Saturday, July 28, 2007

சின்னக்குளம் - தம்பி கதிரின் மடல்

சமீபத்தில் பக்கம் 78ல் பதிந்த தொடர் பற்றி நிறைய சந்தோஷம் தரும் கருத்துக்கள் வந்தன. அதில் கொஞ்சம் கூடுதல் சந்தோஷம் தரும் விதத்தில் நம்ம தம்பி கதிர் எழுதிய மின்மடல் அமைந்தது. அந்த சந்தோசத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் தம்பியின் அனுமதியோடு

அண்ணன் தேவ்,

தமிழ்மணத்துல தொடர் எழுதறவங்க நிறைய பேர் இருக்காங்க. எத்தனை பேர் இருந்தாலும் நேர்த்தியா சொன்னவங்கன்னு
பார்த்தால் அதிகம் தேறாது. ஒவ்வொரு பாகமா படிக்கறதுல விருப்பமே இல்லை எனக்கு அதனால்தான் தொடரே
படிப்பதில்லை. முதல் இரண்டு பகுதியை வெளியிடும்போதே படித்திருந்தாலும் அதற்கடுத்த வந்ததை படிக்காமல் விட்டு விட்டேன். இரண்டு நாட்களுக்கு முன்பு மொத்தமாக ஏழு பாகங்களையும் ப்ரிண்ட் எடுத்து அறைக்கு கொண்டு போய்
படித்தேன். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அனுபவமா இருந்தது.

self narration மட்டும்தான் ஒரு படைப்பை அல்லது பழைய நினைவை முழுமையாக சொல்ல முடியும், வெறும் உரையாடல்கள் கொண்ட கதைகள் மீது எனக்கு நம்பிக்கையே இல்லை. சின்னக்குளத்தில் நிறைய உரையாடல் இருந்தாலும் எதுவுமே சலிப்பை ஏற்படுத்தல. அங்கங்கே உங்களோட நகைச்சுவை உணர்வு பார்த்து ஆச்சரியப்பட்டேன். :)

வேலை முடிஞ்சு போய் டய்ர்டா பெட்ல உக்காந்து இந்த கதைய படிச்சிட்டு நிமிர்ந்து பார்த்தா முகத்துல ஒரு புத்துணர்ச்சி.
இதுதான் படைப்பாளியோட வெற்றி.

நாம் நிறைய கதைகள் படித்திருக்கலாம் ஆனால் படித்தவற்றில் பாதித்த ஏதோ ஒரு சிறுகதைதான் ஞாபகத்துக்கு வரும்.

ஒரு கதைய படித்து முடித்தபின் ஒரு சலனமோ, ஒரு தாக்கத்தயோ, ஒரு புன்னகையையோ விட்டு செல்ல வேணும்.

பதின்ம வயதில் எல்லாருக்கும் ஒரு நிறைவேறாத காதல் இருக்கும் அந்த காதல்தான் நம் வாழ்க்கையையே தீர்மானிக்கிற சக்தியாக கூட மாற வாய்ப்பிருக்கு. ஆனா அந்த காதலை யாருமே நகைச்சுவையா சொல்ல மாட்டாங்க, அதையும் இயல்பா
எடுத்து சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

நிறைய எழுதுங்க. நிறைவாக எழுதுங்க

அன்புடன்
தம்பி

Thursday, July 19, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 7 (இறுதி பாகம்)

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 6

கால்பந்தாட்ட மேட்ச்ல்ல முதல் பாதி முடியும் போது லேசா மழைத் தூற ஆரம்பிச்சது... மேகம் சும்மா கரு கருன்னு இருட்டிகிட்டு வந்துச்சு. மழைக்கெல்லாம் ஆட்டத்தை நிறுத்துற வழக்கம் கிடையாதுங்கறதால மழையை யாரும் பெரிசாக் கண்டுகிடல்ல..

ஆட்டத்தைப் பாக்க வந்தவங்கத் தான் ஒதுங்க இடம் தேடிகிட்டு இருந்தாங்க.. முதல் பாதி முழுக்க என்னைக் களத்தில் இறக்கல்ல.கரையில்ல இருந்து தான் மேட்ச்சைப் பாத்துகிட்டு இருந்தேன்..

பிரகாசபுரத்துகாரன்வ நல்லாவே ஆடுனான்வ.. முதல் பாதியில்ல பத்தாவது நிமிசம் நாங்க முதல் கோல் வாங்குனோம்.. அடுத்தக் கோல் நாப்பதாவ்து நிமிசம் வாங்குனோம்.. எங்கப் பயல்வளும் நல்லாத்தான் ஆடிட்டு இருந்தான்வ... ஆனா அவன்வ ஆட்டம் பேய்த் தனமால்லா இருந்துச்சி.. முதல் பாதி முடிய இரண்டு நிமிசம் இருக்கும் போது எட்வின் எங்க டீமுக்கு ஒரு கோல் போட்டது கொஞ்சம் உயிர் கொடுத்தாப்பல்ல இருந்துச்சி.. அந்த அடிப்பட்ட காலையும் வச்சுகிட்டு எட்வின் அட்டகாசமா ஆடுனாப்பல்ல. கோல் விழுந்தவுடனே விசில் அடிக்க வைச்சுட்டான் மனுசன்.. அவ்வளவு அழகாக் கோல் அடிச்சான்ய்யா.

ப்ரேக்ல்ல வந்து ஆளுக்கு ஆள் தண்ணியை எடுத்து தலையிலே கவுத்திகிட்டு உக்காரும் போது இஸ்ரா தான் ரேச்சல் மேட்ச் பார்க்க வந்திருப்பதைக் காட்டினான். குடைக்குள் மறைந்திருந்தாள். நான் இருந்தப் பக்கம் பார்ப்பதையேத் தவிர்த்தாள். நான் வைத்தக் கண் வாங்காமல் அவளையே வெறித்துப் பார்த்தேன்..

இஸ்ரா சிரித்தான்.

"எதுக்குல்லே சிரிக்கா.. இங்கே நான் என்ன உனக்கு ஷோவாக் காட்டுதேன்?"

"ஆமாடே ஷோ தான் நடக்கு... வெங்கலம்.. அவ உனக்கு யார்ல்லே.. அவ யார் கூடப் போனா உனக்கு என்ன? அது அவ விருப்பம்டே.. நீ கிறுக்குப் பைய மாதிரி கிடந்துக் கத்துறா... நாளைக்கு அவ ரயிலேறி பாம்பேப் போயிருவா... மறுக்க சின்னக்குளம் வர்றாளோ வர்றல்லயோ... நமக்கெல்லாம் அவச் சினேகிதம் சரிபடாதுலேய்.. என்ன விளங்குதா?" என் தலையை கோதிவிட்டான்.

இஸ்ரா ஒரு பாசக்கார பைய, என் மேல அக்கறை உள்ளவன்.. அவன் சொன்னா சரியாத் தான் இருக்கும். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். ரேச்சல் மேல கோபப்பட எனக்கு என்ன வந்துச்சு... அது வரை என் மனசைக் காயப்படுத்திகிட்டு இருந்த வலி லேசான மாதிரி இருந்துச்சு..ஆனாலும் வ்லி முழுசாப் போகல்ல.. ஒரு ஓரத்திலே போய் உக்காந்துக்குச்சு.. அது அங்கேத் தான் இருக்கும்... நிரந்தரமா இருக்கும்ங்கறது அப்போ எனக்குத் தெரியல்ல.

அதுக்குள்ளே மழையும் வேகமெடுக்க் ஆரம்பிச்சுருச்சு...

"ஜெர்ரி.. இறங்குலே..இது வரைக்கும் ஆட்டத்தைப் பாத்துருப்பால்லா.. அவன்வ கேம் பிளான் விளங்குதா.. ஜெபா, இஸ்ரா டிபன்ஸ் ஆடுங்க.. ஆல்டன்.. ஆஸ்வால்ட் மிட் மீல்ட் பாருங்க.. ஜெர்ரி நீ என் கூட பார்வேர்ட்ல்ல இறங்கு.... முடிஞ்ச் வரைக்கும் மோதிப் பாத்துருவோம்ல்ல மக்கா...." எட்வின் அண்ணன்(திடீரென எட்வின் மீண்டும் அண்ணன் ஆனாவ)கை என் கையை இழுத்துப் பிடிச்சது. மனிதச் சங்கிலியா கையைக் கோத்துகிட்டு கிரவுண்ட்குள்ளே இறங்குனோம்...

ஆட்டத்தின் அடுத்தப் பாதி ஆரம்பம் ஆச்சு...ஆரம்பிச்சு அஞ்சாவது நிமிசத்துல்ல என் தாடைப் பேந்து ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது... பிரகாசபுரத்து டிபன்ஸ் பிளேயர் அசால்ட்டா அபன்ஸ் பன்ணதுல்ல வந்த வினை... ஒரு துணியை வச்சு ரத்தத்தைத் துடைச்சுட்டு வலியைக் காட்டாமக் கெத்தா மறுபடியும் ஆட தயார் ஆயிட்டேன்..ஆனா மக்கா வலி உள்ளுக்குள்ளே உயிர் வரைக்கும் வாங்கி எடுத்தது. எப்படியோ சமாளிச்சு நின்னுகிட்டேன். ரேச்சல் பாக்குறாளான்னு வேற அந்த வலியிலும் ஓரக் கண்ணால் பார்த்தேன். அவளும் பார்த்துகிட்டு தான் இருந்தாள்.

இரண்டாவது பாதியிலே முப்பது நிமிசத்துக்கு யார் பக்கமும் கோல் விழல்ல. ஆட்டம் ரொம்ப் நெருக்கமாப் போயிட்டு இருந்துச்சி.. அந்த நிலையிலே நான் கொடுத்த பாஸ் ஒன்றை வெகு நேர்த்தியா ஆல்டன் கோலாக மாற்றி கணக்கை சம் நிலைக்குக் கொண்டு வந்தான்.

கொஞ்சம் மெப்பா ஆட ஆரம்பிச்ச எதிரணி சுதாரிச்சு ஆட ஆரம்பிச்சான்வ.. அதோட விழைவை ஆட்டம் முடிய பத்து நிமிடம் இருக்கும் போது நான் சந்தித்தேன்.. எதோ எருமை மாடு ஒண்ணு பறந்து வந்து பல்லைக் க்ளோஸ் அப்பல்ல காட்டுனாப்பல்ல் இருந்துச்சு.. அவ்வளவு தான் எனக்குத் தெரிஞ்சுது.. நான் மல்லாக்க விழ என் மேல அந்த எருமை குப்புற விழ என் கை விழுந்த இடத்தில் இருந்த கூரானக் கல்லில் பட்டு கிழிந்தது... முழங்கையில் இருந்து பொங்கிய ரத்தம் கை முழுக்க நனைச்சுருச்சு.

எட்வின் அண்ணன்..(இப்போ அண்ணன் தான் ) ஓடி வந்து தன் பனியனைக் கிழித்து என் கையில் கட்டி ரத்தத்தை நிறுத்தினாவ. எனக்கு கண் எல்லாம் கட்டிருச்சு... ஏற்கனவே தாடைப் பேந்துருச்சு...அவ்வளவு தான் நான் மயங்கி சரிஞ்சுட்டேன்.. என்னப் பொறுத்தவரைக்கும் மேட்ச் முடிஞ்சுப் போச்சு....

"னான்... ஆடுறே....ன்ன்.. என்னை அனுப்...பா....தீ...ய..." கடைசியா இதைச் சொன்ன மாதிரி ஒரு நினைப்பு இருக்கு. ஆனா உறுதியா என்னச் சொன்னேன்னுத் தெரியல்ல..

அப்புறம் நான் கண்முழிச்சுப் பாக்கும் போது எங்க வீட்டுல்ல இருந்தேன். கையிலே கட்டுப் போட்டிருந்தாங்க. நடுவில்ல டாக்டர் வந்து டிடி எல்லாம் போட்டிருக்கார்.. வீரனுக்கு எதுவுமே தெரியல்ல..( நான் தான்ய்யா அந்த வீரன்)..

கண்முழிச்சப் பொழுதில் ந்டந்ததை எல்லாம் நான் ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சி பண்ணிகிட்டு இருக்கும் போது மாடியிலே என் ரூமுக்கு வெளியே நீலக் கலர் தாவணி தெரிஞ்சது...மறுபடியும் அதே தாவணி.. நான் எழுந்து வந்தேன்.. தாவணியின் நுனி கிழிந்து இருந்தது நன்றாக தெரிந்தது...ஆனால் தாவணியைக் கட்டியிருந்தது....

"இது உங்க தாவணியா?" இப்படி ஒரு அறிவுபூர்வமானக் கேள்வியை ரொம்பவும் விறைப்பாக் கேட்டேன்...

"எலேய் எய்யா.. கையிலேயும் தாடையிலும் தானே அடிப்பட்டுச்சுன்னு சொன்னாங்க.. உனக்கு எங்கே எல்லாமோ இல்ல அடிப்பட்டுருக்கும் போல... அவ அவளோடச் சீலையைக் கட்டாம உன் சீலையையாக் கட்டுவா?" எங்கப் பாட்டி தான் குறுக்கிட்டு வாய்பந்தல் போட ஆரம்பிச்சாங்க..

எனக்கு அடுத்து என்னக் கேட்பதுன்னுத் தெரியாம ஒரு மாதிரியா நெளிஞ்சுகிட்டு நின்னேன்... பிரின்சிலின் அக்காவுக்கு என் நிலைமைப் புரிஞ்சுதோ என்னவோ.. என்னைப் பார்த்து மெதுவாச் சிரிச்சாங்க.. பிரின்சிலின் அக்கா ரேச்சலுக்கு உறவு.. நானும் இஸ்ராவும் எப்படியோ அப்படின்னு வச்சுக்கலாம். அவங்க நாசரேத் காலேஜ்ல்ல பி.எஸ்.இசி இரண்டாம் வருசம் படிக்கிறாங்க.. அதிகம் பேசுனதுல்ல.. ஆனா எங்கேப் பாத்தாலும் சிரிப்பாங்க.. சொகம் விசாரிப்பாங்க.. எங்கப் பாட்டிக்கு அந்த அக்கா மேல பாசம் அதிகம்.. அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவாங்க போவாங்க..

பாட்டி அடுப்பாங்கரை பக்கம் போறதுக்குப் படி இறங்குனாங்க..நான் இன்னும் குழப்பத்திலே நின்னுகிட்டு இருந்தேன்...பிரின்சிலின் அக்கா பாட்டிப் போகும் வரை எதுவும் பேசாமல் அமைதியா இருந்தாங்க..பாட்டிப் போனதும் அந்தக் கவரை எடுத்து என்கிட்ட நீட்டுனாங்க...

"என்னது?"

"ரேச்சல் கொடுக்கச் சொன்னா..."

நான் கடகடன்னு கவரைப் பிரிச்சேன்... உள்ளே கிரிஸ்டல் கீ செயின் ஒண்ணு இருந்துச்சு.. அதை விருட்டென்னு எடுத்துட்டுப் போய் ஜன்னல் வழியா ரூம்குள்ளே வந்து விழுந்த வெயில்ல காட்டுனேன்... அதுல்ல..

"TO LOVING FRIEND JERRY FROM RACHAEL" அப்படின்னு தங்க கலர்ல்ல மின்னுச்சு.. வாய் விட்டு படிச்சாலும் சத்தம் வெளியே வரல்ல..கவர்க்குள்ளே வேற எதுவோ கூட இருந்துச்சு, என்னன்னுப் பார்க்கும் ஆவலில் அவசரம் காட்டுனேன்.. உள்ளே இருந்த தின்னவேலி அல்வா பாக்கெட்டைப் பாத்ததும் என்னையுமறியாமல் எனக்கு சிரிப்பு வந்துச்சு.

கீ செயினை கைக்குள்ளேப் பொத்தி வச்சுக்கிட்டேன்..

"உனக்கு இன்னிக்குப் பொறந்த நாளாமே.. கோயில்ல பெயர் வாசித்தாவளாம்.. அது தான் கிப்ட் வாங்கி வச்சிருக்கா ரேச்சல்"

"அதை அவளேக் கொடுத்து இருக்கலாமே..." என்று நான் அரையும் குறையுமா இழுக்க.

"கொடுக்கத் தான் வந்தா.. நீ எந்திரிக்க மாதிரி தெரியல்ல.. அதான் காத்திருந்துப் பாத்துட்டு என் கிட்டச் கொடுக்கச் சொல்லிட்டுப் போயிட்டா"

"போயிட்டாளா... எங்கே?"

"இன்னிக்கு ரேச்சல் லீவு முடிஞ்சு ஊருக்குப் போறால்லா.. அஞ்சு மணிக்கு நாசரேத்துல்ல திருச்செந்தூர் ட்ரெயின் பிடிக்கப் போயாச்சி.." பிரின்சிலின் அக்கா சொல்லவும் நான் கடிகாரத்தைப் பார்த்தேன்..அதுல்ல மணி நாலு இருவதைஞ்சு.

வாரிச் சுருட்டி எழுந்தவனை மறுபடியும் பிரின்சிலின் அக்காவின் குரல் தடுத்தது..

"அப்புறம் இது தான் என் சீலைத் தான்..."

"என்னது..?"

"ஆமா... நீ கேட்டக் கேள்விக்குப் பதில்.. அன்னிக்கு மோட்டார் ரூம்ல்ல நீ பார்த்தது எட்வின் தான்.. எட்வின் அவியக் கூட இருந்தது..."

எனக்கு எல்லாம் புரிந்து விட்டது.

