Tuesday, December 15, 2009

பனி தேசத்துப் பக்கங்கள்

விரல்கள் உறையும் வினாடிககளில்
ஆறாவது விரலின் புகையினோடு பரவும் எதோ நினைவுகள்
ஜன்னல் கண்ணாடிகளில் வழிந்தோடும் ஈரத் துளிக் கோலங்கள்
விழி முனைகளில் உதிர்ந்து விழும் கனவுகளின் மிச்சங்கள்
இலைத் தொலைத்த மரங்கள் கருகி தொங்கும் கிளைகள்
இதயச் சுவர்களில் மெல்ல படியும் வெறுமையின் எச்சங்கள்
வீதியோரம் வெளிறிய புற்செடிகளின் நடனங்கள்
தூரச் சூரியனின் கதகதப்பு தேடும் தேகத்தின் தாகங்கள்
இணைத் தேடும் பறவையின் காதல் பரபரப்பு
இனம் புரியாத எதோ ஒரு பரிதவிப்பு
அந்தியில் பூக்கும் பனிதேசத்து வானம்
மனதோரம் அழுத்தும் ஒரு வித பாரம்
மேகம் போர்த்திய விண்வெளி
தூக்கம் கலைந்த பின்னிரவு
கட்டியணைத்து காமம் தெளிக்கும் குளிர்
கசங்கிய போர்வைக்குள் தீயென தகிக்கும் தனிமை
முத்தமிட்டு மோகம் விதைக்கும் பனிக்காற்று
தொட்டு விடும் தூரத்தில் என் ஆசைகள்
சில்லென சில்லென பனிமழை....
இன்னொரு இரவு....இன்னும் நீளுகிறது....
பனித்தேசத்தின் பக்கங்கள் கையொப்பம் கேட்க...
வெற்று தாளாய் இந்தப் பக்கமும் புரண்டு ஓடுகிறது...