Tuesday, January 31, 2006

கவி9: ஒருத்தீ..யேஒருவனுக்கு ஒருத்தீ..யே

போதும்...

எரிந்துப் போன

மிச்சங்களில் இருந்து


ஒரு காதலனின் குரல்..

Tuesday, January 24, 2006

கவி8: அவள்தனிமையின் நிசப்தங்களில்
உதடுகள் முணுமுணுக்கும்
உச்சரிப்பில்
அவள்
பொழியும் மழையில்
என் விரல்கள்
துடைக்க மறுக்கும்
கண்ணீர்
அவள்
பின்னிரவின் இருட்டில்
விட்டம் வெறிக்கும்
வேளைகளில்
மெதுவாய் விலகும்
திரைச்சீலைகள்
அவள்
அரவமற்ற சாலையிலே
நடக்கும் பொழுதுகளில்
விரல் தொட்டிழுக்கும்
காற்று
அவள்
அசையும் காற்றில்
சலசலக்கும் இலைகள்
பேசும் ரகசியங்களில்
அவள்
எனக்குள் என்றுமே
ஆறாத காயமாய்
அவள்
என் சொல்ல முடியாத
வேதனையாய்
அவள்
எனக்கே எனக்கான
ரகசிய வலியாய்
அவள்
மரணத்தின் முத்தம்
என்னைச் சுத்தப்படுத்தும் முன்
என் கல்லறையின்
கடைசி கல்லில்
நான் எழுத்ப் போகும்
ரகசிய வாக்குமூலம்
அவள்

Thursday, January 19, 2006

கவி7: நம்பிக்கை

அலைகளின் ஓரமாய்
நடக்கையிலே...
கவனமாய் தேடிப் பார்க்கிறேன்...
சென்ற முறை வந்தப் போது...
விட்டுப் போன...
என் காலடிகளின் சுவடுகள்...
இருக்கின்றனவா என்று..
இல்லை என்று அறிந்ததும்...
இன்னும் அழுத்தமாய்
கால் பதித்து நடக்கிறேன்...
அழியாமல் இருக்கும்..
அடுத்த முறை நான் வரும் போது...
என்ற நம்பிக்கையில்...

Tuesday, January 17, 2006

கவி6: மரணம்


எல்லா மரணங்களும்
கண்ணீர் மரியாதைப்
பெறுவதில்லை...

மறைமுகச் சிரிப்புக்களும்...
லேசான் நிம்மதி பெருமூச்சும்..
போதும்...ஒரு மரணத்தின்
மானம் பறிக்க...

வாக்கியத்தின்
வாழ்க்கைப் பறிப்பு
மரணம்...
மூச்சு காற்றின்
முற்று புள்ளி
மரணம்
என்று இருந்தது
ஒரு காலம்...

ஒவ்வொரு மரணத்திலும்
எதோ ஒன்று பிறக்கிறது...
அறியாமையின் மரண்த்தில்
ஞானம் பிறப்பது போல்...

வெறும் காதலுக்காய்...
எனக்குள் எதோ ஒன்று..
செத்துப் போனது...

சீ..தப்பு..தப்பு..
எதோ ஒன்று..
புதிதாய் பிறக்கிறது

Thursday, January 12, 2006

கவி5:தீவுகள்...தீர்வுகள்...


கூட்டமாய் தான்
துவங்கினோம்...
போகிற போக்கில்.
போட்டி போட்டு..
நான் முந்தி...
நீ முந்தி என...
தற்சமயம்...
ஆங்காங்கே...
தனித் தனித் தீவுகளாய்
நாம் கரையேரி நிற்க...
வாழ்க்கைக் கடலில்..
எங்கேங்கோ
மூச்சைத் தொலைத்து
மூழ்கும் நிலையில்
நம் உறவுகள்...

