Saturday, February 16, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 4

முந்தைய பகுதி படிக்க

இரண்டு நாள் முழுக்க மனசெல்லாம் என்ன என்னவோ கேள்விகளால் நிறைஞ்சுப் போயிருந்துச்சு.. இதைப் பத்தி யார்கிட்டவும் முழுசா பேசவும் முடியல்ல...என்னப் பண்ணுறது? அப்படின்னு எனக்கு நானே கேட்டுகிட்டு மொட்டை மாடி.... வீட்டுக்குப் பின்னாடி... தெரு கோடி... இப்படி எல்லா இடத்துல்லயும் நின்னு நடந்து யோசிச்சும் ஒண்ணுமே புரியல்ல...

என்னுடைய கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்குறதுக்குன்னு ஒரு அருமையான் வாய்ய்பு வந்துச்சு.. அந்த வாரம் சனி ஞாயிறு அப்பாவும் அம்மாவும் திருச்சியில்ல நடக்க இருந்த ஒரு கல்யாணத்துக்குக் கிளம்புனாங்க.. வீட்டுல்ல நானும் என் அண்ணனும் மட்டும் தான் இருக்கப் போறோம்.. அந்த வாய்ப்பை வாழைபழத்தை வாயிலே போடுற மாதிரி அழகாக பயன்படுத்திக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்,,, அது வரைக்கும் என் வாழ்க்கையிலே எதையுமே நான் தனியாச் செஞ்சதுல்ல... எல்லாத்துக்கும் என் நண்பர்கள் கூட்டணி கட்டாயம் உண்டு... ஆனா இந்த விசயத்துல்ல யாரையும் கூட்டுச் சேக்க முடியாது... கூடாது...ஏன்னா சரவணன் என் அண்ணன்...

வெள்ளிகிழமை வந்துச்சு..அப்பா அம்மா ஊருக்கு கிளம்புறதுக்கு கொஞ்சம் முன்னாடி சரவணனும் ஒரு சின்ன பையைத் தூக்கிட்டு கிளம்பினான்... அவன் ப்ரண்ட் யார் வீட்டுக்கோ குரூப் ஸ்டடி பண்ணப் போறதா அப்பா கிட்ட அவன் சொன்னது அரசல் பொரசலா என் காதுல்ல விழுந்துச்சு... அப்படின்னா இன்னிக்கு ராத்திரி வீடு மொத்தமும் நம்ம கன்ட்ரோல் தான்... என் மனக் கண்ணில் வீடு அப்படியே ஒரு கிளப் செட்டப்புக்கு மாறுவது தெரிந்தது.. அந்த ஆர்ட் டைரக்ட்டரை அப்படியே ஆப் பண்ணிட்டு உள் மனசு வேற ஒரு திட்டம் போட்டது...

வழக்கமான சட்டத்திட்டங்களை ஞாபகபடுத்திவிட்டு இரண்டு நாள் செலவுக்குன்னு ஒரு சின்னத்தொகையை அப்பா கொடுத்துட்டு கிளம்ம்புனார்... அப்பா அப்படி நகர்ந்ததும் என் பாவமான முகத்தைப் பார்த்து அம்மா பாசத்தோடு அப்பா கொடுத்த சின்னத் தொகையின் இருமடங்கை என் பாக்கெட்டுக்குள் வைத்து விட்டு போனார். மொத்தத் தொகையும் கூட்டிக் கழித்து ஒரு பட்ஜெட் போட்டதில் செட்டிநாட் ஓட்டலில் மூணு வேளையும் நல்லா முக்கி கட்டலாம் எனத் திருப்தி பட்டுக்கொண்டேன்.. வெகு நாளாக சாப்பிட நினைத்த முழு கோழி தந்தூரியை இந்த முறை எப்படியும் சாபிட்டரணும் என முடிவு செய்துகிட்டேன்.

ஒரு பத்து மணி வாக்குல்ல வீட்டுல்ல நானும் என் தனிமையும் ஒய்யாரமா உக்காந்துகிட்டு இருக்கோம்.. டேப் ரிக்கார்டர்ல்ல் செந்தூர பூவே பாட்டு ஓடி கிட்டு இருக்கு... எனக்கு இருப்பு கொள்ளவில்லை..

