Wednesday, December 14, 2005

கதை3 : நானும் என் கவிதையும் - பாகம் 3

பாகம் 1 | பாகம் 2

"அப்புறம் மாப்பிள்ளே.."
 நான் மெதுவா என் கலாய்ச்சல் படலத்தை ஆரம்பிக்கத் தயார் ஆனேன். 

"ஒரு முக்கியமான் வேலை இருக்கு என் கூட வரமுடியுமா... ம்கூம்.. நீ என் கூட கண்டிப்பா வர்ற...வா" என்று என் கையைப் பிடித்து இழுத்துகிட்டுப் போனான் மகேஷ். வெளியே போய் நின்ன பைக்கை கிளப்பினான். பின்னாலே நான் உட்கார்ந்துகிட்டேன். காத்து முகத்திலே மோதி அறையுது. மகேஷ் காக்க..காக்க... படத்துல்ல வ்ர்ற ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளாம்.. பாட்டை ஹம் பண்ணிகிட்டே வந்தான். 

அப்புறம் மாப்பி..பொண்ணைப் பார்த்தியா.. இல்ல அப்பா பார்த்தாப் போதும்னு இருந்துட்டியா?"ன்னு மெதுவா வம்பை ஆரம்பிச்சேன்.

"மச்சான் இது என்னப் பேச்சு .. நான் பார்த்தப் பொண்ணைத் தான் அப்பா ஒ.கே. பண்ணார்ப்பா"

முதல் பந்துல்லேயே என் விக்கெட் விழுந்த எண்ணம் உண்டானது. சுதாரித்து அடுத்த கொக்கியைப் போட்டேன். "ஓ!! பொண்ணுப் பார்த்து உனக்கும் பிடிச்சு உங்க அப்பாவுக்கும் பிடிச்சு ஓ.கே ஆயிடுச்சு கரெக்டா"

"அட விவரம் இல்லாதவன் மாதிரி பேசுற.. நீ சென்னையிலே தானேப் பொறந்து வளந்த.. மச்சான்.. இது லவ் மெரேஜ்டா... புரியுதா. அஞ்சு வருஷமா ஓடுது.. ஏன்டா உனக்கு சென்னையிலே ஒரு கேர்ள் பிரண்ட் கூடவா இல்ல... அங்கே எல்லாம் அஞ்சு வயசு பையன் கூட அஞ்சு.. ஆறு கேர்ள் பிரண்ட்ஸ் புடிச்சுடுறாங்களாம் " என்றான். 

நான் மொத்தமாய் கவிழ்ந்து நின்றேன். உனக்கு இது வேணும்டா ... வேணும்.. என் ஆள்காட்டி விரலை என் முகத்திற்கு நேராக நீட்டி ஒரு முறைக்கு ரெண்டு முறை எஎன்னை நானே கேட்டுகிட்டேன்.

"ஜெயா MSc வரைக்கும் படிச்சுருக்கா.. நமக்கு BScக்கு மேல அந்த கல்விக் கடல்ல நீச்சல் அடிக்க இஷ்ட்டம் இல்ல..."

ஓஹோ..பொண்ணுப் பேர் ஜெயாவா ( இவனுங்க எல்லாம் லவ் பண்ணுறானுங்க நானும் தான் UG,PG,PGDIB,NIIT ம்ம்ம்ம் பன்னாட்டு  மென்பொருள்  கம்பெனி வேற.. ஒரு மண்ணுக்கும் லாயக்கு இல்ல...இருக்கட்டும் இந்த வாட்டி இந்த கவிதையை வைச்சு அப்படியே மாலாவை மடக்கிற வேண்டியது தான்.)

"இதோ இந்த மோதிரம்.. அவளுக்காக நான் காதலனா வாங்குன பரிசு... அதான் கல்யாணத்துக்கு முன்னாடி அவ விரல்ல இதை ஒரு காதலனாப் போட்டு அழகுப் பார்க்கணும்...அதான் இப்போ போயிட்டு இருக்கோம்.."

எனக்கு வயிறு எரிந்தது.. அட பாவிகளா.. கடைசியா இந்த வேலையும் என்னிய பாக்க வச்சிட்டிங்களாடா.. கடுப்பில் அமைதியா உட்கார்ந்திருந்தேன். ஒரு மாதிரி என்னைத் தேத்திகிட்டு அவன் கிட்டே " ஏன் மாப்பிள்ளை.. வந்ததிலந்து பாக்குறேன்.. அமிர்தலிங்கத்தை காணுமே? கடையிலே வேலை அதிகமோ" என்று கேட்டேன்.

