Thursday, October 26, 2006

கதை 10:கதிரேசன் கதை - பகுதி 2

கதிரேசன் கதை முதல் பாகம் படிக்க...

"ஏய் திக்குவாயா, வெளியே வாடா"

சத்தம் போட்டுக் கூப்பிட்ட கால்சட்டைச் சிறுவர் கும்பலில் ஒருத்தன் ஒரு கல்லை எடுத்து வீட்டிற்குள் விட்டெறிந்தான்.

கல் விழுந்த வேகத்தை விட அதிகமான வேகத்தோடு வீட்டிற்குள் இருந்து இன்னொரு கால்சட்டை பையன் வெளியே வந்தான். அவன் மற்ற சிறுவர்களை விட நல்ல உயரம். தமிழர் நிறத்திற்கு பொருத்தமில்லாத செவ்வண்ணத்தில் இருந்தான். தீர்க்கமான பார்வை. வேகத்திலும் இடராத நடை.

"ஆனந்தனைத் திக்குவாயன்னு கூப்பிட்டவய்ன் ஆருடா?" சிறுவன் குரலில் கம்பீரம் களைக் கட்டியது. அவன் கண்கள் சிறுவர்கள் மீது சுழன்றன.

பதில் எதுவும் வரவில்லை. "வீட்டுக்குள்ளே கல் விட்டவய்ன் ஆருடா?" அடுத்தக் கேள்விக்கும் பதில் வரவில்லை.

சற்று நேர மௌனத்திற்குப் பிறகு அவன் திரும்பி வீட்டிற்குள் நுழையப் போனான். சரியா அந்தத் தருணத்தில் அவன் மீது மழையெனக் கற்கள் வந்து விழுந்தன. அவன் முகத்தை இருகரங்களாலும் மூடிக் கொண்டான். இருந்தும் அவன் நெற்றியில் பட்டு தெறித்த கல் ஒன்று அவன் முகத்தை ரத்தச் சேறாய் அடித்தது.
கல் வீசிய சிறுவர்கள் திரும்பி ஓட ஆரம்பித்தார்கள். அவர்களில் ஒருத்தன் நின்னு சத்தமாச் சொன்னான்.

"டேய் கதிரு, எங்களுக்கும் அந்தத் திக்கு வாயனுக்கும் தான் சண்டை. நீ குறுக்கால வந்து தர்மத்துக்கு அடி வாங்கிகிட்ட.. இன்னொரு தடவ அந்தத் திக்கு வாயனுக்காக எங்க கூட மோதாதே..சில்லு சிதறிடும்டீயோ புரியுதா?

கதிர் ரத்ததைப் பொருட்படுத்தாமல் எழுந்து அவர்களை விரட்டப் போன அதே நேரம் தாஸ் வாத்தியார் வீட்டிற்குள் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. கதிர் தன் கால்களைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

"ஆனந்தா.. !!!" தாஸ் வாத்தியார் சத்தம் போட்டுக் கூப்பிட்டார்.

ஆனந்தன் தான் ஒளிந்திருந்த இடத்தில் இருந்து வெளியே வந்தான்.

"இங்கிட்டு என்ன நடந்துச்சு .. சொல்லு?" தாஸ் வாத்தியார் ஆனந்தனைப் பார்த்துக் கேட்டார்.

"அது வந்துங்கப்பா.." என்று ஆரம்பித்த கதிரேசனைப் பேசவிடமால் பார்வையாலேத் தடுத்தார் தாஸ் வாத்தியார். அவர் ஆனந்தனையேப் பார்த்தார். ஆனந்தன் பரிதாபமாய் கதிரேசனைப் பார்த்தான்.

"சொல்லு.. நீ தான் பொய் சொல்ல மாட்டியே... என்ன நடந்துச்சுன்னு அப்படியே சொல்லு" கதிர் ஆனந்தனைப் பார்த்துக் கோபம் கொப்பளிக்கச் சொன்னான். ஆனந்தன் திக்கி திக்கி நடந்த விவரங்களை ஒன்று விடாமல் தாஸ் வாத்தியாரிடம் ஒப்பித்து முடித்தான்.

