Wednesday, October 31, 2007

ஒரு குட்டிச் சுவரின் வரலாறு - 5

இது வரை குட்டிச் சுவரில் நடந்தக் கதை

"சீனியர் இதெல்லாம் நல்லால்லங்க... கலகலப்பா இருந்தவங்க நீங்க.. இப்படி ஒரு சின்னப் பிரச்சனைக்காக பேசாம இருக்கது நல்லாயில்ல... நான் வேணும்ன்னா சோழன் சீனியர் கிட்டப் பேசட்டுமா" முஸ்தபா அன்றைய குட்டிச் சுவர் சபையிம் மவுனத்தை முதலில் கலைத்தான்.

எனக்கும் குமாருக்கும் என்னப் பதில் சொல்வதென்று புரியவில்லை. ஒன்றும் பேசமுடியாமல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

"சொல்லுங்க சீனியர்.. என்ன இருந்தாலும் ஒண்ணுக்குள்ளா ஒண்ணாப் பழகிட்டீங்க...சின்னப் பிரச்சனை..பேசித் தீக்க முடியாதப் பிரச்சனைன்னு எதுவும் இல்லையே.." ஜமானும் கூடச் சேர்ந்துக் கொண்டான்.

குமார் அங்கிருந்து எழுந்து நடந்தான். நான் நடக்கக் கூடத் தோன்றாமல் குமார் போகும் திசையைப் பார்த்தப் படி இருந்தேன்.

"சோழன் சீனியர் கோவத்துல்ல எதோப் பேசிட்டார்.. நட்புக்குள்ளே இதெல்லாம் சகஜம் தானே... கை நீட்டியிருக்கக் கூடாது தான்... ஆனாலும் உங்க பிரண்ட் தானே...மறந்துரலாமே சீனியர்... இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த வாழ்க்கை..." முஸ்தபா தன் கருத்தை அழுத்தினான்..

அதற்கும் நான் பதில் பேசாமல் இருந்தேன்.. உண்மையில் என்னப் பேசுவதென்று எனக்குத் தெரியவில்லை.

குமார் அலை வாசலில் நின்று கால்களை நனைத்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்தேன். என் மவுனம் முஸ்தபாவுக்கு சங்கடம் கொடுத்ததோ என்னவோ தெரியவில்லை..

"சீனியர் அதிகமாப் பேசியிருந்தா மன்னிச்சுருங்க.. மனசுக் கேக்கல்ல அதான் பட்டதைச் சொல்லிட்டேன்..." என்று அவனும் மவுனம் ஆனான்.

அங்கு மிகவும் கனத்த மவுனம் நிலவியது... எங்களைக் கடந்து மும்பை எக்ஸ்பிரஸ்..குட்ஸ் வண்டி... ஏன் ஜெட் ஏர்வேஸ் கூடப் போனது... அன்று யார் கவனமும் அதில் இல்லை.... சரி முழுமையாக அதில் இல்லை...நான் தான் மவுனத்தைக் கலைத்தேன்.

"கவுரி கார் எப்போ வருது.?"

"இன்னிக்குக் கிளம்புறான் சீனியர்... காலையிலே போன் பண்ணி பேசினேன்... சாயங்காலம் சென்னை வந்துருவான்" திருநா பதில் சொன்னான்.

"எங்கேயாவது டூர் போலாம்ப்பா... இந்தப் புராஜக்ட் டென்சன்.. அது இதுன்னு ரொம்ப ஓவராப் போயிருச்சு...என்னச் சொல்லுறீங்க?" நான் கேட்டேன்.

"நல்ல ஐடியா சீனியர்... ஊட்டி போயிருவோம்.. குன்னூர்ல்ல நம்ம மாமாவுக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு" திருநா சொன்னான்.

"என்னப்பா ஊட்டி ஓ.கேவா?"

"ஓ.கே. சீனியர்" ஜமான் முதல் ஆதரவு ஓட்டுப் போட்டான்,

"எத்தனைப் பேர்?" திருநா கணக்கு எடுக்க ஆரம்பித்தான்.

"நான்...குமார்...மணி..சபரி...உங்கப் பசங்க நாலு பேர்...அப்படி இப்படிப் பார்த்தா பத்து பேர்ப்பா" நான் கணக்குச் சொன்னேன்.

"ரைட்.. வெள்ளிக் கிழமைக் கிளம்பிருவோம்... போயிட்டு சனி, ஞாயிறு., திங்கள் இருந்துட்டு செவ்வாய் ரிட்டன் கிளம்பிருவோம்" திருநாவும் நானும் கிட்டத்தட்டப் பேசி முடித்தோம்.

"இருங்க சீனியர் நான் கவுரிகிட்டப் பேசி ஓ.கே பண்ணிடுறேன்... செல் போனை எடுத்துக் கொண்டு ஓரமாய் போனான் திருநா.

குமார் அதற்குள் அலை ஓரமிருந்து திரும்பி வந்தான். மணியும் சபரியும் அப்போது தான் வந்துச் சேர்ந்தார்கள். அவர்களிடமும் ஊட்டி ட்ரிப் பிளான் பற்றி சொன்னோம்..எல்லாரும் ஒரு மாதிரி ஓ.கே சொல்லி விட்டார்கள். அடுத்தக் கட்டமாய் செலவுக்கான ஏற்பாடுகள் என பயணத் திட்டம் என முழுவீச்சில் உருவாக்கம் பெற ஆரம்பித்தது. கவுரியின் புது சென், மற்றும் திருநாவின் ஆம்னி என இரண்டு வண்டிகளில் கிளம்புவதாய் முடிவானது.. யார் யார் எந்த வண்டிகளில் போவது என்பது வரை பக்காவாய் பேசி வைத்துக் கொண்டோம். இதற்குள் போன் பேசி முடித்த திருநா குதூகாலமாய் திரும்பி வந்தான்.

"கவுரியும் அவங்க அப்பாவும் கிளம்பிட்டாங்களாம்... இன்னும் இரண்டு மூணு நேரத்துல்ல சென்னை வந்துருவாங்களாம்.. அவங்க கோயில் பிளானை அடுத்த வாரத்துக்கு மாத்தியாச்சாம்... அதுன்னால இந்த வாரம் அவங்க வண்டி நமக்குக் கிடைச்சுடும் நோ ப்ராப்ளம்ன்னு சொல்லிட்டான்.. சோ ஊட்டி கன்பர்ம்ட்" திருநா சொல்லவும் எல்லோருடைய உற்சாகமும் இன்னும் ஒரு படி அதிகமானது.

முஸ்தபா மட்டும் அவ்வளவு ஆர்வமாய் இல்லை என்பது எனக்குப் புரிந்தது..

"முஸ்தபா..என்ன ஆச்சு?" நான் கேட்டேன்.

