முந்தையப் பகுதி படிக்கஎன்னாத்துக்கு இப்படி ஒரு புது பொரளியைக் கிளப்பியிருக்காங்க.. புரியாம விட்டத்தைப் பார்த்து நானும் யோசிச்சுகிட்டு இருந்தேன்.
அந்தப் பொண்ணு இருக்கப் பக்கம் காத்தடிச்சுக் கூட நாமத் திரும்புனது இல்லையே... எங்கிட்டு இருந்து இப்படி ஒரு கனக்ஷென் கொடுத்தாங்க...ம்ம்ம் மொத்த மூளையும் பிதுங்கி வழியும் அளவுக்கு யோசிச்சுட்டு ஒரு முடிவுக்கு வந்தேன்..
தேவ்... ஊர் உலகத்துக்கு எல்லாம் கச்சேரி வச்சு ரணகளம் பண்ணவன் நீ... அதுல்ல எதோ ஒரு கச்சேரிக் கேட்டவனுக்கு அளவுக்கு அதிகமாகச் சேதாரம் ஆகியிருக்கு..அவன் தான் இப்போ உனக்கு எதிராக் கிளம்பியிருக்கான் அதுவும் கூட்டணி எல்லாம் பேசி வைச்சுக் கிளம்பியிருக்கான்..க்ரிப்பா இருக்கணும் புரியாதா..சிலிப் ஆயிரக் கூடாது..சரித்திரம் சரிஞ்சுரும்ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.
அப்போதைக்கு அந்த விசயத்தைப் பத்தி அதிகம் யோசிக்காமல் ஊட்டி பயணத்தின் மீது கவனத்தைப் பதிக்கத் துவங்கினேன்.
யார் யாருக்கு என்னப் பொறுப்புகள் என பகிர்ந்தளிக்கப்பட்டது. கேமரா.. வீடியோ கேமரா.. இன்னப் பிற சமாச்சாரங்கள் என ஒவ்வொரு விசயத்தையும் விரிவாய் திட்டமிட்டுக் கொண்டோம்.. திட்டமிடுதல் முடிந்துப் பயணம் பற்றியே பேசி பேசி ஒரு கட்டத்தில் ரொம்பவே களைத்துச் சலித்துப் போனோம்.
"ம்ம் என்னய்யா இது சுத்தப் போரா இருக்கு.. மணி எட்டு தான் ஆவுது.. ரூமுக்குப் போனா போரடிக்குமே.." குமார் முதலில் சலிப்பை வெளிப்படுத்தினான்.
"ஆமாம்ய்யா.. என்னப் பண்ணலாம்.. லேய் அந்தச் செல் போனை இப்படிக் கொடு.. யாருக்காவ்து எஸ்.எம்.எஸ் போடுவோம்..." மணி திருநாப் போனை வாங்கினான்.
"ம்ஹூம் பாஸ் எஸ்.எம்.எஸ் அனுப்புற அளவுக்கு நம்ம கிட்ட சார்ஜ் இல்லையே... " திருநாப் போனைக் கொடுத்து விட்டு மணி எஸ்.எம்.எஸ் அனுப்பும் முயற்சியில் முக்கால் வாசி ஈடுபட்ட பின் சாவகாசமாய் சொன்னான். மணி முகத்தைப் பார்க்கணுமே..
"கொய்யா..அதை முதல்லச் சொன்னா என்ன?"
"அதுன்னால்ல என்ன எஸ்.எம்.எஸ் டைப் பண்ணி பத்து நிமிசம் பொழுதைப் போக்கிட்டீங்கல்ல சீனியர் ப்ரீயா விடுங்க..." திருநா சிரித்துக் கொண்டேச் சொல்ல, கடுப்பான மணி போனை அவன் முகத்தில் எறிய ஓங்கினான்.
"சீனியர் பேசித் தீத்துக்கலாம்.. தீத்துட்டீங்க்கன்னாப் பேசவே முடியாது.. வேணாம்..ரைட்டா? " கெஞ்சும் பாவனையில் மண்டியிட்டான்.
அதே நேரம் பீச்சுக்குள் ஒரு ஜோடி எங்களைத் தாண்டி இறங்கிப் போனது... ரொம்ப நெருக்கம் ரொம்ப கிறக்கம்..அப்படி ஒரு காதல் ஜோதியைச் சுமந்துகிட்டு மண்ணுல்ல இறங்கி நடந்தாங்க..
"மாப்பூ... இது அதே தான்டா.." குமார் கண்ணடித்தான்.