"ஓ சார் உன் சிறு வயசுக் கூட்டாளி இல்ல... அவன் அவங்க அண்ணன் கூட சேந்து கவுந்தப்பாடி பக்கம் தனி கடை வச்சு ரெண்டு வருஷம் ஆச்சு. அவனுக்கு கல்யாணம் எல்லாம் ஆயிடுச்சு. நாளைக்கு கல்யாணத்துக்குக் கண்டிப்பா வருவான்.. அப்போ பாரு.."

வாழ்க்கை எவ்வளவு வேகமாப் போயிகிட்டு இருக்கு... ம்ம்ம் கையாலெ சட்டைப் பையில் இருந்த காகித்தை ஒரு தடவைத் தொட்டுப் பார்த்துகிட்டேன். மாலாவைப் பத்தி மகேஷ் கிட்டே கேட்டுர வேண்டியது தான்.
பைக் கோயில் பக்கம் போய் நின்னுச்சு.
"மச்சான் நீயும் வர்றியா.. என் ஜெயாவை உனக்கு அறிமுகம் பண்ணி வக்கிறேன்."
"எப்படியும் நாளைக்கி காலையிலே அறிமுகம் ஆகத்தானே போறா..இப்போ நீ போ... இன்னிக்குக் காதலியா இருக்க வரைக்கும் இனிமை எல்லாம்... நாளைக்கு மனைவியான பிறகு அவ்வளவு தான்.. SO U GO AND ENJOY " பெரிய மனுஷன் டயலாக் எல்லாம் அள்ளி விட்டேன். 

என்னவோ போங்க. எதிர் பொட்டிக் கடையிலே போயி சிகரெட் வாங்கி பத்த வச்சுட்டு அங்கே..போற வர்ற பொண்ணுங்கள்ல்ல என் மாலா இருக்கமாட்டாளான்னு நோட்டம் பாக்க ஆரம்பிச்சேன். சில பெண்கள் விரும்பிப் பார்த்தாங்க்.. ஆனா பலப் பெண்கள் நான் இருந்த பக்கம் திரும்பியேப் பாக்கல்ல. அரை மணி ஆச்சு.. முக்கா மணி ஆச்சு... ஒரு மணி ஆச்சு... என் உதட்டுல்ல ஆறாவது சிகரெட் புகைந்து ஓய்ந்தது...கடைக்காரர் வேற சினேகம் ஆயிட்டாரு. இருக்காதாப் பின்னே...அரைப் பாக்கெட் சிகரெட் வாங்கியிருக்கோம்ல்ல. 7வது சிகரெட்டைப் பத்த வைக்கப் போறேன். தோள்ல்ல ஒரு கை வந்து தட்டுது..புண்ணியவான் மகேஷ் தான். ஓரு வழியாக் கடலைக் கச்சேரியை முடிச்சுட்டுத் திரும்பி வந்துட்டான்.

'நாளையிலே இருந்து ஆயுசுக்கும் உன் வீட்டுல்ல ஜெயா டி.வி தான்.. இன்னிக்கும் இவ்வளவு நேரம் வறுக்கணுமா... எப்படியோ ஒரு வழியா வந்தியே.. போலாமா.." 7வது சிகரெட் புகையை வட்டம் வட்டமா விட்டுகிட்டு பைக் பார்த்து நடந்தேன்.

"மச்சான் ஒரு நிமிஷம் நில்டா..." நானும் நின்றேன்.

"என் ஜெயாவுக்கு உன்னைப் பார்க்கணுமாம்... இதோ வந்து இருக்காப் பாரு..."
நான் அவசரமா வாயிலிருந்து சிகரெட்டைக் கீழேப் போட்டுட்டுத் திரும்புனேன். என் முகத்தில் குறைஞ்சது ஒரு லிட்டர் அசடு வழிஞ்சு இருக்கும். ஒரு மாதிரியாச் சிரிச்சு... அவன் ஜெயாவுக்கு ஹாய் சொல்லுறதா இல்ல வணக்கம் சொல்லுறதான்னு குழம்பி எதுமே சொல்லாம மறுபடியும் ஒரு சிரிப்பு சிரிச்சு வச்சேன். 