ஒரு ரோஜாப் பூவுக்காக இவ்வளவு தகராறா? ஏன் நம்ம வீட்டுத் தோட்டத்துல்ல ரோஜா பூவே இல்லையா.. அங்கிட்டு அவிஙக தோட்டத்துல்ல போய் பறிச்சுருக்க..." தாஸ் வாத்தியார் ஆனந்தனைப் பார்த்துக் கேட்டார்.

"அவிங்கத் தோட்டத்துல்ல தானே சிகப்பு ரோஜாப்பூ வச்சிருக்காயங்க.. அதாய்ன் போய் பறிச்சுருக்காய்ன்"

கதிர் மெல்ல முணுமுணுப்பாய் சொன்னான்.

"இந்தா இங்கிட்டு என் மொகம் பாத்துப் பேசு.. பொட்டப்புள்ளக் கணங்காத் தரையப் பாக்காதே.. சிகப்பு ரோஜாச் செடி தானே வேணும்.. கவுஞ்சியிலே இர்ந்து வாங்கிட்டு வரச் சொன்னா ஆச்சு..இங்கிட்டு நடந்த விசயம் இங்கிட்டோட முடியணும். நீ அவிங்களை அடிக்கக் கிளம்பிறபிடாது ..தெரியுதா...?"

தாஸ் வாத்தியார் கையில் கதிரேசன் காயத்திற்கு மருந்து இருந்தது. ஆனந்தன் கதிருக்கு வலிக்காத வண்ணம் பொறுமையாக அவன் காயத்தைத் துடைத்து மருந்து வைத்தான். ஆனந்தன் சட்டைப் பையில் இருந்த சிகப்பு ரோஜா அவங்க நட்பைப் பார்த்து புன்முறுவல் செயவது போலிருந்தது.
மறுநாள் கதிரேசன் மீது கல் வீசிய பசங்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் இருந்த அனைத்து ரோஜாச் செடிகளும் எதோ காரணத்தால் பட்டுப் போக ஆரம்பித்தன.

இப்பொழுது தாஸ் வாத்தியார் வீட்டில் கிட்டத் தட்ட ஏழு எட்டு சிகப்பு ரோஜா செடிகள் இருந்தன. எல்லாச் செடிகளிலும் கொத்து கொத்தாய் அழகிய சிகப்பு ரோஜாப் பூக்கள் நித்தம் பூக்கின்றன.

"மாப்பி, பத்து வயசுல்ல ஆரம்பிச்ச ரோஜாப்பூ கிறுக்கு இன்னும் போகல்ல உனக்கு.. தைப் பொறந்தாக் கழுதை உனக்கு இருபதைஞ்சு வயசு ஆயிரும்.."
சிலம்ப பயிற்சி முடித்து விட்டு துண்டால் முகத்தைத் துடைத்தப் படி கேட்டான் கதிர். கதிரின் சிறுவயது அழகு இப்போது பன்மடங்குப் பெருகியிருந்தது. தேகப் பயிற்சி அவன் உடலை இரும்பைப் போல் உறுதிப்படுத்தியிருந்தது.

உதட்டில் சதா நிலைக் கொண்ட அந்த சிறு புன்னகை அவன் வசீகரத்தை மேலும் கூட்டியது.

ஆனந்தன் சட்டைப் பையில் ஒரு சிகப்பு ரோஜா காம்போடு தலை நீட்டியது.
ஆனந்தன் அதிக உயரமில்லை என்றாலும் குள்ளமில்லை. கொஞ்சம் ஒல்லியான தேகம். பொது நிறம். சிறு வயதில் இருந்து அவனை விட்டு இன்றும் அவனோடு இப்போதும் பிரியாமல் இருப்பது ஒன்று அவன் திக்குவாய்.. இன்னொன்று அவன் கதிரோடு கொண்ட நட்பு.

"ஆனந்தா பதில் சொல்லணும்ப்பூ.. கேக்குறோம்ல்ல பதில் சொல்லுப்பூ"

முகத்தைத் துடைத்தக் கையோடு தண்டால் எடுக்கத் தரையில் அமர்ந்தான் கதிர்.

