Tuesday, June 09, 2009

தென்கிழக்கு வாசமல்லி - 4

தென்கிழக்கு வாசமல்லி - 3

வைத்தியநாதன் எனக்கு நினைவு தெரிய ஆரம்பிச்சக் காலத்துல்ல இருந்து எனக்கு நண்பன்..என் மனச்சாட்சிகிட்ட சொல்லாம மறைக்க நினைச்ச எத்தனையோ விசயங்களைக் கூட நான் வைத்திகிட்ட மறைச்சது இல்ல...அவன் தங்கச்சி மூக்களகியைக் கூட எனக்காக கை ஓங்கி வைத்தி அடிச்ச சம்பவம் நிறைய இருக்கு...

வைத்திக் கூட சேர்ந்து செஞ்ச ஒவ்வொரு விஷ்யமும் என்னையும் மீறி என் கண்ணுக்குள்ளே வரிசை கட்டி நிக்க ஆரம்பித்தன...முப்பது கிலோ மீட்டர் தாண்டி போய் டென்ட் கொட்டாயிலே முதல் முதலா பலான படம் பார்த்தது...அவங்க மாமா சிகரெட்டை மாத்தி மாத்தி அடிச்சு முதல் தம் அனுபவம் பெற்றது...சரக்கு அடிக்க ஒரு வாரமாக் காசு சேர்த்து பத்தாமப் போய் மூக்களகி கொலுசை சுருட்டி வித்து என் முதல் தண்ணி பந்தல் அமைச்ச வள்ளல் என் வைத்தி....ச்சே ஒரு பொண்ணுக்காக போய் அவன் மேல கையை வச்சுட்டோமேன்னு ஒரு பக்கம் மனசு லேசா வலிக்க ஆரம்பிச்சது...

இங்கேயே இருந்தா ஒரு நிலையிலே மனசு நிக்காது...அப்படியே டவுண் பஸ் ஏறி தென்காசி வரைக்கும் போயிட்டு வருவோம்...மனசு அமைதியாகிரும் அப்படின்னு ஒரு கணக்கு போட்டுட்டு பஸ் ஸ்டாண்ட் பார்த்து நடக்க ஆரம்பிச்சேன்...டீ கடையிலே போய் ஒரு தம் போட்டுட்டு ஒரு டீயும் அடிச்சுட்டு போலாம்ன்னு டீ கடை பக்கம் ஒதுங்குனேன்...

டீயைச் சூடா தொண்டைக்குள்ளே இறக்கிட்டு ரோட்டை வேடிக்கைப் பாத்துகிட்டே நின்னேன்... சல்லுன்னு என்னைத் தாண்டி ஒரு டிவிஎஸ் 50 தாண்டிச்சு....புழுதி கிளப்பிட்டுப் போன வண்டி சந்தேகமில்லாமல் வைத்தி வீட்டு வண்டி தான்...வண்டியிலே போனது வைத்தி...பின்னாடி உக்காந்துப் போனது அவளே தான்....மிச்சமிருந்த டீயை சடக்குன்னு வந்த கோபத்திலே தூர எறிஞ்சுட்டு வண்டி போன பக்கம் எரிச்சலாப் பாத்துட்டு நின்னேன்...

"தம்பி டீ காசு ஒண்ணே காலைக் கொடுப்பா.." டீக்கடைகார் அண்ணன் குரல் கேட்டு பாக்கெட்டில் கை விட்டு காசைத் துழாவி எடுத்து கொடுத்தேன்...

தென்காசி பிளானைக் கேன்சல் பண்ண்ட்டு ஆத்திரமா வீட்டைப் பார்த்து திரும்பி நடந்தேன்...ம்ம்ம் கிரவுண்ட்க்குத் தான் போயிருப்பான்..அங்கே தான் வண்டி ஓட்டச் சொல்லித் தர முடியும்..அங்கேயே போய் பாத்துருவோம் அப்படின்னு கிளம்பினேன்..

நாலு ஆள் ஆச்சு சரியா தூங்கி....ப்ச்...என்னா அடி தெரியும்ல்ல....விளையாட்டுன்னா அதுல்ல இவ்வளவு கோவம் ஆகாது...பாவம் பையன்...." அம்மாவின் குரலைக் கேட்டு கட்டிலில் இருந்து உடம்பை கஷ்ட்டப் பட்டு நகத்தி ஜன்னல் பக்கம் தலையை நீட்டுனேன்.

