Tuesday, March 02, 2010

மீண்டும் தென்கிழக்கு வாசமல்லி - 1

TO LOVE AND TO BE LOVED ARE GOD'S MOST VALUED GIFTS TO A MAN என்னையுமறியாமல் என் உதடுகள் முணுமுணுத்தன..

(தென்கிழக்கு வாசமல்லி இப்பகுதி இத்தோடு முடிகிறது....மீண்டும் என் வாழ்க்கையில் இந்த மல்லி வாசம் வீசியது.. வேறொரு சூழலில் வேறொரு சந்தர்ப்பத்தில் சமயம் கிடைக்கும் போது அதைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்..

அப்போ சொன்னப் படி இப்போ திரும்பவும் என் கதையை உங்க கிட்டச் சொல்ல வந்துட்டேன்....

வாழ்க்கையிலே காதல்ங்கறது ஒரு சுகமான அனுபவம்ங்கறதை அனுபவிச்சவங்க மட்டுமில்ல அனுபவிக்காதவங்களும் தங்களோட வாழ்க்கையின் எதாவது ஒரு காலக்கட்டத்துல்ல ஒத்துக்குற ஒரு உண்மை... முதல் காதல்ங்கறது தீ மாதிரி....அணைஞ்சுப் போனாலும் மனசுக்குள்ளே எங்கேயோ இன்னும் புகைஞ்சுகிட்டே தான் இருக்கும்...
என்னோட முதல் காதலின் முகவரி...ரஞ்சனி....ரஞ்சனி பிரியதர்ஷனி...

ரஞ்சனியை திரும்பவும் சந்திப்பேன்னு நினைக்காத ஒரு பொழுதுல்ல சந்திச்சேன்....ரஞ்சனியை திருநெல்வேலியில்ல சந்திச்சப் பிறகு மூணு மாசத்துல்ல கல்லூரி படிப்பை முடிச்சேன்...அப்புறம் சென்னையிலே கொஞ்ச நாள் தங்கி என்னஎன்னமோ கம்ப்யூட்டர் கோர்ஸ் எல்லாம் படிச்சேன்.... சினிமா...தம்...தண்ணி...நட்பு நாட்கள் வேகமாக் கரைஞ்சுது..
ஒரு ஆறு மாசத்துல்ல நட்பு எல்லாம் நகர்ந்துப் போயிட்டாங்க....தனியா இருக்கும் போது தான் வாழ்க்கைப் புரிஞ்சுது....அந்தப் புரிதலின் விளைவா பெங்களூர்ல்ல ஒரு சின்ன கம்பெனியிலே வேலையும் தேடிகிட்டேன்....சொந்த சம்பாத்தியம்...பெங்களூர் மயக்கம்...சுகமாப் போச்சு வாழ்க்கை...

ஊர்ல்ல பாவாடைத் தாவணி...தொள தொள சுடிதார்..அதுல்லயும் அப்போ அப்போ அவசியமே இல்லாமல் துப்பட்டாவை சரி செய்யும் நம்ம ஊர் பிகர்களைப் பார்த்து பார்த்து பூத்துப் போன கண்களுக்கு..
இழுத்து வைத்து கண்காட்சி விருந்து வைக்கும் கொலு பொம்மைகளாய் இருந்தாங்க பெங்களூர் பெண்கள்...
அந்த சிற்றிடை என்ன... சிலுசிலு நடை என்ன.... சின்ன சின்ன உடை என்ன.... ஒய்யாரமென்ன.. ஒப்பனை என்ன...குதிரை வால் கொண்டை என்ன.... காற்றில் பறக்கும் மேகம் மாதிரி குழல் என்ன...அய்யோ அய்யோ.... வாலிப வயசு கூத்துக் கட்டியது பெங்களூர் நகரத்து எம்.ஜி.சாலையிலும்...பிரிகேட் சாலையிலும்.... அஞ்சு வருசம் ஓடிப் போச்சு....