"நீ..நீக் கூடத் தான் வாரத்துக்கு ரெண்டு தரம் திண்டுக்கல்லுக்கு சைக்கிள் எ எடுத்துட்டுப் போயியிடுரே.. நாநான் கேகேட்டாலும் காரணம் சொல்லுறீயாப்ப்பூ"

கதிரேசன் பதில் சொல்லாமல் சிரித்தான். தண்டால் எடுத்து முடித்து விட்டு ஆனந்தன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

"திண்டுக்கல் கடைவீதிப் பக்கம் ஒரு நல்ல சிவத்த புள்ளைய நான் ஆருக்கும் தெரியாம கல்யாணம் கெட்டி வச்சிருக்கேன்.எங்க ரெண்டு பேத்துக்கும் ஒரு பொட்டப் புள்ளக் கூட இருக்கு, வர்ற சித்திரை வந்தா அந்தப் புள்ளக்கு வயசு ஒண்ணு முடிஞ்சுப் போயிடும்... இந்தச் சேதிய ஓங்கிட்டச் சொன்னா எங்கப்பார் கிட்ட போய் ஒளறி வைக்கமாட்டியா அதான் நான் சொல்லல்ல போதுமா?" என முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு ஆனந்தன் நம்பும் படி பேசினான்.

ஆனந்தன் அதை நம்பவில்லை.

"சரி ஒன் சிகப்பு ரோஜாக் கதையச் சொல்லுப்பூ"

"நாநான் ஒரு புள்ளயக் காதலிக்கேன்.. அவ ஆசசப் பட்டாங்கறதுக்காக தான் நிதமும் அவளுக்கு சிகப்பு ரோஜா பறிச்சிட்டு போறேன் போதுமா?"

"அடக் கொக்காமக்கா,,, காதலிக்கீயா.. அந்தப் புள்ளக்கி இது தெரியுமாப்பூ..பூக் கொண்டுப் போய் கொடுத்துட்டு இருக்கா..கடைசியிலே அவ கல்யாணத்துக்கு உன்கிட்டயே ரோஜாப் பூ மாலைக்கு ஆர்டர் வைக்கப் போறா..பாத்துப்பூ"

கதிரேசன் சிரித்தான். ஆனந்தன் உதட்டளவில் சிரித்தாலும் உள்ளுக்குள் உறுதியாய் சொல்லிக் கொண்டான்.

"எஞ் செண்பகத்துக்கு என் மனசு புரியும்..."

சரி சரி.. ஓம் பஞசாயத்தை வந்து வச்சிக்கிறேன்... இப்போ எனக்கு ஓஞ் சைக்கிளைக் கொஞ்சம் கடனாக் கொடு.. திண்டுக்கல் வரைக்கும் போயிட்டு வர்றேன்..."

கதிரேசன் தேகப் பயிற்சி முடித்து விட்டு குளிக்க்க் கிளம்பினான்.

"க்கதிரு நானும் வரேன்...எனக்கும் இங்கிட்டு மலையிலே எந்த ஒரு வேலயும் இல்ல"

"ம்ம்ம் பொய் சொல்லாதே உனக்கு எம்புட்டு வேலைக் கிடக்குது... அங்கிட்டு அந்த கல்லுல்ல் உக்காந்துக்க அப்படியே கையிலே சிகப்பு ரோசாவைப் பிடிச்சுக்க..அந்தப் புள்ளயப் பத்தி நினைச்சிகிட்டு அப்படியே கனாக் கண்டுகிட்டு இரு அதுக்குள்ளே நான் திரும்பி வந்துருவேன்.."

ஆனந்தனிடம் சைக்கிள் வாங்கிப் போன கதிரேசன் அன்றிரவு ஊர் திரும்பவில்லை... காலையும் வராது போகவே ஆனந்தன் மனம் கலவரமானது...

மதியம் வீட்டுல்ல வச்ச மீன் குழம்பைக் கூட ஏனோ தானோன்னு சாப்பிட்டுட்டு ஒர்ரே சிந்தனையாக் கிடந்தான்.
ஒரு மூணு மணி வாக்குல்ல தாஸ் வாத்தியார் வீட்டுக்குக் கிளம்பினான். அவர் வீட்டுக்குச் சமீபமாய் போலீஸ் ஜீப் நிற்பதைக் கண்டு ஆனந்தன் அடி வயிற்றில் பயப் பந்து உருண்டு விளையாடியது.

