Monday, January 09, 2006

கதை5: நட்பென்னும் தீவினிலே - பகுதி 1

1999 பி.எஸ்.சி இறுதி ஆண்டு... செமஸ்டர் தேர்வுக்கு இன்னும் மூணு நாள் பாக்கி இருந்துச்சு. வீட்டு மொட்டை மாடியிலே ரியல் அனலிஸ் பேப்ப்ருக்கு மல்லுக் கட்டி படிச்சுகிட்டு இருக்கேன்.
டர்ன்னு பைக் டையர் தேயுற சவுண்ட்... மாடியிலே இருந்து கீழேப் பார்த்தா... அமீது பையன் யமஹாவில்ல உறுமிகிட்டு நிக்குறான்... ஆகா... மாப்பிள்ளை செமஸ்டர் கொஸ்டின் பேப்பரை உஷார் பண்ணிட்டான் போல.. அதான் பாசத்தோடக் கொடுக்க வந்துருக்கான்னு நான் அடிச்சுப் புரண்டு மாடியிலே இருந்து இறங்கி வந்தேன்.
நான் படிப்பிலே ரொம்ப சூரன் எல்லாம் இல்லை... அதுக்குன்னு ம்க்கும் இல்லை. அமீது புலி... கணக்குல்ல பாயும் புலி... எங்களூக்கு எல்லாம் சொல்லித் தருவான். ஆளு அஜித் மாதிரி கலக்கல் கலரு...கமல் மாதிரி சகலகலாவல்லவன்.... மொத்ததுல்ல ரஜினி மாதிரி ஒரு சூப்பர் ஸ்டார் அவன்...

"என்னடா அமீது?... இங்கே... இந்நேரம்....இது நீ படிக்கிற நேரமாச்சே?

"ஒரு முக்கியமான விஷயம்...உன் உதவி தேவைப்படுது..."
" என் ...ன...?"
" நானும் பானுவும் லவ் பண்ற விஷயம் உனக்கு தெரியும் இல்ல"
"ஆமாத்... தெரியும்... "
"அதுல்ல.. இப்போ பிரச்சனையாயிடுச்சு... விவரம் பானு வீட்டுல்ல தெரிஞ்சுப் போச்சு... அவங்க வீட்டுல்ல ஒத்துக்கல்ல... வேற மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டாங்க"
"இப்போ என்னப் பண்ணப்போறீங்க?"
"மும்பையிலே என் பிரண்ட் ஒருத்தன் இருக்கான்... அங்கே போயிட்டாப் பாதி பிரச்சனைத் தீர்ந்த மாதிரி... அங்கேப் போகணும்"
" ஊரை விட்டு ஓடிப் போறீங்களா? "
" வேற வழி தெரியல்ல"
"இதுக்குப் பானு ஒத்துகிட்டாளா?"
"ரெண்டுப் பேருக்கும் வேற வழி இல்ல"
"சரி சரி...நான் என்னப் பண்ணனும்"
"ஒரு ரெண்டாயிரம் ரூபா பணம் வேணும்.. கிடைக்குமா?"
"என் கிட்டப் பணமெல்லாம் இல்ல.... " சொல்லிகிட்டு இருக்கும் போதே கழுத்துல்ல கிடந்த செயின் கையிலேத் தடுத்துச்சு... யோசிக்காம செயினைக் கழட்டி அவன் கையிலேக் கொடுத்தேன்.
"வச்சிக்க.. இது விலை கரெக்ட்டா தெரியாது..ஆனா என் கிட்ட இருக்கறது இது தான்டா.."
அமீது கண்கள் கலங்கிப் போச்சு... அவன் யமஹா போற வரைக்கும் தெருமுனையைப் பார்த்துகிட்டே நின்னேன்.

செமஸ்டர் அன்னிக்குக் காலையிலே... தேர்வை விட அமீது-பானு மேட்டர் தான் அதிகம் எல்லோராலும் ஆர்வமாய் விசாரிக்கப்பட்டது.

மொத்தக் கூட்டமும் எங்களைச் சந்தேகக் கண்ணோடு தான் பார்த்துச்சு....

