Thursday, September 28, 2006

கதை 9:ஆஷிரா

காமராஜ் உள்நாட்டு விமான நிலையத்தின் முன்னால் கம்பெனிக்கு சொந்தமான டாட்டா இன்டிக்கா காரின் டிரைவ்ர் சீட்டில் உட்கார்ந்து மூணாவது சிகரெட்டைப் புகைத்து முடித்தேன். நாலாவது சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கவும் செல்போன் சிணுங்கியது.டெல்லியில் இருந்து சென்னை வரும் விமானம் மேகமூட்டம் காரணமாக இன்னும் ஒரு இருபது நிமிடங்கள் தாமதமாக வரும் எனற எஸ்.எம் எஸ் படித்து விட்டு செல்போனைச் சட்டைப் பைக்குள் சொருகினேன்.

டெல்லியிருந்து ஆஷிரா வருகிறாள். ஆஷிரா எங்கள் குர்கான் அலுவலகத்தில் ERP பிரிவில் சீனியர் CRM CONSULTANT.வயது 27. அந்த வயதில் கிட்டத்தட்ட நான் வாங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகம் சம்பாதிக்கும் படு சாமர்த்தியசாலி. இங்கு நாங்கள் ஏற்று கொண்டு இருக்கும் ஒரு புதிய திட்டத்தைச் செயலாக்கப்படுத்தவும் எங்கள் அலுவலக ச்காக்களுக்கு பயிற்சி அளிக்கவும் சென்னைக்கு நான்கு மாதப் பயணமாக வருகிறாள்.

பெயரைப் பார்த்தா வடநாட்டுக் காரியாத் தெரியுது. வளமைக்கும் நுனி நாக்கு ஆங்கிலத்துக்கும் அரைகுறை உடுப்புக்கும் பஞசமிருக்காது. என் மனத்திற்குள் நானே ஒரு கணக்குப் போட்டுக் கொண்டேன். அவசரப் படாதீங்க.. நீங்க நினைக்கும் கணக்கு அல்ல இது.. இது போன்ற பெண்களைக் கண்டாலே எனக்கு அலர்ஜி. ஆனால் என்னச் செய்ய பொழப்பு அப்படியாகிப் போச்சு.. ஆஷிராவுக்காக இங்கு தேவுடு காத்து நிற்கிறேன். இன்னிக்கு ஞாயிற்று கிழ்மை. ஆபிஸ் டிரைவர் அவசர வேலையாக் கிளம்பிட்டான். அம்மணியோ ரொம்பவும் முக்கியப் புள்ளி. என் தல அதான் பாஸ் எனக்கு அன்புக் கட்டளைப் போட்டுட்டாரு...

"பன்னீர்..MAKE SURE THAT SHE REACHES THE GUEST HOUSE FROM THE AIRPORT SAFELY...SHE DOESNT KNOW CHENNAI"

போடாங்க... என்னப் பண்ண..பாஸ் உத்தரவு.. ஒரு நல்ல ஞாயித்துக்கிழமை காலைத்தூக்கம் போச்சு. நாலாவ்து சிகரெட் ஓயவும். டெல்லி விமானம் தரையிறங்கவும் சரியாக இருந்தது. என் கையில் ஆஷிரா என்று எழுதப் பட்டிருந்த அட்டையை வேண்டா வெறுப்பாய் தூக்கிப் பிடித்துக் கொண்டு வரிசையில் நின்றேன்.

"டிரைவர்.. மேரா சாமான் இதர் ஹை.. வண்டி எங்கே இருக்கு?"

அழுத்தமான ஆணவப் பெண்குரல் ஒன்று என் காதுகளைக் கிழித்துச் சென்றது.
மூர்க்கமான முகத்தோடு அவளைப் பார்த்தேன். உச்சி முதல் பாதம் வரை முழுசா உக்கிரமானப் பார்வைப் பார்த்தேன். அவள் அழகு தான்.. அழகை ரசிக்க விடாமல் அவள் ஆணவம் என்னைத் தடுத்தது.

