Saturday, December 24, 2005

கவி3: அவசரக் கவிதை

3
அதிகாலைப் பொழுதுகளில்
அவசரமாய் பூக்கும் பூக்கள்...
அந்த அழகின் சிரிப்பில்
அதனருகே இருக்கும் முட்கள்
அவ்வளவாய் தெரிவதில்லை....

விடலைப் பருவத்தில் காதல்

கத்தியின் கூர்முனை...
வீச்சரிவாளின் வேகம்,,,
தெறித்து விழும் வார்த்தை..

இலக்கு நானாகும் வரை
உணரவில்லை வலிக்குமென்று

மேடு பள்ளம்...
காடு மலை....
கல்.. முள்...

பார்த்துச் செல்லுவது
புரியவில்லை பயணம் தடைபடும் அரை

ஒரு முறை ஓவியம்
வாழ்க்கை....
தூரிகைக் கைகளில்
வண்ணங்கள் கண்களில்....

புரிதல்....
முயற்சிக்கிறேன்...
என்னால் முடியும் வரை...

கதை4: பழைய பனையோலைகள்பழைய பனையோலைகள் - வைரமுத்துவோட புத்தகம் கையிலே இருந்துச்சு... படிக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி எதோ எனக்குள்ளே ஒரு ஞாபகம். எனக்கும் எதாவது பழைய பனையோலைகள் இருக்குமான்னு.. atleast காகித ஓலைகளாவது இருக்குமான்னு தேடிப் பார்க்குற ஆசை பீறிட்டுக்கிட்டு வந்துச்சு..டக்குன்னு வைரமுத்துக்கு ஒரு சின்ன பிரேக் விட்டுட்டு என் ரூம் பரணை மேல லூக் விட்டேன். ம்ம்ம் சோனி மியூசிக் சிஸ்டம் வாங்குன அட்டைப் பெட்டி அட்டகாசமா இருந்துச்சு...உள்ளே தான் என் பழைய காகித ஓலைகளின் குடியிருப்பு இருக்கும்.இன்னிக்கு சனிக்கிழமை வேற.. பசங்க வழக்கம் போல அவுட்டிங் பிளான் போட்டுச் சொதப்பி வைச்சுட்டானுங்க... முக்கியமா அந்த திருப்பெரும்புதூர்காரன் சுமதி தியேட்டர்ல்ல அப்படி இப்படி படம் போட்டா அங்கேயே செட்டில் ஆயிடுறான்.
சரி நான் விஷயத்துக்கு வர்றேன்.. நானே கஷ்ட்டப்பட்டு அந்த மெகா சைஸ் பெட்டியை கீழே இறக்கி வைச்சேன். அச்சுன்னு ஒரு தும்மல்.
புதையலைக் கண்டவன் கணக்கா செம feelingaa பொட்டியைத் தொறக்கிறேன். அஞ்சாம் கிளாஸ் நோட் புக் ஒண்ணு கண்ணுல்ல படுது..பட்டாம்பூச்சி ஸ்டிக்கர் லேபல் போட்ட நோட்புக். அப்பா கூட மையிலாப்பூர் மாடவிதீயிலே அலைந்து ரவி புக் ஹவுஸ்ல்ல வாங்குன லேபல்.. என் முகத்திலே ஒரு ஸ்மைல்.. பிளாஷ் பேக் போயிட்டு ரிட்டர்ன் ஆகுறேன். நோட் புக்கைத் திறந்துப் பார்க்குறேன். சின்னதா ஒரு சிலுவை அடையாளம் முதல் பக்கத்துல்ல இருக்கு..ச்சே அந்த வயசுல்லேயே அப்படி ஒரு பக்தி எனக்கு..
P.K.Devnath V A, montfort preparatory school Rough note bookன்னு capital lettersல்லே எழுதி இருக்கேன். ம்ம்ம் என் பழைய பனையோலையில் கரையானின் படையெடுப்பு..ச்சே எரிச்சல் வருகிறது.
ஆஹா...... I will not talk in tamil in class.... I will not talk in tamil in class... ச்சே அந்த சின்ன வயசுல்ல எனக்கு என்ன ஒரு தமிழ் உணர்வு இருந்து இருக்கு.
தமிழுக்காக என் பிஞ்சு விரல் நொந்து நூலாக 300 தடவை imposition எழுதி இருக்கேனா பார்த்துக்கோங்க.அந்த இங்கீலிஷ் மிஸ் பேர் ஞாபகத்துக்கு வர்றல்ல. யோசிச்சுப் பார்க்குறேன். கண்டிப்பா என் கூட அப்போ சுப்பு அப்புறம் செந்தில் எல்லாரும் அந்த imposition எழுதி இருப்பாங்க. ஒரு சின்ன சந்தோஷம் தான். உங்க தகவலுக்கு, சுப்பு இப்போ சாப்ட்வேர் இஞினீயரா உலகம் சுத்திகிட்டு இருக்கான். செந்தில் டாக்டரா பல நோயாளிகள் நாடியைப் பிடிச்சுப் பார்த்துட்டு இருக்கான். நான்... உங்களுக்குத் தாந் தெரியுமே என் பழைய பனையோலைகளை புரட்டிகிட்டு இருக்கேன். ஒவ்வொருப் பக்கமா மெதுவாத் திருப்புறேன்.
ஆஹா ஒரு வட்டம் ( அது face)..அதுக்குள்ளே சின்னதா ரெண்டு புள்ளி ( அது கண்ணு) குறுக்கே ஒரு கோடு ( அது வாயாம்)... அப்புறம் பெருசா ரெண்டு காது.. குச்சி குச்சியா ரெண்டு காலு... அதுக்கு கீழே குறிப்பு வேற எழுதி இருக்கேன்..... PT master is a monkey-donkey .... இப்போ படிக்கும் போது கூட சிரிப்பு தாங்கல்ல..
அதே பக்கத்துல்ல... நான் ஒரு பெரிய ஆளூ.. ஹிந்தி படிக்கும் முக்கேஷ் தமிழில் என்னமோ எழுதி இருந்தான்.
அட அட... INDIA VS PAKISTAN...SCORE BOARD
Kapil dev - 100 Srikanth - 0 Vengsarkar - 25 Azharudhin - 23
ச்சே இந்தியா பாக்கிஸ்தான் கிட்டே தோத்துப் போயிருச்சு...பள்ளிக்கூடக் காலத்திலே ரொம்ப பிரபலமான விளையாட்டு.. பேர் book cricketங்கோ. அறிவியல் புத்தகத்தை புரட்டிப் புரட்டி விளையாடுற விறுவிறுப்பான விளையாட்டு.. அந்த புள்ளி விவரம் தான் இப்போ பார்த்துகிட்டு இருந்தேன்.
FLAMES , F அடிச்சு இருக்கு...L அடிச்சு இருக்கு...ஆஹா M மட்டும் அடிக்கப்படாமல் இருக்கு.. M FOR MARRIAGE...எனக்கு யாருக்கும் கல்யாணம்.. ஆ.. ஆர்.ரேணுகுமார்..என்னோட நண்பன் அவன்.. அந்த அறியா வயசுல்ல எனக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆகிடுமோன்னு எவ்வளவு பயந்துப் போயிருப்பேன் தெரியுமா? இப்போ நினைச்சு நினைச்சுச் சிரிக்கிறேன். ரேணு இப்போ ஆஸ்த்ரேலியாவிலே இருக்கான்.. அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல்ல. ஆனா எனக்கு ஆயிடுச்சு...
அட பாருடா பிலோமினா மிஸ் கையெழுத்து... VERY GOODன்னு எழுதி இருக்காங்க.. நான் படிக்கிற பையன்ங்கோ.
இன்னும் என்ன என்னமோ CARICATURES, FUN WORDS,CODE WORDS..அதை எல்லாம் இப்போ படிக்கும் போது மனசுக்குள்ளே ஒரு இனம் புரியாத சந்தோஷம்...பக்கத்துக்கு பக்கம் அனுபவிச்சு ரசிச்சு புரட்டிக்கிட்டு இருந்தேன்.
அடுத்த பக்கத்துல்ல ஆகா!!! மயிலறகு....ச்சே இன்னும் குட்டி போடலை... வருஷம் 15 ஆச்சு...இன்னும் குட்டி போடலை... REPRODUCTION சூத்திரங்கள் தெரியாதப் பருவத்தில் மயிலறகு நோட்புத்தகத்தோடு புணர்ந்து பிள்ளைப் பெற்று எடுக்கும் என்று ஒரு நிச்சயமான நம்பிக்கை.. யார் கொடுத்தா மயிலறகு? எதிர் வீட்டு மீனாம்பிகா அக்காவா?? இல்லை மாடி வீட்டு கலா அக்காவா??ம்ம்ம் பள்ளிக்கூட நண்பர்களா?? ஆங்.. ஞாபகம் வந்துறுச்சு.. நாங்க வாடகைக்குக் குடியிருந்த மயிலாப்பூர் வீட்டுக்கர வசந்தா அத்தை கொடுத்தாங்க.. கொடுக்கும் போது அந்த மீசை மாமா கிண்டல் பண்ணதா சிரிச்சது ஞாபகம் வந்துச்சு.
ஆனா இப்போ மனசுல்ல ஊசிக் குத்துனாப்பல்ல ஒரு வலி..
டக்குன்னு நோட் புக்கை மூடி வச்சுட்டு எழும்பிட்டேன்.
அந்த மாமா போன மாசம் இறந்து போயிட்டாங்க... நான் போகல்ல...
சிரிச்ச முகமாப் பார்த்த அத்தையை வேற எப்படியும் பார்க்க என்னாலே முடியாது...ரூமை விட்டு அவசரமாய் வெளியே வந்தேன். பைக்கை எடுத்துட்டு கடற்கரைப் பக்கமாப் போயிடேன்.சில நேரங்களில் சில விஷயங்களுக்கு அர்த்தம் புரிவதில்லை...அர்த்தம் தேடுவதிலும் அர்த்தம் இல்லை...

