Tuesday, December 13, 2005

கதை3: நானும் என் கவிதையும் - பாகம் 2

ரயில் ஈரோடு நோக்கிக் கிளம்பிச்சு.. நான் Upper berthல்ல ஏறி படுத்துகிட்டேன். கூட வந்தவங்களல்ல யாரும் ரயில் சினேகம் பிடிக்கிற மாதிரி இல்ல.(அதுல்ல எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்).மல்லாக்கப் படுத்துகிட்டேன். கையிலே ஒரு குமுதம் வேற. பக்கத்துக்குப் பக்கம் புதுமை. படத்தைப் பார்த்துகிட்டே பக்கத்தைப் புரட்டுறேன். மீனா, ரோஜா எல்லாம் டாப்ல்ல இருந்த நேரம். சிம்ரன் புதுமுகமா அறிமுகமான படத்தை நடுப்பக்கத்திலேப் போட்டு இருந்தான். கொஞ்ச நேரத்துக்கு மாலா மேல இருந்தக் கவனம் எல்லாம் சிம்ரன் பக்கம் திரும்பிடுச்சு. தூக்கம் லேசாக் கண்ணை இழுத்துப் போட்டுச்சு..அப்படியேத் தூங்கிப் போயிட்டேன். பொழுது விடியும் போது ரயில் காவேரி ஆத்து பாலத்து மேலப் போயிட்டு இருக்கு. அடுத்த அஞ்சு நிமிஷத்துல்ல ஈரோடு சந்திப்பு பெயர் பலகை கண்ணுல்லப் பட்டுடும். அப்போ காவிரி ஆத்துல்ல அதிகம் தண்ணி இல்ல. ஆத்துக்குள்ளே அங்க அங்க சின்னசின்னதா ஒரு நாலு அஞ்சு சேப்பாக்கங்கள் கண்ணுக்குத் தெரிஞ்சது. அதுல்ல வருங்கால சச்சின், ஷேவாக் எல்லாம் கால்சட்டைப் போட்டுகிட்டு மேல்சட்டை போடாம கையிலே கிரிக்கெட் மட்டையோடப் பட்டையைக் கிளப்பிக் கிட்டு இருந்தாங்க. ஸ்டேஷன் நெருங்கவும் டக்குன்னு நம்ம முகயழகு ஞாபகம் வந்துடுச்சு. ஆஹா ஏற்கனவே பரட்டைன்னு பேர் வாங்குன தலைக்குச் சொந்தக்காரன் நான். அவசரமா சீப்பு எடுத்துகிட்டு கண்ணாடித் தேடிகிட்டு ஓடுனேன். என் நேரம் என்னை மாதிரியே 7- 8 பேர் கண்ணாடி முன்னாடி கியூ கட்டி நிக்க கடுப்பாகிப் போயிட்டேன். தலையைக் கலைச்சு விட்டுட்டு அதுவும் ஒரு மாதிரி ஸ்டைல் தான்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டே ஈரோடு ரயில் நிலைய வாசல் வரைக்கும் வந்து சேர்ந்தேன். ஈரோடு அதிகம் மாறவில்லை. ஸ்டேஷனுக்கு எதிரெ புதுசா ஒரு தியேட்டர் கட்டியிருந்தது. ஒரு பிரபலமான நடிகர் விலைக்கு வாங்கிக் கட்டியிருக்கதா எங்களை கூப்பிட வந்திருந்த மாமா பையன் "மாப்பிள்ளை" மகேஷ் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். மாமா புதுசா லேன்சர் கார் வாங்கி இருந்ததாக் கேள்விப்பட்டேன். மளிகை கடையிலெ நல்ல வருமானம். ஆனா எங்களை கூட்டிட்டுப் போக மகேஷ் பழைய ஓட்டை அம்பாசிடரைத் தான் கொண்டு வந்திருந்தான். கஞ்ச மாமன் இன்னும் மாறல்ல. முன் சீட்டிலே ஏறி மகேஷ் பக்கத்துல்ல உட்கார்ந்துகிட்டேன். மாப்பிள்ளைக் களை மகேஷ் முகத்துல்ல தாண்டவம் ஆடிக்கிடு இருந்துச்சு. பையன் செம குஷியா இருந்தான். பின் சீட்டிலெ பெரியவங்க இருந்ததாலே அப்போதைக்கு வாய் கொடுக்க வேணாம்னு அமைதியா இருந்தேன். கண்டிப்பா அவன் கிட்டே அவன் பொண்ணுப் பாக்க போனக் கதை எல்லாம் கேட்டுக் கலாய்க்கணும் என் மனசுக்குள்ளே ஒரு தீர்மானம் போட்டுகிட்டேன். கார் கதவு வேற கழண்டு கீழே விழுந்துடுமோன்னு பயந்துகிட்டே உட்கார்ந்து இருந்தேன். நல்ல வேளை அப்படி எதுவும் எக்கு தப்பு ஆகுறதுக்குள்ளே கார் மாமா ஊருக்குள்ளேப் போயிடுச்சு. ஊருக்குள்ளேக் கார் நுழையும் போது எதிர்க்க