பக்கத்து வீடு கிட்டத்தட்ட முடியற நிலைக்கு வந்துருச்சி...இன்னும் ஒரு பத்து பதினைஞ்சு நாள்ல்ல பால்காய்ப்பு இருக்கும்ன்னு நினைச்சுகிட்டேன்...அம்மா என் கதையைத் தான் பிரசங்கம் பண்ணிகிட்டு இருக்காங்கன்னு நல்லா புரிஞ்சது...அவளும் அங்கே இருக்காளான்னு ஜன்னல்ல எவ்வளவு முடியுமோன்னு அவ்வளவு தலையை நெளிச்சுப் பார்த்தேன்...நீலத் துப்பட்டா காற்றில் ஆடியது தெரிந்தது அவளும் அங்கேத் தான் இருந்தா...

"மேட்ச்ல்ல தோத்துட்டாங்கன்னு தனியா வந்த இவனை பனை மட்டையிலே போட்டு விளாசு விளாசுன்னு விளாசி இருக்கான்வ...முதுகுல்ல பட்டை பட்டையா தொலி உரிஞ்சு...இப்போத் தான் கொஞ்சம் பரவாயில்ல...ஆனா ரொம்ப சிரமப்பட்டுட்டான்...."

அச்சோ அய்யோ என அக்கறையாய் விசாரிப்புகள் தொடர்ந்தன..அதுல்ல ஒரு அச்சோவாச்சும் அய்யோவாச்சும் அவ சொல்லியிருப்பாளான்னு காதைத் தீட்டிக் கேட்டும் என்னாலக் கண்டுபிடிக்க முடியல்ல..

முதுல்ல வலி பின்னி எடுக்க குப்புற படுத்துட்டு கண்ணை மூடிகிட்டேன்....எப்போ தூங்குனேன்...எப்படி தூங்குனேன்னு தெரியாமலே தூங்கிப் போயிட்டேன்...லேசான மல்லிகை வாசம் சித்தம் துளைக்க முழிப்பு தட்டுனப்போ ஜன்னல் வெளியே வானம் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாறி போயிருந்தது

ம்ம் மணி ஆறாகியிருக்கும்...மல்லி வாசம் எங்கே இருந்து வருதுன்னு ஜன்னல் வழியா எட்டிப்பார்த்தேன்...அந்த மல்லி கொடியிலே அங்கே ஒண்ணும் இங்கெ ஒண்ணுமா மொட்டு எல்லாம் மெல்ல விரிஞ்சு கிடந்துச்சு..வலியையும் மீறி ஒரு புத்துணர்வு வந்துச்சு அப்படி ஒரு அழகானக் காட்சி அது...ஒரு துண்டை எடுத்து மேலுக்குப் போத்திட்டு கீழே போய் நின்னேன்...அப்பா மல்லி வாசம் என்ன ஒரு அற்புத வாசம்...மூச்சை நல்லா இழுத்து மல்லி வாசத்தை எனக்குள்ளே இழுத்துகிட்டேன்...

"ம்ம்ம்ஹும்..."

"ம்ம்ம்கூம்"

"ம்ம்ம்ம்ம்ம்கூஊஉம்"

"காதுல்ல கூட செம் அடி போலிருக்கு....சுத்தமாப் போயிடுச்சு போல..." சுளுக்குன்னு ஒரு சிரிப்பு சத்தம் வேற உசுப்பு ஏத்த பொட்டியை உரசுன வத்திகுச்சி மாதிரி சர்ன்னு திரும்புனேன்..பூவைப் பாத்து புயல் வணக்கம் வச்சு பாத்து இருக்கீங்களா...அப்படி ஒரு காட்சி அங்கே நடக்க இருந்துச்சு..ஆனா ஒரு சின்ன இடைவெளியில் நடக்காமல் தடுக்கப்பட்டது....

