Tuesday, November 27, 2007

கவி 34:இன்னொரு பனிக்காலம்அழுத்தமாய் பதித்த முத்தத்தில்
உறைந்த உதடுகளின் ஓரம்
உயிர்த்தெழுந்தது காதல்..

கலைந்தக் கனவுகளின் சூட்டில்
அன்றைய பொழுது
அவசரமாய் விடிந்தது..

போர்வைக் குவியலுக்குள்
புதைந்துக் கிடந்தோம்
நானும் என் காதலும்

காதலைக் கட்டிலில்
கட்டிப் போட்டு
கால்கள் விரைந்தன

காதல் கொஞ்சியது
காதல் சிணுங்கியது
காதல் கெஞ்சியது..
காலம் அழைத்தது..

இன்னொரு பனிக்காலம்
இலைகளின் நுனியிலிருந்து
கண் சிமிட்டியது..

Tuesday, November 20, 2007

கதை 13:என்கவுண்டர்/ENCOUNTER


"செவலுரான்...சிட்டி ரவுடி மாதிரி இல்லையே பேரு.." ஆவி பறக்க டீயை உறிஞ்சிய படி ராஜதுரை கேட்டான்.

சிகரெட்டைப் பற்ற வைத்து புகையை நிதானமாய் ஊதினான் செல்வா.அவன் கண்கள் சுற்றும் முற்றும் வட்டம் போட்டு ஒரு நிலைக்கு வர ஒரு சில வினாடிகள் பிடித்தன. ராஜதுரையின் கேள்விக்குச் செல்வா எந்தப் பதிலும் சொல்லவில்லை. முழு சிகரெட்டையும் புகைத்தவன் எழுந்து நின்று ஆகாயம் பார்த்தான். ராஜதுரை மிச்சமிருந்த டீயை அவசரமாய் குடித்து விட்டு பாக்கெட்டுக்குள் இருந்து சில்லரையைத் தேடி எடுத்தான். டீக்கானச் சில்லரையை டீக்கடைகாரரிடம் கொடுத்துவிட்டு ஒரு ஹால்ஸ் வாங்கிச் செல்வாவிடம் கொடுத்தான்.

இருவரும் தெருமுனையைத் தாண்டி நடந்தனர். மாலைச் சூரியன் மெல்ல சரிந்துச் தெரு விளக்குகளுக்கு வழி விட்டுக் கொண்டிருந்தது. எரிந்தும் எரியமாலும் இருந்த தெரு விளக்குகளின் மீது பார்வையைச் செலுத்திய படி செல்வா முன்னால் நடந்தான். ராஜ துரை ஒரிரண்டு அடி பின்னால் நடந்தான். அவன் எதோ ஒரு பழைய சினிமாப் பாடலை முணுமுணுத்தப் படி வந்தான். அந்தத் தெருவினில் இருந்த பெரும்பான்மையான வீடுகளில் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. ஒரிரு வீடுகளிலும் வெறும் குண்டு பல்புகள் மட்டும் மிதமான ஓளியைக் கொட்டிக்கொண்டிருந்தன. தெருவில் ரெண்டு மூன்று பழைய ஆம்னி வேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன... ஆம்னியில் இரண்டு ஓடி பல ஆண்டுகள் ஆகியிருக்கும் போல இருந்தது.. கண்ணாடிகளில் காக்காக் கூட்டம் கண்டபடி ஆட்டோகிராப் போட்டு வைத்திருந்தன.. நான்கைந்து மோட்டார் சைக்கிள்களும் உடைந்தும் உடையாமலும் நின்றுகொண்டிருந்தன.

செல்வாத் தன் கிழிந்த மேல்சட்டையைத் தூக்கி விட்டுக்கொண்டான். ராஜதுரை நான்கு நாட்கள் மழிக்கப் படாத மோவாயை மெல்லத் தேய்த்துக் கொண்டான். ராஜதுரை தன் குரலை மிகவும் உயர்த்தி அந்த பழைய சினிமாப் பாட்டை உச்ச ஸ்தாதியில் அலறலாய் பாடிய படி நடந்தான். செல்வா அடுத்த சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்தான். தெருவின் இன்னொரு முனையில் இருந்து புத்தம் புதிய ஹோண்டா சிவிக் கார் ஒன்று மெல்ல ஊர்ந்து வந்தது.. சில்வர் நிறத்தில் அந்த இரவின் பின்னணியில் சந்திரனுக்கு சக்கரம் வைத்தார் போல் அம்சமாய் இருந்தது சிவிக் உலா. வினாடிக்கும் குறைவான பொழுதில் செல்வா ராஜதுரை கண்கள் சந்தித்துக் கொண்டன... செய்தியைப் பரிமாறிக் கொண்டன...

சிவிக் கார் இவர்களை நெருங்கி வந்த போது செல்வா ராஜதுரையின் கன்னத்தில் ஓங்கி ஒரு குத்து விட நிலை தடுமாறிய ராஜதுரை கார் மீது போய் விழுந்தான்... பிரேக் அடித்து கண்டபடி கெட்ட வார்த்தையில் திட்டியப் படி கண்ணாடியை இறக்கிய டிரைவர் நெற்றி பொட்டில் சத்தமின்றி செல்வா செலுத்திய துப்பாக்கித் தோட்டக்கள் புதைந்தன....

போலீஸ்டா.. முன் பக்கத்தின் மறுபக்க கதவு திறந்தவனின் அலறல் வேகம் எடுக்கும் முன் ராஜதுரையின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட தோட்டா அவனை அமைதிப்படுத்தியது. காரைச் சுற்றி துப்பாக்கி ஏந்தியபடி இருவரும் வட்டமிட...அங்கே கனத்த மெளனம் நிலவியது.. செல்வா.. ராஜதுரை கண்கள் ஒன்றோடு ஒண்ணு பேசிக் கொண்டன..ராஜதுரை கார் கதவைத் திறக்க...

காருக்குள் கையும் காலும் கட்டப்பட்ட நிலையில் முப்பது-முப்பதைந்து வயது மதிக்கத் தக்க நபர் ஒருத்தர் மயங்கி கிடந்தார். ராஜதுரை குனிந்து அந்த நபரைத் தூக்க முயலவும், அந்த நபரின் வலது கை, கட்டையும் மீறி துரிதமாய் அசைவதை செல்வாக் கவனிக்கவும் சரியாக இருந்தது.

அதை ராஜதுரைக் கவனிக்க வாய்ப்பில்லை. வலது கையில் பாட்டில் போன்ற எதோ ஒரு பொருள் இருப்பதைப் பார்த்து விட்ட செல்வா நோ... என்று அலறவும் ராஜதுரை சடக்கென பதறி திரும்ப அவன் முகம் பார்த்து வீசப்பட்ட திராவகம் சற்று குறி தவற ராஜதுரை சுதாரிப்பதற்குள் மயங்கிய ஆள் ராஜதுரையை தரையில் தள்ளி எழுந்து ஓடவும் சரியாக இருந்தது...

காரின் மறுபக்கம் இருந்து நடப்பதை அரையும் குறையுமாக பார்த்துக் கொண்டிருந்த செல்வா..ராஜதுரையின் உதவிக்குச் செல்வதற்குள் அந்த நபர் தப்பி ஓட ஆரம்பித்து விட்டான்.. நூறு அடி இடைவேளியில் துரத்தல் படலம் துவங்கியது...

கோபமும் ஆத்திரமும் ஓரு சேர சுட்ட ராஜதுரையின் குறி தப்பியது..மூன்று முறை சுட்டப் பின்னும் குறி தப்பிக்கொண்டிருக்கவே ராஜதுரையின் நிதானம் மேலும் தவறியது...செல்வா ஒரு முறை கூடச் சுடவில்லை.ஓடுபவனின் போக்கை அலசிக் கொண்டிருந்தான்.