"ரேச்சலுக்கு ரொம்ப நாளா தாவணிப் போடணும்ன்னு ஆசை.. அதுக்குச் சிக்குனது இந்தக் கிழிஞ்சத் தாவணி... அவ ஆசையா அன்னிக்குத் தாவணிக் கட்டிகிட்டு உன்னைப் பாக்க வந்தா நீ என்னவெல்லாமோ பேசிட்டீயாம்... அவியச் சொன்னாவ..ஆனா ரேச்சல் வாய் திறக்கல்ல...எனக்கு மனசுக் கேக்கல்ல...அதான் சொல்லிரணும்ன்னு அவியக் கிட்டக் கூடச் சொன்னேன்.."

"அக்கா எனக்கு இப்போ ரேச்சலைப் பாக்கணும்... நேரமில்ல.. உங்கக் கிட்ட வந்துப் பேசுறேன்.." மாடி படியில் இருந்து தடுமாறி கீழே விழுந்து மீண்டும் எழுந்து ஓடினேன்..

"உம்மோவனுக்கு நல்லாக் கிறுக்குத் தான் பிடிச்சிருக்குப் போ" பாட்டி எனக்குப் பின்னால் என் அம்மாவிடம் சொன்னது தெளிவாய் காதில் விழுந்தது..

பென்னி அண்ணன் டிவிஎஸை கடனாய் வாங்கி சும்மாக் காட்டுப் பாதையிலே இறக்கிட்டு பறந்தோம்ல்லா.. கல்லையும் முள்ளையும் பாவப்பட்ட டிவிஎஸ் டயரல்ல தாங்க முடியல்ல.. காத்துப் போனப் பின்னாடி அது மேல இருந்த என்னோடப் பாரத்தைச் சுத்தமா அதால்ல தாங்க முடியாம என்னைக் குப்புற கவுத்துப் போட்டிருச்சு... ஏற்கனவே இருந்தச் சேதாரத்த்தை கூட்டி வச்சு பார்க்கும் போது இது ஒண்ணும் ரொம்ப பெரிசாத் தெரியல்ல...

கவுந்த டிவிஎஸும் நானும் நிமிந்தப்போ மணி நாலரை இருக்கும்...இன்னும் ஒரு மூணு இல்ல மூணரை கிலோ மீட்டர் போகணும்.. நல்லா கெதியா இருந்து ஓடுன்னாலே இருவது நிமிசம் ஆயிருமே..இப்போ இருக்க என் பாடி கண்டிசனுக்கு இரண்டு மணி நேரம் ஆனாலும் ஆச்சரியமில்ல...

அந்நேரம் பார்த்து..அக்கம் பக்கம் ஒரு சைக்கிளைக் கூடக் காணும்.. இறங்குற சூரியன் இரக்கமில்லாம முகத்துல்ல முக்காடு போடச் சொல்லி மிரட்டிகிட்டிருந்தான்.. நான் அப்படியே சேர்ந்துப் போய் உக்காந்துட்டேன்... ஒரு இரண்டு நிமிசம் ஓடியிருக்கும்... பக்கத்துல்ல பைக் உறுமுற சத்தம் கேட்டு நிமிந்தா எட்வின் அண்ணனும் பின்னாலே இஸ்ராவும்...

"லேய்.. உன்னிய விரட்டிகிட்டுத் தான் பின்னாலே வந்தோம்...மறுபடியும் அடியா?" இஸ்ரா இறங்கி ஓடி வந்தான்.

"மெட்ராஸ்காரனுக்கு பேச்சு மட்டுமில்ல.. அடி ஓதை வாங்கி வீரமும் காட்டத் தெரியும்ங்கறது இப்போ இந்த ஊர்காரவீயலுக்கு தெரிஞ்சிருச்சுல்லா"

எட்வின் அண்ணன் சிரித்தாவ... இஸ்ராவும் சிரித்தான்.. நானும் தான்.. என்னச் சிரிக்க சிரிக்கத் தாடையிலே யாரோ உக்காந்து குத்துறாப்பல்ல இருந்துச்சு... இருந்தாலும் சிரித்தேன்..

நாசரேத் ரயில் நிலையத்துக்குள் நாங்கள் நுழையும் போது...ரயில் எஞ்சின் புகையைக் கக்க ஆரம்பிச்சுருச்சு... புகைவண்டி காலமது... அந்த ஊர்ல்ல அதிகமா யாரும் ரயிலேற மாட்டாங்க.. வண்டி நிக்கப் போறது அஞ்சு நிமிசமோ... அதுக்கும் கூட ஒரு நிமிசமோ...

ரேச்சலைக் கண்டுபிடிக்கிறது எனக்கு அதிக சிரமமாயில்லை... ரேச்சல் அவள் அப்பா, அம்மா, தம்பி..இன்னும் அவள் குடும்ப மக்கள் ரயில்டியிலே நின்னுப் பேசிக்கிட்டு இருந்தாங்க..நான் தயக்கமா ரேச்சலைப் பாத்துகிட்டு நின்னேன்...அவங்க அப்பா சிரிச்சார்...அவ தம்பி ஓடி வந்தான்..

"ஹேப்பி ப்ர்த்டேவாமே உனக்கு.. அக்காச் சொன்னா.." என்று கைக் கொடுத்தான்.

பாக்கெட்டுக்குள் இருந்த சாக்லேட்டை எடுத்து அவனுக்குக் கொடுத்து தேங்க்ஸ் சொன்னேன். அவங்க அப்பா, அம்மா, நாசரேத் ஸ்டேஷன் மாஸ்டர்.. அப்புறம் அங்கே இருந்த எல்லாருக்கும் என் பர்த்டே சாக்லேட் கொடுத்தேன்.. எல்லாரும் எனக்கு ஹேப்பி பர்த் டே சொன்னாங்க... என் வாழ்க்கையிலே ரொம்பவும் சந்தோஷமானப் பர்த்டே அது...

"அடப் பாவி.. கூடவே இருந்த எனக்கு ஒத்தச் சாக்லேட் தர்றல்ல.. அங்கே அள்ளி இல்லா விடுறான்.." ஆமா இஸ்ரா தான் எட்வின் அண்ணன் கிட்டச் சொல்லிகிட்டு இருந்தான்.

ரயில் எஞ்சின் சவுண்ட் விட்டுருச்சு...எல்லாரும் வண்டியிலே ஏறிட்ட்டாங்க.. ரேச்சல் படிகளில் நின்றாள்.. நான் நடையில் கொஞ்சம் வேகம் கூட்டி ரேச்சல் பக்கம் போனேன்... என்னாலே எதுவும் பேச முடியல்ல..அவளைப் பாத்துகிட்டே நின்னதுல்ல கண்ணுல்ல தண்ணி வந்துருமோன்னு பயம வந்துருச்சு.. பொது இடத்திலே வீரன் அழுதுற கூடாதுல்லா.. அதுவும் இத்தனைப் பேர் பாத்தா என்னா ஆகும்...ஆனா ரேச்சல் கண் கலங்கிருச்சு...

"எதுக்கு இப்போ இங்கே வந்த?" கண்ணீரும் சிரிப்பூமாய் கேட்டாள்

"ஏய்... மெட்ராஸ்காரன் பர்த்டேக்கு கிப்ட் மட்டும் வாங்கிட்டு சும்மாப் போயிட்டான்னு நீ நினைச்சுரக்கூடாதுல்லா...அதான் பர்த்டே கேக் கொடுக்க வந்தேன்"

ரயில் நகர ஆரம்பித்தது.. நான் கேக் பாக்ஸ் எடுத்து அவளிடம் நீட்டினேன்... அவள் கண்களில் கண்னீர் மீறிய சந்தோஷம் சட்டெனத் தெரிந்தது...

ரயிலோடு நானும் நகர்ந்தேன்

"ம்ஹூம் தின்னவேலிக்கார பையத் தான்லே நீ...இப்படி ரயில் பின்னாடி ஓடி வரத் தான் லாயக்கு... பத்தாம் கிளாஸை சீக்கிரம் முடிச்சுட்டு மேலே படிக்க பாம்பேக்கு வந்துருடா.. உன்னை பாம்பேக்காரனா நான் மாத்திடுறேன்" நகர்ந்த ரயிலின் ஓசையோடு என் காதுபட சொன்னாள்.

என்ன செய்வது என்று தெரியாமல் ரேச்சலின் கைப்பிடித்து அவசரத்திலும் அவசரமாய் முத்தம் ஒன்று கொடுத்தேன்.. ரயில் வேகமெடுத்தது.. என் இதயத்துடிப்பு போலவே...

ரேச்சலும் ரயிலும் கொஞ்ச நேரத்தில் பார்வையில் இருந்து மறைந்துப் போனார்கள்..

நான் அங்கிருந்த ஸ்டேஷன் பெஞ்சில் போய் சாய்ஞ்சேன்.... எனக்கு ரொம்பப் பக்கத்துல்ல விசுக் விசுக்குன்னு அழுகை சத்தம் கேட்டு நான் திரும்ப அங்கே எங்க ஊர் பொடியன் தொப்புளான் கண்ணீர் விட்டபடி நின்னுகிட்டு இருக்கான்

நான் அவனைப் பாத்தேன்.. அவன் என்னைப் பாத்தான்...

"என்னடா எதுக்கு அழுவுற?"

"ம்ம்ம் நான் அந்த அக்காவை லவ் பண்ணுறேன்.. அந்த அக்கா என்னை விட்டுட்டுப் போவுது " என்றானே பார்க்கலாம்...

எட்வின் அண்ணன், இஸ்ரா இரண்டு பேரும் இதைக் கேட்டுட்டுச் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க நானும் அவங்களோடச் சேர்ந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டேன். தொப்புளான் கண்ணைத் துடைச்சுட்டு நான் கொடுத்த சாக்லேட்டைச் சாப்பிட ஆரம்பிச்சான்..

எங்களுக்குச் சிரிப்பு இன்னும் அதிகமாப் போயிருச்சு...


பிகு: மேட்ச் முடிவு பத்தி ஆர்வமுள்ளவங்களூக்கு.. நான் மயங்கி விழுந்தப் பின் எனக்கு பதில் தொப்புளானைத் தான் களத்தில் இறக்கியிருக்காங்க.. அது வரை புட்பாலை உதைத்து அறியாத தொப்புளான் சின்னக்குளத்துக்காக ஒரு கோல் அடிச்சது அடுத்து வந்தப் பல ஆண்டுகளுக்குச் சின்னக்குளத்து நிரந்தரப் பேச்சு பொருள் ஆகிப் போச்சு... இப்போ தொப்புளான் என்ற பால் மதுரையில் ஒரு ஜவுளிக் கடைக்கு முதலாளியாயிட்டான்.

எட்வின் அண்ணனுக்கும் பிரின்சிலின் அக்காவுக்கும் அதுக்கு இரண்டு வருசம் கழிச்சி சின்னக்குளத்துல்ல வச்சு கல்யாணம் நடந்தது.. பயங்கர வெட்டுக் குத்து எல்லாம் நடக்கப் போய் அப்புறம் தான் எட்வின் அண்ணன் தாலி கட்டுனாவ. அவங்களுக்கு இரண்டு பசங்க... இரண்டு பேரும் இப்போ அண்ணன் மாதிரியே நல்லா புட் பால் ஆடுறானுவளாம்.. இப்போ காட்டுப் பாதையிலே மோட்டார் ரூமே இல்லையாம்.. எட்வின் அண்ணன் தான் இடிச்சதா பென்னி அண்ணன் சொன்னாங்க ஆனா எட்வின் அண்ணன் ஒத்துக்க மாட்டேங்கறாங்க...

ம்ம்ம் நீங்க எல்லாரும் கேக்குறது புரியுது.. ரேச்சல் தானே...கடைசியாப் பிரின்சிலின் அக்காக் கல்யாணத்துக்கு வருவான்னு எதிர்பாத்து ஊருக்குப் போயிருந்தேன்.. வர்றல்ல... அப்புறம் எஸ்தர் பாட்டிப் போனதுக்கும் அவங்க வீட்டுல்ல இருந்து யாரும் வர்றல்ல...ஒரு கட்டத்துக்கு மேல அவங்க குடும்பத்தோட யாருக்கும் தொடர்பில்லாமலேப் போயிருச்சு... ஒவ்வொரு விடுமுறைக்கும் ரேச்சலை பார்ப்போம் அப்படிங்கற நம்பிக்கையிலேத் தான் ஊருக்குப் போவேன்... ஆனா பாக்கமுடியறதில்ல...

இதோ இப்போ ரொம்ப நாளுக்குப் பொறவு ஊருக்குப் போறேன் எப்பவும் போல அதே நம்பிக்கையோட....

இப்போதைக்கு சின்னக்குளத்துக்கும் விடுமுறைகளுக்கும் விடுமுறை விட்டுருவோமா...

Tuesday, July 17, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 6

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 5

"லேய் எல்லாம் சரி... மோட்டார் ரூம் கதை ஊருக்குள்ளே அரசல் புரசலா அடிபடுற விசயம் தான்... கண்டிப்பா நம்ம நம்ம ஊர் மக்களா இருக்காது.. வெளியூர்காரனாத் தான் இருக்கும்... இங்கே யாருக்கும் அப்படி தைரியம் வராதுலேய்.." இஸ்ரா விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தான்.

"நம்ம ஊர்ல்ல யார்ட்டல்லே யமஹா பைக் இருக்கு?"

"யார்ட்டயேயும் இல்ல..சும்மாக் குழப்பிட்டுத் திரியாதல்ல வெங்கலம்..மேட்ச்க்கு உனக்கு ஷூ ரெடி பண்ணிட்டேன்...இந்தா இன்னும் பத்து நிமிசத்துல்ல காபியைக் குடிச்சுட்டுக் கிளம்பு"
இஸ்ரா விளையாட தோதான உடையை மாட்டிகிட்டு ஷூவையும் மாட்டிகிட்டு காபி வாங்க அடுப்பாங்கரை பக்கம் போனான்.


நான் இன்னும் யோசனையில் ஆழ்ந்தப்படியே இருந்தேன்...ஒரு வழியா எதோ நினைப்பிலே ஷூவையும் மாட்டிகிட்டு இஸ்ரா நீட்டுனக் காபியையும் குடிச்சுப்புட்டு அவன் கூட விளையாடக் கிளம்புனேன்..

போற வழியெல்லாம் எங்கிட்டாவது யமஹாவோ... கருப்புச் சட்டையோ கண்ணுல்லப் படுதான்னு கண்ணை அகலமாத் திறந்துப் பாத்துகிட்டே போனேன். எந்தப் பக்கமும் நான் தேடுன எந்தப் பொருளும் கண்ணுல்ல சிக்கவே இல்ல.. ஒவ்வொரு தெருவா போய் டீம் மொத்தத்தையும் கூட்டிகிட்டு கிரவுண்ட் பார்த்துப் போனோம்..

"லேய் மக்கா நில்லுங்கடா..." பாம்பே போலீஸ்காரரின் சிங்கக்குரல் எங்களைத் தடுத்தது.. நிறுத்தியது. பாம்பே போலீஸ்காரருன்னு சொல்லுறதை விட ரேச்சல் அப்பான்னா உங்களூக்கு சட்டுன்னு புரிஞ்சிடும்.

"இது தான் புட் பால் டீமா.. யார்லே கேப்டன் இதுல்ல?"

"எட்வின் அண்ணன்..அவிய நேராக் கிரவுண்ட்க்கு வர்றேன்ன்னு சொல்லிட்டாவ.." இஸ்ரா தான் பதில் சொன்னான்.

"லேய் நீ தாவீது மகனா.. தூத்துக்குடியிலேத் தானே இருக்கா.. உங்க அத்தைக்கு ஒரு மகன் இருக்கான்லா மெட்ராஸ்காரன் அவனும் டீம்ல்ல இருக்கானா? எங்கேலே அவன்?"

என்னைப் பத்திக் கேக்குறார்ன்னு தெரிஞ்சதும் எனக்கு அடி வயிரில் லேசா ஒரு சின்னப் பிரளயமே நடந்து முடிஞ்சுப் போச்சு. நான் மெல்ல தலையை நீட்டி அவர் முன்னால் இஸ்ராவுக்கு நெருக்கமாய் போய் நின்னேன்.

"உங்க அப்பன் தாவீதும் நானும் சின்னக்குளம் புட் பால் டீமுக்கு ஆட இறங்குனோம்ன்னா செயிக்கமாத் திரும்ப மாட்டோம்.. இப்போ மவன் நீ.. அவன் இடத்தைப் பிடிச்சிருக்கா.. எனக்குப் பொட்டப்புள்ளயாப் போச்சி.. இல்லன்னா இறக்கி விளையாட விட்டராலாம்... " என்று சொல்லிவிட்டுச் சத்தம் போட்டு சிரித்தார்

"இப்போ இறக்கிவிட்டாலும் அவ நல்லாவே ஆடுவா.." வாய் வரை வந்த வார்த்தைகளை சொல்லாம விழுங்கிக்கொண்டேன்.

'சரி.. மூணு வருசமா தொடர்ந்து அந்தப் பிரகாசபுரம்காரன்வட்ட மிதிபட்டுட்டுல்லா கிடக்கியளாம்டே.. சின்ன்க்குளத்து இளவட்ட்ங்களுக்கு விளையாட்டு வரல்லயா இல்ல சொனைக் கெட்டுப் போச்சாடே..' என்று கேட்டு விட்டு எங்கள் பதிலுக்காக எங்களைப் பார்த்தார்.

