Tuesday, September 25, 2007

ஒரு குட்டிச் சுவரின் வரலாறு - 2

வாரம் ஒரு பாகம் வெளியிட தான் விருப்பம் கொண்டிருந்தேன்.. சில தவிர்க்க முடியாத காரணங்களால் இரண்டாம் பாகம் வெளியிடுவது தள்ளி போய் விட்டது.. பொறுத்தருள்க... இனி அடுத்த வாரம் குட்டிச் சுவரின் வரலாறு சரியான் தருணத்தில் வரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்

சென்ற பாகம் படிக்க...

இனி...

உயர் ரக நாய் குட்டியைக் கையில் பிடித்த படி பாவாடைப் போட்டச் சுட்டிச் சிறுமி ஒருத்தி அந்தப் பக்கமாய் போனாள். வழக்கமாய் எங்கள் குட்டிச் சுவர் கச்சேரி நடக்கும் நேரத்தில் அந்த நாய் அங்கு வருவது வழக்கம் ஆனால் கூட்டி வரும் ஆள் தான் மாறியிருந்தது...

பஞ்சாயத்து தீவிரத்தில் நாங்கள் நாயை அன்று அவ்வளவாய் கவனிக்கவில்லை.. ஆளுக்காளு புகாரியின் மீது வந்த புகார் பத்திரிக்கையிலே ஆழ்ந்திருந்தோம்.

ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்ச விவரத்தைப் பரிமாறிகிட்டு இருந்தோம்.

"ஹாய் அங்கிள்.. எப்படி இருக்கீங்க? ஏன் இரண்டு வாரமா வீட்டுக்கு வர்றல்ல.. இந்த வாரம் வாங்க கேரம் போர்ட் ஆடலாம்.. லாஸ்ட் டைம் மாதிரி இல்லாம இந்த டைம் அக்காவை ஜெயிக்க நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன்" அந்தச் சுட்டிப் பொண்ணு சுறுசுறுன்னு பேசிகிட்டேப் போக.. பஞ்சாயத்தைப் பஞ்சராக்கிட்டு மொத்தப் பேரும் அந்தப் பொண்ணு பேச்சுக் கொடுத்துட்டு இருந்த 'அங்கிளை' ஆங்கிள் ஆங்கிளாகக் கிழித்தெறியும் கோபத்தோடு பார்த்தோம்...

"பை அங்கிள்.. அக்காவுக்கு இன்னிக்கு எதோ ஸ்பெஷல் கிளாஸ்.,..அதான் பப்புவை நான் வாக்கிங் கூட்டிட்டு வந்தேன்.. சீக்கிரம் போகணும் வர்றேன்.." அந்தச் சுட்டிப் பொண்ணு கடந்துப் போனாள்.

"இது என்னாஆஆது" முஸ்தபா கேட்டான்.

ஜமான் ஒரு படி மேல போய் புகாரி கழுத்தைப் பிடித்தான்.."இப்போ நீ வாயைத் திறக்கல்லன்னு வை ... எப்பவும் திறக்க வேணாம்...ஒர்ரே ஊர்காரன்ங்கற பாவத்துக்கு உன்னோட நக்கீரன் ஜூவின்னு குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வச்சுருவப் போலிருக்கு..."

"இது ஷாலினிவோட தங்கச்சிடா" ஜமான் கழுத்தில் இருந்து கையை எடுத்தான். அதே வேகத்தில் அவனை மண்ணில் தள்ளி மேல ஏறி உட்கார்ந்தான்.

"என் கிளாஸ் மேட் ஷாலினி வீட்டுக்கு நானே போனது இல்ல... நீ என் ரூம் மேட் நான் கொடுத்த ஒத்த இன்ட்ரோ வச்சுகிட்டு அவ வீட்டுக்குப் போய் அவளோடு கேரம் போர்ட் எல்லாம் விளையாடி இருக்கே... அவ நாய் கூட எல்லாம் ப்ரண்ட் பிடிச்சிருக்கே... அவ தங்கச்சி உன்னிய அங்கிள்ன்னு கூப்பிடற அளவுக்கு பில்டப் பண்ணியிருக்க... ஆனா என் கிட்ட எதையுமே சொல்லல்ல... துரோகி.. உன்னக் கொன்னாலும் தப்பில்லடா.." அக்கம் பக்கம் ஆயுதம் தேடினான் ஜமான்.