"அரே டிரைவர்.. க்யா தேக் ரஹே ஹோ.. வண்டி சீக்கிரம் எடுப்பா"

என் கை கார் இருக்கும் இடம் நோக்கி சுட்டியது.. அவள் விறுவிறுவென்று காரை நோக்கி நடந்தாள். நான் வேறு வழியில்லாமல் அவள் மூட்டைகளை நகர்த்தியபடி காருக்கு வந்தேன். எதுவும் பேசாமல் காரை செலுத்தினேன். கொஞ்சம் வேகமாகவே ஓட்டினேன்.

பின் சீட் கண்ணாடியை அவள் இறக்கிவிட்டாள், சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்து புகையை வெளியே விட்டாள்.என்னிடம் எதுவும் பேசவில்லை.

நானும் எதுவும் பேசவில்லை. காரை வேகமாக ஈ.சி.ஆர் ரோட்டை நோக்கி விட்டேன். கார் நீலாங்கரை கம்பெனி கெஸ்ட் ஹவுஸை அடைந்தது. அவள் இறங்கினாள். கெஸ்ட் ஹவுஸ் வேலையாள் இம்முறை என்னை மூட்டைத் தூக்கவிடாமல் காப்பாற்றினான். அவள் சல்லென்று உள்ளேப் போய்விட்டாள். வேலையாளிடம் கார் சாவியைக் கொடுத்துவிட்டு பொடி நடையாய் பஸ் ஸ்டாண்ட நோக்கி நடந்தேன்.எனக்கு அவளைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதையும் மீறி பேருந்துப் பயணத்தில் அவள் வளைவு நெளிவுகள் என் சிந்தையில் வந்து மோதி என் மனத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

மறு நாள் காலை பத்து மணிக்கு தான் நான் அலுவலகம் போனேன். முன் கூட்டியே காலத் தாமத்திற்கு அனுமதி வாங்கியிருந்தேன்.என்னுடையக் கேபினை அவளுக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனக்கு எரிச்சல் அதிகமானது.எரிச்சலை உள்ளுக்குள்ளேப் புதைத்துவிட்டு எனக்கு ஒதுக்கியிருந்த வேறு இடத்தில் போய் அமர்ந்தேன். அங்கிருந்து அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது.

கலைந்த கேசம்... மிடுக்கானக் கண்கள்... நெற்றியில் புரளும் கற்றை முடி.. அதில் ஒரு விரல் வைத்த அவள் விளையாடியது.. கூர்மையான மூக்கு... மிருதுவான உதடுகள்.. ம்ம்மம் அம்சமாத் தான் இருக்கா.. அதான் திமிர் எனக்கு நானேச் சொல்லிக்கொண்டேன். பாஸ் எங்களை அறிமுகம் செய்து வைத்தார். முந்தைய நாள் என்னைப் பார்த்துப் பேசியதற்கான எந்த அறிகுறியும் அவள் நடவடிக்கையில் தென்படவே இல்லை.அப்போது தான் முதல் முறையாகப் பார்ப்பது போல் படு யதார்த்தமாகப் பேசினாள்.நானும் பாஸ் முன்னாடி சிரிச்சு வச்சேன்.

மத்தியானம் லஞ்சுக்கு வெளியேப் போயிருந்தோம். சாப்பிட்டு முடித்த உடன் தம் அடிக்க நான் வெளியே ஒதுங்கினேன். அவளும் வந்தாள். பற்ற வைக்க வத்திப் பெட்டி இல்லாமல் அக்கம் பக்கம் பார்த்து விட்டு என்னை நோக்கி வந்தாள். வந்துக் கேட்டாக் கண்டிப்பாக் கொடுக்க கூடாது. எனக்குள் ஒரு வைராக்கியம் நுழைத்துக் கொண்டு இறுக்கமாய் நின்றேன். அவள் என் பக்கமாய் வந்து என்னைக் கேட்காமலே என் வாயிலிருந்த சிகரெட்டை எடுத்து தன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு சாவகாசமாய் புகையை விட்டாள். என் கோபம் என் கட்டுப்பாட்டினை மீற துடித்தது.

