Thursday, January 24, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 1

வரதராஜன் அவென்யூ.... என் வாழ்க்கையின் கால் நூற்றாண்டை நான் கழிச்ச இடம்...வரதராஜன் அவென்யு பரபரப்பான சென்னை நகரத்தின் மையத்தில் அமைந்திருந்த ஒரு பதட்டமில்லாத குடியிருப்பு பகுதி. வாசலில் எம்.ஜி.ஆர் ஆட்டோ ஸ்டாண்ட். அதுக்குப் பக்கத்துல்ல ஒரு பொட்டி கடை..அந்தக் கடைக்கு பேர் "காகா" கடை.. பெயர் காரணம் இன்னி வரைக்கும் தெரியாது.. நான், சீனி,சோமு, சுதாகர்,கணேஸ் எல்லாம் முதல் முதலா திருட்டு தம் அடிக்க காசு சேர்த்து ஒரு சிசர்ஸ் வாங்குனோம்... அந்த ஒரு சிகரெட்டை அஞ்சு பேர் இழுத்தோம்... அப்புறம் வீட்டுல்ல அகப்பட்டு அகம் புறம் எல்லாம் அல்லல் பட்டது ஒரு தனி புராணம்.

காகா கடைக்கு நாலு கடை தள்ளி மணி சைக்கிள் கடை... ஹவர் சைக்கிள் வாடகைக்கு கிடைக்குமிடம்.. அரை ஹவருக்கு எட்டணா.. ஒரு சைக்கிளை இரண்டு பேர் எடுத்துப்போம்.. ஆளுக்கு நாலணா..சீனி தான் நமக்கு செட்... பயலுக்கு சைக்கிள் ஓட்டவே பயம்... அதுன்னாலே நமக்கு எக்ஸ்ட்ராவா அஞ்சு பத்து நிமிசம் சிக்கும்...மாடி வீட்டு கார்த்திகா...கடைசி வீட்டு ரஞ்சனி இந்தக் கும்பல் முன்னாடியும் பின்னாடியும் அந்தச் சைக்கிள்ல்ல போய் தான் சீன் எல்லாம் போடுவோம்...அஞ்சாம் கிளாஸ்ல்ல இருந்து பத்தாம் கிளாஸ் வரைக்கும் இந்த சைக்கிள் சாகசம் எல்லாம் தொடர்ந்தது..அப்புறம் ஏனோ கார்த்திகா, ரஞ்சனி மேல எல்லாம் இருந்த ஈர்ப்பு வெகுவா குறைஞ்சுப் போச்சு... அதுக்கெல்லாம் காரணம் என் கூட கணக்கு ட்யூசனுக்கு வந்த சங்கீதா மேல எனக்கு ஒரு இது வந்தது தான்னு அப்போ நினைச்சேன்...

பத்தாம் கிளாஸ் லீவுல்ல மணி சைக்கிள் கடை மாடியிலே மிலிட்டிரிகாரரு ஒருத்தர் ஜிம் ஆரம்பிச்சார், அர்னால்ட் நடிச்ச காமாண்டோ படத்து போஸ்ட்டரும் ராம்போ படத்து ஸ்டலோன் போஸ்ட்டரும் இன்ன பிற உடை அணிய மறுத்த அந்த கால சல்மான் கான்களும் கை மடக்கி மாரை நிமிர்த்தி கொண்டிருக்கும் போஸ்ட்டர்களும் ஜிம்க்கு எங்களை வா வா என அழைக்க... உள் பனியனை வெளியே போட்டுகிட்டு சாயங்காலம் ஆன நானும் கணேசும் கிளம்பிருவோம்... நான் ஸ்டலோனாவும் அவன் அர்னால்ட்டா ஆவுறதும் எங்க ஒரே லட்சியமா வலம் வந்த காலமது.. இதுல்ல கொடுமை என்னன்னா அர்னால்ட்டோட முழு பெயரை சொல்ல எங்களால் அந்த காலக் கட்டங்களில் முடிந்தது இல்லை... அர்னால்ட் சுவாசினேகர் என்ற அவர் பெயரை அர்னால்ட் சொஜ்ஜிநக்குனார் என்று கணேஸ் தான் கிட்டத்தட்ட வாய் சுளுக்காமல் சொல்லுவான்..