அதற்குள் உஷாரன நாங்கள் ஓடி விழுந்து அவர்களைப் பிரித்தோம்..ஜமானுக்கு ஆத்திரம் தீரவில்லை.

"மாப்பூ இப்போ இருக்க பிரச்சனைய பாப்போம் அப்புறம் உங்க பஞ்சாயத்துக்கு வருவோம்..." முஸ்தபா சமாதானம் பேசினான்.

"மாப்பி... இந்த வெளக்கெண்ண அப்படியே அடிப்பட்டு சாகட்டும்.. இவன் எனக்கு நண்பன் இல்ல.. துரோகி.. நான் அந்த ஷாலினியை சைட் அடிக்கிறேன்.. மனசாரக் காதலிக்கிறேன்ன்னு எத்தன தடவைச் சொல்லியிருப்பேன் ஆனா அதையும் மீறி இவன் ..." ஜமான் என் பிடியில் இருந்து திமிரப் பார்த்தான். நான் அழுத்திப் பிடித்துக் கொண்டேன். ஜமான் கண் கலங்கிவிட்டது.. எங்களுக்கு எல்லாம் சிரிப்பு பொங்கியது.. ஆனால் கட்டுப்ப்டுத்திகிட்டோம்.

குமார் ஜமானைக் கூட்டிகிட்டு ஓரமாய் போனான்.

குட்டிச் சுவரில் குத்த வைச்சு உட்கார்ந்து இருந்த புகாரி எதற்கும் அது வரை வாய் திறக்கவில்லை. விசாரித்து விசாரித்துக் களைத்துப் போனான் முஸ்தபா.

குட்டிச்சுவர் கச்சேரிகளில் பங்கேற்கும் மாமணிகளை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்.. கொஞ்சம் லேட்டு தான்.. என்னப் பண்றது பிரச்சனைத் தீவிரத்தில் அறிமுகம் தாமதம் ஆகிருச்சு.

பிரச்சனையின் நாயகன் புகாரி, பஞ்சாயத்து தலை முஸ்தபா, ஜமான் இவங்களை எல்லாம் நீங்க ஏற்கனவே சந்திச்சுட்டீங்க... இவங்க எல்லாரும் ஒரே வீட்டை வாடகைப் பிடித்து வெவ்வேறு கல்லூரிகளில் மேலாண்மை துறையில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தார்கள். இதில் ஜமான் எங்கள் கல்லூரி மாணவன். இவர்கள் தவிர்த்து இன்னும் சந்திக்கவிருக்கும் நண்பர்கள் கவுரிசங்கர் (எ) கவுரி, திருநா (எ) திருநாவுக்கரசு, ரிச்சி.
இது தவிர சீனியர் கோஷ்ட்டியில் அடியேன், குமார் (எ) முத்துக்குமாரமூர்த்தி, சோழன் (எ) ராஜராஜன், மணி, சபரி.

"எலய்ய்ய்.. இந்தாப் பார் இதானே உங்க வாப்பா நம்பர்.. உங்க மயனுக்கு வர்ற வாரம் நிக்காஹா ஏற்பாடாகியிருக்கு குடும்பத்தோடு கிளம்பி வாங்கன்னு போன் பண்ணிச் சொல்லிட்டு அடுத்தப் பொழப்பப் பாக்கப் போறேன்.. அதை விட்டுட்டு சும்மா என்ன பணண? எப்போ பண்ண? அப்படின்னு இவனைப் போய் கேட்டுகிட்டு...." சோழன் பத்து எண்களையும் விரல் பதித்து அழுத்த.. புகாரி தலையைத் தூக்கினான்.

அங்கு ரிங் போவதை ஸ்பீக்கரில் போட்டான் சோழன். புகாரி வேகமாய் வந்து போனைப் பிடுங்கி நிறுத்தினான்.

