Monday, July 09, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 2

சின்னக்குளமும் விடுமுறைகளும் - 1

வீட்டுக்குள் நுழையும் முன் சந்து முனையில் நான் தடுக்கப்பட்டேன்.

"ஆஆஅம்மா.." பளீர்ன்னு கன்னத்தில் விழுந்த அறையில் கண் இருட்டி விட்டது எனக்கு. அதைத் தொடர்ந்து ஆள் ஆளுக்குப் போட்டு அமுக்கி மிதித்துவிட்டார்கள். சட்டைக் கிழிந்து... புழுதி எல்லாம் முகத்தில் அப்பிக் கிடக்க..படு பயங்கரமான அவமானத்தோடு நான் எழும்பிய நேரம் இஸ்ரா வேகமாய் என் உதவிக்கு வந்தான்.

"போடா " என அவனை உதறிவிட்டு கண்களில் நீர் வழிய நடக்க ஆரம்பித்தேன்.. நடக்க நடக்க அவமான உணர்ச்சி அதிகமாக திடீர் என திரும்பினேன்... என்னைக் கன்னத்தில் அறைஞ்சானே அந்த நெட்டக் கொக்கன் மட்டும் தான் என் கண்ணில் தெரிந்தான். ஒரு பேய்தனமான வெறி என்னில் ஏற அவனைப் பார்த்து வேகமாய் ஓடினேன். பாய்ந்து அவன் கையை ஒரு கடி கடித்தேன்... அவன் கையில் இருந்து ரத்தம் பீய்ச்சி அடித்தது. மத்தப் பசங்க எல்லாம் என் ஆவேசத்தைப் பார்த்து கொஞ்சம் இல்லை ரொம்பவே மிரண்டு ஒதுங்கிட்டாங்க.... இஸ்ராவே கூட கொஞ்சம் நடுங்கித் தான் போயிட்டான்.

"வாங்கடா... வாங்க இப்போ வந்து அடிங்க..." நான் கையில் மண்ணைக் குவித்து வீசிய படி வட்டம் போட்டேன். கடிப்பட்டவன் அலறல் கேட்டு பெரியவர்கள் கூட்டம் விரைந்து வர.. இஸ்ரா என்னைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான். எனக்கு வெறி மட்டும் அடங்கவில்லை. யார் கண்ணிலும் படாமல் மாடி அறைக்கு என்னைக் கூட்டிப் போய் படுக்க வைத்தான் இஸ்ரா. காயங்களைக் கழுவி ஒத்தடம் கொடுத்தான். வீட்டில் எப்படியோ விவரம் தெரியவராமல் சமாளித்து முடித்தோம்.

'உனக்கு ஏன்லே இவ்வளவு வெறி?"

"அவனைப் பயங்கரமாக் கடிச்சுட்டேனா?... "

"வெறி நாய் தோத்ததுப் போ"

"ஊசி போடணுமா என்ன?"

"ம்ஹ்ம்.. தெரியல்ல.. பாவம்லே அவன்.."

"நான் மட்டும்.. இங்கே பார்.. அஞ்சு விரலும் பதிஞ்சு இருக்கு.." என் கன்னத்தைக் காட்டினேன்.

ஒருவழியாக சண்டை முடிந்து இஸ்ராவின் உபயத்தில் சமாதானம் பேசப்பட்டது.. பழையபடி கூட்டாஞ்ச்சோறு.. குளத்து மேட்டில் கிரிக்கெட் என வாழ்க்கை சகஜ நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருந்தது.

ஒரு மதிய பொழுதில் மாமாவின் சைக்கிளை இரவல் வாங்கிக் கொண்டு நாசரேத் ரூபி தியேட்டருக்குப் படம் பார்க்கக் கிளம்பினே. இஸ்ரா நேராகத் தியேட்டருக்கு வருவதாக வாக்குக் கொடுத்துவிட்டு காலையில் தூத்துக்குடி டவுண் வரைக்கும் எதோ வேலையாகப் போயிருந்தான். சைக்கிள் டயரில் காத்தை முழுசா நிரப்பிக்கொண்டு.. சும்மா வாருன தலையைக் கலைச்சு விட்டுட்டு பர்மா பஜார்ல்ல வாங்குன கூலிங் கிளாஸைக் கண்ணுல்ல மாட்டிக்கிட்டு... நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா.. பக்கத்துல்ல பட்டுல்ல ரோஜா பாட்டை வாய் விட்டு சத்தமாப் பாடிக்கிட்டுச் சைக்கிளை அழுத்தி மிதித்தேன்.