என் அண்ணன் சரவணனுக்குச் சொந்தமான எல்லா பொருட்களையும் ஒரு அலசு அலசி ஓய்ந்திருந்தேன்... அதில் அவனை மாட்டி விடுற மாதிரியான எந்தப் பொருளும் இல்ல... அன்னிக்க்கு நான் பாத்தது சரவணன் தானா... வளையம் வளையமா இல்ல புகையை விட்டான்.... ஓவர் மப்புல்ல நமக்கு அன்னிக்கு பாத்தவன் எல்லாரும் சரவணன் மாதிரி தெரிஞ்சிட்டாங்களா?.... பைய ரூம்ல்ல ஒண்ணும் சிக்கல்லயே... ஒரு தம்... ஒரு வத்திப் பொட்டி...ஒரு லைட்டர்... பைய எமகிராதகனால்ல இருக்கான்.. என் அண்ணன் ஆச்சேன்னு சொல்லிகிட்டேன்...

அவன் மேசை முழுக்க ஒரே புத்தகமா இறைஞ்சு கிடந்துச்சு.... பாதி பொஸ்தகம் பேரை நான் படிக்குறதுக்குள்ளவே நமக்கு நாக்கு தள்ளியிருச்சு... வித விதமான பிசிக்ஸ் புக்...பார்மூலா நோட்ஸ்...எப்படி தான் இதை எல்லாம் படிக்கிறானோ.. நமக்கு இதுல்ல இருக்க நாலு படத்தைக் கூடப் பாக்க முடியல்லயே....

அறை முழுக்க மீண்டும் தேடி ஓயந்தேன்...

மேடையில் அப்பா பேசிகிட்டு இருந்தார்..

"என் பசங்களை உங்க எல்லாருக்கும் தெரியும்.... சிவா அதோ அங்கே உக்காந்து இருக்கான்... போன வருசம் அவன் நம்ம அவென்யூ நூலகத்துக்கு நிறைய கவிதை பொஸ்தகம் வாங்கி கொடுத்தான்... இந்த வருசம் அவங்க அண்ணன் சார்பா நிறைய அறிவியல் புத்தகங்கள் கொடுக்கிறேன்...." ரெண்டு மூணு அட்டைப் பொட்டி நிறைய இருந்த புத்தகங்கள் மேடையில் வைக்கப் பட்டன... பழைய புத்தகம் என சொல்ல முடியாதப் படி அவ்வளவு அழகாக பாதுகாக்கப்பட்டிருந்தது...

மேடையில் இருந்து என் கவனம் எங்கெங்கோ போய் வந்தது... மீண்டும் அந்த அட்டைப் பெட்டிகளைப் பார்த்தேன்...

அன்னிக்கும் அப்படித் தான் ஓய்ஞ்சுப் போய் அவன் கட்டிலில் உட்கார்ந்தப்போ காலுக்கு அடியில் அந்த ஷூ பாக்ஸ் தட்டுப்பட்டுச்சு... அடப்பாவி புது ஷூ வாங்கி ஒளிச்சு வச்சிருக்கான்டான்னு ஆவேசமா அந்தப் பொட்டியைப் பிரிச்சா உள்ளே.. சிகப்பு கலர் டைரி.... மடிச்சு வைக்கப்பட்ட நிறைய காகிதங்கள்.... காய்ந்துப் போன ரோஜாப் பூக்கள்...

டைரியைப் பிரிச்சு வாசிக்க ஆரம்பிச்சேன்....அம்புட்டும் கவிதை... காதல் கவிதை... வரிக்கு வரி வார்ததை அசத்தலான கவிதை... ஆண்டவா... ஆனாலும் நீ ரொம்ப அநியாயம் பண்ணுறடா... ஒருத்தனுக்கே எல்லாத்தையும் வாரிக் கொடுத்துட்டியேடா.. படிப்பு... விளையாட்டு.. பாட்டு... கவிதைன்னு அம்புட்டும் கொடுத்துட்ட... கொடுத்துட்டு போ ஆனா அவனை ஏன்ய்யா எனக்கு அண்ணனாக் கொடுத்து என் வாழ்க்கையை போர்களமா மாத்திட்ட....