எல்லாரும் அவனையே பார்த்துக்கிட்டு இருந்தோம். விறைப்பாய் நின்ன புகாரி அப்படியே உடைஞ்சு அழ ஆரம்பிச்சான்.. தேம்பி தேம்பி அழுதான்.. அழுகை நிற்கவே இல்லை. தள்ளிக் கோபம் கொப்பளிக்க நின்ன ஜமான் கூட கொஞ்சம் உருகிப் போயிட்டான். புகாரி அழுதப் படியே சொன்னான்.

"ஒரே ஒரு வாட்டி...."

"ஓரே ஒரு வாட்டி.." ஜூனியர்கள் கோரசாக ரீப்பிட்டு அடித்து ஆர்வம் மேலிட நின்றனர்.

"ஒரே ஒரு வாட்டி அவ கிட்ட கிஸ் பண்ணலாமான்னு கேட்டேன்.."

"அப்புறம்..." ஜூனியர்களோடு எங்கள் ஆவலும் கூடியது.

"அவளும் சரின்னு சொன்னா"

"அடப் பாவி... என்னாச்சு" திருநா வாயைப் பொளந்தான்.

"சனிக்கிழமை அவங்க வீட்டுக்கு வரச் சொன்னா.."

" சனிக்கிழமை ஸ்பெஷல் கிளாஸ் இது தானா?" ஜமான் கடுப்பாய் கேட்டான்.

"சனிக்கிழமை கிளம்பி அவங்க வீட்டுக்குப் போனேன்.."

குட்டிச் சுவரில் கால் மடக்கி அமர்ந்தோம். குமார் என் தோள் மீது இருகைகளை வைத்து தீவிரமாய் கதைக் கேட்கும் போஸில் இருந்தான். கவுரி கையில் சிகரெட் புகைந்து முடிந்ததைக் கூடக் கவனிக்காமல் அடுத்த நிகழ்வு என்ன என்பதில் ஆர்வம் காட்டினான். மணி பொளந்த வாயில் நாலு ஈ உள்ளே போயிட்டு வெளியே வந்தது தெரியாமல் புகாரி அடுத்து என்னச் சொல்லப் போகிறான் என்பதிலே கவனமாய் இருந்தான்.

வழக்கமாய் வாக்கிங் போகும் சிக் ஆன்டிகள் மீது கூட அன்று யார் கவனமும் செல்லவில்லை. குறிப்பாய் திருநா கவனம் போகவில்லை அது தான் பெரும் ஆச்சரியம்.

"அன்னிக்கு அவ வீட்டுல்ல தனியாத் தான் இருந்தா.. கேரளா ஸ்டைல் புடவைக் கட்டிகிட்டு தலையிலே மல்லிகைப் பூவெல்லாம் வச்சுக்கிட்டு இருந்தா.. எனக்கு ஒரு மாதிரியா ஆகிப் போச்சு"

"டேய் பாத்தவுடனே காஞ்ச மாடு கம்பம் காட்டுக்குள்ளே பாஞ்ச மாதிரி பாஞ்சிட்டியாடா" திருநா ஆர்வம் அடங்காமல் கேட்டான்.

அவனை முறைத்த புகாரி.. மேலும் தொடர்ந்தான்.

"அவ ரூமுக்குக் கூட்டிட்டுப் போனா...அவ வரைஞ்சப் படமெல்லாம் காட்டுனா... என்ன அழகு தெரியுமா?"

"த்தூ.. ஒரு பொண்ணோடு ரூமுக்கு தனியாப் போய் படமாப் பார்த்த நீயு... படம் போட்டிருக்கணுமே" கவுரி அங்கலாயத்தான். முஸ்தபா முகம் சுளித்தான். குமார் நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

"அப்புறம்.. கேரளா நேந்திரம் சிப்ஸ் கொடுத்தா... நல்லா இருந்துச்சு"

"அடச்சே தின்னி பண்டாரம்.. உனக்கெல்லாம் வாய்ப்பு அமையுது பார்..." திருநா பொங்கினான்.