"சீனியர்.. லவ்வர்ஸ் சீனியர்... பாவம் ப்ரைவேசி கிடைக்காம பீச்சுக்கு வந்துருக்காங்க..எல்லாரையும் எக்குத் தப்பாப் பாக்காதீங்க சீனியர்..." ஜமான் சொன்னது தான் தாமதம் எல்லாருக்கும் சிரிப்புப் பொத்துகிட்டு வந்தது.
பேச்சு இரவுக் காட்சிக்கு எதாவது போலாமா என்ற ரீதியில் நகர்ந்தது.. எந்தப் படம் போனால் டிக்கெட் செட் ஆகும் என்று ஆலோசனைகள் அள்ளித் தெளிக்கப்பட்டன...இது ஒரு பக்கம் நடந்தாலும்.. எல்லோர் கண்களும் அந்த ஜோடியின் மீது அவ்வப்போது போய் வந்தப் படியே இருந்தன..
எங்க ஏரியாவுக்குப் பக்கமாய் இருக்கும் பிராத்தனா ட்ரைவினுக்கு போவதாக தீர்மானம் நிறைவேறியது...திறந்த வெளியில் படத்தைப் பிலீங்க்கா தம் போட்டப் படியே பார்க்கலாம் எனப்து பெரும்பாலானோரின் கருத்து. அந்தக் கருத்தை ஏற்று பிராத்தனா பிளான் ஓ.கே ஆனது.
எப்படியும் இன்னும் ஒண்ணரை மணி நேரம் மிச்சமிருந்தது.. என்னப் பண்ணலாம்..இப்படியே உக்காந்து யோசிச்சா ஒண்ணரை மணி நேரத்தை ஓட்டுவது பெரிதாக இருக்காது எனப்பட்டது..
"மச்சி...மேட்ச் ஆரம்பிச்சுருச்சுடா" குமார் திடீரென அறிவிக்க மொத்தப் பார்வையும் முத்தச் சத்தம் வந்தப் பக்கம் பார்த்து திரும்பியது. "அடக்கொக்காமக்கா... ப்ரைவேசின்னு சொன்ன புண்ணியவான் எங்கேடா.. இதை வச்சே வீடியோ பைரசியே பண்ணலாம் போலிருக்கே..." என்று மணி கமெண்ட் அடித்தான்.
"நைட் ஷோ கேன்சல் பண்ணிரலாமா?" முஸ்தபா கேட்டான்.
ஆக எல்லாரும் அந்த ஜோடியின் மீதே முழு கண்களையும் செருகி வைத்தோம்.
"மாப்பூ கலாய்க்கலாமா" என்று குமார் தூபம் போட்டான்.
"எப்படி?"
"இது தான் பிளான் .." அப்படின்னு குமார் குத்து மதிப்பா ஒரு திட்டம் வரைந்தான்.
அதாவது எங்க மக்களில் இரண்டு பேர் மப்டி போலீஸ் மாதிரி அந்த ஜோடி பக்கம் போக வேண்டும் அங்கிருந்தப் படி பெரிய போலீஸ்க்கு செல்போன் மூலம் தகவல் தரவேண்டும்...இப்படி ஆரம்பித்தது திட்டம். திட்டப்படி ஜாமனும் குமாரும் மப்டி போலீசாகக் களத்தில் இறங்கினார்கள். திருநாவின் மெகா சைஸ் செல்போன் கிட்டத் தட்ட ஒரு வாக்கி டாக்கி போல இருக்கும். அதை ஜமான் கையில் எடுத்துக் கொண்டான்.
போலீஸ்க்கான தகுதிகளாய் ஒரளவு உருண்டு திரண்ட உருவம் கொண்ட ஜமான் தைரியமாக முன்னால் நடக்க.. பின்னால் குமார் நடந்தான். மற்றவர்கள் கரையில் நின்று கொண்டோம்..
"டேய் குமார் நீங்க உள்ளேப் போறீங்க சரி.. பெரிய போலீஸ் யாருடா ஆக்ட் கொடுக்கணும் அதைச் சொல்லாமப் போறீங்க.." கேட்டது நான் தான்..