அந்த ஒரே காரணத்துக்காக அர்னால்ட்டின் அடுத்த வாரிசா அவனை அறிவித்து விட்டோம்.. இந்த ஜிம் எல்லாம் நல்லா தான் போச்சு....ஒரு நாள் கொஞ்சம் ஆர்வம் அதிகமாகி தூக்க கூடாத பாரத்தை தூக்க முடியாம தூக்கி என் கால் சுண்டு விரல் சிதற நான் சிலிப்பாக்குற வரைக்கும்.. அப்புறம் அடுத்து வந்த ஆஸ்பத்திரி செலவுகளால் என் ஜிம் செலவு நிறுத்தப்பட்டது..தென்னகம் ஒரு சில்வர்ஸ்டர் ஸ்ட்லோனை இழக்க வேண்டியதாய் போனது

வரதராஜன் அவென்யூவைச் சுத்தி ஏகப்பட்ட மரங்கள் இருக்கும்...நானே என் கையால நட்டு வச்ச மரங்களும் இருக்கு.. அப்படி ஒரு மாமரத்துக்கு அடியிலே தான் இப்போ நின்னுகிட்டு இருக்கேன். இதமானக் காற்று வந்து முகத்தில் மோதிப் போனது...நான் கட்டியிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தேன்.. மணி நாலேகால்... இன்னும் இரண்டு மணி நேரத்துல்ல எல்லாரும் வந்துருவாங்க...சீனி...கணேஸ்..சுதா...சோமு எல்லாரும் வந்துருவாங்க...அப்படியே யோசிச்சுகிட்டே மரத்தடி பெஞ்சுல்ல தலையைச் சாய்த்தேன்...

"சிவா.... சவுக்யமா... இந்த வாட்டியும் வீட்டுல்ல கூட்டிட்டு வர்றல்லயா?" கார்த்திகா இடுப்பில் அவள் இரண்டாவது பொண்ணு.. சின்ன வயசு கார்த்திகா மாதிரியே இருந்தாள்...

"இல்ல கார்த்தி.... அவங்க அப்பாவுக்கு ஓடம்பு சரியில்ல...அதான் வர முடியல்ல... வரணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டாப்பா" சிரித்தப் படி பதில் சொன்னேன்...

"ஹே சிவா...." சீனியே தான்... போன வருசம் வராதவன் இந்த வருசம் சீக்கிரமாவே வந்துட்டான். அவனைப் பார்த்தவுடனே எனக்குச் சந்தோசம் அப்படியே பொங்கிருச்சு. கார்த்திகாவின் வீட்டுகாரரும் எங்களோடு சேர்ந்து கொண்டார்... மரத்தடி கொஞ்சம் கொஞ்சமாய் களை கட்டியது... கார்த்திகா வீட்டில் இருந்து காபி பலகாரம் வந்தது...

சீனிக்கு போன வருசம் தான் கல்யாணம் ஆகி இருந்தது.. அவனோடு அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்ணையேக் காதலித்து கல்யாணம் பண்ணிகொண்டிருந்தான். அவளையும் கூட்டி வந்திருந்தான். அவளும் சட்டென எங்களோடு பழகிவிட்டாள். நல்ல கலகலப்பான ஜோடியாக தெரிந்தார்கள்... என்னவளின் நினைவு வந்தது.. அவ வந்திருந்தா இன்னும் கலகலப்பா இருந்து இருக்கும்..மனத்திற்குள் சொல்லிக்கொண்டேன்.

மணி அஞ்சரையை நெருங்கும் போது கிட்டத் தட்ட எல்லாருமே வந்து விட்டிருந்தார்கள்..கணேஸ் மட்டும் வரவில்லை.. சோமு அவன் மொபைலுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தான்.

முகம் கழுவிட்டு வரலாம்ன்னு எழுந்து வீட்டுக்கு கிளம்பினேன்...அப்போது வழியில் சங்கீதாவைப் பார்த்தேன்....

"ஹேய் சங்கீ என்ன இது.... போனத் தடவைப் பாத்தப்போவும் கேரியிங்க்கா தான் இருந்த.. இப்போவுமா... உன் வீட்டுகாரருக்கு ரொம்ப சவுகரியமான உத்யோகம் போலிருக்கு..."