"சொணை எல்லாம் கெடல்ல...விளையாடுறவங்க வினைச் சரி இல்ல..விளையாடத் தெரிஞ்சவனை இறக்கி விட்டாத் தானே விளையாட முடியும்.. சும்மா மெப்புக்கு ஓடத் தெரியாதவனை எல்லாம் ஆட விட்டா அலறி அடிப்பட்டுகிட்டுத் தான் வர்றணும்"

"இதான் உன் அத்தை மோவனா.. அவன் அம்மாவை மாதிரியாத் துடுக்காப் பேசுதான்.. ரேச்சல் உன்னியப் பத்தி நிறையச் சொல்லியிருக்கா..சரியாத் தான் இருக்கு, ஆமா உன்னிய ஆட்டத்துல்ல இறக்க மாட்டேன்னு யார் சொன்னது?" என்று சிரிச்சிகிட்டேக் கேட்டார்.

"மாமா சோமா இருக்கியளா...?"

"வாய்யா எட்வின்..உன்னியப் பத்தி பையக் குத்தம் சொல்லுதான்.. ஆட்டத்துல்ல இவனுவளைச் சேக்காமா ஒதுக்கி வைக்கியாமே ஏம்ப்பா?

"மாமா பைய இன்னும் பள்ளியூடத்துல்ல பத்தாப்பே முடிக்கல்ல...ஆனா ஆடணும்ங்கான்... பிரகாசபுரத்துல்ல எல்லாம் காலேஜ் முடிச்சப் பயல்வ.. இங்க நம்ம செட்ல்ல எல்லாம் சின்னப்பயல்வ... நான்..ஆல்டன்..ஜெபா..குரூஸ்.. இப்படி கொஞ்சம் வேர் தான் அவன்வ டீம்க்கு சரியான குரூப்...என்னப் பண்ண? எனக்கும் கால்ல அடிப் பட்டுருச்சு..இந்த வருசமும் கஷ்ட்டம் தான்.."

"பத்தாப்பு படிக்கப் பையன் பந்தடிச்சா பந்து கோல்குள்ளே போவாதோ... உங்க வயசு வரைக்கும் வளந்து தான் பந்தடிக்க வர்றணுமோ... மூணு வருசமா நாங்களும் தான் பாக்கோம்ல்ல.. உங்க குரூப் கும்பி கிழிஞ்சு வந்த நிக்கக் கதையை..." நான் கொஞ்சம் காட்டமாகவே பேசிவிட்டேன். எட்வின் அண்ணனுக்கு முகம் சிவந்து விட்டது.

"எலேய் மெட்ராஸ்காரா பேச்சு எல்லாம் உஙக ஊர் பொழ்ப்புக்கு வேணும்ன்னா சரியா வரும்... இந்தப் பக்கம் எல்லாம் வெத்துப் பேச்சு வெத்தலைச் சுண்ணாம்புக்குக் கூட ஆவாதுலேய்.." ரொம்ப விறைப்பும் முறைப்பும் சேர்த்துகிட்டு என்னைப் பாத்து எட்வின் அண்ணனிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுந்துச்சு.

'சரி மக்கா.. இந்த வருசம் போட்டியிலே நீங்க செயிச்சா.. ஆளுக்கு அம்பது ரூவாத் தாரேன்... என்ன?"
வார்த்தை வளர்வதைத் தடுக்க ரேச்சல் அப்பா இடையில் குறுக்கிட்டு தன் அறிவிப்பை வெளியிட்டார். அப்படித் தான் நான் நினைக்கிறேன்.

வார்த்தைகளின் வேக வீச்சு அப்போதைக்கு அங்கே கட்டுப்பட்டாலும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் பரிமாறுன பார்வையிலே அனல் சும்மா கொந்தளிச்சதுன்னு சொல்லணும். எட்வின் அண்ணன் (ம்ஹ்ம் இனிமே என்ன நொண்ணன் வேண்டிக்கிடக்கு..) எட்வின் என்னைப் பார்த்தப் பார்வையில் எனக்கு எல்லாச் சேதியும் திருத்தமா விளங்கிப் போச்சு. வில்லங்கத்தை மொத்தமா விலை பேசி வாங்கியாச்சுன்னு புரிஞ்சுப் போச்சு... எட்வின் என்னை மொறைப்பதை நிறுத்தவில்லை.. ஒரு கட்டத்தில் நானும் அடப் போடாங்க என்று திருப்பி மொறைக்க ஆரம்பிச்சேன்...

இப்படி ஒரு வரலாற்று மதிப்பு மிக்க பனிப்போர் துவங்கியதை கொஞ்சமும் உணராம மொத்த டீமும் ரேச்சல் அப்பாவின் அறிவிப்பைக் கேட்டு ஆர்வத்தில் ஆனந்தக் கூத்தாடிக்கொண்டிருந்தது.

எட்வின் நடந்துப் போவதையேப் பார்த்துக்கொண்டு நான் நின்றேன்... சந்துக்குள் போன எட்வினுக்குப் பின்னால் பைக் உறூமும் சத்தம் கேட்டது.. சந்தேகமின்றி அது யமஹா பைக் சத்தமே தான்.. வேற எதையும் யோசிக்காமல் நான் தெறிச்சுக் குதிச்சி சந்தை நோக்கி ஓடினேன்.

அங்கே கருப்புச் சட்டையைக் கழுத்தில் கட்டிக்கொண்டு மோட்டார் ரூம் அருகே நான் பார்த்த அதே யமஹா பைக்ல்ல ஏறி எட்வின் பறப்பதை நான் பார்த்தேன்...

"அடப்பாவி நீ தானா அவன்....உன்னியக் கண்டுபிடிச்சாச்சு உங்கூட இருந்த ராசாத்தியையும் கண்டுபிடிச்சுட்டேன்னு வை.. இருக்கட்டும் என் ராசாக்கட்டி... என்னையவா கட்டம் கட்டி மட்டம் தட்டுற..மெட்ராஸ் காரன் வாயைத் தொறந்துப் பேசுனா நீ முடிஞ்சுப் போயிருவடா என் எட்வின் அண்ணா"

அன்னிக்குச் சாயந்திரம் பிராக்டீஸ்க்கு எட்வின் வந்திருந்தாலும் விளையாடல்ல, நாங்க எல்லாம் விளையாடுனோம்... நான் நல்லா விளையாடியும் எட்வின் வேணும்ன்னு என்னை மட்டம் தட்டுனான். ஒரு கட்டத்துல்ல எனக்கு ஆத்திரம் பொங்கிருச்சு... பந்தை ஓங்கி அவன் மேல அடிக்கப் போயிட்டேன்.....இஸ்ரா வந்து நிறுத்திட்டான். எட்வினும் அதைக் கவனிக்கல்ல.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் எட்வின் என்னைக் எகடியம் பண்னிகிட்டு இருந்தான்.. நான் பொறுத்துப் போயிட்டு இருந்தேன்..காரணமே பெரிசா இல்லாம எனக்கும் எட்வினுக்கு பகை வளந்துகிட்டேப் போச்சு... சின்னப் பையன்னா அவ்வளவு இளக்காரமா.. உன்னை இந்த லீவு முடிஞ்சு ஊருக்குப் போறதுக்குள்ளேப் போட்டுக் கொடுக்காமப் போறதுல்லன்னு எனக்கு நானே சபதமெல்லாம் போட்டுகிட்டேன்.

எட்வின் பத்தி நான் கண்டுபிடிச்ச பரம ரகசியத்தை இன்னும் இஸ்ரா கிட்டச் சொல்லல்ல. அதுக்குச் சம்யம வாய்க்கல்ல. இஸ்ரா கிரவுண்டுக்கு வந்ததிலே இருந்து கிட்டத் தட்ட பிலேவின் மறுபிறப்பு ரேஞ்ச்சுக்கு படம் காட்டிகிட்டு இருந்தான்.

திடீரென்னு விளையாடிகிட்டு இருந்த அத்தனைப் பயலும் ஆட்டத்தை நிறுத்திட்டு திபு திபுன்னு கிரவுண்ட் ஓட ஒரு முக்குக்கு போய் குத்த வச்சுட்டாங்க...

அன்னிக்குத் தான் முதல் தடவையா பிராக்டீஸ் போயிருந்தாலே அதுக்கானக் காரணம் எனக்குப் புரியல்ல.. இஸ்ரா பிராக்டீஸ் போகும் நேரம் நான் பெருமபாலும் இழுத்து மூடிகிட்டு தூங்கிருவேன்... அழைக்காத இடத்துக்கு சும்மா வேடிக்கைப் பாக்கக் கூடப் போறதுல்லன்னு அவ்வளவு வைராக்கியம் எனக்கு..

நானும் இஸ்ராவும் தான் கடைசியாப் போனோம்...

எல்லாருக்கும் கொறிக்கறதுக்கு பலகாரம் வந்து இருந்துச்சு... அதிரசம், நெய் முறுக்கு, மஸ்கோத அல்வா, ஓமப்பொடி, ரவா லட்டு, விவிக்கா, முந்திரிக் கொத்துன்னு வகை வகையா வந்து இருந்துச்சு...ஆசையா எடுக்கப் போனவன்
"எலேய் நல்லாத் தின்னுப்புட்டு மல்லாந்துராதீய... விளையாடணும்... நாளைக்கு ஆட்டத்துல்ல செயிச்சா இதை மாதிரி இன்னும் ரெண்டு மடங்கு உண்டுல்லா" என்று எட்வின் சொன்னதைக் கேட்டு அப்படியே நகர்ந்து போய் சொம்புல்லருந்த தண்ணியை மடக் மடக்குன்னு குடிக்க ஆரம்பிச்சேன்..

தண்ணியைக் குடிச்சுட்டு தலையை இறக்கிப் பார்த்தா.. எதிரில் ரேச்சல் நிக்குறா...

அப்படியே மின்னல் கண்ணுக்குள்ளே வந்து வெட்டுற மாதிரி சிரிப்பு... சடைப் பின்னிச் சும்மா இரண்டு மொழம் பிச்சிப் பூவை வச்சுகிட்டு... சன்னமா முகத்துக்கு பவுடர் போட்டும் போடாமலும்.. கையிலே நாலு கல் வளையல்... காதுல்ல சின்னதா வைரக்கல வச்ச தொங்கட்டான் குலுங்குது.. அவளைப் பார்த்துகிட்டே குடிச்சத் தண்ணிய விழுங்க மறந்துட்டு வாயைத் தொறந்தப் படியே நின்னுட்டேன்.. ஆங் அந்த முன் நெத்தியிலே சுருளா சுருளாக் குவிஞ்ச முடியை வாயை வச்சு காத்து ஊதி கலைச்சு விட்டு கண் சிமிட்டினாப் பாருங்க... குடிச்சத் தண்ணி பொறை ஏறி இரும ஆரம்பிச்சேட்டேன்,

"ம்ஹூம் உங்க ஊர் பசங்க எல்லாம் நல்லா வாயைப் பொளந்துகிட்டு சைட் அடிக்க மட்டும் தாண்டா லாயக்கு...." என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

"யார் இப்போ சைட் அடிச்சா?"

"அப்போ இப்போ இவ்வளவு நேரம் .. நான் இங்கே வந்து அஞ்சு நிமிசம் ஆச்சு... இந்த அஞ்சு நிமிசமும் நீ என்ன நாலு கொயர் நோட்டு நிறைய டைப்பா அடிச்ச?"

"அது நான் உன்னை இப்படிப் பார்த்ததே இல்லையா அதான் கொஞ்சம் அதிர்ந்து நின்னூட்டேன்"

சுளுக்கெனச் சிரித்தவள்.." ஏன் இப்போ எனக்கு என்ன ஆயிருச்சுன்னு அதிர்ந்துட்டே?"

"அது நீ பொண்ணு மாதிரி எல்லாம் ... அது தான் தாவணி எல்லாம் போட்டுகிட்டு... எங்க ஊர் பொண்ணு மாதிரி தலை எல்லாம் வாரி.. பூ எல்லாம் வச்சு..." என்ன என்னவோ சொல்ல முயன்று உளற ஆரம்பிச்சேன்.

"அதாவது.. அன்னிக்கு சொன்னீயே .. பொண்ணுன்னா.. அப்படின்னு ஒரு டயலாக் அது மாதிரி இப்போ நான் இருக்கேனா?" லேசா வெட்கப்பட்ட மாதிரி இருந்தாள். அவள் ஏற்கனவே ரோஜாப் பூ கலர்.. இப்போ சிவப்பு ரோஜாக் கலருக்கு அவள் முகம் மாறியது.

"ம்ம்ம் " என்று நான் தலையசைக்க.. அவள் தாவணியின் நுனியெடுத்து முகம் மறைத்து வெட்கத்தை ரொம்பவே உறுதி செய்தாள்.

ரேச்சல் முகம் மூடிய நீலக் கலர் தாவணியின் நுனி கிழிந்திருந்தது என் கண்ணில் பளிச்செனப்பட்டது. அதைப் பார்த்த நான் சித்தம் தடுமாறி நின்ற அதே வேளையில்
அங்கே யமஹா பைக்ல்ல சீறி வந்த எட்வின் பைக்கை ஒரு முறுக்கு முறுக்கி...

"ரேச்சல் வாப் போலாம்.... நேரமாச்சுல்லா" என்றது இடிச் சத்தத்தை விடவும் பலமாய் என் காதுல்ல விழ்ந்துச்சு. தாவணியை விரல் நுனியாலே பிடிச்சுச் சுத்திகிட்டே ரேச்சலும் பைக்கில் ஏறப் போனா.

கிழிந்த நீலக் கலர் தாவணி, யமஹா பைக், எட்வின் எல்லாமாய் சேர்ந்து என்னை முறுக்கியது... எட்வின் வண்டியை இன்னும் முறுக்கினான்.
வண்டி சீறியதை விட எனக்குள் எதோ ஒன்று எக்குத் தப்பாய் சீறியது..ரேச்சல் மெதுவாய் நடந்துப் போய் வண்டியின் பின்னால் ஏறி கொண்டாள்.

அவ்வளவு தான்.. அதற்கு மேலும் என்னால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை...ஆன மட்டுக்கும் ஆவேசம் கொண்டு பைக்கைப் போய் மறிச்சு நின்னுகிட்டேன்..உள்ளுக்குள்ளே உறுமுன மனத்தின் ஓசையை வார்த்தைகளாய் வெடிச்சுத் தள்ள ஆரம்பிச்சேன்..

"எங்கேப் போறீங்க... மோட்டார் ரூமுக்கா....ச்சீ... வெக்கமா இல்ல..."நான் இப்படிச் சொல்லக் கேட்டதும் எட்வின் கைச் சட்டென்று வண்டியில் இருந்து விடுபட வண்டி நின்று போனது.

ஆனால் எட்வின் எந்த மறுப்பும் சொல்லாதது எனக்கு அந்த நிலையிலும் ஆச்சரியம் அளித்தது. என் கோவத்தை மேலும் கிளறிவிட்டது.எட்வினை விட்டு விட்டு பின்னால் ரேச்சலை எட்டிப் பார்த்தேன்.. அவள் முகத்தைப் பார்க்க சுத்தமாய் திராணியற்று அவள் தலை தூக்கவும் நிலத்தைப் பாத்தேன்.

"உனக்கு என்னக் காட்டுப்பாதையிலே பம்பாய் பசங்க செய்யறதச் செய்ய இங்கே ஒரு ஆள் கிடைச்சுட்டானா....? அதுக்குத் தானே நீ ஆசைப் பட்ட... நான் பாத்தேன் எலலா இழவையும் பார்த்தேன்.... உங்க அசிங்கம் எல்லாத்தையும் பாத்துத் தொலைச்சேன்.... ச்சீ..த்தூ....' கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவன் போல கத்தினேன்.

விளையாடிக்கொண்டிருந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி இதெல்லாம் நடந்துக் கொண்டிருந்தது. இதற்குள் பலகாரம் சாப்பிட்டப் பல பேரும் கலைந்துப் போயிருந்தார்கள்... எட்வின் .. ரேச்சல்.. நான் மூவரும் மட்டும் மீதமிருந்தோம்....நான் போட்ட சத்தம் கேட்டு இஸ்ராவும் வந்துச் சேர்ந்தான்..

"இன்னும் ஏன் நிக்குறீங்க... போங்க.. போய்யா அவளை மோட்டார் ரூமுக்குக் கூட்டிட்டுப் போ... " என்று நான் முழுசாய் சொல்லி முடிக்கும் முன் என் கன்னத்தில் அது வரை நான் அறிந்திராத வலியைத் தர்ற மாதிரி ஒரு அறை விழுந்தது...காதுக்குள்ளே வண்டு வந்து கும்மி அடிக்கிறாப்பல்ல ஒரு எபெக்ட் ஆயிருச்சு.

வலியின் தீவிரம் என் நரம்பு மண்டலங்களில் வேகமாய் பரவிக்கொண்டிருந்தது...சில வினாடிகளுக்கு நடப்பது எதையும் என்னாலே கிரகிக்கக் கூட முடியாம தரையிலே உக்காந்துட்டேன்... லேசாத் தெளிஞ்சுப் பாத்தப் போது எட்வின் மவுனமாய் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டிருப்பது தெரிந்தது... அவன் தலைக் கவுந்துக் கிடந்தது.

வண்டி கிளம்பியது...வண்டியில் ரேச்சல் இருந்தாள் என் கண்ணில் இருந்து வண்டியும் ரேச்சலும் மெல்ல மெல்ல மறைஞ்சாங்க. அதே சமயம் என் கண்களில் கண்னீர் கட்டுப்ப்டாமல் ஓட ஆரம்பித்தது...

தரையில் கிடந்த என் மீது இஸ்ராவின் நிழல் நீண்டு கிடந்தது...

"நாளைக்கு மேட்ச் மட்டும் இல்லன்னா நீ பேசுன்ன பேச்சுக்கு உன்னிய இங்கேயே வெட்டிப் போட்டிருப்பேன்டா" பைக் மறைந்த பின் அங்கு நிலவிய கடும் மவுனத்தை அதிரும் வார்த்தைகளால் உடைச்சுப் போட்டான் இஸ்ரா.