ரேடியோவில்ல சிம்புவோட அப்பா பொன்னான மனசே பூவான மனசே நீ வைக்காத பொண்ணு மேல ஆசன்னு பாடிகிட்டு இருந்தார்....பொல்லாத மனசு எங்கே அறிவுரையைக் கேக்குது.... ஒத்த சடைப் போட்டு தோளுக்கு முன்னாடிப் போட்டிருந்தா அதுல்ல நீளாமா மல்லிகை பூ....பாவாடைத் தாவணியிலே தாமிரபரணியின் சலசல குளிர்ச்சியோடு மலர்ச்சியா நின்னுட்டிருந்தா... பத்த வச்ச பூவாணாம்...பூக்காம புஸ்ஸாகிப் போனப்புல்ல என் கோபம் நான் எவ்வளவோ தடுத்தும் என்னைக் கேக்காம வெளிநடப்பு செய்துகிட்டு இருந்துச்சு....

மொத்தக் கோபத்தையும் ஒத்தச் சிரிப்புல்ல ஊதி தள்ளிட்டா....இருந்தாலும் கெத்து குறையாமல் போலி முறைப்பு காட்டிட்டு அவளைப் பாத்தேன்...

"ம்ம் யாராவது அப்பாவி சிக்கிட்டா....சப்புன்னு அடிச்சு தான் வீரன்ன்னு நினைப்புல்ல திரியறது...அப்புறம் உண்மையா அடிதடிக்கு அஞ்சாதவங்க வந்தா...அடி உதைன்னு வாங்கிட்டு ஆஸ்பிட்டல் போய படுக்குறது.. இதெல்லாம் என்ன சங்கதியோ...."

"அப்பாவியா...யாரு அப்பவி?" அணையப் போன கோப தீயில் அவப் பேச்சு எண்ணெய் விட்டது போலிருந்துச்சு...

"வைத்தி தான்....பாவம் வைத்தி...தெரியுமா?"

"நிப்பாட்டிட்டு கிளம்பிரு....போதும்" வலி அதிகமா இருந்தும் இரண்டு கைகளையும் தூக்கி அவளைக் கும்பிட்டு தான் கேட்டேன்....

"ஒண்ணு அடி தடி இல்லைன்னா கும்பிடா..." மறுபடியும் அதே சிரிப்பு...

"போதும் போயிரு...." என் குரல்ல இருந்த கடுமை எனக்கே ஆச்சரியமா இருந்தது..

"போகல்லன்னா.. என்ன பொம்பள பிள்ளை தானே....வைத்தி மாதிரி அப்பாவியா வாங்கிட்டு போயிருவேன்னு நினைப்பா.... கராத்தே பழகி இருக்கேன்..பிளாக் பெல்ட் வாங்கியிருக்கேன்.....தெரிஞ்சுக்கோ.." அப்பவும் அவ சிரிச்சுகிட்டே தான் சொன்னா..

"சரிடீ... கேக்குது... உனக்கு உன் தாவணியைப் பிடிச்சிட்டு பின்னாலே வரதுக்கு அந்த வைத்தி தான் லாயக்கு... அவன் அப்பாவி தான்.... இப்போ என்னை வெறுப்பு ஏத்தறதை விட்டுட்டு அவனைத் தேடிப் போறீய்யா..." எப்படியோ என் கோபத்தை கொட்டி தீர்த்த திருப்தி எனக்குள்ளே வந்துச்சு....

"என்னச் சொன்ன..... வைத்தியைத் தேடிப் போகணுமா... தப்பா பேச வேணாம்... சொல்லிட்டேன்..." முதல் முறையா அவ முகத்துல்ல சிரிப்பு தொலைஞ்சுப் போயிருந்துச்சு....எனக்கு லேசா சிரிப்பு வந்துச்சு..

"ஆமா..அவன் கிட்டத் தான் போகச் சொன்னேன்.... ரெண்டு பேரும் சேந்து தானே வண்டியிலே ஒட்டிகிட்டும் உரசிகிட்டும் வீதி உலா வந்தீங்க.... என்னா சிரிப்பு.... என்னா நெருக்கம்...."

"என்னப் பேசுறன்னு புரிஞ்சு பேசுறீய்யான்னு யோசிச்சுக்கோ..." அவ முகத்தில் சிரிப்பு சுத்தமாப் போய் ஒரு இறுக்கம் நிறைஞ்சு இருந்தது..

"ஆமா எல்லாம் தெரியுது... உங்க தில்லியிலே எப்படின்னு தெரியாது... இங்கே ஒருத்தன் கூட ஒருத்தி சுத்துன்னா அது தான் அர்த்தம்...அதுவும் வைத்தியைப் பத்தி உன்னை விடஎனக்குத் தெரியும்...உன்னை என்ன எல்லாம் பண்ணியிருப்பான்னும் .. தெரிஞ்சுக்க முடியும்..அந்தக் கேவலப் பொழப்பு எனக்கு வேணாம்...போயிரு..."

