Monday, March 16, 2009

தென்கிழக்கு வாசமல்லி - 1

கிட்டத்தட்ட பன்னிரெண்டு வருச இடைவெளிக்குப் பின்னாடி நெல்லைச் சீமைக்கு வர்றேன்....சொந்த பூமி காத்துக்குன்னு ஒரு தனி சுகம் இருக்கத் தான் செய்யுது... ஒரு ஊரை விட்டு மறு ஊருக்குப் பிழைக்கப் போன எல்லாருமே இதை ஒத்துப்பாங்க...


பஸ் பயணம் அலுப்பா இருந்தாலும் தாமிரபரணி ஆத்து மணலைப் பார்த்ததும்... ஒரு சின்ன சிலிர்ப்பு அதுவா எனக்குள்ளே வந்துருச்சு... முன்ன எல்லாம் தண்ணி இருந்தது... இப்போவெல்லாம் மண்ணாவது இருக்கேன்னு சந்தோசப் பட வேண்டியது தான் போலிருக்கு...

ஹைகிரவுண்ட் எல்லாம் தாண்டி அப்படியே நடந்தே வீடு வரைக்கும் போனேன்... கையிலே அதிகமான சுமை இல்ல... போகும் போதே ஊரையும் வீதியையும் வேடிக்கைப் பாத்துகிட்டே போனேன்.. ஊருக்கும் எனக்கும் இடைவெளி அதிகமாகி போயிருந்தது புரிந்தது...பழைய அடையாளங்கள் பல இடங்களில் மாறி போயிருந்தது...ஒத்தையும் இரட்டையுமாய் அங்கொண்ணும் இங்கொண்ணுமா இருந்த காமராஜ் நகர் குடியிருப்பில் இப்போ ஏகத்துக்கும் வீடுகள்...மாடி வீடு மாடல் வீடுன்னு நகரத்து வாச்னை வீசியது...

இந்த மாற்றங்களிலும் அதிகம் மாறாமல் எங்கள் வீடு...மாற்றுவதற்கு அவசியமும் இல்லை... ஒரே பையன் நான் ஊருக்கு வருவதே இல்லை... அப்பாவுக்கும் அம்மாவுக்கும் போதுமான வசதிகளோடு வீடு அமைந்து விட்டது... கடைசியாய் என் கல்யாணத்துக்கு வீட்டை அலங்கரித்திருக்க வேண்டும் அதுக்கும் நான் இடம் கொடுக்கவில்லை.. லவ் மேரேஜ் இல்ல பண்ணிகிட்டேன்.. அதுவும் இரண்டு வீட்டையும் எதிர்த்து...அப்புறம் வெளிநாட்டுக்கு போய் அங்கேயே முதல் பையன் பிறந்து... பின்னாடியே ஒரு பொண்ணும் பெத்து... ஒரு வழியா இரண்டு வீட்டோடும் சமாதான உடன்படிக்கை போடுறதுக்கே வருசம் அஞ்சாகிடுச்சு...


அப்புறம் அப்படி இப்படி சில்லரை சேகரிப்பில் தேசாந்திரியாய் திரிஞ்சு சென்னை தான் நம்ம ஜாகைன்னு முடிவு பண்ணி இதோ ஒரு வருசம் ஆகிருச்சு...இப்படி எத்தனையோ காரணங்கள் ஊருக்கு நான் வராமல் போவதற்கு...ம்ம்ம் இப்போ நிச்சயமா வர வேண்டிய காரணம் அமைஞ்சுப் போச்சு...


அப்பாவுக்கு உடம்பு முடியல்ல.... எவ்வளவோ போன்ல்ல சொல்லியும் கேக்கல்ல.. சென்னையிலே நல்ல வ்சதி இருக்கு பாத்துக்கலாம் வாங்கன்னு கேட்டுப் பாத்தேன்.. கெஞ்சிப் பாத்தேன்...