அவன் ஓட்டத்தை நிறுத்தி விட்டு ஒரு வீட்டிற்குள் குதித்தான்.

இவர்கள் இருவரும் ஒரு உடைந்த ஆம்னியின் பின் பதுங்கியப் படி அவனை நோட்டம் பார்த்தனர்.

"இது வரைக்கும் நீ எத்தனைப் போட்டிருப்ப....?"

செல்வாவின் கண்கள் அந்த வீட்டையே வட்டம் போட்டுக்கொண்டிருந்தன.

"14... ம் போன தின்னவேலி பேட்டை என்கவுண்டரோட உன் ஸ்கோர் 14 ஆயிடுச்சு.. என் ஸ்கோர் 13.. இன்னிக்கு இவனைப் போட்டா என் ஸ்கோரும் 14.. இவனை நாந்தான் போடுவேன்... ஆமா...." ராஜதுரை நெற்றி வியர்வையைத் துடைத்தான். அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே செல்வா தடால் என எழுந்து செவலூரான் இருந்த வீட்டை நோக்கி காட்டாறு போலத் தெறித்து ஓடினான்.ராஜதுரை நடப்பது என்னவென்று சுதாரிப்பதற்குள் துப்பாக்கி சூட்டின் சத்தம் அவன் காதுகளைக் கிழித்தது...

இருள் கவ்வியிருந்த அந்த வீட்டுக்குள் நுழைந்தச் செல்வாவைத் துப்பாக்கி குண்டுகள் வரவேற்றன... ஒரு குண்டு சரியாக அவன் வலது கால் தொடையில் பாய்ந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடச் செய்தது...வலி அவன் உயிர் வரை ஊடுருவியது. செல்வா அதைத் தாங்கிக் கொண்டு அங்கிருந்தப் படிகளில் மெல்ல ஏறினான்... கிட்டத் தட்ட பாதி படிகளில் ஏறிய நிலையில் பெரிய இரும்பு உருளை ஒன்று அவன் மீது வந்து விழுந்தது... செல்வா நிலைத்தடுமாறி தரையில் சாயந்தான்....

தரையில் சரிந்து விழுந்த செல்வாவின் மேல் அவன் துரத்தி வந்த ஆள் ஏறி உட்கார்ந்தான். அந்த வினாடியில் ஒருவர் முகத்தை ஒருவர் நன்றாகப் பார்த்துக் கொண்டனர்... மீண்டும் அதே இரும்பு உருளையால் அவன் செல்வாவின் முகத்தில் தாக்கினான்.. தாக்குதலின் வேகம் பொறுக்கமுடியாமல் கிட்டத் தட்ட மயக்க நிலைக்குப் போனான் செல்வா.. முகத்தில் ரத்தம் வழிந்தோடியது..

"சேகர்...நீயா செவலூரான்......?" அரை குறை மயக்கத்தில் இருந்த செல்வா தன்னைத் தாக்கியவனின் முகத்தை உற்று பார்த்தப்படி முனங்கினான்.அவன் கண் இமைகள் வலியின் அழுத்தம் காரணமாய் மூடி மூடி திறந்தது...நினைவுகளும் முன்னும் பின்னும் போய் வந்தன...

கல்லூரி காலத்தின் ஞாபகங்கள் அவன் மனத்திரையில் நிழலாட்ட்டம் போட்டன...

சென்னையின் பிரபல கல்லூரி அது...பின்னிரவு நேரம்...கல்லூரி மைதானத்தில் இருந்த பெஞ்சில் தலை கவிழ்ந்து உக்காந்திருந்தான் செல்வா.. கண்களின் ஓரம் எட்டிப் பார்த்த கண்ணீரைக் கஷ்ட்டப்பட்டு அடக்கிக் கொண்டான். அவன் அருகில் யாருமில்லை.

"ஏய் நீ ரூம் நம்பர் 23 இல்ல..." தனிமைக் கலைக்கும் குரல் கேட்டு செல்வா கண்களைச் சடக்கெனத் துடைத்துக் கொண்டு திரும்பினான். அங்கு குரலுக்குச் சொந்தக்காரனாக மடித்துக் கட்டிய லுங்கியின் ஓரத்தைப் பிடித்தப் படி நின்று கொண்டிருந்தான் சேகர்.இன்று செல்வா முன் இரும்புத் தடியுடன் உட்கார்ந்து இருக்கும் அதே செவலுரான் தான் அந்த சேகர் என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை

"இந்நேரம் இங்கே என்னடாப் பண்ணிகிட்டு இருக்க..?? எதாவது குட்டிய வரச் சொல்லியிருக்கியா?" ன்னு செல்வாவைத் தாண்டிப் பார்வையை ஓட்டினான் சேகர். செல்வா எந்தப் பதிலும் சொல்லவில்லை. சேகர் நன்றாகக் குடித்திருந்தான் என்பது அவன் தள்ளாட்டத்திலேயே செல்வாவுக்குப் புரிந்தது.

"பத்து மணிக்கெல்லாம் போர்த்திகிட்டுத் தூங்ககுற பய நியு.. பதினோரு மணிக்கு வெளியேத் திரியற....எதாவது பொண்ணு பிரச்சனையா...அந்த பர்ஸ்ட் இயர் பயலாஜி படிக்குதே பச்சக் கிளி அதுவா...நான் இந்தக் காலேஜ் சேர்மன்டா... இந்தக் கேம்பஸ்ல்ல யார் யார் கூடச் சோடிப் போடுறாங்கன்னு எனக்குத் தெரியும்டா.. ம்ம் பொண்ணு அம்சமாத் தான் இருக்கா..." மப்பில் இருந்தாலும் ஒரளவுக்கு தன்னிலையில் தான் சேகர் இருந்தான்.

சேகர் நல்லவன் இல்ல.. அவங்க அப்பா பெரிய ரவுடி..கொலைக்கெல்லாம் அஞ்சாத குடும்பம் அப்படின்னு காலேஜ்ல்ல பேசாதவங்க யாரும் கிடையாது. செல்வா காதுல்லயும் அது எல்லாமே விழுந்து இருக்கு.அந்த நேரத்தில் அது எல்லாம் அவன் ஞாபகத்துக்கு வந்துப் போனது. செல்வா அப்போதும் எதுவும் பேசாமல் மவுனமாகவே நின்றான்.

"என்னடா ரூம் நம்பர் 23 என்கிட்டச் சொல்ல யோசிக்கிறீயா...சேகர் நல்லவன் இல்ல.. அவங்க அப்பா பெரிய ரவுடி..கொலைக்கெல்லாம் அஞ்சாத குடும்பத்திலிருந்து வந்தப் பையன்.. பொறுக்கின்னு யோசிக்குறீயா?"

செல்வா ஒரு நிமிசம் தன் மனத்தில் ஓடுவது இவனுக்கு எப்படித் தெரிந்தது எனத் துணுக்குற்று திகைத்தான்..பின் சுதாரித்து நிமிர்ந்தான்..

"என்னைப் பத்தி எல்லாரும் இப்படித் தானே யோசிக்கிறாங்க...நீ புதுசா வேற என்ன யோசிக்கப் போற?" எனக் கடகடவெனச் சிரித்தான்.

செல்வன் அப்போது முழுதாய் சேகரின் முகத்தைப் பார்த்தான். போதையில் சிவப்பேறிய கண்கள். வியர்த்துப் போயிருந்த முகம். இதழோரம் தவிழ்ந்த நமுட்டுப் புன்னகை. அவனிடம் ஒரு வசீகரம் இருக்கத் தான் செய்கிறது என நினைத்தான் செல்வா.