"எல்லாம் சரி.. அது தான் மாலா வீட்டுல்ல அவ ரூம் வரைக்கும் போயிருக்கே இல்ல.. அப்புறம் எதுக்குடா நீ ஷாலினி வீட்டுக்கும் போனே..." ஜமான் இடையில் இப்படி கேட்டதும் அடக்க முடியாமல் எல்லாரும் சிரிச்சுட்டோம்...

"அட ஜமான் செல்லம்.. இருடா... இந்தக் கதையை முதல்ல முழுசாக் கேப்போம் அப்புறம் உன் விசயத்துக்கு ஒரு நல்ல வழி பாப்போம்... " குமார் ஜமானை சமாதானப்படுத்தினான்.

"புகாரி நீ கன்டினீயு பண்ணு" மணி சொன்னான்.

"சிப்ஸ் சாப்பிடப் பிறகு காபி குடிச்சோம்.. அவக் கையாலப் போட்டக் காபி..."

திருநாவும் , கவுரியும் நறநறவென பல் கடித்தனர்.

"கொஞ்ச நேரம் என் பக்கத்துல்ல உக்காந்து பேசிகிட்டு இருந்தா.. நான் அவ உதட்டையேப் பார்த்துகிட்டு இருந்தேன்..."

"ஆமா ஆமா செம உதடு அவளுக்கு " கவுரியும் திருநாவும் ஆமோதிப்பாய் தலையசத்தனர்.

புகாரி லேசாய் கோபத்தில் முகம் சிவந்தாலும் அதைக் காட்டிக்காமல்.. மேலே தொடர்ந்தான்..

"அவ என் கிட்ட உட்காந்தாளா... எனக்கு ஒரே சூடாப் போச்சு... பேச்சே வர்றல்ல.. அவளும் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிச்சா"

"ஆகா மச்சான் அப்புறம்"

"வா மேலே மாடிக்குப் போலாம் இன்னிக்கு நிலா முழுசா அழகா இருக்குன்னு சொன்னா"

"ம்ம்ம்ம்ம் அடி ஆத்தி ரொமான்ஸ் டோ..." திருநா முழங்கினான்.

"சின்ன மாடிப் படி அவ முன்னாடி ஏற... நான் பின்னாடி போனேன்.. மல்லிகை வாசம் வேற.."

"அய்யோ அய்யோ" திருநாவும் கவுரியும் புகாரியின் காலடியில் உட்கார்ந்தார்கள்.

நிலா காயுது பாட்டை மணி ஹம்மிங் பண்ண.. திருநாவும் கவுரியும் கோரஸில் இணைந்தனர்.

"அங்கே மாடியிலே.. நானும் தைரியம் வரவழைச்சுகிட்டு..."

கோரசை மக்கள் நிறுத்திவிட்டு புகாரியைப் பார்த்தனர்.

"அங்கே மாடியிலே அவ அப்பா..அம்மா...மூணு தங்கச்சிங்க எல்லாரும் இருந்தாங்க...நான் ஷாக் ஆயிட்டேன்"

"நாங்களும் தான்டா நாசமாப் போனவனே.. கீழே ரூம்ல்லயே கிடைச்ச வாய்ப்பை வாயைப் பொளந்துகிட்டு விட்டுட்டே" கவுரி சபித்தான்.

"அவங்க வீட்டுல்ல எல்லாருக்கும் என்னை இன்ட்ரோ பண்ணி வச்சா.. தஞ்சாவூர் மில் ஓனர் பையன் அப்படின்னு.. என்னோட பெஸ்ட் பிரண்ட்ன்னு சொன்னா.. அப்புறம் அவங்க வீட்டுல்ல நைட் சாப்பிட்டேன்..கேரளா சமையல்.. தேங்கா தூக்கலா இருந்துச்சி...எல்லாம் வெஜ் ஐட்ட்ம் தான்..."

"த்தூ த்தூ... டேய் சோத்துப் பண்டாரம்... போதும்டா" கவுரி கொந்தளித்தான்.

"அப்புறம் பேசிட்டு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு நான் கிளம்புனேன்,,, கிளம்பும் போது..."