கூட இருந்தவன் எல்லாம் எச் 1..எல் 1அப்படின்னு விசாவை வாங்கிட்டு புஷ்க்கு மாப்பிள்ளையாகிட்டு தான் இந்தியா திரும்புவோம்ன்னு சபதமடிச்சுட்டு பிளைட் ஏறிகிட்டு இருந்தாங்க...புஷ்க்கு இரண்டு பொம்பளை பிள்ளைங்கற விசயம் எனக்குத் தெரிய வரும் போது ஒபாமாவே பதவிக்கு வந்துட்டார்...என்னச் செய்ய நான் அவ்வளவு லேட்

டாலர் தேசத்துக் கனவுகள் எல்லாம் மெதுவா எனக்குள்ளே துளிர் விட ஆரம்பிச்ச நேரத்துல்ல நண்பன் ஒருத்தன் ரெபர் பண்ணக் கம்பெனி தான் வினாடிக்ஸ்...சென்னைக்கு அஞ்சு வருசம் கழிச்சு திரும்பி வந்தேன்....

இன்டர்வியூ எல்லாம் என்னமோ சும்மா சுமாராத் தான் இருந்துச்சு.... எடுத்தவருக்கு மதுரை பக்கம்...அவர் பொண்டாட்டிக்கு திருநெல்வேலியாம்.... ஊரைப் பத்தி அக்கறையா விசாரிச்சார்...டெஸ்டிங் பத்திக் கேட்டதை விட மஸ்கோத் அல்வா டேஸ்டிங் பத்தி நிறைய டிஸ்கஸ் பண்ணுனோம்...அப்புறம் என்ன யூ ஆர் அப்பாயிண்டட்ன்னு சொல்லி கூப்பிட்டு விட்டாங்க... திருவான்மீயூர்ல்ல பீச் பக்கம் ஒரு பிளாட்ல்ல தங்கலுக்கு ஏற்பாடு பண்ணிகிட்டேன்...
குளுகுளு பெங்களூர் போய் கும்மிட்டி அடுப்பு சென்னைவாசம் ஆரம்பிச்சது....
ஒரு ஆறு மாசத்துக்குள்ளே அர்கான்சஸ் பக்கம் எதோ ஒரு புராஜக்ட் வருது...வந்த உடனே உனக்கு டிக்கெட் போட்டுரலாம்...இப்போதைக்கு விசா எடுத்து வச்சுக்கோன்னு சொல்லி கம்பெனிக்குள்ளே சிவப்பு கம்பளம் விரிச்சு நம்மளை உள்ளே எடுத்தாங்க....

டாம்...இந்த பகுதியிலே ஒரு முக்கியமான கேரக்டர்...இவனைப் பத்தி இப்போ நீங்க கண்டிப்பாத் தெரிஞ்சுக்கணும்... என் ரூம் பேட்...என் பைக் டிரைவர்.... என் லஞ்சு கம்பெனியன்....டீ டைம் மேட்...இப்படி எனக்கும் இவனுக்குமான பந்தத்துல்ல இவனுக்கு பல முகங்கள்..

டாம்கிட்டே ஒரே ஒரு கெட்டப் பழக்கம் தான்...
பாக்குற எல்லாப் பொண்ணுங்க மேலயும் சட்டுன்னு காதல் வயப்பட்டுருவான்.... கவிதை.... கிப்ட்ன்னு கண்டப்படி பீல் ஆகிடுவான்.... ஆனாப் பாருங்க அவனோட எந்தக் காதலும் எங்க ரூம் வாசல்ல தாண்டுனதே இல்ல....
காலையிலே பாப்பான்... மத்தியானமே காதலிக்க ரெடி ஆயிடுவான்... சாயங்காலம் எல்லாம் கவிதை எழுதுவான்... ராத்திரி கவிதைக்கு எல்லாம் மெட்டுக் கட்டி சரக்கு கலந்து கட்டைக் குரல்ல கச்சேரியே வைப்பான்...

இது எல்லாம் விடிஞ்சு அடுத்த நாள் வேலைக்கு பஸ் ஏற நிக்குற ஸ்டாப்ல்ல இன்னொரு பொண்ணைப் பாக்குற வரைக்கும் தான்...ஸ்டாப்ல்ல பொண்ணு இல்லன்னா பஸ்ல்லயாவது கண்டிப்பா அவன் காதலுக்கு யாராவது இலக்கு ஆயிருவாங்க...

சுருக்கமாச் சொன்னா டாம் ஒரு அமுக்கமான காதல் மன்னன்..... நல்ல பையன்... சொந்த ஊர் திண்டுக்கல் பக்கம்.... ஞாயித்துக் கிழமை ஆச்சுன்னா கண்டிப்பா சர்ச்சுக்குப் போயிடுவான்... சர்ச்சுல்ல மட்டும் அவன் காதல் கண்ணை ஆப் பண்ணிருவான்..டாம்க்கு கடவுள் நம்பிக்கை ரொம்ப அதிகம்...

