Monday, September 11, 2006

கவி 22:வான் தொடும் பொழுது

இன்றும் என் மீது மிச்சமிருக்கிறது
இன்னும் அந்த வலி என்னில் இருக்கிறது
மரணத்தோடு ஒரு சந்திப்பு
மௌனங்களின் ஆர்ப்பரிப்பு

எட்டிப் பிடிக்கும் தூரத்தில்
என்னருகே மரணம்
எல்லாம் முடிந்தது
என்னும் மரணத்தின் ஆணவம்

அறுத்தெறிந்து ஓடினேன்
அழுகையின் ஊடே ஓடினேன்
நிற்கவும் நேரமில்லை
நின்றாலும் ஆவது ஏதுமில்லை

பூக்களின் புன்னகை
பாதையின் ஓரமாய்
கண்ணாடி ஓவியங்கள்
காயங்களின் தோரணமாய்
பொக்கிஷ்மாய் நினைத்ததெல்லாம்
பொருட்டாய் தோன்றவில்லை

இன்னொருத்தனின் வலி
இதயம் தொடவில்லை
இன்னொரு குரல்
இம்மியளவும் என்னை நிறுத்தவில்லை

சாவின் சங்கிலிக்கு
சிக்கக் கூடாது
சாத்தான்கள் சத்தம்
சாட்டை சுழற்றியது

என் கைகளில்
என் உயிரின் சுவாசம்
பிழைத்துக் கொண்டேன்
பிறருக்கு இல்லாத பாக்கியம்
பிழைத்துக் கொண்டேன்

உயரங்கள் மிஞ்சவில்லை
உயிர் மட்டும் மிஞ்சியது..
உடைந்தக் கண்ணாடியில்
உடைந்த என் உருவம்

என் அடையாளம்
எனக்குத் தெரியவில்லை
என் முகம்
எனக்குப் பிடிக்கவில்லை

என்னை முத்தமிட வந்து
என்னைத் தேடிய மரணமே
என்னைக் காணாது
எத்தனைக் கோபம் உனக்கு?

அழுத கண்ணீர் காயந்துவிட்டது
அழிந்த உயிர்கள் ???

இன்று காலை இந்து நாளிதழில் 9/11 உலக வியாபார மையம் இடிப்பட்டப் போது அதில் சிக்கி உயிர் பிழைத்த ஒருவரது பேட்டியினைப் பிரசுரித்து இருந்தார்கள். கண்ணருக்கே பலரின் மரணம் கண்டு அதில் தான் பிழைத்ததுக் குறித்து அந்த மனிதனால் மகிழ்ச்சி கொள்ளமுடியவில்லை.. ஒரு வித குற்றயுணர்ச்சியினால் அந்த மனிதர் தவிக்கிறார். அந்த தாக்கத்தின் வெளிப்பாடு தான் இந்தக் கவிதை.

10 comments:

ILA (a) இளா said...

//இன்னொருத்தனின் வலி
இதயம் தொடவில்லை
இன்னொரு குரல்
இம்மியளவும் என்னை நிறுத்தவில்லை//

கவிதையின் உயிர் நாடியான இந்த வரிகளில், வார்த்தைகள் விளையாடி இருக்கின்றன. நாளுக்கேத்த கவிதை

Anonymous said...

ஐந்து வயதில்
அவன் கையில் மலர்ச்செண்டு
தந்தையின் அறிமுகம்
கல்லறையோடு மட்டும்

உன் முகம் பார்த்திருந்தால்
சிந்தித்திருப்பரோ ஒரு கணம்
அக்கணம் தப்பி இருந்தால்
பிழைத்திருப்பரோ அத்துனை ஜனம்

மரணம் அன்று
மனிதனைக் கொண்டு சென்றது
மனிதனோ இன்று
மரணம் கொண்டு வருகிறான்

ஆயுதம் படைத்ததால்
நீ ஆண்டவன் அல்ல
ஆண்டவனே ஆனாலும்
இந்த அருவடை நியாயமல்ல

மனிதனே நீ
மறந்துபோனது மனிதமடா
இப்படியும் மனிதனாய் பிறந்ததில்
கர்வம் என்னடா

வானமே நீ பெய்தழிந்தாலும்
குறுதியில் சிவந்த புவியிது காய்ந்திடுமோ
காலக்கடிகாரம் பின்னோக்கி ஓடினாலும்
இந்த ஒரு நாள் வரலாற்றில் மறைந்திடுமோ

இதுன்னு இல்ல.. டிசம்பர் 6, செப்டம்பர் 11... இனியும் தேதிகளை குறிக்காமல் இருந்தால் ... மனிதன் வாழ மனிதன் இடம் கொடுத்தால்.. இந்த வலியும் மாற ஒரு வாய்ப்பு இருக்குமோ??

கைப்புள்ள said...

//என் அடையாளம்
எனக்குத் தெரியவில்லை
என் முகம்
எனக்குப் பிடிக்கவில்லை

என்னை முத்தமிட வந்து
என்னைத் தேடிய மரணமே
என்னைக் காணாது
எத்தனைக் கோபம் உனக்கு?

அழுத கண்ணீர் காயந்துவிட்டது
அழிந்த உயிர்கள் ???//

நல்ல கவிதை தேவ். குற்ற உணர்வின் வெளிப்பாடு மிகத் தெளிவாக வந்திருக்கிறது.

Unknown said...

வாசிப்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி இளா

Unknown said...

கன்யா அசத்துறீங்க போங்க. உங்களது இந்தக் கவிதையின் ஒவ்வொரு வரியும் ஒரு கருத்துப் புதையல் தான்.

//ஆயுதம் படைத்ததால்
நீ ஆண்டவன் அல்ல
ஆண்டவனே ஆனாலும்
இந்த அருவடை நியாயமல்ல//
இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன்.

Unknown said...

கைப்பு உண்மையிலே அந்த நாளில் தப்பிப் பிழைத்த ஒவ்வொருத்தரும் இந்த உணர்வுகளால் கட்டாயம் கசக்கிப் பிழியப்பட்டிருப்பார்கள்.

கன்யா சொல்வதுப் போல் மனிதன் வாழ மனிதன் இடம் கொடுத்தால்.. இந்த வலியும் மாற ஒரு வாய்ப்பு இருக்குமோ??

Anonymous said...

ithula thappitha antha manitha ethukku kutra unarchi kolrar? ithula avaroda thappu enna irukku dev enakku puriyala kindly help me rasigai :)

Unknown said...

அந்த மனிதனைப் பொறுத்த வரை அவனால் அந்த விபத்தில் தன்னை மட்டுமே காப்பாற்றி கொள்ள முடிந்தது. தன் கண் முன்னால் அத்தனை உயிர்கள் போனப் போதும் அவனால் எதுவும் செய்ய முடியாமல் போனதே என்ற ஒரு மன அழுத்தம்.. அது ஒரு விதமான குற்ற உணர்ச்சியாய் அவன் மனத்தில் தங்கிருச்சுன்னு சொல்லலாம்.

Unknown said...

பழையக் கவிதைகளை இப்போதுதான் வாசிக்கிறேன்!

உயிர் பிழைத்ததற்கு மகிழ முடியாத இந்த வலி வித்தியாசமானது. சரியாச் சொல்லிருக்கீங்க...

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

பாராட்டி எழுதும் தகுதி எனக்கில்லை. இரசிக்கிறேன் தங்களின் வரிகளை மிகவும்.