பைக் போனத் தடத்தையே வெறித்துப் பார்த்தப் படி கையை முழங்காலில் குவித்து நான் உட்கார்ந்திருந்தேன்... சின்னக்குளத்தில் சாய்ங்காலச் சூரியன் சத்தமின்றி குளத்திற்குள் இறம்ங்கிக் கொண்டிருந்தது...

என் மீது படிஞ்சிருந்தப் புழுதியை எல்லாம் உதறி விட்டுக்கொண்டு கண்ணில் வழிந்த கண்ணீரை இன்னொரு கையை வச்சுத் துடைச்சிகிட்டுகடும் வெறி வந்தவனாய் எழும்பி நின்று எட்டு ஊருக்கும் கேட்கும் குரலில் நான் அலறினேன்...

"என்னை அடிச்சது எவன்டாஆஆஆஆஆஆஆஆஆ??"

விடுமுறையின் கடைசி நாள் பொழுது விடிய இன்னும் சரியாய் 12 மணி நேரம் மீதமிருந்தது..அந்த 12 மணி நேரத்துக்குப் பின்... தொடரும்

Monday, July 16, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 5

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 4


இன்னும் இரண்டு நாள் தான் மூணாவது நாள் மெட்ராஸ்க்கு ரயில் ஏற வேண்டியது தான்..

அன்னிக்கு காலையிலே வீட்டுக்கு முன்னாடியிருந்த வேப்பம் மரத்துல்ல இருந்த குச்சியை வச்சு (குச்சிக்கு மேல கோல்கேட் பேஸ்டும் வச்சுத் தான்) பல் விளக்கிட்டு இருக்கும் போது தான் இஸ்ரா வந்து என் கிட்ட அந்த விசயத்தைச் சொன்னான்.. விசயம் ஒண்ணுமில்லங்க.. எல்லாம் விளையாட்டு விவகாரம் தான்..

"எட்வின் அண்ணனுக்கு கால்ல சரியான அடிடா.. நாளைக்கு அவர் மேட்ச்ல்ல ஆடுறது சந்தேகம் தான்..வேற ஆளுக்கு எங்கேயும் போக முடியாது...உம் பேரை நான் தான் சொன்னேன்.. எடவின் அண்ணனும் ஒத்துக்கிட்டாவ.. எனக்காக வந்து விளையாடுலே..."

நான் பல் விளக்குவதில் தீவிரமாக் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

"மூணு வருசமா பிரகாசபுரத்துக்காரன்ட்ட தோத்துகிட்டு இருக்கோம்... இந்த மொறையாவது செயிக்கணும்ன்னுப் பாக்கோம்...லேய்.. நீ மெட்ராஸ்காரனாப் போனாலும் சின்னக்குளம் உனக்கும் சொந்த ஊர்ங்கறதா மறந்துராதே..."

எனக்கு சுள்ளென்று கோபம் தலைக்கேறிருச்சு.

"போன வருசம்.. மேட்ச் வச்சப்போ .. வந்து எவ்வளவு கெஞ்சியிருப்பேன்..உங்க எட்வின் நொண்ணேன் தானே நாலு பேர் பாக்க நக்கலடிச்சு நாணப்படுத்தி அனுப்புனாவ.. ஏன் இந்த் வருசமும் ஆரம்பத்துல்ல எல்லாம் கண்டுகிடவும் இல்ல.. கூப்பிடவுமில்ல... இப்போ டீம் நொண்டி அடிச்சவுடனே.. ஊர்... உறவு எல்லாத்தையும் சொல்லி வந்து நிக்குறீயளோ? போங்கடா... நீங்களூம்...."

"100 ரூபா பந்தயப் பணம்... நீ ஆடுனா உன் பங்கு ரெண்டு மடங்கு... கிட்டத் தட்ட 10 ரூபா வரும்...அது மட்டுமில்லாம செயிச்சா அன்னிக்கு ராத்திரி பனங்கள்ளும் உண்டு.... என்னச் சொல்லுத..?"

இஸ்ரா வேற எதுக்கும் இவன் ஒத்து வர மாட்டான் என நினைத்தானோ என்னவோ நேராகவே வியாபாரத்திற்கு வந்தான். எனக்கும் வியாபாரம் பிடிச்சுப் போச்சு.. பட்டுன்னு ஒத்துக்கிட்டா கொஞ்சம் கெத்து கொறஞ்சிரும் என யோசித்தேன்,

"இஸ்ரா.. அவிய எல்லாரும் என்னிய அசிங்கப்படுத்துனதையும் மறந்து மன்னிச்சி நான் விளையாட வார்ரேன்னா அது உனக்காக மட்டும் தான் வேற எதுக்காவும் இல்ல....நீ வந்து இவ்வளவு தூரம் பேசியிருக்கப் பார் அதுக்காக மட்டும் தான்... வேற எதுக்காகவும் இல்ல..." மீண்டும் ஒரு முறை அழுத்திச் சொன்னேன்.

"இன்னிக்கு சாயங்காலம் ஸ்கூல் கிரவுண்ட்ல்ல பிராக்டீஸ் இருக்கு வந்துரு.. உனக்கு ஷூ எல்லாம் நான் ஏற்பாடு பண்ணிடுறேன்.. நீ ஒழுங்கா வந்துச் சேர் அது போதும்."
இஸ்ரா மேட்ச்க்கான மிச்ச ஏற்பாடுகளைக் கவ்னிக்க கிளம்பிவிட்டான்.

எனக்கு சிறு வயசுல்ல இருந்தே கால்பந்தாட்டம்ன்னா ரொம்ப பிடிக்கும். எங்கப்பா வழியாக எனக்கு வந்த் ஆர்வம் அதுன்னு நினைக்கிறேன்.. மரடோனான்னா நமக்கு அப்படி ஒரு பாசம்ங்க.. என்ன ஒரு வேகம்.. என்ன ஒரு வீரம்.. விளையாட்டுன்னா அது கால்பந்தாட்டம் தான்... அப்படின்னு ஒரு எண்ணம் நமக்கு.. அந்த மாதிரி ஒரு எண்ணம் எனக்குள்ளே அழுத்தமா நிலைக்குறதுக்கு இன்னொரு காரணம் வருசந்தோறும் எங்கச் சின்னக்குளத்துல்ல நடந்துகிட்டு வர்ற விடுமுறை கால்பந்துப் போட்டி தான்..சின்ன வயசுல்ல இருந்து அந்த போட்டியை வருசம் தவறாம நான் பாத்துட்டு வந்துருக்கேன்.

ஒவ்வொரு வருச மே மாசம்மும், சரியா விடுமுறை முடியும் நேரம் சின்னக்குளத்துக்கும் அதுக்குப் பக்கத்துல்ல இருக்க பிர்காசபுரம்ங்கற ஊருக்கும் கால்பந்தாட்டப் போட்டி நடக்கும்.. சும்மா ஊரே ஒண்ணுக் கூடிருவாங்க்.. இந்தியா பாகிஸ்தான் ரேஞ்சுக்கு 90 நிமிசமும் கிரவுண்ட்ல்ல சூடு பறக்கும்.. மூஞ்சு மூக்கு எல்லாம் பேந்துப் போற அளவுக்கு விவகாரமா ஆட்டம் பட்டயக் கிளப்பும்.

அந்த விடுமுறை கால்பந்துப் போட்டிங்கறது ஒரு மானப்பிரச்சனை..ஊர் பெரியவர்கள் இந்தப் போட்டியை வெளிப்படையா ஆதரிக்கறதில்ல.. இருந்தாலும் பயல்வ ஜெயிக்கணும்ங்கற ஆசையைக் காட்டாம இருக்கறதும் இல்ல..

"எலேய் லீவுக்குன்னு வந்துபுட்டு எதுக்குலேய் இப்படி பந்தடிச்சிகிட்டு சாகுதீய... ஒழுக்கமா இந்தப் போட்டியை எல்லாம் நிறுத்துங்கலேய்" எங்கப் பாட்டியை மாதிரி தாய்குலங்களுக்கு இந்த் ஆட்டம் எப்போதுமே பிடிப்பதில்லை.. ஆனால் எங்களுக்கு அது ஒரு வீர விளையாட்டு.. ஒவ்வொரு விடுமுறையும் ஊருக்கு எங்களைப் போகச் சொல்லி வற்புறுத்தும் முக்கிய காரணங்களில் இந்தக் கால்பந்தாட்டமும் ஒன்று...

அப்புறம் நானும் ஒண்ணும் சும்மா காலபந்தை டிவியிலே பாத்து சத்தம் போடுற ஆள் இல்ல.. எங்க ஸ்கூல் டீம்க்கு ஸ்டைரக்கர்.. சும்மாக் கிரவுண்ட்ல்ல இறங்கிட்டோம்ன்னா நிலவரம் கலவரமா மாறும் வரைக்கும் ஓயமாட்டோம்ல்லா..

போன வருசம் எட்வின் அண்ணன்..(அவர் தான் சின்னக்குளம் கால்பந்து டீம்க்கு போன முணு வருசமாக் கேப்டன்) என்னியச் சின்னப் பையன்னு சொல்லி சேத்துக்காம கழிச்சு வைச்சது எனக்குப் பெருத்த அவமானமாப் போயிருச்சு... ஆனா இந்த வ்ருசம் அந்த எட்வின் அண்ணன் இடத்துல்ல நான் ஆடப் போறேன்.. இது தான் விதிங்கறதா.... இந்த வருசம் பிரகாசப் புரத்துக்காரன்வ முட்டி கெண்டைக் கால்ன்னு ஏறி மிதிச்சாவ்து செயிச்சு சின்னக்குளம் வரலாற்றிலே என் பேரைப் பதிச்சுரணும்டா.. எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்..

பஸ் ஸ்டாப் திண்ணையிலே உக்காந்து யோசிச்சிகிட்டே இருந்தேன்.. உச்சிப் பொழுது ஆயிருச்சு.. வயிர் பசி வேற உயிரை கிள்ளிகிட்டு இருந்துச்சு...பதனீர் வாங்கி கொஞ்சம் போல் குடித்து விட்டு மீண்டும் வீட்டைப் பார்த்து நடந்தேன்...

அந்த நேரம் சல்லென்று வேகமாய் பைக் ஒண்ணு வேகமாய என்னைத் தாண்டிப் போனது. போன வேகத்தில் சரட்ன்னு காட்டுப்பாதையில் இறங்கியது... அது யார்டா நம்ம ஊர்ல்ல பைக் எல்லாம் வச்சிருக்கது.. அதுவும் உச்சி நேரத்துல்ல காட்டுப் பாதைக்குள்ளே போறது...பைக் அந்தப் பாதையில் போகவே முடியாதே... பாதையிலே கிடக்க முள்ல்ல டயர் சிக்குன்னா அந்துப் போயிருமேப் போனவன் பொழப்பு..

பதனீரை தொண்டைக் குழிக்குள்ளே குலுங்க விட்டு ஓட்டமும் நடையும் காட்டுப்பாதைப் பக்கம் போனேன். டயர் தடம் பாத்துக்கிட்டே நடந்தேன்.. ஒரு அம்பது அடி தூரம் போயிருப்பேன்.. பைக் அங்கே ஒரு பனை மரத்து மேல சாய்த்து நிப்பாட்டப்பட்டிருந்தது.

சுற்றிலும் யாரையும் காணவில்லை... நான் பைக் பக்கம் போனேன். குனிஞ்சு டயரைச் சரி பார்த்தேன்.. டயருக்கு எந்த சேதாரமும் இல்ல... வந்தவன் அவசரத்துக்கு எங்கியாவது ஒதுங்கியிருப்பானோ...அத்துப்புடுங்குன வேகத்துல்ல இல்ல பாய்ந்து வந்தான்.. சத்தம் கொடுக்க நினைத்து அடக்கிக் கொண்டேன்.. சரி.. நம்ம வேலையைப் பார்ப்போம் என் திரும்பியவனை சற்று தொலைவில் இருந்து கேட்ட கிசுகிசுப்பான பேச்சு சத்தம் தடுத்து நிறுத்தியது...

"அஹா..மொட்டை வெயில்ல மெரீனாப் பீச்சுல்ல நடக்குற விசயம் இங்கேயும் நடக்குதா..."

மெதுவா சத்தம் வந்த பக்கம் அடியெடுத்து வச்சவன்.. ஒரு கணம் தயங்கி நின்னேன்.. இதை எல்லாம் தனியாப் போய் பார்த்தா எதாவது சேதாரம் வருமான்னு யோசிச்சேன்.. துணைக்கு இஸ்ரா இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்..எதாவது எக்குத் தப்பாப் போயிருச்சுன்னா எபப்டியாவது தப்பிக்க வழிச் சொல்லிருவான்..

அவனைப் போய் கூட்டிட்டு வரலாம்ன்னா..அது வரைக்கு காட்சி நடக்குமான்னுத் தெரியல்ல..சரி வருவது வரட்டும் அப்படின்னு சத்தம் வந்த இடம் நோக்கி அடி மேல் அடி வைத்து பூனை மாதிரி நகர்ந்தேன்.. வழக்கமாய் வேலை செய்யும் நம்ம ஏழாவது அறிவு சொன்னப் படி ஒரு முன்னெச்சரிக்கையாய் பைக் டயர்ல்ல காத்தைப் புடுங்கிட்டேன்... அங்கே நடப்பதை நான் பாக்க.. அதை அவன் பாக்க.. அப்புறம் பைக் எடுத்து அவன் துரத்த இந்த வில்லங்கம் எல்லாம் வேண்டாம்ன்னு தான் அப்படி ஒரு ஏற்பாடு..

இங்கே ஒரு மோட்டார் ரூமே இருக்கா... மண்டி கிடந்த புதரை ஒதுக்கி எட்டிப் பார்த்தேன்... மோட்டார் ரூமில் ஒரு பெண் குரலும் ஆண் குரலும் கேட்டது..

ஆண் மட்டும் தான் பேசினான்.. பெண் 'ம்' கொட்டுவதும்.. ச்சீ சொல்லுவதுமாய் இருந்தாள்.. பேச்சு ரொம்பச் சன்னமாப் போயிட்டு இருந்துச்சு..

வெறும் பேச்சு தானா.. இதுக்காடா இங்கே வந்தீங்க.. வெறும் பையல்களா... மனத்திற்குள் நானேச் சொல்லிகிட்டேன்.

எப்படியாவது உள்ளே யார் இருக்கறதுன்னுப் பாத்துரலாம்ன்னு பார்த்தா ஒண்ணும் முடியல்ல மோட்டார் ரூம் கதவு மூடியிருந்தது.

ஆணும் பெண்ணும் முதுகு காட்டியப்படி இருந்தனர்.. அதுவும் சுவத்துல்ல இருந்தச் சின்ன ஓட்டை வழியாப் பார்த்ததில்ல எதுவும் தெளிவாக தெரியவில்லை.. ஆண் போட்டிருந்த கருப்பு சட்டை ஒரளவுக்கு தெரிந்தது. பெண் அவன் மடியில் படுத்து இருந்ததால் அவளைப் பற்றிய் எதுவும் சரியாகத் தெரியவில்லை... அவள் தலை மட்டும் லேசாகத் தெரிந்தது...

முழுசாப் பதினைஞ்சு நிமிசம் காத்திருந்தும் ஒண்ணும் நடக்கவில்லை... பதனீர் குடிச்சது வெளியே வர்றேன்னு தந்தி அடிச்சுச் சொல்லிகிட்டு இருந்தது.. அடக்க மாட்டாமல் அருவியாய் பாதையோரத்தை ஈரப்படுத்த்க் கிளம்பி... செயலும் ஆற்ற துவங்கிய நேரம்...

"எலேய்...இங்கே என்னலே பண்ணுதா?"
பக்கத்து வீட்டு பென்னி அண்ணன் குரல்... நாசரேத் போயிட்டு டிவிஸ் 50ல் திரும்பிக் கொண்டிருந்தார்.

வீட்டுக்குத் தானேப் போறா... அவர் குரல் உயர்த்தி பேசிக் கொண்டிருந்தார். என் பார்வை என் செயலில் பாதியும் மோட்டார் ரூமில் மீதியுமாய் அலைக்கழிந்துக் கொண்டிருந்தது.
மோட்டார் ரூம் பக்கம் என் பார்வைப் போவதைப் பார்த்த பென்னி அண்ணன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்தார். வேட்டியை ஏத்திக் கட்டிக் கொண்டு மோட்டார் ரூம் பக்கம் நடந்தார்.

நான் ஆர்வக்கோளாறில் பாதியிலே என் கடமையினை நிறுத்திவிட்டு பென்னி அண்ணன் பின்னால் நடந்தேன்..

"ஏய் யார்ல்லே அது மோட்டார் ரூம்லே இந்த நேரத்துல்ல.... போன மாசமே உங்களைப் பிடிக்கும் போது சாணியைக் கரைச்சுத் தலையிலே ஊத்தி ஊருக்குள்ளே ஊர்வலம் விட்டிருந்தா விளங்கிப் போயிருப்பீயே.. போனாப் போகுதுன்னு விட்டா.. இங்கிட்டு குடித்தனமா நடத்துறீய... நாத்தம் பிடிச்ச்ப் பயல்வளா?" கையில் ஒரு உருட்டுக் கட்டையை எடுத்துக் கொண்டார்

"ஆகா இது பல நாளா நடக்குற கூத்துப் போல இருக்கே.. நாசரேத் போய் படம் பாத்ததுக்கு இங்கிட்டு வந்திருந்தா டிக்கெட் இல்லாமலே ஓசியிலே படம் பாத்துருக்கலாம் போல இருக்கே.."