ஆத்திரத்தில் பொங்குவாள்ன்னு பாத்தா..பொல பொலன்னு அழ ஆரம்பிச்சுட்டா.....சொன்ன சொல்லைப் பத்தி நினைக்கல்லன்னாலும் அவ அழுதது என்னமோ மாதிரி ஆயிடுச்சு...அப்பவும் கூட எனக்கு அவ மேல கோபம்ன்னு சொல்ல முடியாது..வைத்தி மேலத் தான் கோபம்... வைத்தியை அவ மெச்சுனது தான் கோபம்... அந்தக் கோபத்துக்கான காரண காரியங்களை ஆராயுற மனசுல்ல நான் அப்போ இல்லை...
அவ அழறதைப் பாக்க பிடிக்காம நான் திரும்பிகிட்டேன்....

எவ்வளவு நேரம் அப்படியே நின்னேன்னு எனக்கேத் தெரியாது.... நான் திரும்பி பாக்கும் போது அவ அங்கே இல்லை....அந்நேரத்துக்கு நான் சந்தோசம் தான் பட்டிருக்கணும்.... ஆனா மனசு ஒரு ஓரமா வலிச்சது...அந்த வலி அப்படியே மனசு முழுக்க பரவ ஆரம்பிச்சது....

ராத்திரி முழுக்கத் தூங்க முடியல்ல... கட்டில்ல புரண்டு உருண்டு படுத்துப் பாத்தேன்..உறக்கம் பிடிக்கல்ல... அவ அழுகையும் சிரிப்பும் மாறி மாறி என் கண்ணு முன்னாடி வந்துப் போச்சு...

அட வெக்கம் கெட்ட விளக்கெண்ணெய்.... அந்தப் புள்ள மேல பிரியமாத் தானே இருக்க அப்புறம் எதுக்குடா அந்தப் புள்ளயைக் கண்ணீர் விட வச்ச.... உள் மனசு சாட்டை சுத்திச்சு... அந்த சாட்டை முனையைப் பிடிச்சு இழுத்த சைத்தான் மனசு... மாப்பி பொம்பளை புள்ள அழுகை எல்லாம் நம்பிராதே... நீ ஆம்பளை.... என்னச் செஞ்சுபுட்ட..... வில்லங்க வைத்தி என்னச் செஞ்சியிருப்பானோ அந்த உண்மையைத் தானே சொன்ன அப்படின்னு சப்பைக் கட்டு கட்டுச்சு...

இரண்டு மனமும் ஒவ்வொரு பக்கம் பிரிஞ்சு கிடக்க... நான் மல்லாந்து விட்டம் பாத்து கண் மூடாம இரவைக் கழிச்சேன்....

காலையிலே செம மழை....கண் முழிச்சி ஜன்னல் வழியாப் பாத்தேன்... மழையடிச்ச வேகத்துல்ல நேத்து பூத்த பிஞ்சு மல்லி செடி முறிஞ்சுப் போய் கிடந்துச்சு...

இன்னும் வாசம் வீசும்

4 comments:

ஆயில்யன் said...

//ஆமா எல்லாம் தெரியுது... உங்க தில்லியிலே எப்படின்னு தெரியாது... இங்கே ஒருத்தன் கூட ஒருத்தி சுத்துன்னா அது தான் அர்த்தம்...அதுவும் வைத்தியைப் பத்தி உன்னை விடஎனக்குத் தெரியும்...உன்னை என்ன எல்லாம் பண்ணியிருப்பான்னும் .. தெரிஞ்சுக்க முடியும்..அந்தக் கேவலப் பொழப்பு எனக்கு வேணாம்...போயிரு.//

ப்ச் இப்பிடியா அட்டாக் பண்றது ? ஒரே அழுவாச்சியா போச்சு :(

கோபிநாத் said...

அட கொடுமையே!! ;(

Sridharan said...

தொடரட்டும் மல்லியின் வாசம்!!

Sridharan said...

அடுத்த பதிவு என்னைக்கு? விரைவாக பதிவிட வேண்டுகிறேன்...