"ஒண்ணுமில்ல சீனியர்.."

"புகாரி விசயமா...?"

"இல்ல சீனியர்"

"சரி... எனக்கும் சோழனும் எந்தப் பிரச்சனையுமில்ல... எனக்கு இப்பவும் அவன் நண்பன் தான்.. ஊட்டி ட்ரிப்க்கு சோழனைக் கூப்பிடலாம்.. என்ன குமார் சொல்லுற?" நான் குமாரைப் பார்த்தேன். லேசாகத் தயங்கிய குமார்.. சோழன் வருவதில் தனக்கு எதிர்ப்பு இல்லை என மெல்ல தலையை மட்டும் அசைத்துச் சொன்னான். முஸ்தபாவின் முகத்தில் அப்போது தான் சந்தோசம் பொங்கியது.

"தேங்க்ஸ் சீனியர்" என்றான் முஸ்தபா.

அதற்கு பிறகு குட்டிச் சுவரில் வழக்கமான ரகளை ஆரம்பம் ஆகியது... சிகரெட்கள் புகைந்தன.. புது புது பட்டங்கள் வழங்கப் பட்டு நடைப் போடும் அழகுகள் ஆராதிக்கப்பட்டன.. ஒரு இடைவேளைக்குப் பின் குட்டிச் சுவரின் கலகலப்புத் திரும்பியது..

"இன்னிக்கு நைட் ஜமான் தான் நமக்கு ட்ரீட்...எல்லாரும் ரெடியா இருங்க" என்றான் திருநா.

"எதுக்கு?"

"இந்த சட்டைக்காக தான் சீனியர்...பைய இந்த ஒரே சட்டையை லீவ் விட்டதுல்ல இருந்து தோய்க்காம கொள்ளாம இன்னிக்கு வரைக்கும் எட்டாவது நாளாப் போட்டிருக்கான்..."

"அப்படி என்னச் சட்டை இது?"

"ஷாலினி வாங்கிக் கொடுத்தச் சட்டை சீனியர்"

"அதுக்குன்னு அதை இப்படியாக் கொடுமைப் படுத்தறது.. நீ தான் குளிக்க மாட்டேங்குர.... அதையாவது குளிக்க வை...நாத்தம் தாங்கல்லடா சாமி" திருநா மூக்கைப் பொத்திச் சிரித்தான்.

"இல்லை சீனியர் டெய்லி பர்ப்யூம் போடுறேன் சீனியர்... நாத்தம் எல்லாம் இல்ல... நீங்க வேணும்ன்னா..." ஜமானின் அந்த முயற்சி எங்கள் அனைவரையும் கலவரப்படுத்த தெறித்து ஓடினோம். "ஜமான் அங்கேயே நில்லு...இல்ல கொலை முயற்சியிலே கேசு கொடுத்துருப்வோம்டா" முஸ்தபாவின் மிரட்டலையும் மீறி ஜமான் முன்னேற முயற்சிக்க ஓட்டத்தின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினோம்...

அப்போது சர்ரென்று வந்த பைக்கின் குறுக்கே போய் விழுந்தான் குமார்...பைக்கில் இருந்தது சோழன். கீழே விழுந்த குமார் ரோட்டின் ஓரத்துக்கு உருண்டான். பைக் அப்படியே போட்டு விட்டு குதித்தச் சோழன் குமாரை நோக்கி ஓடினான்.

குமாரைச் சோழன் தூக்கி விடவும் நாங்கள் அங்கேப் போய் நிற்கவும் சரியாக இருந்தது.. சோழனும் குமாரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டார்கள்.

"பூங்காற்று திரும்புமா... என் பாட்டை விரும்புமா....." ஜமான் அந்த இடத்தில் ராகம் போட... சட்டெனத் திரும்பி எல்லாரும் அவனைத் துரத்த ஆரம்பித்தார்கள்...

வேகமாக ஓடும் போது என் தோளோடு தோள் உரசிய சோழன் கிசுகிசுப்பாய் என் காதில் சொன்னான்...

"மாப்பூ கை நீட்டிட்டேன் மன்னிச்சுரு..."

"ஆங் எனக்குக் கேக்கல்ல.." ஓடிக்கொண்டே நானும் சொன்னேன்.

சட்டென என்னை இழுத்துப் பிடிச்சு நிறுத்திய சோழன் மீண்டும் அதே மாதிரி சட்டையைப் பிடித்துச் சத்தமாச் சொன்னான்..

"அன்னிக்கு இப்படி உன் சட்டையைப் பிடிச்சுட்டேன்...எதோ கோவத்துல்லப் பிடிச்சுட்டேன்..தப்புன்னு இப்போ ஒத்துக்குறேன்...மன்னிப்புக் கேட்டா ஓவரா சீன் போடுற... ஒழுங்காச் சொல்லு மன்னிப்பீயா மாட்டீயா... " அவன் கையில் என் சட்டை இருந்தது..அந்தச் சட்டைக்குள் நான் இருந்தேன்.

"சரி சரி... மன்னிப்புத் தானே வச்சிக்கோ..எடுத்துக்கோ...இப்போ என் சட்டையை விடு... நாங்க எல்லாம் சட்டையைத் தினம் தோய்ச்சுப் போடுற டைப்...." நான் சவுண்ட் விட மீண்டும் இருவரும் ஓட ஆரம்பித்தோம்.

அன்றும் மழை வந்தது....

"மன்னிப்பு எல்லாம் இருக்கட்டும்... நீ சொன்னது உண்மையா?" நான் கேட்டேன்.

"எது உண்மையான்னு கேக்குற?"

"நித்யாவை நீ லவ் பண்ணுறதாச் சொன்னது..."

"ஆமா உண்மை.. நீ தான்டா எனக்கு வில்லன்"

"நானா.. நான் என்னடா பண்ணேன்?" ஓட்டத்தை நிறுத்தாமலேக் கேட்டேன்.

"ஆமாடா நீ தான் வில்லன்.. ஏன்னா அவ உன்னைத் தான் விரும்புறாளாம்.."

"என்னது?" அப்படியே முன்னால் ஓடிக்கிட்டு இருந்தவன் பின்னாலே ஓட ஆரம்பிச்சேன்...

"டேய் உண்மையாத் தான் சொல்லுறேன்.. உன்னைத் தான் நித்யா விரும்புறா...உன்னைத் தான் கல்யாணம் பண்ணப் போறாளாம்.. கைப்பட எழுதிக்கொடுத்திருக்காப் பாக்குறீயா?" சோழன் முன்னால் ஓடிக் கொண்டேக் கேட்டான். நான் பின்னாலே நின்றேன்.

அதற்கு முன்னால் ஓடியவர்கள் அதற்குள் ஜமானைப் பிடித்து விட்டிருந்தார்கள்.