நான் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே பென்னி அண்ணன்.. மோட்டார் ரூம் கதவை ஓங்கி உதைத்து உள்ளேப் போனார்.. அண்ணனுக்கு பின்னால் நானும் போய் நின்னேன்.. உள்ளே யாரும் இல்லை.. அண்ணனின் டிவிஎஸ் சத்தம் கேட்ட ஓடனேயே மக்கள் தெறிச்சுட்டாங்கப் போலிருக்குன்னு நினைச்சிகிட்டேன்..

பென்னி அண்ணன் சுத்தி முத்திப் பாத்துட்டு..
"அடுத்த மொறை சிக்கட்டும் சுவத்துல்ல வச்சு மூஞ்சைத் தேச்சுரமாட்டேன்" என்று கருவிக்கொண்டார்.

அவர்கள் மீது இருந்த கவனம் இப்போ என் பக்கம் திரும்பியது..

"ஆமா நீ என்னலேய் இந்தப் பக்கம் பண்ணுதா?" என்னை முழு சந்தேகத்தோடுக் கேட்டாவ.

"அதுவா வீட்டுல்ல நேரம் போவல்ல... இந்தா இந்தப் பக்கம் ஒரு முசல் ஒண்ணு ஓடுச்சு.. கவணை வச்சு அடிக்கலாம்ன்னு வந்தேன்... அது இந்த மோட்டார் ரூம் பக்கம் வந்துருச்சு... அதைத் தொரத்திட்டு வந்த வேகத்தில்ல எனக்கு ஒண்ணுக்கும் வந்துச்சு... அதான் அந்த ரூமைப் பாத்துகிட்டு நீங்க வரும் போது...." என்று இழுத்தேன்..

நான் விட்ட கதை ஓரளவு நம்பும் படி இருந்ததால் பென்னி அண்ணனும் நம்பிட்டாவன்னுத் தான் சொல்லணும்...
'முயல் கிடக்கட்டும்.. இந்தப் பக்கம் எல்லாம் இப்படி திரியாதே.. இது சரியான இடம் இல்லலேய்.. வா என் கூட ஏறு வண்டில்ல "

மோட்டார் ரூம் விட்டு வெளியேறும் போது தான் பார்த்தேன்.. ஜன்னல் ஓரம் கிழிந்து தொங்கிய நீல நிற தாவணியின் நுனியை..பென்னி அண்ணன் அதைப் பார்க்கவில்லை.

"அடப் பாவிகளா அந்த சின்ன ஜன்னல் வழியா எப்படிடா வெளியேப் போனீங்க" எனக்கு நானே கேட்டுக்கிட்டேன்.

பென்னி அண்ணன் வண்டியில் ஏறி வீட்டுக்குக் கிளம்பினோம்...

"லேய்.. நீ இந்த வருசம் டீம்ல்ல இருக்காப் போலிருக்கு..."

"உங்களுக்கு எப்படி தெரியும்?"

"எட்வின் தான் சொன்னான்.. அவன் என் கிளாஸ் மேட்ல்லா.. அருமையான ஸ்ட்ரைக்கர் அவன்.. சவத்துப் பைய கால்ல அடியாம்ல்லா.. அதான் உன்னியச் சேத்ததாச் சொன்னான்... அவனுக்கு உன்னியச் சேக்கத்துல்ல விருப்பமே இல்ல.."

அதான் எனக்குத் தெரியுமே.. மனசுக்குள்ளேச் சொன்னாலும் வெளிக்கு வெறும் 'உம் ' கொட்டிக் கொண்டேன்.

"அந்தப் பிரகாசபுரம் டீம் மொத்தமும் எருமை மாட்டு பயல்வ... காட்டு ஆட்டம் தான் ஆடுவான்வ... உன்னைய அவன்வக் கூட ஆட விடுறது கோழிக் குஞ்சை மத யானைக்கூட்டத்துக்குள்ளே விடுற மாதிரின்னு சொல்லி வருத்தப்பட்டான் எட்வின்.. ஒருக்கா நீ மெட்ராஸ்ல்ல ஆடுன மேட்சை எட்வினும் பாத்துருக்கானாம்.. எதோ பீட்ஸ் கிரவுண்டாம்ல்லா.. எட்வின் மெட்ராஸ்ல்ல தானே போர்ட் ட்ரஸ்ட்ல்ல வேலைப் பாக்கான்.. உனக்குத் தெரியும்ல்லா.. உன் மேட்ச்ல்ல நீ ஆடுனதைப் பாத்தானாம்... பைய ஆடுவான் அதைப் பத்தி எல்லாம் பிரச்சனையில்ல.. சின்னப் பைய அந்த காட்டான்கிட்ட அடிகிடி வாங்கிரப்பிடாதுடேன்னு சொல்லிகிட்டு இருந்தான்"

பென்னி அண்ணன் பேசி முடிக்கவும் வீடு வந்து சேரவும் சரியாக இருந்தது.

"சரி என்ன அடி தாங்குவீயால்லே.." பென்னி அண்ணன் மறுபடியும் சிரித்துக்கொண்டேக் கேட்டாவ.

பென்னி அண்ணன் கேள்விக்கு நான் பதில் சொல்லும் முன் என்னைக் கடந்துப் போன பைக் மீது என் கவனம் பதிந்தது. மோட்டார் ரூம் அருகே பாத்த அதே பைக்..

அப்புறம் பைக் ஓட்டிட்டு போனவன் போட்டிருந்த சட்டையின் கலரும் கருப்பு...

ஆகா வில்லங்கம் வில்லேஜ்க்குள்ளேயே தான் இருக்கா.... இஸ்ராவை உடனேப் பார்க்க வேண்டும் என முடிவு செய்துக் கொண்டேன்.

விடுமுறை முடியப் போவதுங்கோ...

Thursday, July 12, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 4

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 3

"டேய்.. என்ன கேசட்டுடா இது?" இஸ்ரா என் கையில் இருந்த பெயர் எழுதப்படாத 90 டி.டி.கே கேசட் கவரைப் பார்த்துக் கேட்டான்.

"இஸ்ரா இது பாப் மியூசிக்.. மைக்கேல் ஜாக்ஸன் பாட்டு..மெட்ராஸ்ல்ல அம்பது ரூவாக் கொடுத்து ரெக்கார்ட் பண்ணி வச்சுருக்கேன்... வீட்டுக்குத் தெரியாது."

இதை வச்சு இந்த சின்னக்குளத்தை என்னலேய் பண்ணப் போறா?" இஸ்ரா மிரட்சியுடன் கேட்டான்.

"பாம்பேகாரிக்கு எங் கெத்தையும் காட்டணும்ல்லா... நாங்களும் இங்கிலீஸ் பாட்டு எல்லாம் கேப்போம்ன்னு சொல்லணும்ல்லா"

"எலேய் நம்ம வீட்டுல்ல வேதப் பாட்டைத் தவிர வேற பாட்டு போட்டா வெளுத்துருவாவலே.. இப்பவே சொல்லுதேன் எனக்கு இது சரியாப் படல்லே"

"வேதப்பாட்டைத் தவிர வேற பாட்டுப் போட்டா வெளுத்துருவாவங்கறது எங்களுக்கும் தெரியும்ல்லா..இதை இங்கிலீஷ் வேதப் பாட்டுன்னு கதை விட்டுருவோம்ல்லா"

"வெளக்கெண்ணெய்..பாட்டி அத்தை எங்கம்மாவைக் கூட ஒண்ணுக்கு மூணு தடவ அடிச்சுச் சொன்னா நம்பிருவாவ.. உங்க அப்பாவும் எங்க அப்பாவையும் ஏமாத்த முடியாதுல்லேய்... இப்படி கூத்துப் பாட்டைக் கூரையிலே போடுதான்னு தெரிஞ்சா தோலியை உரிச்சுருவாவ.. அதோட நம்மச் சோலி முடிஞ்சுன்னு நினைச்சுக்க.."

""எலேய் இஸ்ரா.. அதை எல்லாம் நாங்க யோசிக்கமலாக் காரியத்துல்ல இறங்குவோம் மதியம் உங்கப்பாவும் எங்கப்பாவும் தூத்துக்குடி டவுணுக்குப் போறாவளாம்.. 2 மணி ரத்னாவுக்கு..அவிய வர்றதுக்கு ராத்திரி ஆயிரும்..தாத்தா எதோ வேலைன்னு பிரகாசபுரம் பஞ்சாயத்து ஆபிஸ்க்குப் போறாவ..வீட்டுல்ல பொம்பளையல் மட்டும் தான் இருப்பாவ..இது இங்கிலீஸ் வேதப் பாட்டுன்னு சொல்லிட்டா அவ்வளவு பேரும் நம்பிருவாவ.. பக்தியா பாப் கேப்பாவ..பிரச்சனை இல்லை"

"சம்மர் லீவு சாப்பாட்டுக்குச் சேதாரம் ஆகாம இருந்தாச் சரிஆனாலும் நீ சாமிதி படப் போறான்னு எனக்குப் படுதுல்லே"

"எலேய் பயந்தா அந்தப் பாம்பேக்காரி போற போக்குல்ல அவ பாவாடைய என் கையிலேக் கொடுத்துக் கெட்டிக்கச் சொன்னாலும் சொல்லிருவா.. அதுன்னால முடிவு பண்ணிட்டோம்ல்லா பாப் மியூசிக்கைச் சும்மாக் கேக்கபிடாது மக்கா.. கெத்தாக் கேக்கணும்.."

மாமா பொன் போல பொத்தி வைத்துப் பாதுகாத்து வரும் சோனி டேப் ரிக்கார்டரை எடுத்து மொட்டை மாடியிலே ரெடி பண்ணிகிட்டோம். கரண்ட் கனெக்ஷன் வேலை எல்லாம் இஸ்ரா அருமையாச் செஞ்சு முடிச்சான். வெயில் காலம் தான்னாலும் ஓங்கி வளர்ந்த வேப்ப மர நிழல் குளிர்ச்சியா இருந்துச்சு.

கண்ணுல்ல கூலிங்க் கிளாஸ் மாட்டிகிட்டு சட்டையை பனியன் தெரிய திறந்துவிட்டுகிட்டு.. இஸ்ராவையும் நம்ம கெட் அப்க்கு மாத்திவிட்டு..

2 மணி ரத்னா ஊர் எல்லையைக் கடக்கக் காத்திருந்தோம்...

அந்தக் கேப்பிலே..அன்னிக்கு காலையில் எனக்கும் ரேச்சலுக்கும் நடுவில் நடந்த நிகழ்ச்சி மீண்டும் மீண்டும் என் மனதில் ரி வைண்ட் பட்டன் அழுத்தாமலே ஓடிக்கொண்டிருந்தது.

ரேச்சல் கொடுத்த கேக்கின் சுவை நாக்குல்ல இருந்து கரைவதற்குள் அவளுக்கு எதாவது கிப்ட் கொடுக்கணும்ன்னு முடிவு பண்ணிகிட்டு நான் ரூம்ல்ல குறுக்கும் நெடுக்கும் ந்டந்துகிட்டு இருந்தப்போ இஸ்ரா பொட்டியிலே இருந்த அந்தப் பொருள் என் கண்ணுல்லப் பட்டுச்சு...

பாழாப் போன என் பொருளாதார சூழ்நிலை.. என்னைக் கையேந்தச் சொல்லிச்சு.. ஆனா நம்ம புத்தி இறைவனிடம் மட்டும் தான் கையேந்தணும் இருக்கவன் கிட்ட இருந்து எடுத்துக்கணும்ன்னு எக்குத் தப்பாச் சொல்லிக்கொடுத்துச்சு...ரேச்சலுக்கு ஒரு அழகான கிரிஸ்டல் கீ செயின் கிப்ட் ரெடி..

கிளம்பும் போது..மேசையிலே தின்னவேலி இருட்டுக் கடை அல்வாப் பொட்டலம் ஒண்ணு.. மொத நாள் தாத்தாச் சொல்லிவிட்டு பக்கத்து வீட்டு பென்னி அண்ணன் வாங்கிட்டு வந்தது எடுத்துக்கச் சொல்லி வற்புறுத்திச்சு. மறுக்க முடியாம அதையும் எடுத்துக்கிட்டேன்.

"இந்தா..." அழகாச் சுருட்டப்பட்ட பொட்டலத்தை ரேச்சலிடம் நீட்டினேன்.

"என்னது...?"

"அல்வா"

"அடப்பாவி கடைசியாக் கொடுக்கறதை முதல்லயே கொடுக்குறீயா..உனக்கு தைரியம் ஜாஸ்தி தான்..எனக்கு வேண்டாம்.. நீயே சாப்பிடு"

"ஏய் இது என்னன்னு நினச்சுட்ட..இது தின்னவேலி இருட்டுக் கடை அல்வா..உங்க ஊர்ல்ல கிடைக்காது.. உன் பொறந்த நாளுக்கு கேக் தின்னுட்டு வாயைத் துடைச்சுட்டுப் போயிட்டேன்னு அவப் பெயர் எனக்கும் என் பின்னாடி வர்ற சந்ததிக்கு வந்துறக் கூடாதுல்லா.. அது தான் வாங்கிட்டு வந்தேன்.. பிரிச்சுப் பாரு அந்தப் பொட்டலத்துக்குள்ளே ஒரு சின்னப் பரிசும் இருக்கு"

ரேச்சல் வாக் மேனைக் காதில் மாட்டியப் படி பொட்டலத்தைப் பிரித்தாள்.. உள்ளே இருந்த அந்த கிரிஸ்டல் கீ செயினைக் கையில் எடுத்தாள்...சூரிய ஒளி அதில் படும் படி தூக்கி பிடித்து அவள் பார்க்கும் போது தான் நானும் அதைப் பார்த்தேன்... படித்தேன்..

TO MY BEST FRIEND ISRAEL...WITH LOVE ANITHA

கொஞ்சம் சத்தமாவே படித்துவிட்டேன்... இருட்டுல்ல அந்தக் கீ செயினை லவட்டிட்டு வரும் போது அதில்ல இப்படி ஒரு வில்லங்கம் ஒளிஞ்சு இருக்கும்ன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கல்ல...

ரேச்சல் முகத்திலே என்ன ரியாக்ஷன் இருக்கும்ன்னு பாக்கக் கூட திராணியில்லாமல் தலையைக் குனிஞ்சுக்கிட்டேன். அப்படியே தலையை நிம்ர்த்தாமல்

'ஆனா அல்வா சத்தியமா உனக்கே உனக்குன்னு வாங்குனது...அதையாவது எடுத்துக்கோ' கொஞ்சம் கெஞ்சலாய் சொல்லி பார்த்தேன்

"உங்க வீட்டுக்கு வந்து கேட்கவா?"

"என்னை நம்பு.. நான் அவ்வளவு மோசம் இல்ல... எதோ கிப்ட் மாறிடுச்சு"

என் கையைப் பிடித்து நீட்டி என் உள்ளங்கையில் அல்வாப் பொட்டலத்தையும் கீ செயினையும் வைத்தாள். வாக் மேனில் ப்ளே பட்டனை ஓங்கி அழுத்தினாள். வாய் இருந்து இருந்தால் அந்த பட்டன் அலறியிருக்கும்.

"என்னப் பாட்டு ஓடுது?"

"ம்ம்ம் பாப் மியூசிக்.. இங்கிலீஸ் ஆல்பம்.. பிஜீஸ்... உனக்குப் புரியாது... YOU R A REAL DUMBO" என்று சொல்லிவிட்டு விருட்டெனப் போய்விட்டாள்.


அதன் தொடர்ச்சியாகத் தான் எங்க வீட்டு மொட்டை மாடியில் பதில் கச்சேரிக்கு ஏற்பாடு நடந்துகிட்டு இருந்துச்சு.

ரத்னா பஸ் போய் பத்து நிமிசம் கழிச்சி டேப் ரிக்கார்டரில் அதிகப் பட்ச சத்தம் வச்சி மைக்கேல் ஜாக்ஸனை சின்னக்குளத்துக்கு நான் அறிமுகம் செய்து வைத்தேன்...அந்த ஏரியாவையே இப்படி அலற விடக்கூடிய ஒரே திறமை வாயந்த டேப் ரிக்கார்டர் எங்க் மாமாவோடது தான்...

சும்மா ஜாக்ஸன் அதிர... மதியம் தூங்கி வழிந்த சின்னக்குளம் சிலுத்துக்கிட்டு எழுந்துருச்சு......

இஸ்ரா பய நிலைமை நிதானம் தவறுவதைக் கண்டுகிட்டு நைசா நாய்ஸை யூஸ் பண்ணிகிட்டு எனக்குத் தெரியாம பக்கத்து வீட்டு மாடிக்குத் தாவி எஸ்கேப் ஆயிட்டான்..

இது எதையும் கொஞ்சம் கூட கவனிக்காமல் கண்ணாடி குலுங்க... தலையை பரபரக்க விட்டு நான் ஜாக்சன் இசைக்கு ஜாக்குவார் தங்கம் ரேஞ்சுக்கு ஸ்டண்ட் பண்ணிகிட்டு இருந்தது பெரும் கொடுமை.

"எலேய் என்ன ஆச்சு இவனுக்கு.. என்னது இது சீக்கு வந்த கோழி சிலுப்பிகிட்டு துள்ளுர மாத்திரி நடு வெயில்ல நட்டமா நின்னு ஆடிக்கிட்டு நிக்கா?" பாட்டிச் சொன்னது கேட்கவில்லை.

நங்கென்று நடு மண்டையில் முறத்தால் அடி ஒன்று விழுந்ததும் மைக்கேல் பாடுவதும் கேட்கவில்லை.. மை மதர் அடுக்கு மொழியில் என்னை ஏசியதும் கேட்கவில்லை..
எதோ ஒரு வீரத் தமிழச்சிகிட்ட ஒரு புலி முறத்தாலே அடி வாங்கியிருக்குன்னு கதைச் சொல்லக் கேட்டிருக்கேன். அந்த அடி பட்ட அந்தப் புலிக்கு எப்படி இருந்து இருக்கும்ன்னு அந்த வினாடியிலே இந்தப் புலிக்கு புரிந்தது...எங்க அம்மா ஒரு வீரத் தமிழ்ச்சியாயிட்டாங்க...சுத்தி சுழன்டு அப்போத் தான் பாத்தேன்..