Friday, December 16, 2005

கவி2: சென்னையில் ஒரு மழைக்காலம்.


கண்ணிமைத் தாண்டி கண்...
கரைக் கட்டித் தெறித்து...
முகம் முழுக்க நனைத்து..
முத்தத்தால் என்னைப் புதைத்து...
என்னைச் செல்லமாய் சீண்டி...
என்னுள்ளே அனுமதியின்றி நீந்தி....
தன் வாசனை என்னில் பூசி...
தயக்கமின்றி என் தேகம் தீண்டி...
அடைபட்ட வாசல்கள் திறந்து...
அங்கத்தில் சங்கமம் ....
சித்தம் சில்லிட்டது...
சிறைபட்டது...
மொத்தமாய் கொடுத்தேன்...
முற்றிலும் நனைந்தேன்....
இன்னும் என்னைத் துவை...
இதயம் வரை நனை....
இது எனக்குப் பிடிச்சிருக்கு....
ஈரம் சொட்ட ...
பாதங்களை வருடி...
பாடங்களை முடித்து
வழிந்தோடும்...
வானத்தின் நீர்த் துளிகள்....

மழை.. சின்ன சின்னதாய் தூறல் பெருத்து...
மண்ணை முத்தமிட்டக் காதல் கண்டேன்......

பி. கு
(கவிதை எழுத காகிதம் தேடினேன்...
காதல் கொண்ட வான் மகள்... அதற்குள் கோபம் கொண்டாளோ...)

ம.பி.கு
(தொலைக்காட்சியில் மழை வெள்ளச் செய்திகள்...பறிகொடுத்த மக்களின் பரிதாபப் படங்கள். வெளியே வந்து நின்றேன். மழை விட்ட பாடில்லை... என் மீது தெறித்த மழை துளிகள் ஏனோ இப்போது தீயாய் சுடுகின்றன.)

Wednesday, December 14, 2005

கதை3 : நானும் என் கவிதையும் - பாகம் 3

பாகம் 1 | பாகம் 2

"அப்புறம் மாப்பிள்ளே.."
 நான் மெதுவா என் கலாய்ச்சல் படலத்தை ஆரம்பிக்கத் தயார் ஆனேன். 

"ஒரு முக்கியமான் வேலை இருக்கு என் கூட வரமுடியுமா... ம்கூம்.. நீ என் கூட கண்டிப்பா வர்ற...வா" என்று என் கையைப் பிடித்து இழுத்துகிட்டுப் போனான் மகேஷ். வெளியே போய் நின்ன பைக்கை கிளப்பினான். பின்னாலே நான் உட்கார்ந்துகிட்டேன். காத்து முகத்திலே மோதி அறையுது. மகேஷ் காக்க..காக்க... படத்துல்ல வ்ர்ற ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளாம்.. பாட்டை ஹம் பண்ணிகிட்டே வந்தான். 

அப்புறம் மாப்பி..பொண்ணைப் பார்த்தியா.. இல்ல அப்பா பார்த்தாப் போதும்னு இருந்துட்டியா?"ன்னு மெதுவா வம்பை ஆரம்பிச்சேன்.

"மச்சான் இது என்னப் பேச்சு .. நான் பார்த்தப் பொண்ணைத் தான் அப்பா ஒ.கே. பண்ணார்ப்பா"

முதல் பந்துல்லேயே என் விக்கெட் விழுந்த எண்ணம் உண்டானது. சுதாரித்து அடுத்த கொக்கியைப் போட்டேன். "ஓ!! பொண்ணுப் பார்த்து உனக்கும் பிடிச்சு உங்க அப்பாவுக்கும் பிடிச்சு ஓ.கே ஆயிடுச்சு கரெக்டா"

"அட விவரம் இல்லாதவன் மாதிரி பேசுற.. நீ சென்னையிலே தானேப் பொறந்து வளந்த.. மச்சான்.. இது லவ் மெரேஜ்டா... புரியுதா. அஞ்சு வருஷமா ஓடுது.. ஏன்டா உனக்கு சென்னையிலே ஒரு கேர்ள் பிரண்ட் கூடவா இல்ல... அங்கே எல்லாம் அஞ்சு வயசு பையன் கூட அஞ்சு.. ஆறு கேர்ள் பிரண்ட்ஸ் புடிச்சுடுறாங்களாம் " என்றான். 

நான் மொத்தமாய் கவிழ்ந்து நின்றேன். உனக்கு இது வேணும்டா ... வேணும்.. என் ஆள்காட்டி விரலை என் முகத்திற்கு நேராக நீட்டி ஒரு முறைக்கு ரெண்டு முறை எஎன்னை நானே கேட்டுகிட்டேன்.

"ஜெயா MSc வரைக்கும் படிச்சுருக்கா.. நமக்கு BScக்கு மேல அந்த கல்விக் கடல்ல நீச்சல் அடிக்க இஷ்ட்டம் இல்ல..."

ஓஹோ..பொண்ணுப் பேர் ஜெயாவா ( இவனுங்க எல்லாம் லவ் பண்ணுறானுங்க நானும் தான் UG,PG,PGDIB,NIIT ம்ம்ம்ம் பன்னாட்டு  மென்பொருள்  கம்பெனி வேற.. ஒரு மண்ணுக்கும் லாயக்கு இல்ல...இருக்கட்டும் இந்த வாட்டி இந்த கவிதையை வைச்சு அப்படியே மாலாவை மடக்கிற வேண்டியது தான்.)

"இதோ இந்த மோதிரம்.. அவளுக்காக நான் காதலனா வாங்குன பரிசு... அதான் கல்யாணத்துக்கு முன்னாடி அவ விரல்ல இதை ஒரு காதலனாப் போட்டு அழகுப் பார்க்கணும்...அதான் இப்போ போயிட்டு இருக்கோம்.."

எனக்கு வயிறு எரிந்தது.. அட பாவிகளா.. கடைசியா இந்த வேலையும் என்னிய பாக்க வச்சிட்டிங்களாடா.. கடுப்பில் அமைதியா உட்கார்ந்திருந்தேன். ஒரு மாதிரி என்னைத் தேத்திகிட்டு அவன் கிட்டே " ஏன் மாப்பிள்ளை.. வந்ததிலந்து பாக்குறேன்.. அமிர்தலிங்கத்தை காணுமே? கடையிலே வேலை அதிகமோ" என்று கேட்டேன்.

"ஓ சார் உன் சிறு வயசுக் கூட்டாளி இல்ல... அவன் அவங்க அண்ணன் கூட சேந்து கவுந்தப்பாடி பக்கம் தனி கடை வச்சு ரெண்டு வருஷம் ஆச்சு. அவனுக்கு கல்யாணம் எல்லாம் ஆயிடுச்சு. நாளைக்கு கல்யாணத்துக்குக் கண்டிப்பா வருவான்.. அப்போ பாரு.."

வாழ்க்கை எவ்வளவு வேகமாப் போயிகிட்டு இருக்கு... ம்ம்ம் கையாலெ சட்டைப் பையில் இருந்த காகித்தை ஒரு தடவைத் தொட்டுப் பார்த்துகிட்டேன். மாலாவைப் பத்தி மகேஷ் கிட்டே கேட்டுர வேண்டியது தான்.
பைக் கோயில் பக்கம் போய் நின்னுச்சு.
"மச்சான் நீயும் வர்றியா.. என் ஜெயாவை உனக்கு அறிமுகம் பண்ணி வக்கிறேன்."
"எப்படியும் நாளைக்கி காலையிலே அறிமுகம் ஆகத்தானே போறா..இப்போ நீ போ... இன்னிக்குக் காதலியா இருக்க வரைக்கும் இனிமை எல்லாம்... நாளைக்கு மனைவியான பிறகு அவ்வளவு தான்.. SO U GO AND ENJOY " பெரிய மனுஷன் டயலாக் எல்லாம் அள்ளி விட்டேன். 

என்னவோ போங்க. எதிர் பொட்டிக் கடையிலே போயி சிகரெட் வாங்கி பத்த வச்சுட்டு அங்கே..போற வர்ற பொண்ணுங்கள்ல்ல என் மாலா இருக்கமாட்டாளான்னு நோட்டம் பாக்க ஆரம்பிச்சேன். சில பெண்கள் விரும்பிப் பார்த்தாங்க்.. ஆனா பலப் பெண்கள் நான் இருந்த பக்கம் திரும்பியேப் பாக்கல்ல. அரை மணி ஆச்சு.. முக்கா மணி ஆச்சு... ஒரு மணி ஆச்சு... என் உதட்டுல்ல ஆறாவது சிகரெட் புகைந்து ஓய்ந்தது...கடைக்காரர் வேற சினேகம் ஆயிட்டாரு. இருக்காதாப் பின்னே...அரைப் பாக்கெட் சிகரெட் வாங்கியிருக்கோம்ல்ல. 7வது சிகரெட்டைப் பத்த வைக்கப் போறேன். தோள்ல்ல ஒரு கை வந்து தட்டுது..புண்ணியவான் மகேஷ் தான். ஓரு வழியாக் கடலைக் கச்சேரியை முடிச்சுட்டுத் திரும்பி வந்துட்டான்.

'நாளையிலே இருந்து ஆயுசுக்கும் உன் வீட்டுல்ல ஜெயா டி.வி தான்.. இன்னிக்கும் இவ்வளவு நேரம் வறுக்கணுமா... எப்படியோ ஒரு வழியா வந்தியே.. போலாமா.." 7வது சிகரெட் புகையை வட்டம் வட்டமா விட்டுகிட்டு பைக் பார்த்து நடந்தேன்.

