Monday, September 07, 2015

அப்பா என்ற விஷ்வநாதன்


சாலையோரம் மழைக்கு ஒதுங்கி
தலை துவட்டிய படி
நிமிர்ந்த அந்த வினாடி
கண்களைத் தாக்கியதில்
எனக்குள் மின்சாரம் பாய்ச்சல்
மின்னலா...
இல்ல இல்லை..
உன் வெட்டும் பார்வை....

விலா எலும்புக்குள்ளும் குளிர் குடிகொள்ள
விரல் இடுக்குகளில் வெப்பம் தேடி
மனம் அலையும் வினாடியில்
உன் கீழுதட்டில் தேங்கி நிற்கும்
மழையின் மிச்ச துளிகளில்
மொத்த மனமும் வெந்தழிந்து போகிறது...

ஓரப் பார்வையால்
ஒத்த உசுரை உறிஞ்சுப்புட்டு போனவளே...
நெஞ்சு செத்துக் கிடக்கையிலே
நிக்காமப் போறவளே.....

தாவணியிலே மேகம் சுமந்து
தாகத்துல்ல நான் கிடக்க தாண்டி போறவளே
தவிச்சு நான் கிடக்கையிலே
தண்ணி குடம் தளும்ப தளும்ப நடக்கறவளே

குறுக்கு சிறுத்தவளே
கொலை குத்தம் ஆகிருமடி
ஈர உதட்டாலே தொட்டணைச்சு
ஈன உசுரை இழுத்து புடிச்சிதான் போயேன்டி

"அட அட ஒருத்தன் ஒருத்தியை எவ்வளவு காதலிச்சு இருந்தா இப்படி கவிதையா வடிச்சுருக்க முடியும்....சொல்லுடா"

"ப்ச் 36 வயசாச்சுப்பா...நான் அதை எல்லாம்  தாண்டி  வந்துட்டேன்னு நினைக்கிறேன்ப்பா"

"யார்டா இவன்...இந்த அளவுக்கு அவ அவனை காதல் இம்சை பண்ணியிருக்காடா...கவனிடா.."

"ப்பா....நீங்க எனக்கு அப்பா"

"ஓ யா...மறந்துப் போச்சு அடிக்கடி  வந்து போப்பா...எனக்கு  புரியுது உனக்கு உன் கேரியர் இருக்கு...உன் குடும்பம் இருக்கு...இருந்தாலும் நான் தான் உனக்கு அப்பா...எனக்கும் உன் நேரம் வேணும்பா"

அப்பா சட்டை பாக்கெட்டில்  இருந்து சிகரெட் எடுத்து நீட்டினார்..நான் வேண்டாம்  என தலையை ஆட்டினேன்.

வாட்... பிராண்ட்  மாத்திட்டீயா..

இல்ல நான் நிறுத்திட்டேன்..6 மாசம் ஆச்சு...அண்ட்  ஐ திங்க் நீங்களும்  நிறுத்தணும்..

பற்ற வைத்த சிகரெட் புகையை வாயைச் சுழித்து  விட்டு விட்டு  என்னைப்  பார்த்து பலமாக  சிரித்தார்..

"மனுசஷனா பிறந்தவன் நெருப்பை அணைய விடவேக் கூடாது...கீப் த பயர் பர்னிங்...."
அப்பா  கிட்ட   அவ்வளவு சீக்கிரம் பேசி ஜெயிச்சிர  முடியாது. ..

சற்று நேரம் எங்களுக்குள் ஒரு அசாதாரண  அமைதி  நிலவியது. ஒரு வித அழுத்தம் அதில்  பொதிந்திருந்தது.

22 வயதில்  எல்லாரும்  வேலை தேடக் கிளம்பிய  போது  ஈ சி ஆர் ரோட்டில் அடுத்த அம்பானியாகும்  என் முயற்சியில்  நான் மூழ்க  துவங்கி  இருந்தேன்... பேலஸ் என்றொரு  பரிசு  பொருள் கடை..அப்பவே அஞ்சு லட்சம்  முதலீடு. ..மிகவும்  திட்டமிட்டு 
அண்ணாமலை பாட்டு மனசுல்ல புல் வால்யூம்ல்ல ஏத்திவச்சுட்டு இறங்கிட்டேன்..
பரிசு பொருளில் எவ்லாம் 100-300 சதவீதம் லாபம்..அந்த கணக்குபடி பாத்தா  இன்னி தேதிக்கு  சென்னையின் அடுத்த சரவணா ஸ்டோர்ஸ் என்  கனவில்  உதித்த பேலஸ் நிறுவனமாக  தான்  இருந்து  இருக்க வேண்டும்...

இப்பவும் நல்லா ஞாபகம்  இருக்கு..ராத்திரி  கடையைச் சாத்திட்டு  வீட்டுக்கு  வர  மனசில்லலாமல்  திருவான்மியூர்  பீசசில்  ஒரு  ஓரமாய்  கையில்  புகையும்  கண்ணில் நீருமாய்  தனித்திருந்தேன்...அப்படி இப்படின்னு  வேலைக்கு போயிருந்தாலும்  மாசம்  கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆறாயிரம் சம்பளம் வாங்கி  இருப்பேன்...இப்போ  சிங்கிள் டீ செலவுக்கு  கூட  வியாபாரம்  பண்ண முடியாம  கடையை  இழுத்து  பூட்டுற  அளவுக்கு  வந்துட்டேன்.. சுய இரக்கம் பீறிட  கன்னம்  எல்லாம்  கண்ணீர்  வழிய துடைக்க  தோன்றாமல் அப்படியே  கடலைப் பாத்துட்டு இருந்தேன்..

