Sunday, February 24, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 5

முந்தைய பகுதி படிக்க

விழா நல்லபடியா போய்கிட்டு இருந்தது...அப்பா இன்னும் பேசிகிட்டு இருந்தார். சரவணனின் பெருமைகளை ரொம்ப பெருமிதமா எடுத்துச் சொல்லிகிட்டு இருந்தார். நான் அதக் கேட்டும் கேக்காமலும் கவனத்தை எங்கெல்லாமோ அலைய விட்டுகிட்டு இருந்தேன்.

ஞாபகத்தை எங்கே நிறுத்திட்டு நிகழ்காலத்துக்கு வந்தேனோ அங்கிருந்து கிளம்பி அந்த வார இறுதி நாட்களின் நிகழ்வுகளுக்கு மறுபடியும் போய் சேர்ந்தேன்.

அன்னிக்கு காலையிலே வீட்டை விட்டு கிளம்புனவன் சாயங்காலம் வரைக்கும் பசங்களோடத் தான் சுத்திகிட்டு இருந்தேன். சாயங்காலம் எல்லோரும் வீட்டுக்கு கிளம்ப நான் மட்டும் தனியா ஈவினிங் ஷோ பாக்கப் போயிட்டேன்...ஷாருக்கான் நடிச்ச இந்திப் படம் தில்வாலே துல்கனியா லே ஜாயங்கே... காஜோலுக்காகவே கிட்டத் தட்ட பத்து வாட்டி நான் பாத்த படம் அன்னிக்கு எட்டாவ்து வாட்டியாப் போயிருந்தேன்...அதுக்கப்புறமும் ஒண்ணு ரெண்டு வாட்டி அந்தப் படத்துக்குப் போயிருந்தேன்... அது இப்போ தேவையில்லை...காஜோலும் ஷாரூக்கானும் திரை முழுக்க காதலைக் குழைச்சு பெயிண்ட் அடிச்சுகிட்டு இருக்க என் கவனம் படத்திலே இல்ல...என் அண்ணன் சரவணன் மேலத் தான் இருந்துச்சு...

அவன் கிட்ட என்னத் தான் உன் கதைன்னு கேட்டிரலாமா?
கேட்டாச் சொல்லுவானா?
இல்லை கேட்காம நாமளா கண்டுபிடிக்கலாமா?
என்னையேப் போட்டு குழப்பிகிட்டேன்...குழப்பம் தெளியாமப் படம் முடியறதுக்கு முன்னாடியே கிளம்பிட்டேன்..

வீட்டுக்குப் போற வழி எல்லாம் யோசிச்சுகிட்டே தான் போனேன்.. குறுக்கே வந்த நாய் ஒண்ணு கோபமாய் குசலம் விசாரிச்சுட்டு போனதைக் கூட நான் கண்டுக்கல்ல.. சைக்கிளை ஒரே நேர்கோட்டிலே ஓட்டிகிட்டு வீடு வந்து சேர்ந்தேன். மணி ஒன்பது ஆகிப் போயிருச்சு.. வீட்டைத் திறந்துட்டு உள்ளேப் போனேன்... ஆள் அரவமே இல்லை... அப்படி இப்படி சுத்திட்டு... பிரிட்ஜ்ல்ல இருந்து ஜில்லுன்னு தண்ணீ எடுத்து தொண்டையிலே இறக்குனேன்... ம்ம் ஒரு மாதிரி லேசா இருந்துச்சு.. இருக்கட்டும் எதுக்கும் மாடிக்குப் போய் ஒரு தம் போட்டுட்டு இன்னும் கொஞ்சம் சீரியசா யோசிக்கலாம்ன்னு படியிலே ஏறுனேன்.

ஒவ்வொரு படியா நிதானமா ஏறும் போதே பத்த வச்சுகிட்டேன்... அக்கம் பக்கம் எல்லாம் நோட்டம் பாத்துகிட்டே மாடியில்ல கால் எடுத்து வச்சா... அங்கே சரவணன்.. என் அண்ணன் சரவணன் தான் சொன்னா நம்புங்க...

பக்கா செட்அப்போட உக்காந்து சரக்கடிச்சுகிட்டு இருந்தான்...ஒரு கணம் நம்பியும் நம்பவும் முடியாமல் நின்றவன் லேசாப் பதுங்கியப் படி அவனைப் பார்த்தேன்..

சைட் டிஷ் எல்லாம் சும்மா சொக்க வைக்கும் ஐட்டங்களா அடுக்கியிருந்தான்...வறுத்தக் கோழி தொடைக்கால்.. மசாலாக் கடலை... நெத்திலி மீன் வறுவல்...மசாலாப் போட்டு வறுத்த முந்திரி பருப்பு தனியா ஒரு பிளேட்... அதுக் கூட நம்ம ரசனைக்குரிய அணீல் பிராண்ட் லோக்கல் மாங்காய் ஊறுகா..பத்தாதுக்கு பாட்டில் பாட்டிலா சரக்கை வேற அடுக்கி வச்சிருந்தான்... மெதுவா ஒவ்வொரு கிளாசா ஊத்தி அடிச்சிகிட்டு இருந்தான்...

நான் அவனைக் கொஞ்ச நேரம் வேடிக்கைப் பாத்துகிட்டே நின்னேன்.. அதுக்கு மேல முடியல்ல...அவன் என்னைப் பாக்குற மாதிரி அவனுக்கு எதிர்பக்கம் போய் திரும்பி நின்னேன்...பேச்சு எதுவும் கொடுக்கல்ல..

"ஷீவா.. மை பிரதர்... இங்கே வாடா...." சரவணன் தான் என்னைக் கூப்பிட்டான்... அண்ணன் முக்கால் போதையில் முழு வீரனாய் எழுந்து நின்றான்.நான் நிதானமாய் திரும்பினேன்.

"டேய் நான் உன் அண்ணன்டா....வாடா இங்கே..." கையில் கோப்பையோடு அண்ணன் என்னைப் பார்த்து புன்னகைத்தான்..