"மச்சான் ஒரு நிமிஷம் நில்டா..." நானும் நின்றேன்.

"என் ஜெயாவுக்கு உன்னைப் பார்க்கணுமாம்... இதோ வந்து இருக்காப் பாரு..."
நான் அவசரமா வாயிலிருந்து சிகரெட்டைக் கீழேப் போட்டுட்டுத் திரும்புனேன். என் முகத்தில் குறைஞ்சது ஒரு லிட்டர் அசடு வழிஞ்சு இருக்கும். ஒரு மாதிரியாச் சிரிச்சு... அவன் ஜெயாவுக்கு ஹாய் சொல்லுறதா இல்ல வணக்கம் சொல்லுறதான்னு குழம்பி எதுமே சொல்லாம மறுபடியும் ஒரு சிரிப்பு சிரிச்சு வச்சேன். 

அவ நல்ல அழகு. இந்த கை எடுத்து கும்பிடுற டைப்ன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி பொண்ணு. பையனுக்கு செம மச்சம். இவன் கலருக்கு அவ கலர்... விடுங்க அதெல்லாம் எனக்கு வேண்டாத வேலை... நம்ம மகேஷ் நல்லா இருக்கட்டும். அப்படியே யோசிச்சுகிட்டே நிக்கிறேன். கடைசியிலே அவன் ஜெயாவே எனக்கு ஹாய் சொல்லிட்டா.

"என்னை உங்களுக்குத் தெரியல்லியா..."ன்னு கேட்டாள். என் விழிகள் விரிந்தன.

ரொம்ப வருஷம் ஆச்சு நீங்க சம்மர் லீவுக்கு எங்க ஊருக்கு வந்து.. எப்படி இருக்கீங்க?
நீங்களும் இவங்க கடை அமிர்தலிங்கமும்.. சேர்ந்து பண்ண லூட்டி எல்லாம் உங்களுக்கு இப்போ ஞாபகம் இருக்கா?? போகட்டும் இந்த கவிதையாவது ஞாபகம் வருதா!!!

பொண்ணு பேர் மாலா.....
அவ ஜடை குரங்கு வாலா....
அவ கண்ணு கிரிக்கெட் பாலா..
அவங்க அப்பா பெரிய ஆளா...
ஜெயா கலகலன்னுச் சிரிச்சா.

"ம்ம் இந்த மெட்ராஸ்காரங்களே இப்படி தான் எல்லாத்தையும் மறந்துப் போயிடுறாங்கப்பா எனக்கு எதுவுமே மறக்கல்ல.. இன்னும் ஞாபகம் இருக்கு அதான் நீங்க வந்து இருக்கீங்கன்னு சொன்ன உடனேப் பாக்கணும்னு சொல்லி வந்தேன்.. ஆளே மாறிட்டீங்க.. சின்ன வயசுல்ல எவ்வளவு வால்த்தனம் பண்ணுவீங்க இப்போ அப்படியே அமைதியாட்டீங்க"
எனக்குச் சுத்தமாப் பேச்சே வர்றல்ல. சிரிப்பு கூட தவணையிலேத் தான் வந்துப் போச்சு.

"ஆமா இப்போவும் கவிதை எல்லாம் எழுதிறீங்களாமே மகேஷ் சொன்னார்..எனக்கு கவிதைன்னா ரொம்பப் பிடிக்கும்.. எதாவது கவிதை இருந்தாக் கொடுங்க.. படிக்கிறேன்"
என் கை சட்டைப் பைக்குப் போய் தொட்டுப் பார்த்து கொண்டது

"இப்போ எதுவும் இல்லை.. அப்புறம் கட்டாயமாத் தர்றேன்" முகத்தில் ஒரு அவஸ்தையான புன்னகையோடு சொன்னேன்.

"சரிங்க டைம் ஆச்சு வீட்டுல்லத் தேடப் போறாங்க. இத்தனை வருஷம் கழிச்சு உங்களைச் சந்திச்சதுல்ல ரொம்ப சந்தோஷம். நாளைக்குக் காலையிலே பாக்கலாம்" அவனுடைய ஜெயா பை சொல்லிட்டுப் போனா. 
அவப் போன பிறகு இவன் கிட்டேக் கேட்டேன்.
"பொண்ணோட முழு பேர் என்ன?" 

"ஜெய மாளவிக்கா, எனக்கு ஜெயா.. வீட்டுல்ல மாலா" அதைக் கேட்டதும் எனக்குள் எதோ உடைந்து விழுந்தது.

"மாப்பி... நீ முன்னாலே கிளம்பு நான் பின்னாலே வர்றேன்."

"டேய் எப்படி வருவே...?

"நான் பஸ் பிடிச்சு வந்துருவேன்...இப்போ எனக்குக் கோயிலுக்குப் போய் சாமி கும்பிடணும் போல இருக்கு.. அப்படியே கொஞ்ச நேரம் கோயில்ல உட்கார்ந்துட்டு வரணும் போல இருக்குடா..."

"ஓஹோ ஐயாவுக்கும் கல்யாண ஆசை வந்துடுச்சா. நல்லா வேண்டிக்க.... சீக்கிரமா வந்துடுடா"

சட்டைப் பையில் கவிதைப் பத்திரமா இருந்தது.. அந்த இடம் லேசா வலிச்சது...
பொட்டிக் கடைகாரரிடம்
 "இங்கே ஓயின் ஷாப்க்கு எந்த பக்கமாப் போகணும்? " என்று வழி கேட்டேன்.

(இந்தப் பதிவு முற்று பெறுகிறது.)