"ரெண்டு நாளா அந்தப் புள்ளையக் காலேஜ்க்குக் காணும்.. நீ வேற ஒரு மாதிரியாத் திரியற..பாத்துகிட்டுத் தான் இருக்கேன்... இப்போ இந்த அர்த்த ராத்திரில்ல.. இங்கே பெஞ்ச்ல்ல தனியா.. என்னப் பிரச்சன சொல்லு..." செல்வாவின் தோள் மீது தன் இருகைகளையும் அழுத்தமாய் போட்டுக் கேட்டான் சேகர்.

அந்த அழுத்தமானப் பிடியில் ஏற்பட்ட நம்பிக்கையோ.. இல்லை அந்தத் தருணத்தின் இயலாமையோ என்னவென்று தெரியாமல் தன் வாழ்க்கையின் மிகவும் சிக்கலானப் பக்கத்தை அவனுக்கு செல்வா திறந்துக் காட்ட ஆரம்பித்தான்...அந்த இரவு மிகவும் நீளமானதொரு இரவாய் அமைந்தது..பொழுது விடியும் போது சேகருக்கு போதைத் தெளிந்து விட்டிருந்தது..செல்வா கண்களில் ஒரு தெளிவு தென்பட்டது...

"டேய் ரூம் நம்பர் 23... எனக்கெல்லாம் வாழ்க்கையிலே நிறையப் பிரச்சனைடா.. எங்கப்பனுக்கு நாலு பொண்டாட்டி.. அதுல்ல நான் எந்த பொண்டாட்டிக்குப் பொறந்தேன்னு அவனுக்குத் தெரியாது.. காசு கொடுப்பான்..கட்டுகட்டாக் கொடுப்பான்..ஆனா...விடுறா.. என் பிரச்சனையைப் பேசி என்னப் பயன்.. ஓன் பிரச்சனைக்கு இந்தப் பணம் உதவும்ன்னா வச்சுக்கடா... அப்புறம் யார் தான் தப்பு பண்ணல்ல? எல்லாரும் பண்ணுறோம்...தப்புப் பண்ணிட்டு தப்பிக்க நினைக்கக் கூடாது.. நீ தப்பிக்க நினைக்கல்லடா.. நிக்குறேடா..அதான்டா உன்ன எனக்குப் பிடிக்குது..." சேகர் செல்வாவின் தலையை ஆதரவாய் கோதிவிட்டு லுங்கியை இறக்கிக் கட்டிக் கொண்டு நடந்தான். செல்வா சேகர் போனத் திசையை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.


"இதுல்ல மூவாயிரம் ரூபா இருக்கு.. தேங்கஸ்" மூன்று வாரங்கள் கழித்து சேகரை காலேஜ் ஹாக்கி கிரவுண்டில் தனியாய்ச் சந்தித்த செல்வா ஒரு கவரை மடித்து நீட்டினான். சேகர் எதுவும் பேசமால் கவரை வாங்கிப் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டான்.மேற்கொண்டு எதுவும் பேசாமல் செல்வா கேலரியில் இருந்து இறங்கி நடந்தான்.

கல்லூரியின் எஞ்சிய வருடங்களிலும் சேகரோடு செல்வா நெருங்கிப் பழகவில்லை, சேகர் செல்வாவை எங்குப் பார்த்தாலும் டேய் ரூம் நம்பர் 23 என்று உற்சாகமாய் குரல் கொடுப்பதும் செல்வாப் பதிலுக்கு கை அசைப்பதுவும் தவிர அவர்களுக்குள் வேறு எதுவும் பெரிதாய் கிடையாது....


செல்வா மெல்ல முனங்கினான்... அவன் கண்கள் திறந்துப் பார்க்கும் போது சேகர் என்ற செவலூரான் சுவற்றில் சாயந்தப் படி கால்களை நீட்டி அம்ர்ந்திருந்தான். செல்வா மிகவும் கஷ்ட்டப்பட்டுத் தலையைத் தூக்கினான். வலி அவன் நரம்பு மண்டலத்தை ஊடுருவிப் பாய்ந்தது... அவன் முகம் வலியினால் கோணியது...சேகர் மெல்லச் சிரித்தப் படி அவன் முகத்தருகே வந்து அவன் தலையைத் தூக்க உதவிச் செயதான்.

"டேய் ரூம் நம்பர் 23... உன்னிய நான் மறுபடியும் பாப்பேன்னு நினைக்கவே இல்ல.. காலேஜ் முடிஞ்சவுடனே சொல்லக் கொள்ளாம போயிட்ட" என்றான் அதே பழையச் சிரிப்பு மாறாமல்.

செல்வாவுக்கு வலியின் மிகுதியில் வார்த்தைகள் வரவில்லை. மிகவும் சிரமப்பட்டு தன் உடலை தன் முழு பலம் பயன்படுத்தி சுவற்றின் ஓரமாய் நகர்த்தி அதில் சாய்ந்துக் கொண்டான். கையைத் தலையின் பின்பக்கம் வைத்து அழுத்திக் கொண்டான்.

"ரூம் நம்பர் 23 போலீஸ்காரன் ஆயிட்டே.. ரொம்ப சந்தோசம்ய்யா..நீயுன்னு தெரிஞ்சிருந்தாப் போட்டுருக்க மாட்டேன்.. போலீஸ்காரன்னால்லே பொங்கிப் போயிருது.. கொலைவெறி வந்துருது.." மறுபடியும் அதேச் சிரிப்பு.

"ஆமா.. இப்போ எந்தூர்ல்ல இருக்க? என்னியப் புடிக்கவா..ம்ம்ம் போடவா இங்கே வந்த?" சேகர் செல்வாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான். செல்வா வலியின் பிடியில் இருந்து முழுவதுமாக வெளியே வரவில்லை. சுருங்கிய புருவங்களும் கண்களும் அவன் வலியினால் படும் அவஸ்தையை சொல்லிக்கொண்டிருந்தன.

"ம்ம் அட ஒன் பாக்கெட்ல்ல தம் இருக்கு.. ஒண்ணு எடுத்துக்குறேன்" அனுமதியை எதிர்பார்க்காமல் சேகர் சிகரெட் எடுத்து பற்ற வைத்தான்.

"கிங்க்ஸா.. காலேஜ்ல்ல அடிச்சது.. இப்போல்லாம் 555 தான் பழகிடுச்சு.. வேற சிகரெட் ஒத்துக்க மாட்டேங்குது" சிரித்தான் சேகர்.

"சரி.. கலியாணம் பண்ணிகிட்டல்ல.. " சேகரின் குரலில் ஒரு தவிப்புத் இருந்தது.

செல்வா மெல்ல தலையாட்டினான்.

"அந்தப் பொண்ணைத் தானே.." சேகரின் குரலில் தவிப்பு அதிகமாகியது.

செல்வா இப்போதும் தலை ஆட்டினான்.

"இப்போ ஒனக்கு குழந்தைங்க இருக்கா?" சேகர் குரலில் தவிப்பு மாறாமல் கேட்டான்.

"இருக்கு.. ரெண்டு.." செல்வாவின் கண்கள் கலங்கிப் போயிருந்தன. வேறு எதோ ஒரு வலியினில் அகப்பட்டவனாய் செல்வாத் துடித்தான். அவன் துடிப்பு அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

"எல்லாம் சொகமா இருக்காங்களா?" சேகரின் அக்கறையான விசாரிப்பு தொடர்ந்தது.

ம் கொட்டினான் செல்வா.

சேகரின் முகத்தில் பழையச் சிரிப்பு. சிகரெட்டை மெல்ல இழுத்தான்.