ஆகா அண்ணா சரவணா.. உன்னை கையிலே எத்தனையோ கோப்பையோட எல்லாம் பாத்துருக்கேன்டா அப்போ எல்லாம் கிடைக்காத பரவசமும் சந்தோசமும் இப்போ எனக்குள்ளேப் பொங்கி வழியுதேடா அப்படின்னு எனக்கு நானே உள்ளுக்குள்ளே சொல்லிகிட்டேன்... ம்ம்ம் ஆனாலும் வாயை திறக்கல்ல

என் கையைப் பிடிச்சி இழுத்து உக்கார வச்சான் சரவணன்.. அப்புறம் அப்படி ஒரு பாசக் கச்சேரி அரங்கேறிடுச்சுங்க..அதை எல்லாம் என்னன்னு சொல்லுரது எப்படின்னு சொல்லுறது.. தமிழ் மட்டும் இல்ல... உலக மொழியிலே அந்த பாசத்தை எடுத்துச் சொல்ல வார்த்தை இல்லன்னு அந்தப் போதையில்ல அன்னிக்கு தோணிச்சு.. அது ஒரளவு உண்மையும் கூட..சரக்கை ஊத்தி என் வாயிலே வச்சு இறக்குனதும்.. கோழி காலை வாயிலே ஊட்டி விட்டதும்.. புரையேறுனப்போ தலையிலே தட்டணுதும்ன்னு... அத்தனைக் காலமும் சரவணன் தேக்கி வச்சிருந்த சகோதரப் பாசத்தை அப்படியே வெள்ளமா என் பக்கம் திருப்பி விட்டான். நான் கிட்டத் தட்ட மூழ்கி மூச்சு முட்டிப் போயிட்டேன்...

"தம்பி தங்க கம்பி.. என் தம்பி தங்க கம்பி...." பாட்டெல்லாம் வேற பாடி கலக்குனான் சரவணன்... என் மடியிலே தலை வச்சு படுத்துகிட்டான்....நான் அவன் தலையைக் கோதிவிட்டேன்...

"டேய் சிவா... அண்ணனுக்கு நீ ஒரு பாட்டு பாடுரா.. உனக்கு நான் பாடுனேன் இல்ல..." சரவணனின் நேயர் விருப்பம்.

"டேய் அண்ணா.. சரவணா.. எனக்கு பாட எல்லாம் தெரியாது உன்னை மாதிரி... நீ நல்லா பாடுறடா... சூப்பர் வாய்ஸ்டா உனக்கு...."

"உண்மையாவாடா.. இதை எல்லாம் ஏன்டா என்கிட்ட நீ முன்னாடியே சொல்லல்ல..நீ கூடத் தான் அன்னிக்கு கானா எல்லாம் கலக்கலாப் பாடுன.... நல்லாயிருந்துச்சுடா டேய் தம்பி... நீயும் நானும் ஒரே வீட்டுல்ல ஒண்ணா வளர்ந்திருந்தா... இப்படித் தான் ஜாலியா இருந்திருப்போம் இல்லையாடா... எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கோம்டா நாம... இனி மிஸ் பண்ணக் கூடாதுடா தம்பி.. மிஸ் பண்ணக்கூடாது.. சொல்லிட்டேன்..."

"ஆமா ஆமா..." தலை ஆட்டுவதை பிரதானக் கடமையாய் நினைத்து சும்மா பூமி அதிர தலையாட்டினேன் நான்.. ரொம்ப சந்தோசமாயிருந்துச்சு அந்தப் பொழுது...

இப்படியேப் போயிகிட்டு இருந்தப்போ சந்தோசத்துக்கு சங்கு ஊதுற மாதிரி திடீர்ன்னு சரவணன் கேவி கேவி அழ ஆரம்பிச்சான்...எனக்கு சட்டுன்னு என்னப் பண்ணுறதுன்னு புரியல்ல... கூடச் சேர்ந்து அழதுரலாமான்னு ஒரு கணம் யோசிக்க வேற செஞ்சேன்..... அவன் அழுகையோடு பேச ஆரம்பிச்சான்....

"சிவா... நான் அவளை லவ் பண்றேன்.... உண்மையா.... லவ் பண்ணுறேன்... எனக்கு என்னக் கொறைச்சல்...இன்னும் மூணு மாசத்துல்ல நான் வேலைக்குப் போக போறேன்... என்னை அவளுக்குப் பிடிக்கல்லயாம்.... ஏன் சிவா? .... நான் அவளை நல்லா பாத்துப்பேன்டா.. அவளுக்கு யாராவது சொல்லிப் புரிய வைக்கணும்டா.... சொன்னா புரிஞ்சிக்குவா....சொன்னா புரிஞ்சிக்குவா தானே சிவா... சொல்லுடா...' எனக்குப் போதை சுத்தமாய் இறங்கிப் போனது..

"சொல்லு சிவா... புரியாமத் தானே என்னை பிடிக்கல்லன்னு சொல்லுறா... புரிய வைக்கணும்...நீ புரிய வப்பீயாடா?"

நான் உள்ளுக்குத் தள்ளியிருந்தக் கடைசி பெக் வாயில் இருந்து குப்பென்று கொப்பளித்து வெளியேறியது. என் முகம் அப்படியே கரண்ட் கம்பியில் கால் வைச்ச எபெக்ட்டுக்கு மாறிப்போச்சு. கொஞ்சம் சுதாரிச்சு நான் முதலில் எழுந்துக் கொண்டேன்.. ராத்திரி கரைஞ்சுப் போயிருந்தது.. மணி ரெண்டு இருக்கும்...

"சரவணா.. கீழே போலாமா....நேரமாச்சு..." அவனை எழுப்பப் பார்த்தேன்.

"ம்ஹூம்... நான் நீ புரிய வைக்குறேன்னு சொல்லாட்டி வரமாட்டேன்... எனக்கு யாரும் இல்லடா.. நீ தான் உதவணும்...அவ புரிஞ்சுக்கல்லன்னா நான் செத்துப் போயிருவேன்டா... உண்மையாச் சொல்லிட்டேன்..."

ஆகா இதென்னடா வம்பாப் போச்சு... இப்போ நடந்த எல்லா விவரமும் எனக்கு முழுசாப் புரிய மூணு வருசம் ஆவும் போலிருக்கு.. இதுல்ல நான் யாருக்கு எதை புரிய வைக்கணும்ன்னு தெரியல்லயே...புரிய வைக்கிறேன்ன்னு சொல்லாமா சாமி மலை இறங்காது போலிருக்கே... சரக்கு வாங்கி தந்து சர்க்கஸ் எல்லாம் காட்டச் சொல்லுறானே என எனக்குள்ளேயே புலம்பிகிட்டேன்.

"சரி நான் புரிய வைக்குறேன்ப்பா அண்ணா.. இப்போ வாப்பா போலாம்.. விடிஞ்சா ஊர் போனவங்க திரும்பிருவாங்க..."