"மாப்பி மண்ணு.. இது என்னக் கேள்வி கிறுக்குத்தனமா.. பாதி பனைமரம் உயரம் வளந்து இருக்க.. ஓட்ட வேற முடியைக் கட்டிங் போட்டிருக்க... மீசை வேணும்ன்னா லைட்டாத் திருகிக்க... பொருத்தமா இருக்கும்... உனக்கு பெரிய போலீஸ் வேசம்.. ரைட் நாங்கப் போறோம்"
பார்த்த சினிமா போலீஸ் எல்லாம் நினைவுப் படுத்திக்கொண்டு ஒரு மாதிரியாக் கொடுத்தக் கேரக்டருக்குச் செட் ஆக முயற்சித்தேன்.. எஸ்.பி.சவுத்ரி, அலெக்ஸ்பாண்டியன், வால்டர் வெற்றிவேல் எல்லாம் சேர்ந்த ஒரு கலவையாய் ஒற்றை காலை எடுத்துக் குட்டைச் சுவரில் வைத்து கையை இடுப்பில் இருத்தி கெத்தான ஒரு போஸ் கொடுத்தப் படி நின்றேன்.. மற்றவர்கள் என்னை விட்டு நாலு அடி தள்ளிச் சென்றார்கள்..சோழன் மட்டும் கூட பணிவான இன்னொரு போலீஸாகப் பம்மி நின்றான்.
மணி, சபரி, திருநா, புகாரி எல்லாம் நகர்ந்து மண்ணில் இறங்கி நடந்தார்கள். ஜோடிக்குக் கொஞ்சம் தள்ளிப் போய் உட்கார்ந்தார்கள். நம்ம மப்டி போலீஸ் ஜமானும் , குமாரும் முதலில் எங்க ஜமா இருந்த பக்கம் போனார்கள்.
"ஹலோ யாருய்யா நீங்க....எந்த ஏரியா?" ஜமான் குரல் கொடுக்க..
"காலேஜ் ஸ்டூண்ட்ஸ் சார்.." முஸ்தபா பம்முவது போல் பதில் சொன்னான்.
"ஐடி கார்ட் இருக்கா?" இது ஜமான்.
"இருக்கு சார்"
"ஏய் நீ எழும்புடா...உன்னைப் பார்த்தா அக்யூஸ்ட் மாதிரியே இருக்க...உன் பேர் என்ன?" ஜமான் கிடைச்சக் கேப்பில் திருநாவைக் கிடா வெட்டினான். திருநா பதில் சொல்லாமல் முறைத்தான்.
"டேய் என்ன லுக் விடுற... கேட்டாப் பதில் சொல்லணும்... இப்படி எல்லாம் முழிக்கக் கூடாது.. " ஜமான் உதார் அதிகமாக.
இதற்குள் ஐடி கார்ட்களைப் பரிசோதிப்பது போல் வாங்கிப் பார்த்த குமார்.."ஆமா சார் எல்லாம் காலேஜ் பசங்க தான் " கரெக்ட்டா இருக்கு அப்படின்னு சொன்னான்.
"டேய் மொறைக்காதடா ..போ..போ.." ஜமான் சவுண்டை வேண்டுமென அதிகப் படுத்தினான். பக்கத்திலிருந்த ஜோடியை லேசாக கலவரப்படுத்தும் முதல் முயற்சியில் ஜமான் வெற்றியடைந்தான் என்றே சொல்லவேண்டும். ஜோடி கொஞ்சமாய் விலகியது.
முஸ்தபா,திருநா, மணி,சபரி எல்லாம் அங்கிருந்து கிளம்புவது போல எழும்ப ஜமானும் குமாரும் அடுத்து நகர்ந்து ஜோடிப் பக்கம் வந்தனர்.
"ஆமா சார்.. விசாரிச்சுட்டேன் சார்... அது காலேஜ் பசங்க சார்... ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல சார்...அடுத்து சார்.. ஆமா சார்... ரைட் சார்....ஆமா சார் ஒரு ஜோடி இருக்கு சார்.. விசாரிக்கிறேன் சார்... " போனில் பாவ்லா காட்டியப் படி ஜோடி பக்கம் போய் நின்றான் ஜமான், அவன் கூடவே குமாரும் நின்றான்.
"எந்த ஏரியா?" ஜமான் அதட்டலாய் கேட்க....
"நாங்க ப்ரண்ட்ஸ் சார்.." ஜோடியில் ஒருத்தன் பதட்டமாய் பதில் அளித்தான்.
"எந்த ஏரியான்னு கேட்டா என்னப் பேசுற?" ஜமான் குரலில் கறார் கூட்டிக் கேட்டான்.
"இல்ல சார்.. நாங்க தப்பு எதுவும் பண்ணல்ல சார்?" அவள் பதில் சொன்னாள்.