எனக்கு கவிதைப் பிடிக்கும்... பத்தாம் கிளாஸ் படிக்கும் போதே சினிமா பாடல்களை இசையயும் தாண்டி வரிகளுக்காக ரசிக்க கத்துகிட்டேன்.. அவன் எழுதுன கவிதை எனக்கு பிடிச்சு இருந்துச்சு.. அந்த கவிதைக் காரணமாய் அவன் மீது ஒரு மரியாதை வந்தது... மரியாதை மட்டும் தான்.. ஆனா அதையும் தாண்டி அவன் மீது கோபம் அதிகமானது...

கடைசி கவிதையைப் படிக்கும் போது எங்கேயோ எதுவோ சரியில்லன்னு என் உள் மனம் சொன்னது...

அந்தக் கடைசி கவிதை....

சாதல் சாதாரணம்... காதல் சதா ரணம்...

என்ன இது அண்ணாத்த இவ்வளவு பிலீங்க்க்கா எழுதியிருக்கான்...யாரையாவ்து லவ் பண்ணுறானோ..நம்ம மண்டைக்குள்ளே விளக்கு பிரகாசமா எரிய ஆரம்பிச்சது...

"டேய் சரவணா.. சிக்கிட்டீயேடா.. வசமா சிக்கிட்டீயே... அந்த 'ரணம்'யாரால்லன்னு நான் குட்டிக'ரணம்' அடிச்சாவது கண்டுபிடிக்குறேன்டா... அப்புறம் பாருடா நீ எனக்கு எவ்வளவு சாதரணம்ன்னு..."

பத்தரை மணி இருக்கும் கதவு தட்டப்பட்டது... சிகப்பு டைரியை ஷூ பாக்ஸ்குள் வைத்து விட்டு பாக்ஸை மீண்டும் கட்டிலுக்கு அடியில் தள்ளிவிட்டு... ரொம்ப சாதரணமாய் போய் கதவைத் திறந்தேன்...வாசலில் சரவணன்...அவன் கையில் பை இல்லை...

அவனிடம் நானும் எதுவும் கேட்கவில்லை அவனும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை..உள்ளே வந்தவன் நேரா அவன் கட்டிலுக்குப் போய் படுத்துகிட்டான்... நான் வராந்தாவில்ல உருண்டு பொரண்டு தூக்கம் வராம மோட்டுவளையைப் பாத்துகிட்டு இருந்தேன்... ராத்திரி நீண்டுகிட்டேப் போச்சு..எப்போ தூங்குனேன்னு எனக்கேத் தெரியாது

தீடிரென்னு முகத்துல்ல சில்லுன்னு பீரைத் தெளிச்சாப்பல்ல இருக்கவே மெதுவாக் கண்ணைத் திறந்துப் பாத்தேன்.. வாசல் கதவு திறந்து இருக்கு...அடுத்தாப்பல்ல அவன் கட்டிலைப் பார்த்தா போர்வைக் கலைஞ்சுக் கிடக்கு... அவனைக் காணூம்

ஆகா அவனை யாராவது கடத்தியிருப்பாங்களோ... கடத்தல் காரங்க காசு கேட்டா அவனுங்களுக்கு கடலை மிட்டாய் கூடத் தரப்பிடாது.. தொலையட்டும் சரவணன்.. இப்படித் தான் முதல்ல எக்குத்தப்பா யோசிச்சேன்...தூக்கம் குளிர் காத்து பட்டு தெளியவும் யோசனை ஒழுங்கான வழியிலே போக ஆரம்பிச்சது...சுவத்துல்ல இருக்க கடிகாரத்துல்ல மணியைப் பாத்தேன் மணி அஞ்சு தான் ஆகி இருந்துச்சு.. அஞ்சு மணிக்கு அண்ணன் எங்கெ போறான்... கதவைச் சாத்தி தாழ் போட்டுட்டு சட்டையை மாட்டிகிட்டு கிளம்புனேன்...