அவனை வலுக்கட்டாயமா பிடிச்சு இழுத்து படியில் இறங்கினேன்... அவனை படுக்க வச்சுட்டு நான் படுக்கும் போது பொழுது மெதுவா விடியத் துவங்கியிருந்தது... அதுக்கு அடுத்து இரண்டு நாட்களில் எங்க பள்ளி என்.எஸ்.எஸ் சார்பாக திருவள்ளூர் பக்கம் ஒரு கிராமத்துக்கு ஒரு நாள் விசிட்க்கு நாங்க எல்லாம் கிளம்புனோம்...

நான் கிளம்பிகிட்டு இருக்கும் போது சரவணன் என் பக்கம் வந்தான்.. என் கையில் ஒரு காகிதத்தை திணித்தான்...நான் என்ன ஏதுன்னு அப்பிராணியாய் அவனைப் பார்த்து முழித்தேன்...

"நீ தான் புரிய வைக்கணும்.... எப்படியாவது புரிய வை.. இதுல்ல எல்லாம் எழுதியிருக்கேன்... அவக் கிட்டக் கொடுக்கணும்.. புரியுதா?...." அவன் அவசரமாய் கட்டளைகள் போட்ட வண்ணம் இருந்தான்.

அடப்பாவி நீ வாங்கிக் கொடுத்த சரக்கும் சைட் டிஷ்க்கும் கடனை வாங்கியாவது கொடுத்துடுரேன்டா..அதுக்குன்னு என்னை இப்படி போஸ்ட் மேன் வேலை எல்லாம் பாக்க வைக்காதேடா... சொல்ல முடியாமல் வார்த்தைகளை வாயில் வைத்து மென்று கொண்டிருந்தேன்...

"உன்னைத் தான்டா நம்பியிருக்கேன்... நீ என் தம்பிடா"

"தம்பிக்குக் கொடுக்குற வேலையாடா இது... வெக்கம் கெட்ட அண்ணா சரவணா" மீண்டும் பாசம் பிரேக்கடித்து போர் மேகம் சூழ ஆரம்பித்தது...

"சரி இதை நான் யார்கிட்டக் கொடுக்கணும்.....?"

"சிவரஞ்சனி கிட்ட..."

"என்னதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ? எங்க சயின்ஸ் சிவரஞ்சனி மிஸ் ஐயா நீ லவ் பண்ணுற....?

என்னை மொத்தமா சூப் வைக்க சூதாத் திட்டம் போடுறீயா நீ..." நான் கொஞ்சம் பொங்கி விட்டேன்.. பின்னே... இப்படி ஒரு அண்ணன் கிடைத்தால் என்ன ஆகும்...

"அடச்சே.. உன் கூட படிக்குறாளே நம்ம அவென்யூ சிவரஞ்சனிடா ..."

இந்தப் பதில் என்னை இன்னும் உசுப்பேத்தியது...இதுக்கு நீ எங்க சயின்ஸ் மிஸ் ஐயே லவ் பண்ணியிருக்கலாம்... இவளை எல்லாம் போய்....என் பரம் விரோதிகிட்டப் போய் நான் வளைஞ்சு நெளிஞ்சு உனக்காக லவ் லெட்டர் கொடுக்கறதா.......?

என் கொள்கையை அவன் அன்பு தளர்த்தியது....அவன் அன்பு என் பாக்கெட்டை நிறைத்தது... இருந்தாலும் ரஞ்சனிகிட்ட நான் போய் லெட்டர் கொடுப்பதை நினைத்தால் எனக்கு தாங்க முடியவில்லை தான்.... என்னச் செய்யறது அண்ணனின் வளமான அன்பு முன்னால் என் கொள்கை முக்காடு போட்டு கும்பிடு போட்டது....

சரக் சரக் என அஞ்சு அம்பது ரூபாய் தாள்களில் அண்ணன் சரவணனின் அன்பு முகம் தெரிந்தது...

என் அண்ணன் சரவணனுக்காக கையில் கடிதம் எடுத்துக் கிளம்பினேன்...

தொடரும்

Saturday, February 16, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 4

முந்தைய பகுதி படிக்க

இரண்டு நாள் முழுக்க மனசெல்லாம் என்ன என்னவோ கேள்விகளால் நிறைஞ்சுப் போயிருந்துச்சு.. இதைப் பத்தி யார்கிட்டவும் முழுசா பேசவும் முடியல்ல...என்னப் பண்ணுறது? அப்படின்னு எனக்கு நானே கேட்டுகிட்டு மொட்டை மாடி.... வீட்டுக்குப் பின்னாடி... தெரு கோடி... இப்படி எல்லா இடத்துல்லயும் நின்னு நடந்து யோசிச்சும் ஒண்ணுமே புரியல்ல...

என்னுடைய கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்குறதுக்குன்னு ஒரு அருமையான் வாய்ய்பு வந்துச்சு.. அந்த வாரம் சனி ஞாயிறு அப்பாவும் அம்மாவும் திருச்சியில்ல நடக்க இருந்த ஒரு கல்யாணத்துக்குக் கிளம்புனாங்க.. வீட்டுல்ல நானும் என் அண்ணனும் மட்டும் தான் இருக்கப் போறோம்.. அந்த வாய்ப்பை வாழைபழத்தை வாயிலே போடுற மாதிரி அழகாக பயன்படுத்திக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்,,, அது வரைக்கும் என் வாழ்க்கையிலே எதையுமே நான் தனியாச் செஞ்சதுல்ல... எல்லாத்துக்கும் என் நண்பர்கள் கூட்டணி கட்டாயம் உண்டு... ஆனா இந்த விசயத்துல்ல யாரையும் கூட்டுச் சேக்க முடியாது... கூடாது...ஏன்னா சரவணன் என் அண்ணன்...

வெள்ளிகிழமை வந்துச்சு..அப்பா அம்மா ஊருக்கு கிளம்புறதுக்கு கொஞ்சம் முன்னாடி சரவணனும் ஒரு சின்ன பையைத் தூக்கிட்டு கிளம்பினான்... அவன் ப்ரண்ட் யார் வீட்டுக்கோ குரூப் ஸ்டடி பண்ணப் போறதா அப்பா கிட்ட அவன் சொன்னது அரசல் பொரசலா என் காதுல்ல விழுந்துச்சு... அப்படின்னா இன்னிக்கு ராத்திரி வீடு மொத்தமும் நம்ம கன்ட்ரோல் தான்... என் மனக் கண்ணில் வீடு அப்படியே ஒரு கிளப் செட்டப்புக்கு மாறுவது தெரிந்தது.. அந்த ஆர்ட் டைரக்ட்டரை அப்படியே ஆப் பண்ணிட்டு உள் மனசு வேற ஒரு திட்டம் போட்டது...