Tuesday, January 10, 2006

கதை5: நட்பென்னும் தீவினிலே - பகுதி 2

இந்தக் கதையின் முதல் பாகம் படிக்க இங்கே சொடுக்கவும்
நட்பென்னும் தீவினிலே - பகுதி 1

அலுவலக வேலை எதிர்பார்த்ததை விட சீக்கிராமவே முடிஞ்சுப் போயிடுச்சு மும்பை  மாநகரம் அவசரத்திலும் அவசரமான நகரமாய் சுழன்று கொண்டிருந்தது. சென்னை, பெங்களூர் நகரங்கள் எவ்வளவோ தேவலாம்ன்னு நெனச்சுக்கிட்டேன். மறுநாள் மதியம் தான் சென்னைத் திரும்புதாய் திட்டம். என்னப் பண்ணுறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். எதிரில் இருந்த ஒரு மினி உணவகம் கண்ணில் பட்டது. நெல்லை புட் கோர்ட் என்ற அதன் பெயர் பிடித்ததோ என்னவோ தெரியல்ல..சாலையைத் தாண்டிப் போய் அந்த சாப்பாட்டுக் கடைக்குள்ளே நுழைஞ்சேன்.  சுமாரா ஒரு 20- 25 பேர் தாராளமா உட்கார்ந்து சாப்பிடலாம். நல்லா தூய்மையாவும் சுகாதாரமாவும் பராமரிப்பு  இருந்தது. கல்லாப் பக்கம் பிரேம் செய்யப்பட்ட  பெரிய கலைஞர் படம் மாட்டப்பட்டிருந்தது.  பக்கத்துல்ல அதை விடக் கொஞ்சம் சின்னதா  தளபதி படமும் மாட்டப்பட்டிருந்தது... திமுக அதிமுகவோ கட்சி சார்பு இல்லன்னாலும் கலைஞர். .தளபதி...அம்மான்னு சொல்லி பழகிருச்சு... நம்ம ஊர்கார பைய தான் இங்க கடைப் போட்டிருக்கான் போல இருக்கு..வாய் விட்டே  சொன்னேன் வெளியூர் போய் நம்மாளுங்கப் படமோ... பேரையோ....அதுவும் நம்ம தமிழ்  மொழியிலே பாத்தாலே வர்ற அந்த சந்தோஷமே தனி தான் போங்க. உள்ளூர்ல்ல தான் வேற்றுமை எல்லாம்... இதுக்குத் தான் உலகமே வானம்ன்னு  சிறகை விரிக்கணுமோ என்னமோ?

ஆர்டர் பண்ண கும்பகோணம் காபி வரவும் அதை ரசிச்சு ருசிச்சுகிட்டே கடையை மேலும் நோட்டமிட்டேன்.
விஜய் நடிச்ச சிவகாசி படத்தின் பாட்டை சத்தமா வச்சிருந்தாங்க. " வடு மாங்கா.... செவியைக் கிழித்தது. அயலூர் போய் நம்மூர் குத்துப் பாட்டு  கேட்டு ரசிப்பதிலும் ஒரு சுகம் இருக்கத் தான் செய்தது.

"இவ்வளவு பெரிய நகரத்துல்ல அமீதை எங்கே எப்படி போய் தேடுறது...ம்ஹூம்" நம்பிக்கைக் கொஞ்சம் கொஞ்சமாய் தடுமாற ஆரம்பித்தது.
ஆண்டவனாப் பார்த்து அமீதை என் கண் முன்னாடி அனுப்பி வச்சாத் தான் உண்டு.. எனக்குன்னு எந்த வழியும்  பிடிபடல்ல.

நான் யோசனையில் இருக்கும்  போதே பில்லை என் கையில் கொடுத்துட்டுப் போனான் கடைப் பையன். விலை கொஞ்சம் அதிகம் தான். பரவாயில்லை.. அந்தக் காபி சுவைக்குத் தாராளமாக் கொடுக்கலாம்  ஒ.கே தான் எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.  பாக்கெட்டில் இருந்து காசை எண்ணிக் கொடுத்துட்டு வெளியே நடையைக் கட்டினேன்.  மனம் என்னமோ யோசனையை விட்டு இறங்கவே இல்ல.ஆண்டவன் அமீதைக் கண்ணுல்ல காட்டுவானா என்ற அதே நினைப்புல்ல எதிரில் வந்தவர் மீது கவனிக்காமல் டமால்ன்னு மோதிட்டேன்.