ஊரே வீட்டு முன்னாலே கூடியிருச்சு..ஊர் கூடி என்னப் பயன் ... யாருக்காக இந்தக் கச்சேரியை ஏற்பாடு பண்ணியிருந்தேனோ அவளைக் கூட்டத்தின் ஒரு ஓரமாய் கூடக் காணல்ல.. இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல்ல... பாட்டி, அம்மா, அத்தைன்னு எல்லாரும் பொங்கி மாடிக்கு பாய்ஞ்சு வந்துருக்காங்க..

அக்கம் பக்கம் எல்லாம் சுற்றி நின்று என்னை வேடிக்கைப் பாத்துக்கிட்டு நின்னாங்க..நடு மண்டையைத் தடவிய படி நான் நின்னுகிட்டு இருந்தேன்.

"ஏய்யா இவனைக் கொண்டு ஜெபத்திலே வைங்க... நடு மத்தியானம் இப்படி மொட்டை வெயில்ல் கிறுக்காட்டம் போட்டுகிட்டு இருக்கான்... புத்திப் பேதலிச்சுப் போச்சோ என்னமோத் தெரியல்லயே.. ஏய்யா.. இவிய அய்யா வேற வெளியே போயிருக்காவளே... என்னப் பண்ணுறது?"
எங்கப் பாட்டி ஏகத்தும் எமோஷ்னல் ஆக... ஊர் கிழவிகளும் ஒண்ணு கூடி என் பாட்டிக்கு ஆளுக்கொரு ஆறுதல் என இரக்கமில்லாமல் என் மீது அருவாளை வீசுனாங்க...

"பய ராத்திரி எல்லாம் வெளியேத் திரிஞ்சாம் இல்ல... சாம்த்துல்ல சாத்தான் செஞ்ச வேலையாயிருக்கும்.. சரியாகிரும்"

இஸ்ரா அப்போத் தான் மாடிக்கு வருவது போல் படியேறி மெதுவாய் கூட்டம் விலக்கி என் பக்கம் வந்தான்...

"என்ன ஆச்சு...என்ன சத்தம்?" எதுவுமறியாதவன் போல மெதுவாக பாட்டு கேசட்டைக் கையில் எடுத்தான்.

"அடப்பாவி கொய்யால்ல..." ஒரளவுக்கு தெளிந்த நான் இஸ்ராவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

"ஆ..இது அந்த வெள்ளைக்கார பிரசங்கியார் கேசட்ல்லா.. போன வாரம் தின்னவேலில்ல பாத்தேனே... " நான் எழுதி பேசத் தவறுன்ன டயலாக் எல்லாம் இஸ்ரா சரமாரியாப் பேச ஆரம்பிச்சான். நான் கண் கலங்கி நின்றேன்.

"இவ்வளவு நேரம் இவன் கேட்டு ஆடிகிட்டு இருந்தது கடவுள் பாட்டா" எங்க பாட்டி கேட்டாங்க.

"பாட்டி நம்ம வீட்டுல்ல சினிமாப் பாட்டெல்லாம் என்னிக்கு ஓடியிருக்கு.. எப்போக் கேட்டிருக்கோம்..." இஸ்ரா நீ செல்லம்லேய்... என்ன காப்பாத்த வந்த மாமனிதன்லேய் நீ.. என் மனம் இஸ்ராவை வாழ்த்தியது.

"ஆமா இதை அவனேச் சொல்லியிருக்கலாமே"

"அவன் சொல்லியிருக்கலாம் பயலுக்கு பக்தி முத்திருச்சு..எதுவும் பேசியிருக்கமாட்டானே.. இந்தா ஆடு திருடிட்டு அகப்பட்டவன் மாதிரி முழிக்கான் பாருங்க" இஸ்ரா அவனுடைய மொத்தத் திறமையையும் காட்டிக்கொண்டிருந்தான்.

"நாங்க என்னவோ எதோன்னு பயந்துட்டோம்ய்யா... ஏய்யா இஸ்ரா சத்தத்தைக் குறைச்சு வச்சு கொஞ்சம் வெயில் இறங்கனப் பொறவு ஆடச் சொல்லு.. பயத் தனியா ஆட வேண்டாம்.. துணைக்கு நீயும் ஆடு... மத்தியானம் தூக்கம் கெடுதுல்லா.." பாட்டி பாசமாய் சொல்லிவிட்டு படி இறங்கினாங்க..

பாட்டிக்குப் பின்னாலே மொத்தக் கூட்டமும் இற்ங்கிப்போச்சு.. அம்மாவுக்கு மட்டும் சுத்தமாய் என் மீது நம்பிக்கை இல்லை..இறங்கும் போதுக் கூட மொறைப்பு குறையவே இல்லை.

அந்த நிமிடத்தில் ரேச்சலின் மொறைப்பும் எனக்கு ஞாபகம் வந்துப் போனதைத் தவிர்க்க முடியவில்லை.

கூட்டம் இறங்கிப் போனதும் இஸ்ராவை அப்படியேக் கட்டிப்பிடிச்சுக்கிட்டேன்...

"எலேய்.. என்ன இது என்னவெல்லாமோ பேசுன.. பிடிப்பட்ட ஓடனே கரண்ட் கம்பியிலே சிக்குன பட்டம் மாதிரி கவுந்து நின்னுட்ட... லேய்.. இதெல்லாம் சரி வராது.. பாம்பேகாரிக்கு இருக்க மெதப்பு இருந்துட்டுப் போவுதுன்னு உன் வழியைப் பாத்துட்டுப் போயிட்டே இரு.. அவக் கிட்ட மல்லுக்கு நிக்குறதை இத்தோட நிறுத்திக்க... அது தான் உனக்கு நல்லது... எனக்கு நல்லது.. இந்தா மொத்த சின்னக்குளத்துக்கும் நல்லது.. மைக்கேல் ஜாக்சனை எல்லாம் இந்த ஊர் தாங்காதுலேய்..".

நான் எந்தவிதப் பதிலும் சொல்லவில்லை.

"லேய்.. இன்னும் இரண்டு நாள் தான் அவ மும்பைக்குக் கிளம்பிருவா... அதுக்கு மேல ஒரு மூணு நாள் நீயும் மெட்ராச்க்கு வண்டி ஏறிருவ... இரண்டு நாள் எல்லாத்தையும் அடக்கிட்டு இரு..."

இஸ்ரா என் முகத்தை இழுத்துத் தன் பக்கம் திருப்பி வைத்துச் சொன்னான்.

அந்த இரண்டு நாட்கள் என்ன நடந்தது தொடரும்

Wednesday, July 11, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 3

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 2

வீட்டில் பாட்டி சுட்ட அதிரசமும் கைமுறுக்கும் கொறித்துக் கொண்டே மொட்டை மாடியில் இஸ்ராவும் நானும் உட்கார்ந்திருந்தோம். இஸ்ரா திருட்டு 'தம்' பற்ற வைத்தான். நானும் அவனும் மாறி மாறி ஆளுக்கு ஒரு இழுப்பு இழுத்தோம். கருப்பட்டி காப்பி ஆளுக்கு ஒரு தம்ளர் பக்கத்தில் எடுத்து வைத்திருந்தொம். அதையும் ருசி பார்த்து உறிஞ்சினோம்.

"பாம்பேகாரிக்கு நக்கல் அதிகமாப் போயிருச்சு.. தின்னவேலிகாரனுக்கு அருவாத் தூக்கத் தான் தெரியும்ன்னு எகடியம் பேசுதா.. அவளையேத் தூக்குறோம்லே.. அப்போத் தான் அவ கொழுப்பு அடங்கும்"
திருட்டு தம்மின் போதை ஏற சும்மா விரலைச் சொடக்கிட்டேச் சொன்னேன்

"எலே வெளக்கெண்ணெய்.. அவ போலீஸ்காரன் மோவா.. அவ அப்பன் காதுக்கு.. ம்ஹும் மூக்குக்கு நீ இப்போ முக்கி அலறுன விசயம் போச்சுன்னு வை... சரடு சரடா உன்னியப் பிரிச்சுத் தொங்கப் போட்டுருவான்...பொத்திகிட்டு இருக்கீயா"

இஸ்ரா அடக்குனாலும் எனக்கு கோவம் கொஞ்சமும் குறையவில்லை. கோவம் ஒரு பக்கம் இருந்தாலும் இஸ்ரா சொன்ன எதையும் ஒதுக்கியும் தள்ள முடியாது...அதுல்ல ஆபத்து என் அறுவுக்கும் எட்டாமல் இல்லை. இந்த யோசனையிலே அன்னிக்கு இரவு கழிந்துப் போயிடுச்சு.

விடிஞ்சும் விடியாம மறுநாள் காலையிலே மொத்த ஜமாவும் குளத்துக்குக் குளிக்கக் கிளம்பிட்டோம்

"ஏலேய்.. முங்கு நீச்சல் போடுவோமா.."

தீர்மானமாய் எல்லாப் பயல்வளும் தண்ணியில் இறங்கிட்டாங்க..நம்ம மெட்ராஸ் வாழ்க்கையிலே ஒரு பாக்கெட்டும் அரை பக்கெட்டுமாக் குளிச்சுப் பழகுன பழக்கத்திலே நீச்சலுக்கு ஏது வழி...அதுன்னால கரையோரமா உக்காந்து துணியை எல்லாம் காவல் காத்துகிட்டு இருந்தேன்..கையோடு கொண்டுப் போயிருந்த பக்கெட்ல்ல குளத்துத் தண்ணியை கோரி ஊத்தி மக் வைச்சு எடுத்து தெளிச்சு குளிக்கவும் முன்னேற்பாடு எல்லாம் பண்ணி வச்சுருந்தேன்.. நேரப் போக்குக்கு அவிச்ச பனங்கிழங்கு ரெண்டை மென்னு தின்னுகிட்டு இருந்தேன்.

ஆம்பளை ஆட்கள் குளிக்குற இடத்துக்கும் பொம்பளை ஆட்கள் குளிக்கும் இடத்துக்கும் பாதை ஒண்ணு தான் ஆனா இடைவெளி உண்டு...

ரேச்சலும் அவள் வீட்டு சிறுசுப் பட்டாளமும் குளிக்க குளத்துக்கு வந்துக் கொண்டிருந்தார்கள்.. அவள் என்னைப் பாக்கறதுக்கு முன்னாடியே நான் அவளைப் பாத்துட்டேன்...

பக்கெட்டும் மக்குமா என்னைப் பார்த்தா நம்ம கதைக் கிழிஞ்சிப் போயிரும்ன்னு அவசர அவசரமா பக்கெட் தண்ணியைச் சரிச்சுக் கொட்டுனேன். பக்கெட்டைத் துணிக்கு அடியிலேப் போட்டு மூடிட்டு துணியாவது மணியாவது என இடத்தைக் காலி செய்து கிளம்ப நினைக்கையில் இஸ்ராவின் குரல் எங்கிருந்தோ இடியாய் இறங்கி குறுக்கே குத்தவைத்து என் கால்களை ஓட முடியாமல் இடறிவிட்டது.

"எலேய் மெட்ராஸ்காரா.. அந்த துண்டை எடுத்துப் போடுடா.. இங்கன் மீன் நிறைய கிடக்கு இன்னிக்கு மீன் சோறு தான்..."

அவன் குரல் கேட்டு ரேச்சல் என் பக்கம் திரும்பினாள்.

"என்ன,,, குளிக்காம கரையோரமா உக்காந்து கவிதையா எழுதுற" ஒரு வித நமுட்டு சிரிப்போடு கேட்டாள். அவ சிரிப்பு என்னை உசுப்பேத்தும் பாருங்க... ஒரு மாதிரி ஆயிடும்,

"எனக்கு ஓடம்புக்கு சோமில்ல.. இருமல்..அதான் குளிக்கல்ல..." ஒரு வாறாக சமாளித்தேன். மூணு முறை தொண்டையைச் செருமி இருமி வேற காட்டுனேன்.

"நான் கூட நீச்சல் தெரியாமத் தான் இப்படி துணியைக் காவ்ல காத்துகிட்டு இருக்கீயோன்னு நினைச்சுட்டேன்" என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தாள்.

"மெட்ராஸ்ல்ல நம்ம குரூப்ல்ல நான் தான் பெரிய நீச்சக்காரன் தெரியும்ல்ல.. என்னியப் போய் எகத்தாளமா நினைக்கப்பிடாது.. போ போய் குளம் கலங்கறதுக்குள்ள குளிச்சு குருத்தா எழுந்து போ"

"மெட்ராஸ்ல்ல எங்கே நீந்துவ... கூவம் ஆத்துல்லய்யா" மறுபடியும் சிரிப்பு... இந்த முறை ஏகத்துக்கும் எகத்தாளம் ஓங்கி ஒலித்தது.

கரையில் நான் கதி கலங்கி நிற்பது தெரியாமல்...இஸ்ரா என்னமாய் வில்லத்தனம் பண்ணான் தெரியுமா.. அது எனக்கு சத்தியச் சோதனை..

"ஏலேய் வெளக்கெண்ணெய்.. தண்ணீயக் கண்டா ஜன்னியக் கண்டவன் மாதிரி ஓடுறான்னு தான் ஓரமா உக்காரச் சொல்லியிருக்கு... துண்டை எடுத்துப் போடச் சொன்னா அதுக்குமால்ல உனக்கு இடுப்பு வலிக்கு.. என்ன இழவு மெட்ராஸ்காரனோ.." இஸ்ரா சத்தமாய் என் பிரதாபங்களை ஊருக்கு ஒலிபரப்பு செய்த படிதண்ணியை விட்டு வெளியே வந்துக் கொண்டிருந்தான்..அவன் வந்த திசையில் இருந்த ஓட மரங்களின் மறைவு ரேச்சலின் இருப்பை அவனுக்கு அறிவிக்க வில்லை.. அவன் இன்னும் அதிகமாய் என் நீச்சல் சாதனைகளை புகழ்ந்தப் படியே வந்துக் கொண்டிருந்தான்..என்னாலும் அவனை எந்த விதத்திலும் தடுக்க முடிய்வில்லை.

"அட உனக்கு நீச்சல் தெரியாதா" இது அவள் கேட்டிருந்தாக் கூடப் பரவாயில்ல.. அவள் தம்பி குண்டோதரன் கேட்டது தான் எனக்கு ஓடனே தண்ணியிலே குதிச்சு தற்கொலை பண்ணிக்கணும்ன்னு யோசிக்க வச்சுருச்சு.

"தின்னவேலிகாரனவது அருவா தூக்க லாயக்கு.. நீ ம்ஹூம்..."
அப்படின்னு என்னை ஏற இறங்க பார்த்து இடுப்பில் கை வைத்து பி.எஸ் .வீரப்பா பாணியில் சிரித்தாள்.

"சரி சரி.. ப்சங்களா.. உங்க எல்லார் துணியையும் இந்த அண்ணன் கிட்டக் கொடுங்க இவர் பத்திரமாக் காவல் காத்துப்பார்... என்ன. வாங்கப் போலாம்... அப்படின்னு துணியை எல்லாம் வாங்கி என் அனுமதியைக் கூட எதிர்பாராமல் என் கையில் திணித்து விட்டு குளம் பார்த்து தன் கும்பலை நடத்திப் போனாள்.

இது நடக்கவும் இஸ்ராவும் என்னை வந்து அடையவும் சரியாய் இருந்தது.அவள் சிரிப்பு என் காதுக்குள் இன்னும் ஒலித்துக் கொண்டே இருந்தது.. அந்தச் சிரிப்போடு இஸ்ராவின் கேலியும் சேர்ந்துக் கொண்டது.

"எலேய் அதிர் வேட்டு போடப் போறேன்னு அலறுன.. இங்கே பாம்பேக்காரி துணி எல்லாம் காயப்போடறதுக்கு வ்சதியா கொடிக்கணக்கா ஆடாம் அசையாம பிடிச்சுக்கிட்டு நின்னுட்டு இருக்கீயே.."

எனக்கும் ரேச்சலுக்கும் இப்படி அரசல் புரசலாப் போயிட்டருந்த மோதல் இஸ்ராவுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கா அமைஞ்சுப் போனது என் துரதிர்ஷ்ட்டம்ன்னு தான் சொல்லணும்.

அதே வாரத்தில் ஒரு நாள் மொட்டை மாடியிலே பத்து மணி வரைக்கும் தூங்கிட்ட இருந்த என்னை அரக்க பரக்க வந்து எழுப்பினான் இஸ்ரா.

"எலேய் பாம்பேக்காரி நம்ம வீட்டுக்கு வந்துருக்கா... நேத்து என்னவாச்சும் வம்பு பண்ணீயா?"

அவன் சட்டெனக் கேட்டதும் பாதி தூக்கக் கலக்கமும் என்னை புரட்டிப்போட்டது. மடிச்சுக் கட்டிய லுங்கியை (லுங்கி கட்ட ஆரம்பிச்சு ஒரு மூணு மாசம் தான் ஆகியிருந்தது.) இன்னும் ஏத்தி கட்டிக்கிட்டு மாடிப் படியிலே இறங்கி ஓடுனேன், இஸ்ரா எனக்கு முன்னாடியே கீழே போயிட்டான். மாடிப் படி வீட்டுக்கு வெளியேத் தான் இருந்துச்சு.. அங்கே இருந்து அவளை வச்சக் கண்ணு வாங்காமப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

வீட்டுல்ல இருந்த எல்லாருக்கும் கேக் கொடுத்துட்டு ஆசி வாங்கிட்டு இருந்தா.

