Monday, December 04, 2006

கதை11:அப்பா - பாகம் 1

ஜன்னல் ஓரமாய் இருந்த தொலைபேசி அறையின் மௌனத்தைக் கிழிக்கிற மாதிரி அலறியது. வெளியே மழை நின்னும் நிக்காமலும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

ரஞ்சனி சோபாவில் காலை மடிச்சுகிட்டு உட்கார்ந்து இருந்தாள். விரல் நகத்தை விடாம கடிச்சுகிட்டே விட்டத்தைப் பார்த்துகிட்டு இருந்தா. தொலைபேசி சத்தம் கேட்டதும் அவளோட அந்த மீன் கண்கள் இன்னும் பெரிசாவே விரிஞ்சுப் போச்சு. அந்தக் கண்ணைப் பார்த்து தானே அவ மேலே காதலாகி கசிந்துருகி இப்போ கணவனாகி..ம்ம்ம் இப்போதைக்கு என் நிலைமையை இதுக்கு மேல விவரிக்க விரும்பல்ல.

தொலைபேசி இன்னும் அலறிகிட்டே தான் இருக்கு... நான் ரஞசனியைப் பார்க்க ரஞ்சனி வேணும்னே என்னையும் தொலைபேசியின் அலறலையும் தவிர்க்கற மாதிரி வேற எங்கேயோ பார்வையைத் திருப்பிகிட்டா.

எனக்கு ரஞ்சனி மேல கோபம் கோபமாய் வந்தது.

"ரஞ்சு.. போன் அடிக்கறது உன் காதுல்ல விழ்றதா இல்லையா?"

பதில் இல்லை.

"ரஞசு நான் உன் கிட்டத் தான் சொல்லுறேன்... "

மறுபடியும் பதில் இல்லை.

இதுக்கும் மேல அவகிட்டச் சொல்லி புண்ணயமில்லன்னு நான் போய் தொலைபேசியைக் கையில் எடுத்து ஹலோ சொன்னேன்...

மறுமுனையில் பேசியவருக்கு ம் கொட்டியபடி ரஞ்சனியை பார்த்தேன். ரஞ்சனி இப்பவும் என்னைப் பார்க்கவில்லை. நான் தொலைப்பேசியைக் கீழே வைச்சுட்டு ஜன்னலைப் பார்த்துட்டு நின்னேன். மழை கொஞசம் வேகமெடுத்த மாதிரி இருந்துச்சு.

ரஞ்சனிப் பக்கம் திரும்பாமல் அறைக்குள் போனேன். அவசர அவசரமா டிராவல் பேக்கல்ல இரண்டு நாளுக்கு தேவையான துணிகளை எடுத்துப் போட்டுகிட்டு மறுபடியும்
ஹாலுக்கு வந்தேன்.

ரஞ்சனி கையிலே டிவி ரிமோட்டை வச்சுகிட்டு கன்னாபின்னான்னு சேனலை மாத்திகிட்டு இருந்தா. என் பக்கம் திரும்பவே இல்லை.

டிவி ரிமோட்டை அவ கையிலே இருந்து வலுக்கட்டாயமாப் பிடுங்கிட்டு அவ கண்களுக்கு நேரா என் கண்களைக் கொண்டு போனேன்...பல முறை நான் பார்த்து பார்த்து பரவசமடைந்த கண்கள் அப்போ அங்கே இல்லை... ஒரு வித வெறுப்பும் கோபமும் எரிச்சலும் அந்தக் கண்களின் அழகினைத் திரைப் போட்டு மறைத்துக் கொண்டிருந்தன.

"லுக் ரஞ்சு... எல்லாம் முடிஞ்சுப் போச்சு... உன்னோட புருஷனா இல்ல.. நல்ல நண்பனாச் சொல்லுறேன்.. எல்லாத்தையும் மறந்துட்டு கிளம்பு"

ரஞ்சனி தன் உதட்டைப் பிதுக்கிக் கொண்டாள்.. என்னை வெறி வந்தார் போல எட்டிப் பிடித்துத் தள்ளி விட்டாள். அவக் கண்களில் கண்ணீர்...

"அஸ்வின்.. யூ நோ...HOW MUCH I HATE HIM..?" ரஞ்சனி கட்டுபடுத்தக் கூடிய நிலையில் இல்லை. வெடிக்க தயாராக் இருக்கும் ஒரு எரிமலை மாதிரி இருந்தா.