"சோ இந்த் ஆபிஸ்ல்ல வாங்குற சம்பளம் உங்களுக்குப் பத்த மாட்டேங்குது அப்படித் தானே? என்று கேட்டு விட்டு தலையை ஸ்டலாக் ஒரு புறம் பார்த்து தாழ்த்தினாள்.
"எனக்குப் புரியல்ல.." என்று நான் தொண்டையைக் கனைத்துக் கொண்டேன்.

"இல்லை வீக் டேஸ்ல்ல SOFTWARE ஜாப். வீக் என்ட்ஸ்ல்ல டிரைவர் ஜாப்... வருமானம் நல்லாத் தான் இருக்கும் என்று கிண்டலாய் சிரித்தவள்... பட் யூ நோ.. யூ ட்ரைவ் த கார் வெல்" என்றாள்.
எனக்குக் கடுப்பு அதிகமானது. வெளியேக் காட்டிக் கொள்ளவில்லை. அவள் டைட் ஜீன்ஸை என் ஓரக் கண்ணால் அளவெடுத்தேன். அவள் இடுப்பில் சட்டைக்கும் ஜின்ஸ்க்கும் ஒரு நூல் அளவு இடைவெளி. அந்த இடைவெளியில் என் பார்வைப் பதிந்து நின்றது.

மாலை அலுவலக்ம் விடும் நேரத்துக்கு முன்பாக என்னையும் என் சகா கார்த்தியையும் பாஸ் கூப்பிடனுப்பி மாலையில் எங்களுக்கு என்ன வேலை என வினவினார்.
கார்த்தி எப்பவுமே உஷார் பார்ட்டி.. " பாட்டிக்கு கேட்ரக்ட் ஆப்பரேஷ்ன் சார்.. இன்னிக்குப் பாக்கப் போறேன்" டக்குன்னு அள்ளிவிட்டான்.
நான் சாதுவா ஒண்ணுமில்ல சார் என்று தலையாட்டி நின்றேன்.
"மச்சி பெரியப்பா எதாவது டாகுமெண்ட் வேலையை உன் தலையிலேக் கட்டப் போகுதுப் பார்" எனக் கிசுகிசுத்தான் கார்த்தி.

பாஸ் சொன்ன விஷ்யமே வேறு. ஆஷிரா மாலையில் சென்னையில் எங்கோப் போக வேண்டுமாம். அதுக்கு காவலாளி வேலைப் பார்க்க ஆள் வேண்டும். நான் தான் மீண்டும் சிக்கினேன். கார்த்தி கொந்தளித்துவிட்டான்.
"ம்ம் உனக்கு மச்சம்டீ.. அரேபியக் குதிரையை ஓட்டிட்டுப் போறே... ம்ம்ம்" அவன் விட்ட பெருமூச்சை சிலிண்டிரில் பிடித்து வைத்திருந்தால் ஒரு மாதம் சமையலுக்கு ஆகும்.மறுபடியும் அதே இன்டிக்கா... டிரைவர் சீட். இம்முறை அவள் பின்னால் உட்காராமல் முன்னால் உட்கார்ந்துக் கொண்டாள். செம பர்ப்யூம் வாசனை. மனுஷனைக் கும்முன்னு தூக்கிச்சு.

அதிசயமாச் சிகரெட் பிடிக்கவில்லை. கபாலிஸ்வரர் கோயிலுக்குப் போகணும்ன்னு சொன்னாள். வண்டியை மயிலாப்பூருக்கு விட்டேன்.
நான் கோயிலுக்குப் போகவில்லை. அவள் என்னைக வரச் சொல்லி கூப்பிடவுமில்லை, காரணுமும் கேட்கவில்லை. ஒரு மணி நேரம் காத்து இருந்தேன். வந்தாள். நெற்றியில் குங்குமம் இட்டு, பிரசாதம் கையில் ஏந்தி , தலையில் ஒரு முழம் மல்லிகைச் சூடி ஜின்ஸ் அணிந்த ஒரு தேவதையாய் வந்தாள்.