Tuesday, December 13, 2005

கதை3: நானும் என் கவிதையும் - பாகம் 2

ரயில் ஈரோடு நோக்கிக் கிளம்பிச்சு.. நான் Upper berthல்ல ஏறி படுத்துகிட்டேன். கூட வந்தவங்களல்ல யாரும் ரயில் சினேகம் பிடிக்கிற மாதிரி இல்ல.(அதுல்ல எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்).மல்லாக்கப் படுத்துகிட்டேன். கையிலே ஒரு குமுதம் வேற. பக்கத்துக்குப் பக்கம் புதுமை. படத்தைப் பார்த்துகிட்டே பக்கத்தைப் புரட்டுறேன். மீனா, ரோஜா எல்லாம் டாப்ல்ல இருந்த நேரம். சிம்ரன் புதுமுகமா அறிமுகமான படத்தை நடுப்பக்கத்திலேப் போட்டு இருந்தான். கொஞ்ச நேரத்துக்கு மாலா மேல இருந்தக் கவனம் எல்லாம் சிம்ரன் பக்கம் திரும்பிடுச்சு. தூக்கம் லேசாக் கண்ணை இழுத்துப் போட்டுச்சு..அப்படியேத் தூங்கிப் போயிட்டேன். பொழுது விடியும் போது ரயில் காவேரி ஆத்து பாலத்து மேலப் போயிட்டு இருக்கு. அடுத்த அஞ்சு நிமிஷத்துல்ல ஈரோடு சந்திப்பு பெயர் பலகை கண்ணுல்லப் பட்டுடும். அப்போ காவிரி ஆத்துல்ல அதிகம் தண்ணி இல்ல. ஆத்துக்குள்ளே அங்க அங்க சின்னசின்னதா ஒரு நாலு அஞ்சு சேப்பாக்கங்கள் கண்ணுக்குத் தெரிஞ்சது. அதுல்ல வருங்கால சச்சின், ஷேவாக் எல்லாம் கால்சட்டைப் போட்டுகிட்டு மேல்சட்டை போடாம கையிலே கிரிக்கெட் மட்டையோடப் பட்டையைக் கிளப்பிக் கிட்டு இருந்தாங்க. ஸ்டேஷன் நெருங்கவும் டக்குன்னு நம்ம முகயழகு ஞாபகம் வந்துடுச்சு. ஆஹா ஏற்கனவே பரட்டைன்னு பேர் வாங்குன தலைக்குச் சொந்தக்காரன் நான். அவசரமா சீப்பு எடுத்துகிட்டு கண்ணாடித் தேடிகிட்டு ஓடுனேன். என் நேரம் என்னை மாதிரியே 7- 8 பேர் கண்ணாடி முன்னாடி கியூ கட்டி நிக்க கடுப்பாகிப் போயிட்டேன். தலையைக் கலைச்சு விட்டுட்டு அதுவும் ஒரு மாதிரி ஸ்டைல் தான்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டே ஈரோடு ரயில் நிலைய வாசல் வரைக்கும் வந்து சேர்ந்தேன். ஈரோடு அதிகம் மாறவில்லை. ஸ்டேஷனுக்கு எதிரெ புதுசா ஒரு தியேட்டர் கட்டியிருந்தது. ஒரு பிரபலமான நடிகர் விலைக்கு வாங்கிக் கட்டியிருக்கதா எங்களை கூப்பிட வந்திருந்த மாமா பையன் "மாப்பிள்ளை" மகேஷ் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். மாமா புதுசா லேன்சர் கார் வாங்கி இருந்ததாக் கேள்விப்பட்டேன். மளிகை கடையிலெ நல்ல வருமானம். ஆனா எங்களை கூட்டிட்டுப் போக மகேஷ் பழைய ஓட்டை அம்பாசிடரைத் தான் கொண்டு வந்திருந்தான். கஞ்ச மாமன் இன்னும் மாறல்ல. முன் சீட்டிலே ஏறி மகேஷ் பக்கத்துல்ல உட்கார்ந்துகிட்டேன். மாப்பிள்ளைக் களை மகேஷ் முகத்துல்ல தாண்டவம் ஆடிக்கிடு இருந்துச்சு. பையன் செம குஷியா இருந்தான். பின் சீட்டிலெ பெரியவங்க இருந்ததாலே அப்போதைக்கு வாய் கொடுக்க வேணாம்னு அமைதியா இருந்தேன். கண்டிப்பா அவன் கிட்டே அவன் பொண்ணுப் பாக்க போனக் கதை எல்லாம் கேட்டுக் கலாய்க்கணும் என் மனசுக்குள்ளே ஒரு தீர்மானம் போட்டுகிட்டேன். கார் கதவு வேற கழண்டு கீழே விழுந்துடுமோன்னு பயந்துகிட்டே உட்கார்ந்து இருந்தேன். நல்ல வேளை அப்படி எதுவும் எக்கு தப்பு ஆகுறதுக்குள்ளே கார் மாமா ஊருக்குள்ளேப் போயிடுச்சு. ஊருக்குள்ளேக் கார் நுழையும் போது எதிர்க்க தாவணி உடுத்துன ஒரு கிளிக் கூட்டம் வந்துச்சு... தலையைக் குனிஞ்சுப் போற மாதிரியே இருந்துச்சு.. ஆனா நல்லா கவனிச்சுப் பார்த்தாக் கண்ணை மட்டும் ஒரு ஆங்கிளாத் திருப்பிக் கார் பக்கம் லுக் விட்டுட்டுப் போறதுத் தெரிஞ்சுது. பசங்க சைட் அடிக்கறதுக்கும் பொண்ணுங்க லுக் விடுறதுக்கும் என்ன வித்தியாசம்டா சாமி. இயற்கை அளித்த இனிய வரம். அந்த வருணனை இருக்கட்டும். நம்ம கதைக்கு வருவோம். அந்த க் கிளிக் கூட்டத்துல்ல நம்ம பஞ்சவர்ணக் கிளி இருக்குமோன்னு மனசுக்குள்ளே ஒரு துடிதுடிப்பு.. ஒரு படப்படப்பு. எப்படி தெரிஞ்சுக்கறது..மகேஷ விட்டா யாரு இருக்கா விவரம் சொல்லுறதுக்கு.. கேட்போம் மெதுவாக் கேட்போம்ன்னு முடிவு பண்ணிகிட்டேன். கார் மாமா வீட்டு வாசலில் போய் நின்னுச்சு... அத்தை தான் முதல்ல கண்ணுல்ல பட்டாங்க..வாங்க வாங்கன்னு வரவேற்பு எல்லாம் பலமாத் தான் இருந்துச்சு. மாமா எங்கேயோ கல்யாண வேலையாப் போயிருக்கதா அத்தைச் சொல்லித் தெரிஞ்சுது. இவ்வளவு நேரம் நாங்கள் வருவோம் என மாமாக் காத்திருந்தாய் அத்தைச் சொன்னதில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரு சின்ன சந்தோஷம். உறவுகள் எல்லா விதத்துல்லயும் மரியாதையை எதிர்ப்பார்க்கும் என்னப் பண்ணுறது? அட மறுபடியும் நம்மக் கதைக்கு வருவோம் வாங்க. விடிஞ்சாக் கல்யாணம். வீடேப் பளபளன்னு அலங்காரத்துல்ல ஜொலிச்சுது. மாமா வீடு ரொம்ப மாறி இருந்தது. புதுசா 29'' சோனி டி.வி.. கூடத்திலே இருந்த ஊஞ்சலைக் காணும். அதுக்குப் பதிலா மூணு பெரிய சைஸ் சோபா செட் வந்திருந்தது. மாடி புதுசாக் கட்டியிருந்தாங்க. அந்த கிரகப்பிரவேசத்துக்கு நான் வர்றல்ல. வீட்டை நல்லாச் சுத்திப் பார்த்தேன். பின்னாடி தோட்டம் மட்டும் அதிகமா மாறல்ல. அதே மாமரம், தென்னை மரம், கொய்யா மரம்... எல்லாம் நல்லா வளர்ந்து இருந்துச்சு.உள்ளுக்குள்ளே என்னமோ ஒரு நல்ல உணர்வு.. அது என்னன்னுச் சரியா எழுத வர்றல்ல ஆனா ரொம்ப நல்லா இருந்துச்சு.. எனக்கு மாடியில் அறை ஒதுக்கி இருந்தார்கள். குளிச்சு முடிச்சுட்டு சாப்பிட உட்கார்ந்தேன். வகை வகையா வச்சு இருந்தாங்க இலையிலே. ஒரு கட்டு கட்டி முடிச்சேன். கண்ணு அப்படியே சொக்க ஆரம்பிச்சுது... கட்டில்லே கவுந்தடிச்சுத் தூங்க் ஆரமிச்சேன் ... தூக்கம்ன்னா தூக்கம் அப்படி ஒரு தூக்கம். நிறுத்தமே இல்லாம் நாலு மணி வரைக்கும் தூங்கி இருக்கேன்னாப் பாருங்க. நாலு மணிக்கு மகேஷ் வந்து எழுப்பி மத்தியானச் சாப்பாட்டை நீட்டினான். இந்த தடவை உஷாரா அளவோடத் தான் சாப்பிடணும்ன்னு முடிவு பண்ணேன். ஆனா விதி... எனக்கு பிடிச்ச ஐட்டமாப் போட்டுத் தாக்கியிருந்தாங்க... ம்ம் மெனுவை எல்லாம் சொல்லி உங்களை நோகடிக்க மாட்டேன். மூக்கு பிடிக்க முக்கிட்டு மறுபடியும் ஒரு குளியலைப் போட்டேன். மகேஷ் எனக்காக காத்துகிட்டு இருந்தான். இனி தான் தமாஷே ஆரம்பம் ஆகப்போகுது...

(இதன் தொடர்ச்சியை நானும் என் கவிதையும் - பகுதி 3ல் படித்துக் கருத்து பதியுங்கள் - நன்றி)

Friday, December 09, 2005

கதை3: நானும் என் கவிதையும் - பாகம் 1

அட அட விடாது பெய்யுது மழை....சூடா ஒரு கப் டீ அப்புறம் ரெண்டு பஜ்ஜி உள்ளே தள்ளினா எப்படி இருக்கும்... நல்லா இழுத்து போர்த்திக்கிட்டு சி.டியிலே ராஜாவோட ...ராஜ ராஜ சோழன் நான்.. போட்டு விடணும். ம்ம்ம் மண்ணிலே அதான் சொர்க்கம்...இப்போல்லாம் டக்கு டக்குன்னு கவிதை வருது... வார்த்தை விரல் நுனியிலேயே நிக்குது. நினைச்சாப் போதும் எழுத முடியுது... எனக்கும் கவிதை எழுத வரும்ன்னு எப்போ தெரிய வந்துச்சு...ஆங் விடுமுறைக்கு ஈரோடு போன போது...டீ கடையிலே ஒரு பாட்டு... தட்டிப் பார்ட்தேன் கொட்டாங்குச்சி...என் ஆசைத் தங்கச்சி... இப்படி சி..சின்னு ரைமிங்கா முடியற மாதிரி பாட்டு...கேட்கறதுக்கே பயங்கர விறுவிறுப்பா இருந்துச்சு...அப்புறமென்ன...பாட்டு மேல ஒரு தீராத ஆர்வம் வந்துறுச்சு...
கூடவே அந்த ஆர்வத்துல்ல கொஞ்சம் கோளாறும் ஏற்பட்டுப் போச்சு...அதுக்கு அவன் தான் முழு முதல் காரணம். அவன் பேர் அமிர்தலிங்கம். தீவிரமான் ரஜினி ரசிகன். எனக்க்கு முதன் முதலா முன் நெற்றி முடியைக் கோதி விட சொல்லிக் கொடுத்தவன் அவன் தான். எனக்கு ஒரு 8 வயசா இருக்கும் போதுல்லருந்து அவன் நல்ல நண்பன். கோடை விடுமுறை நண்பன். அவன் எங்க மாமா கடையிலேத் தான் வேலைச் செய்ஞ்சான். எங்க மாமா ஈரோடு பக்கம் ஒரு ஊருல்ல மளிகை கடை வச்சு இருக்கார். நல்ல சுறுசுறுப்பான பையன். முக்கா டிரவுசர்... அஞ்சுக்கு மூணு பட்டன் போடத சட்டை....எப்பவும் பளிச்சுன்னு ஒரு சிரிப்பு... தெறிச்சு விழுவுற நக்கல் பேச்சு... இதெல்லாம் அவன் அடையாளம். என்னை விட மூணு. நாலு வருஷம் பெரியவன். ஆனா எனக்கு செம தோஸ்து. பக்கத்து டீ கடையிலே ஓடுற பாட்டு தான் எனக்கு முதல் கவிதை பாடம்.
அந்த கடை தான் பள்ளி கூடம்.. எங்க மாமாக் கடை அரிசி மூட்டை தான் பெஞ்ச்.. வாலி.. வைரமுத்து எல்லாம் அப்போ எனக்கு தெரியாது.. ஒரு பேப்பர் எடுத்துக்குவேன்.. பில் போடுற பேனா தான் எனக்கு எழுத்தாணி.. யோசிப்பேன்...யோசிப்பேன்... மணிக்கணக்கா...யோசிப்பேன். அப்புறம் எழுதுவேன் பாருங்க...

பொண்ணு பேர் மாலா.....
அவ ஜடை குரங்கு வாலா....
அவ கண்ணு கிரிக்கெட் பாலா..
அவங்க அப்பா பெரிய ஆளா...

இது எப்ப்டி இருக்கு ?? என்பேன் நான்.... அவன் ஆஹா.. ஓஹோ... என்பான்...
9வது விடுமுறை இப்படியேப் போச்சு..