ஒரு நவம்பர் மாத மத்தியான பொழுதுல்ல வானம் லேசா இருட்டி கொஞ்சமே கொஞ்சமா சாரல் தெளிச்சுட்டு இருந்துச்சு.. ஜன்னல் வழியா சென்னையின் சாலைகள் சலவைக்கு போட்ட மாதிரி பளிச்சென போக்குவரத்து அதிகம் இல்லாமல் காட்சியளிச்சுது... மீட்டிங் ரூம்ல்ல மேனேஜர் முரளி புது புராஜக்ட் பத்தி விரிவா விளக்கிட்டு இருந்தார்..புத்தி மீட்டிங்ல்ல ஒரளவுக்கு கலந்துகிட்டாலும் மனசு என்னமோ மழை வாசத்தை வாங்கி உள்ளுக்குள்ளே நிரப்புற வேலையில்ல ரொம்ப தீவிரமா ஈடுபட்டுகிட்டு இருந்துச்சு...

அந்த புராஜக்ட்ல்ல அப்படி இப்படி தேத்தி ஒரு மூணு நாலு ஆன்சைட் பொசிஷன் இருக்கும்ன்னு பரவலாப் பேசிகிட்டாங்க...போட்டியும் ரொம்ப பலமாவே இருக்கும்ன்னு தெரிஞ்சுப் போச்சு...

ம்ம்ம் வழக்கம் போல ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டுட்டு...நீ அனுப்புனா அனுப்பு ராசா.... அதுக்காக உயரதிகாரி சிகரெட்டுக்கு லைட்டர் பத்த வைக்கிறது...சீட்டுக்கு என் கர்சீப்பால்ல ஓட்டடை அடிக்குறது.. இப்படி வகை வகையா எல்லாம் நமக்கு வேலை பாக்க முடியாது ..அப்படின்னு நான் அசால்ட்டா உக்காந்துட்டேன்....

நம்ம பைய டாம் பேர் லிஸ்ட்ல்ல இருந்துச்சு பயபுள்ள விசா இன்டர்வியூல்ல வெக்கம் இல்லாம வெள்ளைக்காரியை ஓவரா சைட் அடிச்சதுல்ல கேள்வியை கோட்டை விட்டு விசா கிடைக்காம கேட்டுக்கு வெளியே வந்து நின்னுட்டான்.... இப்படித் தான் டாமோட அமெரிக்கா கனவு அண்ணா சாலை அமெரிக்கன் எம்பசி வாசல்ல அனாதையாக் கிடந்து கதறி செத்துப் போச்சு.

சரக்கு போட்ட ஒரு பின்னிரவு பொழுதில்...

மாப்பு...நம்ம புராஜக்ட்க்கு புதுசா ஒரு பிசினஸ் அனலிஸ்ட் வர்றாடா...அவ இந்த புராஜக்ட்க்கு தான் புதுசு... ஆனா எனக்கு ஏற்கனவே பழக்கம்...மச்சி இந்த ஒருத்திக் கூட மட்டுமே காதல் வரும்ன்னு சொல்லுவாங்க தெரியுமா....அப்படி ஒரு காதல் எனக்கும் வந்துச்சு மச்சி...இவ மேல.....

எனக்கு சிரிப்பு தாங்கல்ல..சிரிச்சுட்டேன்...

சிரிக்காதே நண்பா...சத்யமாக் குடிச்சுட்டு போதையில்ல உளர்றேன்னு மட்டும் நினைக்காதேடா....இவ மாதிரி ஒரு பொண்ணு மட்டும் லைப்ல்ல கிடைச்சுட்டா போதும்டா...சனியன் புடிச்ச இந்த சரக்கு எல்லாம் சரவுண்டிங் ஏரியாவில்லேயே இருக்க முடியாதுடா...அப்படி ஒரு போதை வரும் மச்சி அவளைப் பாத்தா.... அம்மா அப்பா... அண்ணன்... தம்பி ...ஊர் உலகம்... எதுவும் தேவையில்ல... அவ சிரிப்பா பாரு ஒரு சிரிப்பு ...அந்த சிரிப்பு மட்டும் போதும்ன்னு தோணும்டா....
டாம் அப்படியே எழும்பி போய் வாட்டர் டேங்க் மேல ஏறி நின்னுகிட்டான்....