ம்ம்மென் வீட்டு வாசல் மிதிக்காத பையன் வீட்டுக்கு நான் வந்து போனதே என் பேரப் பிள்ளைகளுக்காகத் தான்... அவன் வீட்டுல்ல கிடையா கிடந்து வைத்தியமெல்லாம் நான் பாக்க மாட்டேன்... எங்க அப்பா கிட்ட இருந்து தான் எனக்கும் வைராக்கியம் பிடிவாதம் எல்லாம் வந்துருக்கும்ன்னு யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை... ஆபிஸ்க்கு லீவ் சொல்லிட்டு பஸ் பிடிச்சுக் கிளம்பிட்டேன்... ஒரு இரண்டு நாள் கழிச்சு என் மனைவியும் பிள்ளைகளூம் ரயிலில் வர மாதிரி டிக்கெட் போட்டுக் கொடுத்துட்டேன்... என்னாலே முடியல்லன்னா அவ வந்து எப்படியாவது அப்பாவை சென்னைக்குக் கூட்டிட்டுப் போறதுன்னு திடமான முடிவு. எடுத்தாச்சு..

வீட்டு வாசலுக்கு வந்து நின்னவுடன் பூத்துக் கிடந்த பூரசு மரம் என் மொத்த கவனத்தையும் இழுத்துப் போட்டது...
என்னைப் பார்த்த உடனே அதுக்கு என்னை அடையாளம் தெரிஞ்சுப் போச்சு.... காத்துல்ல அதுவும் சேர்ந்து கொஞ்சம் வேகமாவே கிளைகளையும் இலைகளையும் அசைச்ச மாதிரி இருந்துச்சு...அதில்ல மிச்சமிருந்த பனித்துளிகளை எல்லாம் என் மேலே வாறி இறைச்சு வரவேற்ற மாதிரி எனக்குப் பட்டுச்சு.. அந்த பனித்துளிகளை துடைக்க மனம் வரவில்லை.. மெதுவா பூரசு மரத்துக்கு கிட்டப் போய் நின்னு ஒரு பழைய நண்பனை பல வருசம் கழிச்சுப் பார்த்தா நெஞ்சோடு தழுவுக்குவோமே அதே மாதிரி பூரசு மரத்தை தோளோடு அணைத்தேன்... மரத்தில் இருந்த குருவிகள் கீச்சு கீச்சு எனக் கத்தின... மரம் இன்னும் கொஞ்சம் பாசத்தோடு அசைந்தது...மரத்தின் வலப்புறத்தில் இருந்த அந்தப் பொந்து இன்னும் அதே அளவில் இருந்தது என் கண்ணில் பட்டது...

"எய்யா...எப்போ வந்தா...." அம்மாவின் குரல் என்னை மரத்தின் நினைவுகளில் இருந்து விடுவித்து வெளிகொண்டு வந்தது...

அப்பாவைப் போய் பார்த்தேன்... கொஞ்சம் தளர்ந்து தான் போயிருந்தார்...வார்த்தைகள் மெதுவாகத் தான் வெளியே வந்தன... பேசிக்கலாம் இப்போத் தானே வந்து இருக்க...அப்படின்னு அம்மா அப்போதைக்கு அணைப் போட்டு கையில் காபி தம்பளரை கொடுத்தாள்...
கருப்பட்டி காப்பி...ஸ்ஸ்ஸ்...ஆர அமர ருசித்து குடிக்க ஏத்த இடம் நம்ம பூரசு மரத்தடி பக்கம் தானே... எத்தனை ஆண்டுகால பழக்கம்...ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் அந்த சுகத்தை அனுபவிக்க மனம் அலைந்தது...

மரத்தடியில் போய் நின்று பக்கத்து காம்பவுண்டை எட்டிப் பார்த்தேன்...அந்த பெரிய வீடு அப்படியே இருந்தது...அங்கு நிறைய சிறூவர்கள் விளையாடி கொண்டிருந்தார்கள்...அவர்கள் விளையாட்டில் கொஞ்சம் நேரம் லயித்து நின்றேன்...இப்படித் தானே நாமும் ஒரு காலத்தில் இருந்த்தோம்.. அந்த நினைப்பே இனிமையாக இருந்தது..

இப்போக் கூட அந்த பெரிய வீடு கட்ட ஆரம்பித்த நாள் எனக்கு நல்லா நினைவிருக்கு... பொங்கல் முடிஞ்ச நேரம்...வழக்கம் போல ஒரு கையில் கருப்பட்டி காப்பியும் மறுகையில் தினந்தந்தி பேப்பரும் வச்சிக்கிட்டு பூரசு மரம் பக்கம் வந்து நின்னேன்... சிந்துபாத் லைலா கன்னித்தீவுல்ல அன்னிக்கு என்னாச்சுன்னா பாத்துட்டு..அப்படியே சாணக்கியன் சொல்லையும் படிச்சுட்டு...தலையைத் தூக்குன்னா...பக்கத்து காம்பவுண்ட்ல்ல ஒரு பெரிய கார்...கான்ட்டசான்னு ஞாபகம் வந்து நிக்குது...காரிலிருந்து இரண்டு வேட்டி கட்டிய பெரியவர்களும்..கூடவே மடிசார் கட்டிய மாமிகளும் இறங்கி நடந்துப் போய்கிட்டு இருந்தாங்க.. அந்த நிமிசம் அவங்களுக்குப் பின்னாடி நடந்ததை நான் கவனிக்கல்ல....