"எஸ் ஐ நோ... நல்லாத் தான் தெரியும்.. அதனாலத் தான் சொல்லுறேன்...அந்த வெறுப்பை எல்லாம் நீ சுமந்தது போதும்.. வா..வந்து தூக்கி எறிஞ்சுட்டு வந்துடலாம்"

ரஞ்சனி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்...அவள் கோபத்தை என் மீது காட்டாமல் இருக்க எல்லா முயற்சிகளையும் செய்து தோத்துக்கிட்டு இருந்தா. அந்த நிமிடம் நான் ரஞ்சனியை இன்னும் அதிக அதிகமாய் காதலிச்சேன்...

அவளை விட்டு இரண்டு அடி தள்ளி நின்னேன்...

"மரணத்துல்லக் கூட மன்னிக்க முடியாத தப்புன்னு எதுவும் இல்ல ரஞ்சு... ப்ளீஸ் உங்க அப்பாவும் ஒரு மனுஷன் தான்..அவரை மன்னிக்க முயற்சி பண்ணு..."

அவள் பதிலுக்குக் காத்திருக்காமல் நான் வாசல் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தேன்.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போய் சேலம் செல்லும் பேருந்தைத் தேடிப் பிடிச்சு ஏறி உட்கார்ந்துகிட்டேன்.

பஸ் கிளம்புறதுக்கு முன்னாடி என் மனசு கிளம்பிடுச்சு..ரிவர்ஸ் கியர் போட்டுகிட்டு பின்னாடி போக ஆரம்பிச்சுடுச்சு..

1999 எம்.சி.ஏ படிக்க மதுரைப் போயிருந்த நேரம்...அங்கேத் தான் ரஞ்சனிய முதன் முதலாச் சந்திச்சேன்.. ரஞ்சனி நல்லா படிக்கிற பொண்ணு. ஆனா கலகலப்பு என்பது மருந்துக்கு கூட அவக் கிட்ட கிடையாது. சரியான் சுடுமூஞ்சி.. சுள்ளுன்ணு கோபம் வரும்...யார் கிட்டயும் பேசமாட்டா.. அப்படியே மீறி பேசினாலும் நறுக் தெறிச்சா மாதிரி வெடுக்குன்னு பேசி காயபப்டுத்திடுவா. எனக்கு கலகலப்பா நம்ம ஜோதிகா மாதிரி பொண்ணுங்க தான் இஷ்ட்டம் அதுனால இவ இருக்கற பக்கம் சைட் அடிக்கக் கூட திரும்புனது இல்ல.

ஆனா எப்போ எப்படி என் கவனம் பக்கம் திரும்பிச்சுன்னு எனக்கேத் தெரியல்ல...ஒரு நாள் எதேச்சையா அவளோட நோட் புக் ஒண்ணைப் புரட்டும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைச்சுது..அதுல்ல முழுக்க முழுக்க கவிதை.... எல்லாம் அந்த சுடுமூஞ்சி தான் எழுதியிருந்துச்சு.. படிச்ச எனக்குச் சுத்தமா நம்பிக்கையே வர்றல்ல... அப்படி கவிதைகளை அந்தச் சுடு மூஞ்சியால எழுத முடியுமான்னு...

அவ்வளவு ரசனையான வரிகள் படிச்ச என் மனசை என்னவோ பண்ணிடுச்சு...

நான் நல்லா வரைவேன்...உண்மையாவே.. சரின்னு சுடுமூஞ்சி எழுதுன ஒவ்வொரு கவிதைக்கும் உட்கார்ந்து ஏத்த மாதிரி பென்சில் ஸ்கெட்சஸ் வரைஞ்சு... சுடுமூஞ்சி கிட்டக் கொண்டு போய் நீட்டுனேன்.. ஆனாப் பாருங்க அந்த சுடு மூஞ்சி ஈவு இரக்கமில்லாமல் படங்களை அரையும் குரையுமாப் பார்த்துட்டு

"என்ன இது கிறுக்குத் தனமா படமெல்லாம் வரைஞ்சுகிட்டு... லவ் பண்றீயா?" அப்படின்னு வெடுக்குன்னு கேட்டிருச்சு.

எனக்கு என்ன தோணுச்சுன்னு தெரியல்ல...