கையிலே பீர் பாட்டில் இரண்டு கையையும் வானத்தை நோக்கி தூக்கிட்டான்.... "அந்த கடவுள் ரொம்ப நல்லவர்டா....எனக்கு எல்லாமே கொடுத்துருக்கார்டா.... ரொம்ப சுமாரான படிப்பு தான் எனக்கு...ஆனா நல்ல அப்பா அம்மா....பாசமான ஒரு தங்கச்சி..... இதோ ஒரு நல்ல வேலை... யு எஸ் விசா போனாலும் யுகே விசா... இப்படின்னு எந்த குறையும் வைக்கல்ல...சர்ச்க்கு கூட எல்லா சன்டேயும் அவருக்கு தேங்க்ஸ் ஜீசஸ் அப்படின்னு மரியாதை நிமித்தமா நேர்ல்ல போய் சொல்லிட்டு வருவேன்... எந்த வேண்டுதல் லிஸ்டும் கொடுக்கறது இல்ல..ஒன்லி தேங்க்ஸ் மட்டும் தான்....ஆனா இவளைப் பாத்தப் பிறகு தான் ஜீசஸ் கிட்டயே கோரிக்கை மனு வைக்க ஆரம்பிச்சேன்....எதுவும் வேணாம்...வாழ்க்கை பூரா இவ என் கூட இருக்கணும்... இவளோட நேசம் எனக்கு வேணும்...ப்ளீஸ் ஜீசஸ்ன்னு கதற வச்சிட்டாடா என்னை.....அவ நாளைக்கு வர்றா.....அதுவும் நம்ம புராஜக்ட்க்கு.... செம க்யூட்..செம ஸ்மார்ட்........அவக் கூட மூணு வருசம் வேலை பாத்துட்டேன்....ஆனா வாய் திறந்து என் மனசுல்ல இருக்க விஷயத்தை என்னாலே சொல்ல முடியல்ல.... இது வரைக்கும் யார் கிட்டயும் சொன்னது இல்ல...உன் கிட்டத் தான் சொல்லுறேன் "அப்படின்ன்னு கொக்கி போட்டு நிறுத்துனான்....

டாம் தென்னை மரத்துக்கு புடவை கட்டுனாலும் நின்னு நிதானமா சைட் அடிக்க ட்ரை பண்ணுர பையன். எனக்கு அப்பவும் அவன் தண்ணி அடிச்சிட்டு சவுண்ட் விடுறதா தான் எனக்கு மனசுக்குப் பட்டுச்சு...நான் பதில் எதுவும் சொல்லல்ல..அவனைப் பேச விட்டுட்டு கேட்டுகிட்டே இருந்தேன்..

"மாப்பி...இந்த வாட்டி கண்டிப்பா சொல்லுறேன்டா...இந்த புராஜக்ட் முடியறதுக்குள்ளே சொல்லுறேன்.... நீ என் கூட இருக்கணும்... இருப்பே..சரியா..." அட பாவி என் பதிலையும் அவனே சேர்த்துச் சொல்லிட்டு ஆட்டத்துல்ல என்னை அம்பையரா நிறுத்திட்டு கிளம்பிட்டான் டாம்...

அப்போ அவன் மொபைல் அலறிச்சு....டாம் மொபைலோட ரிங் டோன் வந்து வருவீயா...வரமாட்டீயா...நீ வர்றல்லன்னா உன் பேச்சு கா கா கா.... அப்படி அடிச்சித் தான் நான் கேட்டுருக்கேன்...மேனேஜருக்குன்னு மட்டும்....நம்ம கவுண்டரோட மிக பேமசான இந்தியன் படத்து டயலாக்...."திஸ் ஆபிசர்ர்ர்ர்ர் பன்னி செல்வம் " ரிங் டோனா செட் பண்ணியிருப்பான்... இது என்ன புது டோன்....மொபைலை எடுக்க பரபரப்பா டேங்க்ல்ல இருந்து குதிச்சு ஓடுனான்....


ரிங் டோன் இப்போ நல்லாவே கேட்டுச்சு....."ஏரிக்கரை பூங்காற்றே நீ போற வழி தென்கிழக்கோ...தென்கிழக்கு வாசமல்லி என்னத் தேடி ஒரு தூது செல்ல....."குத்து மதிப்பா வரிகள் ஞாபகம் இருந்துச்சு...சில பாட்டு வரி மறந்து போனாலும் அந்த ராகத்துக்குப் பின்னாடி ஒண்ணு சேர அணிவகுக்கும் நினைவுகளால்ல கேக்குற சுகத்தைக் கூட்டிரும்....