சின்னக்குளம் பஸ் நிறுத்தம்.. (அந்த ஊருக்கு மொத்தம் வந்து போறதே நாலு பஸ் அதுக்கு ஒரு பஸ் நிறுத்தம் வேற..) அருகே வரும் போது பாட்டு சத்தம் என்னையுமறியாமல் உச்சஸ்துதியை அடைந்திருந்தது... என்னைக்குமே எனக்கு நீ தான் பொண்டாட்டி.. என்னைக்குமே எனக்கு நீ தான் பொண்டாட்டி.. அதே வரியைப் பாடிகிட்டே போனவன் சுளுக்குன்னு சிரிப்பு சத்தம் கேட்டு சைக்கிளை நிறூத்துனேன்... பஸ் ஸ்டாண்ட்ல்ல ரேச்சல் நின்னுகிட்டு இருக்கா..

"என்ன இந்தப் பக்கம்?"

"2 மணி ரத்னா பஸ்க்கு வெயிட் பண்ணுறேன்"

"தூத்துக்குடிக்கா?"

"இல்ல நாசரேதுக்கு.. அங்கே எதோ தியேட்டர்ல்ல போக்கிரி ராஜா படம் போட்டுருக்காங்களாம்.. ரஜினி படம் அதான் பார்க்கக் கிளம்பியாச்சு"

"ஓகோ நீங்களூம் ரஜினி பேனா... நான் தீவிர பேன்.. " அதோட நிறுத்தியிருக்கலாம். தலையைக் கலைச்சுட்டு அப்புறம் கண்ணாடியைச் சுழட்டிச் சுத்திப் போட்டு... அப்படி இப்படின்னு ரஜினி மாதிரி நடந்து நாட்டியம் எல்லாம் ஆடி முடிக்கவும் தான் ரேச்சல் பேசுனா.

"ச்சீ ச்சீ எனக்கு ரஜினி எல்லாம் பிடிக்காது.. நான் கமல் பேன்.. அவர் என்ன அழகு.. சும்மா ரோஜாப்பூ மாதிரி கலர்..ச்சோ சுவீட்" ரேச்சல் சொர்க்கலோகம் போவது போல் கண்களை மூடி கைகளைக் கன்னத்தில் வைத்தாள்.

ரேச்சலின் அந்த கோலத்தைப் பார்த்து எனக்கு ச்சோ சுவீட் சொல்லணும் போல இருந்துச்சு...ஆனாலும் அதை எல்லாம் அடக்கி வச்சுக்கிட்டு "ஆமா ரஜினி பிடிக்கல்லன்னா பொறவு எதுக்கு ரஜினி படம்"

"இவனுக்கு ரஜினி மட்டும் தான் பிடிக்கும் அதான்.." பக்கத்து புதரில் இருந்து பேண்ட் ஜிப்பைப் போட சிரமப்பட்டுக்கொண்டே பொடியன் வெளியே வந்தான். இவள் அவனுக்கு ஜிப்பைப் போட்டு விட்டாள்.

"என் தம்பி.. தேர்ட் கிளாஸ் படிக்கிறான்.. பெரிய ரஜினி பேன்.." என்று அறிமுகம் செய்தாள்.

"ரஜினி பண்ற ஸ்டைல் பிடிக்குதோ இல்லையோ.. கொஞ்சம் முன்னாடி ரஜினி மாதிரி நீ பண்ண ஸ்டைல் எல்லாம் செம காமெடியா இருந்துச்சு.. இன்னும் சிரிப்பு வருது" சொல்லிவிட்டு சிரித்தாள்.

காமெடியா.. நான் பண்ணது காமெடியா.. மும்பை முழு குசும்பா.. சென்னைக் கெத்தைக் காட்டுறேன் பார் அப்படின்னு உள்ளுக்குள்ளேச் சொல்லிகிட்டேன்.