"டேய் மாப்பி உனக்கும் எனக்கும் தான் போட்டி...பாத்துரலாமா ஒரு கை.." சோழன் சிரித்துக் கொண்டேக் கேட்டான்..

"போங்கடா நீங்களும் உங்க காதலும்...." வைதேகி காத்திருந்தாள் மாஸ்டர் டிங்கு சொல்லும் டயலாக் என்னையுமறியாமல் என் வாயில் இருந்துக் கிளம்பியது

தொடரும்..

Sunday, October 21, 2007

ஒரு குட்டிச் சுவரின் வரலாறு - 4

முந்தையப் பகுதி

போலீஸ் ரோந்து வண்டியின் முன் கண்ணாடியை இறக்கிய இன்ஸ்பெக்டர் எங்களை ஏற இறங்க பார்த்தப் பார்வையில் உள்ளுக்குள் தேக்கி வச்சிருந்த மொத்த தைரியமும் கரைந்து கண் முன்னே கடலில் கலக்க கட்டுக்கடங்காமல் பாய்ந்தது...

"என்னப் பண்ணுறீங்க,,இந்த் நேரத்துல்ல இங்கே?" அவர் கேள்வி கேட்டு விட்டார் ரொம்ப சுலபமா,,அவுட் சிலபசில் பரீச்சையில் கேள்வி கேட்டால் எப்படி முழி பிதுங்கி முன்னால் வருமோ அதே மாதிரி ஒரு நிலைமை...மேல் உதடு கீழ் உதட்டோடு ஓட்டிக் கொண்டது எனக்கும் குமாருக்கும்..அவரவர் உதடு அவரவர் உதட்டோடுத் தான் ஒட்டிக்கொண்டது என்பதையும் இங்கேயேத் தெளிவு படுத்திவிடுகிறேன்..

"என்னப் பதிலைக் காணும்...?" கூட வந்தக் காவலர் ஏத்திவிட...

"இது யார் பைக்?" இன் ஸ்பெக்டர் அடுத்தக் கேள்வியைக் கேட்டார்.

"சார்... எங்க பைக் தான் சார்... மழை பெய்யுது அதான் பைக் எடுக்கமுடியாம கார்ல்ல வெயிட் பண்றோம் சார்..." கொஞ்சம் கொஞ்சமாய் வார்த்தைகளை இழுத்து சொன்னோம்...

"பைக் மட்டும் தான் காரணமா.. இல்ல பேரல்ஸும் காரணமா?" இன்ஸ்பெக்டர் தம்ஸ் அப் சிம்பளை வாயில் கவுத்திக் கேட்டார்...

"இல்ல சார் நான் வேணும்ன்னா ஊதி காட்டவா?" எஞ்சிய தைரியத்தில் வார்த்தைகள் வழிந்தெழுந்தன..

"நீ ஊதி எல்லாம் காட்ட வேணாம்.. ஊத்தி கொட்டனதே அங்கே பக்கத்துல்ல தான் கிடக்குது...அதுவே எல்லாத்தையும் சொல்லிருச்சு.." இன்ஸ்பெக்டர் கைக் காட்டிய இடத்தில் ரெண்டு காலி பீர் பாட்டில்கள் மழையில் நனைந்தப் படி ஒன்றோடு ஒன்று உரசியப் படி ரொமான்ஸ் சீன் காட்டிக் கொண்டிருந்தன.. எங்களுக்கு ஆக்ஷ்ன் சீன் கன்பர்ம் ஆகி கொண்டிருந்தது...

"எந்த காலேஜ்?"

"சார் சாரி சார்...பிரண்ட்க்கு பர்த்டே அதான்...."

"யாருக்கு பர்த்டே?" இன் ஸ்பெக்டர் கேட்க."இவனுக்கு" எனப் பதிலாய் ரெண்டு குரல்கள் கேட்டன. ஒண்ணு என்னுது நான் சொன்ன இவன் குமார். இன்னொரு குரல் குமாருடையது அவன் சொன்ன இவன் நான்...

அப்புறம் என்ன... ஒரே ஸ்டார்ட் மீசிக் தான்...

இன்ஸ்பெக்டர் வீட்டு தங்கமணி அன்னிக்கு அவருக்குப் பிடிச்ச கருவாட்டு குழம்பைப் பக்குவமா வச்சு ஊத்தியிருக்காங்கப் போல...நாங்க கருவாடா ஆகாம தப்பிச்சோம்...தங்கமான மனுசன் அட்வைஸ் மழைப் பொழிஞ்சதோட விட்டு அனுப்பிட்டார்...அவர் அட்வைஸ் மழை பொழியறதை நிறுத்தவும் மழையும் கொஞ்சம் நின்னுச்சு...

"தம்பிகளா.. இனி நான் உங்களைப் பீச் பக்கம் இப்படி பார்த்தேன்... அவ்வளவு தான் சொல்லிட்டேன்..." ஜீப் போனது... எங்களுக்கு மூச்சு வந்தது...

எல்லாம் முடிந்ததும் எழுந்து வந்த திருமா...

"சீனியர்... யார் சீனியர் அந்த அங்கிள் .. ரொம்ப நேரமா உங்ககிட்ட பேசிகிட்டு இருந்தார்.. எதாவது பிரச்சனையா சீனியர்.. சொல்லுங்க.. உங்க அங்கிள் நம்ம அங்கிள்.. கூட்டத்தோடு களம் இறங்கிருவோம்" அப்ப்டின்னு சொல்லிகிட்டேக் குட்டிச் சுவர் பக்கம் தேங்கியிருந்த குளத்தில் மல்லாக்க விழுந்தான்.

அதுக்கு அப்புறம் ஒரு ரெண்டு வாரத்துக்கு நாங்க யாரும் குட்டிச் சுவர் பக்கம் போகல்ல.. ஜூனியர்ஸ்க்கு இன்டஸ்டிரீயல் ட்ரிப் எங்களுக்கு புராஜக்ட் ஓர்க் பைனல் பேஸ்ன்னு ஒரே பிசி. குட்டிச் சுவருக்கு போறதுக்கு எங்க யாருக்கும் நேரமில்ல..

அன்னிக்கு குட்டிச் சுவருக்கு மறுபடியும் போக வேண்டிய சூழ்நிலை உருவாச்சு...காரணம் சோழன்..

வழக்கம் போல இன்னொரு காதல்...சோழனுக்கு காதல் வரும்ன்னு யாராவது எங்கிட்ட பந்தயம் வச்சிருந்தா என் மொத்தச் சொத்தையும் எழுதி தர்றதா பந்தயம் வ்ச்சிருப்பேன்.. ( சொத்துக் கணக்கு கேக்கறவங்க கிட்ட பந்தயம் வைக்கிறதுல்ல)

"மாப்பி.. நான் கல்யாணம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்டா...." சோழன் சொன்னதும் ஓ போட்டு அவனை அப்படியே கட்டிப் பிடிச்சு முதல் வாழ்த்து சொன்னது நான் தான்.

