவா சட்டையை கழட்டுனேன்...அப்பவே பொண்ணுங்க மெதுவா ஏக்கப் பெருமூச்சு விடுறது கேட்டுச்சு...அடுத்து பனியனைக் கழட்டி நிக்கும் போது.... ஓஓஓஓன்னு ஒரே விசில் சவுண்ட்... பழனி படிக்கட்டை எல்லாம் பனியனுக்குள்ளே செதுக்கி இல்ல வச்சிருந்தோம்... ஜிம்ல்ல உழைச்ச உழைப்பின் மகிமை நல்லாவே தெரிஞ்சது.. கால்சட்டையோட நிக்கையிலே.... மொத்த ஏரியாவும் வெக்கையிலே வெந்து தணியறது தெரிஞ்சது... .கையைக் காலை மடக்கி டாமை கொஞ்சம் கடுப்பேத்திட்டு... ஆட்டத்துக்கு ரெடி ஆனேன்....

அதுக்கு பிறகு...ஆட்டத்துல்ல ஜெயிச்சு....சொட்ட சொட்ட டவலை கட்டிகிட்டு வெத்து உடம்போட கொஞ்ச நேரம் வேணும்னே திரிஞ்சேன்...டாமுக்கு நோகட்டும்ன்னு தான்...பொண்ணுங்க வின்னிங்க் டீம் போட்டோன்னு சொல்லி எல்லா டீம் பொண்ணுங்களும் என்னோட வந்து போட்டோ எடுத்துகிட்டாங்க...

அப்புறம் டக் ஆப் வார்ங்கற கயிறு இழுக்குற போட்டி...அதுல்லயும் ஜெயிச்சு ஒரு வழியா ஆர்ப்பாட்டம் முடிஞ்சு டின் பீரை எடுத்துட்டு பீச் ஓரமா ஒதுங்கிட்டேன்...

சரசரன்னு சாரல் காத்து அடிச்சா மாதிரி ஒரு வாசம் வர திரும்பி பாத்தா அவளே தான்...என் பக்கத்துல்ல வந்து உக்காந்தா...அவ கையிலே பெப்சி டின்..நான் பீரை கீழே வச்சேன்...

“கேரி ஆன்(CARRY ON)....சூடான வெயிலுக்கு சில்லுன்னு பீர் நல்லாத் தான் இருக்கும்”

நான் வெறுமனே சிரிச்சேன்...கீழே வச்ச பீர் கீழேயே தான் இருந்துச்சு..

“மனசுல்ல என்ன சல்மான் கான்னு நினைப்பா.....சட்டை இல்லமா.... பொண்ணுங்க எல்லாம் இருக்காங்கன்னு பாக்காமா....எல்லார் கூடவும் ஒரே சிரிப்பா போட்டோ வேற..... அப்படி என்ன விளம்பரம் வேண்டி இருக்கு?”

நான் சிரிப்பு குறையாம கீழே வச்ச பீரை கையிலே எடுத்து லேசா குடிச்சுகிட்டேன்...

“என்னப் பண்ணுறது....சட்டையை கழட்டி பொண்ணுங்க கூட போட்டோ எடுக்கறதுக்குன்னு   வாஷிங்க்டன் பிளாரிடான்னு பிளைட் ஏறுற அளவுக்கு எனக்கு வசதியும் வர்றல்ல...அப்படி காட்டுறவங்க போட்டோவை ஊரைக் கூட்டி காட்டுற அளவுக்கு அசத்தலான பொண்ணும் எனக்குன்னு அமையல்ல... சோ நமக்கு எல்லாம் சொந்த விளம்பரம் தான்...”

”ம்ம்ம்ம் நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க....ஐயம் என்கேஜ்ட்( iAM ENGAGED)”

”பட் ஸ்டில் யூ ஆர் நாட் மேரிட்...( BUT STILL YOU ARE NOT MARRIED)”

“யூ ஆர் ஃபாலிங் ஃபார் த ராங் கேர்ள்” ( YOU ARE FALLING FOR THE WRONG GIRL)

எதுவும் பேசாமல் மண்ணில் எழுதி விட்டு எழுந்து நடந்தேன்..நான் போன பிறகு அவ அதைப் படிச்சிருப்பா...

