Thursday, January 31, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 2

முந்தைய பகுதி படிக்க

வரதராஜன் அவென்யுவின் வரலாற்றை மேடையில் ஏறி குருமூர்த்தி அங்கிள் சொல்ல ஆரம்பிக்கும் போது மணி சரியா ஆறு...

அதைக் கேட்டு முடிக்கறதுக்கு ஒரு அசாத்தியமான பொறுமை வேணும்.. அம்பது வருச வரலாறு ஆச்சே சட்டுன்னு சொல்லிர முடியாது இல்லையா... முடிஞ்ச் வரைக்கும் சுருக்கமாச் சொல்லுறேன் கேளுங்க...

வரதராஜன்ங்கறவர் திருச்சிக்கு பக்கம் இருக்க பெரம்பலூர்காரர்.. நாற்பதுகளின் இறுதியில் சென்னைக்கு வந்து இரும்பு உதிரி பாகம் தயாரிக்குற ஒரு சின்ன லேத்து பட்டறை ஆரம்பிச்சார்.. அதுல்ல அவரையும் சேர்த்து மொத்தம் நாலு வேலைப் பார்த்தாங்க..அதுல்ல ஒருத்தர் குருமூர்த்தி அங்கிள்...அப்போ அங்கிளுக்கு பத்து பன்னிரெண்டு வயசு இருக்கும்... நாளாவட்டத்துல்ல லேத்து நல்லா போகவே... வேலைக்குன்னு திருச்சிகாரவங்க எல்லாம் வரதராஜன் கிட்ட கிளம்பி வர ஆரம்பிச்சாங்க..அப்படி அம்பதுகளின் பிற்பகுதியில் வந்தக் கூட்டத்துல்ல எங்க அப்பாவும் ஒருத்தர்.

பகுதி நேரம் அங்கே வேலைப் பாத்துகிட்டே படிப்பையும் அப்பா தொடர குருமூர்த்தி அங்கிள் கொஞ்சமா உதவுனார்ன்னாலும் பெரிய அளவுல்ல உதவுனது வரதராஜன்.

இப்படி திருச்சியில்ல இருந்து வந்த கும்பல் எல்லாரும் தங்கறதுக்கு லேத்து பட்டறை பக்கத்துல்லயே அறைகள் கட்டிக் கொடுத்தார் வரதராஜன். பின்னர் பட்டறை பெரிதாகி பேக்டரியா மாறி இடம் பெயர்ந்தது.. வெறும் அறைகளாக இருந்த இடம்..கொஞ்சம் கொஞ்சமா வீடுகள் நிறைந்த குடியிருப்பாவே மாறி போனது...

அப்போ அந்த குடியிருப்புக்கு பெயர் எதுவும் கிடையாது...ஆனா பேச்சளவிலே வரதராஜன் காலனின்னும்..வரதராஜன் அவென்யுன்னும் அழைக்கப்பட்டு பின்னாடி சட்டரீதியாக வரதராஜன் அவென்யுவாக கிட்டத்தட்ட அறுபதுகளின் பிற்பாதியில் நிலைப்பெற்றது.. நல்ல மனசு படைச்ச வரதராஜனால் அங்கு பணியாற்றிய அப்பா, குருமூர்த்தி அங்கிள் இன்னும் பலர் சொந்த வீட்டுக்காரர்கள் ஆனார்கள்...

வரதராஜன் தயவாலும் அப்பா, குருமூர்த்தி அங்கிள் போன்றோரின் முயற்சிகளாலும் அவென்யு பெரும் வளர்ச்சிகளை அடைந்தது.. பூங்கா...தார் ரோடு...மரங்கள்...மின் விளக்கு..நீர் வசதி சின்னதாய் ஒரு வணிக வளாகம் விளையாட்டுத் திடல் அப்படின்னு அந்த நற்பணிகளின் விளைவாய் கிடைச்ச பலன்களின் பட்டியல் ஒரளவுக்கு நீளமானது தான்...

நாங்க எல்லாம் ஹஸ்கூல் வந்த காலத்துல்ல தான் இந்த ஆண்டுவிழா கொண்டாட்டம் எல்லாம் ஆரம்பிச்சது.. அதுக்கு சங்கீதா அப்பா சந்தானம் அங்கிள் தான் முக்கிய காரணம்... பிற்காலங்களில் வரதராஜனாரை அவ்வளவாய் தெரியாத குடும்பங்கள் எங்கள் அவென்யுக்கு வந்து குடியேறிய போது இந்த ஆண்டு விழாக்கள் மூலம் நாங்கள் ஒன்றுபட உதவியது..

இது தான் வரதராஜன் அவென்யுவின் அம்பது வருட வரலாறு...

"ரஞ்சனி வரல்லயா..." என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சோமுவிடம் கேட்டேன்.

"இல்லப்பா....கணேஸ் வந்திட்டான் பார்..." அப்போது தான் கணேஸ் அவென்யுவிற்குள் நுழைந்தான். எங்களைப் பார்த்து கையை அசைத்தப் படி வந்தான்.