"ARE U AN ATHEIST?" அவள் கேட்டாள்
"நோ.. அடுத்து எஙகப் போகணும்? " என்று கேட்டேன்.
"அடையார் கேன்சர் இன் ஸ்டியூட்டிட்"
"அங்கே யார் இருக்கா?"
"அங்கேப் போகணும்" உறுதியானக் குரல் பதிலாய் வந்தது. அவள் கையில் ஒரு ரோஜாப் பூ இருந்தது. நான் வண்டி நிறுத்துமிடத்தில் நின்று கொண்டேன்.

அவள் போய் ஒரு அரை மணி நேரம் கழித்து வந்தாள். அவள் முகத்தில் ஒரு சின்னப் புன்னகைப் புதிதாய் பூத்திருந்தது.
"அடுத்து எங்கே?"
"நல்ல ரெஸ்டாரெண்ட் போலாம்"
"நான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்குவேன்"
"ரிலாக்ஸ் உங்களைப் பில் எல்லாம் கட்டச் சொல்லமாட்டேன்"
அவள் சிரித்தாள். நானும் சிரிக்க முயற்சித்தேன்.
"சிரிக்க வேண்டாம்.. உம்ன்னு இருந்தாலே ஜம்ன்னு இருக்கீங்க"

ஹோட்டலில் சைவ வகைகளை ஆர்டர் செய்தாள். நான் ஜீஸ் சொன்னேன்.

"எப்படியிருக்காங்க?"

"யார்?"

"கேன்சர் இன் ஸ்டிடியூட்ல்ல பாக்கப் போணீங்களே அவங்க.."

"ஓ அதுவா? அங்கே இப்போ யாரும் இல்ல. எங்க அப்பா அங்கே இருந்தார். கடைசியா எட்டு மாசம். வார்ட் நம்பர் 13. அப்போ எனக்கு எட்டு வயசு. நிறைய சிகரெட் பிடிப்பாராம். போயிட்டார். அவருக்கு ரோஸ் ரொம்ப பிடிக்கும்ன்னு பாட்டி சொல்லுவாங்க,, அதான் அவர் கடைசியா இருந்த ரூம்ல்ல ஒரு ரோஸ் வச்சுட்டு வந்தேன்" என்ற படபடப்பாய் பேசி முடித்தாள்.

"நீங்களும் நிறைய ஸ்மோக் பண்றீங்க?"

"அப்பா கிட்ட போகணும் அவர் கூட மிஸ் பண்ண சைல்ட்ஹூட் டேஸ் எல்லாம் மறுபடியும் வாழணும்ன்னு ஒரு ஆசை.. அதான் நானும் பிடிக்குறேன்.." என்று கலகலவெனச் சிரித்தாள்.எனக்குச் சிரிப்பு வரவில்லை. ஆர்டர் செயத் அயிட்டங்கள் பரிமாறபட்டன. அவள் ஒவ்வொன்றாய் எடுத்து ருசிக்க ஆரம்பித்தாள்.

"ஜோக் மேன்... காலேஜ் டேஸ்ல்ல ஜாலியா அப்படியே ஆரம்பிச்ச பழக்கம் இப்போ அப்படியே போகுது,,, நீ எப்படி மேன்? ரொம்ப மூடி டைப்பா இருக்கே?"

நீங்க தேயந்து நீயானது. அவள் கேட்டக் கேள்விக்கு என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் சிரித்தேன்.

"உங்க..உனக்கு தமிழ் எப்படி தெரியும்? " நானும் வேண்டுமென்று மரியாதைத் தவிர்த்தேன். என்னை விட ஒரு வயசு சின்னப் பொண்ணு தானேன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.

"நான் தமிழ் பொண்ணு தானே.. அப்பாவுக்கு பூர்வீகம் தஞ்சாவூர் பக்கம் நன்னிலம். ஆனா இது வரை தமிழ்நாட்டுக்கு வந்ததே இல்லை. இது தான் முதல் தடவை. பாட்டி உயிரோட இருந்த வரைக்கும் என்னைச் சென்னைப் பக்கம் விட்டதே இல்லை"

ஒரு நீருற்றாய் வார்த்தைகள் அவளை விட்டு புறப்பட்டன. அருவியாய் அவள் பேச்சு பொங்கியது. ஒரு நதியாய் என் காதுகளில் அவள் மொழி நடந்தது. ஒரு சில நிமிடங்களில் அவளைப் பற்றிய என் அபிப்பிராயங்கள் மாறத் துவங்கின. என்னவெல்லாமோ பேசினாள். ஆனால் எதிலும் அவள் தன் தாயைப் பற்றி மறந்தும் குறிப்பிடவில்லை. எனக்குக் கேட்க வேண்டும் என்று உறுத்தியது. ஆனாலும் கேட்கவில்லை.

