Monday, April 06, 2009

தென்கிழக்கு வாசமல்லி - 2

தென்கிழக்கு வாசமல்லி - 1

ஒரு மூணு மாசமிருக்கும் வீடு ஒரளவு வளர ஆரம்பிச்சுருச்சு...வேலை ஜரூராக நடந்துகிட்டுருச்சு...ஒரு நாள் மதிய நேரம் பொழுது போகாமல் பக்கத்து வீட்டு கட்டுமான வேலைகளை வேடிக்கைப் பாத்துக்கிட்டே நம்ம மரம் பக்கம் வந்து ஒதுங்குனேன்..உணவு முடிச்ச வேலையாட்கள் அப்போது தான் வேலைக்குத் திரும்பிக்கிட்டிருந்தாங்க. சிலோன் ரேடியோவில் பாட்டு ஓடிக்கொண்டிருந்துச்சு....இடைஇடையே அறிவிப்பாளர் அப்துல் அமீதின் குரலில் தேன் ஈழத் தமிழ் வந்து காதில் பாய்ஞ்சிட்டு இருந்துச்சு

அக்கம் பக்கம் பார்த்து விட்டு பொந்துக்குள் கைவிட்டு ஒரு பேப்பரில் சுத்தியிருந்த அந்தப் பொருளை எடுத்துப் பிரிச்சேன்...உள்ளே புத்தம் புது 555 சிகரெட் பாக்கெட் கண்ணைக் கவர்ந்தது..


வைத்தியைச் சும்மாச் சொல்லக்கூடாது.. சொன்ன மாதிரியே சரக்கைக் கொண்டு வந்துட்டான்..அவங்க மாமா துபாய்ல்ல இருந்து வந்துருக்கார்...வரும் போது பல வகை வஸ்துகளோடு வந்ததாகவும் அந்த வஸ்துகளில் சிலவற்றை எங்களுக்கும் பங்கு தருவதாய் வைத்தி வாக்கு கொடுத்திருந்தான்... அந்த வகையில் எனக்கு கிடைத்தப் பங்கைத் தான் நான் உள்ளங்கையில் வைத்து ரசிச்சுகிட்டு இருந்தேன்....பாக்கெட்டே எவ்வளவு கிக்கா இருக்கா... சிலாகிச்சிட்டு இருந்தேன்...

பாக்கெட்டை உள்ளங்கையில் வைத்து தேய்ச்சேன் அப்படியே மெதுவா சிகரெட்டை எடுத்து உதட்டில் வச்சு பத்த வைக்காமல் கொஞ்ச நேரம் திரும்பவும் கண்களைச் சுத்த விட்டேன்...பக்கத்து காம்வுண்டில் பீடி பிடிச்சிட்டு இருந்த கொத்தனாரிடம் நெருப்பு கடனாய் வாங்கி பத்த வச்சிக்கிட்டு ஒரு கையைத் தலைக்குப் பின்னால் வைத்து மரத்தில் சாய்ஞ்சு நின்னேன்..புகையை ரசிச்சு ருசிச்சு தலைக்கு மேலே விட்டேன்..

அடுத்து நீங்கள் கேட்கவிருக்கும் பாடல் தாவணிக் கனவுகள் படத்தில் இருந்து..ஏரிக்கரை பூங்காற்றே என்ற பாடல் வருகிறது...கேட்டு ரசியுங்கள்.... அப்துல் ஹமீத் சொல்லிமுடிக்கும் போது..காற்றில் அசைந்த எதோ ஒண்ணு என் தோள் மேல விழுந்துச்சு..அதை அப்படியே என்னன்னு கூட பாக்கமால் ஒதுக்கி விட்டுட்டு சிகரெட் சுகத்தில் நான் லயிக்க முயற்சித்தேன்..ஆனால் திரும்பவும் என் தோள் மீது அதே பொருள் வந்து விழுந்துச்சு...இந்த முறை என்னன்னு பாக்கத் திரும்புனேன்..