வழக்கமான சட்டத்திட்டங்களை ஞாபகபடுத்திவிட்டு இரண்டு நாள் செலவுக்குன்னு ஒரு சின்னத்தொகையை அப்பா கொடுத்துட்டு கிளம்ம்புனார்... அப்பா அப்படி நகர்ந்ததும் என் பாவமான முகத்தைப் பார்த்து அம்மா பாசத்தோடு அப்பா கொடுத்த சின்னத் தொகையின் இருமடங்கை என் பாக்கெட்டுக்குள் வைத்து விட்டு போனார். மொத்தத் தொகையும் கூட்டிக் கழித்து ஒரு பட்ஜெட் போட்டதில் செட்டிநாட் ஓட்டலில் மூணு வேளையும் நல்லா முக்கி கட்டலாம் எனத் திருப்தி பட்டுக்கொண்டேன்.. வெகு நாளாக சாப்பிட நினைத்த முழு கோழி தந்தூரியை இந்த முறை எப்படியும் சாபிட்டரணும் என முடிவு செய்துகிட்டேன்.

ஒரு பத்து மணி வாக்குல்ல வீட்டுல்ல நானும் என் தனிமையும் ஒய்யாரமா உக்காந்துகிட்டு இருக்கோம்.. டேப் ரிக்கார்டர்ல்ல் செந்தூர பூவே பாட்டு ஓடி கிட்டு இருக்கு... எனக்கு இருப்பு கொள்ளவில்லை..

என் அண்ணன் சரவணனுக்குச் சொந்தமான எல்லா பொருட்களையும் ஒரு அலசு அலசி ஓய்ந்திருந்தேன்... அதில் அவனை மாட்டி விடுற மாதிரியான எந்தப் பொருளும் இல்ல... அன்னிக்க்கு நான் பாத்தது சரவணன் தானா... வளையம் வளையமா இல்ல புகையை விட்டான்.... ஓவர் மப்புல்ல நமக்கு அன்னிக்கு பாத்தவன் எல்லாரும் சரவணன் மாதிரி தெரிஞ்சிட்டாங்களா?.... பைய ரூம்ல்ல ஒண்ணும் சிக்கல்லயே... ஒரு தம்... ஒரு வத்திப் பொட்டி...ஒரு லைட்டர்... பைய எமகிராதகனால்ல இருக்கான்.. என் அண்ணன் ஆச்சேன்னு சொல்லிகிட்டேன்...

அவன் மேசை முழுக்க ஒரே புத்தகமா இறைஞ்சு கிடந்துச்சு.... பாதி பொஸ்தகம் பேரை நான் படிக்குறதுக்குள்ளவே நமக்கு நாக்கு தள்ளியிருச்சு... வித விதமான பிசிக்ஸ் புக்...பார்மூலா நோட்ஸ்...எப்படி தான் இதை எல்லாம் படிக்கிறானோ.. நமக்கு இதுல்ல இருக்க நாலு படத்தைக் கூடப் பாக்க முடியல்லயே....

அறை முழுக்க மீண்டும் தேடி ஓயந்தேன்...

மேடையில் அப்பா பேசிகிட்டு இருந்தார்..

"என் பசங்களை உங்க எல்லாருக்கும் தெரியும்.... சிவா அதோ அங்கே உக்காந்து இருக்கான்... போன வருசம் அவன் நம்ம அவென்யூ நூலகத்துக்கு நிறைய கவிதை பொஸ்தகம் வாங்கி கொடுத்தான்... இந்த வருசம் அவங்க அண்ணன் சார்பா நிறைய அறிவியல் புத்தகங்கள் கொடுக்கிறேன்...." ரெண்டு மூணு அட்டைப் பொட்டி நிறைய இருந்த புத்தகங்கள் மேடையில் வைக்கப் பட்டன... பழைய புத்தகம் என சொல்ல முடியாதப் படி அவ்வளவு அழகாக பாதுகாக்கப்பட்டிருந்தது...

மேடையில் இருந்து என் கவனம் எங்கெங்கோ போய் வந்தது... மீண்டும் அந்த அட்டைப் பெட்டிகளைப் பார்த்தேன்...

அன்னிக்கும் அப்படித் தான் ஓய்ஞ்சுப் போய் அவன் கட்டிலில் உட்கார்ந்தப்போ காலுக்கு அடியில் அந்த ஷூ பாக்ஸ் தட்டுப்பட்டுச்சு... அடப்பாவி புது ஷூ வாங்கி ஒளிச்சு வச்சிருக்கான்டான்னு ஆவேசமா அந்தப் பொட்டியைப் பிரிச்சா உள்ளே.. சிகப்பு கலர் டைரி.... மடிச்சு வைக்கப்பட்ட நிறைய காகிதங்கள்.... காய்ந்துப் போன ரோஜாப் பூக்கள்...

டைரியைப் பிரிச்சு வாசிக்க ஆரம்பிச்சேன்....அம்புட்டும் கவிதை... காதல் கவிதை... வரிக்கு வரி வார்ததை அசத்தலான கவிதை... ஆண்டவா... ஆனாலும் நீ ரொம்ப அநியாயம் பண்ணுறடா... ஒருத்தனுக்கே எல்லாத்தையும் வாரிக் கொடுத்துட்டியேடா.. படிப்பு... விளையாட்டு.. பாட்டு... கவிதைன்னு அம்புட்டும் கொடுத்துட்ட... கொடுத்துட்டு போ ஆனா அவனை ஏன்ய்யா எனக்கு அண்ணனாக் கொடுத்து என் வாழ்க்கையை போர்களமா மாத்திட்ட....

எனக்கு கவிதைப் பிடிக்கும்... பத்தாம் கிளாஸ் படிக்கும் போதே சினிமா பாடல்களை இசையயும் தாண்டி வரிகளுக்காக ரசிக்க கத்துகிட்டேன்.. அவன் எழுதுன கவிதை எனக்கு பிடிச்சு இருந்துச்சு.. அந்த கவிதைக் காரணமாய் அவன் மீது ஒரு மரியாதை வந்தது... மரியாதை மட்டும் தான்.. ஆனா அதையும் தாண்டி அவன் மீது கோபம் அதிகமானது...