என்னாத் தான் திமிர் பிடிச்சவளா இருந்தாலும் மெட்ராஸ்ல்ல கூட நான் இப்படி ஒரு அழகைப் பார்த்தது இல்லை.. ம்ம்ம் பெருமூச்சு விட்டுகிட்டேன்.. அந்த கண்ணு சும்மா என்னமா விளையாடுது... உதட்டை மடிச்சு.. குவிச்சு...அய்யோ அதை அப்படியே பாத்துகிட்டே இருக்கலாம் போலிருக்கே.. கழுத்துல்ல சின்னதா ஒரு தங்க செயின்.. அதுல்ல ஒரு சின்ன சிலுவை... அம்மா செய்யுற மைசூர் பாக் கலர்ல்ல கழுத்து.. அதுக்கு.. இப்படி என் பார்வை பயணம் போய்கிட்டு இருக்கும் போது இஸ்ரா வந்து பிரேக் போட்டான்.

"லேய் இன்னிக்கு ரேச்சலுக்கு பிறந்தநாளாம்... கேக் கொண்டு வந்துருக்கா.. எடுத்துக்கலே..."

"HAPPY BIRTHDAY...அப்படியே பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பார்த்த மாதிரி அவளையே பாத்துகிட்டு நின்னேன்.. அப்புறம் லேசா கிறக்கம் குறைஞ்சு..

"உன் ட்ரெஸ் ரொம்ப சூப்பரா இருக்கு.. பாம்பேல்ல எடுத்ததா?"
கேட்கணும்ன்னு கேட்டாலும்.. அந்த ட்ரெஸ் அவளுக்கு அவ்வளவு பாந்தமாப் பொருந்திப் போயிருச்சு.. சந்தன கலர் பிறகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான நிறமா மாறிப் போனதற்கு அன்னிக்கு ரேச்சலை அந்த ட்ரேஸில் பார்த்ததும் ஒரு காரணமா இருக்குமோன்னு அடிக்கடி நினைச்சுக்குவேன்.

"ம்.. சரி ப்ர்த் டேன்னா எங்க பாம்பேல்ல பிரண்ட்ஸ் எல்லாம் கிப்ட் கொடுப்பாங்க.. உங்க மெட்ராஸ்ல்ல கொடுப்பீங்களா.. இல்லை கேக் மட்டும் வாங்கி சாப்பிட்டுட்டு வாயைத் துடைக்காமப் போயிடுவீங்களா?"

வலது கையை வச்சு வாயைத் துடைச்சுகிட்டேன். அவ அதுக்கும் சிரிச்சா..

"கிப்ட் எல்லாம் கொடுப்போம்.. பொம்பிளை பிள்ளைக்குக் கொடுக்குற மாதிரி கிப்ட் கொடுக்கலாம்ன்னா.. நீ என்னப் பொம்பிள்ளை பிள்ளை மாதிரியா நடந்துக்குற?"

"பொம்பிள்ளை பிள்ளைன்னா எப்படி நடந்துக்கணும்?" இடுப்பில் கை வைத்து தலையை சரித்து உதட்டுல்ல கோபம் தேக்கி கேட்டாள். நான் கிறங்கிப் போயிட்டேன்.

"அது.. எப்படின்னு விளக்கம் எல்லாம் எனக்குச் சொல்லத் தெரியாது... ஆனா எங்க ஊர் பொம்பிளைப் பிள்ள மாதிரி நீ இல்ல.. அது மட்டும் என்னாலே அடிச்சு சொல்ல முடியும்.."

"ம்"

"சரி.. உனக்கு என்ன கிப்ட் வேணும் கேளு.. முடிஞ்சா வாங்கித் தாரேன்.. நீ கொடுத்தக் கேக்கைத் தின்னுட்டு சும்மாப் போயிட்டேன்ங்கற பேர் எல்லாம் என் பரம்பரைக்கு வேணாம்"

"ம்..ப்ச்.. வேணாம்.... உன் கிப்டை உனக்குப் பிடிச்ச மாதிரி உங்க ஊர் பொம்பிளை பிள்ளைக்கு ப்ர்த் டே வந்தாப் போய் வாங்கிக் கொடு.. நானும் எனக்குப் பிடிச்ச மாதிரி ஆம்பிளை பையன் கிட்ட வாங்கிக்குறேன்.." என்று சொல்லிவிட்டு விருட்டெனப் போனவள் முன்னால் ஓடிப் போய் மறித்து நின்றேன்.

"என்ன நக்கலா.. வேணாம்... அது என்ன? உனக்கு பிடிச்ச மாதிரி ஆம்பிளை பையன்... பாம்பேகாரனா இருக்கணுமோ.. மழு மழுன்னு வெள்ளையா சேட் வீட்டு பையனா... இந்தி எல்லாம் பேசணுமோ...சொல்லு"

"ம்ம்ம்.. அதெல்லாம் எனக்கு விளக்கமாச் சொல்லத் தெரியாது... விடு... இது என்ன சென்னைப் பேஷ்னா?"

அப்போது தான் நானும் கவ்னித்தேன்.. அவளைப் பார்க்கும் ஆவலில் அரக்க்ப் பரக்க வந்த வேகத்தில் லுங்கிக்குப் பதில் போர்வையை மடித்து அதை ஏற்றி வேறு கட்டி வந்திருக்கிறேன் என்று..

விடுமுறை அனுபவங்கள் தொடரும்

Monday, July 09, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 2

சின்னக்குளமும் விடுமுறைகளும் - 1

வீட்டுக்குள் நுழையும் முன் சந்து முனையில் நான் தடுக்கப்பட்டேன்.

"ஆஆஅம்மா.." பளீர்ன்னு கன்னத்தில் விழுந்த அறையில் கண் இருட்டி விட்டது எனக்கு. அதைத் தொடர்ந்து ஆள் ஆளுக்குப் போட்டு அமுக்கி மிதித்துவிட்டார்கள். சட்டைக் கிழிந்து... புழுதி எல்லாம் முகத்தில் அப்பிக் கிடக்க..படு பயங்கரமான அவமானத்தோடு நான் எழும்பிய நேரம் இஸ்ரா வேகமாய் என் உதவிக்கு வந்தான்.

"போடா " என அவனை உதறிவிட்டு கண்களில் நீர் வழிய நடக்க ஆரம்பித்தேன்.. நடக்க நடக்க அவமான உணர்ச்சி அதிகமாக திடீர் என திரும்பினேன்... என்னைக் கன்னத்தில் அறைஞ்சானே அந்த நெட்டக் கொக்கன் மட்டும் தான் என் கண்ணில் தெரிந்தான். ஒரு பேய்தனமான வெறி என்னில் ஏற அவனைப் பார்த்து வேகமாய் ஓடினேன். பாய்ந்து அவன் கையை ஒரு கடி கடித்தேன்... அவன் கையில் இருந்து ரத்தம் பீய்ச்சி அடித்தது. மத்தப் பசங்க எல்லாம் என் ஆவேசத்தைப் பார்த்து கொஞ்சம் இல்லை ரொம்பவே மிரண்டு ஒதுங்கிட்டாங்க.... இஸ்ராவே கூட கொஞ்சம் நடுங்கித் தான் போயிட்டான்.

"வாங்கடா... வாங்க இப்போ வந்து அடிங்க..." நான் கையில் மண்ணைக் குவித்து வீசிய படி வட்டம் போட்டேன். கடிப்பட்டவன் அலறல் கேட்டு பெரியவர்கள் கூட்டம் விரைந்து வர.. இஸ்ரா என்னைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான். எனக்கு வெறி மட்டும் அடங்கவில்லை. யார் கண்ணிலும் படாமல் மாடி அறைக்கு என்னைக் கூட்டிப் போய் படுக்க வைத்தான் இஸ்ரா. காயங்களைக் கழுவி ஒத்தடம் கொடுத்தான். வீட்டில் எப்படியோ விவரம் தெரியவராமல் சமாளித்து முடித்தோம்.

'உனக்கு ஏன்லே இவ்வளவு வெறி?"

"அவனைப் பயங்கரமாக் கடிச்சுட்டேனா?... "

"வெறி நாய் தோத்ததுப் போ"

"ஊசி போடணுமா என்ன?"

"ம்ஹ்ம்.. தெரியல்ல.. பாவம்லே அவன்.."

"நான் மட்டும்.. இங்கே பார்.. அஞ்சு விரலும் பதிஞ்சு இருக்கு.." என் கன்னத்தைக் காட்டினேன்.

ஒருவழியாக சண்டை முடிந்து இஸ்ராவின் உபயத்தில் சமாதானம் பேசப்பட்டது.. பழையபடி கூட்டாஞ்ச்சோறு.. குளத்து மேட்டில் கிரிக்கெட் என வாழ்க்கை சகஜ நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருந்தது.

ஒரு மதிய பொழுதில் மாமாவின் சைக்கிளை இரவல் வாங்கிக் கொண்டு நாசரேத் ரூபி தியேட்டருக்குப் படம் பார்க்கக் கிளம்பினே. இஸ்ரா நேராகத் தியேட்டருக்கு வருவதாக வாக்குக் கொடுத்துவிட்டு காலையில் தூத்துக்குடி டவுண் வரைக்கும் எதோ வேலையாகப் போயிருந்தான். சைக்கிள் டயரில் காத்தை முழுசா நிரப்பிக்கொண்டு.. சும்மா வாருன தலையைக் கலைச்சு விட்டுட்டு பர்மா பஜார்ல்ல வாங்குன கூலிங் கிளாஸைக் கண்ணுல்ல மாட்டிக்கிட்டு... நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா.. பக்கத்துல்ல பட்டுல்ல ரோஜா பாட்டை வாய் விட்டு சத்தமாப் பாடிக்கிட்டுச் சைக்கிளை அழுத்தி மிதித்தேன்.

சின்னக்குளம் பஸ் நிறுத்தம்.. (அந்த ஊருக்கு மொத்தம் வந்து போறதே நாலு பஸ் அதுக்கு ஒரு பஸ் நிறுத்தம் வேற..) அருகே வரும் போது பாட்டு சத்தம் என்னையுமறியாமல் உச்சஸ்துதியை அடைந்திருந்தது... என்னைக்குமே எனக்கு நீ தான் பொண்டாட்டி.. என்னைக்குமே எனக்கு நீ தான் பொண்டாட்டி.. அதே வரியைப் பாடிகிட்டே போனவன் சுளுக்குன்னு சிரிப்பு சத்தம் கேட்டு சைக்கிளை நிறூத்துனேன்... பஸ் ஸ்டாண்ட்ல்ல ரேச்சல் நின்னுகிட்டு இருக்கா..

"என்ன இந்தப் பக்கம்?"

"2 மணி ரத்னா பஸ்க்கு வெயிட் பண்ணுறேன்"

"தூத்துக்குடிக்கா?"

"இல்ல நாசரேதுக்கு.. அங்கே எதோ தியேட்டர்ல்ல போக்கிரி ராஜா படம் போட்டுருக்காங்களாம்.. ரஜினி படம் அதான் பார்க்கக் கிளம்பியாச்சு"

"ஓகோ நீங்களூம் ரஜினி பேனா... நான் தீவிர பேன்.. " அதோட நிறுத்தியிருக்கலாம். தலையைக் கலைச்சுட்டு அப்புறம் கண்ணாடியைச் சுழட்டிச் சுத்திப் போட்டு... அப்படி இப்படின்னு ரஜினி மாதிரி நடந்து நாட்டியம் எல்லாம் ஆடி முடிக்கவும் தான் ரேச்சல் பேசுனா.

"ச்சீ ச்சீ எனக்கு ரஜினி எல்லாம் பிடிக்காது.. நான் கமல் பேன்.. அவர் என்ன அழகு.. சும்மா ரோஜாப்பூ மாதிரி கலர்..ச்சோ சுவீட்" ரேச்சல் சொர்க்கலோகம் போவது போல் கண்களை மூடி கைகளைக் கன்னத்தில் வைத்தாள்.

ரேச்சலின் அந்த கோலத்தைப் பார்த்து எனக்கு ச்சோ சுவீட் சொல்லணும் போல இருந்துச்சு...ஆனாலும் அதை எல்லாம் அடக்கி வச்சுக்கிட்டு "ஆமா ரஜினி பிடிக்கல்லன்னா பொறவு எதுக்கு ரஜினி படம்"

"இவனுக்கு ரஜினி மட்டும் தான் பிடிக்கும் அதான்.." பக்கத்து புதரில் இருந்து பேண்ட் ஜிப்பைப் போட சிரமப்பட்டுக்கொண்டே பொடியன் வெளியே வந்தான். இவள் அவனுக்கு ஜிப்பைப் போட்டு விட்டாள்.

"என் தம்பி.. தேர்ட் கிளாஸ் படிக்கிறான்.. பெரிய ரஜினி பேன்.." என்று அறிமுகம் செய்தாள்.

"ரஜினி பண்ற ஸ்டைல் பிடிக்குதோ இல்லையோ.. கொஞ்சம் முன்னாடி ரஜினி மாதிரி நீ பண்ண ஸ்டைல் எல்லாம் செம காமெடியா இருந்துச்சு.. இன்னும் சிரிப்பு வருது" சொல்லிவிட்டு சிரித்தாள்.

காமெடியா.. நான் பண்ணது காமெடியா.. மும்பை முழு குசும்பா.. சென்னைக் கெத்தைக் காட்டுறேன் பார் அப்படின்னு உள்ளுக்குள்ளேச் சொல்லிகிட்டேன்.

"2 மணி ரத்னா தூத்துக்குடி தான் போகும்.. நாசரேத் போகணும்ன்னா நடந்து தான் போகணும்"

"நீ எங்கேப் போற.?"

"நான் நாசரேத்க்குத் தான் போறேன்..."

"அப்படின்னா என் தம்பியைப் படத்துக்குக் கூட்டிட்டுப் போறியா?"

"ஏன் நீ வர்றல்லயா? ரஜினி படம் நல்லாத் தான் இருக்கும்"

"அதுக்கு இல்ல.. இருக்கது ஒரு சைக்கிள்..அதுல்ல டபுள்ஸ் போலாம்... நான் எப்படி வர்றது..அதுவும் உன்னாலே ரெண்டு பேரை வச்சு ஓட்ட முடியுமா?"

அவ்வளவு அவள் அப்படிக் கேட்டதும் எனக்கு வீரம் தீரம் எல்லாம் பொங்கிப் புனல் எடுத்துருச்சு.

"ஹலோ நான் எல்லாம் ஏத்தத்துல்ல ஏழு குடம் தண்ணியை வச்சு மிதிச்சவன்... சென்னையிலே தண்ணிப் பஞ்சத்திலே எங்க வீட்டுக்கு முழு தண்ணி சப்ளை நான் தான் தெரியும்ல்ல.. நீயும் உன் தம்பியும் எனக்கு ஜூஜூஜூபி..." என்று சொல்லிவிட்டு கண்ணாடியைச் சுத்திப் போட்டேன்.

அவள் தம்பி குண்டோதரன் குடுகுடுன்னு ஓடி வந்து முன்னாடி பாரில் ஏறி உட்கார்ந்துக்கிட்டான். நானும் ஏறி உட்காந்ததும் ரேச்சல் ரொம்பவே ஒயிலா ஏறி பின்னால் உட்கார்ந்தாள். ஒன்பது கிலோ மீட்டர் சைக்கிள் மிதிக்கணும்ன்னு நினைக்கும் போதே முன் பாரம் மூச்சை நிறுத்தியது. இருந்தாலும் வீரம் தீரம் எலலத்தையும் கூட்டி கையிலேயும் கால்லயும் வ்ச்சுகிட்டு வழித்துணைக்கு முப்பாட்டன் அவர் தாத்தன்னு எல்லாரையும் மனசுக்குள்ளே கூப்பிட்டுகிட்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பிச்சேன்.. இஸ்ரா எனக்கு எப்போவோ ஒரு முறை காட்டிக்கொடுத்த காட்டுப் பாதையிலே சைக்கிளை விட்டேன்..

மிதிக்கும் சோர்வு தெரியாமல் இருக்க அவளிடம் பேச்சுக் கொடுத்ததில் அவள் பயங்கர படிப்பாளி என்று தெரிய வந்தது.. பாடச்சம்பந்தமாய் பேசுவதைத் தவிர்த்தா அவளுக்கும் நல்லது எனக்கும் நல்லதுன்னு முடிவு பண்ணிகிட்டு விளையாட்டு பக்கம் பேச்சைத் திருப்புனா..அவங்க அப்பா போலீஸ்காரர் அதுல்லயும் அவளை நல்லாவே கோச் பண்ணி வ்ச்சிருக்கார்.. இப்படியே ஏழு கிலோ மீட்டர் தூரம் பேச்சிலே வண்டியை மிதிச்சுட்டுப் போயிட்டேன். அவளைப் பத்தியும் கூடவே தேவை இல்லாமல் அவள் தம்பியைப் பற்றியும் நிறைய விசயங்களை அறிந்துக்கொள்ள முடிந்தது.

காட்டுப் பாதை முடியும் இடம் வந்தது.. தியேட்டர் இன்னும் கொஞ்சம் தூரம் தான்..எதாவது பேசணுமே..

"ஆமா இப்படி ஒரு பையனை நம்பி சைக்கிள்ல்ல காடு வழியா வர்றீய உனக்கும் பயமா இல்லையா?"

"எங்க அக்கா பிளாக் பெல்ட் தெரியும்ல்ல... ஒரே நேரத்துல்ல ஓம்பது பேரை அடிப்பா..அக்காக் கூட பைட் பண்ணுறீயா?" பொடியன் குண்டைத் தூக்கிப் போட்டான்.