அவ நல்ல அழகு. இந்த கை எடுத்து கும்பிடுற டைப்ன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி பொண்ணு. பையனுக்கு செம மச்சம். இவன் கலருக்கு அவ கலர்... விடுங்க அதெல்லாம் எனக்கு வேண்டாத வேலை... நம்ம மகேஷ் நல்லா இருக்கட்டும். அப்படியே யோசிச்சுகிட்டே நிக்கிறேன். கடைசியிலே அவன் ஜெயாவே எனக்கு ஹாய் சொல்லிட்டா.

"என்னை உங்களுக்குத் தெரியல்லியா..."ன்னு கேட்டாள். என் விழிகள் விரிந்தன.

ரொம்ப வருஷம் ஆச்சு நீங்க சம்மர் லீவுக்கு எங்க ஊருக்கு வந்து.. எப்படி இருக்கீங்க?
நீங்களும் இவங்க கடை அமிர்தலிங்கமும்.. சேர்ந்து பண்ண லூட்டி எல்லாம் உங்களுக்கு இப்போ ஞாபகம் இருக்கா?? போகட்டும் இந்த கவிதையாவது ஞாபகம் வருதா!!!

பொண்ணு பேர் மாலா.....
அவ ஜடை குரங்கு வாலா....
அவ கண்ணு கிரிக்கெட் பாலா..
அவங்க அப்பா பெரிய ஆளா...
ஜெயா கலகலன்னுச் சிரிச்சா.

"ம்ம் இந்த மெட்ராஸ்காரங்களே இப்படி தான் எல்லாத்தையும் மறந்துப் போயிடுறாங்கப்பா எனக்கு எதுவுமே மறக்கல்ல.. இன்னும் ஞாபகம் இருக்கு அதான் நீங்க வந்து இருக்கீங்கன்னு சொன்ன உடனேப் பாக்கணும்னு சொல்லி வந்தேன்.. ஆளே மாறிட்டீங்க.. சின்ன வயசுல்ல எவ்வளவு வால்த்தனம் பண்ணுவீங்க இப்போ அப்படியே அமைதியாட்டீங்க"
எனக்குச் சுத்தமாப் பேச்சே வர்றல்ல. சிரிப்பு கூட தவணையிலேத் தான் வந்துப் போச்சு.

"ஆமா இப்போவும் கவிதை எல்லாம் எழுதிறீங்களாமே மகேஷ் சொன்னார்..எனக்கு கவிதைன்னா ரொம்பப் பிடிக்கும்.. எதாவது கவிதை இருந்தாக் கொடுங்க.. படிக்கிறேன்"
என் கை சட்டைப் பைக்குப் போய் தொட்டுப் பார்த்து கொண்டது

"இப்போ எதுவும் இல்லை.. அப்புறம் கட்டாயமாத் தர்றேன்" முகத்தில் ஒரு அவஸ்தையான புன்னகையோடு சொன்னேன்.

"சரிங்க டைம் ஆச்சு வீட்டுல்லத் தேடப் போறாங்க. இத்தனை வருஷம் கழிச்சு உங்களைச் சந்திச்சதுல்ல ரொம்ப சந்தோஷம். நாளைக்குக் காலையிலே பாக்கலாம்" அவனுடைய ஜெயா பை சொல்லிட்டுப் போனா. 
அவப் போன பிறகு இவன் கிட்டேக் கேட்டேன்.
"பொண்ணோட முழு பேர் என்ன?" 

"ஜெய மாளவிக்கா, எனக்கு ஜெயா.. வீட்டுல்ல மாலா" அதைக் கேட்டதும் எனக்குள் எதோ உடைந்து விழுந்தது.

"மாப்பி... நீ முன்னாலே கிளம்பு நான் பின்னாலே வர்றேன்."

"டேய் எப்படி வருவே...?

"நான் பஸ் பிடிச்சு வந்துருவேன்...இப்போ எனக்குக் கோயிலுக்குப் போய் சாமி கும்பிடணும் போல இருக்கு.. அப்படியே கொஞ்ச நேரம் கோயில்ல உட்கார்ந்துட்டு வரணும் போல இருக்குடா..."