ஆனந்தன் வீட்டுக்குள் போகாமல் சுவத்தோரமாய் பதுங்கி நடப்பதைக் கவனித்தான்..சுருட்டி விட்ட மீசையை நீவிய படி நின்றிருந்த காக்கிச் சட்டைக்காரர் சன்னமான குரலில்தான் பேசிக் கொண்டிருந்தார்.தாஸ் வாத்தியார் முகம் வாடிப் போயிருந்தது. அவர் கைகள் அனிச்சையாய் கட்டிக்கொண்டன. அவர் காக்கிச் சட்டைக்காரரிடம் எதோப் பேசினார். வார்த்தைகள் ஆனந்தன் காதுகளில் சரியாக விழவில்லை.

"வாத்தியாரே.. இது மொத தடவைக் கிடையாது.. ஒங்க மவனை பெரிய இடத்தோடு பிரச்சனைப் பண்ண வேணாம்ன்னு ஒங்களைப் பாக்கும் போதெல்லாம் சொல்லிகிட்டுத் தானே இருந்தேய்ன்... இப்போ எல்லாம் கைமீறி போயிடுச்சுங்க..."

ஆனந்தனுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. முகம் வேர்வையில் வழிந்தது.

"நேத்து சாயங்காலம் மார்கெட்ல்ல வச்சு மிராசு மருமவனைப் போட்டுருக்காயங்க.. வெட்டியிருக்காயங்க... தப்பி ஓடும் போது மிராசு மருமயன் கூட இருந்த அரசுடையப்பன்.. எங்க ஸ்டேஷன் எஸ்.ஐ சுட்டுருக்காய்ரு... அதுல்ல கதிருக்குத் தோள்ல்ல குண்டு பட்டிருக்கு... இப்போ அவிங்க கோஷ்ட்டியா மதிகெட்டான் சோலைக்குள்ளேப் பதுங்கித் திரியறாய்ங்களாம்..மிராசு இவன் உசுரு வேணும்ங்கிறாரு.. பார்த்த இடத்துல்ல அவனைப் போட்டு தள்ளுறோம்ய்யான்னு அரசுடையப்பன் எஸ் ஐ கங்கணம் கட்டிகிட்டு அலையுறாரு...பெரிய இடத்துல்ல எல்லாம் பகையாப் போயிடுச்சு"

ஆனந்தன் இரண்டு கைகளையும் தலை மீது வைத்துக் கொண்டு மண்ணில் உட்கார்ந்தான்.அவன் கண்களில் கண்ணீர் பெருகி ஓடியது. அதைத் துடைக்கத் திராணியற்றவனாய் மண்ணில் முகம் புதைத்தான்.

"வாத்தியாரே.. வந்து நேரமாச்சு.. விசாரிக்க வர்றதாச் சொல்லிட்டு தான் வந்தேன்..விசயத்தைச் சொல்லிட்டேன்...இங்கிட்டு வந்தா கதிரேசன் கதை அம்புட்டுத் தான்.. அப்படியே அவனைக் கேரளாவுக்கோ அதையும் தாண்டியும் எங்கிட்டாவதுப் போகச் சொல்லுங்க... உசுராவது மிஞ்சும்.."

"அவன் போக மாட்டான்ய்யா" வாத்தியாரின் குரல் தீனமாய் ஒலித்தது.

"பழகுன்ன பாவத்துக்கு ஒங்ககிட்டத் தகவல் சொல்லத் தான் நான் வந்தேன்..என் சோலி முடிஞ்சுது நான் கிளம்புறேன்.. எஸ்.ஐ எந்நேரம்ன்னாலும் வருவார்.. பார்த்துப் பேசுங்க"

காக்கிச் சட்டைக்காரர் போனதும் அவசரமாய் வீட்டுக்குள் நுழைந்தான் ஆனந்தன்.

தாஸ் வாத்தியார் தூணைப் பிடித்துக் கொண்டு ஆழமானச் சிந்தனையில் இருந்தார்.

