Friday, November 21, 2008

ஒரு காதல் குறிப்பு
ஒரு சனிக்கிழமை மதியம் பொழுது போகாமல் இருந்த போது பழைய அலமாரி ஒண்ணு லேசாக தூசு தட்டு வா என்று சங்கேத மொழியில் தூது விட்டது... சரி நல்லா தின்னுட்டு சும்மாத் தானே இருக்கோம்ன்னு அலமாரியின் அலங்கார அழைப்புக்கு ரைட் கொடுத்து களத்தில் இறங்கினேன்...

1992....கவிதைப் போட்டி ஆறுதல் பரிசு..மாணவர் மன்றம்... ஆஹா அப்பவே நான் ஒரு கவிஞன்.. என் மனம் மேடை போட்டு மீண்டும் எனக்கு அந்த சான்றிதழை சகல மரியாதைகளோடும் கொடுத்து கவுரவித்தது... இதழோர புன்னகையோடு இன்னும் துழாவினேன்...

1993...இருக்கும் பள்ளி சுற்றுலாவில் எடுத்த புகைப்படம்.. வி.ஜி.பி கோல்டன் பீச் வாசல் அய்யனார் பக்கம் அட்டகாசமாய் போஸ் கொடுத்த படி... நான்...ம்ம்ம் அது பாலா.. அப்புறம் பத்ரி...செந்தில்...சுப்பு... சுப்பு மட்டும் இன்னும் தொடர்பில் இருக்கிறான்.. அவனுக்கு இரண்டு மாசம் முன்னாடி தான் ஒரு அழகான பெண் குழந்தைப் பிறந்தது... ம்ம்ம் செந்தில் டாக்டராயிட்டான்... இன்னும் கல்யாணம் ஆகல்ல.,.. கடைசியாப் பாத்தப்போ அவன் தன்னுடைய நாலாவது காதல் கதையை ரொம்பவே சின்சியராச் சொன்னான்...மத்த மூணு கதையையும் இதே சின்சியாரிட்டி குறையாமல் தான் சொன்னான் என்பது வேறு விசயம்... ம்ம்ம் பாலா...பத்ரி... இரண்டு பேரையும் பாத்து பத்து வருசத்துக்கும் மேல ஆச்சு... அவங்க கிட்டயும் இந்த போட்டோவோட ஒரு காபி இருக்கும்.. எப்போவாது எடுத்துப் பாத்தா என்னை நினைச்சிப்பாங்க.. அப்படின்னு எனக்கு நானே சொல்லிகிட்டேன்... அடுத்து என்ன சிக்குதுன்னு பாப்போம்...

1995... ஜெயந்தி தியேட்டர் டிக்கெட் ஒண்ணு.... அட தலைவர் படத்து டிக்கெட்.. பாட்சா... 13 ஜனவரி 1995.. மாலைக் காட்சி.. ஆட்டோக்காரன் ஸ்டில்ன்னு அப்போ எடுத்து பத்திரப்படுத்தி வச்ச டிக்கெட்.. வீட்டுல்ல சக்கரை வாங்க கொடுத்து அனுப்புன காசுல்ல... தியேட்டருக்குள் போய் போலீஸ் லத்திக்கு வளைந்து நெளிந்து வேர்த்து விறுவிறுத்து... விசிலடித்து கொண்டாட்டமாய் படம் பார்த்த ஞாபகம் மனத்திரையில் மீண்டும் ரிலீஸ் ஆகி சக்க போடு போட்டது..

ம்ம்ம் வருசத்துக்கு ஒண்ணா சிக்குன ஞாபகங்களில் நனைந்தப் படி அலமாரியில் ஒளிந்திருந்த நினைவு புதையல்களை ரசித்தப்படி நேரம் போய்கொண்டிருந்தது....