"யார் தான் தப்பு பண்ணல்ல? எல்லாரும் பண்ணுறோம்...தப்புப் பண்ணிட்டு தப்பிக்க நினைக்கக் கூடாது.. நிக்குறேடா..அதான்ய்யா உன்னிய எனக்குப் பிடிச்சுது...பிடிக்குது..."

செல்வாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்த பழைய இரவின் சம்பவமும் சேகரின் ஈரம் மாறாத குரலும் செல்வாவின் காதுகளில் விழுந்தது.

"அன்னிக்கு நீ இல்லன்னா எனக்கு என்ன ஆயிருக்கும்ன்னு சொல்லத் தெரியல்ல..அவசரத்துல்ல நான் செஞ்சத் தப்பு... அது அவ வயித்துல்ல வளந்துச்சு...உனக்கு நான் கடன் பட்டிருக்கேன்..என் காதலைக் காப்பாத்துன.. என் காதலியைக் காப்பாத்துன...என்..."

"உன் புள்ளயை அது பொறக்குறதுக்கு முன்னாடியே கொல்ல உனக்கு ஐடியாவும் கொடுத்து பணமும் கொடுத்தேன்..." ஒரு வித அழுத்தம் பிறீட சொன்னான் சேகர்.

"அப்போ வேற வழி இல்ல... அது கொலை இல்ல.... நான் பண்ணத் தப்புக்கு எனக்கு நானேக் கொடுத்துகிட்ட தண்டனை..."

"ஸ்....அதெல்லாம் முடிஞ்சுப் போச்சு.. மறுபடியும் சொல்லுறேன் தப்பு பண்றது இயற்கை... நீ தப்பு பண்ண.. ஆனா ஓடிப் போகல்ல..அதே பொண்ணைக் கட்டிகிட்டு ரெண்டு புள்ளகளைப் பெத்துகிட்டு வாழுறே.. கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா... நீ மனுசன்டா..."

சிகரெட்டை அழுத்தமாய் வாயில் வைத்து இழுத்தான் செவலூரான் என்ற சேகர். ஜன்னலுக்கு வெளியே சலசலப்புக் கேட்டு செல்வாக் கஷ்ட்டப் பட்டு எழுந்தான். செல்வா எழும்பும் போது தன்னிடமிருந்த பிஸ்டலைத் தேடினான். சேகர் அதைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தான். சேகர் ஜன்னலோரம் மறைந்திருந்து வெளியேப் பார்த்தான்.அவன் கண்களில் திரளானக் காக்கிச் சட்டைகளின் அணிவகுப்பைச் செல்வாவால் பார்க்க முடிந்தது. சேகர் ஒரு விதக் களைப்புடன் மறுபடியும் சுவற்றோரமாய் சாயந்தான். அவன் உதடுகளில் பழையச் சிரிப்பு நிரந்தரமாய் ஒட்டிக் கொண்டது.

"ஒரு நூறு பேர் இருப்பாயங்களா?" செவலூரான் களைத்தும் கண்களில் பயமின்றிக் கேட்டான்.

"தெரியல்ல.. நாங்க ரெண்டு பேர் தான் வந்தோம்..இது எனக்குத் தெரியல்ல" செல்வாவின் தலை பயங்கரமாய் வலித்தது.

"செவலூரானைப் பிடிக்க நல்லாத் தான் தூண்டில் போட்டுருக்காங்க" என்று பயங்கரமாய் சிரித்தான் சேகர்...செல்வாவுக்குப் பாதி புரிந்தது...இருந்தாலும் அதிகம் யோசிக்க முடியாதப் படி அவன் தலை வலித்தது. மறுபடியும் அரை குறையாய் தன் பிஸ்டலுக்காக அறையைப் பார்வையால் துழாவினான். வெளியே போலீஸ் புட் சத்தம் மெல்லக் கேட்க துவங்கியது. வினாடி இடைவெளியில் சத்தம் கூடியது. செல்வா தட்டு தடுமாறி எழுந்தான்.

"உன்னக் காப்பாத்தணும் அது என் கடமை... என்னைக் கேடயமா வச்சு நீ தப்பிச்சுப் போ" என்று செல்வா உண்மையான அக்கரையோடுச் சொன்னான்.

சேகர் ஒரு ஏளனப் புன்னகைப் பூத்தான்... கைவிரல்களை மடக்கி நீட்டினான். போலீஸ் பூட் சத்தம் இன்னும் அதிகமானது...

"தூண்டில்ல இருக்க புழு நீ.... ஓன் கருணையினால எனக்கு என்னய்யா பிரயோஜனம்? உன்னிய அனுப்பிட்டு உன் பின்னாடியே நூறு பேரு கிளம்பி வந்துருக்கான்.. எதுக்கு... நான் தப்பிக்க நினைச்சா உன்னியப் போட்டுட்டு... நான் உன்னைப் போட்டேன்னு சொல்லி என்னையும் போடுவானுங்க... பசங்க..."

"ஏன் இந்தப் பொழப்பு உனக்கு... உங்க அப்பன் ரவுடின்னா நீயும் ரவுடியாத் தான் சாகணு....மா?" ஆத்திரத்தில் செல்வாவுக்கு வார்த்தைகள் குழறிக் கொட்டின.

"உன் குழந்தைகளுக்கு எத்தனை வயசு...?

"நீ கொஞ்சம் நினைச்சிருந்தா வேற பொழப்புப் பார்த்து இருக்கலாமே.. இப்படி ஒரு நிலமை வந்து இருக்காதே..."

"என் பையனுக்கு ஆறு வயசு...பொண்ணுக்கு மூணு வயசு... நான் வந்த கார்ல்ல அதுகளுக்கு வாங்குன பொம்மை இருக்கு... நிறையவே இருக்கு உன் புள்ளகளுக்கும் எடுத்துக்கோ.. கொடுத்துருவீயா?"

"ஏன் ரவுடி பொழைப்பு...? நீ தான் படிச்சியே.. எத்தனைப் பொழப்பு இருக்கு ஒலகத்துல்ல.." செல்வா தொடர்ந்துப் பேசிக் கொண்டே இருந்தான்.

"என்னை நம்பி வந்துட்டா... என் பொண்டாட்டி.. அவளைக் கோர்ர்ட்.. போலீஸ் ஸ்டேஷன்னு அலையவிட்டறக் கூடாது.. வேணாம்..."

"சேகர்.. நான் உன்னிய எப்படியாவது காப்பாத்துறேன்... என் உசுரைக் கொடுத்தாவது காப்பாத்துறேன்" செல்வா சேகரின் முன் மண்டியிட்டு உட்கார்ந்துப் பேசினான்.

"எங்க அப்பன் சாவுக்கு என் கூடப் பொறந்தவங்க எல்லாரும் பாடையைக் கையிலே எடுத்தானுங்க... நான் எங்கப்பன் கீழேப் போட்ட கத்திய எடுத்தேன்.. அன்னிக்கே எனக்கு கவர்மெண்ட் செலவுல்ல தான் கருமாதின்னு முடிவு ஆகிருச்சுடா... ஓம் பாக்கெட்ல்ல இருக்க அந்த ஒத்த சிகரெட்டைக் கொடு... "
சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்தான் சேகர்...ஒரு தரம் புகையை இழுத்து விட்டான்..

"இது எரிஞ்சு முடியற வரைக்கும் எனக்கு நேரம் இருக்கான்னு தெரியல்ல...
நீ எனக்குப் பட்ட கடனுக்கு எதாவது செய்யணும்ன்னு ஆசப்படுறீயா...... ம்ம்ம் இந்தா.....

செல்வாவின் பிஸ்டலை அவனிடம் வீசிவிட்டு தன் சட்டைப் பட்டன்களைத் திறந்துவிட்டு மார்பில் கை வைத்து செல்வாவைப் பார்த்து அதே பழைய நமுட்டுப் புன்னகையைத் தவிழவிட்டான் சேகர்.