கடைசி கவிதையைப் படிக்கும் போது எங்கேயோ எதுவோ சரியில்லன்னு என் உள் மனம் சொன்னது...

அந்தக் கடைசி கவிதை....

சாதல் சாதாரணம்... காதல் சதா ரணம்...

என்ன இது அண்ணாத்த இவ்வளவு பிலீங்க்க்கா எழுதியிருக்கான்...யாரையாவ்து லவ் பண்ணுறானோ..நம்ம மண்டைக்குள்ளே விளக்கு பிரகாசமா எரிய ஆரம்பிச்சது...

"டேய் சரவணா.. சிக்கிட்டீயேடா.. வசமா சிக்கிட்டீயே... அந்த 'ரணம்'யாரால்லன்னு நான் குட்டிக'ரணம்' அடிச்சாவது கண்டுபிடிக்குறேன்டா... அப்புறம் பாருடா நீ எனக்கு எவ்வளவு சாதரணம்ன்னு..."

பத்தரை மணி இருக்கும் கதவு தட்டப்பட்டது... சிகப்பு டைரியை ஷூ பாக்ஸ்குள் வைத்து விட்டு பாக்ஸை மீண்டும் கட்டிலுக்கு அடியில் தள்ளிவிட்டு... ரொம்ப சாதரணமாய் போய் கதவைத் திறந்தேன்...வாசலில் சரவணன்...அவன் கையில் பை இல்லை...

அவனிடம் நானும் எதுவும் கேட்கவில்லை அவனும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை..உள்ளே வந்தவன் நேரா அவன் கட்டிலுக்குப் போய் படுத்துகிட்டான்... நான் வராந்தாவில்ல உருண்டு பொரண்டு தூக்கம் வராம மோட்டுவளையைப் பாத்துகிட்டு இருந்தேன்... ராத்திரி நீண்டுகிட்டேப் போச்சு..எப்போ தூங்குனேன்னு எனக்கேத் தெரியாது

தீடிரென்னு முகத்துல்ல சில்லுன்னு பீரைத் தெளிச்சாப்பல்ல இருக்கவே மெதுவாக் கண்ணைத் திறந்துப் பாத்தேன்.. வாசல் கதவு திறந்து இருக்கு...அடுத்தாப்பல்ல அவன் கட்டிலைப் பார்த்தா போர்வைக் கலைஞ்சுக் கிடக்கு... அவனைக் காணூம்

ஆகா அவனை யாராவது கடத்தியிருப்பாங்களோ... கடத்தல் காரங்க காசு கேட்டா அவனுங்களுக்கு கடலை மிட்டாய் கூடத் தரப்பிடாது.. தொலையட்டும் சரவணன்.. இப்படித் தான் முதல்ல எக்குத்தப்பா யோசிச்சேன்...தூக்கம் குளிர் காத்து பட்டு தெளியவும் யோசனை ஒழுங்கான வழியிலே போக ஆரம்பிச்சது...சுவத்துல்ல இருக்க கடிகாரத்துல்ல மணியைப் பாத்தேன் மணி அஞ்சு தான் ஆகி இருந்துச்சு.. அஞ்சு மணிக்கு அண்ணன் எங்கெ போறான்... கதவைச் சாத்தி தாழ் போட்டுட்டு சட்டையை மாட்டிகிட்டு கிளம்புனேன்...

ஒரு தோராயமா அன்னிக்கு அவன் புகையைக் கக்குன இடத்துக்கு போனேன்... அங்கே அதே மரத்தடியிலே ஒரளவுக்கும் வளையமாவும் சதுரமாவும் புகையை விட்டுகிட்டு இருந்தான்.... ஆனா அன்னிக்கு விட இன்னிக்கு செம வேகம்... ஒரு சிகரெட் முடிஞ்சதும் அடுத்த சிகரெட் எடுத்துப் பத்த வச்சான் அதையும் அதே வேகம் குறையாமல் இழுத்தான்...

ஆகா குளிருக்கு இதமா நானும் ஒரு தம் போடலாம் போல இருந்துச்சு... வெக்கத்தை விட்டு அவன் கிட்டப் போய் ஒரு தம் கடனாக் கேக்கலாமான்னு நான் யோசிக்கவே ஆரம்பிச்சிடேன்.. புகை ஒரு பக்கம் போனாலும் அவன் பார்வை வேறு ஒரு பக்கம் இருந்தது.. அவன் பார்வை போன பக்கம் நானும் போனேன்.. அதற்குள் அவன் தம்மை மிதித்து விட்டு வேகமான நடையில் எதிர் பக்கம் போனான்... நானும் வேகம் கூட்டி பின்னாடியே போனேன்... அவன் முழுசாய் பிடித்து முடிக்காத இரண்டாம் சிகரெட் தரையில் கிடந்து என்னைப் பார்த்தது.. அதில் ஒரு சில வினாடிகள் தொலைத்து நான் நின்னுட்டேன்...

சரவணன் அந்தக் கேப்புல்ல எதிர்பக்கம் போயிட்டான்... நானும் எதிர் பக்கம் பதுங்கி பம்மி போனேன்..அவன் ஒரு வீட்டு கேட்டைத் திறந்து கொண்டு உள்ளேப் போனான்... அவ்வளவு தான் அடுத்த சில வினாடிகளில் அந்த வீட்டில் லைட் போடப்பட்டது.. கூச்சலும் இரைச்சலும் என அவென்யுவே விழிக்கத் தொடங்கியது...

முதலில் எனக்கு எதுவுமே புரியவில்லை... அவசரத்தில் நான் பதுங்கிகொள்ள இடம் பார்த்து ஒதுங்கினேன்... மூச்சிரைக்க என்னைத் தாண்டி வேகமாய் போய் கொண்டிருந்த சரவணனை என்ன நினைத்தனோ எனக்கே தெரியாது.. என் முழு பலத்தையும் பயன்படுத்தி நான் பதுங்கியிருந்த மறைவிடத்துக்குள் இழுத்து அழுத்தினேன்... அது ஒரு மரக் கூடாரம்.. இந்த பூக்காரங்க எல்லாம் வச்சிருப்பாங்களே அதை மாதிரி கொஞ்சம் பெரிய சைஸ்...

சரவணணும் நானும் பதுங்க அது போதுமானதாக இருந்தது...

"அந்தப் பக்கம் போனான் சார்..."