மாலா ஆரிய மாலா DANCE...
அதுக்கு நீயும் நானும் FANS...
நம்ம எல்லாம் GENTLEMANS...(அப்போவே எனக்கு இங்கீலிஷ் புலமை ஜாஸ்த்தி)
ஓட்டுவோம்டா சூப்பரா VANS...

இது மொத்தமும் மாலாவோட அப்பாவுக்கு தெரியவர.. அவங்க அப்பா அந்த ஊர் பஞ்சாயத்து போர்ட் தலைவராம்.எங்க மாமாவுக்கு மிரட்டல் வர .. எனக்கு உருட்டல் வந்து நான் ஈரோட்டிலிருந்து சென்னைக்கு உடனே உருட்டப்பட்டேன்.
" தம்பி, இதெல்லாம் கிராமம். உங்க மெட்ராஸ் இல்லை.. இங்கே எல்லாம் அடக்கம் தேவை.." மாமாவின் பாச மொழிகள்.
"சின்ன பையன் எதோ விளையாட்டா செஞ்சுட்டான்.. விடுண்ணா..." என் அம்மாவின் சிபாரிசு எடுப்படவில்லை. "ம்ம் இவனா .. விவரமான பையன்.. இங்கேயிருந்தாக் கடைப் பசங்களையும் கெடுத்துடுவான்.. கூட்டிட்டு கிளம்பு" அவசர ஆணை. அந்த நாள் என் டைரியில் குறிச்சு வச்சுகிட்டேன். மாமனா நீ.. என் மாமாவிற்கும் எனக்கும் ஜென்மப் பகைக்கான வித்துப் போடப்பட்டது.. வாய்யா.. வா.. எப்போவது மெட்ராஸ்க்கு வருவெ இல்ல அப்போ உன்னைப் பார்த்துக்கிறேன். மன்சுக்குள் சபதம் போட்டுக் கொண்டேன். இதுக்கெல்லாம் காரணமான என் ரசிக மன்றத் தலைவனும் மற்றும் ஒரே உறுப்பினனும் ஆன அமிர்த்லிங்கம்..எதுவுமே தெரியாத்துப் போல் அரை கிலோ பருப்பை அதே மாலாவுக்குக் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான். எனக்கு கோபம் கிலோ கணக்கில் வந்தது... சரி அவன் பாவம்..மாமாவுக்குப் பயப்படுறான்.. என் கோபம் எல்லாம் அந்த மாலா மீது தான். நான் தலைக் குனிந்து நின்னேன்.. ஒரு கட்டத்துல்ல தலையை நிமிர்த்தி பார்ட்க்கிறேன்.. அவ முறைச்சு பார்ப்பான்னு நெனைச்சா.. அவ எனனைப் பார்த்து சுளுக்குனு சிரிக்கிறா...எனக்கு ஒரே அசிங்கமாப் போச்சு.. இப்போ என் கோபம் டன் கணக்கிலே ஏறி போச்சு...

அம்மாaaaaaaaaaaaaa... அந்த ஆளு தான் போ.. போன்னு சொல்லுறாரு இல்ல...வா போலாம்... மாமானாம் மாமன்...வாம்மா " என்ற என் குரல் எனக்கே கொஞ்சம் அந்நியமாய் தான் பட்டது.. மாலா இப்போ சிரிக்கவில்லை.. எனக்கு உள்ளுக்குள்ளேப் பயங்கர சந்தோஷம்...மாமா மூஞ்சி.. இடி விழுந்த கரண்ட் கம்பம் மாதிரி கருத்துப் போச்சு... எனக்கு அது இன்னும் சந்தோஷமாப் போச்சு.

அந்த கோடை விடுமுறை முடிஞ்சு கிட்டத்தட்ட 12 வருஷம் ஆச்சு...

எனக்கு இப்போ நல்லாவேக் கவிதை எழுத வருது. கல்லூரியிலே நிறைய போட்டிகள்ல்லே முதல் பரிசு வாங்கியிருக்கேன். என் கவிதைக்கு அங்கீகாரமாக் கம்பன் கழகத்தில் கூடப் பரிசு வாங்கியாச்சு.. நானும் இப்போ ஒரு கவிஞன். புதுக்கவிதையிலே புது விதி செய்யும் முயற்சியில் நான் இருந்த நேரம்.

"டேய்... நம்ம மகேஷ் கல்யாணம்டா..கண்டிப்பா நாம எல்லோரும் போகணும்.. நீயும் கண்டிப்பா வரணும்..என்னிக்கோ மாமாக் கூடச் சண்டைப் போட்டதுக்கு இன்னிக்கும் அடம் பிடிச்சா எப்படி? நீ கண்டிப்பா வர்ற.. உங்க அப்பா உனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துட்டாரு.." அம்மாவின் அன்பு கட்டளை.

மீற முடியாது. நான் கொஞ்சம் அம்மா பிள்ளை. சரி என்று தலை ஆட்டினேன். அந்த நிமிஷத்துல்ல இருந்து பழசு எல்லாம் பட்டுன்னு ஞாபகத்துகு வருது. டீ கடை.. அரிசி மூட்டை பெஞ்ச்... கொட்டாங்குச்சி பாட்டு...பில் பேனா.. பழைய பேப்பர்... என் முதல் கவிதை...( வரிகள் லேசாத் தான் ஞாபகம்.. சிலது இப்போ நானாச் சேர்த்துக்கிட்டது... அப்படீன்னா அப்போ எழுதுனது இதை விட மோசமாத் தான் இர்ந்து இருக்கும்ன்னு தெரிஞ்சிக்கோங்க)...
அமிர்தலிங்கம்.. அவன் கடை கதவுல்லே ஒட்டி வச்சு இருந்த தலைவரோட சிவா படத்துக் குதிரை ஸ்டில்....
அவன் என் கவிதைக்குக் கைததட்டி என்னை உசுப்பு ஏத்தியது..
அப்புறம் மாலா....மேல யோசிக்கிறேன்...முடியல்ல.. ம்ம்மாலா இப்போ எப்படி இருப்பா? அவக் கண்ணு இப்போ எப்படி இருக்கும்?

நினைப்பு அவளையேச் சுத்திச் சுத்தி வந்தது... பாவாடைத் தாவணிப் போட்டுக் குத்துவிளக்கு மாதிரி இருப்பாளோ இல்லை சுடிதார் போட்டுத் தூக்கலா இருப்பாளோ? (சென்னையிலே JEANS பார்த்துப் பார்த்துச் சலிச்சுப் போச்சு...) மனசுக்குள்ளே ஒரு சுகமானத் தவிப்பு... என்னையும் அறியாமல் மனசு ரெக்கை கட்டிப் பறக்க ஆரம்பிச்சுது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிக்குறேன்.. என் சட்டைப் பைக்குக்குள் அவளுக்காக எழுதுன கவிதை... இந்த கவிதையை அவளுக்குக் காட்டணும்.. இதோ ரயில் வந்துடுச்சு... மீதிக் கதையை ஊருக்குப் போயிட்டு வந்துச் சொல்லுறேன்... கொஞ்சம் பொறுத்துக்க்ங்க்....

(இதன் தொடர்ச்சியை நானும் என் கவிதையும் - பகுதி 2ல் படித்துக் கருத்து பதியுங்கள் - நன்றி)

நிறைவுப் பகுதிக்கு இங்கே நானும் என் கவிதையும் - பாகம் 3 இங்கேச் சுட்டவும்

Tuesday, December 06, 2005

கதை2: ஒரு சாரல் பொழுது...

சென்னையில் இப்போ ஒரே மழை...
ஆபிஸ்ல்ல அவன் தான் எனக்கு ரொம்ப க்ளோஸ் பிரண்ட்.
கையிலே சிகரெட் புகைய வானம் பார்த்தவன் மழையை ரசிக்க ஆரம்பிச்சான்.சின்ன பையன் மாதிரி மழையைக் கையிலே பிடிச்சு என் முகத்தில் அடிச்சான்.
ச்சே என்னடா ஆச்சு உனக்கு இப்படி பிஹேவ் பண்ணுறே.., டோன்ட் யூ கேர் அபௌட் வாட் அதர்ஸ் வில் திங்க் அபௌட் யூ. ஸ்டாப் ஆக்டிங் கிட்டிஷ் டியுட்...
என் கார்பரேட் உணர்வு ஆங்கிலத்தில் கொப்பளித்தது..
அவன் சிரித்தான்... மச்சி..படம் போலாமா என்றான்.
மாமூ இன்னிக்கு வீக் டே..வேலைக்கு ஆகாது என்று தப்பிக்க நினைத்தேன்.
ஈவீனிங் ஷோ சத்யம் காம்ப்ளக்ஸ் போலாம் வா...படம் நல்லா இல்லாட்டியும் படம் பாக்க வர்ற கூட்டம் நல்லா இருக்கும்..இன்னிக்கு மழை வேற பெய்யுது என்று கண்ணடித்தான். எனக்கும் ஆசை மெல்ல துளிர் விட்டது. கஜினி போலாமா...அசின் பின்னி பெடல் எடுத்து இருக்காளாம்...என் பங்குக்க்ய் நானும் உற்சாகம் அடைந்தேன்.

இருவரும் பல்ஸரில் சீறி புறபட்டோம். மழை மெல்ல மெல்லிசை பொழிந்தது. அங்கே ஒண்ணு இங்கே ஒண்ணுன்னு தியேட்டரில் கூட்டம் கொஞ்சம் கம்மி. எங்கள் பிகர் பார்க்கும் கனவு பஞ்சர் ஆனது. போஸ்ட்டரில் அசினும் நயந்தாராவும் பல லட்சம் வாங்கிக் கொண்டு பூவாய் சிரித்தனர்.