செல்வா கடிகாரத்தில் இருந்த முட்கள் வினாடிகளை நகர்த்தத் திராணி இன்றி நின்று போனது.. ஒரு கனத்த மவுனத்திற்குப் பின்... துப்பாக்கி தன் மொழி பேசி மௌனம் கலைத்தது..

கலைந்த மௌனத்தின் மிச்சங்களாய் சிகரெட் தரையில் விழுந்தும் புகைந்துக் கொண்டிருந்தது... பிஸ்டலில் இருந்து மெல்லிய புகை வெளிபட்டுக் கொண்டிருந்தது....

போலீஸ் காரர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைய முயற்சிப்பதற்கு ஒரு வினாடி முன்னதாக செல்வா அவர்களுக்குக் கதவைத் திறந்து விட்டான்.

"மாப்ளே உன் ஸ்கோர் 15 டே.. போட்டுத் தாக்குறே" என்று ஓடி வந்து கட்டிப்பிடித்த ராஜதுரையை வறட்டுப் புன்னகைச் சிந்தி விலக்கி விட்டு நடந்தான் செல்வா.

அந்தி வானம் மெல்ல போர்வை போர்த்த சென்னை இன்னோரு இரவுக்கு தயாராகிக் கொண்டிருந்தது.ரயில்வே தண்டவாளம் அருகே உட்கார்ந்து உயிர் கிழியும் அளவிற்கு அலறி அழுத செல்வாவின் குரல் காற்றோடு காற்றாக கலந்து காணாமல் போனது.....

அதிகாலை செய்தித் தாள்களில் முதல் பக்கத்தில் சிரித்த முகத்தோடு வெளிவந்திருந்த செல்வாவின் புகைப் படத்தை சேகரின் ஆறு வயது மகன் கிழித்துக் கொண்டிருந்தான்.

Saturday, November 17, 2007

ஒரு குட்டிச் சுவரின் வரலாறு - 7

முந்தையப் பகுதி படிக்க

இப்போ வருடங்கள் ஓடிப் போயிருச்சு..நடந்து முடிந்த சம்பவங்கள் எல்லாம் சம்பந்தப் பட்டவங்க மனசுல்ல வெறும் ஞாபகங்களாய் மட்டுமே எஞ்சி நிற்கின்றன...

கவுரியை அதுக்கு அப்புறம் நாங்க யாருமே பார்க்கல்ல.. பார்க்குற தைரியம் யாருக்கும் இல்ல.. ஜூனியர்ஸ் அதுக்குப் பின்னாடி அந்த அறையையும் ஏரியாவையும் காலிப் பண்ணிட்டு காலேஜ்க்குப் பக்கமாவே ஒரு வீடு பாத்துட்டுப் போயிட்டாங்க..

குட்டிச் சுவரில் நடக்கும் அவைக் கூட்டங்கள் அதன் பின் அவ்வளவு கலகலப்பாய் அமையவில்லை. ஜுனியர் மக்களில் திருநா மட்டும் அவ்வப்போது வந்து போவான். அப்படி வரும் போது ஜூனியர்களால் அவ்வளவு எளிதில் கவுரியின் இழப்பைத் தாங்க முடியவில்லை என்பது மட்டும் தெரிந்தது.

"ஊட்டி எல்லாம் போயிருந்தா நல்லா இருந்து இருக்கும்ல்ல சீனியர்... கவுரி போயிட்டான்.. அவன் இருந்திருந்து அவனால வர முடியல்லன்னாலும் நம்மை எல்லாம் கண்டிப்பாப் போகச் சொல்லியிருப்பான்..அவனுக்காக ஊட்டிப் போயிட்டு வருவோமா..." பின்னொரு நாளில் திருநா மீண்டும் கேட்க... படுவேகமாய் என் மறுப்பை வெளியிட்டேன்...

"ஏன் சீனியர்?"

அவன் கேள்விக்குப் பதிலாய் சொல்லுவதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. "வேணாம் திருநா விட்டுருவோமே.." ஒப்புக்கு சொன்னேன்.

ஆரவாரங்களும் அடங்காத அமளியும் நிறைந்துக் கிடந்தக் குட்டிச்சுவரின் சத்த சபைகள் பிற்காலங்களில் ஆழ்ந்த சிந்தனைகளும் அதன் விளைவாய் வழியும் மௌனங்களாயும் நகரத் துவங்கின. பொழுதொரு இன்டர்வியூ பின் அதன் பாதகமான முடிவு எனக் காலம் வெகு வேகமாய் நகர்ந்தது.. காலத்தின் வேகத்திற்கு முன் எங்கள் வேகம் குறைந்தது...

வாழ்க்கை தொடுத்தப் போர்களினால் காதல் ஏற்படுத்திய மனப்போர்கள் தோற்று போக ஆரம்பித்த நேரம் அது.

"டேய் அந்தத் தெலுங்குப் பையன் கொண்டப்ப நாயுடு நித்யாவுக்கு லெட்டர் கொடுத்துருக்கான்டா...அவளை அவனும் லவ் பண்ணுறானாம்..." சோழன் புராஜக்ட் முடிவுகளுக்காகக் காத்திருந்த அந்த வாரத்தில் அங்கலாய்ப்பாய் சொன்னான்.

"ஒரு பொண்ணுன்னு இருந்தா அதுவும் கொஞ்சம் அழகா இருந்தா ஒரு நாலு பேர் லெட்டர் கொடுக்கத் தான் செய்வான்... அதுவும் அவங்க ஊரகாரப் பையக் கொடுத்தாத் தப்பா?" நான் தான் பேசினேன்.

"டேய் மாப்பி உனக்கும் எனக்குமே இன்னும் பஞ்சாயத்து முடியல்ல.. அதுக்குள்ளே இவன் வேறவான்னு நான் கடுப்புல்ல இருக்கேன்.. சொல்லிபுட்டேன்..." சோழனின் பதில் கேட்டு எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தோம்.

"உங்க எல்லாரையும் விட ஒரு ரூபாய் அதிகம் சம்பாதிக்கிற வேலைக்கு நான் போயிட்டா.. நித்யா எனக்குத் தான்டா" சோழன் தனக்குத் தானே சமாதானமும் சொல்லிக் கொண்டேன்..

"மாப்பூ உன்னிய விட எட்டணா அதிகம் சம்பாதிச்சாலும் சரி.. குறைச்சலா சம்பாதிச்சாலும் சரி.. ஆட்டத்துக்கு நான் வர்றல்ல.. உனக்கு இப்போ வில்லன் நான் இல்லை.. அந்த தெலுங்கு தேசத்துக்காரன் ரைட்டா" கிடைத்தக் கேப்பில் நான் ஜாமீன் வாங்க முயற்சித்தேன்.

கடைசியாய் எல்லோரும் ஒண்ணா எப்போ குட்டிச் சுவரில் சந்திச்சோம்ன்னு எவ்வளவு யோசிச்சாலும் நினைவுக்கு வர்றல்ல.. ஞாபகத்துக்கு வரவும் வேணாம்... இருக்க ஞாபகங்களின் சுமைப் போதும்..

நித்யாவிடம் தன் காதலைச் சொல்லாமலே ஊருக்குக் கிளம்பினான் சோழன்...அவனை வழி அனுப்ப அவன் அறைக்குச் சென்ற போது.. எதேச்சையாய் அவன் பெட்டியைப் பார்த்ததில்.. அதில் அவன் நித்யாவுக்காக வாங்கி வைத்திருந்தப் பரிசுப் பொருட்களின் குவியலையேப் பார்த்தேன்.... அந்தக் குவியலுக்கு நடுவே நித்யா எனக்காக எழுதியதாய் சோழன்சொன்னக் கடிதம் கசக்கி வைக்கப்பட்டிருந்தது...அந்தக் கடிதத்தின் வார்த்தைகளில் இருந்தது காதலா..காமடியா.. சத்யமாய் புரிந்துக் கொள்ள என்னால் முடியவில்லை.. புரிந்துக் கொள்ளவும் நான் தயாராக இல்லை..