தாவணி உடுத்துன ஒரு கிளிக் கூட்டம் வந்துச்சு... தலையைக் குனிஞ்சுப் போற மாதிரியே இருந்துச்சு.. ஆனா நல்லா கவனிச்சுப் பார்த்தாக் கண்ணை மட்டும் ஒரு ஆங்கிளாத் திருப்பிக் கார் பக்கம் லுக் விட்டுட்டுப் போறதுத் தெரிஞ்சுது. பசங்க சைட் அடிக்கறதுக்கும் பொண்ணுங்க லுக் விடுறதுக்கும் என்ன வித்தியாசம்டா சாமி. இயற்கை அளித்த இனிய வரம். அந்த வருணனை இருக்கட்டும். நம்ம கதைக்கு வருவோம். அந்த க் கிளிக் கூட்டத்துல்ல நம்ம பஞ்சவர்ணக் கிளி இருக்குமோன்னு மனசுக்குள்ளே ஒரு துடிதுடிப்பு.. ஒரு படப்படப்பு. எப்படி தெரிஞ்சுக்கறது..மகேஷ விட்டா யாரு இருக்கா விவரம் சொல்லுறதுக்கு.. கேட்போம் மெதுவாக் கேட்போம்ன்னு முடிவு பண்ணிகிட்டேன். கார் மாமா வீட்டு வாசலில் போய் நின்னுச்சு... அத்தை தான் முதல்ல கண்ணுல்ல பட்டாங்க..வாங்க வாங்கன்னு வரவேற்பு எல்லாம் பலமாத் தான் இருந்துச்சு. மாமா எங்கேயோ கல்யாண வேலையாப் போயிருக்கதா அத்தைச் சொல்லித் தெரிஞ்சுது. இவ்வளவு நேரம் நாங்கள் வருவோம் என மாமாக் காத்திருந்தாய் அத்தைச் சொன்னதில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரு சின்ன சந்தோஷம். உறவுகள் எல்லா விதத்துல்லயும் மரியாதையை எதிர்ப்பார்க்கும் என்னப் பண்ணுறது? அட மறுபடியும் நம்மக் கதைக்கு வருவோம் வாங்க. விடிஞ்சாக் கல்யாணம். வீடேப் பளபளன்னு அலங்காரத்துல்ல ஜொலிச்சுது. மாமா வீடு ரொம்ப மாறி இருந்தது. புதுசா 29'' சோனி டி.வி.. கூடத்திலே இருந்த ஊஞ்சலைக் காணும். அதுக்குப் பதிலா மூணு பெரிய சைஸ் சோபா செட் வந்திருந்தது. மாடி புதுசாக் கட்டியிருந்தாங்க. அந்த கிரகப்பிரவேசத்துக்கு நான் வர்றல்ல. வீட்டை நல்லாச் சுத்திப் பார்த்தேன். பின்னாடி தோட்டம் மட்டும் அதிகமா மாறல்ல. அதே மாமரம், தென்னை மரம், கொய்யா மரம்... எல்லாம் நல்லா வளர்ந்து இருந்துச்சு.உள்ளுக்குள்ளே என்னமோ ஒரு நல்ல உணர்வு.. அது என்னன்னுச் சரியா எழுத வர்றல்ல ஆனா ரொம்ப நல்லா இருந்துச்சு.. எனக்கு மாடியில் அறை ஒதுக்கி இருந்தார்கள். குளிச்சு முடிச்சுட்டு சாப்பிட உட்கார்ந்தேன். வகை வகையா வச்சு இருந்தாங்க இலையிலே. ஒரு கட்டு கட்டி முடிச்சேன். கண்ணு அப்படியே சொக்க ஆரம்பிச்சுது... கட்டில்லே கவுந்தடிச்சுத் தூங்க் ஆரமிச்சேன் ... தூக்கம்ன்னா தூக்கம் அப்படி ஒரு தூக்கம். நிறுத்தமே இல்லாம் நாலு மணி வரைக்கும் தூங்கி இருக்கேன்னாப் பாருங்க. நாலு மணிக்கு மகேஷ் வந்து எழுப்பி மத்தியானச் சாப்பாட்டை நீட்டினான். இந்த தடவை உஷாரா அளவோடத் தான் சாப்பிடணும்ன்னு முடிவு பண்ணேன். ஆனா விதி... எனக்கு பிடிச்ச ஐட்டமாப் போட்டுத் தாக்கியிருந்தாங்க... ம்ம் மெனுவை எல்லாம் சொல்லி உங்களை நோகடிக்க மாட்டேன். மூக்கு பிடிக்க முக்கிட்டு மறுபடியும் ஒரு குளியலைப் போட்டேன். மகேஷ் எனக்காக காத்துகிட்டு இருந்தான். இனி தான் தமாஷே ஆரம்பம் ஆகப்போகுது...

(இதன் தொடர்ச்சியை நானும் என் கவிதையும் - பகுதி 3ல் படித்துக் கருத்து பதியுங்கள் - நன்றி)

1 comment:

ரூபா. said...

அடடா! மாலா போய் சிம்ரன் வந்து விட்டார். ஹி ஹி ஹி....
நன்றாக நகர்த்திச் செல்கின்றீர்கள்.
வாழ்த்துக்கள்.