மொத்தமும்  மிஷ்டர்  விஷ்வநாதனோடக் காசு...ஹார்ட் பாரோடூ  மணி...மாசம்  பிடித்தமெல்லாம் போக எழாயிரத்தி சொச்சம் பக்கம்  சம்பளம் வாங்குன  அந்த ஸ்கூல் வாத்தியார் மிஷ்டர்  வவிஷ்வநாதன் தான் என் அப்பா...ஆறு லட்சம்...விசு தன் ஒரே மகன் மீது  வைத்த விசுவாசத்தின்  விலை...

இனி இருந்து  ஆகப்போறது  என்ன...போயிடலாம்ன்னு  கடல் இருக்கும் பக்கம்  நடக்க  எத்தனித்த தருணம்...விசுவின் குரல்  கேட்டு  நின்றேன்

"சூசைடா...என் தப்பு  உனக்கு  நீச்சல்  சொல்லித் தராமல் விட்டது...நீச்சல் தெரிஞ்சவனுக்கு கடலைப் பாத்தா  நீந்தி கடக்கணும்னு தோணும்...நீச்சல் தெரியாதவனுக்கு   இந்த அழகான கடல்ல  விழுந்து சாகணும்னு தோணுது"

நான்  பதில்  பேசல்ல

"சாப்பிட்டீயா...வா...அய்யனார் பாஸ்ட்புட் போவோம்..."
ஆட்டுக்குட்டி  போல அப்பா பின்னால் நடந்தேன்..சில்லி சிக்கனும் சிக்கன் ரைசும் பார்சல் வாங்கி  என் கையில் கொடுத்தார்..

வீட்டிக்கு போய்  நான்  சாப்பிட்டு முடிக்கும் வரை ஓரு வார்த்தை அவரும்  பேசல்ல..என்னையும்  பேச விடல்ல...

சாப்பிட்டு மொட்டை மாடிக்கு படுக்க பாயைக் கையில் எடுத்துக்  கொண்டு போனேன்.. கொஞ்ச நேரம் வானம்  பார்த்தப் படி  படுத்து கிடந்தேன்...பாக்கெட்டில் இருந்த கடைசி சிகரெட்டை  பற்ற  வைத்தேன்..

 அப்பாவின் நிழல்  தெரிய நிமிர்ந்தேன்.. அதே வேகத்தில் சிகரெட்டைத் தூர எறிந்தேன்..

நம்ம பக்கத்துல்ல சாவு வீட்டுல்லக் கூட ஆம்பள அழமாட்டான்..அழக்கூடாது...உங்க அப்பா இன்னும் சாகல்ல...

எனக்கு அந்த நிமிஷம்  ஓ ன்னு கதறி அழணும்ன்னு  தோணுச்சு ஆனாக் கண்ணீரைக் கண்ணுக்குள்ளேயே இழுத்து பிடிச்சிகிட்டேன்

அப்பா திரும்பி வந்தார்..அவர் கையிலே என் பிராண்ட்  சிகரெட் பாக்கெட்

"மனுசஷனா  பிறந்தவன் நெருப்பை அணைய விடவேக் கூடாது...கீப் த பயர் பர்னிங்...."
அப்பா  கிட்ட   அவ்வளவு சீக்கிரம் பேசி ஜெயிச்சிர  முடியாது. ..

வருசங்கள் ஓடிப் போச்சு..அந்த முதல் பெருந்தோல்வியை மிஷ்டர்  விஷ்வநாதன் தயவுல்ல தாண்டி  எவ்வளவோ தூரம் வந்துட்டேன்...அதே அளவு தூரம் அப்பாவை விட்டும் வந்துருக்கேன்னும் புரியுது..

"....சோ...அந்தப் பொண்ணு யார்ன்னு சொல்லமாட்டே.."  அப்பா ஆரம்பித்த இடத்துக்கே வந்தார்...

"மிஷ்டர்.விஷ்வநாதன் ....உங்களுக்கு தான்  அந்த கேள்விக்குப் பதில் தெரிஞ்சிருக்கணும்.. இட்ஸ்  யுவர் கவிதை...."

அப்பாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை..டைரியைப் புரட்டிய படி நின்றார்.
அம்மாவின் டைரி  அது...அம்மாவின் கையெழுத்து..

"ப்பா....அம்மாவை அந்தக் கவிதையில்ல வர்ற பொண்ணுக்காகத் தான் விட்டுட்டு  வந்தீங்களா? "

கேட்க நினைத்தக் கேள்வியைக் கேட்க விடாமல் தடுத்தது மிஷ்டர்.விஷ்வநாதனின் சுருக்கம் விழுந்தக் கன்னத்தில்  ஓடிய ஒற்றை கோடு கண்ணீர்..

ப்பா...நான் கிளம்பணும்...அப்பாவின் முகம் பார்க்காமல் சொல்லிக் கொண்டு புறப்பட்டேன்