"அடப்பாவி நீ என்னப் பாத்து ரெண்டு வருசம் ஆச்சு.... ஆனாலும் உனக்கு இன்னும் பழைய நக்கல் குறையல்லடா..... உனக்கு ஒரு அறை கொடுத்தது பத்தாதுடா... பத்து அறை கொடுத்துருக்கணும்..."
பரஸ்பர நல விசாரிப்புக்களுக்குப் பின் மீண்டும் சந்திக்கலாம்ன்னு சொல்லிட்டு வீட்டை நோக்கி கொஞ்சம் வேகமாகவே நடந்தேன்.

நடக்கும் போதே சங்கீதா என் கன்னத்தில் அறைந்த அந்த பழைய சம்பவம் மனத்தில் நிழலாடியது..அப்படியே கை அதுவாக கன்னம் சென்று தடவியது. உதட்டில் என்னையுமறியாமல் ஒரு புன்னகை.

காலம் தான் எவ்வளவு மருத்துவம் பார்க்கிறது..மனத்தில் ஏற்படும் எத்தனையோ காயங்கள் காலத்தின் சுழற்சியால் குணப்பட்டு போகிறது....அந்த விதத்துல்ல பத்து வருசத்துக்கு முந்தி சங்கீதா என் கன்னத்துல்ல அடிச்சது அன்னிக்கு ரொம்பவே பெரிய வேதனை...ஆனா இன்னிக்கு நினைச்சா சிரிப்பா வருது... விஷ்யம் பெரிசா ஒண்ணுமில்லங்க.... பார்க்க அழகா இருப்பா சங்கீதா பானுப்பிரியா மாதிரி கண்ணு...கொஞ்சம் மயக்கம்.. ரொம்பவே கிறக்கம்... இதுல்ல கூட இருந்த பசங்க எல்லாம் உசுப்பேத்த..மலையாள கரையோரம் நம்ம காதல் புயல் மையம் கொண்டுருச்சு... அப்போ வேற தலைவரோட முத்து படம் வேற வந்துச்சா.. அதுல்ல தலைவர் கேரளா போய் எல்லாரையும் கேப்பாரே.... ஆங் அதே தான் அதை தான் ஒரு சிகப்பு ஸ்கெட்ச் பேன் வச்சு ஒரு நல்ல ஏ4 பேப்பர்ல்ல எழுதி கீழே சிவா அப்படின்னு ஸ்டைலா கையெழுத்து போட்டு அவ கிட்டக் கொடுத்தேன்..பொண்ணுக்கு பளிச்சுன்னு கோபம் வந்து பளார்ன்னு அறைஞ்சுட்டா..

ஏத்திவிட்ட எல்லா பயல்களும் எட்டப்பனா மாறி ஓட்டமெடுக்க... ஒரு மாதிரியா போயிருச்சு...ஒரு வாரம் வாழ்க்கையே பிடிக்கல்ல..அதுக்கப்புறம் அடுத்த ஞாயித்துகிழமை. சங்கீதாவே என்னைப் பாக்க என் வீட்டுக்கு வந்தா...

"ஏன் ட்யூசனுக்கு வர்றல்ல?" ரொம்ப உரிமையாக் கேட்டா."

" .......... "
பேசல்லன்னா பரவாயில்ல... இந்தா ஏ4 பேப்பர் ரெட் ஸ்கெட்ச் பேன் எழுதிக் காட்டு" என்றாள்

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது...அந்த சிரிப்பின் ஊடே என் ஆயுசுக்கு நான் கொண்டாடும் படியான ஒரு சினேகிதியாய் சங்கீதா எனக்கு கிடைத்தாள்..என்னவளின் போட்டோவைப் பார்த்துவிட்டு இந்த மூஞ்சிக்கு ( என் மூஞ்சி தான்) இப்படி ஒரு தேவதை அமையறதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும்..பேசாம தாலியைக் கட்டுடா என அன்பு கட்டளை போட்டவர்களில் முதன்மையானவள் அவளே....

வீட்டுக்குப் போய் முகம் கை கால் எல்லாம் கழுவிட்டு மதியம் தேய்ச்சு வாங்குன சட்டைப் பேண்ட் போட்டுகிட்டு வாசலுக்கு வந்தேன்....

"இருடா நானும் வர்றேன்" என கிளம்பிய அப்பாவை ஆச்சரியமாய் பார்த்தேன்.