"ம்ஹ்ம் உன்னை லவ் பண்ணல்ல... ஆனா கல்யாணம் பண்ணி புள்ளகுட்டி எல்லாம் பெத்துகிட்டு கடைசி வரைக்கும் நீ எழுதுற கவிதைக்கெல்லாம் இப்படி கிறுக்குத் தனமாப் படம் வரைஞ்சிகிட்டே செத்துப் போயிடணும் அவ்வளவு தான்" அப்படின்னு மூச்சு விடாமச் சொல்லிட்டு சுடுமூஞ்சியைத் திரும்பிப் பார்க்காமல் போயிட்டேன்..

"ஹேய் உனக்குப் பைத்தியமா?" சுடு மூஞ்சி எனக்குப் பின்னால் கத்தியது என் காதில் நல்லாவே கேட்டது. நான் திரும்பவில்லை.

"யூ ... என்னப் பண்ணிட்டு போற...இடியட்.." அன்று வரை சுடுமூஞ்சி அவ்வளவு அலறலாய் கத்தி நான் மட்டுமில்லை எங்க காலேஜ்ல்ல யாருமே கேட்டது இல்ல. மதுரைப் பொண்ணுங்க எல்லாத்துக்கும் சவுண்ட் ஜாஸ்திம்பாம்ங்க.. நம்ம சுடுமூஞ்சியும் அதை அன்னிக்கு நிருபிச்சிடுச்சு.

அதுக்கு அப்புறம் அவ் கிட்ட நான் மூஞ்சிக் கொடுத்துப் பேசவே இல்ல,. ஆனா சுடுமூஞ்சி என்னை ஓரக் கண்ணாலேப் பார்த்துக்கும். அதையே நான் கவ்னிச்சுட்டா அப்படியே கல்கத்தா காளி மாதிரி ஒரு போஸ் கொடுப்பா. அவக் கூட வார்த்தையாலேப் பேசல்லயே தவிர அவளை வரையாத நாளே கிடையாதுன்னு சொல்லலாம்.

பச்சைக் கலர் சுரிதார்ல்ல ஒரு படம்...அந்தச் சுரிதார்ல்ல அவ ஒரு தேவதை மாதிரி இருப்பா.. அந்தச் சுரிதார்ல்ல இருக்கும் போது மட்டும அவ உதட்டோரம் ஒரு சின்ன புன்னகை இருந்துட்டே இருக்கும் ( எல்லாம் நம்ம நினைப்பு தான்)..முன் நெத்தியிலே முடி கத்தையா வந்து விழுற மாதிரி நான் வரைஞ்சதலே எனக்கு ரொம்ப பிடித்தமான படம்.. தினமும் ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி அந்த படத்துக் கூட ஒரு ரெண்டு மணி நேரமாவது கடலை போடாமல் நான் தலைச் சாயச்சதாச் சரித்திரமும் இல்ல பூகோளமும் இல்ல.
என் ரூம் மேட் தூக்கம் என்னால் பறி போனது தனி கதை..காதலிச்சுப் பாருங்கப்பா அர்த்த ராத்திரி உளறல்கள் இலக்கியமாத் தெரியும்..

இப்படியே கல்லூரி முடியற நாளும் நெருங்கி வந்துடுச்சு. வெறும் படம் மட்டும் வாழ்க்கைக்குப் போதாதுன்னு முடிவு பண்ணிட்டு நேரா சுடுமூஞ்சியப் பாக்கப் போனேன்.

"ம்ம் சொல்லு எப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போற?" அப்படின்னு தைரியாமவே கேட்டுட்டேன். சுடுமூஞ்சி அடிச்சு வைக்கப் போகுதுன்னு ரெண்டு அடி கேப் விட்டெ நின்னேன். ஆனாப் பாருங்க சுடுமூஞ்சி துளி கூட கோபப் படமா கக்கபிக்கன்னு என்னைப் பார்த்து சிரிச்சுடுச்சு. எனக்கு வானம் தலையிலே முட்டுன மாதிரி இருந்துச்சு.. அந்த கணம் பாய்ஸ் பாட்டு எகிறி குதித்தேன் என்னைச் சுத்தி கேக்குது...

கையிலிருந்து ஒரு கவிதை நோட் புக்கை எடுத்து என் கையிலேக் கொடுத்து
"இந்தக் கவிதைக்கெல்லாம் எப்போ நீ படம் வரைஞ்சு முடிக்கிறியோ அந்த நிமிஷமே நான் உன்னக் கட்டிக்க ரெடி"
அப்படின்னு ரெண்டு கண்ணு முழுக்க சிரிப்பு வழிய என்னைப் பார்த்தா... அந்தப் பார்வை ஒண்ணு போதுமே....இன்னும் நூறு ஜென்மம் ஆனாலும் உன்னோடத் தான் என் வாழ்க்கை அமையணும்ன்னு ஆண்டவன் கிட்ட வேண்டிக்கிட்டேன்..