"மச்சான் முத்தப்பர் சரியான யோசனைக்கார பெரிய மனுசர்டா... மாட்டை இனியும் சும்மா விட்டா ஊர்ல்ல ஒரு வயக்காடும் வெளங்காதுன்னு வெவரமாப் புரிஞ்சிகிட்டு மூக்கணாம் கயித்தை ரெடி பண்ணிட்டாரு போல.." குமார் சொன்னான்.

"பொண்ணு சொந்தமா?" சபரி கேட்டான்.

"பேர் என்ன?" மணி கேட்டான்

"பேர் நித்யா"

"படிப்பு நம்மளை விட கம்மியா? அதிகமா?" நான் கேட்டேன்.

"படிப்பு நம்ம எம்.பி.ஏ தான்"

"என்னது நித்யா எம்.பி.ஏவா இது முத்தப்பர் வீசுற முக்கணாம் கயிறு மாதிரி தெரியல்லயே... சொந்தமா தயாரிச்ச தூக்கு கயிறு மாதிரி இல்ல இருக்கு?" நான் கேட்டதும் சோழன் முகம லேசாய் மாறியது.

" நம்ம கிளாஸ் நித்யாவா... அந்த பெங்களூர் பொண்ணாடா?" மணி வாய் விட்டு அதிர்ச்சியாய் கேட்டான்.

"இரு மாப்பி டென்சன் ஆவாதே... நீ அவளை லவ் பண்ற மாதிரி மாப்பிக்கும் அவளை லவ் பண்ண உரிமை இல்லையா.. உடனே அதிர்ச்சி ஆனா எப்படி?" நான் கேட்டேன்.

"நான் சீரியசாச் சொல்லிகிட்டு இருக்கேன்..." சோழன் பேசினான்.

அதே சமயம் ஜூனியர் கோஷ்ட்டியும் அங்கே திருநாவின் காரில் வந்து இறங்கியது.

காரைக் கவுரி சங்கர் ஓட்டிக் கொண்டு வந்தான்.

"என்ன கவுரி..இப்போ ரோட் கன்ட்ரோல் வந்துருச்சா.. ஓ,கேவா?" பேச்சு சோழன் காதல் விவகாரத்தில் இருந்து கொஞ்சம் திசை மாறியது..

"புது வண்டி எப்போ எடுக்கப் போற...?"

"அப்பா மாருதி சென் புக் பண்ணிட்டார்... இன்னும் இரண்டு வாரத்துல்ல எடுக்கப் போறோம்... எடுத்துட்டு அப்பாவும் நானும் சென்னைக்கு வர்றோம்... அம்மா தங்கச்சி எல்லாரும் இங்கேயிருந்து கிளம்பி திருப்பதிக்கு ஒரு ட்ரிப் போறதாப் பிளான் சீனியர்" கவுரி சொன்னான்.

"கவுரி உங்க ரோட் ட்ரிப் முடிஞ்சதும் நாம போறோம்... மொத்த ஜமாவும் கிளம்புறோம்.. கொடைக்கானல் போறோம் காட்டேஜ்ல்ல ரூம் போடுறோம்.. கூத்து கட்டுறோம்.. ஓ,கே"

"கண்டிப்பா சீனியர்.. நீங்க கேக்கவே வேணாம்..என் கார் உங்க கார் சீனியர்" கவுரி சிரிப்பும் சந்தோசமாய் சொன்னான்

"என்ன சீனியர் ரோட் கன்ட்ரோல் வந்துருச்சான்னு கேக்குறீங்க...வராதா சீனியர்... சொல்லிக் கொடுக்கரது யார்...பட்டுக்கோட்டை ஷூமேக்கர் திருநாவாச்சே..."

"பட்டுக்கோட்டை பிரபாகர் தெரியும்..இந்த ஷூமேக்கர் யார்டா மாப்பி அவருக்கு உறவா?" ஜமான் நிஜமாலுமே தெரியாமல் கேட்டான்.

"ஷூமேக்கர் தெரியல்ல உனக்கு... எத்தனை வருசமாடா கார்ல்ல போற.. வெளக்கெண்ணெய் உனக்கெல்லாம் பொண்ணு செட் ஆவுது பாரு... அதுவும் ஷாலினி உனக்கு செட் ஆயிட்டாளே" தன் வயித்தெரிச்சலை பொங்க விட்டான் திருநா

"நிறுத்து... உனக்கு கில்பர்ட் ரோட்ரிக்ஸ் தெரியுமா...?"

"என்னது? யார் அது?" திருநா ஜெர்க் அடித்து நிற்க...

"நீ பொறந்ததுல்ல இருந்து கார்ல்ல தானே போறே.. உனக்கு கில்பர்ட் ரோட்ரிக்ஸைத் தெரியல்லங்கற...அதுவும் தஞ்சாவூர்காரன்ன்னு வேற வெக்கம் இல்லமா வெளியே சொல்லிகிட்டு திரியறயே வெங்கல்ம்"

"சரி அது யார்டா?..சொல்லு எனக்குத் தெரியாத கில்பர்ட்..?"

கில்பர்ட் அண்ணேன் எங்கப் பக்கத்து தெருவுல்ல கார் மெக்கானிக் செட் வச்சிருக்கார்... எங்க ஏரியாவுல்லேயே பெரிய மெக்கானிக்டி மாப்பி...

கடுப்பான திருநா இறங்கி ஜமானைத் துரத்த ஜமான் மண்ணில் இறங்கி ஓடினான்..

"சீனியர் கடல்ல குளியல் போட்டு எவ்வளவு நாள் ஆச்சு.. போட்டுருவோமா.. மணி நாலு தானே ஆவுது.." முஸ்தபா எடுத்துச் சொல்ல... எல்லாருக்கும் அது நல்ல யோசனையாகப் பட்டது,,, சரசரவெனக் கடலை நோக்கி ஓடினோம்...

"எருமை...வருதுடோய்...." கடைசியாய் ஜமான் குதித்தப் போது ஜூனியர்ஸ் கோரசாய் கத்தினார்கள்.

சோழன் கரையோரம் ஒதுங்கி தம்மை பற்ற வைத்து புகையை வளையம் வளையமாய் விட ஆரம்பித்தான்.

"சோழருக்கு என்னாச்சு?" கவுரி கேட்டான்.

"எத்தனைத் தமிழ் படம் பாத்துருப்ப இப்படி கேக்குற,,, பிரச்சனை வந்துருச்சாம் அதான் பீல் பண்ணுறாராம்...அதான் புகையா விட்டு பீலிங்கை பில் டப் பண்ணுறார்.." குமார் சொன்னான்

"லவ்வா?" கவுரி கேட்டான்.