"ஓஹோ ஐயாவுக்கும் கல்யாண ஆசை வந்துடுச்சா. நல்லா வேண்டிக்க.... சீக்கிரமா வந்துடுடா"

சட்டைப் பையில் கவிதைப் பத்திரமா இருந்தது.. அந்த இடம் லேசா வலிச்சது...
பொட்டிக் கடைகாரரிடம்
 "இங்கே ஓயின் ஷாப்க்கு எந்த பக்கமாப் போகணும்? " என்று வழி கேட்டேன்.

(இந்தப் பதிவு முற்று பெறுகிறது.)

12 comments:

Yagna said...

அடப்பாவமே தேவ்'னா தேவதாஸா? இன்னும் அடுத்த பகுதிவேற உண்டா?

சந்தோஷ் aka Santhosh said...

தேவ்,
கலக்கறிங்க போங்க. நல்லா எழுதறிங்க. சரி பொது வாழ்கைல இது எல்லாம் சகஜமப்பான்னு விடுங்க. அப்பறம் சரக்கு அடிச்சிட்டு காலையில் கல்யாணத்திற்கு போனிங்கலா இல்ல மப்பு தொளியாம போகவில்லையா?

தேவ் | Dev said...

சந்தோஷ், பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி... இதர பதிவுகளையும் படித்து கருத்துப் பதியுங்கள். ம்ம் ஒவ்வொரு கல்யாணத்திலும் இப்படி ஒரு பின்னிகழ்வு உண்டான்னு எனக்குத் தெரியாது.... இது கொஞ்சம் கற்பனைக் கலந்து எழுதப் பட்டப் பதிவு. பதிந்தது மட்டுமே என் பங்கு....

தேவ் | Dev said...

நண்பர் யக்னா...நான் தேவ்... தேவ் மட்டுமே... இத்தோடு இந்த பதிவு முற்று பெறுகிறது... இதர பதிவுகளையும் படித்து கருத்துப் பதியுங்கள்.

ரூபா. said...

நன்றி தேவ்.

என்ன கதாநாயகியைக் காணவில்லை என்று பார்த்தேன். கதை அப்படி போகுதோ.
தொடருங்கள்.

தேவ் | Dev said...

ரூபா - இத்தோடு இந்த பதிவு முற்று பெறுகிறது... அடுத்த பதிவில் இன்னொரு நிகழ்வு இடம் பெறும்...

ரூபா. said...

முற்றும் சொல்லி விட்டீர்களா தேவ்!
நகைச்சுவையாக ஆரம்பித்து, இதுதான் என்று சொல்ல முடியாத முடிவில் முற்றும் சொல்லிவிட்டீர்கள்.

வாழ்த்துக்கள் தேவ்.

நளாயினி said...

"சட்டைப் பையில் கவிதைப் பத்திரமா இருந்தது.. அந்த இடம் லேசா வலிச்சது...


........m......

.:: மை ஃபிரண்ட் ::. said...

அப்பப்பா.. தேவ், நீங்க சாதாரண ஆளே இல்லை. ஒவ்வொன்றும் அருமை. அதிலேயும் நீங்க பன்ற காமெடியும் அருமை.

Anonymous said...

இப்படி ஒரு திருப்பம் வரும் என்று நினைக்கவே இல்லை.பாவம்.கவிதை எல்லாம் waste.தேவ்,கதை நன்றாக இருந்தது.ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும் ஒரு பக்கம் சிரிப்பு வருகின்றது.நல்ல நகைச்சுவை கலந்த கதை!

தேவ் | Dev said...

//அப்பப்பா.. தேவ், நீங்க சாதாரண ஆளே இல்லை. ஒவ்வொன்றும் அருமை. அதிலேயும் நீங்க பன்ற காமெடியும் அருமை. //

இவ்வளவு புகழுறீங்க ரொம்ப பயமா இருக்குங்க...:)

தேவ் | Dev said...

//இப்படி ஒரு திருப்பம் வரும் என்று நினைக்கவே இல்லை.பாவம்.கவிதை எல்லாம் waste.தேவ்,கதை நன்றாக இருந்தது.ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும் ஒரு பக்கம் சிரிப்பு வருகின்றது.நல்ல நகைச்சுவை கலந்த கதை! //

என்னங்க பண்றது வாழ்க்கையே அப்படித்தானே இருக்குது காமெடி நாம கலந்துக்க வேண்டியது தான். நன்றி துர்கா