சோழனின் பொக்கிஷக் குவியலை நான் பார்த்தது அவனுக்குத் தெரியாது என்றே நான் இதுவரை நம்பிக்கொண்டிருக்கிறேன்..சோழன் ஊருக்குப் போனான்...அவனோடு அவன் காதலும் உடன் போனது... அடுத்த ஆறு மாதங்களில் அவனுக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டதாய் தகவல் சொன்னான்.. இன்று வரை சோழனின் பழையக் காதல் பற்றி நானும் அவனிடம் பேசவில்லை.. அவனும் பேசுவதில்லை..அந்தக் காதல் என்னாச்சு யாருக்கும் தெரியாது...!!

மணியும் சபரியும் நகர வாழ்க்கையோடு மோதி மாசச் சம்பளத்துக்குப் போவதை விட சொந்தமாய் எதாவது செய்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தனர்..அதன் விளைவாய் கரூரில் சொந்தத் தொழிலுக்கு அடிக்கல் நாட்டினர்.. அவர்களின் போராட்டம் ஆரம்பம் ஆனது..

குமாரும் நானும் மட்டும் மீதம் இருந்தோம்...

"மாப்ளே இன்னும் இப்படியே காலம் ஓட்ட முடியாது... எங்க அப்பா அவர் பிசினசைப் பாக்க ஆள் இல்லைன்னு ஓலைக்கு மேல ஓலை அனுப்பிட்டார்... மெட்ராஸ் வாழ்க்கைக்கு மங்களம் பாட வேண்டியது தான் போலிருக்கு" என்று குமாரும் சொன்னப் போது எனக்கு என்னமோச் செய்தது.

அப்போது நான் வேலைத் தேடி வீதி வீதியாக அலைந்த நேரம்.. அமெரிக்காவில் ஓசாமா பிளைட் விட்டு பீதியைப் பக்காவா பில்டப்பு செய்த நேரம்... ஐடி பீல்ட்க்கு ஆல் டைம் ஹ ஆப்பு அடித்து முடிக்கப் பட்டிருந்த நேரம்... ஒரு பக்கம் பிரெஞ்சு... இன்னொரு பக்கம் அட்வெர்ட்டைஸ்மெண்ட்... கம்ப்யூட்டர்ல்ல எதோ ஒரு கோர்ஸ்ன்னு நானும் ஓட ஆரம்பித்தேன்...இந்த ஓட்டத்துக்கும் இன்டர்வியூவில் ஏற்படும் வாட்டங்களுக்கும் ஒரு மருந்த்தகமாக இருந்தது குட்டிச் சுவர் தான்...

குமார் ஊருக்குக் கிளம்பிய அதே சமயம் எனக்கும் என் முதல் வேலைக் கிடைத்தது.. வேலைக் கிடைத்தப் பின் வாழ்க்கையின் திசை மாறியது...

ஒரு கட்டத்தில் வாழ்க்கையே எந்திரமாகிப் போனது...பல ஆண்டுகளுக்குப் பின் குமார் தனக்குத் திருமணம் என்று அழைப்பிதழ் வைக்க வந்திருந்தான்.. வீட்டில் எல்லாரையும் அழைத்துவிட்டு...வாசலில் போய் நின்றவன். எதோ நினைத்தப் படி மறுபடி வீட்டுக்குள் வந்தான்.

'மாப்பூ பைக் சாவி கொடுடா..." என்றான்

என்னிடம் சாவியை வாங்கி வண்டியக் கிளப்பியக் குமார் என்னையும் ஏறுமாறு சைகைக் காட்டினான். நானும் ஏறி உட்கார்ந்தான். பைக் சீறி பாய்ந்தது. நேராக எங்கள் குட்டிச்சுவர் பக்கம் போய் வண்டியை நிறுத்தினான்.

குட்டிச் சுவரில் ஆங்காங்கே கொஞ்சமாய் விரிசல்கள்.. நாங்கள் பைக்கில் இருந்து இறங்குவதற்குள் சர சரவென ஒரு ஆறு ஏழு பைக்கள் எங்களைத் தாண்டி வந்து பிரேக் அடித்து நின்றன..அதில் இருந்து இறங்கிய ஜமாமொத்ததினரும் அப்படியேத் தாவிக் குட்டிச்சுவரில் போய் ஏறி அமர்ந்தார்கள்.. பாக்கெட்டிலிருந்து தம் எடுத்து பற்ற வைத்து ஆளுக்கு ஆள் மாற்றினார்கள்...அப்படியே கேலிக் கூத்துக் கும்மாளம் என அரட்டைக் கச்சேரியை ஆரம்பித்தார்கள்...

நானும் குமாரும் ஒருத்தரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டோம்....

குட்டிச் சுவரின் வரலாற்றில் அடுத்த அத்தியாயம் ஆரம்பம் ஆகிவிட்டது என்று புரிந்தது....

ஆங்கிலத்தில் சொல்வதுப் போல ....THE SHOW MUST GO ON FOLKS !!!!

Tuesday, November 13, 2007

ஒரு குட்டிச் சுவரின் வரலாறு - 6

முந்தையப் பகுதி படிக்க

என்னாத்துக்கு இப்படி ஒரு புது பொரளியைக் கிளப்பியிருக்காங்க.. புரியாம விட்டத்தைப் பார்த்து நானும் யோசிச்சுகிட்டு இருந்தேன்.

அந்தப் பொண்ணு இருக்கப் பக்கம் காத்தடிச்சுக் கூட நாமத் திரும்புனது இல்லையே... எங்கிட்டு இருந்து இப்படி ஒரு கனக்ஷென் கொடுத்தாங்க...ம்ம்ம் மொத்த மூளையும் பிதுங்கி வழியும் அளவுக்கு யோசிச்சுட்டு ஒரு முடிவுக்கு வந்தேன்..

தேவ்... ஊர் உலகத்துக்கு எல்லாம் கச்சேரி வச்சு ரணகளம் பண்ணவன் நீ... அதுல்ல எதோ ஒரு கச்சேரிக் கேட்டவனுக்கு அளவுக்கு அதிகமாகச் சேதாரம் ஆகியிருக்கு..அவன் தான் இப்போ உனக்கு எதிராக் கிளம்பியிருக்கான் அதுவும் கூட்டணி எல்லாம் பேசி வைச்சுக் கிளம்பியிருக்கான்..க்ரிப்பா இருக்கணும் புரியாதா..சிலிப் ஆயிரக் கூடாது..சரித்திரம் சரிஞ்சுரும்ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.

அப்போதைக்கு அந்த விசயத்தைப் பத்தி அதிகம் யோசிக்காமல் ஊட்டி பயணத்தின் மீது கவனத்தைப் பதிக்கத் துவங்கினேன்.

யார் யாருக்கு என்னப் பொறுப்புகள் என பகிர்ந்தளிக்கப்பட்டது. கேமரா.. வீடியோ கேமரா.. இன்னப் பிற சமாச்சாரங்கள் என ஒவ்வொரு விசயத்தையும் விரிவாய் திட்டமிட்டுக் கொண்டோம்.. திட்டமிடுதல் முடிந்துப் பயணம் பற்றியே பேசி பேசி ஒரு கட்டத்தில் ரொம்பவே களைத்துச் சலித்துப் போனோம்.