"ஆமா" குமார் சொன்னான்.

"பொண்ணு யார்?"

"எங்க கிளாஸ் பொண்ணு தான்.... நீ கூடப் பாத்து இருப்ப....அந்த பெங்களூர் பார்ட்டீப்பா"

"யார் நித்யாவா சீனியர்... " கவுரி நமுட்டுச் சிரிப்புச் சிரித்தான்..

"ஆமா நீ சிரிக்கிறது புரியுது... பொண்ணுக்கு தமிழ் சுத்தமாத் தெரியாது... நம்ம ஆளுக்கு கன்னடம் கொத்தில்லா.. ரெண்டுக்கும் இங்கீலிஷ் சோ சோ ட்ரபிள்... இதுல்ல என்ன மண்ணுல்ல லவ் வந்துச்சோ.... நம்ம சோழன் லவ் பத்தி தெரியாது... பிக் அப்... ட்ராப்... எஸ்கேப்..." நான் சொல்லிச் சிரித்தேன்...

"அதுக்கு ஏன் இவ்வளவு பில்டப் கொடுக்குறார் சோழர்?"

"அதானே கூப்பிட்டேக் கேட்டுருவோம்... டேட்டிங்.... செட் ஆகல்லன்னா ரெண்டு கட்டிங்ன்னு இல்லாம எக்ஸ்ட்ராவா நாலு சிகரெட்டை வேஸ்ட் பண்ணுறானே... " குமார் சொல்லிக் கொண்டே எழுந்து சோழனை நோக்கி போனான்.

நாங்கள் அலைகளில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தோம்.. அலையும் அதிகமில்லை....

"டேய் என் மானம் கப்பலேறிடும்டா.. உருவனவன் ஒழுங்காக் கொடுத்துருங்கடா..." ஜமான் குரல் பெரிதாய் ஒலித்தது...திருநா சிரித்தப் படி வேகமாய் உள் நீச்சல் போட்டான்...

"டேய் இப்படியே எந்தரிச்சி போய் உன் கார்ல்ல உக்காந்துருவேன்டா..உருவனதைக் கொடுத்துடுடா" ஜமான் அடுத்த எச்சரிக்கை கொடுத்தான். அதுக்கும் திருநா மசியவில்லை.

"உங்காரை இன்னிக்கு பெட்ரோல் ஊத்தி கொளுத்துறேன் பாருடா.. ஜமான் எழுந்திரிக்கப் போனான்.

அப்போது கரையோரமாய் சோழனுக்கும் குமாருக்கும் நடந்த வாக்குவாதத்தை நாங்கள் யாரும் கவனிக்கவில்லை.. ஜமானைக் கலாய்ப்பதில் மொத்த ஜமாவும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தோம். நான் தான் எதேச்சையாய் கரைபக்கமாய் முதலில் என் பார்வையைத் செலுத்தினேன்..

அங்கு எதோ சரியில்லை என்று எனக்குப் படவே எழுந்து விழுந்து கரையை நோக்கி ஓடினேன்.

நான் கரையை அடையவும் குமாரைச் சோழன் பிடித்து மண்ணில் தள்ளிவிடவும் சரியாக இருந்தது...நான் குமாரைத் தூக்கி அவன் தோளில் இருந்த மண்ணைத் தட்டி விட்டேன். இதற்குள் மொத்த ஜமாவும் பதறியடித்து கரையேறி இருந்தார்கள்.. சோழன் உச்சக் கட்டக் கோபத்தில் இருந்தான்..என்னால் அதை நல்லாவே உணர முடிந்தது.. குமார் எதுவும் பேசாமல் மெதுவாய் என் கையை உதறி விட்டு திரும்பி நின்றான். எனக்கு என்ன நடந்திருக்கும் என சரியாக யூகிக்க முடியவில்லை... என்னப் பேசுவது என்ற குழப்பத்தோடு நின்றேன்.

என்னைப் போலவே எல்லாரும் அதிர்ச்சியில் நின்றார்கள். ஐந்து வருட கால நண்பர்கள் மண்ணில் உருண்டு புரண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சி வராது...

கவுரி தான் முதலில் பேசினான்.

"சீனியர்..என்ன இது...?"

"டேய் நீ பேசாத.. சின்னப்பையன்.... உனக்கு எல்லாம் பதில் சொல்ல எனக்கு விருப்பமும் இல்ல தேவையும் இல்ல...மேல பேசுன அசிங்கமாப் போயிரும்..." சோழன் வார்த்தைகளில் அனல் தெறித்தது.

"சோழா... மாப்பி...பிரச்சனை என்னவா இருந்தாலும் கை நீட்டுறது சரியில்லடா மாப்பி.. வா பேசலாம்.." அவன் தோளில் நான் கையைப் போட்டேன்...

என் கையை ஓங்கி தள்ளியவன் ஆத்திரத்தோடு வந்து என் சட்டையைப் பிடிச்சான்

"டேய் மெட்ராஸ் புத்தியைக் காட்டிட்டீயேடா.... ஊர்காரப் பைய ஒருத்தன் இங்கே வந்து லவ் பண்ணக் கூடாதா? உன்னிய நண்பன்னு நினைச்சு என் காதலை... என் மனசைத் தொறந்துச் சொன்னா..அதை ஊரையேக் கூட்டி வச்சு நக்கல் பண்ணுறீயா.... த்தூ.... மனுசனடா நீ எல்லாம்... பழகிட்டேன்... உன் வீட்டுல்ல ரெண்டு நாள் சாப்பிட்டுட்டேன்டா அந்த காரணத்துக்காக இத்தோட நிறுத்திக்கிறேன்...." என் சட்டையை விட்டுக் கையை எடுத்தான். சோழன் கண்களில் ஆத்திரம்...கோபம் ..வெறி... எரிச்சல்.. எல்லாம் சேர்ந்த ஒரு வலி தெரிந்தது..

"டேய் குமாரு நல்லாயிருடா.. ஊர் பாசம் உனக்கும் இல்லாம போயிருச்சு இல்ல... இந்த மெட்ராஸ்காரனோடச் சேந்து நீயும் என்னை ஓட்டுற இல்ல.....இனி எனக்கும் உங்களுக்கும் எந்த சகவாசமும் இல்லடா.... மயிராப் போச்சு போங்கடா..." சோழன் கால்கள் தள்ளாட நடந்து குட்டிச் சுவரைத் தாண்டி நடந்துப் போனான்.

அதன் பின் யாரும் அங்கு எதுவும் பேசவில்லை.. குட்டிச் சுவரில் வெகு நேரம் வரை அப்படியே அமர்ந்து விட்டு சொல்லிக்கொள்ளாமல் எல்லாரும் கலைந்துப் போனார்கள்.. எனக்கு வாய் விட்டு கத்த வேண்டும் போலிருந்தது....