அப்படியும் கஜினி படம் ஹவுஸ்புல்!!! அடாது மழை பெய்தாலும் தமிழன் விடாது படம் பார்ப்பான். ஷோவுக்கு இன்னும் 20 நிமிஷம் இருந்துச்சு. பக்கத்துல்ல இன்னொரு படம்... பேரு மழை...அட சீசனுக்கு ஏத்த படம் போல...அவன் கேட்டான் ..யாருடா அதுல்லே? ஷ்ரேயான்னு புதுப் பொண்ணு..
சிவாஜில்ல உங்க தலைவருக்கு ஜோடின்னு பேசிக்கிறாங்க... நனைய நனைய நடிச்சுருக்காளாம் போலாமா?...என் மனசு கும்மி அடித்தது...சரி மாப்பி ...ஆனா டிக்கெட் செலவு உன்னோடது ஒகேவா?
அவன் அதற்கும் சிரித்தான். படம் பார்த்தோம் ... வெளியே வந்தோம்...

பணத்தை தண்ணியா செலவழிப்பாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன்..இன்னைக்கு தான் பார்த்தேன்..படமாம் இல்லை படம்...கிறுக்குத்தனமா இல்ல இருக்கு.. இப்படி ஒருத்தி மழையிலே பப்ளிக்கா நனைவாளா...? கேட்கிறவன் கெனையா இருந்தா காபித் தூளைக் கூட கோல்ட் பிஸ்கட் விலைச் சொல்லுவாங்கப் போல இருக்குப்பா...
அவன் சிரித்தான்.
மாமூ என்ன சிரிப்பு... இந்த படத்தைப் பார்த்ததுக்கு ஒரு நைன்டி போட்டுட்டு ரூம்ல்ல மல்லாக்கப் படுத்து கிடந்தா கனவுல்லேக் காசு வாங்காமலே இந்த குட்டி ஒரு டாண்ஸ் போட்டுருப்பா...ஒரு 120 ரூபா தண்டமாப் போச்சு...

மச்சான் சாப்பிட்டுப் போயிருவோம்...என்றான் அவன்.... மழை வலுத்தது. கொட்டு கொட்டு என்று கொட்டியது. கூட ஆட யாரும் இல்லை என்ற ஏக்கத்தில் இட்லியை கிறக்கமாய் உள்ளே தள்ளினேன். ஆமா யாரது நயனிகா.... நம்ம ஆபிஸ்ல்ல அந்த பெயர்ல்ல யாருமில்லையே நான் கேட்க சிரிப்பை குறைத்து அவன் என்னைப் பார்த்தான்.

நயனிகா பெயரு உனக்கு எப்படி தெரியும் என்றான்.

மாப்பு உன் மொபைல்ல பார்த்தேன். பேர் புதுசா இருந்துச்சு அதான் கேட்டேன்.

நயனிகா, ஷி வாஸ் இன் காலேஜ் வித் மி...இப்போ கல்யாணம் ஆகி ஹைதராபாத்ல்லே இருக்கா இன்னும் 2 வீக்ஸ்லே யு.எஸ் போறா.. ஹஸ்பெண்ட் ஒரக்கிள்ல்ல பெரிய போஸிஷனாம், இங்கே டெலிவரிக்கு வந்து இருக்கா..

அட அட ஒரு கேள்விக்கு எவ்வளவு பதில்? பழைய பனையோலையில் ஆட்டோகிராபா!!! நம்ம பிராண்ட் நக்கல் தொடர்ந்தது. எனக்கு தெரியல்ல பிரண்ட் ஒருத்தன் அதான் நம்ம சுப்பு ஹதராபாத்ல்ல அவளை பார்த்துப் பேசியிருக்கான். அவன் தான் அவ நம்பர் வாங்கி கொடுத்தான்...அவ இப்போ சந்தோஷமா இருக்காளாம் ஹப்பி, வீடு, குழந்தைன்னு...

தம்பி இட்லிக்கு கொஞ்சம் சாம்பார் ஊத்துப்பா...மாப்பு.. நீ சொல்லுடா.. போன் பண்ணி ஒரு ஹாய் சொல்லு...அப்படியே அவ ஹப்பி மெயில் ஐடி கேளு... நம்ம ரெஸ்யூம் அனுப்பி வைப்போம். அப்படியே பிளைட் ஏறுவோம்டா.
அவன் சிரித்தான்.

ரூம்க்கு போய் கைலி மாற்றி கொண்டோம். அவன் மழை பார்ப்பதை நிறுத்தவில்லை. மாமூ என்னடா மழையை சைட் அடிக்கிறே? ஷ்ரேயா ஞாபகமா? அவன் சிரித்தான்.

இல்லைடா நயனிகா ஞாபகம்..அவளுக்கும் மழை பிடிக்கும். மழையிலே நனைய ரொம்ப பிடிக்கும். shes truly madly deeply crazy about rain...மழை பெய்ஞ்சா அட்லீஸ்ட் 30 செகண்ட்ஸாவது அதுல்ல நனையுணும்னு சொல்லுவா...
எனக்கு தூக்கம் போயேப் போச்சு.
என் கூட பி.ஈ படிச்சா... கோயம்புத்தூர் ஆர்.எஸ் புரம் தான் அவ வீடு.. அவ குஜராத்தி ஆனா நல்லா தமிழ் பேசுவா...இளையராஜான்னா உயிர்.. வைரமுத்து கவிதை எல்லாம் எனனைக் கேட்டு கேட்டுப் படிப்பா... நல்லா கோலம் போடுவா... எனக்கு ஹோலின்னு ஒரு பெஸ்டிவல் இருக்குரதே அவ சொல்லித் தான் தெரியும்...அவளூக்கு அப்போவே டிரைவிங் தெரியும்....பெரிய இடம்.. அளவா சாப்பிடுவா... ஜுஸ் ...பிரஷ் ஜுஸ்ன்னா உயிரை விடுவா....
அவ மத்தியான டிப்பன் பாக்ஸ்ல்ல எனக்கு எப்பவும் ரெண்டு சப்பாத்தி இருக்கும்.. புரியாமலே அவளுக்காக் அவ கூட குச் குச் ஹோத்தா ஹேய் அஞ்சு வாட்டி பார்த்து இருக்கேன்...ஒவ்வொரு வாட்டியும் அவ தான் கதைச் சொல்லுவா...சொன்னதையேத் திரும்பச் சொன்னாலும் அவ குரல்ல அதைக் கேட்கணும்..அப்படி ஒரு ஆனந்தம்.
முக்கியமா மழை பெய்ஞ்சா என் கையிலே குடை இருந்தா கூட அதை மடக்கி வைச்சுடுவா. "கமெஷ்.. நமக்குன்னு கடவுள் கொடுக்கிற ஆசி மழை..அதுக்கு ஒளியலாமா? அப்படின்னு கேட்பா..கை விரிச்சி முகம் மேல மழை துளி பட்டு தெறிக்க சின்ன பொண்ணு மாதிரி சிரிப்பா..அந்த சிரிப்பைப் பார்த்துகிட்டேச் செத்துப் போயிடாலாம்ன்னு தோணும்டா

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நான் கொடுத்த ரியக்ஷன்.

பைனல் இயர் ஊட்டி டிரிப் போனோம். அங்கெ சிக்ஸ்த் மைல்லே இறங்கி நிக்குறோம். சுத்தி புல்வெளி. அதுல்ல வெள்ளை சுடியிலே ஒரு வெண்புறா மாதிரி பறக்கிறா துள்ளித் துள்ளி ஓடுறா...
காமேஷ் இந்த மாதிரி இடம் பார்க்கும் போது தான் கடவுள் நம்பிக்கை ஜாஸ்தி ஆகுது.Theres God.... Thank u god nnu சத்தமாக் கத்தற எக்கோ கேட்குது.. என்னையும் பார்த்து நீயும் தாங்க் யூ சொல்லுங்கறா... நான் சொல்ல நினைச்ச 'யூ' வேற... இருந்தாலும் அவ சொல்லச் சொன்னான்னு தாங்க் யூ சொன்னேன்..

திடிரென்னு பேய் மழை பிடிச்சுகிச்சு...அவ நனைய ஆரம்பிச்சுட்டா...she was enjoying rain as usual எல்லோரும் பஸ் பார்த்து ஒட ஆரம்பிச்சோம்... நானும் தான் .. அவ கேஸுவலா நடந்து வந்தா...தலைமுடி அந்த ஈரமான காற்றிலே லேசா ஆட..மார்புகள் மறைய கைக் கட்டிகிட்டு...அதையும் மீறி மார்புகள் திமிற...அழகா அடியெடுத்து வச்சு...she was walking...வெள்ளை டிரஸ்ல்லே ஒரு ஏஞ்சல் நடந்து வந்ததை அன்னிக்குத் தான் லைப்ல்ல பார்த்தேன்...may be that was the first and last time...அசந்துப் போயிட்டேன் அவ அழகைப் பார்த்து...டக்குன்னு பார்த்தா ஒட்டு மொத்த பசங்களும் அவளையேப் பார்த்துட்டு இருக்காங்க...மழை... வெள்ளை உடை...அதிலும் அப்படி ஒரு தேவதை மாதிரி பொண்ணு.... குறுகுறுன்னு பசங்க பேசிகிட்டாங்க....சில வார்த்தைகளை இங்கே சொல்ல முடியாது... எனக்கு ஒரு மாதிரி ஆகிப் போச்சு..
பஸ்ல்ல எனக்கு பக்கத்து சீட்டில்ல தான் உட்கார்ந்தா...அவளோட வாசம் வேற என்னை அப்படியே உலுக்கி போட்டுருச்சு... நான் மௌனமா இருந்தேன்... உள்ளுக்குளே புகைந்தேன்...
காமேஷ் மழை எவ்வளவு அழகு..அதுல்ல நனையாம இப்படி பஸ்க்குள்ளே இருக்கீயே...உனக்கு ரசனையே இல்லப்பா என்றாள்.
ஆமா ஆமா இப்படி நீ நனைஞ்சா ஊரே வாய் பொளந்து வேடிக்கை பார்க்கும்... நான் நனைஞ்சா யார் பார்ப்பா?.. வெடுக்குன்னு வார்த்தை தெறித்து போக என் உதட்டைக் கடித்தேன். அவ முகம் பட்டுன்னு சுருங்கிப் போச்சு...
காமேஷ் என்ன சொன்னே? ஊரு பார்க்கட்டும்... நீயுமா பார்த்த?
எனக்கு என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியல்ல. என்னையே முறைச்சுப் பார்த்துகிட்டு இருந்தா...நான் எதுவுமே பேசாமலே இருந்தேன்...'ப்ச்'ன்னு உதட்டைப் பிதுக்கினவ அப்படியே முகத்தை வேற பக்கமாத் திருப்பிக்கிட்டா... எனக்கு தூக்கி வாரிப் போட்டது.. என் மண்டையிலே 1000 இடி விழுந்த மாதிரி இருந்துச்சு...