ஆனா சலக் சலக்ன்னு கேட்ட கொலுசு சத்தம் என்னைத் திரும்ப வச்சுடுச்சு.. ஒரு சின்ன இடைவெளி விட்டு...ஒரு பொண்ணு....அப்பாடா...மின்னல் கொடி மின்னல் கொடின்னு அப்படின்னு எதோ நாவல்ல எல்லாம் படிச்சுத் தான் இருக்கேன்.. அன்னிக்குத் தான் பார்த்தேன்...சும்மா அந்த சடையை அப்படித் தலையைச் சுத்தி போட்டாப் பாருங்க..கருப்பட்டி காப்பி என் கையிலே இருந்து தெறிச்சுருச்சு...

கண்ணு இமையா இல்ல அது பட்டாம்பூச்சி இறக்கையா... அது துடிக்கிற துடிப்புல்ல இங்கே பாத்த என் இதயம் வெடிக்கவே ஆரம்பிச்சுருச்சு.... பட்டுப் பாவாடைத் தாவணியிலே குத்தால அருவி அங்கே மலை விட்டு இறங்கி வந்த மாதிரி அப்படி ஒரு துறுதுறுப்பு...போகிற போக்கில் அப்படியே பூரசு மரம் பக்கம் ஒரு பார்வையை சிதற விட்டுட்டு சிறகடிச்சு போயிட்டே இருந்தா...நான் மரத்தைச் சுத்தி சுத்தி அந்தப் பார்வை விழுந்த இடத்தைத் தேடி ரணமாகிப் போனேன்..
அந்த நேரம் பார்த்து காலை நேயர் விருப்பத்தில் ஒரு பாட்டு போட்டாங்க...நல்லாவே ஞாபகம் இருக்கு... ஏரிக்கரை பூங்காற்றே நீ போற வழி தென்கிழக்கா.. தென்கிழக்கு வாசமல்லி....ராஜாவின் இசைக்கு அடிமையாக ஆரம்பித்திருந்த காலக்கட்டமது..

"சரி உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கணுமா...இல்ல கான்டீன்ல்ல பாத்துக்க்குறீயா..."
இதைக் கேக்க வந்த அம்மா அங்கே பக்கத்துல்ல நடக்கற சடங்குகளை எல்லாம் பாத்துட்டு அப்படியே கதையை வேற பக்கம் ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்க..எனக்கும் கொஞ்சம் தேடாமலேத் தகவல் வந்து சேர்ந்துருச்சு...

புதுசா வீடு கட்டப் பூஜை பண்ணுறாங்கப் போல... பெரிய ஆபிசராம்டா..தில்லியிலே இருக்காவளாம்..சொந்த ஊர்ல்ல பூமி வேணும்ன்னு வீடு கட்டப் போறாவளாம்...ஒரே பொண்ணாம்..ஒரு பையனாம்...பொண்ணு இப்போத் தான் காலேஜ் சேரப் போவுதாம்...எங்களுக்கும் பக்கத்து காம்பவுண்டுக்கும் ஒரு வேலி மட்டுமே இடையில் இருந்தது..
அந்த வேலியோரம் தான் பூரசு மரமும் நின்னுச்சு..அதுக்கடியிலே நின்னுகிட்டு அம்மா சொன்னத் தகவலை எல்லாம் உள் வாங்கிகிட்டேன்..

சரி சாப்பாடு...அம்மா மறுபடியும் கேக்க..

இன்னிக்கு நான் காலேஜ் போகல்ல..கொஞ்சம் மேலுக்கு சரியில்லதா மாதிரி இருக்கு...திடீரென முகத்தை தொங்கப் போட்டுட்டுச் சொன்னேன்...
அம்மா என்னை மேலும் கீழும் பார்த்தாள்...கட் அடிக்க இப்படி ஒரு காரணமா... அப்படின்னு அம்மா கேட்பது போல் இருந்தது..அம்மா போய் வெகு நேரம் வரை நான் அங்கேயே இருந்தேன்...

