Monday, December 12, 2011

மீண்டும் தென்கிழக்கு வாசமல்லி - 2

முன் கதைப் படிக்க...


"வரச் சொல்லி இந்நேரம் வனக்குயில் அழைத்தது வந்தேன்...."எஸ்பிபி எங்க நிலைமை தெரிஞ்ச மாதிரியே பொட்டிக்கடை ரேடியோவில்ல உருக்கமா பாடிட்டி இருந்தார் எதோ கமல் படத்து பாட்டுன்னு ஞாபகம் படம் சட்டுன்னு நினைப்பு வர்றல்ல
எங்கக் கால்ல சுத்தி கிடந்த பொகைஞ்ச சிகரெட் துண்டங்களும் பக்கத்துல்ல இருந்த சில காலி டீ கிளாஸ்களும் நாங்க அங்கே வந்து ரொம்ப நேரமான கதையை வர்றவன் போறவனுக்கு எல்லாம் தெள்ளத் தெளிவா வெளிச்சம் போட்டுக் காட்டிட்டுருந்துச்சுன்னு சொல்லலாம்

டாம் என் மொகத்தை பாக்க முடியாம அந்த பக்கம் திரும்பி விரல் வீங்கி காயுற அளவுக்கு அவளுக்கு போனைப் போட்டுட்டு இருந்தான்...அவ போனை எடுக்கவே இல்ல போல...அந்தப் புண்ணியவதி போனை தொலைச்சிட்டாளோ இல்ல தொடர்புக்கு எல்லைக்கு வெளியே இருந்தாளோ தெரியல்ல..

இன்னொரு பாக்கெட் சிகரெட்டை வாங்கிட்டு டாமைக் காசு கொடுக்கச் சொல்லிட்டு ஒரு சிகரெட்ட எடுத்து பத்த வச்சு புகையைச் சரியா அவன் முகத்துல்லயே ஊதி என் கடுப்பை நெருப்பா அவன் மேல காண்பிச்சேன்

அவன் எதுவும் பேசாம தலையைக் குனிஞ்சுகிட்டான்...


"டேய் நல்லவனே......நான் கெட்ட வார்த்தை எல்லாம் பேசி ரொம்ப நாள் ஆச்சு.... சனிக்கிழமை அதுவுமா காலையிலே 8 மணிக்கு மீட்டிங்ன்னு இப்படி மார்கழி குளிர்ல்ல கிளப்பிட்டு வந்து ரோட்டோரமா நிக்க வச்சுருக்கியே உனக்கு இது நியாயம்ன்னு படுதா........ராத்திரி அடிச்ச சரக்கு மப்பு கூட இன்னும் முழுசா இறங்கல்ல.... தலை வலி வேற..... எங்கேஏஏஏஏஏடாஆஆ அவ..............." நான் அவ்வளவு நேரம் தேக்கி வச்சிருந்த மொத்த கோபமும்அந்த கடைசி வார்த்தையிலே ரொம்ப அசிங்கமா வந்து தெறிச்சு விழுந்துச்சு. படிக்கறவங்க நாகரீகம் கருதி தணிக்கை செஞ்சுட்டு கதையைத் தொடருறேன்

ஆனாலும் எனக்கு கோவம் அடங்கல்ல...

"மாப்பு ப்ரியா இப்படி பண்ணமாட்டாடா...ரொம்ப நல்ல பொண்ணுடா எதோ காரணம் இருக்கும்...கண்டிப்பாக் காரணம் இருக்கும்..." டாமின் எந்த சமாதானமும் என்னைச் சாந்தப்படுத்துற மாதிரி இல்ல

"பொண்ணு நல்லா இருக்கலாம் ஆனா நல்லவளா இருப்பாளான்னு யாருக்குடா தெரியும்....இங்கே பாரு இப்போ உனக்கு பிரியா போதை எனக்கு நைட் நீ பிரீயா வாங்கி கொடுத்த சரக்கோட மிச்ச போதை...தலையை வலி பின்னி சடைப் போடுது...இன்னும் கொஞ்ச நேரம் நான் இங்கே இருந்தா உன்னய அடிச்சு கொன்னாலும் கொன்னுபுடுவேன்.... வில்லங்கமாயிரும்...நான் கிளம்புறேன் பாஸ்...நீ வரும்ன்னு வா இல்லன்னு வந்து சேரு"


மாப்ளே ஆனது ஆச்சு இன்னும் கொஞ்ச நேரம்டா.... டாம் கெஞ்சலாக இழுத்தான்

அவன் கெஞ்சல் சத்தம் என் வண்டியின் உறுமல் சத்தத்தில் கரைஞ்சே போச்சு.. திரும்பி பாக்காமல் வண்டியை விரட்டிட்டு வீடு போய் சேந்தேன்..சேந்தோம்...