அதே தான்.. நீங்க நினைப்பது மிகவும் சரியே

சாரி சொல்லணும்னு திரும்பி முகத்தைப் பாத்தா.... அவன் தான்...அவனே தான்.. அங்கே நின்று  கொண்டிருக்கிறான்...  ஆண்டவன் சத்தியமா.... நிச்சயமா... இருக்கான்.. நம்புங்கப்பா!!! நான் சொல்லுறேன் அனுபவிச்சு சொல்லுறேன்

"தேவா..." அந்த குரலைக் கேட்டு எவ்வளவு வருஷம் ஆகயிருக்கும். ரெண்டு பேரும் அப்படியே ஒருத்தரை ஒருத்தர் அணைச்சுகிட்டோம். வார்த்தைகள் வர்றல்ல. அந்த அணைப்பிலேயே சில... பல... பரஸ்பர விசாரிப்புக்கள் முடிஞ்சுப் போச்சு.

அமீது...இன்னும் கெத்து கூடி போயிருந்தான்.. லேசாத் தொப்பை. ம்ம் அதுவும் அவனுக்கு அழகாத் தான் இருந்தது. அதே வசீகரமான சிரிப்பு கொஞ்சம் கூடக் குறையாமல் அவன்  முகத்தில் தவழ்ந்தது. வழக்கம் போல அவனைப் பார்த்ததும் அவன் உற்சாகம் எனக்கும் தொற்றி கொண்டது. என்னைப் பற்றி.. என் குடும்பத்தைப் பற்றி... ஜெராப் பற்றி....மனோப் பற்றி... ஊர் பற்றி....ம்ம்ம் விட்டுப் போன எல்லா விவரங்களையும் அவன் விசாரித்தான். பேச்சு சுவாரஸ்யத்தில் மறுபடியும் உணவகத்திற்குள் வந்தோம். அவன் சமோசா சுண்டல் தருவித்தான்.

"அமீது .. என் சமோசா சுண்டல் பிரியம் உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு... நீ எதையும் மறக்கல்லடா..."
அமீது கலகலன்னு சிரிச்சான். அவனுக்கு ஸ்பெஷல் டீ சொன்னான். கடைப் பையன் பவ்யமாக் கொண்டு வந்து  கொடுத்தான்.

"அப்புறம்.. மாப்பு.. உன் சந்தோஷம் உன் முகத்திலேத் தெரியுது... இருந்தாலும் உன் வாயாலே உன் கதையக் கேட்கணும்டா...  எப்படிப் போகுது உன் வாழ்க்கை?"

"அல்லா கருணையிலே வாழ்க்கை எந்தக் குறையுமில்லாம் நல்லாப் போகுதுப்பா."

"அண்ணே வேற எதாவது வேணுமா?" சமோசா சுண்டல் கொண்டு  வந்து வைத்து விட்டு கேட்டான் கடைப் பையன். அவன்கிட்டே பணிவு அளவுக்கதிகமாவே இருந்ததுப் போல் எனக்கு தோன்றியது.

" அமீது.. பையன் ரொம்ப பழக்கமா  அநியாயத்துக்கு பம்முறான்?" சமோசா சுண்டலை சுவைத்தப் படி கேட்டேன்.

" இங்கே எல்லாரும் நமக்கு பழக்கம் தான் வேண்டப்பட்டவங்கத் தான்"

" ஒஹோ.. மாப்பு இங்கே ரெகுலர் கஸ்டமரோ...அதான் இந்தக் கவனிப்பா?"