உங்களுக்கும் அது என்னன்னு தெரியணும்ல்ல....சொல்லுறேன்...படிங்க

“நீ விரும்புவதை சுதந்திரமாக இருக்க விட்டு விடு
அது உன்னுடையதாகுமானால் நிச்சயமாய்  உன்னிடம் திரும்பி வரும்..”
     AND I HAVE SET YOU FREE...TO COME BACK OR BE GONE THE CHOICE IS YOURS....."

தொடரும்

Friday, February 17, 2012

மீண்டும் தென்கிழக்கு வாசமல்லி - 6

இது வரை...

கண் முழிச்சு கட்டில் ஓரமா இருந்த வாட்ச்ல்ல  டைம் பாத்தேன்...மணி 12 ஆகி இருந்துச்சு...தலை வலி தாங்க முடியல்ல...உடம்புல்ல யாரோ தீ வச்ச மாதிரி கொதிச்சுது...உள்ளுக்குள்ளே மொத்தமும் நடுங்குச்சு....மெதுவா எழும்பி தடுமாறி கிச்சன் பக்கம் போனேன்...சூடா ஒரு காப்பி குடிக்கணும் போல இருந்துச்சு...

காப்பியைப் போட்டு எடுத்துட்டு சோபாவில்ல வந்து சாய்ஞ்சேன்...மொபைல்ல 12 மிஸ்ட் கால்...டாம்...லட்சுமிபதி...ஆபிஸ் நம்பர்...அம்மா...ம்ம்ம் இன்னும் சில தெரியாத நம்பர்கள் ஊர்ல்ல இருந்து வைத்தி நம்பர்...அப்புறம்...அவ நம்பர்...அதுல்ல இருந்து எந்த மிஸ்ட் காலும் இல்ல...எஸ் எம் எஸ்கள் வேற வந்து குவிஞ்சுருந்துச்சு...

மெசெஜ் பாக்ஸை திறக்கவும் இல்லை...யாருக்கும் திருப்பி கூப்பிடவும் நம்பரை எல்லாம் பாத்து முடிக்கும் போது தலை எல்லாம் சுத்திச்சு...காலுக்கு கீழே தரை இருக்கான்னு பாத்துகிட்டேன்...
அவசரத்துக்கு இருந்த ஒரு பெரஸ்ட்டமால் எடுத்து விழுங்குறது எதாவது சாப்பிடணுமே...அம்மாவின் அவசர மிளகு ரச ரெசிப் ஞாபகம் வந்துச்சு...அம்மா அளவுக்கு காட்டமான இதம் பதம் இல்லைன்னாலும் ஒரள்வு சுமாரா வந்துருச்சு ரசம்...கொஞ்சம் தெம்பு திரும்புச்சு...சாப்பிட்டுட்டு மாத்திரையும் போட்டுட்டு மூணு மணி வாக்குல்ல ஆபிஸ்க்கு கிளம்பி போனேன்...

இதுக்குள்ளே ஆபிஸ்ல்ல இருந்து இன்னும் 12 மிஸ்ட் கால் வந்துருந்துச்சு...எதையும் நான் எடுக்கல்ல...மொத்தம் ஆபிஸ் மிஸ்ட் கால் 22...

“உர்ரெ டயர்டா உன்னரா...ஓகேவா பாபு”

“சுதா நைட் பல்ப் கொடுத்துட்டு கேஜி கூட போயிட்டாளா...காலையிலே கரெக்ட் பண்ணியா..”

“பாபு நுக்கு அல்லாம் ஜோக்குரா....போரா”

“டேய்...நீ பேசுற பாதி எனக்கு புரியல்ல...ஆனா பாசத்துல்ல எதோ விசாரிக்குறன்னு தெரியுது...நீ நல்லவன் டா...இரு வேலையை முடிச்சுட்டு பேசுவோம்...”

அஞ்சு மணி பக்கம் ரிப்போர்ட் எல்லாம் முடிச்சி...ஒரு வழியா வீட்டுக்கு கிளம்ப சீட்ல்ல இருந்து எழும்புனேன்..

”ரிவியூ முடிச்சுட்டு  கொஞ்சம் கமெண்ட்ஸ் இருக்கு பிக்ஸ் பண்ணிட்டு போயிடமுடியுமான்னு ஆர்பி கேட்டாங்க” நாணா தயக்கத்தோடு கேட்டான்..

கண் எல்லாம் லேசா இருட்டிகிட்டு வந்துச்சு...உடம்புல்ல இருந்த மொத்த தெம்பையும் இழுத்து வச்சு தலையை சரின்னு ஆட்டுனேன்...