"இது ஆவுறதில்ல... அங்கேப் பாருங்க ஆபிசர் நிக்குறார்.. அங்கேக் கூட்டிட்டுப் போறேன்..வந்து பேசுங்க" ஜமான் நான் இருக்கும் பக்கம் கை நீட்டினான். ம்ம் ஒரு மாபெரும் கலைஞனின் நடிப்பாற்றலுக்கு ஏற்ற வேடம் இல்லை என்றாலும் கொடுத்த வேடத்தில் மின்ன வேண்டும் என்ற எண்ணத்தில் தலையை உயர்த்தி அண்ணாந்து சும்மா இன்னும் கெத்துக் கூட்டி போஸ் கொடுத்தேன்.
"டேய் லாங்க்ல்ல இருந்து நீ நிக்குறது மட்டும் தான் தெரியும் ... உன் முகத்தை இப்படி எல்லாம் பீலிங் காட்டுறேன்னு செய்யற எபெக்ட் எல்லாம் நான் மட்டும் பார்த்து பீதியடைய வேண்டி இருக்கு சோ..உன் பிலீங்கைக் கன்ட்ரோல் பண்ணு" பக்கத்தில் இருந்த சோழன் என் நடிப்பு வெள்ளத்துக்கு அணைப் போட்டான்.
ஜோடி பதில் பேச முடியாமல் உளறி கொட்ட.. திட்டமும் தெளிவுமாய் அது எப்படிப் பட்ட உறவு என எங்களுக்கு ஊகிக்க முடிந்தது.
"சார் ஆபிசர் எல்லாம் வேணாம் சார்.. மன்னிச்சு விட்டுருங்க சார்.. நாங்க இப்படியே ஓடிப் போயிரோம் சார்..." அவன் கெஞ்சியே விட்டான்.
"ம்ம்ம் என்னது ஓடியேப் போயிடுவீங்களா." அப்படியே ஒரு யோசிக்கும் எபெக்ட் கொடுத்த ஜமான் குமாரைப் பார்த்தான்.
"ஓகே மன்னிச்சுடுறோம்...எங்கே ஓடுங்கப் பார்ப்போம்" என்றான் ஜமான். அவன் அப்படி சொன்னது தான் தாமதம் அந்த ஜோடி ஓடின ஓட்டம் பார்க்கணுமே... யம்மாடியோய் கரண்ட் கம்பியை வச்சு கீ கொடுத்த மாதிரி ஒரு ஓட்டம்.. மின்சார ஓட்டம்...
அவங்கப் போய் வெகு நேரம் வரை எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை....
"டேய் கவுரி இந்நேரம் சென்னைக்குள்ளே நுழைஞ்சு இருப்பான்ல்ல.. அவனுக்குப் போனைப் போடு மாப்பி.. அவனையும் படத்துக்குச் சேத்த்ருவோம்" என்று முஸ்தபா சொன்னான்.
"ம்ம்ம் நானும் மூணு நாலு வாட்டி ட்ரை பண்ணிட்டேன்... லைன் போகவே மாட்டேங்குதுப்பா.. இந்த ஆர்.பி,ஜியும் அதோட நெட்வோர்க்கும் கடுப்புப்பா.." என்று திருநா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் செல்பேசியில் கவுரியின் நம்பர் மின்னியது...
"மாப்பிக்கு ஆயுசு நூறுடா.. பேசிகிட்டு இருக்கும் போதே லைன்ல்ல வர்றான் பாரு.." என்ற படியே செல்லை ஆன் செய்து..." சொல்லுடா மச்சி... எங்கே இருக்க?" என ஆரம்பித்தான் திருநா..ஆனால் மறுமுனையில் பேசியது கவுரி இல்லை என்பது அடுத்தச் சில வினாடிகளில் எங்களுக்குத் தெரியவந்தது.
போனைக் கீழே வைத்த திருநா அப்படியேக் குட்டிச் சுவரில் உட்கார்ந்தான்
"கவுரியும் அவங்க அப்பாவும் வந்த கார் ஆக்சிடென்ட் ஆயிருச்சாம் திண்டிவனம் பக்கம்..கவுரி ஸ்பார்ட்ல்ல அவுட்டாம்.. அவங்க அப்பா ஹாஸ்பிட்டல் போற வழியிலே ..." திருநாவால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை..
எல்லாரும் அப்படியேக் குட்டிச் சுவரில் தலைக் கவிழ்த்து அமர்ந்தோம்....
அடுத்தப் பகுதியினில் முடியும்