"அப்படியா.. எனக்குக் கூட சிலம்பம் எல்லாம் தெரியும்.. அதுல்ல நானும் பிளாக் பெல்ட்..நமக்குள்ளே சண்டை எல்லாம் வேணாம் சமாதானமாப் போயிருவோம்.. தியேட்டர் வந்துருச்சு " என நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு நிற்கும் போது ரேச்சல் என்னருகில் வந்தாள். எனக்கும் மட்டுமே கேட்கும் குரலில் மெதுவாகப் பேசினாள்.

"இதே மாதிரி பாம்பேல்ல ஒரு பொண்ணும் பையனும் தனியாக் காட்டு வழியா வந்து இருந்தா ஒரு முத்தம் கொடுக்கவாது பையன் ட்ரை பண்ணியிருப்பான்... தின்னவேலிப் பசங்க எல்லாம் வெறும் அருவாளைத் தூக்கிட்டு குரலை உயர்த்தத் தாண்டா லாய்க்குகிறது சரியாத் தான் இருக்கு போ"

அவள் சொல்லிவிட்டு ஒய்யாரமா நடந்து தியேட்டருக்குள் போனாள். எனக்கு லேசாப் பொசிஞ்ச சாரல் மழையையும் மீறி வேர்த்துக் கொட்டுச்சு... அவள் போவதையேப் பார்த்தவன் சைக்கிளுக்கு ஸ்டாண்ட் சரியாப் போடாம அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொத்த சைக்கிளையும் விழவச்சேன்..

ஸடாண்ட்கார அண்ணாச்சி திட்டுவதுக் கூடக் காதில் விழமால் பேயடிச்சவன் மாதிரி எதோ திசையில் நடந்தவனை இஸ்ரா வந்து ஒரு உலுக்கு உலுக்கி எழுப்பி விட்டான்..

விடுமுறை அனுபவங்கள் இன்னும் தொடரும்..

சின்னக்குளமும் சில விடுமுறைகளூம் - 1

விடுமுறைகள்ன்னாவே சந்தோசம்... அதுவும் பள்ளிக்காலங்களும் அதோடு சேர்ந்த விடுமுறைகளூம் கேட்கவே வேணாம்.. கும்மாளம் தான் போங்க.. அப்படி என் வாழ்க்கையிலே வந்துப் போன விடுமுறைகளைப் பத்தித் தான் இப்போ என் மனசு யோசிச்சுகிட்டு இருக்கு....

ஆபிஸ்ல்ல வெள்ளைக்கார முதலாளிகிட்டே அழுது பொரண்டு லீவ் வாங்கிட்டு ஒரு வழியா மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு நீண்ட நாளாய் இதோ அதோ எனப் போக்குக் காட்டிக்கொண்டிருந்த இந்தியப் பயணத்துக்குச் செயல் வடிவம் கொடுத்தாச்சு..

35000 ஆயிரம் அடிகளுக்கு மேல் ஆகாயத்தில் நான் இருக்கேன்..பக்கத்தில் எதோ ஒரு ஆங்கில நாவலில் தலையைக் கவிழ்த்த என் அன்பு மனைவி.. நண்டும் சிண்டுமாய் நான் பெற்ற என் வம்ச விளக்குகள் ஜோஷ் மற்றும் ரதி. குழந்தைகள் முகத்தில் வார்த்தைகளில் பிடிபடாத குதுகாலம்.பார்த்துகிட்டு இருக்கும் போதே எனக்குள்ளும் அந்த உற்சாகம் தொற்றிகொள்கிறது.

விமானப்பணிப் பெண் குடிப்பதற்கு எதோ பானமொன்றை என்னிடம் நீட்ட.. என் கவனம் அங்கு இல்லை.. எதோ நினைப்பில் வேண்டாமெனத் தலையை ஆட்டிவிட்டு.. கண்களை மூடி சீட்டில் தலைச் சாய்த்தேன்... மனம் இருந்த இடத்தில் இருந்து இன்னொமொரு 35000 ஆயிரம் அடி உயரத்துக்கு எழும்பியது...இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது.

சின்னக்குளம்... தின்னவேலி மக்களுக்கே சரியாத் தெரியாத ஒரு குக்கிராமம்..
கிராமத்தைச் சுத்தி ஒரு பெரிய குளம்.(ஊர் பேருக்கும் குளத்து அளவுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை) கரையோரம் ஓட மரங்கள் என வட்டார வழக்கிலே சொல்லப்படும் முட்கள் நிறைந்த மரங்கள் வளர்ந்து புதராய் விரிந்துக் கிடந்தன..குளத்துக்கு மறுபக்கம் பசுமையான வயல்கள்.. அங்கே வந்து வந்து சிறகை விரிக்கும் அழகிய கொக்கு கூட்டம்... அந்தக் கொக்குகளைக் குறிபார்த்துக் குளத்திற்குள் குத்த வச்சி கையில் கவணுடன் காத்திருக்கும் சிறுவர் கூட்டம்.. அந்தக் கூட்டத்தில் பட்டணத்து வாசனை தடவிய உருப்படிகள் நானும் என் அத்தை மகன் இஸ்ராவும்.

நான் சுத்தப் பட்டணம்.. இஸ்ரா கொஞ்சம் டவுண் பையன்...அடிக்கடி ஊருக்கு வந்துப் போவான். என்னை விட உள்ளூர் பயல்வளை அவனுக்கு நல்ல பரிச்சயம். இஸ்ராவோடு ஓட்டியபடி நானும் அந்த கும்பலில் உறுப்பினர் அட்டைப் போடாத உறுப்பினன் ஆயிட்டேன்.

"இஸ்ரா பாவம்டா கொக்கு.. எவ்வளவு அழகாயிருக்கு... கல் எல்லாம் வச்சு அடிச்சா அதுக்கு வலிக்கும்டா"

"எலேய்... நேத்து சாயந்திரம் உப்பும் உரைப்புமா நாக்கைச் சுழட்டி சுழட்டிச் சாப்பிட்டால்லா.. இன்னும் ரெண்டு துண்டு கிடைக்குமான்னு சப்புக் கொட்டிகிட்டு கேட்டால்லா.. அப்போ கொக்குக்கு வலிக்கும்ன்னு நினைக்கல்லயோ... சும்மா வாயைப் பொத்திகிட்டுப் பின்னாலே நில்லு.. கொக்குப் பொரிச்சப் பொறவு சொல்லுதேன் திங்கரதுக்கு மட்டும் வாயைத் திறந்தாப் போதும்"

இஸ்ரா அடக்கி வைக்க.. உள்ளுக்குள் எழுந்த முந்தைய நாள் சாப்பிட்ட கொக்கின் ருசி என்னில் மிச்சம் இருந்த மீதி இரக்கத்தையும் அடக்கிவிட்டது.

"அய்யோ.. எந்த சவ்த்து மூதில்லா அது.. என் மேல கல்லைக் கொண்டு எறிஞ்ச்து... வந்தேன்னு தூக்கிப் போட்டு மிதிச்சுப்புடுவேன் ஆமா..." அதே தான்.. கல் கொக்கின் மீது வைத்த குறி தவ்றி சற்றே சாய்ந்த பாதையில் திசை திரும்பி வயலோரம 'அவுட் சைட்' போக ஒதுங்கிய எங்க ஊர் பெருசு எசேக்கியல் தாத்தா மீது பட்டு விட்டது. அவ்வளவு தான் மொத்தப் பேரும் ஆளுக்கு ஒரு பக்கமாய் தெறித்துப் பிரிந்தோம்.

மதியம் எங்கள் ஜமாவின் கூட்டாஞ்ச்சோறு வைபவம் வழக்கமாய் அரங்கேறும் ஊர் ஆரம்ப பள்ளியின் பின்புறம் ஒதுங்கினோம்.. பனங்கிழங்கு, வாத்துக் கூட்டத்தில் இருந்து களவாடிய வாத்து முட்டை, பனை வெல்லம்,அரிசி சோறு, ஒரு முழு கோழி...ஒவ்வொருப் பொருளா வெளிவந்து சமையல் ஆரம்பம் ஆச்சு... இன்னவென்று சொல்ல முடியாத ஒரு மார்க்கமான விருந்து அது.. விடலைக் கொண்டாட்டங்களின் உச்சக்க்ட்டம் அது..

"ஏ சாமோலு... உங்கண்ணன் பம்பாய்ல்ல இருந்து வர்றான்னு நாசரேத் சந்தையிலே வாங்கிட்டு வந்த வெடக்கோழியைக் காங்கல்லலியே .. எந்த களவாணி பைய கொண்டு போனானோத் தெரியல்லயே... எலேய் போய் தேடுங்களால்ல... கோழி கிடைக்கல்லன்னா களவாண்டவன் காலைத் தான் சூப் போட்டுக் கொடுக்கணும் இன்னிக்கு..." மூணாவ்து வீட்டு எஸ்தர் பாட்டி எட்டு வீதிக்கும் கேட்கும் படி காதில் பாம்படம் குதிக்க அலறியது எங்கள் ஜமாவின் சமையல் வேலைகளை இம்மியளவும் பாதிக்கவில்லை...விருந்து வெகு வேகமாக தயாராகி கொண்டிருந்தது..

அதே வேளையில் சின்னக்குளம் பெரிய தெருவின் புழுதியைக் கிளப்பியபடி வெள்ளை அம்பாசிடர் ஒண்ணு ஆர்ப்பாட்டமாய் ஊருக்குள் நுழைந்தது.

"ஏண்ணே... ஊருக்கு பிளசர் கார் வந்து இருக்கு... எஸ்தர் பாட்டி வீட்டுக்கு ஓறவுகாரவீய வந்து இருக்காவ... மூட்டை மூட்டையாச் சாமான் வந்து இருக்கு.. கோயிலுக்கு நட்டமா நின்னு காத்து வீசுற பேனு.. லைட் செட்.. எல்லாம் வந்து இருக்கு... கார்ல்ல குழாய் பேண்ட் போட்ட அக்கா ஒருத்தவீயளும் வந்து இருக்காவ.. காதுல்ல எதோ மிஷின் வச்சுகிட்டு இருக்காவ... பாடுற மிஷினாம்..."

விழுந்தடித்து மூச்சிரைக்க ஓடி வந்து தொப்புளான் சொன்ன மற்ற விஷயங்கள் எங்களைக் கவர்ந்துச்சோ இல்லையோ... அந்த குழாய் போட்ட அக்கா விஷயம் எங்களை கிறங்க வச்சுருச்சு... கால் தரைக்கு அரை இஞ்சு மேல் எழும்ப விழுந்தடித்து ஓடினோம்.. எஸ்தர் பாட்டி வீடு நன்றாக பார்வையில் படும் இடம் பார்த்து முண்டியடித்து நின்று கொண்டோம்.

காரும் பொருட்களும் தெளிவாகத் தெரிந்தன. காரில் முறுக்கிய மீசையோடு ஒருத்தர் இறங்கினார்.

"மக்கா அது தான் எஸ்தர் பாட்டியோட மூத்த மவன்.. பம்பாய்ல்ல போலீஸ்ல்ல இருக்காராம்.. பேரு ஆசிர்வாதம்."

அவருக்கு தோற்றத்தில் ஒத்த ஒரு பெண்மணி இறங்கினார்.

"அது அவர் பெஞ்சாதி..அந்தம்மாவை இவர் லவ் பண்ணி கலியாணம் கெட்டிக்கிட்டார்ன்னு சொல்லுறாவ.. பாட்டிக்கும் அந்தம்மாவுக்கும் ஆகாதாம்"

அவர்களைத் தொடர்ந்து காரில் இருந்து ஒரு பொடியன் இறங்கினான்.

"இது.." தொடர்ச்சியா வருணனைக் கொடுத்தவன் வாயைச் சட்டெனப் பொத்தினான் இஸ்ரா..காரணம் பொடியனுக்குப் பின்னால் பளிச்சென அவன் அக்கா இறங்கினாள்.

"டேய் மக்கா.. வெள்ளைத் தோல்டா... நம்மூர்காரியாடா இவ... "

நாங்க எல்லாரும் எங்க நிறத்தை ஒருமுறைக்கு இருமுறைக்கு பார்த்துக்கொண்டோம்...

"மின்னல் மாதிரி மினுக்கு மினுக்குன்னு இருக்காளே... எப்படிரா.. அவங்க அப்பனைப் பார்த்தா அபப்டி தெரியல்லயேடா.."

"அவங்க அம்மாக்காரி அவளுக்கு கழுதைப் பால் ஊத்தி குளிப்பாட்டியிருப்பாடா.. அதான் இந்தக் கலர்ல்ல இருக்கா"

"ஏன் இஸ்ரா கழுதைப் பால்ல குளிச்சா தோல் வெளுத்துருமா என்ன?" யாரோ ஒருத்தன் நிஜமான அக்கறையோடுக் கேட்டான்.

இஸ்ரா பதில் சொல்லவில்லை,, அவன் சொக்கி போய் விட்டான்.

எல்லோரும் அந்தப் பொண்ணை அப்படி மாஞ்சு மாஞ்சுப் பாத்துகிட்டே இருக்க.. எனக்கு நல்லா தெளிவாகப் பாக்கறதுக்கு தோதா இடம அமையல்ல.. யார் மண்டையாவது மறைச்சுகிட்டே இருந்துச்சு.

"இஸ்ரா.. எனக்குத் தெரியல்லடா...கொஞ்சம் கேப் விடுடா.."

"டேய்.என் கலருக்கே அவளைப் பாக்குறதே அதிகம்ன்னு யோசிச்சுகிட்டே பாக்குறேன்.. உன் கலருக்கு நீ எல்லாம் அவளைப் பாக்கணும்ன்னு நினைக்கவேக் கூடாது சொல்லிட்டேன்.."

இஸ்ரா என்னை விட கொஞ்சம் கலர்.. பொது நிறம்ன்னு சொல்லலாம்.. நான் கருப்பு தான்.. ஆனா களையான முகம்ன்னு எங்க அம்மா சொல்லுவாங்க.."

"போடா இஸ்ரா.. உன் மேல ஒரு சட்டி தார் ஊத்தி என் கலரைக் கருக்கல்ல என் பேரை மாத்தி வசிக்குறேன்டா" அப்படின்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேன்.

"டேய் இஸ்ரா எஙக் மெட்ராஸ்ல்ல இதே மாதிரி நிறைய வெள்ளையா இருக்க பொண்ணுங்களை நானும் பாத்துருக்கேன்.. சும்மா அலட்டாதடா.. ஆனாலும் ஒரு பொண்ணுக்காக என்னை அசிங்கமாப் பேசிட்டல்ல நீ.. பாருடா"
நான் எதே எதோ புலம்பிக் கொண்டே நடந்தேன். இஸ்ரோ அவன் வேலையிலே தீவிரமாய் இருந்தான்.

அப்போ டக்குன்னு என் மண்டையிலே அந்த ஐடியா வந்துப் போச்சு.. அவ்வளவு தான்.. எனக்கு சந்தோஷம் பொங்கிருச்சு..


"EXCUSE ME THIS IS YOUR GRAND MOTHERS HEN, SHE WAS LOOKING FOR IT.. I FOUND THIS IN THE BUSHES"

அய்யா தான்.. மெட்ராஸ்காரன்லேய்.. சும்மா இங்கீலிஸ்ல்ல அடிச்சு விட்டுட்டு அந்தப் பொண்ணு கையிலே கோழியை வச்சு அமுக்குற சாக்குல்ல லேசாத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். தொட்டத்துக்கு கூச்சத்தோடு ஒரு 'சாரியும்' சொல்லி அவளுடைய புன்னைகையைப் பரிசா வாங்கி சட்டைப் பைக்குள்ளே போட்டுகிட்டேன்.

"யார் மரியா பேரன் மெட்ராஸ்காரனா.. வாய்யா.. நல்ல காரியம் பண்ண.. கோழியைக் காங்கல்லன்னு முழி பிதுங்கிப் போச்சு.. காபிக் குடிச்சுட்டு போ" எஸ்தர் பாட்டி கூப்பிடவும். நான் தலையைத் திருப்பி நம்ம சகாக்களின் மறைவிடம் பார்த்தேன். இஸ்ரா கண்களில் ஏவுகணை எரிச்சல் கிளம்பியது. மற்றவர்களுக்கோ கோழி கோவம் தலைக்கு ஏறியது...

"WHAT IS YOUR NAME AND WHAT DO U DO?"

மறுபடியும் தெரிஞ்ச இங்கிலீஷை அள்ளி விட்டேன்.

"என் பேர் ரேச்சல்.. காலேஜ் சேரப் போறேன்...நீ என்னப் பண்ணுற? " நிறுத்தி நிதானமாய் தமிழில் பேசினாள்.

"ஓ நல்லாத் தமிழ் பேசுற நீ...நானும் காலேஜ் சேரப் போறேன்..." பத்தாவது ரிசல்ட்க்கு பாயைப் போர்த்தி பாதி ராத்திரியிலும் பயந்து கிடக்கும் நான் கூச்சப்படாமல் சொன்னேன்..

"OH NICE MEETING YOU " என்றாள் ரேச்சல்.

"உன் பேரைச் சொல்லல்லயே"

"ஜெரீஷ்.. நீ ஜெர்ரின்னு கூப்பிடு போதும்" என்று ப்டு ஸ்டைலாகச் சொல்லிவிட்டு.. இஸ்ராவைப் பார்த்தேன்.. அவன் என் மீது கொலை வெறி கொண்டு நிற்பதை நான் சொல்லித் தான் உங்களுக்குத் தெரியணுமா என்ன?

விடுமுறை அனுபவங்கள் தொடரும்