ஒரு தோராயமா அன்னிக்கு அவன் புகையைக் கக்குன இடத்துக்கு போனேன்... அங்கே அதே மரத்தடியிலே ஒரளவுக்கும் வளையமாவும் சதுரமாவும் புகையை விட்டுகிட்டு இருந்தான்.... ஆனா அன்னிக்கு விட இன்னிக்கு செம வேகம்... ஒரு சிகரெட் முடிஞ்சதும் அடுத்த சிகரெட் எடுத்துப் பத்த வச்சான் அதையும் அதே வேகம் குறையாமல் இழுத்தான்...

ஆகா குளிருக்கு இதமா நானும் ஒரு தம் போடலாம் போல இருந்துச்சு... வெக்கத்தை விட்டு அவன் கிட்டப் போய் ஒரு தம் கடனாக் கேக்கலாமான்னு நான் யோசிக்கவே ஆரம்பிச்சிடேன்.. புகை ஒரு பக்கம் போனாலும் அவன் பார்வை வேறு ஒரு பக்கம் இருந்தது.. அவன் பார்வை போன பக்கம் நானும் போனேன்.. அதற்குள் அவன் தம்மை மிதித்து விட்டு வேகமான நடையில் எதிர் பக்கம் போனான்... நானும் வேகம் கூட்டி பின்னாடியே போனேன்... அவன் முழுசாய் பிடித்து முடிக்காத இரண்டாம் சிகரெட் தரையில் கிடந்து என்னைப் பார்த்தது.. அதில் ஒரு சில வினாடிகள் தொலைத்து நான் நின்னுட்டேன்...

சரவணன் அந்தக் கேப்புல்ல எதிர்பக்கம் போயிட்டான்... நானும் எதிர் பக்கம் பதுங்கி பம்மி போனேன்..அவன் ஒரு வீட்டு கேட்டைத் திறந்து கொண்டு உள்ளேப் போனான்... அவ்வளவு தான் அடுத்த சில வினாடிகளில் அந்த வீட்டில் லைட் போடப்பட்டது.. கூச்சலும் இரைச்சலும் என அவென்யுவே விழிக்கத் தொடங்கியது...

முதலில் எனக்கு எதுவுமே புரியவில்லை... அவசரத்தில் நான் பதுங்கிகொள்ள இடம் பார்த்து ஒதுங்கினேன்... மூச்சிரைக்க என்னைத் தாண்டி வேகமாய் போய் கொண்டிருந்த சரவணனை என்ன நினைத்தனோ எனக்கே தெரியாது.. என் முழு பலத்தையும் பயன்படுத்தி நான் பதுங்கியிருந்த மறைவிடத்துக்குள் இழுத்து அழுத்தினேன்... அது ஒரு மரக் கூடாரம்.. இந்த பூக்காரங்க எல்லாம் வச்சிருப்பாங்களே அதை மாதிரி கொஞ்சம் பெரிய சைஸ்...

சரவணணும் நானும் பதுங்க அது போதுமானதாக இருந்தது...

"அந்தப் பக்கம் போனான் சார்..."

"பனியில்ல எந்தப் பக்கம்ன்னு சரியா தெரியல்ல சார்"

"யாருக்கும் எதுவும் ஆகல்லயே...."

"இல்ல என் பொண்ணு தான் பார்த்து பயந்து கத்தியிருக்கா...மத்தப் படி எல்லாம் சேப் தான்"

"I THINK WE NEED TO FILE A COMPLAINT WITH POLICE"

"வேணாம் சார் எதுவும் திருடு போகல்ல... அது வேற வயசு பொண்ணு போலீஸ் ஸ்டேசன் அது இதுன்னு விட்னஸ்க்கு கூப்பிட்டா சரி வராது சார்"

"ம்ம்ம் அதுவும் சரி தான்... பேசமா அவென்யுக்கு ப்ரைவெட் செக்யூரிட்டி போட்டுருவோம்... இந்தத் திருட்டுப் பசங்க திரும்பி வந்தாலும் வருவாங்க..."

அங்கு ஆளுக்கு ஆள் பேசிக் கொண்டிருந்தார்கள்... நான் சரவணன் முகத்தை உற்று பார்த்து கொண்டிருந்தேன்.. அவன் முகம் பயத்தில் வெளிறி போயிருந்தது.. மூச்சிரைப்பது நிற்க வில்லை..அவன் என்னைப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாமல் பார்த்தான்...என்ன இருந்தாலும் அண்ணன் ஆச்சே.. அவன் தர்மசங்கடத்தைத் தவிர்க்க நான் மரக்கூடாரம் ஓட்டை வழியே வெளியே பார்த்தேன்..