டேய் மாப்பி.... சட்டையிலே கை வச்சிட்டியேடா.... பதில் சொல்லுறேன்டா.. மனசுக்குள்ளேச் சொன்னாலும்... மொத்தத்தில் உடைந்து தான் போயிருந்தேன் நானும்...

இன்னும் வரும்

Tuesday, October 02, 2007

ஒரு குட்டிச் சுவரின் வரலாறு - 3

முந்தையப் பகுதி

ஒரு வழியா புகாரியின் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு கண்டு இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில் குட்டிச்சுவரில் அடுத்த முக்கிய கூட்டம் நடந்தது. இம்முறை எந்தப் பிரச்சனையுமில்ல..இந்தச் சிறப்புக் கூட்டத்துக்குக் காரணம் கொண்டாட்டம்... கொண்டாட்டத்துக்கு கொண்டாட்டத்துக்கு அழைப்பு வச்சது நம்ம ஜமான்...

மொத்த ஜமாவும் ஒருத்தர் பை ஒருத்தரா குட்டிச்சுவரில் ஆஜராக ஆரம்பித்தோம்.

"மும்பை எக்ஸ்பிரஸ் போயாச்சா?" சோழன் ஆர்வமாய் கேட்டான்..

"இன்னிக்கு அரை அவர் லேட் மாப்பி" குமார் பதில் சொன்னான்.

"பீச் பாசஞ்சர் போயிருச்சா?" சோழனின் அடுத்தக் கேள்வி.

"இல்லடீ மாப்பி"

"அந்த குட்ஸ் வண்டி எல்லாம் கடந்துருச்சா?"

"அதெல்லாம் எப்பவோ போயிருச்சுடா மாப்பூ"

"ஜெட் ஏர்வேஸ் டைம் இல்ல இப்போ"

"ஆமா ஆமா" குமார் அதிகப் பட்ச ஆர்வத்தோடு பதில் சொன்னான்.

"ஜெட் ஏர் வேஸ் பிளைட் இன்னிக்கு கேன்சலப்பா... " மணி பைக்கை நிறுத்தி விட்டு வந்தான்.

"ஏன்?" எல்லோரும் ஒரே நேரத்தில் ஏக ஆர்வத்தில் அவனைப் பார்த்துக் கேட்டோம்.

"பைலட் பிளேனைக் கடத்திகிட்டுப் போயிட்டாராம்.. பயணிகள் வேற பிளேன் பார்த்துக்கோங்கன்னு சொல்லச் சொன்னார்" மணி சிரிச்சுகிட்டேச் சொன்னான்.

குழப்பம் வேணாம்.. இந்த மும்பை எக்ஸ்பிரஸ், பீச் பாசஞ்சர், குட்ஸ் வண்டி, ஜெட் ஏர்வேஸ் எல்லாம் எங்களுக்காகவே(??!!!) மாலை நேரங்களில் எங்கள் குட்டிச் சுவர் பக்கமாய் நடக்கும் அல்ட்ரா மாடர்ன் அழகு தேவதைகளுக்கும் அழகு தேவதைகளாய் தங்களை நினைத்துக் கொள்பவர்களுக்கும் நாங்கள் சூட்டி அழைக்கும் பட்டங்கள்.

முக்கியமா அந்த ஜெட் ஏர்வேஸ் தேவதை இருந்தாளே.. அவளுக்கு வயசு முப்பதுக்குள்ளே இருக்கணும்.. பஞ்சாப் தேசத்து கோதுமையில் என்னவெல்லாம் ஊட்டச்சத்து இருக்குன்னு எங்களை ஆராய்ச்சியே பண்ண வச்ச அழகு அவ... சும்மா அரேபியன் குதிரை மாதிரி அவ டக் டக் டக்ன்னு நடக்குற பாணி இருக்கே.. எங்க மொத்த ஜமாவும் அப்படியே கிறங்கிப் போயிருவோம்... மணி தான் அவளைப் பத்திய மொத்த விவரங்களையும் விசாரித்தான்...

ஜெட் ஏர்வேஸில் வேலை..செம சம்பளம்.. இன்னும் கல்யாணம் ஆகல்ல... பொண்ணு தண்ணி தம்முன்னு செம ஷோஷியல்... ஒரே ஒரு பாய் பிரண்ட் பைலட்டாம்... மணி இருந்த பிளாட்டில் அடுத்த பிளாக்கில் தான் அவளும் குடியிருந்தாள். மணி பாதி உண்மையும் மீதி வன்மையாகவும் அவளைப் பற்றி எடுத்து விடும் கதைகளுக்காகவே மணிக்கு எங்க ஜமாவில் தனி மரியாதை உருவாகி வந்தது.

"டேய் அப்போ இன்னிக்கு பிளைட்டும் போச்சா.. பார்ட்டின்னு வரச்சொல்லிட்டு பயபுள்ள ஆளை இன்னும் காணும்" கவுரி பேசினான்.

"அவன் சொன்னான்னு சொல்லித் தான் இன்னிக்கு புராஜக்ட்க்குக் கூட பங்க் அடிச்சுட்டு வந்துருக்கோம்.." சபரி சொன்னான்.

நேரம் ஆறரையைக் கடந்தது... லேசான இருட்டோடு மழை மேகமும் வானில் சூழத் தொடங்கியது.

"என்னாத்துக்கு பார்ட்டி எதுக்கு பார்ட்டின்னு கேக்குற பழக்கமே நம்ம வெ.ஆ. சங்கத்துக்கே கிடையாதே...ஓசியிலே மோர் ஊத்துறாங்கன்னு சொன்னாலே ஓம்போது கிலோ மீட்டர் கால் வலிக்க நடந்தேப் போய் லிட்டர் கணக்குல்ல குடிச்சுத் தீக்கறவங்க நாம.. பய பீர் ஊத்துறேன் வாங்கன்னு கூப்பிட்டு விட்டா ஏன் எதுக்குன்னு கேக்க முடியுமா?" பழம் பெருமையைப் பேசினான் மணி.

ஜமான் வரக் காத்திருந்தக் கேப்பில் சிகரெட்கள் புகைந்தன... எங்களைக் கடந்த அம்சமான அழகுகளின் காந்த சக்தியில் அவ்வப்போது ஈர்க்கப்பட்டு பார்வைகளை சிதற விட்டு இதயங்களைப் பதற விட்டு குட்டிச்சுவரில் நகராமல் அமர்ந்திருந்தோம்.

ஏழு மணி வாக்கில் திருநாவின் ஆம்னி வேன் சரட்டென வந்து குட்டிச்சுவர் முன்னால் பிரேக் அடித்தது... கதவைத் திறந்து ஜமான் பின் சீட்டில் இருந்து அந்த இருட்டிலும் அசத்தலானக் கருப்பு கண்ணாடிப் போட்டுக் கிட்டு இறங்கினான்...