"ம்ம் என்னய்யா இது சுத்தப் போரா இருக்கு.. மணி எட்டு தான் ஆவுது.. ரூமுக்குப் போனா போரடிக்குமே.." குமார் முதலில் சலிப்பை வெளிப்படுத்தினான்.

"ஆமாம்ய்யா.. என்னப் பண்ணலாம்.. லேய் அந்தச் செல் போனை இப்படிக் கொடு.. யாருக்காவ்து எஸ்.எம்.எஸ் போடுவோம்..." மணி திருநாப் போனை வாங்கினான்.

"ம்ஹூம் பாஸ் எஸ்.எம்.எஸ் அனுப்புற அளவுக்கு நம்ம கிட்ட சார்ஜ் இல்லையே... " திருநாப் போனைக் கொடுத்து விட்டு மணி எஸ்.எம்.எஸ் அனுப்பும் முயற்சியில் முக்கால் வாசி ஈடுபட்ட பின் சாவகாசமாய் சொன்னான். மணி முகத்தைப் பார்க்கணுமே..

"கொய்யா..அதை முதல்லச் சொன்னா என்ன?"

"அதுன்னால்ல என்ன எஸ்.எம்.எஸ் டைப் பண்ணி பத்து நிமிசம் பொழுதைப் போக்கிட்டீங்கல்ல சீனியர் ப்ரீயா விடுங்க..." திருநா சிரித்துக் கொண்டேச் சொல்ல, கடுப்பான மணி போனை அவன் முகத்தில் எறிய ஓங்கினான்.

"சீனியர் பேசித் தீத்துக்கலாம்.. தீத்துட்டீங்க்கன்னாப் பேசவே முடியாது.. வேணாம்..ரைட்டா? " கெஞ்சும் பாவனையில் மண்டியிட்டான்.

அதே நேரம் பீச்சுக்குள் ஒரு ஜோடி எங்களைத் தாண்டி இறங்கிப் போனது... ரொம்ப நெருக்கம் ரொம்ப கிறக்கம்..அப்படி ஒரு காதல் ஜோதியைச் சுமந்துகிட்டு மண்ணுல்ல இறங்கி நடந்தாங்க..

"மாப்பூ... இது அதே தான்டா.." குமார் கண்ணடித்தான்.

"சீனியர்.. லவ்வர்ஸ் சீனியர்... பாவம் ப்ரைவேசி கிடைக்காம பீச்சுக்கு வந்துருக்காங்க..எல்லாரையும் எக்குத் தப்பாப் பாக்காதீங்க சீனியர்..." ஜமான் சொன்னது தான் தாமதம் எல்லாருக்கும் சிரிப்புப் பொத்துகிட்டு வந்தது.

பேச்சு இரவுக் காட்சிக்கு எதாவது போலாமா என்ற ரீதியில் நகர்ந்தது.. எந்தப் படம் போனால் டிக்கெட் செட் ஆகும் என்று ஆலோசனைகள் அள்ளித் தெளிக்கப்பட்டன...இது ஒரு பக்கம் நடந்தாலும்.. எல்லோர் கண்களும் அந்த ஜோடியின் மீது அவ்வப்போது போய் வந்தப் படியே இருந்தன..

எங்க ஏரியாவுக்குப் பக்கமாய் இருக்கும் பிராத்தனா ட்ரைவினுக்கு போவதாக தீர்மானம் நிறைவேறியது...திறந்த வெளியில் படத்தைப் பிலீங்க்கா தம் போட்டப் படியே பார்க்கலாம் எனப்து பெரும்பாலானோரின் கருத்து. அந்தக் கருத்தை ஏற்று பிராத்தனா பிளான் ஓ.கே ஆனது.

எப்படியும் இன்னும் ஒண்ணரை மணி நேரம் மிச்சமிருந்தது.. என்னப் பண்ணலாம்..இப்படியே உக்காந்து யோசிச்சா ஒண்ணரை மணி நேரத்தை ஓட்டுவது பெரிதாக இருக்காது எனப்பட்டது..

"மச்சி...மேட்ச் ஆரம்பிச்சுருச்சுடா" குமார் திடீரென அறிவிக்க மொத்தப் பார்வையும் முத்தச் சத்தம் வந்தப் பக்கம் பார்த்து திரும்பியது. "அடக்கொக்காமக்கா... ப்ரைவேசின்னு சொன்ன புண்ணியவான் எங்கேடா.. இதை வச்சே வீடியோ பைரசியே பண்ணலாம் போலிருக்கே..." என்று மணி கமெண்ட் அடித்தான்.

"நைட் ஷோ கேன்சல் பண்ணிரலாமா?" முஸ்தபா கேட்டான்.

ஆக எல்லாரும் அந்த ஜோடியின் மீதே முழு கண்களையும் செருகி வைத்தோம்.

"மாப்பூ கலாய்க்கலாமா" என்று குமார் தூபம் போட்டான்.

"எப்படி?"

"இது தான் பிளான் .." அப்படின்னு குமார் குத்து மதிப்பா ஒரு திட்டம் வரைந்தான்.

அதாவது எங்க மக்களில் இரண்டு பேர் மப்டி போலீஸ் மாதிரி அந்த ஜோடி பக்கம் போக வேண்டும் அங்கிருந்தப் படி பெரிய போலீஸ்க்கு செல்போன் மூலம் தகவல் தரவேண்டும்...இப்படி ஆரம்பித்தது திட்டம். திட்டப்படி ஜாமனும் குமாரும் மப்டி போலீசாகக் களத்தில் இறங்கினார்கள். திருநாவின் மெகா சைஸ் செல்போன் கிட்டத் தட்ட ஒரு வாக்கி டாக்கி போல இருக்கும். அதை ஜமான் கையில் எடுத்துக் கொண்டான்.

போலீஸ்க்கான தகுதிகளாய் ஒரளவு உருண்டு திரண்ட உருவம் கொண்ட ஜமான் தைரியமாக முன்னால் நடக்க.. பின்னால் குமார் நடந்தான். மற்றவர்கள் கரையில் நின்று கொண்டோம்..

"டேய் குமார் நீங்க உள்ளேப் போறீங்க சரி.. பெரிய போலீஸ் யாருடா ஆக்ட் கொடுக்கணும் அதைச் சொல்லாமப் போறீங்க.." கேட்டது நான் தான்..

"மாப்பி மண்ணு.. இது என்னக் கேள்வி கிறுக்குத்தனமா.. பாதி பனைமரம் உயரம் வளந்து இருக்க.. ஓட்ட வேற முடியைக் கட்டிங் போட்டிருக்க... மீசை வேணும்ன்னா லைட்டாத் திருகிக்க... பொருத்தமா இருக்கும்... உனக்கு பெரிய போலீஸ் வேசம்.. ரைட் நாங்கப் போறோம்"

பார்த்த சினிமா போலீஸ் எல்லாம் நினைவுப் படுத்திக்கொண்டு ஒரு மாதிரியாக் கொடுத்தக் கேரக்டருக்குச் செட் ஆக முயற்சித்தேன்.. எஸ்.பி.சவுத்ரி, அலெக்ஸ்பாண்டியன், வால்டர் வெற்றிவேல் எல்லாம் சேர்ந்த ஒரு கலவையாய் ஒற்றை காலை எடுத்துக் குட்டைச் சுவரில் வைத்து கையை இடுப்பில் இருத்தி கெத்தான ஒரு போஸ் கொடுத்தப் படி நின்றேன்.. மற்றவர்கள் என்னை விட்டு நாலு அடி தள்ளிச் சென்றார்கள்..சோழன் மட்டும் கூட பணிவான இன்னொரு போலீஸாகப் பம்மி நின்றான்.