"பனியில்ல எந்தப் பக்கம்ன்னு சரியா தெரியல்ல சார்"

"யாருக்கும் எதுவும் ஆகல்லயே...."

"இல்ல என் பொண்ணு தான் பார்த்து பயந்து கத்தியிருக்கா...மத்தப் படி எல்லாம் சேப் தான்"

"I THINK WE NEED TO FILE A COMPLAINT WITH POLICE"

"வேணாம் சார் எதுவும் திருடு போகல்ல... அது வேற வயசு பொண்ணு போலீஸ் ஸ்டேசன் அது இதுன்னு விட்னஸ்க்கு கூப்பிட்டா சரி வராது சார்"

"ம்ம்ம் அதுவும் சரி தான்... பேசமா அவென்யுக்கு ப்ரைவெட் செக்யூரிட்டி போட்டுருவோம்... இந்தத் திருட்டுப் பசங்க திரும்பி வந்தாலும் வருவாங்க..."

அங்கு ஆளுக்கு ஆள் பேசிக் கொண்டிருந்தார்கள்... நான் சரவணன் முகத்தை உற்று பார்த்து கொண்டிருந்தேன்.. அவன் முகம் பயத்தில் வெளிறி போயிருந்தது.. மூச்சிரைப்பது நிற்க வில்லை..அவன் என்னைப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாமல் பார்த்தான்...என்ன இருந்தாலும் அண்ணன் ஆச்சே.. அவன் தர்மசங்கடத்தைத் தவிர்க்க நான் மரக்கூடாரம் ஓட்டை வழியே வெளியே பார்த்தேன்..

ரஞ்சனி வீட்டுக்கு முன்னால் கூடியிருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா கலைஞ்சுப் போயிட்டு இருந்தாங்க.. எல்லாரும் போனப் பின்னாடி கேட்டைச் சாத்த வந்த ரஞ்சனி மரக்கூடாரம் பக்கமா பார்த்தா.. நான் அசையாம அப்படியே இருந்தேன்...அப்புறம் ரஞ்சனி உள்ளே போயிட்டா...

ஒரு பெருமூச்சு விட்டப் படி சரவணன் பாக்கெட்டுக்குள்ள கை விட்டு மீதி இருந்த கடைசி சிகரெட்டை எடுத்து என் வாயில் வச்சுப் பத்த வச்சு புகையை அந்த ஓட்டை வழியா வெளியே விட்டேன்... சரவணன் கையிலே முந்தா நாள் ராத்திர் அவன் வச்சிருந்த பை இருந்தது..அதை அவன் கெட்டியாகப் பிடித்திருந்தான்...

சாதல் சாதரணம்... காதல் சதா ரணம்.... புகைக்கு நடுவே இந்த கவிதையும் என் வாயில் இருந்து வெளியெ வந்துச்சு...


தொடரும்

Monday, February 04, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 3

முந்தைய பகுதி படிக்க

படிப்பை பத்தி மட்டும் சொல்லிட்டு விட்டுட்டேன்.. விளையாட்டுல்லயாவது எனக்கு எதாவது பெருமை தேறுமான்னு கேட்டா அதுவும் ஒரு பெரிய சோக கதை தான்..சரவணன் டென்னிஸ் கோச்சிங் போனான். அதுல்ல நல்ல தேர்ச்சியும் அடைஞ்சிட்டான். ஸ்கூலுக்காக விளையாடினான்.. கப் எல்லாம் கூடி வீட்டுல்ல வச்சிருந்தான். என்னியும் தான் கோச்சிங்ல்ல சேர்த்து விட்டாங்க... ஆனா முதப் பார்வையிலே எனக்கு அந்த கோச்சுக்கும் பொருந்தாப் பார்வையாப் போயிருச்சு.. அவருக்கு என்னைப் பிடிக்கல்ல எனக்கு அவரைச் சுத்தமாப் பிடிக்கல்ல...

கோச்சிங்கற பேர்ல்ல என்னைய கிட்டத்தட்ட எல்லா நேரமும் பந்து பொறுக்கிவிடுற சாகுல்லயே அலையவிட்டான்... ஒரு நாள் கடுப்பாகி பந்தை எடுத்து திரும்பி நின்னுகிட்டிருந்த அவர் நடு மண்டையில்ல நச்சுன்னு அடிச்சுட்டேன்... சேதராம் ஆகிப் போயிருச்சு... புல் கூட முளைக்க யோசிக்கிற அவர் மண்டையிலே ஒரு எலுமிச்சம்பழம் காய்ச்சுருச்சு.. அதை வீக்கம்ன்னும் சொல்லலாம்...அதுக்கு அப்புறம் என்ன நடக்கும் கோச்சிங்ல்ல இருந்து நம்ம நீக்கம் தான்...

சரி டென்னிஸ் தான் சரி வரல்லயேன்னு விளையாட்டுல்ல இருந்து விலகி நிக்க நம்ம வீர மனசு ஓப்பல்ல.. ஸ்கூல்ல்ல ஸ்போர்ட்ஸ் டே வந்துச்சு..அதுக்கான தகுதி சுற்றுகள் ஆரம்பத் தேதி நோட்டீஸ் போர்ட்ல்ல போட்டாங்க.. நமக்கு டக்குன்னு ஆசைப் பொங்கிருச்சு..ஓடத் தானே செய்யணும்..பஸ்ல்ல இருந்து இறங்கி ஓடுறது... மரம் ஏறி குதிச்சு ஓடுறது... எங்கிட்டாவது தாவி ஓடுறது... அது போதுமே தகுதின்னு களத்தில் இறங்க முடிவு பண்ணிட்டேன்..அதுல்லயும் ஒரு தடை வந்துச்சு

ஓட்டப்பந்தயம் தகுதி சுற்றுல்ல கலந்துக்கணும்ன்னா ஸ்போர்ட்ஸ் ஷார்ட்ஸ் வாங்கணும்ன்னு சொல்லிட்டாங்க... நம்ம கிட்ட இருந்ததோ எல்லா முழு பேண்ட் என்னப் பண்ணுறது யோசிக்க ஆரம்பிச்சேன்... டென்னிஸ்க்கு கூட ட்ராக் சூட் தான் போட்டுகிட்டு போவோம்... நம்ம் தைஸ் எல்லாம் இன்னும் அவ்வளவா டெவலப் ஆகாத நேரம்... பெப்சி செவன் பிடோ டிடோ லெக்ஸ் பாத்து இருக்கீங்களா அப்படி இருக்கும் நம்ம கால்... ரொம்ப நேரம் யோசிச்ச பின்னாடி கணேஸ் என்னைப் பாத்து ரொம்பவும் அக்கறையாக் கேட்டான்... டேய் நீ அவசியமா ஓடித் தான் ஆகணுமா....தேவையான்னு யோசி...நானும் எந்த விளைவைப் பத்தியும் கவலைப்படாம ஆமான்னு திடமாத் தலையாட்டினேன்,, எனக்கு ஸ்போர்ட்ஸ் ஷார்ட்ஸ் ஏற்பாடு செய்யும் பொறுப்பை அவன் ஏற்று கொண்டான்.