"மச்சான்..  ரெகுலர் தான் ஆனா கஸ்டமரா இல்ல... முதலாளியா.... இது நம்மக் கடை தான்"

எனக்கு ஆச்சரியம் ப்ளஸ் சந்தோஷம். நம்ம பையன் மும்பையிலே ரெஸ்டரண்ட் ( நண்பன் ஒனர் அப்புறம் இனி அதை கடை கிடைன்னு அசிங்கமாச் சொல்லிகிட்டு. இனி அது ரெஸ்டாரன்ட் தான்)

" மாப்பி  தான் ஓனரா? எனக்கு ஒரே சந்தோஷம்டா"

"இதே மாதிரி இன்னும் ரெண்டு இருக்கு... ஒண்ணு செம்பூர்ல்ல.. இன்னொன்னு.. தாதர்ல்ல... புதுசா ஒண்ணு பாந்த்ராவில்ல ஆரம்பிக்கப் போறேன்..."

அட அட நம்ம பையப் பின்றான்டா. மனசுத் துள்ளிக் குதிச்சது.

" மச்சான் ஒரு நிமிஷம்..." என்று எழுந்து கல்லாப் பக்கம் போனான். நம்ம பைய ஜெயிச்சுட்டான்ங்கற விஷயத்தை உடனே ஜெராவுக்கும், மனோவுக்கும் சொல்லணும்னு மனசு துடிச்சுது..ம்ம்ம் செல்போன்ல்ல நம்பர் தட்டப் போயிட்டேன். இருக்கட்டும்..இப்போ வேணாம்.. அமீது கல்யாணத்துக்கு வந்தா அது ஒரு பெரிய சர்ப்பிரைஸா இருக்கும்ன்னு என் ஆர்வத்தை அடக்கி வச்சேன்.

அமீது கையிலே ஒரு சின்ன பார்சலோட வந்து உட்கார்ந்தான்.
"மும்பை வந்தப்போ என்கிட்டே எதுவுமே இல்ல... படிப்பை பாதியிலேப் பறக்கவிட்டுட்டு வந்துட்டேன்ல்ல.. நீ..ஜெரா.. மனோ.. மூணு பேரும் கொடுத்த உங்க செயின்.. மோதிரம்.. வாட்ச் மட்டும் தான் கையிலே..." அமீது குரலில் ஒரு வித விரக்தி தெறிச்சதை என்னாலே உணர முடிஞ்சுது.

"மும்பை வந்தப்போ ஒரு டீக்கடையிலே கிளாஸ் கழுவுற வேலைக் கிடைச்சுது.. ஆறு மாசம் அந்த வேலைச் செஞ்சேன்." அமீது குரல் உடைந்தது. அவனே அதைச் சரிப் பண்ணிகிட்டான்.

"கொஞ்சம் கொஞ்சமா கஷ்ட்டப்பட்டு.. ஒரு சின்ன டீக்கடை போட்டேன். அதுக்கு முதல் நீங்கக் கொடுத்த பொருள் தான் உதவியா இருந்துச்சு"
அவன் பார்சலைப் பிரித்தான். அதுக்குள்ள செயின்.. மோதிரம்.. வாட்ச்... ஏழு வருஷம் முன்னாடி நாங்க மூணு பேர் அவனுக்கும் அவன் காதலுக்கும் கொடுத்தக் காணிக்கை இருந்துச்சு. நான் கனமான மனசோட அதையெல்லாம் பார்த்துகிட்டு இருந்தேன்.

"என்னிக்காவது இதையெல்லாம் உங்க கிட்டேத் திருப்பிக் கொடுக்கணும்ன்னு தான் பத்திரமா வச்சிருந்தேன்... இந்தா வாங்கிக்க"
எனக்கு பக்கென்றது.அவன் குரலில் ஒரு வெறுமை ஒலிச்சுது. எனக்கு வெடவெடக்க ஆரம்பிச்சது.

"அமீது இப்போ எதுக்கு இதெல்லாம்... இது உன்னோடக் கல்யாணத்துக்கு எங்க கிப்ட் டா.. இதைத் திருப்பிக் கொடுக்காத.. கஷ்ட்டமாயிருக்குடா"

"கல்யாணமா.... வைக்கும் போது கூப்பிடுறேன் வந்து கிப்ட் கொடுங்க...."
அமீது குரல் இரும்பாய் ஒலித்தது.