அவன் போனை எடுத்து 1000 வாட்ஸ் பிரகாசத்தோடப் பேச ஆரம்பிச்சுட்டான்... எனக்கு அப்படியே பழைய ஞாபகம் எல்லாம் வர ஆரம்பிச்சு மனசு அப்படியே தாமிரபரணி கரை வரைக்கும் ஒரு வாக் போயிட்டு ரிட்டன் ஆச்சு.....சரியா அந்த நேரத்துல்ல டாம் போனை என் முன்னாடி நீட்டுனான்....

ப்ரியாடா...நம்ம பிசினஸ் அனலிஸ்ட் நான் சொல்லல்ல....உன் கூட பேசணுமாம்.... ஒரு கணம் என்னை என் நினைவுகளில் இருந்து விடுவிச்சுகிட்டு போனை வாங்கி காதுல்ல வச்சேன்....

ஹலோ....மறுமுனையில் இருந்து குரல் கேட்டப் பிறகே நான் ஹலோ சொன்னேன்..

"நான் ப்ரியா..சாரி இந்த நேரத்துல்ல உங்களை டிஸ்டர்ப் பண்ணுறேன்....டாம் சொன்னார்..நீங்க தான் நம்ம புராஜக்ட டெஸ்ட் லீட்ன்னு....ஆக்சுவலி நான் இப்போ ஏர்போர்ட்ல்ல தான் இருக்கேன்...அங்கே இருந்து தான் பேசுறேன்.... பிசினஸ் இன்புட்ஸ்க்கா டெஸ்டிங் டீம் வெயிட் பண்ணுதுன்னு சொன்னாங்க.. சோ நாளைக்கு கேன் வீ ஹேவ் எ மீட்டிங். பை எயிட்....ரொம்ப சீக்கிரம்ன்னு தெரியுது...பட் ஒரு சின்ன ஹெல்ப்பா கேக்குறேன்...எங்க வீட்டுல்ல நாளைக்கு ஒரு சின்ன பங்க்ஷன் இருக்கு நாலு மணிக்கு...சோ சீக்கிரம் வந்து மீட்டீங் முடிச்சிட்டு நான் கிளம்பிடுவேன்....ஹோப் யூ டோன்ட் மைன்ட்...." அப்படி ஒரு மெல்லிய வாய்ஸ்ல்ல கேட்டா யார் தான் மைன்ட் பண்ணுவா

"பிசினெஸ் கிளாரிபிக்கேஷன் ஸ் எல்லாம் ஒரு வேர்ட் டாக்குமெண்ட்டா போட்டு எனக்கு மெயில் பண்ணீட்டிங்கன்னா..நானும் மீட்டிங்க்கு பிரிப்பேர்டா வந்துருவேன்... டாம் நோஸ் மை மெயில் ஐடி...சாரி அகெய்ன் பார் டிஸ்டர்பிங் யூ கைஸ்....கேர்ரி ஆன் வித் யுவர் டிரிங்க்ஸ் குட் நைட்...." சொல்லிட்டு போனை வச்சுட்டா...

"டேய்..என்னடா போன் எல்லாம் ஒரே மல்லி வாசம்....."

"ம்ம்ம்கூம் அதுவா பேச்சு சுவாரஸ்யத்துல்ல உன் ஜாஸ்மின் சென்ட் பாட்டிலை தட்டி விட்டுட்டேன்...அது போன்ல்ல சிதறி தெறிச்சுப் போச்சுடா...ஐயாம் சாரிடா...." டாம் கால்கள் தரையில் இருந்தது...பார்வையோ பரத்தில் இருந்தது....

"டாம் அந்த பொண்ணு மெயில் ஐடி சொல்லுடா...." டாம் மீண்டும் வாட்டர் டேங்க் மேல ஏறி உக்காந்துகிட்டு வானம் பாத்துட்டு இருந்தான்..என் கேள்வி காதுல்ல விழுந்துச்சோ என்னவோ

ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் என் விருப்ப பாடலை முணுமுணுத்தப் படி நான் படியிறங்கிப் போனேன்...


ரஞ்சனி ப்ரியதர்ஷினி டாட் சூரியராமன் @ வினாடிக்ஸ் டாட் காம்.....டாமின் குரல் நான் படியிறங்கும் போது என் காதில் விழுந்தது.

தொடரும்