2002... ஒரு ஐடி கார்ட்.. என் கையில் சிக்கியது... ம்ம்ம் ஆறு வருடத்துக்கு முந்தைய முகம்...என் முகம்...ம்ம் பரவாயில்ல.. ரொம்ப மாறல்ல... கொஞ்சம் அழகாயிட்டேனோ.... இருக்கலாம்... அந்த கார்ட் இருந்த டைரி.... பச்சை கலர் டைரி....அந்த வருடம் கம்பெனியில் வழங்கிய டைரி... ஐடி கார்டில் இருந்த அதே லோகோ கொஞ்சம் பெரிதாய் அந்த டைரியின் முகப்பில் இருந்தது...கம்பெனியில் இருந்து விலகி வரும் போது எப்படியோ அந்த ஐடி கார்ட்டை நான் எடுத்து வந்து விட்டது எனக்கு நினைவிருந்தது... அந்த கார்டை கேட்டு அப்போதெல்லாம் அந்த கம்பெனியில் இருந்து அடிக்கடி எனக்கு போன் வரும... அந்த ஆபிஸ் ரிசப்னிஷ்ட் தான் அடிக்கடி போன் பண்ணுவா... அவப் பேர் கூட.... ம்ம்ம் அது இப்போ ஞாபகத்தில் இல்ல.. வரும் போது கண்டிப்பா சொல்லுறேன்...

அந்த டைரியின் பக்கங்களின் படிந்திருந்த தூசியினை மெல்ல விரலால் களைந்தப் படி அதில் என்ன இருக்குன்னு படிக்க ஆரம்பிச்சேன்...

பூக்கும் பூக்கள் எல்லாம்
கிளைகளுக்குச் சொந்தமில்லை...
மரத்தில் இருந்து உதிர்ந்தப் பின்னால்
இலைகளுக்கு முகவ்ரி இல்லை..
இறுக கட்டியணைத்தாலும்
கடுகளவு காற்று கூட
கைகளில் தங்குவதில்லை...
வாரியிறைந்தப் பின்னால்
மழைத்துளிகள் வானம் தேடுவதில்லை...
விழுந்தப் பின்னால் வார்த்தைகள்
உதடுகளுக்குத் திரும்புவது இல்லை...

இந்த வரிகளைப் படித்தவுடன் அவசரமாய் தம்மடிக்க வேண்டும் போல இருந்தது.. அவசரத்துக்கு அடிக்க துணிக்கு அடியில் சுருட்டி வைத்திருந்த கடைசி சிகரெட்டை எடுத்து கடைவாய் பல்லுக்குள் செருகினேன்.. பற்ற வைத்த சிகரெட் புகையை உள்ளுக்கு இழுத்து சுவாச பையை அழுக்குப் படுத்தி அப்புறமுமாய் வெளியே வீதியில் வீசி எறிந்தேன்..

சிகரெட்டின் நுனி நாக்கில் எஞ்சியிருந்த நெருப்பு என்னை வெறித்துப் பார்ப்பதாய் எனக்கு தோன்றியது...அந்த சிகரெட்டை அவசரமாய் வெளியில் தூக்கி எறிந்து விட்டு டைரி இருந்த பக்கம் திரும்பினேன்..கலைந்த தலை முடியை கோதிவிட்ட படி மோவாயைத் தடவினேன், முந்தா நாள் முளை விட்ட தாடியின் முட் குத்தல் உள்ளங்கையை அரித்தது... இன்னொரு தம் அடிக்க தேடினேன்....

2003... கம்பெனி ஆண்டு விழா புகைப்படம் என் கண்ணில் பட்டது...அந்த புகைப்படத்தில் அவளும் இருந்தாள்... கண்ணைக் கட்டிப் போடும் வண்ணத்தில் பச்சை சுடிதார்..ஒற்றை வகிடு எடுத்து முன் நெற்றியில் தவழ விட்ட கற்றை முடி... விடியோவாக இருந்திருந்தால்... ம்ம்ம் அந்த முடி அவள் நெற்றி என்னும் மேடையில் மானாட மயிலாட என ஆடி, பார்க்கும் அத்தனை மனங்களையும் ஆட்டியிருக்கும் என்பது மட்டும் கதையல்ல நிஜம்... சரி...இந்த டிவி சேனலில் வரும் கெக்கே பிக்கே தொகுப்பாளினிகளிடம் கஷ்ட்டப் படும் சிரிப்பு என்ற வஸ்து அவள் உதடுகளில் மட்டும் ஆனந்த தாண்டவமாடியது... அழகாய் பூத்து குலுங்கியது.... புகைப்படத்தின் மீது படிந்த தூசி கூட அவள் சிரிப்பு தொட தவிர்த்து தள்ளியே நின்றது.. அப்படி ஒரு அச்சச்சோ சோ சுவீட் புன்னகை....