"2 மணி ரத்னா தூத்துக்குடி தான் போகும்.. நாசரேத் போகணும்ன்னா நடந்து தான் போகணும்"

"நீ எங்கேப் போற.?"

"நான் நாசரேத்க்குத் தான் போறேன்..."

"அப்படின்னா என் தம்பியைப் படத்துக்குக் கூட்டிட்டுப் போறியா?"

"ஏன் நீ வர்றல்லயா? ரஜினி படம் நல்லாத் தான் இருக்கும்"

"அதுக்கு இல்ல.. இருக்கது ஒரு சைக்கிள்..அதுல்ல டபுள்ஸ் போலாம்... நான் எப்படி வர்றது..அதுவும் உன்னாலே ரெண்டு பேரை வச்சு ஓட்ட முடியுமா?"

அவ்வளவு அவள் அப்படிக் கேட்டதும் எனக்கு வீரம் தீரம் எல்லாம் பொங்கிப் புனல் எடுத்துருச்சு.

"ஹலோ நான் எல்லாம் ஏத்தத்துல்ல ஏழு குடம் தண்ணியை வச்சு மிதிச்சவன்... சென்னையிலே தண்ணிப் பஞ்சத்திலே எங்க வீட்டுக்கு முழு தண்ணி சப்ளை நான் தான் தெரியும்ல்ல.. நீயும் உன் தம்பியும் எனக்கு ஜூஜூஜூபி..." என்று சொல்லிவிட்டு கண்ணாடியைச் சுத்திப் போட்டேன்.

அவள் தம்பி குண்டோதரன் குடுகுடுன்னு ஓடி வந்து முன்னாடி பாரில் ஏறி உட்கார்ந்துக்கிட்டான். நானும் ஏறி உட்காந்ததும் ரேச்சல் ரொம்பவே ஒயிலா ஏறி பின்னால் உட்கார்ந்தாள். ஒன்பது கிலோ மீட்டர் சைக்கிள் மிதிக்கணும்ன்னு நினைக்கும் போதே முன் பாரம் மூச்சை நிறுத்தியது. இருந்தாலும் வீரம் தீரம் எலலத்தையும் கூட்டி கையிலேயும் கால்லயும் வ்ச்சுகிட்டு வழித்துணைக்கு முப்பாட்டன் அவர் தாத்தன்னு எல்லாரையும் மனசுக்குள்ளே கூப்பிட்டுகிட்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பிச்சேன்.. இஸ்ரா எனக்கு எப்போவோ ஒரு முறை காட்டிக்கொடுத்த காட்டுப் பாதையிலே சைக்கிளை விட்டேன்..

மிதிக்கும் சோர்வு தெரியாமல் இருக்க அவளிடம் பேச்சுக் கொடுத்ததில் அவள் பயங்கர படிப்பாளி என்று தெரிய வந்தது.. பாடச்சம்பந்தமாய் பேசுவதைத் தவிர்த்தா அவளுக்கும் நல்லது எனக்கும் நல்லதுன்னு முடிவு பண்ணிகிட்டு விளையாட்டு பக்கம் பேச்சைத் திருப்புனா..அவங்க அப்பா போலீஸ்காரர் அதுல்லயும் அவளை நல்லாவே கோச் பண்ணி வ்ச்சிருக்கார்.. இப்படியே ஏழு கிலோ மீட்டர் தூரம் பேச்சிலே வண்டியை மிதிச்சுட்டுப் போயிட்டேன். அவளைப் பத்தியும் கூடவே தேவை இல்லாமல் அவள் தம்பியைப் பற்றியும் நிறைய விசயங்களை அறிந்துக்கொள்ள முடிந்தது.

காட்டுப் பாதை முடியும் இடம் வந்தது.. தியேட்டர் இன்னும் கொஞ்சம் தூரம் தான்..எதாவது பேசணுமே..

"ஆமா இப்படி ஒரு பையனை நம்பி சைக்கிள்ல்ல காடு வழியா வர்றீய உனக்கும் பயமா இல்லையா?"