"தொப்பையும் தொந்தியுமா அசல் கணேசனாவே ஆயிட்டான்" சோமு சிரித்தப் படியே சொன்னான்.

கணேசனோடு ஜிம் போன அந்த பொற்காலங்கள் நினைவுக்கு வந்து போகவே நானும் சிரித்தேன். வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பின் பேச்சு அவரவர் வேலைப் பக்கம் திரும்பியது.

"என்னடா பேங்க் வேலை எல்லாம் சொகமாப் போவுதா?" சீனியைக் கேட்டான் சுதாகர்

"எங்கேய்யா எல்லாம் ஒரே போட்டா போட்டியாப் போவுது.... கட் த்ரோட் காம்ப்டஷின்... டார்கெட் வேற மாசம் மாசம் மேலேப் போயிட்டே இருக்கு... ஆறு லட்சம் பேர் இருக்க ஏரியாவுல்ல ஆறு கோடி அக்கவுண்ட் ஓப்பன் பண்ணச் சொல்லி டார்கெட்...பாப்புலேசன் கன்ட்ரோல் மாதிரி டார்கெட் கன்ட்ரோல்ன்னு ஒண்ணு வந்தா நல்லா இருக்கும்...."
சீனியின் பாதி பேச்சிலே என் மனம் எங்கெங்கோ அலைய ஆரம்பித்தது.. மேடையில் அப்பா உட்கார்ந்திருந்தார். அப்பாவை நான் பல முறை மேடையில் பார்த்திருக்கிறேன்.. இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அவர் கம்பீரம் கூடிக்கொண்டு போவதாகவே எனக்கு படும்...

மாமரத்தில் ஆங்காங்கு இருந்த பிஞ்சுகள் மீது என் கண்கள் போய் வந்தன...இந்த மாமரக் கன்னு நான் நட்டது என நினைக்கும் போது உள்ளுக்குள் பெருமையாக இருந்தது...

"நைட் பார்ட்டி இருக்குல்ல...." கணேஸ் கிசுகிசுப்பாய் கேட்டான்.

"அது இல்லாமலா..எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சி" சோமு பதில் சொன்னான்.

"என்னப் பார்டி... அதான் சாப்பாடு எல்லாம் இங்கேயே முடிக்கப் போறோமே..." சீனியின் மனைவி கேட்டாள்.

"ம்ம்ம் அம்மாடி இது இந்த திருட்டு பசங்க பார்ட்டி...நமக்கெல்லாம் அழைப்பு கிடையாது" எனக் கண்ணடித்துச் சிரித்தாள் கார்த்திகா.

"அப்படின்னா?" அவள் லேசான முறைப்போடு சீனியைப் பார்த்தாள்.

"இல்லம்மா வெறும் பியர் மட்டும் தான்...ஒரு வருசமாச்சு நான் பியர் அடிச்சு... ப்ளிஸ்" சீனியின் கெஞ்சல் பார்த்து எல்லாருக்கும் சிரிப்பு வந்தது.எனக்கு வேற என்னவோ ஞாபகம் வந்தது....

"ஒர்ரெ ஒரு பியர் தான்ப்பாஆஆஆஆ......" அந்த ஆ எபெக்ட் அப்பாவின் பெல்ட் என் முதுகின் நடு மத்தியில் கோடு ரோடு எல்லாம் போட்டு போனதால் என் வாயில் இருந்து வந்தது...

"எங்கேயிருந்துடா உனக்கு இந்த தைரியம் வந்துச்சு... நம்ம பரம்பரையிலே யாருமே இதை எல்லாம் தொட்டது இல்ல..." அப்பாவின் கோபம் குறையவில்லை...

"நாட்டுல்ல மக்களை குடிமக்கள்ன்னு அரசாங்கமே கூப்பிடுது..... ஆனா தம் மக்கள் குடிச்சா அப்பாக்களுக்கு பொறுக்க மாட்டேங்குது... அரசாங்கம் சொல்லுறதை கேப்ப்பேனா...இல்ல அப்பா சொல்லுறதைக் கேப்பேனாஆஆஆஆஆஆ" என் பேச்சு முடிவதற்குள் அடுத்த ரவுண்ட் ரோடு போடும் வேலையை ஆரம்பமாக மீண்டும் அதே ஆ எபெக்ட் என்னிலிருந்து வெளிபட்டது...

"டேய் மாப்பிள்ளை.. நீ இவனைப் பெத்ததுக்கு பேசாம நைட் ஷோவுக்குப் போயிருக்கலாம்டா.. விடு விடு இன்னும் எதுக்கு உன் கையை புண்ணாக்கிட்டு இருக்க..." சொன்னது என் மாமா.. அந்த ஆளுக்கும் எனக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம் தான்.