அலுவலகம் வந்து விட்டால் வேலையில் கில்லியாய் நிற்பாள். வேலையைத் தவிர வேறு சிந்தனை எதுவுமே அவளிடம் இருக்காது. வேலைச் சொல்லிக் கொடுப்பதிலும் அவள் கெட்டிக்காரி.

ஒரு சனிக்கிழமை மாலை என்னை அவள் வீட்டுக்கு அழைத்திருந்தாள். நானும் போனேன்.
கதவைத் திறந்தவள் கால்சட்டையும் டீ-ஷர்ட்டும் அணிந்திருந்தாள். ஒரு நல்ல ஓட்டப் பந்தைய வீராங்கனைக்குரிய கால்களை அவள் பெற்றிருந்தாள்.

"கம் இன்"

அவள் அறையில் புத்தகங்கள் இறைந்துக் கிடந்தன. பாதிக்கும் மேல நமக்குப் புரியாத பிரெஞ்சு மொழியில் கிடந்தன.

"புக்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. மொழி பேதமில்லாமல் படிப்பேன்... படிக்கணும் அப்போத் தான் நம்ம உலகம் இன்னும் பெருசாகும்... பெரிய உலகத்திலே சின்ன சின்ன விஷ்யங்கள் காணாமல் போயிடும்"

நான் கையில் கிடைத்தப் புத்தகங்களைப் புரட்டினேன்.இசைத் தட்டுகளை ஆராய்ந்தேன். சுவற்றில் இருந்த படங்களைப் பார்த்தேன். அதில் ஒரு படத்தில் ஒரு அழகானச் சிறுமி இருந்தாள். அது ஆஷிராவாகத் தான் இருக்கும் என நினைத்துக் கொண்டேன். அவள் குடும்ப படம் இருந்தது. ஆஷிராவின் அம்மா படமும் இருந்தது. ஆஷிராவின் அம்மா கிட்டத்தட்ட ஆஷிராப் போலவே இருந்தாள்.

"சரி என்ன ட்ரிங்க் வேணும் விஸ்கியா ஜஸ்ட் பியரா?"
"நோ தாங்க்ஸ்"
"குடிக்க மாட்டியா? வெறும் தம்மு தானா?"
"இல்ல இப்போ வேணாம்"
"ஓ ஓஓஓஓ... ஏன்? " அவள் குரலில் நக்கல் இருந்தது.

அவள் விஸ்கி ஊற்றி கொண்டாள். கோப்பையிலிருந்து மெதுவாக எடுத்து பருகினாள்.
அவ்ள் கண்களில் ஒரு வித சோகம் இழையோடியது.

"ஹே.. ஒரு அழகான பொண்ணு..நான் அழகாத் தானே இருக்கேன்?"
நான் பதில் சொல்லாமல் இருந்தேன்.
"அப்புறம் அந்த அழகான பொண்ணு செக்ஸியான டிரெஸ்ல்ல.. தண்ணியடிச்சுட்டு இருக்கா.. அதுவும் தனியா இருக்கா.. உனக்கு செக்ஸ் எண்ணம் வரலியா?"

நான் உள்ளுக்குள் அதிர்ந்துப் போனேன். நம்ம மனசுக்குள்ளே இவ எட்டிப் பாக்குறாளான்னு ஒரு வினாடி திகைச்சுப் போயிட்டேன்.

"ஹே ரிலாக்ஸ் உங்க தமிழ் படத்துல்ல எல்லாம் அப்படித் தானே காட்டுவாங்க... தம் தண்ணி இதெல்லாம் ஒர் பொண்ணு அடிச்சா அவ எதுக்கும் தயார் அப்படி தானே உங்க நினைப்பு"

ஆஷிரா அதுக்கும் மேல் எவ்வளவோ பேசினாள். நான் ம்ம் கொட்டி வைத்தேன்.