தகுதி சுற்று நாள் அன்னிக்கு எப்படியோ ஒரு ஷார்ட்ஸ் ஏற்பாடு பண்ணி கொண்டு வந்திட்டான் கணேஸ்... சைஸ் தான் கொஞ்சம் பெருசா இருந்துச்சு... இருந்தாலும் நாடாவெல்லாம் போட்டு இறுக்கி கட்டி நானும் கிளம்பிட்டேன்...பசங்க எல்லாம் என்னை உற்சாகப் படுத்த ஒரு கும்பலா வந்து இருந்தாங்க.. எனக்குப் பெருமையா இருந்துச்சு... எனக்காக இல்லன்னாலும் உங்களுக்காகவது ஜெயிக்கிறேன்டா அப்படின்னு சொல்லிட்டு ஓட கிளம்பினேன்.. அன்னிக்கு மட்டும் ட்ரெக்ல்ல அப்படி ஒரு விபத்து நடக்காமப் போயிருந்தா.. இன்னிக்கு ஒரு வேளை இந்தியாவுக்காக ஓலிம்பிக்ல்ல ஓடியிருப்பேனோ என்னவோ... என்னப் பண்ணுறது விபத்து எல்லாம் சொல்லிட்டா நடக்குது.. அது பாட்டுக்கு நடக்குது. நாசங்களை ஏற்படுத்துது..

அந்தக் கோர விபத்துக்கு காரணம் என் பக்கத்து ட்ராக்ல்ல ஓடுன கேசவன்... அவன் சிலிப்பாகி விழப் பார்த்தான்... விழப்போனவன் பிடிக்க எதாவது தேட அவன் கையில் சிக்கியது என் ஷார்ட்ஸ் நாடா... அவ்வளவு தான்... புதுசா எதோ ஒரு சோரூம்க்கு ரிப்பன் கட் பண்ண மாதிரி ஒரே கைத் தட்டல் தான்... நான் ஓப்பன் கிரவுண்ட்ல்ல ஓப்பனாகி நிக்க... அந்த விபத்து எங்க பள்ளி ஸ்போர்ட்ஸ் வ்ரலாற்றுல்ல இன்னும் எதோ ஒரு பக்கத்துல்ல இருக்குதாம்.. இப்படித் தான் என் விளையாட்டு வாழ்க்கை முற்றும் முடிந்து அவிந்துப் போனது...

"புதுசா ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்... உங்க பேங்க்ல்ல எதாவது லோன் கிடைக்குமா பார்த்து சொல்லேன்" சோமு சீனியிடம் கேட்டான். அதுக் கேட்டு நானும் நினைவுக்கு வந்தேன்

"பண்ணலாம் நல்ல ப்ரொபசல் இருந்தாச் சொல்லு...ட்ராப்ட் பண்ணி எடுத்துட்டு உக்காந்து பேசலாம்.. அந்த டிப்பார்ட்மெண்ட்ல்ல நமக்கு வேண்டிய ஒருத்தர் இருக்கார்"

எஸ்.எஸ் லெண்டிங் லைப்ரரி...ஒரு பழைய அட்டைப் பெட்டியைப் பாதியாப் பிரிச்சு அதுல்ல கீரிஸ் ஆயில் வச்சு பெரிசு பெரிசா கையெல்லாம் மை நிறைஞ்சி இருக்க எழுதி முடிச்சு சோமுவைப் பாத்தேன்.. ஆமா நான் முதல் முதல்ல பண்ண வியாபாரம் அது தான்.. லெண்டிங் லைப்ரரி.. முதல்ன்னு மொத்தம் முப்பது ரூபா போட்டோம். நான் பதினைஞ்சு.. சோமு பதினைஞ்சு.. எங்க வீட்டு முன் ரூம்ல்ல இருந்த மூணு செல்ப் தான் நூலகம்.. அதுல்ல இருந்த 18 புத்தகங்களை வச்சு தான் ஒரு சுபயோக தினத்தில் வியாபாரத்தை ஆரம்பிச்சோம்...முதல்ல நூலகத்தில்ல கோகுலம், அம்புலி மாமா, ட்விங்க்ள், அமர் சித்ரகதா, ரத்னபாலா, சிறுவர்மலர், ஸ்போர்ட்ஸ்டார், இப்படி தான் புக் இருந்துச்சு..அவென்யூ வாண்டுகள் தான் எங்க நிறுவனத்தின் பெருமை மிகு வாடிக்கையாளர்கள்.. நாலணா வாடகைக்கு எல்லா புக்கும் கிடைக்கும்.. நாலு நாள்ல்ல திருப்பிக் கொடுத்துரணும் அது தான் சட்டம். வியாபாரம் அமோகமாப் போயிட்டு இருந்த நேரம்... சோமுவுக்கு அப்படி ஒரு யோசனை வந்துச்சு..

சும்மா வைக்கிற குழம்பு இன்னும் கமகமன்னு மணம் வீசணும்ன்னா அப்படி இப்படி மசாலா சேர்த்தா இன்னும் அருமையா இருக்கும்ன்னு ஆளுக்கு ஆள் ஆலோசனை சொல்லுவாங்களே...அந்த டிப்ஸ் சில சம்யம் நல்லா ஒர்க் அவுட் ஆகும் சில சமயம் குழம்பு குப்பைக்கு போற அளவுக்கு நாக் அவுட்டும் ஆகும்...அது மாதிரி தான் ஆச்சு...இப்படி சின்னப்புள்ளங்க பொஸ்தகம் எல்லாம் போட்டு எப்படி நாம் முன்னேறுவது.. கொஞ்சம் வியாபாரத்தை "பெருசா" பண்ணலாம்ன்னு சொன்னான். சேர்த்து வச்ச துட்டை எல்லாம் எடுத்து அப்படி இப்படி நாலு புக் வாங்கி வச்சோம்... அதுக்கு மட்டும் எட்டணால்ல இருந்து ஒரு ரூபாய் வரைக்கும் ரேட் எல்லாம் வச்சு முதல்ல வியாபாரம் பிச்சுகிட்டுப் போச்சு... ரஞ்சனி வந்து எங்க லைப்ரரில்ல மெம்பர் ஆகுற வரைக்கும்...