முளைச்சு காத்துல்ல பறக்க கிளம்பிடிருந்த நம்ம மல்லிச்செடி தான் என் தோளைத் தொட்டு துழாவிக்கிட்டே இருந்துருக்கு...கொடின்னா படரக் கொம்பு வேணுமே..அதான் என் மேல படர முயற்சி பண்ணியிருக்கு... தென்கிழக்கு வாசமல்லி...என்னைத் தேடி ஒரு சேதி சொல்லி... ரேடியோ பாட்டுக் கூட நானும் ஒரு ராகத்தைச் சேர்த்து முணுமுணுத்துகிட்டே மல்லி செடிக்கு ஒரு கொழு கொம்பு தயார் பண்ணி முடிச்சேன்... நம்ம மரத்துல்ல கொம்பை லேசா சாய்ச்சு கொடியை படர்த்தி விட்டுட்டு.... மிச்சமிருந்த சிகரெட்டை ஊத திரும்புனா.. வெளியே போன அம்மா வீட்டுக்குள் நுழையறது கண்ணுல்ல பட்டுச்சு.. சிகரெட்டை எங்கே எறியறதுன்னு தெரியாம...அவசரத்துக்கு நம்ம பாதுகாப்பு பெட்டகமானப் பொந்துக்குள்ளே தூக்கிப் போட்டேன்...வாடை போறதுக்கு காத்துல்ல கையை ஆட்டிகிட்டு இருந்தேன்...
என்னோட கெட்ட நேரம் அம்மா நான் இருக்கும் இடம் நோக்கியே வந்துட்டு இருந்தாங்க...எனக்கு லேசா புரையேறி இருமல் வந்துச்சு...என்னைத் தாண்டி அம்மா போகும் போது தான் எனக்குப் பின்னாடி அவ நிக்கறதையே நான் கவனிச்சேன்...அம்மா கையில் இருந்த எதோ ஒரு பொருளை அவகிட்டக் கொடுத்துட்டு என்னமோ பேசிகிட்டு இருந்தாங்க...காதை நீட்டி கேட்டும் ஒண்ணும் சரியா விழல்ல..
இவ்வளவு நேரம் நான் இங்கே நின்னப் போது அவ என் கண்ணுல்ல படவே இல்லை..இப்போத் தான் வந்துருப்பாளோ...இல்ல நான் தம் மயக்கத்தில் அவளைக் கவனிக்கல்லயே.... ச்சே தம்மை விட அவளோட அருகாமை தர்ற போதை இருக்கே...அதுவல்லவா சுகம்...அப்படியிருக்க அவ பத்தடி தூரம் வந்தாலே என் ஆண்மனம் அலை பாயுமே...பின்னாடியே இருந்திருந்தாக் கவனிக்காம விட்டிருப்பேனா ..வாய்ப்பே இல்ல...இப்போத் வந்துருக்கணும் எனக்கு நானே சமாதானம் சொல்லிகிட்டு நின்னேன்..
"ம்ம்ம் எதோ புகையிற வாடை வருதே..." அம்மாவோட குரல் என்னை என் யோசனை உலகத்தில் இருந்து இழுத்துக் கொண்டு வந்து வெளியே போட்டுது...
"ஆமா...ஆன்ட்டி...ம்ம்ம் அதோ அந்த இடத்தில்ல இருந்து தான் புகை வருது...." அவள் கைக் காட்டுன இடம்..மிகச் சரியா என் ரகசிய உலகத்தின் நுழைவாயிலே தான்.... கை நீட்டுனது மட்டுமில்லாமல்...சட்டுன்னு நான் ஒரு நிலைக்கு வந்து நடக்கிறது என்னன்னு நான் உகிக்கறதுக்குள்ளே..கட்டுமான இடத்தில்ல இருந்து ஒரு குடம் தண்ணியை எடுத்துட்டு வந்து மின்னல் வேகத்தில்ல பொந்துக்குள்ளே ஊத்தியும் விட்டுட்டா...
நான் மென்னு முழுங்கி அப்படியே அடி வயித்துல்ல சுருண்ட பயப்பந்தை வெளியே தள்ள முடியாம அடுத்து என்ன நடக்குமோன்னு சிலையாகி நின்னுட்டு இருந்தேன்...
யாரோ சிகரெட் புடிச்சுட்டு மரத்துல்ல போட்டுருக்காங்க ஆன்ட்டி...அதை அணைக்காமலே போட்டிருக்காங்க போலிருக்கு...அதான் தீ புடிச்சிருக்கு...