"மச்சி குட் நைட் கிஸ்ஸிங்கா" திருநா மீண்டும் ஆர்வம் பொங்கக் கேட்டான்.

"கிளம்பும் போது அவளாத் தான் கேட்டா முத்தம் கேட்டியே வேணாமான்னு..."

"அட்ரா சக்க" பொண்ணுங்க எல்லாம் பாஸ்ட்டா இருக்காளுகப்பா

"நானும் ஆர்வமா அவளைப் பார்த்தேன்.. அவ என் கையைப் பிடிச்சு... மெதுவா அதுல்ல ஒரு முத்தம் கொடுத்துட்டு பை சொல்லிட்டா"

"மாப்பி அவ உன்னை போப் ஆண்டவர் ரேஞ்சுக்கு உயர்த்திட்டாடா" திருநா சொல்ல, எல்லாருக்கும் சிரிப்பு பீறிட்டது...குட்டிச்சுவரில் எழுந்து நின்று அடக்கமாட்டாமல் சிரித்தோம்.

"அது தவிர நான் அவளை ஒண்ணும் செய்யல்லடா"

புகாரியின் கடைசி வாக்கியம் எல்லாருக்கும் கேட்கவில்லை. கேட்ட நான், முஸ்தபா, சோழன் மூன்று பேரும் யோசனையில் ஆழ்ந்தோம்...

குட்டிச் சுவரின் வரலாறு இன்னும் வரும்

Monday, September 03, 2007

ஒரு குட்டிச் சுவரின் வரலாறு - 1

"டேய் புகாரி... அந்தப் பொண்ணை என்னப் பண்ணச் சொல்லித் தொலைடா" சுத்தி நின்னு ஒரு பத்து பேர் கேக்குறாங்க...ம்ஹூம் மூணு கோழியை முழுசா முழுங்கிட்டு முட்டையையும் ஆப் பாயில் போட்டுத் திங்க அலையறவன் மாதிரி புகாரி முழிச்சானேத் தவிர பதில் சொல்லல்ல.

நம்ம பயல்வ ரெண்டு பேர் பைக்கைச் சாத்திட்டு வேகமா இறங்கி வர்றான்வ.. கண்ணுல்ல கொல வெறி சிவப்பாத் திரண்டு நிக்குது.. மத்தவங்க எல்லாம் மிரண்டு போயிட்டோம். ஆனா நம்ம புகாரி அசரவே இல்ல.. வானத்தைப் பாத்துகிட்டு மோவாக் கட்டையத் தேயச்சுகிட்டு பரிதாபமா முழிச்சானேத் தவிர பேசவே இல்ல..

"இவனை எல்லாம் வெட்டிரணும் மாப்ளே... பிளேடு இருந்தாக் கூட போதும் கொடுங்கடா"ன்னு கோவமாப் பாஞ்சான் ஜமான்.

நம்ம பைய எதுக்கும் அசரல்லயே..

"இந்தா இங்கேப் பார் ஊர் விட்டு ஊர் வந்து இருக்கது படிக்கத் தான்.. பல்லக்குல்ல ஏறி மாப்பிள்ளையாப் போறதுக்கு இல்ல.. உங்க வாப்பா எங்களையே நம்பித் தான்டா உன்னைய மெட்ராஸ்க்கு பஸ் ஏத்துனார்.. உண்மையைச் சொல்லிரு இல்ல மகனே உனக்கு இங்கிட்டே சங்குத் தான்.." அப்படின்னு முஸ்தபா ஒரேடியாச் சிரியஸ் பேச்சு பேசுனான்.

"செல்லம்.. சொல்லிருடா.."விஜய் கொஞ்சி பார்த்தான்.

"மாப்பூடேய் உன்னிய வச்சு எங்க அம்புட்டு பேத்துக்கும் ஆப்படிச்சுருவாங்கடா"
மூர்த்தி கெஞ்சிப் பார்த்தான்.

பைய எதுக்குமே மசியல்ல.. வாயிலே சிப் வைச்சுத் தைச்ச மாதிரியே இருந்தான்.. நேரம் ஆக ஆக குட்டைச் சுவரின் மீது பிரச்சனையின் பாரம் ஏற ஆரம்பித்தது... சிகரெட்கள் புகைந்து தீர்ந்தன..