அப்பா வருவதற்குள் நான் சொல்ல வேண்டிய விசயம் ஒண்ணுருக்கு....
"ஆமாங்க என் பேர் சிவகுமார்...சிவான்னு கூப்பிடுவாங்க....சின்ன வயசுல்ல சிறுத்தை சிவான்னு செல்லமாக் கூப்பிடுவாங்க...இப்போ நான் இருக்கது பெங்களூர்ல்ல... வேலை பாக்குறது..பிளாக் எல்லாம் பிளாக் பண்ணாத ஒரு நல்ல ஐடி கம்பெனியிலே... எனக்கு ஒரு தடவை மட்டும் கல்யாணம் ஆயிருச்சு... ஒரு பொண்டாட்டி ஒரு பொண்ணு.. அப்பா..அம்மா இருக்கது சென்னையிலே.. நான் பிறந்து வளந்த வரதராஜன் அவென்யூல்ல...இப்போ நான் இங்கே வந்துருக்குது... வரதராஜன் அவென்யூவோட ஆண்டு விழாவுக்கு....அவென்யூ கட்டி சரியா அம்பது வருசம் ஆயிருச்சு... அம்பதாவது ஆண்டு விழா இன்னும் அரை மணி நேரத்துல்ல துவங்கப் போகுது... அதுக்கு தான் எல்லாரும் வந்துருக்காங்க....

உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் எங்க வீட்டு வேப்பமரத்து காத்து போல வராதுன்னு நான் அடிக்கடி என்னவளிடம் சொல்வது உண்டு... இப்பவும் சொல்லணும் போல இருந்துச்சு...அந்த அளவுக்கு அம்சமா அந்த காத்து என்னச் சுத்தி வந்துச்சு.... ஊருக்குப் போனதும் உன் புராணம அவசியம் பாடுறேன்ப்பா என காற்றின் காதுகளில் மெதுவாக கிசுகிசுத்தேன்..

அப்பாவின் கரம் என் தோள் மேல் விழுந்தது.....அவர் கையில் ஒரு பார்சல்....

"என்னதுப்பா இது?"

"பரிசு....சரவணன் பேர்ல்ல...அவென்யூ பசங்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்...." அப்பா என்னோடு நடக்க ஆரம்பித்தார்...

நான் பதில் எதுவும் சொல்லவில்லை... என் முகத்தில் அறைந்த வேப்ப காற்று அந்த நிமிடத்தில் வெப்பம் கொப்பளித்தது....
உங்க கிட்டச் சொல்லுறதுக்கு என்ன..... என் அண்ணன் தான் சரவணன்... என் அண்ணன் பேர் தான் சரவணன்...

தொடரும்

13 comments:

CVR said...

தேவ் அண்ணாச்சி கதை சொல்ல ஆரம்பிச்சா கேக்கனுமா??
வாயை தொறந்துட்டு கேட்க ஆரம்பிச்சாச்சு!!
சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க அண்ணாச்சி!! :-)

நாமக்கல் சிபி said...

Dev Comedy ya Arambichidhu!

But Etho kanamana story ya pogum pola!

Intha part mudikkumbothu oru suepensana sogam vechittenga!

இலவசக்கொத்தனார் said...

கதை நல்லா வந்திருக்கு தேவ்.

காகா அப்படின்னு இஸ்லாமிய மத பெரியவங்களைக் கூப்பிடுவாங்க. அப்பாவின் சகோதரர் என்ற மாதிரி பொருள் வரும் என நினைக்கிறேன். அந்த கடை முதலில் அப்படி ஒருவர் வைத்திருக்கலாம் அதனால் அப்படிப் பெயர் வந்திருக்கலாம்.

G.Ragavan said...

தேவ் கச்சேரியத் தொடங்கீட்டாரப்பா......களை கட்டீரும் இனிமே. :)

கூட்டுறவுகள் என்றாலே இதம்தான். சுகம்தான். நாங்கள் அரசாங்கவேலைக்காரர் பிள்ளைகள். அடிக்கடி மாற்றல். பல ஊர்கள். ஆகையால் இந்த ஓரிடத்திலேயே வளர்வது என்பது கிடைக்காமல் போயிற்று. உங்கள் கதையைப் படிக்கையில் அதன் சுகம் புரிகிறது.

தேவ் | Dev said...

//CVR said...
தேவ் அண்ணாச்சி கதை சொல்ல ஆரம்பிச்சா கேக்கனுமா??
வாயை தொறந்துட்டு கேட்க ஆரம்பிச்சாச்சு!!
சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க அண்ணாச்சி!! :-)//

ஆகா... சிவிஆர் கதையைக் படிக்கும் போது கண்ணு தான் தொறந்து இருக்கணும்... வாயை எல்லாம் வீணா எதுக்கு திறந்து வச்சுகிட்டு...:))))

தேவ் | Dev said...