எந்தக் கிறுக்குப் பைய புத்தி இப்படி போச்சு...மரத்துல்ல கொண்டு கொள்ளியை போட்டிருக்கான்..வெத்து பைய..... என்னைப் பெத்த அம்மா சொன்னதுல்ல கொஞ்சத்தை மட்டுமே என்னால இங்கே சொல்லமுடியும்.. அம்மா மொத்தமும் சொல்லி முடிக்கும் வரை அவ என்னை ஒரு நமுட்டு பார்வை பார்த்தாப் பாருங்க....உங்க அம்மா சொல்லுறது எல்லாமே சரிடா.... நீ அப்படித் தான்ன்னு பார்வையாலே அவளும் அம்மாப் பேச்சுக்குப் பின்பாட்டு பாடுற மாதிரியே எனக்குத் தோணுச்சு...
"இது எல்லாம் இங்கே வேலை செய்யற பையல்வ வேலையாத் தான் இருக்கும்... உங்க வீட்டாளுக கிட்ட சொல்லி வைம்மா" அம்மா இதைச் சொல்லிகிட்டு இருக்கும் போது எனக்கு சிகரெட் பத்த வைக்க நெருப்பு கொடுத்த புண்ணியவான் அங்கு பீடி பிடிக்க வந்துகொண்டிருந்தார்..
சனியன் சரவெடி கொளுத்தி சட்டைக்குள்ளே வச்சுட்டு அது வெடிக்கறதை வேடிக்கை பாக்காமப் போவாது போலிருக்கே....
அம்மா வாம்மா..ஒரு காபித் தண்ணி போட்டு கொடும்மா...அதான் நெருப்பை அந்த புள்ள அணைச்சுருச்சுல்லா....விடு நான் பாத்துக்குறேன்.... அம்மாவை கையைப் பிடிச்சு இழுக்காத குறையா நான் வீட்டுக்குள்ளே போக வைக்க நான் முயற்சி பண்ணிட்டு இருந்தேன்...
"மேஸ்த்திரி அண்ணேன்..இங்கே வந்து இனிமே சிகரெட் பிடிக்கக் கூடாது...யாரோ சிகரெட் பிடிச்சுட்டு இந்தப் பொந்துக்குள்ளே பாதியிலே பயந்து வீசியிருக்காங்க...அது தீ பிடிச்சிருச்சு...." அவள் பொறுமையா ஆனா ரொம்ப சத்தமாவும் கதையைச் சொல்லிட்டு இருந்தா...அப்பப்போ என்னை ஒரு கேலி பார்வையும் மெல்லிய சிரிப்புமா வேற பாத்துகிட்டே சொன்னா...
"அம்மா இது காசுக்கார ஆளுக பிடிக்க சிகரெட்ல்லா.. நமக்கு எல்லாம் பீடியே சாஸ்திம்மா...இருந்தும் நீங்க சொல்லிடீயே இனி இந்தப் பக்கம் நம்ம ஆளூக யாரும் பீடி சிகரெட் பிடிக்காம பாத்துகிடுதேன்....மத்த ஆளுக திருட்டு பீடி பிடிக்க வராம அந்த வீட்டு ஆளுகளை பாத்துகிடச் சொல்லுங்க... பீடி பிடிக்கோம்ன்னு வீட்டை எரிச்சிரப் போறான்வ..." மேஸ்த்திரி என்னை ஓரப் பார்வை பாத்துக் கொண்ட பீடி பிடிக்க வேறிடம் தேடிக் கிளம்பினார்..
ஒரு வழியா அடிக்க இருந்த புயல் அமைதியாக் கரையக் கடந்த மாதிரி இருந்துச்சு...ஸ்ப்ப்ப்ப்ப்பா...அப்படின்னு மெதுவா ஒரு பெருமூச்சு விட்டுகிட்டேன்... அவ ரொம்ப நிதானமா வந்து கொஞ்சம் எட்டி பொந்தைப் பார்த்தா....
"ம்ம்ம் எல்லாம் காலி....கண்ட கண்ட புக்....திருட்டு சிகரெட்....ஒண்ணும் மிஞ்சல்ல....ஒரு அழகான செடி வளர்ற இடத்துல்ல இந்த விளங்காதப் பொருள் எல்லாம் இருக்குதுன்னே யோசிச்சேன்...சொந்த செலவுல்ல அதை எல்லாம் அகத்திக் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்...அப்புறம் உங்க அம்மா சொன்னது புரியுதா... இனிமே இங்கே நோ சிகரெட்... இப்போதுல்ல இருந்து இந்த இடம் மரம் எல்லாம் என் மல்லிச் செடிக்கு மட்டுமே சொந்தம்... புரியுதா...."
சடையை என் முகத்துல்ல படுற மாதிரி விசிறி அடிச்சுட்டு நடந்துப் போனா...
அந்த நிமிசத்தில்ல எந்த ஒரு மனுசனுக்கும் வர வேண்டிய நியாயமானக் கோபம் கூட எனக்கு அவ மேல வர்றல்ல..அது ஏன்ன்னு எனக்கு சுத்தமாப் புரியாம மரத்துல்ல சாய்ஞ்சுட்டு நின்னேன்....
என்னையுமறியாமல் தென்கிழக்கு வாசமல்லி பாடலை என் வாய் முணுமுணுத்தது