"ஹாய் சீனியர்ஸ் அன்ட் ஹாய் மாப்பிஸ் " ஜமான் பயங்கர துள்ளலோடு குட்டிச்சுவரில் ஏறி உட்கார்ந்தான்.

திருநா ஆம்னியை ஓரம் கட்டிவிட்டு பின்னாலே வந்துச் சேர்ந்தான்..

"டுடே அ யாம் வெரி வெரி ஹேப்பி மாப்பிஸ்.." ஜமான் காற்றில் கைகளைச் சுழல விட்டு செம எமோஷனலாப் பேசினான்.

"எருமை மாடு கூலிங் கிளாஸ் போட்டு டிஸ்கவரில்ல இது வரைக்கு எதாவது படம் காட்டியிருக்கானா?" முஸ்தபா என்னிடம் கேட்டான்.

"இல்லய்யா" இது என் பதில்.

"இருங்க சீனியர்..இந்த எருமை மாடு இன்னிக்கு பண்ற சலம்பல் மொத்தத்தையும் இந்த கேமிராவில்ல கவர் பண்ணி மனித உருவில் ஒரு எருமையின் அட்டகாசங்கள்ன்னு டிஸ்கவரிக்கு வித்து டாலர் பார்க்கலாம்" முஸ்தபா கையோடு இருந்த சிங்கப்பூர் டிஜியை ஆன் செயதான்.

"முஸ்தபா இங்கே என்னய்யா நடக்குது?"

"சீனியர் கலர் மீன் ஒண்ணு நம்ம குளத்து ஓரமா நின்னு குட்டையைக் கலக்குன எருமை மாடு ஒண்ணைப் பார்த்து கண் அடிச்சுருச்சாம்.. அதான் நடந்துருக்கு" முஸ்தபா பூடகமாகவே பேசினான். கேமிராவில் அவன் தீவிரமானான்.

"சீனியர்ஸ் அன்ட் மை பேட்ச் மாப்பீஸ்... இன்னிக்கு டுடே.. ஷாலினி என் கூட லஞ்ச் சாப்பிட்டா...அவ வீட்டுல்ல இருந்து கொண்டு வந்த எலுமிச்ச சாதத்தை ஒரு தட்டுல்ல போட்டு எனக்குச் சாப்பிடக் கொடுத்தா.. நானும் அவளும் ஒண்ணாச் சாப்பிட்டோம்"

யூ நோ ஐயாம் வெரி ஹேப்பி..." ஜமான் கண்ணாடியைக் கழட்டாமலே ஆகாயம் பார்த்தான். ஆகாயம் ஏற்கனவே இருட்டிப் போயிருந்தது...

முஸ்தபா அந்தக் கணத்தைக் கிட்டத்தட்ட பி.சி.சிரிராமாவே மாறி கேமிராவில் அடைத்துக்கொண்டிருந்தான்.

"ஒரு எலுமிச்ச சாதம் தந்ததுக்காடா இந்த பார்ட்டி" சபரி கேட்டான்.

"சீனியர்.. அது வெறும் சாதம் இல்ல...அதுல்ல என்ன எல்லாம் இருந்துச்சு தெரியுமா?"

"அடப் பாவி ட்ரீட்ன்னு கூப்பிட்டு அந்த மீந்துப் போன எலுமிச்சம் சாதத்தைப் பொட்டலம் கட்டிக் கொண்டாந்துட்டீயா..கொய்யாலே" கவுரி சங்கர் மெய்யாலுமே பதறி விட்டான்..

"மிச்சம் இருக்கு அதை நான் எனக்கு எடுத்து வச்சிருக்கேன்" தன் பாக்கெட்டைத் தடவினான் ஜமான்.அப்படியே ஒரு ஏகாந்த நிலைக்குப் போன மனநிலையில் காட்சியளித்தான் ஜமான்.

முஸ்தபா கேமிராவை நிறுத்திவிட்டு சரியா முகம் பக்கம் போய்.. ச்சூ....இந்தக் காக்காத் தொல்லைத் தாங்கல்லடா சாமி.. ச்சூ ச்சூ... என்று விரட்டி ஜமான் இன் தியான நிலையைக் கலைத்தான்.

"என்ன முஸ்தபா.. பாவம் பைய பிலீங்க்ஸா இருக்கான்..அதைப் போய் நக்கல் பண்ணிகிட்டு நல்லாவா இருக்கு" நான் ஜமானுக்கு பரிந்துப் பேச...

"அட என்ன சீனியர் நீங்க... பொதுவா.. சாப்பிடறதுக்கு முன்னாடி காக்காவுக்கு எல்லாம் ஒரு வாய் சோறு போடுவாங்க இல்ல.. அதை மாதிரி அந்தப் புள்ள இந்த காக்காவுக்கு கொஞ்சமாக் கொடுத்துருக்கும்.. இது அதுல்ல பாதியைத் தெரியாம பொட்டலம் போட்டு மடிச்சு வேற கொண்டாந்துருக்கு.. அதைப் போய் பிலீங்க்ன்னு தப்பா கணக்குப் பண்ணுறீங்களே"

"அட இல்லப்பா எப்படியோ...அவன் அந்தப் புள்ளையை விரும்புறான்... சின்னப் புள்ள மனசு நொந்துறப் போவுதுப்பா"

"அய்யோ சீனியர்...இது மாதிரி இவன் பார்ட்டி கொடுக்கறது இது எத்தனாவது தரம் தெரியுமா?"

"ஆமா சீனியர் போன ட்ரிப் ஜீன் ஸ் படம் ரீலிஸ் ஆனப்போ திருச்சியிலே மொத நாள் செகண்ட் ஷோ அதைப் பாத்துப்புட்டு என் மனசுக்கு ஏத்தப் பொண்ணு கிடைச்சுட்டான்னு ராத்திரி பீர் ஊத்தி பய பண்ண சலம்பல் இருக்கே..." கவுரி பிளாஷ் பேக் சொல்ல...

"அது மட்டுமா.. அங்கே பைனல் இயர்ல்ல.. காலேஜ் லெக்சரர் ஒண்ணைப் பார்த்து.. எதோ ஒரு நாள் அவங்க யதார்த்தமா.. ஜமான் யூ ஆர் வெரி அப்படின்னு சொல்ல.. இந்தப் பன்னி அதை வச்சுகிட்டு அன்னிக்கு ராத்திரி என் செயினை அடமானம் வச்சு பீர் ஊத்தினான்.. இதுல்ல வேடிக்கை என்னான்னா அந்த லெக்சரருக்கு கல்யாணம் ஆகி ரெண்டு கொழந்தங்க வேற இருக்கு"


"சீனியர்.. இது மனிதக் காதலே இல்லை....சீனியர்... சரி வாங்க நாம ஆரம்பிக்கலாம்.." கவுரி அழைப்பு விடுக்க.. மணி, சபரி, சோழன், முஸ்தபா, எல்லோரும் ஆம்னிக்குள் போனார்கள்.