முதல்ல எங்க குட்டிச்சுவரை மீட் பண்ணுங்க...

திருவான்மியூர் பீச்ல்ல இருக்கார் நம்ம கதையின் நாயகன்.. 2001ல்ல நடந்த விஷயங்களின் விரிவானக் கொசுவர்த்தி சுத்தல் தான் இந்தக் குட்டிச் சுவரின் வரலாறு..இது மொத்தமும் கதையல்ல... நிஜம் .. வழக்கம் போல கொஞ்சம் ஏத்தம் இறக்கம் இருக்கும்..

இப்போ நம்ம புகாரியின் பிரச்சனைக்கு வருவோம்..

புகாரி மற்றும் புகாரியின் பிரச்சனைகளை அலசிக் கொண்டிருந்த அவன் நண்பர்கள் அனைவரும் டெல்டா மாவட்டப் பகுதியில் இருந்து நம்ம சென்னைக்கு உயர் கல்வி கச்சேரி பண்ண வந்திருந்தாங்க.. அதாவது என் கல்லூரியில் எனக்கு ஜூனியர் மக்கள்.

நானும் நம்ம பங்காளிகளும் அப்போத் தான் புராஜக்ட் செய்யிறோம்ன்னு வெட்டி வாழ்க்கையின் செழுமையான பொழுதுகளை அந்தக் குட்டிச்சுவரில் கழித்துக் கொண்டிருந்தோம்.. பொழுது சாய ஆரம்பிச்சாப் போதும் அங்கிட்டு போய் மாநாடு போடறது தான் நம்ம பொழப்பு.... சரி அந்த பெருமைமிக்க மாநாடுகள் பத்தி போகப் போக இன்னும் விரிவாச் சொல்லுறேன் இப்போ நமக்குப் பத்தி எரியற பிரச்சனை புகாரியின் பிராப்ளம் தான்.

புகாரி நல்ல வெள்ளைத் தோலுகாரன்... இந்தா நம்ம சல்மான் கான், ஆமீர் கான்,
ஷாருக்கான் மாதிரி தென்னிந்தியாவுக்கு இவன் ஒரு அழகாபுரி அழகேசன்...(அப்படின்னு அவனுக்கு ஒரு நினைப்பு... ஜூனியர் மக்களும் அதை நல்லாவே ஏத்தி பில் டப்புஐ நல்லாவே மெயின்டெயின் பண்ணுனாங்க) கானை எல்லாம் அவனுக்குத் தெரியுமோ தெரியாதோ தெரியல்ல ஆனாப் பயலுக்கு காதல் சேட்டை ஜாஸ்தி...

பொண்ணுன்னுச் சொல்லி விளக்கு கம்பத்துக்கு மிடியை மாட்டி விட்டாக் கூட அது பக்கமா போய் நின்னுகிட்டு .. ஹேய் யூ பூட்டிபூல்... யுவர் மம்மி பூட்டிபூல்.. யுவர் பாட்டி வெரி பூட்டி பூல்.. யுவர் டேடி வெரி வெரி பூட்டிபூல்ன்னு டோட்டல் பேமிலியையும் கவர் பண்ணிட்டு வந்துருவான்..

இப்படி ஒரு பட்டாம்பூச்சியா பறந்து திரிஞ்ச அவன் வாழ்க்கையிலே விதி விதவிதமாக்
கெட் அப் போட்டு விளையாண்டதால தான் அன்னிக்கு எங்க குட்டிச் சுவர் சொம்பும் ஆலமரமும் இல்லாத ஒரு பஞ்சாயத்து சபையா உருமாற வேண்டியதாப் போச்சு

விதி வேற என்னக் கெட்டப்புல்ல வந்து கும்ம்பி அடிக்கும் எல்லாம் ஜிகிடி வேஷம் தான் போட்டுகிட்டு புறப்பட்டு வந்து பொரட்டிப் போட்டுச்சு... மாலான்னு ஒரு பொண்ணு...அவன் காலேஜ்.. பஸ்ல்ல பாத்துருக்கான்...பாக்குற எல்லாப் பொண்ணையும் பிட்டிபூல் சொல்லுறவன் நிஜமான பியூட்டியைப் பார்த்தா என்னச் சொல்லுவான்.. எதையும் யோசிக்காம சொல்லிட்டான்...