ஆறு மணி ஆச்சு....சட்டுன்னு கரண்ட் கட் ஆகிருச்சு...கம்ப்யூட்டர் மட்டும் பேக் அப்ல்ல ஓடிட்டு இருந்துச்சு...இரண்டு நிமிசம் கழிச்சு கரண்ட் வந்தப்போ...

கோரசா எல்லாரும் சேர்ந்து ஹேப்பி பர்த் டே டூ யுன்னு சத்தமா சொல்லிகிட்டே என் க்யுபிக்கல் பக்கம் கையிலே பலூனோட வந்து நின்னாங்க...எல்லாரும்ன்னா எல்லாரும் தான்...அவளும் தான்...

சட்டுன்னு ஜூரம் விட்டுப் போனாப்புல்ல இருந்துச்சு....காலையிலே இருந்து மொபைல்ல அவ்வளவு மிஸ்ட் கால் இருந்ததுக்கான அர்த்தம் அப்போத் தான் விளங்குச்சு...27வது பொறந்த நாள்....மார்ச் 31....அம்மா அது தான் காலையிலே கால் பண்ணியிருக்கணும்...சட்டுன்னு ஞாபகம் வந்துச்சு....டாம்....வைத்தி கூட அதான் கூப்பிட்டுருக்கான்...

எல்லாரும் கையெழுத்து போட்ட கார்ட் ஒண்ணு கொடுத்தாங்க...அதுல்ல அவக் கையெழுத்தும் இருந்துச்சு....HAPPY BIRTHDAY - RANJANI PRIYADARSHINI..
ஏழு வருசத்துக்கு முன்னாடி பாத்த அதே கையெழுத்து...அப்போ ஹேப்பி பர்த் டேக்கும் அவ பேருக்கும் நடுவுல்ல LOVEங்கற வார்த்தை இருந்துச்சு...இப்போ அது இல்ல...எனக்கு மெதுவா சிரிப்பு வந்துச்சு...

எனக்கு பிடிச்ச பிளாக் பாராஸ்ட் கேக் வாங்கி வச்சிருந்தாங்க...ஆளுக்கு ஆள் ஊட்டி விட்டாங்க...ஒரே அமர்களம் பண்ணாங்க....ஒரு பெரிய வைன் கிளாஸும்  நோ ஸ்மோக்கிங்ன்னு ஒரு பெரிய சைஸ் வால் ஹேங்கிங்கும் தந்தாங்க....கலாட்டாப்  போச்சு...

அவ கூட்டத்தோட வந்து நின்னாளே ஒழிய என்கிட்ட எதுவும் பேசல்ல...ஒரு சின்ன புன்னகையைத் தவழ விட்ட படி அவளும் கொண்டாட்டத்துல்ல கலந்துகிட்ட மாதிரி காட்டிகிட்டா..

காலையில் வீட்டுக்கு வந்தது ஞாபகம் இருந்துச்சு....அப்புறம் என்ன ஆச்சி...எப்போத் தூங்குனேன் எப்படி தூங்குனேன் எதுவும் ஞாபகம் இல்ல...

பைக்ல்ல அவ முன்னாடி நான் பைக்ல்ல உறுமிட்டு நின்னேன்....பின்னாடி ஒரு கால் டாக்சி வந்து நின்னுச்சு...என்னைத் திரும்பி பாக்கம அவ அதுல்ல ஏறவும் டாக்சி வேகமாப் புறப்பட்டு போச்சு..சரியா அந்த நேரம் பொத்துகிட்டு ஊத்துச்சு பாக்கணும் வானம்...மழைன்னா அப்படி ஒரு மழை...ஒதுங்கி நிக்கத் தான் வண்டி விட்டு இறங்குனேன்...

திடீருன்னு ஒரு எண்ணம்...பைக் எடுத்துட்டு அந்த டாக்சி போன திசையிலே நானும் போனேன்...ஒரு நூறு அடியிலே அந்த டாக்சியைப் புடிச்சுட்டேன்...கொஞ்சம் இடைவெளி விட்டு டாக்சி பின்னாட் கொட்டுற மழையிலே நனைஞ்சிட்டே போனேன்...வண்டி வேளச்சேரி ரோட்டுக்கு திரும்பும் போது நின்னுச்சு...நின்ன வண்டி நின்னுட்டே இருந்துச்சு....