// நாமக்கல் சிபி said...
Dev Comedy ya Arambichidhu!

But Etho kanamana story ya pogum pola!

Intha part mudikkumbothu oru suepensana sogam vechittenga!//

அய்யோ சிபி சீரியசான மேட்டரா சொல்லலாம்ன்னு தான் ஆரம்பிச்சேன் ஆனாப் பாருங்க கதைப் பாட்டுக்கு தன் போக்குல்ல தமாசாப் போய் சடால்ன்னு சரவணன் பேர் கேட்டு பிரேக் போட்டு நின்னுருச்சு:)))

தேவ் | Dev said...

//இலவசக்கொத்தனார் said...
கதை நல்லா வந்திருக்கு தேவ்.

காகா அப்படின்னு இஸ்லாமிய மத பெரியவங்களைக் கூப்பிடுவாங்க. அப்பாவின் சகோதரர் என்ற மாதிரி பொருள் வரும் என நினைக்கிறேன். அந்த கடை முதலில் அப்படி ஒருவர் வைத்திருக்கலாம் அதனால் அப்படிப் பெயர் வந்திருக்கலாம்.//

ஆகா தலீவரு நல்லாயிருக்குன்னு சொல்லி அடுத்த பகுதிக்கு பிரசரை ஏத்துறாரே...

காகா சொல்லுக்கு அர்த்தம் சொன்னதுக்கு ஸ்பெஷன் தேங்க்ஸ் கொத்ஸ்

தேவ் | Dev said...

//G.Ragavan said...
தேவ் கச்சேரியத் தொடங்கீட்டாரப்பா......களை கட்டீரும் இனிமே. :)

கூட்டுறவுகள் என்றாலே இதம்தான். சுகம்தான். நாங்கள் அரசாங்கவேலைக்காரர் பிள்ளைகள். அடிக்கடி மாற்றல். பல ஊர்கள். ஆகையால் இந்த ஓரிடத்திலேயே வளர்வது என்பது கிடைக்காமல் போயிற்று. உங்கள் கதையைப் படிக்கையில் அதன் சுகம் புரிகிறது.//

ஆகா தங்க மரத்துக்காரரும் நல்ல வார்த்தை சொல்லிட்டாரு... பிரசர் இன்னும் ஏறுது..

ஆமாங்க ஜிரா.. இது ஒரு வகையான அனுபவம்ன்னா... ஒவ்வொரு ஊரா போய் வெவ்வெறு மனிதர்களோடு பழகுவது இன்னொரு வகையான அனுபவம்... அனுபவங்கள் தொடரும்...:))

கப்பி பய said...

அழகா கதை சொல்றீங்கண்ணே!! அப்புறம்...

sathish said...

நல்லா இருக்குங்க. இந்த மாதிரி கதைகள் படிக்குற வாய்ப்பு எப்பவாவதுதான் கிடைக்குது. நிறைய எழுதுங்க தேவ் அண்ணா.

துளசி கோபால் said...

//சொஜ்ஜிநக்குனார்//

ஒரே சிரிப்புதான் போங்க. கோபாலுக்கும் காட்டினேன்.இப்ப அவரும் உங்க கதையைப் படிக்கிறார்.

நம்மூட்டுலே 'அண்ணாநகர்'னு பேர் வச்சுருக்கோம் 'நம்ம அண்ணன் ஆர்னால்ட் சிவநேசருக்கு':-))))

இப்படித்தான் ஒரு போஸ்டர்லே பேர் போட்டுருந்துச்சு.

.:: மை ஃபிரண்ட் ::. said...

kathai superaa aarambichiukku. ore moochil full kathai padichuddu commenturen. :-)

வெங்கட் said...

தமிழ் உங்களிடம் நன்றாகவே ஊறியிருக்கிறது, செடியின் வேர் மண்ணில் ஊண்றுவது போல...

மழை துளிகள் மண்ணை இடை விடாமல் நனைப்பது போல் உங்கள் காதல் கவிதைகள் என் காதலை, அதன் நினைவுகளை எனக்குள் மீண்டும் மணம் வீச வைக்கின்றன.

அற்புதமான கவிதை நடை.

மீண்டும் காதலிக்க, காதலை ஸ்பரிசிக்க ஆசையாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்!!