ரஞ்சனி வீட்டுக்கு முன்னால் கூடியிருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா கலைஞ்சுப் போயிட்டு இருந்தாங்க.. எல்லாரும் போனப் பின்னாடி கேட்டைச் சாத்த வந்த ரஞ்சனி மரக்கூடாரம் பக்கமா பார்த்தா.. நான் அசையாம அப்படியே இருந்தேன்...அப்புறம் ரஞ்சனி உள்ளே போயிட்டா...

ஒரு பெருமூச்சு விட்டப் படி சரவணன் பாக்கெட்டுக்குள்ள கை விட்டு மீதி இருந்த கடைசி சிகரெட்டை எடுத்து என் வாயில் வச்சுப் பத்த வச்சு புகையை அந்த ஓட்டை வழியா வெளியே விட்டேன்... சரவணன் கையிலே முந்தா நாள் ராத்திர் அவன் வச்சிருந்த பை இருந்தது..அதை அவன் கெட்டியாகப் பிடித்திருந்தான்...

சாதல் சாதரணம்... காதல் சதா ரணம்.... புகைக்கு நடுவே இந்த கவிதையும் என் வாயில் இருந்து வெளியெ வந்துச்சு...


தொடரும்

8 comments:

CVR said...

சதா ரணத்துல மாட்டிக்கிட்டாரா நம்ம சரவணன்??
இனிமே என்ன இருந்து என்ன பிரயோஜனம்??? :P

கதை செம வேகம்!!இனிமே ரொம்ப நேரம் விடாம சீக்கிரம் சீக்கிரம் அடுத்த பகுதி போட்டுருங்க அண்ணாச்சி!! :-D

கோபிநாத் said...

ஆஹா..ஆஹா..அண்ணன் காதலில் மாட்டிக்கிட்டாரா!! ;))

\\கதை செம வேகம்!!இனிமே ரொம்ப நேரம் விடாம சீக்கிரம் சீக்கிரம் அடுத்த பகுதி போட்டுருங்க அண்ணாச்சி!! :-D\\

அண்ணே வேற வழியே இல்ல..ரீப்பிட்டேய்ய்ய்ய்

G.Ragavan said...

ஆகா....சரவணன் செல்லப்பிள்ளைன்னு பாத்தா இப்பிடிக் கள்ளப்பிள்ளையா இருப்பாரு போல...

ரணம்..குட்டிக்கரணம்...நல்லாருந்துச்சு. :)

இலவசக்கொத்தனார் said...

ம். அப்புறம் என்ன ஆச்சு?

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

அண்ணன் பாக்கெட்ல இருந்து சிகரெட்ட எடுத்து பத்தவைக்குற அளவுக்கு போயாச்சு! எல்லாம் காதல் பண்ண வேல.

Divya said...

ரொம்ப சுவாரஸியமா போகுது தேவ் அண்ணா, சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க!

Divya said...

\\ ஆண்டவா... ஆனாலும் நீ ரொம்ப அநியாயம் பண்ணுறடா... ஒருத்தனுக்கே எல்லாத்தையும் வாரிக் கொடுத்துட்டியேடா.. படிப்பு... விளையாட்டு.. பாட்டு... கவிதைன்னு அம்புட்டும் கொடுத்துட்ட... கொடுத்துட்டு போ ஆனா அவனை ஏன்ய்யா எனக்கு அண்ணனாக் கொடுத்து என் வாழ்க்கையை போர்களமா மாத்திட்ட....\\

உள்ளக் குமறல்களை அழகா அழுத்தமாக வெளிப்படுத்துகிறது வார்த்தைகள்!

ரொம்ப அருமையா எழுதுறீங்க தேவ் அண்ணா!

துளசி கோபால் said...

என்னய்யா...இது அட்டகாசமாக் கதையைக் கொண்டு போறீர்!!!!!

ம்ம்ம்ம்ம்ம் அப்புறம் என்னாச்சு?

ஆமாம்.மரக்கூடாரமுன்னா என்ன?

கூடையா?