"உண்மையைச் சொல்லுங்க.. அமீது உங்ககிட்டேக் கூடவா எதுவும் சொல்லல்ல... நம்ப முடியலியே"
"மூணு நாளா... வீட்டை விடு வெளியேவே வர்றல்ல... நானே பரீட்சை ஜூரத்துல்ல கிடந்தேன்..." இது எங்கள் பங்காளி மனோகரின் வாக்குமூலம்.
"அமீதை நண்பன்னு சொல்லுறதுக்கே வெக்கமா இருக்கு... எங்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லல்ல... இன்னிக்குக் காலையிலேத் தான் எனக்கு விஷயம் தெரியும்" சத்தியம் செய்த்து எங்கள் கூட்டாளி ஜெரால்ட்.
"அமீது இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்ல" ரொம்ப யதார்த்தமாப் பல்டி அடிச்சது நான் தான்....

சந்தேக விட்டு வளையத்தை மெதுவா உடைச்சோம்... மூணு மாசம் ஓடிப் போச்சு.... நான்..ஜெரால்ட்...மனோ... மூணுப் பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்கறதை வேணும்னு தவிர்த்தோம்....யதச்சையா கல்லூரிக்கு மார்க் லிஸ்ட் வாங்கப் போனப்போ மூணு பேரும் பார்த்துகிட்டோம். அப்போ ஜெராத் தான் முதல்ல ஆரம்பிச்சான்.

"அமீது என் கிட்டேச் சொல்லிட்டுத் தான் போனான்... பணம் கேட்டான்... இல்ல என் வாட்ச்சை கொடுத்தேன்...அப்புறம் செமஸ்டர் டைம்... எதுக்கு வீணா அதைப் பத்திப் பேசிகிட்டுன்னு சொல்லல்ல சாரி டா..."
" சாரி எல்லாம் வேண்டாம்... நான் என் மோதிரத்தைக் கொடுத்தேன்..... மனோச் சொல்லறதுக்குள்ளே நான் செயின் கொடுத்த விவரத்தைச் சொன்னேன்.
மூணு பேருக்கும் சிரிப்பு வந்துடுச்சு....
"வீட்டுல்ல செயின், மோதிரத்துக்கு என்னச் சொன்னிங்க..." ஜெராக் கேட்டான்.
"வேற என்னக் காணும்ன்னு தான் சொன்னோம்...." " அடப் பாவிகளா... நீங்களுமா?"
சிரிப்பு தொடர்ந்தது.
"நமக்கு எல்லாம் ஒரு பொண்ணோடப் பேசவே வெடவெடங்கும்.. "
"அவன் ஹிரோடா... ஒரு பொண்ணைத் தன் பின்னாடி வர வெச்சுட்டான்..."
"அவன் கில்லாடி" மாத்தி மாத்தி அமீதைப் புகழ்ந்தோம்.
அமீதும் பானும் சந்தோஷமா வாழ மனசார வாழ்த்தினோம். அப்புறம் நான் மேல எம்.பி.ஏ படிக்க சென்னைக்கும்.... மனோ எம்.சி.ஏ படிக்க ம்துரைக்கும்... ஜெரா ஒரு கம்பெனியிலே வேலைக் கிடச்சு பெங்களூர்க்கும் போயிட்டோம்.
வருஷத்துக்கு ஒரு தடவையோ... இல்ல 2 தடவையோ ஊர்ல்லப் பார்த்தாப் பெரிய விஷயம்.
அமீது குடும்பமும் சரி... பானு குடும்பமும் சரி... இந்த சம்பவத்துக்குப் பிறகு ஊரை விட்டுப் போயிட்டாங்க.. எந்த தகவலும் இல்ல...
படிப்பு முடிஞ்சு நல்ல வேலையும் கிடைச்சுது... அப்படியே வாழ்க்கை வேகமாப் போக ஆரம்பிச்சுது...
ஜெரா இப்போ அமெரிக்கால்ல இருக்கான்... கல்யாணம் ஆயிடுச்சு... ஒரு குட்டிப் பொண்ணு இருக்கா,,
மனோவுக்கு கல்யாணம் முடிவாகி இருக்கு... அவன் நிச்சயதார்த்துல்ல நாங்க மூணுப் பேரும் மறுபடியும் சந்திச்சோம்...
அப்போ அமீது பத்தி பேச்சுத் திரும்பிச்சு...

"மாப்பி அமீதை எப்படியாவது என் கல்யாணத்துக்குக் கூப்பிடணும்டா"
"என் கல்யாணத்துக்கு மிஸ் ஆயிடுச்சு... இப்போ இவன் கல்யாணத்துக்குக் கண்டிப்பாக் கூப்பிடணும்" ஜெரா சேர்ந்துக் கொண்டான். ஜெரா மூணு மாச விடுமுறையிலே வந்து இருந்தான். மனோ கல்யாணம் முடிஞ்சுத் தான் அமெரிக்காத் திரும்புவதாய் இருந்தான்.