"நாநா..ன் கதிரைப் பாக்கப் போறேன்..நா..நான் சொன்னா அவன் கேகேப்பாய்ன்....அவனைக் கேரளாவுக்குப் போச் சொல்லுறேன்..." வழக்கத்தை விட அதிகமாய் திக்கியது ஆனந்தனுக்கு.

தாஸ் வாத்தியார் எதுவும் பேசாமல் மௌனம் காத்தார்.

கதிரேசனின் குரல் அவர் காதுகளில் கேட்டது.

"இது என் ஊர்.. இவிங்க எல்லாம் எம் மக்கள்...இவிங்களை விட்டுட்டு நான் எங்கேப் போவேன்.. அந்த மொதலாளி பயல்வ..இவிங்க ஓடம்புல்ல ஓட்டப் போடதக் கொறையா அவிங்க ரத்தத்தை ஊறிஞ்சுறாயங்க... அதைக் கேள்விக் கேட்டா.. போலீஸை விட்டு மெரட்டுறாயங்க.. நான் பயப்படமாட்டேய்ன்...இங்கிட்டு இருந்து கதிரேசன் போ மாட்டான்... வேணும்ன்னா அவன் உசுருத் தான் போகும்..இனி இதைப் பத்தி என்கிட்ட பேசாதீங்ய்க.."


"எ என்ன.. எதுவும் பேசமாட்டீங்களா...?"

"ம்ம்.. அவன் யார் சொன்னாலும் கேக்கமாட்டாய்ன்... நான் என்னத்தச் சொல்ல?"

ஆனந்தன் அழுகையும் ஆவேசமும் ஆட்கொள்ள மதிகெட்டான் சோலை நோக்கிப் போனான். வானம் அவனுக்கு வழி காட்ட மறுத்து காற்றுடன் கைக்கோர்த்துப் பெரு மழையெனப் பொழிந்தது. ஆனந்தனுக்கு என்னச் செய்வது என்று தெரியாமல் அழுகை அதிகமானது.

காற்றும் மழையும் ஓய மூன்று நாட்கள் பிடித்தன.

கதிரேசனைப் பற்றி ஊர்மக்கள் கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டனர். கதிரேசன் மீது ஊர் மக்களுக்குப் பிரியம் ஜாஸ்தி. அந்த ஊரிலேயே அதிகம் படித்தவன் அவன் தான்.ஊர் திருவிழாவில் அவன் கம்பு சுத்துவதைப் பாக்கவே அந்த ஊர்க் குமரிகள் தினம் தினம் திருவிழா வராதான்னு ஏங்குவார்கள். அறிவிக்கப் படாத மகளிர் ரசிகர் மன்றம் ஒன்று கதிரேசனுக்காக மும்முரமாக இயங்கி வந்தது.

கதிரேசன் தங்களுக்கு அடிக்கடி செய்த உதவிகளை எல்லாம் ஒருத்தருக்கொருத்தர் கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டனர்.

"என்னப் பேசி என்ன பிரயோசனம் மிராசு மருமவனை இல்ல கதிரு தம்பி வெட்டியிருக்கு.. எஸ் ஐ அரசுடையப்பன் வேற மிராசுக்கு சொந்தமாமே.. கதிரைப் போடாம விடுறது இல்லன்னுச் சாமி சத்தியம் பண்ணிட்டு அலையுறானாமே..."

"மிராசு மருமவன் என்ன சத்யசீலனா... பொட்டைக் கள்ளன்..வயல் வேலைக்கு வந்தப் பிள்ளையள இழுக்கறவன் தானே.. கதிர் தம்பி சரியாத் தான் போட்டிருக்கு"

"கதிர் தம்பி எதோ இயக்கத்துல்ல இருக்குதாமா.. அந்த இயக்கம் அடுத்த தேர்தல்ல நிக்கப் போவுதாம். அப்போக் கதிர் தம்பிக்குத் தான் ஓட்டுப் போடலாம்ன்னு இருந்தேன்"

ஊருக்கு ஒதுக்குப்புறமானக் குடியிருப்புக்களில் இந்தப் பேச்சு பலமாகவே வீசிக் கொண்டிருந்தது.

ஆனந்தன் சிகப்பு ரோஜா பறிப்பதை மறந்தான்... சதா கதிர் ஞாபகமாவே அலைந்தான்...