எனக்கு அதற்கு மேலும் அவனை விவரம் கேட்டுக் காயப்படுத்தவும்... காயம் படவும்... திராணி இல்ல.
மூணு டம்ளர் தண்ணியை மடக் மடக்ன்னு குடிச்சேன். தொண்டைக்குள்ள இருந்த அடைப்பு அப்படியேத் தான் இருந்துச்சு.

"ஏன் தேவா.. அப்போ அந்த வயசுல்ல.. அப்படி நான் அவளைக் கூட்டிட்டுக் கிளம்புனது தப்புன்னு உனக்கு எப்போவாச்சும் தோணியிருக்காடா..?"

சென்னை செல்லும் விமானத்தின்  அதிகமானக் குளிரையும் தாண்டி எனக்கு வியர்த்து கொட்டியது.

அமீதின் கேள்விக்குப் பதில் தெரிஞ்சும் என்னால் ஒன்றும் சொல்லமுடியாமல் போனது என் மனத்தைச் சுட்டது.

Monday, January 09, 2006

கதை5: நட்பென்னும் தீவினிலே - பகுதி 1

1999 பி.எஸ்.சி இறுதி ஆண்டு... செமஸ்டர் தேர்வுக்கு இன்னும் மூணு நாள் பாக்கி இருந்துச்சு. வீட்டு மொட்டை மாடியிலே ரியல் அனலிஸ் பேப்ப்ருக்கு மல்லுக் கட்டி படிச்சுகிட்டு இருக்கேன்.
டர்ன்னு பைக் டையர் தேயுற சவுண்ட்... மாடியிலே இருந்து கீழேப் பார்த்தா... அமீது பையன் யமஹாவில்ல உறுமிகிட்டு நிக்குறான்... ஆகா... மாப்பிள்ளை செமஸ்டர் கொஸ்டின் பேப்பரை உஷார் பண்ணிட்டான் போல.. அதான் பாசத்தோடக் கொடுக்க வந்துருக்கான்னு நான் அடிச்சுப் புரண்டு மாடியிலே இருந்து இறங்கி வந்தேன்.
நான் படிப்பிலே ரொம்ப சூரன் எல்லாம் இல்லை... அதுக்குன்னு ம்க்கும் இல்லை. அமீது புலி... கணக்குல்ல பாயும் புலி... எங்களூக்கு எல்லாம் சொல்லித் தருவான். ஆளு அஜித் மாதிரி கலக்கல் கலரு...கமல் மாதிரி சகலகலாவல்லவன்.... மொத்ததுல்ல ரஜினி மாதிரி ஒரு சூப்பர் ஸ்டார் அவன்...

"என்னடா அமீது?... இங்கே... இந்நேரம்....இது நீ படிக்கிற நேரமாச்சே?

"ஒரு முக்கியமான விஷயம்...உன் உதவி தேவைப்படுது..."
" என் ...ன...?"
" நானும் பானுவும் லவ் பண்ற விஷயம் உனக்கு தெரியும் இல்ல"
"ஆமாத்... தெரியும்... "
"அதுல்ல.. இப்போ பிரச்சனையாயிடுச்சு... விவரம் பானு வீட்டுல்ல தெரிஞ்சுப் போச்சு... அவங்க வீட்டுல்ல ஒத்துக்கல்ல... வேற மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டாங்க"
"இப்போ என்னப் பண்ணப்போறீங்க?"
"மும்பையிலே என் பிரண்ட் ஒருத்தன் இருக்கான்... அங்கே போயிட்டாப் பாதி பிரச்சனைத் தீர்ந்த மாதிரி... அங்கேப் போகணும்"
" ஊரை விட்டு ஓடிப் போறீங்களா? "
" வேற வழி தெரியல்ல"
"இதுக்குப் பானு ஒத்துகிட்டாளா?"
"ரெண்டுப் பேருக்கும் வேற வழி இல்ல"
"சரி சரி...நான் என்னப் பண்ணனும்"
"ஒரு ரெண்டாயிரம் ரூபா பணம் வேணும்.. கிடைக்குமா?"
"என் கிட்டப் பணமெல்லாம் இல்ல.... " சொல்லிகிட்டு இருக்கும் போதே கழுத்துல்ல கிடந்த செயின் கையிலேத் தடுத்துச்சு... யோசிக்காம செயினைக் கழட்டி அவன் கையிலேக் கொடுத்தேன்.
"வச்சிக்க.. இது விலை கரெக்ட்டா தெரியாது..ஆனா என் கிட்ட இருக்கறது இது தான்டா.."
அமீது கண்கள் கலங்கிப் போச்சு... அவன் யமஹா போற வரைக்கும் தெருமுனையைப் பார்த்துகிட்டே நின்னேன்.