பஸ் பிரேக் சத்தம் ஞாபகத்தைக் கலைச்சு விட்டிருச்சு... எழுந்து உட்கார்ந்தேன்...திண்டிவனம் மேம்பாலம் கண்ணில் தெரிந்தது...

பாகம் 2

16 comments:

செந்தழல் ரவி said...

அடுத்த பகுதிக்காக காத்திருக்கேன்...சிறப்பான நடை...!!!! வாழ்த்துக்கள்...

சந்தோஷ் aka Santhosh said...

நல்லா வந்து இருக்கு தேவு... அடுத்த பகுதியை எப்ப எழுத போகிறாய்?

Divya said...

வாவ் தேவ், சூப்பரா போகுது கதை, சிடுமூஞ்சி பொண்ணை நல்லா விவரிச்சிருக்கிறீங்க , அடுத்த பாகம் எப்போ??

நாமக்கல் சிபி said...

சூப்பரா போகுது தலைவா...
அடுத்த பகுதி சீக்கிரம் போடவும்...

பாலராஜன்கீதா said...

பொதுவாகப் பெண்களுக்கு அப்பாமீதும் பையன்களுக்கு அம்மாமீதும் (converse is also true) அதிகம் பாசம் இருக்குமாம். ஆனால் இங்கே ?

அடுத்த பதிவுகளுக்குக் காத்திருக்கிறேன்.

தேவ் | Dev said...

//அடுத்த பகுதிக்காக காத்திருக்கேன்...சிறப்பான நடை...!!!! வாழ்த்துக்கள்... //

நன்றி ரவி சீக்கிரமா அடுத்தப் பகுதியினை வெளியிட முயற்சிக்கிறேன்.

தேவ் | Dev said...

//நல்லா வந்து இருக்கு தேவு... அடுத்த பகுதியை எப்ப எழுத போகிறாய்? //

நன்றி சந்தோஷ்.. அடுத்தப் பகுதி அதிவிரைவில் வரும் நண்பா

தேவ் | Dev said...

//வாவ் தேவ், சூப்பரா போகுது கதை, //
நன்றி திவ்யா


//சிடுமூஞ்சி பொண்ணை நல்லா விவரிச்சிருக்கிறீங்க //,
நீங்களே பாராட்டிறீங்க.. அப்படின்னு கரெக்ட்டாத் தான் இருக்கும்:)


//அடுத்த பாகம் எப்போ?? //

அடுத்தப் பகுதி அதிவிரைவில் வரும்

தேவ் | Dev said...

//சூப்பரா போகுது தலைவா...
அடுத்த பகுதி சீக்கிரம் போடவும்... //

நன்றி பாலாஜி.. சீக்கிரமா கதையின் அடுத்தக் கட்டத்தைப் போட முயற்சிக்கிறேன்.

தேவ் | Dev said...

//பொதுவாகப் பெண்களுக்கு அப்பாமீதும் பையன்களுக்கு அம்மாமீதும் (converse is also true) அதிகம் பாசம் இருக்குமாம். ஆனால் இங்கே ?

அடுத்த பதிவுகளுக்குக் காத்திருக்கிறேன்.//

வாங்க பலராஜன் அடுத்தப் பாகம் போட்டு விட்டேன்.. உங்கள் கேள்விக்கான விடைகள் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.. படிச்சுட்டு உங்க கருத்தினை மறக்காமல் சொல்லுங்க...

சேதுக்கரசி said...

நல்லாப் போகுது...

தேவ் | Dev said...

//நல்லாப் போகுது... //

நன்றி சேதுக்கரசி.

Naveen Prakash said...

தேவ்
மீண்டும் ஒருமுறை மிக அழகான நடையில் ஒரு கதை !!

//காதலிச்சுப் பாருங்கப்பா அர்த்த ராத்திரி உளறல்கள் இலக்கியமாத் தெரியும்..//

ரசித்தேன் :))

தேவ் | Dev said...

//தேவ்
மீண்டும் ஒருமுறை மிக அழகான நடையில் ஒரு கதை !!//

நன்றி நவீன்

thurgah said...

dev...u r story made me so sad.there is no words to describe it...simple superb story!

தேவ் | Dev said...

//dev...u r story made me so sad.there is no words to describe it...simple superb story!//


Thanks thurgah