ஐ லவ் யூ.....

அட்ரா சக்க அட்ரா சக்க..ன்னு ஆளுக்காளு அவனை உசுப்பேத்தி அவன் செலவுல்ல இதே குட்டிச்சுவர்ல்ல அவன் ஐ லவ் யூ சொன்னதுக்கு பார்ட்டி கொண்டாடி பசங்க எல்லாம் தீர்த்தம் ஆடியது ஒரு பொன்மாலைப் பொழுது... அந்தப் பொன்மாலைப் பொழுதில் நல்ல வேளை சீனியர் கூட்டம் மொத்தமும் ஆப்சென்ட். அன்னிக்கு நடந்தக் கிளைக் கதையை அடுத்தாப்புல்ல சொல்லும் போது சீனியர் மொத்தமும் ஆப்செண்ட் ஆனதுக்கு நான் ஏன் சந்தோசப்பட்டேன்ன்னு உங்களுக்கு விளங்கும்

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவன் காதல் கொடியாய் செடியாய் வளர்ந்தது...அந்தக் காதலுக்கு பாரியாய் இருந்து நம்ம ஜூனியர்கள் காரை தேரனேக் கொடுத்துக் காதல் பவனிக்கு உதவினார்கள்..

சீனியர்களாகிய நாங்க கதைக் கேட்பதோடு சரி...நம்ம பய வாழட்டும்ன்னு நல்ல எண்ணத்திலே எட்ட நின்னு ஆசிர்வதிச்சுட்டு இருந்தோம்.

இந்த நிலைமையிலேத் தான் ஒரு நாள் அந்தச் செய்தி எங்கக் காதுக்கும் வந்துச்சு.. வாங்க தேவ் நீங்களும் பஞ்சாயத்துக்குன்னு கூப்பிட்டு அனுப்புனாங்க.. மறுக்க முடியுமா? போய் நின்னோம்..

விஷயம் இது தான் மாலாவோட அப்பா நம்ம ஆளை அவர் பொண்ணைச் ஒரு வாரத்துக்குள்ளே கல்யாணம் பண்ணிக்கோ இல்லன்னு என் பொண்ணூ செத்துப் போயிருவான்னு இன்னொரு ஜூனியரை நேராக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கார்... அதுவும் காலேஜ்க்குப் போய்..

நம்ம பசங்க பயலைக் கூப்பிட்டு என்னடா ஆச்சு.. எதுக்கு அவங்க அப்பன் காலேஜ் வந்து அப்படி பேசிட்டுப் போறார்... பொண்ணு வேற செத்துப் போறேன்னுச் சொல்லுதாம்.. டேய் மண்டையா சொல்லுடா எதாவது தப்பு கிப்பு பண்ணித் தொலைச்சிட்டியான்னு...விடிய விடிய உக்கார வைச்சி விசாரிச்சு இருக்கான்வ

விடிய விசாரணை முடிஞ்சதுல்ல ஆறு பாட்டில் பீர், பத்து அவிச்ச முட்டை, சிக்கன் சட் டிஷ்ன்னு விசாரணைச் செலவு அதிகமாய் போனது தான் மிச்சமாம்.

இனி சரிப்படாதுன்னு தான் குட்டிச் சுவருக்கு விசாரணையை மாத்திட்டான்வ.. எங்களையும் கூப்பிட்டனுப்பி ம்ம்ம்ம் இப்போ முதல் வரியைப் படிங்க...

எங்களுக்கும் பொறுமை எல்லைத் தாண்டி எக்ஸ்பிரஸ் வேகத்திலேப் போயிட்டு இருந்துச்சு... அப்புறம்...

குட்டிச் சுவரின் வரலாறு இன்னும் வரும்