"மீது மும்பை போய் 7 வருஷம் ஆச்சு... இப்போ அவனுக்கு பானுவுக்கும் அமீது ஸ்பீடுக்கு குறைஞ்ச பட்சம்... மூணு இல்ல நாலு குழந்தை இருக்கும்...." இது மனோ.
"அவனும் அவன் குடும்பமும் வந்தாக் கல்யாண வீடு களைக் கட்டும்னு சொல்லு"
"நாம் அமீதைத் தேடிக் கண்டுபிடிப்போம்...."

அதுக்கு ஏத்தா மாதிரி எனக்கும் அலுவலக் வேலையா மும்பைப் போற வாய்ப்பு ஒண்ணும் கிடைச்சுது..


இந்தக் கதையின் இரண்டாம் பாகம் படிக்க இங்கே சொடுக்கவும்நட்பென்னும் தீவினிலே - பகுதி 2

9 comments:

Anonymous said...

சீக்கிரமா அடுத்த பதிவப் போடுங்க தேவ். ஆர்வம் தாங்கமுடியலை.

ரூபா. said...

வாழ்த்துக்கள் தேவ்.
அடுத்த தொடரையும் ஆரம்பித்து விட்டீர்கள்.

நண்பர்களின் உலகமே வித்தியாசமானது.
அவர்களின் பழைய ஹீரோவை தேடுகின்றார்கள். நிச்சயம் அவன், இவர் எதிர்பார்த்த படி இருக்க மாட்டான். காரணம்....."மனிதன் ஒன்றை நினைத்தால் இறைவன் ஒன்றை நினைப்பானாம்"!

கீதா said...

அட நீங்களும் பி எஸ்ஸி கணிதமா? அதும் 96-99 பாட்ச் ஆ. :) நானும்தான். ரியல் அனாலிஸிஸ் கூட போராட்டம்தான். :)

ரொம்ப நல்ல எழுத்து நடை..படிக்கிறதே தெரியலை..:)

உங்கள் நட்பு வாழ வாழ்த்துக்கள். (நடுவில என்ன நிகழ்ந்திருந்தாலும் )

கீதா

தேவ் | Dev said...

நண்பர்களே... உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.... கொஞ்சம் பொறுங்கள்... நடந்ததை விடுமுறை முடித்து வந்து சொல்லுகிறேன்....

//"மனிதன் ஒன்றை நினைத்தால் இறைவன் ஒன்றை நினைப்பானாம்// - ரூபா மிக்கச் சரி.

//அட நீங்களும் பி எஸ்ஸி கணிதமா? அதும் 96-99 பாட்ச் ஆ. :) நானும்தான். ரியல் அனாலிஸிஸ் கூட போராட்டம்தான். :)// - ஆஹா கேட்கவே சந்தோஷமா இருக்கு... நீங்களும் நம்ம கணிதக் கூட்டமா.... வாங்க... வாங்க...

.:: மை ஃபிரண்ட் ::. said...

நல்லா கதை எழுதுறீங்க. இப்ப நன் உங்க தீவிர ரசிகை ஆயிட்டேன். :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

நல்லா கதை எழுதுறீங்க. இப்ப நன் உங்க தீவிர ரசிகை ஆயிட்டேன். :-)

தேவ் | Dev said...

//நல்லா கதை எழுதுறீங்க. இப்ப நன் உங்க தீவிர ரசிகை ஆயிட்டேன். :-)//

நன்றி மை பிரண்ட்

பாலராஜன்கீதா said...

//ஆஹா கேட்கவே சந்தோஷமா இருக்கு... நீங்களும் நம்ம கணிதக் கூட்டமா.... வாங்க... வாங்க... //

எங்க வீட்ல உடன்பிறப்புகள் மூவரும் முதுநிலைக்கணிதம் - ஆனால் வருடமெல்லாம் சொல்ல மாட்டேன்
:-)
கடினமாக இருந்தது முறையே Theory of Elasticity, Fluid Dynamics, Complex Analysis

சேதுக்கரசி said...

உள்ளேன் ஐயா :-) உங்க கதை சுடப்பட்ட்டு அன்புடன் குழுமத்தில் வந்தப்பவே படிச்சிட்டேன்.. இங்கே ஒரு அட்டென்டன்ஸ் மட்டும்..