"எங்க அக்கா பிளாக் பெல்ட் தெரியும்ல்ல... ஒரே நேரத்துல்ல ஓம்பது பேரை அடிப்பா..அக்காக் கூட பைட் பண்ணுறீயா?" பொடியன் குண்டைத் தூக்கிப் போட்டான்.

"அப்படியா.. எனக்குக் கூட சிலம்பம் எல்லாம் தெரியும்.. அதுல்ல நானும் பிளாக் பெல்ட்..நமக்குள்ளே சண்டை எல்லாம் வேணாம் சமாதானமாப் போயிருவோம்.. தியேட்டர் வந்துருச்சு " என நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு நிற்கும் போது ரேச்சல் என்னருகில் வந்தாள். எனக்கும் மட்டுமே கேட்கும் குரலில் மெதுவாகப் பேசினாள்.

"இதே மாதிரி பாம்பேல்ல ஒரு பொண்ணும் பையனும் தனியாக் காட்டு வழியா வந்து இருந்தா ஒரு முத்தம் கொடுக்கவாது பையன் ட்ரை பண்ணியிருப்பான்... தின்னவேலிப் பசங்க எல்லாம் வெறும் அருவாளைத் தூக்கிட்டு குரலை உயர்த்தத் தாண்டா லாய்க்குகிறது சரியாத் தான் இருக்கு போ"

அவள் சொல்லிவிட்டு ஒய்யாரமா நடந்து தியேட்டருக்குள் போனாள். எனக்கு லேசாப் பொசிஞ்ச சாரல் மழையையும் மீறி வேர்த்துக் கொட்டுச்சு... அவள் போவதையேப் பார்த்தவன் சைக்கிளுக்கு ஸ்டாண்ட் சரியாப் போடாம அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொத்த சைக்கிளையும் விழவச்சேன்..

ஸடாண்ட்கார அண்ணாச்சி திட்டுவதுக் கூடக் காதில் விழமால் பேயடிச்சவன் மாதிரி எதோ திசையில் நடந்தவனை இஸ்ரா வந்து ஒரு உலுக்கு உலுக்கி எழுப்பி விட்டான்..

விடுமுறை அனுபவங்கள் இன்னும் தொடரும்..

6 comments:

நாமக்கல் சிபி said...

//"இதே மாதிரி பாம்பேல்ல ஒரு பொண்ணும் பையனும் தனியாக் காட்டு வழியா வந்து இருந்தா ஒரு முத்தம் கொடுக்கவாது பையன் ட்ரை பண்ணியிருப்பான்... தின்னவேலிப் பசங்க எல்லாம் வெறும் அருவாளைத் தூக்கிட்டு குரலை உயர்த்தத் தாண்டா லாய்க்குகிறது சரியாத் தான் இருக்கு போ"//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளமாக்கிடுறாங்கப்பா!

இலவசக்கொத்தனார் said...

போன பதிவுல உனக்காக பதில் சொன்னாலும் இப்போ எனக்கே டவுட்டு வருதேடே....

மனதின் ஓசை said...

மெட்ராஸ்கார ரஜினி ரசிகரே..

ஓவர் ஜொள்ளு உடம்புக்கு ஆகாது ராசா.:-))

கதை(?) நல்லாவே போகுது..

TBR. JOSPEH said...

போன பதிவுல உனக்காக பதில் சொன்னாலும் இப்போ எனக்கே டவுட்டு வருதேடே....//

சேச்சே எனக்கு வரலை... நல்லாத்தான் இருக்கு...

அவர் போக்குல எழுதட்டும் விடுங்க... எவ்வளவு தூரந்தான் போறார்னு பாப்பமே...

சேதுக்கரசி said...

//ரேச்சலின் அந்த கோலத்தைப் பார்த்து எனக்கு ச்சோ சுவீட் சொல்லணும் போல இருந்துச்சு//

:-))) தொடர் நல்லாவே போகுதுங்க...

G.Ragavan said...

அடடா! அடுத்து என்னாச்சோ தெரியலையே! முத்தம் கொடுத்தானா? காரியத்த மொத்தமும் கெடுத்தானா?