எதோ பிரச்சனைன்னு தெரிஞ்சுது....அடுத்த அரை மணி நேரம் அந்த டாக்சி டிரைவரும் நானும் சேர்ந்து ஒரு வழியா வண்டியை ஓடுற அளவுக்கு ரெடி பண்ணிட்டோம்...விடாம பெஞ்சுது மழை...மொத்தமா நனைஞ்சு போயிட்டேன்..லேசா குளிர் வேற வெட வெடன்னு உடம்பை ஆட்ட ஆரம்பிச்சது...அவ வண்டிக்குள்ளேயே உக்காந்து இருந்தா...

ஒரு கணத்துல்ல வானத்துல்ல இருந்து ஒரு வெளிச்சம் விழுந்துச்சு பாக்கணுமே...மின்னல்...அந்த மின்னலடிச்ச வினாடியிலே அவ முகத்தை நான் எதேச்சையாப் பாத்தேன்...கடவுள் தன்னை பெண் அம்சமா படைச்சிருந்தா அது அவளைப் போல தான் இருந்து இருக்கும்...உலகின் ஆண்டவன் படைச்ச அழகுக்கு எல்லாம் சேத்து ஒரு கோயில் கட்டுனா...அதுல்ல மூல பிரகாரத்துல்ல இருக்க வேண்டிய பெண் கடவுள் அவளாத் தான் இருக்க முடியும்ன்னு தோணுச்சு....ரஞ்சனி மின்னலும் மழையுமா என் வாழ்க்கையில் வந்தவள்...

டாக்சி வீடு வரைக்கும் போக நான் தெருமுனையில்ல நின்னு அவ இறங்கி வீட்டுக்குள்ளே போறதைப் பாத்துட்டு கிளம்புனேன்..பாதி வழி வரும் போதே என் உடம்புல்ல குளிர் நடுக்கம் அதிகமாகியிருச்சு

எது எப்படியோ என் 28வது பிறந்த நாள் அதிகாலையில்ல மின்னல் மழைக்கு நடுவே அந்த ஒரு வினாடி நான் பாத்த அவ முகம் என் வாழ் நாள்ல்ல எனக்கு கிடைச்ச ரொம்ப பெரிய பிறந்த நாள் பரிசு...

முதல் நாள் ராத்திரி நடந்த விசயத்தை எல்லாம் அப்படியே மனசுல்ல ஓட்டி முடிச்சேன்...

“ஹேப்பி பர்த் டே பாஸ்” புதுசா ஒரு குரல் கேட்டு நிமிந்தேன்...

“ஹாய் இது அஸ்வின்....என் ஃபியான்சி....” அவ தான் சிரிச்சுட்டே அறிமுகம் செஞ்சு வச்சா..

சாதரணமா சினிமாவுல்ல வர்ற அமெரிக்கா மாப்பிள்ளை எல்லாம் செக்கசெவன மீசை எல்லாம் மழிச்சுட்டு நுனி நாக்குல்ல தமிழை கொலை பண்ணுற கேரக்ட்டரா பாத்து பழக்கப்பட்ட எனக்கு அஸ்வின் ரொம்ப வித்தியாசமா தெரிஞ்சார்...

ஆறடிக்கு கொஞ்சம் அதிகமா உயரம்..நல்ல ஜிம் பாடி....நம்ம கலர்...கருப்பு...அடர்த்தியான முடி...அளவான மீசை....பால் சிரிப்பு....

“ஹலோ...பாஸ்...என்ன பர்த் டே அதுவுமா ட்ரீட் எல்லாம் இல்லையா?”
ரொம்ப யதார்த்தமா கலகலன்னு கேட்டார் அஸ்வின்...

எனக்கு அவரை முதல் சந்திப்பிலேயே பிடிச்சிப் போச்சு...ரொம்ப பிடிச்சிப் போச்சு...

“கண்டிப்பா பாஸ் போகலாம்....சரக்கோட....கொண்டாடிடுருவோம்...”
நானும் சிரிச்சிகிட்டே பதில் சொன்னேன்...ஓரக்கண்ணால் அவளைப் பாத்தேன்...அவப் பார்வையிலே இப்போ நெருப்பும் இல்ல வெறுப்பும் இல்ல...

”ஹேப்பி பர்த் டே.......” இப்போ அவ குரலில் தேன் தெறிச்சது....

“தேங்க்யூ....” என் மனசு சந்தோசத்துல்ல ரெக்கை கட்டி பறக்க ஆரம்பிச்சது..

தொடரும்