Friday, August 25, 2006

கவி 21:கல்லறை

இங்கே புதைக்கப்பட்டது
ஓர் உடல்
ஓராயிரம் கனவுகள்

மண்ணுக்கு உணவானாய் நீ
மண்ணுக்கு இன்னும் நோவாய் நான்

சில கடமைகள்
அவரசமாய் முடிக்கப்பட்டு
சிந்திய கண்ணீரினால்
அதினினும் அவசரமாய் கழுவப்பட்டன

முடிவில்லாப் பயணம்
முந்திக் கொண்டாய் நீ
முறிந்தச் சிறகுகளுக்குள்
முகம் புதைத்தப் படி நான்

உறவுகள் உன்
உறக்கத்தை
அலங்கரித்து விட்டு
அகன்றது

சில நாள் துக்கம்
சில கால ஞாபகம்
அவ்வளவு தான்
நீ அவர்களுக்கு

என் மொழியின்
நிரந்தர மௌனமடி நீ
என் மனத்தின்
ரகசிய ரணமடி நீ
ஒரு ஆயுள் கால
சேதமடி நீ எனக்கு...

கல்லறையிடம்
சொல்லும் காதலை
காத்திருந்தவளிடம்
சொல்லியிருக்கணும்...

Thursday, August 17, 2006

கவி 20:வாழ்க்கை ஒரு சிறு குறிப்பு

கான்கிரீட் காடுகளில்
கட்டடக் கூடுகள்...
உயரங்களின் தனிமையில்
உள்ளது என் முகவரி...

தொட்டு விடும் தூரத்தில் வானம்
தொலைவினில் எனக்கு நான்...
சாதனையின் தோரணங்கள்
என் வாசலுக்கு வெளியே...
சாகடிக்கும் வேதனைகள்
என் சுவாசத்தின் உள்ளே...

சில்லறைகளின் சிதறலில்
சிக்கிச் சிதறிய என் வாழ்க்கை
கல்லறைக்குப் போகும் வரை
தடுக்க முடியாது அதன் போக்கை

திரும்பிப் பார்க்கவில்லை
திரும்பவும் முடியுமா
தெரியவில்லை....

நின்று நிதானிக்க
நான் நினைத்ததில்லை
நிற்கவும் இல்லை...

எதையெல்லாம் இழந்தேன்
எதையெல்லாம் அடைந்தேன்
கணக்குப் புரியவில்லை
காலம் காத்திருக்கவில்லை...

பற்ற வைத்த சிகரெட்
புகைந்துக் கொண்டே இருக்கிறது
அதினும் வேகமாய்
அவ்வப்போது நானும்...

ஆரம்பம் உண்டென நம்பினால்
ஆண்டவனும் உண்டெனு நம்பு
ஆரோச் சொன்னார்
அப்போது யோசிக்கவில்லை...

இப்போது மட்டும் என்ன?
இன்னும் கொஞ்சம் நேரம்தான்
இதிலாவது வாழ்ந்து விடு
இதயத்தின் வேண்டுகோள்

கேட்கட்டுமா?
கேட்டுத் தான் பார்க்கட்டுமா?

காடு விட்டு மறு காடு
கிளம்பும் அந்த தருணம்..
கண்கள் தேடியது..
பொன்னை அல்ல
பொருளை அல்ல
புகழை அல்ல..

பெருமூச்சு எழும்பி
பெரிதாய் அடங்கியது

"பெரியவர் உறவுக்காரங்க ஆராவது இருந்தா...
பார்த்துடச் சொல்லுங்க..
போகுற உயிர் சந்தோஷமாப் போகும்"


கடைசி வார்த்தைககள்
காதினில் ஒலிக்க
கனவுகள் ஓய்ந்தன..
கதம் கதம்...

Thursday, August 10, 2006

கவி 19:மீண்டும் சென்னையில் ஒரு மழைக் காலம்
நினைவில் இன்னும்
நனைந்தபடி அந்த நவம்பர் மாதம்..

இரு விழிகளின் ஓரம்
இருண்ட மேகங்களாய்
இமைகள் படபடக்க..

இன்னொரு புயல்
இதயத்தின் வெகு அருகில்
இன்னும் சில நிமிடம்
இதுவும் கடந்துப் போகும்

இடியின் சத்தம்..
இலக்கின்றி தாக்க...
மின்னல் கீற்று
முகத்தில் அறைய...

சோவெனக் கொட்டுது
சாரல் மழை...
இசைக்கும் மழை..
இனிக்கும் மழை...
இன்று இரண்டுமே இல்லை...

வார்த்தைகள்
வீசிய காற்றில்
வீழ்ந்துக் கிடக்க
கட்டியக் கோட்டைகள்
காரண வெள்ளங்களில்
கலங்கிச் சரிய...

வெற்று பார்வைகள்
வெளிறிய கனவுகள்.

கலகலப்பா சொல்லும் வாக்கியம்
காலத்தின் கட்டாயம்
களை இழந்தத் தொனியில்
கேட்க முடிந்தால்
கேட்டுப் போ..

ஜில்லென்று ஒரு காதல்..
ஜம்மென்று ஒரு கல்யாணம்...

ஈரமான அவள் திருமணப் பத்திரிக்கையில்
இடிந்துப் போன என் எதிர்கால உறவுகள்