சரியாக ஒரு வாரத்துக்குப் பின்..ஊர் மக்கள் கதிரைப் பற்றிய பேச்சைக் குறைத்திருந்த ஒரு அதிகாலை வேளையில்

தாஸ் வாத்தியார் வீட்டு நாய் அவர் வேட்டியைப் பிடித்து இழுத்தது...
நாயை விரட்டிக் கொண்டு தாஸ் வாத்தியார் விழுந்தடித்து ஓடினார்...ஓடும் போதே அவர் மனம் சுக்கு நூறாய் ஒவ்வொரு யோசனையிலும் உடைந்துக் கொண்டிருந்தது...

ஓட்டம் முடிந்த இடத்தில் நாய் சுற்றி சுற்றி வந்தது..

எல்லோரும் பார்த்து பரவசப்பட்ட அந்த முகம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கோரச் சேதமடைந்து ரத்தச் சேற்றில் குளித்து கிடந்தது...

நித்தம் நித்தம் தேகப் பயிற்சியினால் உரமேற்றபட்ட அந்த இரும்பு தேகம் உருக்குலைக்கப்பட்டு நடு வீதியில் கிடந்தது...

ஊருக்கெல்லாம் உதவிய அந்தக் கால்களும் கரங்களும் கண்டபடி வெட்டப் பட்டு கிழிந்துத் தொங்கிக் கொண்டிருந்தன....ஈக்கள் அந்த இடத்தில் இறுதி மரியாதைச் செலுத்திக் கொண்டிருந்தன...

தாஸ் வாத்தியார் பார்வை உடலின் கீழ் பாகம் காணும் முன் அவர் கைகள் தானாய் அவர் வேட்டியைக் களைந்து உடல் மீது போர்த்தியது...

ஊருக்கு உதவ நினைத்த உனக்காடா மகனே.. இந்த நிலைமை.... அவர் குரல் எழவில்லை....

அவர் குரல் எழுந்தப் போது அதில் ஒலித்தப் பெயர்......

"உன் நண்பனைப் பாருடா ஆனந்தா.............."


இன்னும் இருக்கு கதிரேசன் கதை...

8 comments:

Unknown said...

Test

இலவசக்கொத்தனார் said...

போன பகுதிக்கும் இந்த பகுதிக்கும் கொஞ்சம் ஜெர்க் ஆன மாதிரி ஒரு உணர்வு. புது கேரக்டர் வரும் போது ஒரு ரெண்டு வரி இண்ட்ரோ இருந்தா நல்லா இருக்கும்.

கதை சும்மா பிச்சிக்கிட்டு வேகமா போகுது, அதனால ரொம்ப இடைவெளி விடாம அடுத்த பாகத்தை போடுங்க.

ஆவலுடன் வெயிட்டிங்.

நாமக்கல் சிபி said...

அருமையா போயிட்டு இருக்கு... அடுத்த பாகம் இருந்தா இப்பவே போடுங்க... படிக்கணும் போல இருக்கு

Unknown said...

கொத்ஸ் நன்றி. கொஞ்சம் வேலை அதிகமிருப்பதால் அடுத்த பாகம் வெளியிடுவதில் தாமதம் ஆகிறது.
எப்படியும் புதன் கிழமை இக்கதையின் இறுதி பாகத்தை வெளியிட முயற்சிக்கிறேன்.

Unknown said...

வெட்டி தொடரும் உங்கள் ஆதரவிற்கு நன்றி. அடுத்த பாகம் இக்கதையின் இறுதி பாகம் நாளை நிச்சயம் வெளிவரும்.

மனதின் ஓசை said...

எலே.. முழுச கதைய பொட்டு முடி..அப்புரம் படிக்க ஆரம்பிக்கிறேன்..

நமக்கு இப்படி விட்டு விட்டு தொடர்கதை படிக்கறது எல்லாம் பிடிக்காது :-)

Unknown said...

மனதின் ஓசையாரே - இன்று மாலை முழு கதையையும் வெளியிடுகிறேன் படித்து விட்டு கருத்துச் சொல்லுங்க.

Unknown said...

Thanks Alien - will post the next part by today evening