college exams முடிஞ்சது...farewell ஆச்சு...எனக்கு அவ கிட்டே ...அவ முகம் பார்க்கவே தைரியம் வரலே..இதோ ஆச்சு அஞ்சு வருஷம்...எனக்குன்னு ஒரு வேலை...லைப் போகுது...
மழை வரும் போது எல்லாம் எனக்கு அவ ஞாபகம் வரும். கூடவே கோபம் வரும்... என்னப் பெருசாத் தப்பு பண்ணிட்டேன்...ஒரு ஆண்பிள்ளைன்னு இருந்தா ஒரு பெண்ணைப் பார்த்து ரசிக்கிறது தப்பா...அதுக்குன்னு அப்படியா வெட்டிகிட்டுப் போறதுன்னு... கோபம் பொங்கி பொங்கி வரும் அப்புறம் அப்படியே மறந்துப் போயிடுவேன்...
டேய் மாப்பு.. மூணு வருஷமா நான் உன் ரூம் மேட்...ஒரு 300 தடவை ஒண்ணா மழையைப் பார்த்து இருப்போம்...அப்போ எல்லாம் சொல்லாத கதையை இப்போ ஏன்டா சொன்னே?...

சுப்பு சொன்னான்.. கிளம்பும் போது அவ பையன் பேர் என்னன்னுக் கேட்டானாம்...காமேஷ்ன்னு சொன்னாளாம்...சொல்லும் போது அவ கண்ணு லேசா கலங்கிப் போச்சாம்...

இப்போது அவன் சிரிக்கவில்லை..அவன் அந்த பக்கம் திரும்பி நின்றான்...அவன் முகம் பார்க்க என்னால் முடியவில்லை...

கவி1: ஒரு கோப்பைக் கவிதைகள்

ஆட்டோகிராப்

யார் யாரோ நீட்டிய ஆட்டோகிராப் புத்தகத்தில்
என்ன என்னவோ எழுதி...
கையெழுத்து போட்டு கொடுத்தாய்
நான் நீட்டிய புத்தகத்தில் மட்டும்
இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு கொடுத்தாய்..

_______________________________________________

எனக்குப் பிடித்த மழை..

குளித்து முடித்த
உன் கூந்தல் மேகத்தில் இருந்து
தெறித்து விழுந்து
என் முகம் நனைக்கும்
அந்த சில நொடி மழை...

_____________________________________________________

ஞாபகம்...

மழையிலே அழுதா..
எனக்கு தெரியாதா..
கண்ணைப் பார்...
கண்ணீர் துடைக்க நீ கொடுத்த...
கைக்குட்டையில்..பத்திரமாய்...
இன்னும் உன் விரல் வாசனை...

__________________________________________________________

கோலங்கள்

ஊரே...
மழை வரப் போகுதுன்னு
ஆரவாரம் செய்ய...
என் முகத்தில் மட்டும் கவலை ரேகைகள்...
உன் வீட்டு வாசலில்
நீ போட்ட வண்ண பூக்கோலம்...

கதை1: மௌனம் பேசிய பொழுது...