மணி, சபரி, திருநா, புகாரி எல்லாம் நகர்ந்து மண்ணில் இறங்கி நடந்தார்கள். ஜோடிக்குக் கொஞ்சம் தள்ளிப் போய் உட்கார்ந்தார்கள். நம்ம மப்டி போலீஸ் ஜமானும் , குமாரும் முதலில் எங்க ஜமா இருந்த பக்கம் போனார்கள்.

"ஹலோ யாருய்யா நீங்க....எந்த ஏரியா?" ஜமான் குரல் கொடுக்க..

"காலேஜ் ஸ்டூண்ட்ஸ் சார்.." முஸ்தபா பம்முவது போல் பதில் சொன்னான்.

"ஐடி கார்ட் இருக்கா?" இது ஜமான்.

"இருக்கு சார்"

"ஏய் நீ எழும்புடா...உன்னைப் பார்த்தா அக்யூஸ்ட் மாதிரியே இருக்க...உன் பேர் என்ன?" ஜமான் கிடைச்சக் கேப்பில் திருநாவைக் கிடா வெட்டினான். திருநா பதில் சொல்லாமல் முறைத்தான்.

"டேய் என்ன லுக் விடுற... கேட்டாப் பதில் சொல்லணும்... இப்படி எல்லாம் முழிக்கக் கூடாது.. " ஜமான் உதார் அதிகமாக.

இதற்குள் ஐடி கார்ட்களைப் பரிசோதிப்பது போல் வாங்கிப் பார்த்த குமார்.."ஆமா சார் எல்லாம் காலேஜ் பசங்க தான் " கரெக்ட்டா இருக்கு அப்படின்னு சொன்னான்.

"டேய் மொறைக்காதடா ..போ..போ.." ஜமான் சவுண்டை வேண்டுமென அதிகப் படுத்தினான். பக்கத்திலிருந்த ஜோடியை லேசாக கலவரப்படுத்தும் முதல் முயற்சியில் ஜமான் வெற்றியடைந்தான் என்றே சொல்லவேண்டும். ஜோடி கொஞ்சமாய் விலகியது.

முஸ்தபா,திருநா, மணி,சபரி எல்லாம் அங்கிருந்து கிளம்புவது போல எழும்ப ஜமானும் குமாரும் அடுத்து நகர்ந்து ஜோடிப் பக்கம் வந்தனர்.

"ஆமா சார்.. விசாரிச்சுட்டேன் சார்... அது காலேஜ் பசங்க சார்... ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல சார்...அடுத்து சார்.. ஆமா சார்... ரைட் சார்....ஆமா சார் ஒரு ஜோடி இருக்கு சார்.. விசாரிக்கிறேன் சார்... " போனில் பாவ்லா காட்டியப் படி ஜோடி பக்கம் போய் நின்றான் ஜமான், அவன் கூடவே குமாரும் நின்றான்.

"எந்த ஏரியா?" ஜமான் அதட்டலாய் கேட்க....

"நாங்க ப்ரண்ட்ஸ் சார்.." ஜோடியில் ஒருத்தன் பதட்டமாய் பதில் அளித்தான்.

"எந்த ஏரியான்னு கேட்டா என்னப் பேசுற?" ஜமான் குரலில் கறார் கூட்டிக் கேட்டான்.

"இல்ல சார்.. நாங்க தப்பு எதுவும் பண்ணல்ல சார்?" அவள் பதில் சொன்னாள்.

"இது ஆவுறதில்ல... அங்கேப் பாருங்க ஆபிசர் நிக்குறார்.. அங்கேக் கூட்டிட்டுப் போறேன்..வந்து பேசுங்க" ஜமான் நான் இருக்கும் பக்கம் கை நீட்டினான். ம்ம் ஒரு மாபெரும் கலைஞனின் நடிப்பாற்றலுக்கு ஏற்ற வேடம் இல்லை என்றாலும் கொடுத்த வேடத்தில் மின்ன வேண்டும் என்ற எண்ணத்தில் தலையை உயர்த்தி அண்ணாந்து சும்மா இன்னும் கெத்துக் கூட்டி போஸ் கொடுத்தேன்.

"டேய் லாங்க்ல்ல இருந்து நீ நிக்குறது மட்டும் தான் தெரியும் ... உன் முகத்தை இப்படி எல்லாம் பீலிங் காட்டுறேன்னு செய்யற எபெக்ட் எல்லாம் நான் மட்டும் பார்த்து பீதியடைய வேண்டி இருக்கு சோ..உன் பிலீங்கைக் கன்ட்ரோல் பண்ணு" பக்கத்தில் இருந்த சோழன் என் நடிப்பு வெள்ளத்துக்கு அணைப் போட்டான்.

ஜோடி பதில் பேச முடியாமல் உளறி கொட்ட.. திட்டமும் தெளிவுமாய் அது எப்படிப் பட்ட உறவு என எங்களுக்கு ஊகிக்க முடிந்தது.

"சார் ஆபிசர் எல்லாம் வேணாம் சார்.. மன்னிச்சு விட்டுருங்க சார்.. நாங்க இப்படியே ஓடிப் போயிரோம் சார்..." அவன் கெஞ்சியே விட்டான்.

"ம்ம்ம் என்னது ஓடியேப் போயிடுவீங்களா." அப்படியே ஒரு யோசிக்கும் எபெக்ட் கொடுத்த ஜமான் குமாரைப் பார்த்தான்.

"ஓகே மன்னிச்சுடுறோம்...எங்கே ஓடுங்கப் பார்ப்போம்" என்றான் ஜமான். அவன் அப்படி சொன்னது தான் தாமதம் அந்த ஜோடி ஓடின ஓட்டம் பார்க்கணுமே... யம்மாடியோய் கரண்ட் கம்பியை வச்சு கீ கொடுத்த மாதிரி ஒரு ஓட்டம்.. மின்சார ஓட்டம்...

அவங்கப் போய் வெகு நேரம் வரை எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை....

"டேய் கவுரி இந்நேரம் சென்னைக்குள்ளே நுழைஞ்சு இருப்பான்ல்ல.. அவனுக்குப் போனைப் போடு மாப்பி.. அவனையும் படத்துக்குச் சேத்த்ருவோம்" என்று முஸ்தபா சொன்னான்.

"ம்ம்ம் நானும் மூணு நாலு வாட்டி ட்ரை பண்ணிட்டேன்... லைன் போகவே மாட்டேங்குதுப்பா.. இந்த ஆர்.பி,ஜியும் அதோட நெட்வோர்க்கும் கடுப்புப்பா.." என்று திருநா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் செல்பேசியில் கவுரியின் நம்பர் மின்னியது...

"மாப்பிக்கு ஆயுசு நூறுடா.. பேசிகிட்டு இருக்கும் போதே லைன்ல்ல வர்றான் பாரு.." என்ற படியே செல்லை ஆன் செய்து..." சொல்லுடா மச்சி... எங்கே இருக்க?" என ஆரம்பித்தான் திருநா..ஆனால் மறுமுனையில் பேசியது கவுரி இல்லை என்பது அடுத்தச் சில வினாடிகளில் எங்களுக்குத் தெரியவந்தது.

போனைக் கீழே வைத்த திருநா அப்படியேக் குட்டிச் சுவரில் உட்கார்ந்தான்

"கவுரியும் அவங்க அப்பாவும் வந்த கார் ஆக்சிடென்ட் ஆயிருச்சாம் திண்டிவனம் பக்கம்..கவுரி ஸ்பார்ட்ல்ல அவுட்டாம்.. அவங்க அப்பா ஹாஸ்பிட்டல் போற வழியிலே ..." திருநாவால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை..

எல்லாரும் அப்படியேக் குட்டிச் சுவரில் தலைக் கவிழ்த்து அமர்ந்தோம்....

அடுத்தப் பகுதியினில் முடியும்