இன்னும் ஏரிக்கரை பூங்காற்றே பாட்டு காற்றில் மிதந்து வந்து கொண்டே இருந்தது...இந்த முறை பாட்டு கான்ட்டசா கார் டேப் ரிக்கார்டரில் இருந்து வந்துக் கொண்டு இருந்தது...

பூரசு பொந்தில் இருந்து அந்த வார பிலிம் பேர் எடுத்து ஒரு ஓரமாய் உட்கார்ந்து புரட்ட ஆரம்பித்தேன்..நடுப்பக்கத்தில் ஷில்பா ஷெட்டியின் கவர்ச்சிப் படம் ..அதையே அப்படி இப்படி பார்த்துக் கொண்டிருந்ததில் பக்கத்தில் ஆள் வந்து நின்றதை கூட நான் கவனிக்கவில்லை...

பிலிம் பேர் எல்லாம் அந்தக் காலத்தில் வீட்டில் தடைச் செய்யப் பட்ட புத்தகம்..வீட்டில் தடை விதிக்கப்படும் எந்த பொருளுக்கும் அடைக்கலம் கொடுப்பது என் நண்பன் பூரசு மரத்தின் பல ஆண்டு காலமாய் எனக்கு செய்து வரும் உதவி...அதற்கு எனவே தனக்குள் ஒரு தனி பெட்டகமே திறந்து கொண்டவன்...ஊர் பார்வைகு அது வெறும் பொந்து அவ்வளவே...

"தம்பி..." குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தேன்...மடிசார் மாமிகளில் ஒருத்தர் என் பக்கம் நின்று கொண்டிருந்தார்..கையில் எதோ பழம் வகையறா...இருந்த ஒரு தட்டு இருந்தது...அம்மா அதற்குள் அங்கு வந்து விட்டாள்..பரஸ்பர அறிமுகம்..அப்படியே அம்மாவும் மாமியும் பேச்சு வார்த்தை எனப் பழக ஆரம்பித்து விட்டனர்..

"மல்லிகைச் செடின்னா இவளுக்கு அப்படி ஒரு ஆசை.. அதான் சொந்த வீடுன்னுதும் முதல் வேலையா ஒரு செடியைக் கொண்டு வந்துட்டா... "மாமி அம்மாவிடம் சொன்னது எதேச்சையாக காதில் விழுந்தது...

அவளும் அங்கேத் தான் பக்கத்தில் மண்ணைப் போட்டு நொண்டிக் கொண்டிருந்தாள்..அவளுக்கு உதவியாக அவள் தம்பி கையில் ஒரு சின்னக் கம்பியோடு வந்து நின்றான்...பாவாடையை லேசாக தூக்கி இடுப்பில் மடிப்பில் மடித்துக் கட்டியிருந்தாள்..கணுக்காலில் கட்டியிருந்த சலங்கை சிணுங்கியது...முன்னால் வந்து விழுந்த பட்டுக் குழலை கைகளால் அவ்வப்போது விலக்கி விட்டுக் கொண்டாள்...

ம்ம் சரிடா..நம்மளும் உதவி செய்ய வேண்டியது தான்..கைலியை லேசா மடிச்சுக் கட்டிட்டு சின்னப் பையன் கிட்ட இருந்து கம்பியை வாங்கிட்டுப் போய் அவளுக்கு நேர் எதிரில் உட்கார்ந்தேன்.. என்னை நிமிர்ந்து பார்க்காமலே அவள் வேலையில் தீவிரமாக இருந்தாள்..ம்ம் நான் எதாவது பேச்சு கொடுக்கலாமா..அப்படின்னா எப்படி எப்படி பேச்சை ஆரம்பிக்கலாம்ன்னு யோசிச்சுகிட்டே இருக்கும் போது நான் கொஞ்சமும் எதிர்பாக்கல்ல...

"உங்களுக்கு ஷில்பா ஷெட்டி ரொம்ப பிடிக்குமோ....."
இது தான் என்னிடம் அவள் கேட்ட முதல் கேள்வி...

ஷில்பா செட்டி...அது யார்றா.. ஒரு வேளை கிரிக்கெட் பிளேயரா... இல்லை மல்லிகை சம்பந்தமா எதாவது மேட்டரா... ஒரு கணம் குழம்பி போயிட்டேன்...