ஒரு மாலை இளவெயில் நேரம்... ராகா.காம் இல் பாட்டு ஓடிக்கிட்டு இருந்துச்சு...
ஆபிஸ் லஞ்ச் டைம். லஞ்ச்க்கு பெருசா ஒண்ணும் இல்லை. வழக்கமான் கார குழம்பு சோறும் ரெண்டு பொரிச்ச அப்பளமும் சாப்பிட்டுட்டு காலர நடந்து என் சீட்டுக்கு வந்து உட்கார்ந்தேன். நோக்கியா 6600 மொபைலைத் திருப்பித் திருப்பி பார்க்குறேன். அதுல்ல நானும் என் மனைவியும் சேர்ந்து இருக்குர் போட்டோ. கொஞ்சம் ரொமன்டிக் மூட்ல்ல எடுத்த போட்டோ தான். பார்த்து லேசா நமட்டு சிரிப்பு சிரிக்கிறேன். என் செல்லம் அழகு தான்... நானேச் சொல்லிக் கொள்கிறேன்.
அப்போ டக்குனு தேவுடா... தேவுடா... ரிங்டோன் அடிக்குது... பேனல்ல 9840721*** நம்பர் காலிங்னு பிளாஷ் ஆகுது...
யாரா இருக்கும்னு யோசிச்சுகிட்டே.. எடுத்து ஹலோ... ஸ்பீக்கீங்...ஸ்டைலா சொல்லுறேன்.
“ஹாய்.. D..How are you? ...ம்ம்ம் இன்னும் அந்த.....ஸ்பீக்கீங்ன்னு ஜெர்க் கொடுக்கிற ஸ்டைல் மாறல்ல உனக்கு?”
பட படவென அந்தப் பேச்சு...கலகலவென அந்தச் சிரிப்பு..வாய்ஸ்ல்ல பட்டர்பிளை வச்சுருக்காப்பா..அந்த கமெண்ட்...ஒரு 30 செகண்ட் கேப்ல்ல அந்த குரலுக்குச் சொந்தகாரியைப் பத்தி ஒரு 600 பிளாஷ் பேக் நெஞ்சுக்குள்ளே வந்து மோதிச் சிதறுது.. தொண்டைக்குள்ளே திடிரென்னு ஒரு அடைப்பு… விரல் நுனி இருக்கு இல்ல அந்த இடத்திலே மின்சாரம் உரசிப் போன மாதிரி ஒரு ஷாக். அனுபவிக்கறவனுக்குத் தெரியும். ஒரு மாதிரி ஒரு வலி ஆனா கூடவே ஒரு இதமான ஒரு உணர்வு. வினாடி நேரத்துக்குள்ளே காலத்தின் சக்கரத்துக்குள்ளே சுழன்று ஒரு நிலைக்கு வந்தேன்.
"என்னப்பா D... பேச்சையே காணும்..என் வாய்ஸ்யை மட்டும் தெரியல்லன்னு சொன்னே படவா..போன் வயர் வழியா வந்து உன் கழுத்தை கடிச்சு வச்சுடுவேன்...(அரஜகமான ராட்ஸஸி செய்தாலும் செய்ஞ்டுவா)...அச்சோ ...(அய்யோ அதே அச்சோ) சாரி..சாரி.. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு..உன் கழுத்தை கடிக்க உன் வீட்டுல்ல ஒரு ஆளு இருப்பா...அவங்க கிட்ட சொல்லி கடிக்க சொல்லுறேன்..."
இந்த பக்கம் பேச்சைத் தொலைத்து நான் நின்னுகிட்டு இருக்கேன்.
“என்னப்பா நானேப் பேசிக்கிட்டு இருக்கேன். நீ டோட்டல் சைலண்ட் மொட்ல்ல இருக்க..ஓகே....ஓகே.... நான் சான்ஸ் கொடுத்தா நீ பேசப் போற...இந்தா சான்ஸ் கிராண்ட்டட் பேசுப்பா “
அதே சிரிப்பு.. ஒட்டு மொத்த கல்லூரியையும் கலக்கி கல்லாங்கோல் போட வைத்த சிரிப்பு.
" ரஞ்சு.. எப்படி இருக்கே?" பொறுக்கி எடுத்த வார்த்தைகளைச் சேர்த்து வைத்து ஒப்பித்து முடித்தேன்.
"ம்ம் பரவாயில்லப்பா... சந்தோஷமா இருக்கு... என் நிக் நேம் சொல்லிக் கூப்பிடுறே.. எங்கே ரொம்ப தூரம் விலகிட்டோமோன்னு நெனச்சிட்டேன்."
"ஹேய் என்ன பேச்சு இது"
"தோடா...சரி.. நீ எப்ப்டி இருக்க? கல்யாணம் பண்ணி அங்கிள் ஆயிட்டே...எப்படி போகுது உன் வாழ்க்கை"
"பர்ஸ்ட் கிளாஸ்.."
ஒரு சின்ன பெருமூச்சு..அதுக்கு பின் கேட்டாள்... "அவங்க எப்படி இருக்காங்க...?"
"ம்ம்ம்ம்..ரொம்ப நல்லா இருக்காங்க... திடிரென்னு எப்ப்டி இங்கே?"
"அதுவா.. ஒரு பேமிலி பங்ஷன்..சென்னை வர வேண்டியதாப் போச்சு"
"ம்ம்ம்..சென்னைக்கு வர்றத்துக்கு அவ்வளவு சலிப்பு உனக்கு..எங்களை எல்லாம் டோட்டலா மறந்துப் போயிட்டீங்க"
"ச்சீ..எல்லோர்க் கூடவும் காண்டக்ட் இருக்கு.. சிவாவுக்கு வாரத்துக்கு 5 பெர்சனல் மெயில் அனுப்புறேன்..பழனிக்கு டெய்லி 20 பார்வர்ட்ஸ் அனுப்புறேன்..குமாருக்கு வாரத்துல்லே கண்டிப்பா 50 எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்...பாபுவுக்கு கண்டிப்பா வீக்லி 2 போன் கால்ஸ்... ஜெயா..ரோஜா..பிரியா...திவ்யா..எல்லோர்க்கிட்டயும் ஸ்டாரங்கான காண்ட்க்ட் இருக்குப்பா"
எனக்குள் சொல்லமுடியாத ஒரு வேதனை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பரவியது. கஷ்ட்டப்பட்டுச் சமாளித்துக் கொண்டேன்.
"என்னை மட்டும் தான் ஒதுக்கி வச்சி இருக்கே இல்லையா...?"
"ம்ம்ம் அப்படி எல்லாம் இலலை..உன்னைப் பத்தி இவங்க கிட்டே எல்லாம் கேட்காத நாள் இல்லை தெரியுமா?"
"மத்தவங்க கிட்டக் கேட்கறதை எனக்கு போன் பண்ணி கேட்க கூடாதுன்னு என்ன பிடிவாதம் உனக்கு?..."
"ஹே D... ரிலாக்ஸ் ப்பா...உன் கூட பேசி மூணு வருஷம் ஆச்சு...எனக்கு இப்போ உன் கூட சண்டை போட தெம்பு இல்லை...ப்ளீஸ் என்னை அழ வைக்காதே..."
அவள் குரல் கம்மியது.
ஹலோ...ஹலோன்னு எறக் குறைய அலறிகிட்டு இருந்தேன்.ஆபீஸ்ல்லே இருக்கேன்ங்கற உணர்வு சுத்தமாத் தொலைஞ்சுப் போயிடுச்சு. எல்லாரும் என்னையேப் பார்ததாங்க. முக்கியமா என்னோட பாஸ் கேபின்ல்ல இருந்து தலையை வெளியே நீட்டி பார்த்தான்.
" ஐ திங்க் பாஸ் வில் பேன் த யுஸேஜ் ஆப் செல்போன்ஸ் இன் த ஓர்க் ஏரியா ( I think Boss will ban the usage of cellphones from the work area) ன்னு நமட்டுச் சிரிப்போடு பக்கத்து சீட்டு பெங்காலி சவுமித்ரோ சொன்னான். எதையுமே கண்டுக்கற மனநிலையில் நான் இல்லை. மறுபடியும் செல்லை எடுத்து அவள் பேசிய எண்ணுக்குச் சுழற்றினேன்.
த் சப்ஸ்கிரைபர் கனாட் பி ரிச்ட் அட் த மொமண்ட்...( The subscriber cannot be reached at the moment)கிளிப்பிள்ளைக் கணக்காய் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தது அவளுடைய செல்போன்.
ராகா.காம் இல் சுட்டும் சுடர்விழியே ...ஓடிக்கொண்டிருந்தது...எனக்கு தான் வேலை ஓடவிலலை..செல் போனை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்து இருந்தேன். தலை வலிக்க ஆரம்பித்தது. எதுக்காக மூணு வருஷம் கழிச்சு எனக்கு கால் பண்ணணும்... என்னை வெறுப்பு எத்துற மாதிரி பேசணும்....பிறகு என்னை.. என் மனசை உடைக்கிற மாதிரி ஒரு அழுகை வேற... சே.. யாருக்க்கு வேணும் இந்த அவஸ்தை...
செல்போனில் மறுபடியும் தேவுடா...தேவுடா... ரிங்டோன் அடித்தது.. பேனலில் அவள் நம்பர் பளிச்சிட்டது.. அந்த கணநேரக் கோபம் காணாமல் போனது. செல்லை அவசரமாய் எடுத்து காதில் வச்சுக்கிட்டேன்.
"சாரி D... மனசு தாங்கல்லைப்பா... இதுக்கு தான் உனக்கு போனேப் பண்ண வேண்டாம்ன்னு நெனச்சேன்"
எனக்கு எதுவும் பேசவே தோன்றவிலலை.
"ஹே D இன்னும் கோவமாப்பா"
"உன் மேல நான் எப்படி கோபப்பட முடியும்..."
அடுத்த அஞ்சு நிமிஷத்துக்கு என்னவெல்லாமோக் கேட்டாள். நானும் பதில் சொன்னேன். எனக்கு அவளிடம் எதாவது கேட்கவேண்டும் போல இருந்துச்சு.. யோசிச்சுப் பார்த்துட்டுக் கேட்டேன்.
"சரி உனக்கு எப்போ க்ல்யாண்ம்.." அவ கலகல்ன்னு சிரிச்சிட்டே இருந்தா. அந்த சிரிப்புலே ஒரு விரக்தி இருந்த மாதிரி தோணுச்சு எனக்கு,கரெக்ட்டோ தப்போ என் அனுமான்ம் அது ..புரியல்லே..ஆனா அவளோட் அந்தச் சிரிப்பு என் மனசுக்குக் கஷ்ட்டமா இருந்துச்சு...
"எதுக்கு.. இப்போ இப்படி சிரிக்கிறே?"
"ஒண்ணும் இல்ல... கூட பெரிய மனுஷன் ஆயிட்டேப்பா.. வீட்டுல்ல அம்மா கேட்கிற அதே கேள்வியைத் தான் நீயும் கேட்கிறே"
"ஏன் அப்பா கேட்கிறது இல்லையா?
"ம்ம்ம் இருந்து இருந்தா அவரும் கேட்டு இருப்பார்..அவர் தான் அவசரமாப் போயிட்டாரே.."
அவள் குரல் மறுபடியும் கம்மியது. எனக்கு அது அதிர்ச்சியான செய்தி. கேசவன் அங்கிள் ரொம்ப ஜாலி டைப். எங்களுக்கு நல்ல பிரண்ட் மாதிரி. அவர் கூட சேர்ந்து அடிச்ச லூட்டிக்கு தனி பதிவே போடலாம்.
"எப்படி?" அந்த ஒரு வார்த்தை கஷ்ட்டப்பட்டு வாய் விட்டு வந்தது.
"ரெண்டரை வருஷம் ஆச்சு...ஒரு நாள் ராத்திரி...அது வேணாம் இப்போ..அன்னிக்கு அவ்வளவு அழுதேன் தெரியுமா? அப்போ எனக்கு உன் ஞாபகம் வந்துச்சு..என்னவோ தெரியல்ல..அப்பாவை நினைக்கும் போதெல்லாம் உன் நினைப்பும் சேர்ந்தே வரும்."
என்னாலே அதுக்கு மேல தாங்க முடியல்ல.
" நான் இப்போ சென்னை வந்தது கூட அப்பாவோட பங்ஷனுக்குத் தான்..இன்னைக்கு நான் அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன்ப்பா.."
என் உதடுகள் அப்படியே துடிக்க ஆரம்பிச்சுடுச்சு..கஷ்ட்டப்பட்டு சாமாளித்தேன்.
"D...எனக்கு ரொம்ப சந்தோஷம்..உன் கூட பேசுனது..அதுவும் நீ என்னை ரஞ்சுன்னு கூப்பிட்டது கோடி சந்தோஷம்.. எங்க அப்பாவுக்கு பிறகு என்னை அப்படிக் கூப்பிடறது நீ மட்டும் தான்"
அது என்னமோ தெரியல்ல இந்த மாதிரி நேரத்திலே பேச்சை விட மௌனம் தான் அதிகமா கம்யுனிகேஷன்( Communication) பண்ண பயன்படுது. மௌனம்..அவ பேச்சுக்கு ம்ம்ம்...கொட்டியது என் மௌனம்... (கொஞம் Poeticaa இருக்கா இந்த Line.)
"ரஞ்சு... சொ இன்னைக்கு நீ வீட்டுக்கு டின்னருக்கு க்ட்டாயமா வர்றே....!"
"ப்ச்..ம்ம்ஹ்ம்...இல்லப்பா D...முடியாது..."
"ஏன்..?"
"நான் சிங்கப்புர் போறேன்..இப்போ ஏர்ப்போர்ட்ல்ல இருந்து தான் பேசுறேன்.."
" ஹேய் ரஞ்சு.. திஸ் இஸ் நாட் பேர்...( This is not fair)"
அவ கலகலன்னு சிரிச்சா அந்த பழைய கலங்கடிக்கிற சிரிப்பு..
"D.. அப்பாவும்... சரி நீயும் சரி எனனை விட்டு ரொம்ப தூரம் போயிட்டீங்கப்பா... நான் இனிமே உங்களைத் தேடக் கூடாதுப்பா...&**&*^%$%^ அவள் குரலில் இருந்த உண்ர்வு எனக்கு பிடிப்படவில்லை... மறுபடியும் செல் சொதப்பியது.... இந்த முறை நான் அலறவில்லை.. அவசரமாய் பாத்ரூம் போய் கதவைப் சாத்திக்கிட்டு சத்தம் போடாம அஞ்சு நிமிஷம் புல்லா அழுதேன்...
வெளீயே வரும் போது முகம் கழுவி பிரஷா வந்தேன்.. எனக்கும் என் செல்லத்துக்கும் இன்னும் 2 வாரத்திலே வெட்டிங் டே வருது... என்ன கிப்ட் கொடுக்கலாம் யாராவது ஐடியா கொடுங்களேன்.