"ஹே நீ யாரையாவ்து லவ் பண்ணி இருக்கீயாடா?"
"ம்ம் பண்ணியிருக்கேன்"
அவள் எக்காளமாய் சிரித்தாள்.
"இந்த சுடு மூஞ்சிய யார்ப்பா லவ் பண்ணா?"
"என் காலேஜ் மேட் அவப் பேர் ரஞ்சனி. இப்போ அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. யு.எஸ்ல்ல இருக்கா. அவளுக்கு ஒரு பையன் இருக்கான்"

கோப்பையில் இருந்த மதுவை மெல்ல விழுங்கினாள்.

"அவ பையனுக்கு உன் பெயரா வச்சுருக்கா? உன் காதலி" அவள் பேச்சில் ஒரு விட்டேத்தித் தனம்.

"இல்லை"
"ரொம்ப லவ் பண்ணீயோ?"
"ம்ம்"
"நானும் லவ் பண்ணேன்.. ஒரு வாட்டி ரெண்டு வாட்டி இல்ல.. நிறைய வாட்டி..இப்போ ஒரு ஆம்பிளைக் கிட்ட என்ன வேணும்ன்னு எனக்குத் தெரியும் " என்று என் அருகில் வந்தாள்.

நெற்றி முடியினைக் கையில் பிடித்தப்படி என் விழி பார்த்துச் சொன்னாள்.
"தைரியம்டா.. அது உங்க எவன்கிட்டயும் இல்லடா.. இருட்டல்ல இருக்க தைரியம் வெளிச்சம் வந்தா உங்களுக்குப் போயிடுதுடா..."

என் கன்னத்தில் பளீரென்று யாரோ அறைவதுப் போலிருந்தது. அந்த விடிந்தும் விடியாதுமான இரவினில் ரஞ்சனியை அவள் உறவுக்காரர்கள் வந்து இழுத்துப் போனதும்.. அவரகளுக்குப் பயந்து ரஞ்சனியின் கை உதறி நான் புதருக்குள் போய் பம்மியதும் நினைவுக்கு வந்தது..

"என்னாச்சு?" கொஞ்சலாய் அவள் உதடுகள் என் உதடுகளின் வெகு அருகினில் இப்போது. அவள் மூச்சின் உஷ்ணம் என் முகத்தில் மோதி அறைந்தது.

"நான் போகணும் ... ராத்திரி ஒம்போது மணிக்கு அம்மா ஊருல்ல இருந்து பேசுவாங்க.. செல்போனை ரூம்ல்லயே விட்டுட்டு வந்துட்டேன்" என்ற படி திரும்பி பார்க்காமல் நடந்தேன்.

Thursday, September 21, 2006

கவி 23:நான் நடந்து வந்த காதல் வீதி












என்னோடு நீ நடந்த வீதிகளில்
இப்போதும் நடக்கிறோம்
நானும் என் தனிமையும்

யாரும் பார்க்காத
கணப் பொழுதுகளில்
குனிந்துப் பொறுக்குகிறேன்
எப்போதோ எனக்காக
அந்த வீதியில் நீ வீசிச் சென்ற
காதல் பார்வைகளை...

வீதியின் ஓரங்களில்
பூத்திருக்கும் போகன்வில்லாப் பூக்களில்
நீ மிச்சம் வைத்துப் போனப்
புன்னகைகளைப் பத்திரமாய் சேமிக்கிறேன்..

உனக்குப் பிடித்த
அந்த மரத்தடி இருக்கையில்
ஓரிரு நிமிடங்கள் சாய்கிறேன்..
உன் நெருக்கத்தின்
புழுக்கத்தை
உள்ளுக்குள் தேக்கியபடி..

என் தோளில்
உன் முகமும்
உன் மடியில்
என் தலையும்..
அந்த நிமிடங்களை
மறுபடியும் வாழ முயற்சித்து
முடியாமல் எழுந்து நடக்கிறேன்..

முகத்தில் மோதும் காற்றில்
முன்னர் நீ சொன்ன
சின்ன சின்ன ரகசியங்கள்
கலந்து இருப்பதில்
கண்கள் தானாய் ஈரமாகின்றன...