செமஸ்டர் அன்னிக்குக் காலையிலே... தேர்வை விட அமீது-பானு மேட்டர் தான் அதிகம் எல்லோராலும் ஆர்வமாய் விசாரிக்கப்பட்டது.

மொத்தக் கூட்டமும் எங்களைச் சந்தேகக் கண்ணோடு தான் பார்த்துச்சு....

"உண்மையைச் சொல்லுங்க.. அமீது உங்ககிட்டேக் கூடவா எதுவும் சொல்லல்ல... நம்ப முடியலியே"
"மூணு நாளா... வீட்டை விடு வெளியேவே வர்றல்ல... நானே பரீட்சை ஜூரத்துல்ல கிடந்தேன்..." இது எங்கள் பங்காளி மனோகரின் வாக்குமூலம்.
"அமீதை நண்பன்னு சொல்லுறதுக்கே வெக்கமா இருக்கு... எங்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லல்ல... இன்னிக்குக் காலையிலேத் தான் எனக்கு விஷயம் தெரியும்" சத்தியம் செய்த்து எங்கள் கூட்டாளி ஜெரால்ட்.
"அமீது இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்ல" ரொம்ப யதார்த்தமாப் பல்டி அடிச்சது நான் தான்....

சந்தேக விட்டு வளையத்தை மெதுவா உடைச்சோம்... மூணு மாசம் ஓடிப் போச்சு.... நான்..ஜெரால்ட்...மனோ... மூணுப் பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்கறதை வேணும்னு தவிர்த்தோம்....யதச்சையா கல்லூரிக்கு மார்க் லிஸ்ட் வாங்கப் போனப்போ மூணு பேரும் பார்த்துகிட்டோம். அப்போ ஜெராத் தான் முதல்ல ஆரம்பிச்சான்.