"ஓகோ பேரேத் தெரியாமத் தான் படத்தை அந்த மாதிரி சுத்தி சுத்தி பாத்துகிட்டு இருந்தீங்களா,,,,," தம்பியை தண்ணி எடுத்துட்டு வரச் சொல்லி விரட்டி விட்டுட்டு என் கிட்ட அடிக்குரலில் கேட்டாள்.. அப்போவும் என்னை நிமிர்ந்து பார்க்கல்ல... செடியை நட்டு முடிச்சுட்டு சுத்தி சின்ன சின்னக் கல்லை வச்சு அழகா பாத்திக் கட்டிகிட்டு இருந்தா...

தண்ணியைத் தம்பிகாரன் கிட்ட இருந்து வாங்கி மெதுவா அந்த செடியின் இலைகளுக்கு வலிக்காதவாறு தெளித்தாள்..

"ஆன்ட்டி வீடு கட்டுற வரைக்கும் இந்த செடியைக் கொஞ்சம் பாத்துக்கணும்..தண்ணி எல்லாம் சரியா ஊத்தணும்... கொஞ்சம் உதவி பண்ணுறீங்களா" எங்க அம்மாக் கையைப் பிடிச்சிகிட்டு அவக் கேட்டதும் எங்க அம்மா அப்படியே உருகிப் போயிட்டாங்க,,, நான் உருகி உருகுவேக்கே போயிட்டேன்ன்னு சொல்லணுமா என்ன..

"இந்தச் செடி எங்க பொறுப்பு... என் பையன் இங்கேயேத் தான் இருப்பான்.. அவன்கிட்ட தண்ணி ஊத்தி பாத்துக்கச் சொல்லுறேன்... நீ கவலைப் படவே வேணாம் போதுமா" அம்மா வாக்கு கொடுத்துவிட்டாள்...

"ம்ம்ம்..ஆன்ட்டி இன்னொரு விஷய்ம்..அந்த மரப் பொந்துல்ல நிறைய பூச்சி இருக்குன்னு நினைக்கிறேன்... பேசாம தீவச்சி விரட்டி விட்டுருங்க... மரத்துக்கும் நல்லது என் மல்லிகை செடிக்கும் நல்லது..." என்னைப் பார்த்து லேசாக கண் சிமிட்டினாள்

"அப்படியா அம்மா.. நான் கூட ரொம்ப நாளா அந்தப் பொந்துல்ல தீ வைக்கணும்ன்னு தான் இருக்கேன்.. இந்தப் பையத் தான் நானே வைக்கிறேன்...அந்தா இந்தான்னு இழுத்து அடிச்சிகிட்டு இருக்கேன்... ம்ம்ம் இனி காலந்தாழ்த்தாம வச்சுர வேண்டியது தான்..." அம்மாவும் அவளை அமோதித்தாள்...

ஆகா அழகா இருக்காளேன்னு அசந்தா..நம்ம அடிவாரத்தையே ஆட்டிடுவா போலிருக்கே...தம்பி உஷார்டா.. எனக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது..அது வெறும் பொந்து இல்லை என் சுவீஸ் பேங்க் லாக்கர்.. என்னுடைய பல வருட ரகசிய வைப்புகளின் காப்பகம்...பெட்டகம்.. எனக்கும் என் நண்பன் பூரசு மரத்துக்கும் மட்டுமே தெரிந்த கணக்கு வழக்கு அது...வந்த முதல் நாளே அதில் இவள் மூக்கை நுழைக்கிறாளே....

காலையில் என் கண்களுக்கு ஒரு தேவதையாகத் தெரிந்தவள்..இதோ மாலை சூரியன் மயங்குவதற்குள் அவளே அவளே தான் ஒரு ராட்சசியாகத் தெரிகிறாளே...

ம்ம்ம்ம் தம்பி பொண்ணு கிட்டே கொஞ்சம் சூதனாமா இருந்துக்கோன்னு புத்தி நெத்தி பொட்டில் அடிச்சு சொல்லுது...ஆனா மனசு இருக்கு...கிறுக்கு பைய மனசு....அது பாட்டுக்கு அத்துகிட்டு ஒரு பக்கமா தென்கிழக்கு வாசமல்லின்னு பாடிகிட்டு குத்தால மலை காத்து கணக்கால்லா திரியுது...

வாசம் இன்னும் வீசும்...