வாசம் இன்னும் பரவும்

7 comments:

ஆயில்யன் said...

//இந்த விளங்காதப் பொருள் எல்லாம் இருக்குதுன்னே யோசிச்சேன்...சொந்த செலவுல்ல அதை எல்லாம் அகத்திக் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்...அப்புறம் உங்க அம்மா சொன்னது புரியுதா... இனிமே இங்கே நோ சிகரெட்... இப்போதுல்ல இருந்து இந்த இடம் மரம் எல்லாம் என் மல்லிச் செடிக்கு மட்டுமே //


பாவி பயபுள்ள, புகை போடற இடத்துல புஷ்பத்தை ஏத்திவைச்சுப்புட்டு போயிட்டாங்களேன்னு ஒரு சோக ஃபீலிங்க்தான் பாஸ் வந்துச்சு :)

psycho said...

ஓர் அழகான காதல் காட்சியை கண்டதுபோலிருந்தது

Divya said...

\\\அம்மா மொத்தமும் சொல்லி முடிக்கும் வரை அவ என்னை ஒரு நமுட்டு பார்வை பார்த்தாப் பாருங்க....உங்க அம்மா சொல்லுறது எல்லாமே சரிடா.... நீ அப்படித் தான்ன்னு பார்வையாலே அவளும் அம்மாப் பேச்சுக்குப் பின்பாட்டு பாடுற மாதிரியே எனக்குத் தோணுச்சு...\\

hahaha:))

காட்சி கண்முன் விரியுது உங்கள் எழுத்தினை படிக்கையில், அட்டகாசமான எழுத்துநடை அண்ணா:))

Divya said...

\\அப்புறம் உங்க அம்மா சொன்னது புரியுதா... இனிமே இங்கே நோ சிகரெட்... இப்போதுல்ல இருந்து இந்த இடம் மரம் எல்லாம் என் மல்லிச் செடிக்கு மட்டுமே சொந்தம்... புரியுதா...."\\

சான்ஸே இல்ல....இந்த வரிகள் சிம்ப்ளி சூப்பர்ப்!!

தொடரட்டும் மல்லியின் வாசம்!!

வாழ்த்துக்கள் தேவ் அண்ணா!!

கோபிநாத் said...

\\மரத்துல்ல சாய்ஞ்சுட்டு நின்னேன்...\\

சாய்ச்சி புட்டாங்க அண்ணாச்சி..அவ்வவ்வவ்வ்வ்வ்வவ் ;))

நாகை சிவா said...

:)

ரொம்ப விளக்கீட்டிங்களோ அடுத்த பகுதி போயி இருக்கலாமோ!~

ரைட் வெயிட் பண்ணுறோம்.!

வெட்டிப்பயல் said...

As usual Kalakal :-)