குமாருக்கும் எனக்கும் ஆளுக்கொரு பெப்ஸி மற்றும் செவன் அப் பாட்டில்களை எடுத்துக் கொடுத்தான் திருநா.

"சீனியர்... அவங்கச் சொல்லுறதை எல்லாம் கேர் பண்ணாதீங்க... அப்போ அப்படி எல்லாம் நான் இருந்தது என்னவோ உண்மை தான்... ஆனா அது வேற... இப்போ எனக்கு வந்துருக்கது உண்மையானக் காதல்... ஷாலினியை நான் சீரியசா லவ் பண்ணுறேன்..." ஜமான் கண்களில் கனவு மிதக்கப் பேசினான்.

இதைக் கேட்டு திருநா அழ ஆரம்பித்தான்.. தேம்பி தேம்பி அழுதான்...

"என்னாச்சு?" நான் ஜமானைக் கேட்டேன்.

"அவன் ஒயின் ஷாப்ல்லே ஊத்திகிட்டான்...அவன் தண்ணி அடிச்சா அழ ஆரமபிச்சுடுவான்" ஜமான் சொன்னான்.

"ஆகா அருமையானா நட்பு மக்கா.. உன் சந்தோசத்தைப் பைய அங்கேயேக் கொண்டாட ஆரம்பிச்சுட்டானா?"

:"இல்ல அவன் துக்கத்தை அங்கேயே சொல்லி அழ ஆரம்பிச்சுட்டான் அதான் அவனுக்கு மட்டும் அங்கேயே பீர் ஊத்திட்டேன்"

இதைக் கேட்டு திருநா அழ ஆரம்பித்தான்.. தேம்பி தேம்பி அழுதான்...

"என்னாச்சு?" நான் ஜமானைக் கேட்டேன்.

"அவன் ஒயின் ஷாப்ல்லே ஊத்திகிட்டான்...அவன் தண்ணி அடிச்சா அழ ஆரமபிச்சுடுவான்" ஜமான் சொன்னான்.

"ஆகா அருமையானா நட்பு மக்கா.. உன் சந்தோசத்தைப் பைய அங்கேயேக் கொண்டாட ஆரம்பிச்சுட்டானா?"

:"இல்ல என் சந்தோசம் அவனுக்கு துக்கமாப் போயிருச்சு..."

"என்னச் சொல்லுற?"

"ஆமா அவனும் ஷாலினியை லவ் பண்ணுறான்.. நட்புக்கும் காதலுக்கு நடுவுல்ல அவன் ஊஞ்சல் ஆடுகிட்டு இருக்கான்..."

பெப்சியைத் திறக்கவும் அது பொங்கியது...அதை விட எனக்கும் குமாருக்கும் சிரிப்பு அதிகமாய் பொங்கியது.

வானத்தில் சூழ்ந்த மேகங்கள் பெரும் சீற்றமெடுத்து மழையைப் பொழிய ஆரம்பித்தது.. பீச்சிலிருந்தக் கூட்டம் மொத்தமும் கலைய ஆரம்பித்தது..

மொபைல் பாராக மாறிய ஆம்னியில் நம்ம மக்களின் அலம்பல் அல்லோலப்பட்டது...

"மாம்ஸ் பீச்சேக் காலியாவுது..கிளம்பலாம்ய்யா" ஜமான் குரல் கொடுக்க..

"என் மைக் லீக்குது நான் மொட்ட படியாது..." மணி குழற...

"ஒண்ணும் இல்ல.. மணியோட பைக் நிக்குதாமா அதை அவன் ஓட்ட முடியாதுன்னு சொல்லுறான்" அப்படின்னு மணியின் வாக்கியத்தை சபரி மொழிபெயர்த்தான்.

மொத்த ஜமாவும் வண்டிக்குள் மழைக்கு ஒதுங்க...நான் டிரைவ்ர் சீட்டில் உட்கார்ந்தேன்.. கொஞ்சம் மழை விட்டதும் மணி பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பலாம் என திட்டம்.. வாட்ச்சைப் பார்த்தேன் மணி ஓன்பதரையைத் தாண்டி விட்டது.. மழையோ குறைவதாய் தெரியவில்லை..

பத்து மணியை நெருங்கியது.. மழை பேயாட்டம் ஆடியது..

வண்டிக்குள் பீரோட்டம்.... வண்டிக்கு வெளியே மழை நீரோட்டம் என நிலைமை ஒரு மாதிரி எக்குதப்பாப் போயிகிட்டு இருந்துச்சி... இடையிலே திருநா வேற சவுண்ட்டா அழ ஆரம்பிக்க..சொல் சிலம்பாட்டம் வேற தொடங்கிடுச்சு...

நடக்கிறது நடக்கட்டும் என நான் வண்டியைக் கிளப்ப முற்படுகையில்..

டேய் தேவ்.. என் மைக் என் மைக்... அப்படின்னு மணி கத்த ஆரம்பிச்சான்..

அது மட்டுமின்றி எதிரில் பிரகாசமான லைட் அடித்தப் படி மாநகர காவல் ரோந்து வண்டி வந்துக் கொண்டிருந்தது... பீச்சில் வேற யாரும் இல்லாத நிலையில் மழையில் நின்ற எங்கள் வண்டி அவர்களின் சந்தேகத்திற்கு இலக்கானதில் எந்த வியப்பும் இல்லை....

கொட்டும் மழையைத் தாண்டியும் குமாருக்கும் எனக்கும் வேர்த்தது...

புல் பீம்ல்ல ஹெட் லைட்டை வண்டி மீது செலுத்தியவாறு ரோந்து வண்டி எங்கள் பக்கம் வந்து நின்றது..

சரியாக அதே நேரத்தில் முழு மப்பில் இருந்த திருநா பெரும் குரல் எடுத்து

"பிளடி இங்கே ஒருத்தன் பீலிங் தெரியாம எவன்டா அவன் வெளியே இருந்து லைட் அடிச்சு டார்ச்சர் பண்றது.. பிளடி WHO IS THAT DISTURBANCE I SAY..." அப்படின்னான்.

ஆகா... கிரவுண்ட்டை லெவல் பண்ணிட்டான் பைய... இனி இன்ஸ்பெக்டர் வந்து மொசைக் போடணும் அது தான் பாக்கி" அப்படின்னு பிரமைப் பிடிச்சுப் போய் சீட்டில் அமர்ந்து வினாடிகளை நகர்த்தினேன்...

குட்டிச் சுவர் இன்னும் வரும்...