பொண்ணுங்க எல்லாம் அந்த மாதிரி புக் படிப்பாங்களான்னு சோதிச்சுப் பாக்குற பாழாப் போன ஆசை சோமுவுக்கு வந்து தொலைச்சுது.. அந்த ஆசையை சோதனையா அவன் செய்ய தோதா ரஞ்சனியின் வரவு அமைஞ்சுப் போச்சு...சோதனையின் முடிவைச் சொல்லணுமா என்ன..

ரொம்ப நாள் வரைக்கும் எங்க வீட்டு வாசல்ல அந்த அட்டைப் பெட்டி பெயர் பலகையில் ஒரு எஸ் மட்டும் கிழிந்து தொங்கி கொண்டிருந்தது...எங்கள் முதல் வியாபார முயற்சி இப்படி ஒரு அல்ப ஆசையில் அல்பாயுசில் முடிந்துப் போனது..அந்தக் கிழிந்த எஸ் அட்டையும் பின்னொரு மழை நாளில் நன்றாக நனைந்துப் போனது மெல்ல மொத்தமாய் கிழிந்துப் போனது...

அதுக்குப் பின்னாடி எனக்கு வியாபார கனவுகள் எதுவும் வர்றதே இல்ல.. ஆனா சோமு இன்னும் அந்த கனவுகளைச் சுமந்துகிட்டு தான் திரியுறான்னு நினைக்கும் போது மெல்ல சிரிச்சுகிட்டேன்.

மேடையில் அப்போது அவென்யு சிறுவர்கள் குழுவாக இணைந்து ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே பாட்டைப் பாடிகிட்டு இருந்தாங்க...இது போல நாங்களும் எத்தனை தடவைப் பாடியிருப்போம் யோசிச்சுப் பாத்துகிட்டேன். அந்த குழுவில்ல இரட்டை குழந்தைகள் வேறு இருந்தாங்க... ஒருத்தர் கையை ஒருத்தர் பிடிச்சுகிட்டு அருமையாப் பாடிகிட்டு இருந்தாங்க... இப்படி ஒரு ஆண்டுவிழா நடக்கும் போது... நான் பன்னிரெண்டாம் கிளாஸ் முடிச்சிருந்த நேரம்ன்னு நினைக்கிறேன்... நாங்க ஒரு குழுவா மேடையேறி..அவென்யு வரலாற்றில் முதல் முறையாக சும்மா அதிரும் படியான ஒரு கானாக் கச்சேரியை போட்டு தாக்குனோம்..

சின்னப் பசங்க எல்லாம் செம குத்துப் போட.. அவென்யுவே அல்லோலப்பட்டு அப்படி ஒரு கும்மாளமாப் போச்சு..அன்னிக்கு வாழ்க்கையிலே நான் ரொம்ப சந்தோசப்பட்டேன் ஆனா அந்த சந்தோசம் அதிகப்பட்சம் அஞ்சு நிமிசம் கூட நீடிக்கல்ல... எங்களுக்கு அடுத்து மேடை ஏறுனான் என் அண்ணன் சரவணன்...நம்ம குரல் தேனிசை தென்றல்ன்னா... அவன் குரல் கொஞ்சம் மலையாள தாஸ் ஏட்டன் குரல்... அதுல்லயும் காக்கைச் சிறகினிலே நந்தலாலான்னு ஆரம்பிச்சு அவன் குரல் ஏத்த இறக்கத்துல்ல பெருசு சிறுசு.. முக்கியமா பொண்ணுங்க எல்லாம் சொக்கி சுழண்டாளுங்க...இது எல்லாம் என் கண் முன்னாடியே நடந்துச்சு...

ஹிரோன்னு சொல்லி இன்ட்ரோ கொடுத்து நடுவுல்ல காமெடியன் ஆன மாதிரி இருந்துச்சு எனக்கு.

சரவணா...சரவணா... இன்னொரு பாட்டு பாடுப்பா... எல்லாரும் கேட்க....

ம்ம்ம்ம் நல்ல ரொமான்டிக்காப் பாடுப்பா... பொண்ணுங்க பக்கம் இருந்து குரல் வந்தது...யாராக இருக்கும் என நான் தலையை நிமித்தி பாத்திருப்பேன், ஆனா ஏற்கனவே கடுப்பிலே கண்டப் படி கவுந்து போய் கிடந்தது என் மனசு...

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா.. எம் மனசுல் அம்பு விட்ட நிலா.... அவன் குரல் நான் அவென்யு வாசலைத் தாண்டி வந்த பிறகும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. நான் பாட்டுக்கு கோவத்துல்ல எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ அவ்வளவு தூரம் நடந்தேன்.. கால் வலிக்கற வரைக்கும் நடந்தேன்..அவன் குரல் என் காதில் விழாத வரை நடந்தேன்.. எனக்கு கிடைக்கிற எல்லாச் சந்தோசத்துல்லயும் பங்கு போடணுமா என்ன.... தலை வலித்தது..

தலை வலிக்கு சிறந்த மருந்து எதுன்னு யோசிச்சு முடிக்கறதுக்கு முன்னாடியே நண்பர்களிடமிருந்து வைத்திய முகாமுக்கு அழைப்பு வந்தது... நல்லா தண்ணியைப் போட்டுட்டு கணேஸ் பைக்ல்ல பின்னாடி உக்காந்து அவென்யுக்குள்ளே நுழையும் போது அவன் தான் என் கண்ணில் பட்டான். பத்து மணியாச்சிருச்சு.. பைய போத்திகிட்டு தூங்குற நேரமாச்சே.. இங்கே என்னப் பண்ணுறான்... தள்ளாட்டமாய் வண்டியின் பின்புறம் இருந்து பார்த்தேன்...

சும்மா சிக்கு புக்கு சிக்கு புக்குன்னு ரயில் வண்டியை விட வேகமாய் பைய தம் போட்டுகிட்டு இருந்தான்... என் அண்ணன் சரவணன் .. இம்புட்டு அழகா ரவுண்ட் ரவுண்ட்டா புகை விடுவானா.... எனக்கு போதை தெளிந்தது...

தொடரும்