அந்தாளு என்னை எங்க அப்பா கிட்ட போட்டுக் கொடுக்கறது ஒண்ணும் புதுசு இல்ல..வழக்கமா நடக்குறது தான்... ஆனா எப்பவும் இல்லமா எனக்கு இப்போ அந்த சந்தேகம் ரொம்ப வலுவாச்சு.. நான் பொறந்ததுக்கும் அப்பா நைட் ஷோ போகறதுக்கும் என்ன சம்பந்தம்..அடி வாங்கிய வேகத்தில் மூளை வேறு கொஞ்சம் மெதுவாய் யோசித்தது....பின்னாளில் ஒரு பொழுதில் அந்த விவரமெல்லாம் தெரிந்தப் பின் மாமாவோடு உட்கார்ந்து கள் குடிக்கும் போது மாமாவைப் பார்த்து"யோவ் மாமா உன்னிய பெத்ததுக்கு தாத்தா ராத்திரி வயல் காவலுக்குப் போயிருக்கலாம்ய்யா .. வயலாவது மிஞ்சியிருக்கும்.. குடும்பமாவது செழிச்சுருக்கும்ன்னு " டயலாக் விட்டு நான் தீத்துகிட்டது தனிக்கதை.

"பத்தாம் கிளாஸ் ப்ரீட்சையிலே தேறுவானான்னு தெரியல்ல... பதினைஞ்சு வயசுல்ல பீர் கேக்குது....இவனை எல்லாம்...." மறுபடியும் பெல்ட் உயர கிளம்பியது....

"அப்பா......." அது என் குரல் இல்லை....அவனே தான் .. என் அண்ணன்... அவன் தான் அப்பாவைக் கூப்பிட்டான்.

"ப்ளஸ் டூ ரிசல்ட் வந்துருச்சுப்பா....நான் தான்ப்பா ஸ்கூல் பர்ஸ்ட்.... 1200க்கு 1162 மார்க்ப்பா...."

அப்பாவின் பெல்ட் என் மீது லேசாய் உரசியப் படி தரையில் விழுந்து நாதியற்று கிடந்தது... அந்த நிமிடம் எனக்கும் அதுக்கும் அதிக வித்தியாசம் இல்லை..

"உன்னோட இந்தச் சாதனைப் பிரதாபத்தைக் கேக்குறதுக்கு முன்னாடி இன்னும் ஒரு அம்பது நூறு பெல்ட்டடி வாங்கி நான் அல்பாயுசுல்ல போயிருக்கலாம்டா..." எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்

சரவணன் என் அண்ணன் தான் ஆனால் ஏனோ அவனை எனக்கு எப்போதுமே பிடித்ததில்லை.. அவனுக்கு என்னைப் பிடிக்குமா நான் என்றுமே தெரிந்து கொள்ள முயன்றதில்லை...

தொடரும்

13 comments:

கோபிநாத் said...

அண்ணே வழக்கமான உங்க எழுத்து நடை சூப்பர்ண்ணே :))

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)

தேவ் | Dev said...

//கோபிநாத் said...

அண்ணே வழக்கமான உங்க எழுத்து நடை சூப்பர்ண்ணே :))

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)//

நன்றி கோபி..அடுத்த பாகம் அடுத்த வாரம் கண்டிப்பாக வெளிவரும்

இலவசக்கொத்தனார் said...

கடைசிப் பேராவில் மட்டும் அண்ணன் பேரு - டைட்டிலைத் தவிர. கதையின் போக்கு கொஞ்சம் புரியுது. ஆனா உம்ம எழுத்து நடைக்காகவே வாரா வாரம் காத்திருந்து படிப்போமில்ல!

CVR said...

Sibling rivalry-a???
Superu!!

சுவாரஸ்யமான கதைக்களம்!!
அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க! :-)

sathish said...

Ego பிரச்சனையா!! அடுத்து என்ன ஆச்சு??

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
என் அண்ணன் பேரு சரவணன் - 2
==>
சரி, தம்பி பேரு? =)
[சும்மா டமாசுக்கு]

G.Ragavan said...

பாத்திரங்களக் கொண்டு வந்து சேக்குறீங்க பாருங்க...அங்க நிக்குறீங்க நீங்க. இல்ல... நல்லா நாற்காலி போட்டு உக்காந்திருக்கீங்க. அருமையான நடை. நல்ல எழுத்து.

aruna said...

நல்லா எழுதுறீங்க தேவ்!!!
அன்புடன் அருணா

துளசி கோபால் said...

கதை நல்லாப்போகுது.

ம்ம்ம்ம்...அப்புறம்?

அனுசுயா said...

வர வர உங்க எழுத்துல மெருகு கூடிகிட்டே போகுதுங்க. நிஜமாதான் சொல்லுறேன். வாழ்த்துக்கள்

Divya said...

உங்களூக்கே உரித்தான அழகான எழுத்து நடை.......அசத்தல் தேவ் அண்ணா!!

ILA(a)இளா said...

அடடா, ஆரமிபிச்சாச்சா. வந்து படிக்கிறேன்..

Anonymous said...

very nice dev as usual-----rasigai :)