சனி நீராடலின் மிச்ச சடங்கை எல்லாம் ஞாயித்துகிழமை ரூம்ல்லயே யார் கம்பெனியும் இல்லாமலே முடிச்சுட்டு படுத்தேன். டாம் எங்கேயோ போனான் எப்போவோ வந்தான். என்கிட்ட எதுவும் பேசல்ல நானும் எதுவும் கேக்கற நிலையிலே இல்ல..

.திங்கட்கிழமை காலையில்ல ஒரு மிதமான தலைவலியோட எந்தரிச்சி இனி என்ன ஆனாலும் ஞாயித்து கிழமை குடிக்கக்கூடாதுடா சாமின்னு எனக்கு நானே சொல்லும் போது மணி எட்டரை

வழக்கத்தை விட அவசரமா கிளம்ப வேண்டியதாப் போச்சு. நம்ம பாசக்கார கோபு சேட்டன் கடை ஸ்ட்ராங்க் டீயும் ஒரு சிகரெட்டும் காலை மட்டுமே டிபனா ஆக்கிட்டு ஆபிஸ் சீட்டுல்ல வந்து உட்காரும் போது மணி ஒன்பதே முக்காலை ஒரே தாண்டா தாண்டிட்டு இருந்துச்சு

பக்கத்து சீட் நாணா (நாராயணனின் சுருக்கம்) பெரிய சைஸ் லட்டு நெய் முறுக்குன்னு எடுத்து எனக்கு முன்னாடி நீட்டினான்.காலி வயிறு...நெய் முறுக்கு வாசம்ன்னு அப்படியே ஒரு தூக்கு தூக்குச்சு பாருங்க...

"என்ன நாணா...வீக் என்ட் வெங்கி கூட மீட்டிங்கா... திருப்பதி போயிருந்தியா.. வெங்கி என்னச் சொல்லுறார் டீலா நோ டீலா..வத்சலா மேட்டர் ஓர்க் அவுட் ஆயிடுமா..."

பாஸ் இது திருப்பதி முறுக்கு இல்ல..திருச்சி ஸ்பெசல்...நம்ம பிரியாக்கு நிச்சயம் ஆயிடுத்தாம்...அந்த பலகாரம் தான் இது..."

"ஆம்பளையா இன்னொரு ஆம்பளையோட கஷ்ட்டத்துல்ல லட்டு முறுக்குன்னு சாப்பிட்டு சந்தோசப்படுறது தப்பு தான்...ஆனா என்ன பண்ண இவங்க எல்லாம் திருந்தவாப் போறானுங்க கல்யாணம் கட்டிகிட்டு நாசமாத் தான் போவானுங்க...சரி நாணா இன்னொரு லட்டு கொடு...கொண்டாடு..." லட்டை உடைத்து வாயிலே போட்டுகிட்டேன்

"பாஸ் தப்பாப் பேசுறீங்க... பிரியா மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க எந்த பையனும் கொடுத்து வச்சிருக்கணும்..அவ்வளவு நல்ல பொண்ணு பாஸ் பிரியா"

"அடேய் நாணா ஒரு முறுக்குக்கு இவ்வோளோ பேசுறது கொஞ்சம் அதிகம்டா.... இவ்வளோ வாசிக்குற" முறுக்கை முழுசாய் சாப்பிட்டு முடித்து விட்டு கைத்துடைக்க எதாவது பேப்பர் கிடைக்குமான்னு தேடினேன்.

"பாஸ் யாரையாவது எப்போவாது அப்படியே பைத்தியம் பிடிச்சாப்புல்ல லவ் பண்ணியிருக்கீங்களா ...."