"அமீது என் கிட்டேச் சொல்லிட்டுத் தான் போனான்... பணம் கேட்டான்... இல்ல என் வாட்ச்சை கொடுத்தேன்...அப்புறம் செமஸ்டர் டைம்... எதுக்கு வீணா அதைப் பத்திப் பேசிகிட்டுன்னு சொல்லல்ல சாரி டா..."
" சாரி எல்லாம் வேண்டாம்... நான் என் மோதிரத்தைக் கொடுத்தேன்..... மனோச் சொல்லறதுக்குள்ளே நான் செயின் கொடுத்த விவரத்தைச் சொன்னேன்.
மூணு பேருக்கும் சிரிப்பு வந்துடுச்சு....
"வீட்டுல்ல செயின், மோதிரத்துக்கு என்னச் சொன்னிங்க..." ஜெராக் கேட்டான்.
"வேற என்னக் காணும்ன்னு தான் சொன்னோம்...." " அடப் பாவிகளா... நீங்களுமா?"
சிரிப்பு தொடர்ந்தது.
"நமக்கு எல்லாம் ஒரு பொண்ணோடப் பேசவே வெடவெடங்கும்.. "
"அவன் ஹிரோடா... ஒரு பொண்ணைத் தன் பின்னாடி வர வெச்சுட்டான்..."
"அவன் கில்லாடி" மாத்தி மாத்தி அமீதைப் புகழ்ந்தோம்.
அமீதும் பானும் சந்தோஷமா வாழ மனசார வாழ்த்தினோம். அப்புறம் நான் மேல எம்.பி.ஏ படிக்க சென்னைக்கும்.... மனோ எம்.சி.ஏ படிக்க ம்துரைக்கும்... ஜெரா ஒரு கம்பெனியிலே வேலைக் கிடச்சு பெங்களூர்க்கும் போயிட்டோம்.
வருஷத்துக்கு ஒரு தடவையோ... இல்ல 2 தடவையோ ஊர்ல்லப் பார்த்தாப் பெரிய விஷயம்.
அமீது குடும்பமும் சரி... பானு குடும்பமும் சரி... இந்த சம்பவத்துக்குப் பிறகு ஊரை விட்டுப் போயிட்டாங்க.. எந்த தகவலும் இல்ல...
படிப்பு முடிஞ்சு நல்ல வேலையும் கிடைச்சுது... அப்படியே வாழ்க்கை வேகமாப் போக ஆரம்பிச்சுது...
ஜெரா இப்போ அமெரிக்கால்ல இருக்கான்... கல்யாணம் ஆயிடுச்சு... ஒரு குட்டிப் பொண்ணு இருக்கா,,
மனோவுக்கு கல்யாணம் முடிவாகி இருக்கு... அவன் நிச்சயதார்த்துல்ல நாங்க மூணுப் பேரும் மறுபடியும் சந்திச்சோம்...
அப்போ அமீது பத்தி பேச்சுத் திரும்பிச்சு...

"மாப்பி அமீதை எப்படியாவது என் கல்யாணத்துக்குக் கூப்பிடணும்டா"
"என் கல்யாணத்துக்கு மிஸ் ஆயிடுச்சு... இப்போ இவன் கல்யாணத்துக்குக் கண்டிப்பாக் கூப்பிடணும்" ஜெரா சேர்ந்துக் கொண்டான். ஜெரா மூணு மாச விடுமுறையிலே வந்து இருந்தான். மனோ கல்யாணம் முடிஞ்சுத் தான் அமெரிக்காத் திரும்புவதாய் இருந்தான்.

"மீது மும்பை போய் 7 வருஷம் ஆச்சு... இப்போ அவனுக்கு பானுவுக்கும் அமீது ஸ்பீடுக்கு குறைஞ்ச பட்சம்... மூணு இல்ல நாலு குழந்தை இருக்கும்...." இது மனோ.
"அவனும் அவன் குடும்பமும் வந்தாக் கல்யாண வீடு களைக் கட்டும்னு சொல்லு"
"நாம் அமீதைத் தேடிக் கண்டுபிடிப்போம்...."

அதுக்கு ஏத்தா மாதிரி எனக்கும் அலுவலக் வேலையா மும்பைப் போற வாய்ப்பு ஒண்ணும் கிடைச்சுது..


இந்தக் கதையின் இரண்டாம் பாகம் படிக்க இங்கே சொடுக்கவும்நட்பென்னும் தீவினிலே - பகுதி 2

Monday, January 02, 2006

கவி4: உன்னிடம் கேட்கலாமா?


..
வழியிலே வீசி எறிய
வலிய வந்து வாங்கினாய்
என் இதயம்

கண்ணிலே தீ மூட்டி
கண்ணீரிலே அணைத்தாய்
என் காதல்...

புன்னகையில் பூத்து
மௌனத்தில் உதிர்கிறது
என் நேசம்

வார்த்தையில் வளர்த்து
வலியில் முடித்தாய்..
என் உறவு

குருடனின் கண்களுக்கு
கனவுகள் கொடுத்தது ஏன்?

பாலைவன பயணிக்கு
மழைவாசம் தெரிவிததது ஏன்?

பதில் வேண்டாம்...
கேட்க நினைத்தேன்
கேட்கிறேன்..