அந்த மரத்தின் பின்னால்
என் முதல் முத்தத்திற்கு
வெட்கமாய் நீ சொன்ன ச்சீ
வண்டுகளின் மொழியில்
இன்னும் மறுஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

அந்த மரத்தின்
இலைகள் இன்னும்
சிவந்துப் போகின்றன..
அதன் அடியில்
உன் நினைவுகளோடு
நான் ஒதுங்கி நிற்கும் பொழுதுகளில்..

சாலையின் பெயர் பலகையில்
மங்கிய நிலையில் உன் பெயர்
மழையில் கரைந்த என் பெயரைத்
தேடி தேடித் தொலைகிறேன்

வீதியின் திருப்பங்களில்
மீண்டும் ஒரு முறை
மின்னலாய் நீ வருவாயென
எனக்கு நானே சொல்லும்
பொய்களில் காத்திருக்கிறேன்

ஆகாயம் உருகி
மழையாகி எனக்கெனப் பொழிய
வீதியில் காதல் வழிய
என் விரல்களின் இடையே
உனக்கென இடைவெளி விட்டு
மெல்ல நடக்கிறேன்...
நான் நடந்து வந்த காதல் வீதி நோக்கி

Monday, September 11, 2006

கவி 22:வான் தொடும் பொழுது

இன்றும் என் மீது மிச்சமிருக்கிறது
இன்னும் அந்த வலி என்னில் இருக்கிறது
மரணத்தோடு ஒரு சந்திப்பு
மௌனங்களின் ஆர்ப்பரிப்பு

எட்டிப் பிடிக்கும் தூரத்தில்
என்னருகே மரணம்
எல்லாம் முடிந்தது
என்னும் மரணத்தின் ஆணவம்

அறுத்தெறிந்து ஓடினேன்
அழுகையின் ஊடே ஓடினேன்
நிற்கவும் நேரமில்லை
நின்றாலும் ஆவது ஏதுமில்லை

பூக்களின் புன்னகை
பாதையின் ஓரமாய்
கண்ணாடி ஓவியங்கள்
காயங்களின் தோரணமாய்
பொக்கிஷ்மாய் நினைத்ததெல்லாம்
பொருட்டாய் தோன்றவில்லை

இன்னொருத்தனின் வலி
இதயம் தொடவில்லை
இன்னொரு குரல்
இம்மியளவும் என்னை நிறுத்தவில்லை

சாவின் சங்கிலிக்கு
சிக்கக் கூடாது
சாத்தான்கள் சத்தம்
சாட்டை சுழற்றியது

என் கைகளில்
என் உயிரின் சுவாசம்
பிழைத்துக் கொண்டேன்
பிறருக்கு இல்லாத பாக்கியம்
பிழைத்துக் கொண்டேன்

உயரங்கள் மிஞ்சவில்லை
உயிர் மட்டும் மிஞ்சியது..
உடைந்தக் கண்ணாடியில்
உடைந்த என் உருவம்

என் அடையாளம்
எனக்குத் தெரியவில்லை
என் முகம்
எனக்குப் பிடிக்கவில்லை

என்னை முத்தமிட வந்து
என்னைத் தேடிய மரணமே
என்னைக் காணாது
எத்தனைக் கோபம் உனக்கு?

அழுத கண்ணீர் காயந்துவிட்டது
அழிந்த உயிர்கள் ???

இன்று காலை இந்து நாளிதழில் 9/11 உலக வியாபார மையம் இடிப்பட்டப் போது அதில் சிக்கி உயிர் பிழைத்த ஒருவரது பேட்டியினைப் பிரசுரித்து இருந்தார்கள். கண்ணருக்கே பலரின் மரணம் கண்டு அதில் தான் பிழைத்ததுக் குறித்து அந்த மனிதனால் மகிழ்ச்சி கொள்ளமுடியவில்லை.. ஒரு வித குற்றயுணர்ச்சியினால் அந்த மனிதர் தவிக்கிறார். அந்த தாக்கத்தின் வெளிப்பாடு தான் இந்தக் கவிதை.