" நாணா பைத்தியம் பிடிக்கணும்ன்னா தான்ப்பா லவ் பண்ணணும்...இன்னொன்னு கேளு மைன்ட்ல்ல வச்சுக்கோ லவ்க்கு நோ கிராமர், பையன் பொண்ணு கிட்ட தேடுறது ஒன்லி கிளாமர்... பொண்ணு பையன் கிட்ட பாக்குறது டாலர் ...பொண்ணு சொல்லனும் எஸ்... பையன் அடிக்கணும் கிஸ்.... பைக்கோ காரோ பிக் அப்.... லாங் ட்ரைவ்ல்ல டேக் ஆப்... ஆடி முடிஞ்சப் பிறகு ப்ரேக் அப்...இது தான் நாணா லவ்வோட நிரந்தர லாஜிக்கு "

"பாஸ்....இதையும் தாண்டி காதல் இருக்கு பாஸ்....அதை எப்படி சொல்லி உங்களுக்கு புரியவைப்பேன்"

"சிம்பிள் நாணா வீக் என்ட் வீட்டுல்ல பார்ட்டி வச்சுருவோம்... விடிய விடிய எனக்கு புரிய வை நாணா...இன்னொன்னு கேளு மைன்ட்ல்ல வச்சுக்கோ ஏத்திகிட்டே பிறகு ஒலகத்துல்ல புரியாத விசயம்ன்னே ஒண்ணும் கிடையாது நாணா பிரியாவையும் புரிஞ்சுக்குவோம் அப்படியே. அவளைப் பாத்தா வரும்ன்னு சொன்னீயே அந்தக் காதலையும் புரிஞ்சுக்குவோம்"

"ஹலோ சர்...அதை எல்லாம் அப்புறம் புரிஞ்சுக்கோங்க...இப்போ இதோ நான் அனுப்புற பிசினெஸ் ரிக்கொயர்மென்ட்டை முதல்ல தெளிவாப் படிச்சு புரிஞ்சுக்கோங்க டெஸ்டிங் ஒழுங்காப் பண்ணலாம்"

நாணா எதுக்கு திடீருன்னு லேடீஸ் வாய்ஸ்ல்ல பேசுறான்னு குழம்புனாலும் டக்குன்னு புரிஞ்சுப் போச்சு குரல் அடுத்த கேபின்ல்ல இருந்து தான் வந்துச்சுன்னு ஐஸ் கிரீமை உருக்கி காதுல்ல ஊத்துன்னா ஜில்லுன்னு இனிப்பா இருக்குமா என்ன ...சம்பந்தம் இல்லாமல் எனோ அந்த நிமிசம் அப்படி ஒரு யோசனை எனக்குள்ளே வந்துப் போச்சு...காரணம் அந்த குரல்....அந்த பொண்ணோட குரல்...என்னை நானே உலுக்கிட்டு மெயில் பாக்ஸை திறந்தேன்...ஒன் அன்ரெட் மெயில் .....அனுப்புனது.....ரஞ்சனி பிரியதர்ஷிணி

நாணா நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

சரியா பத்தே வினாடியிலே கம்யூனிகேட்டரில் ஒரு சேர்க்கை விண்ணப்பம் வந்தது... அவளே தான் ரஞ்சனிப்ரியதர்ஷினி...

Please have a better understanding of things around you....I mean be sure of the project requirements...best of luck....reach me in case you are struck.....அப்புறம் மூணு புள்ளி

அப்பவே புரிஞ்சுப் போச்சு...அவளுக்கும் எனக்கும் ஆக போறதுல்லன்னு... ஒத்த வரியிலே எவ்வளவு பொடி வச்சு அடிச்சிருக்கா....

மிஸ் ரஞ்சனி பிரியதர்ஷினி நீ யாரா இருந்தாலும் சரி எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சரி... என்னைச் சந்திச்சு வம்பிழுத்த பிறகு உன் வாழ்க்கை அப்படியே இருக்கப் போறதில்ல.....உன்னை எனக்கு பிடிக்கல்ல...அவ்வளவு தான்....

டாய்லெட்ல்ல எவன்டா இவ்வளவு சத்தமா விசில் அடிக்குறது....யார் குரல்ன்னு தெரியல்ல..நான் கண்டுக்காமல் இன்னும் சத்தமாக தென்கிழக்கு வாசமல்லி பாடலை விசிலடித்த படி வேலையை முடிச்சுட்டு ஜிப்பை ஏத்தி விட்டேன்...

தொடரும்