அவளைப் பத்தி சொல்லியாச்சு.. நம்மைப் பத்தியும் சொல்லணும்ல்ல.. பெரிய அஜித்தோ விக்ரமோ..வாரணமாயிரம் சூர்யாவோ... மேடியோ எல்லாம் இல்லன்னாலும் சுமாரா ஒரு ரேஞ்சுக்கு இருப்பேன்... இந்த ஜிம் எல்லாம் போய் ஜம்ன்னு ஆகல்லன்னாலும் காலையிலே எந்தரிச்சு பீச்சோரமாய் ஓடி அப்புறம் வீட்டுக்குள்ளேயே தண்டால் ப்ஸ்கி எல்லாம் எடுத்து கொஞ்சம் மெயின்டேன் பண்ணுவோம்ல்ல டைப் ஆளுங்க நான்...

பள்ளியிலே பழகலாமான்னு பயந்து... காலேஜ்ல்ல பேசலாமான்னு யோசிச்சு...கோயிலுக்குப் போகும் போது சாமியை சைலண்ட் காரணமா வச்சு பொண்ணுங்களைப் நிமிந்து நிமிராமலும் பார்த்து... அப்படி பாக்குற வேளையிலே, நம்ம பாக்கறதை அக்கம் பக்கம் எவனும் பாத்துருவானோன்னு பயந்து பம்முனது தான் ஜாஸ்தி...

இப்படி காதல் எனக்கு அறிமுகமாகி காதலி யாருமே அறிமுகமாக மறுத்தக் காலக்கட்டத்தில் வேற வழி இல்லாமல்....

மொழி பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை.. காதலிச்சே தீருவது என்ற வெறியில் கல்லூரி காலத்தில் காஜோலைக் கண்டப்படி காதலித்தேன்.... மே தும் சே ப்யார் கர்தா ஹீன் சொல்ல பழகுவதற்குள் அஜய் தேவ்கன் காதல் கல்யாணம் என வேகமாய் போய்விட...
அடுத்து வந்த ஐஸ்வர்யாராயாவது எப்படியும் பேசி மடக்கிரலாம் என தொடை மடக்கி கை இடுக்கி கண் சுருக்கி கனவு கண்ட காலத்துக்கும் சல்மான் கான் கன் வைத்து கலங்க வைக்க...
எதோ அந்த நேரத்தில் அறிமுகமான சினேகாவை குமுதம் ஆவி அட்டைப் படம் நடுப்பக்கம் என பார்த்து பல்லிளித்து காதல கண்ணியம் காத்து வந்தேன்...

அப்படி ஒரு காதல் காலத்தில் கொஞ்சம் காஜோலின் குறுகுறுப்பு... ஐஸ்வர்யா ராயின் மினுமினுப்பு... சினேகாவின் குளிர் சிரிப்பு என என் வாழ்க்கையில் வந்து சேர்ந்தாள் ரஞ்சனி... என் ரஞ்சனி...

ஒரு வெள்ளைக்கார துரை ஆரம்பிச்ச கப்பல் கம்பெனியிலெ கம்ப்யூட்டர் தட்டுர வேலையிலே மாசம் ஒரளவு சம்பளத்துக்கு என்னையும் கூப்பிட்டாங்க... சும்மா ஏரியாவே அதிர டேய் நானும் ஆபிசராயிட்டேன் அப்படின்னு அலறலோட வேலைக்குப் போய் சேர்ந்த இடத்திலே தான் தற்காலிகமாக என் திரையுலக காதலிகள் எல்லாருக்கும் நான் துரோகியாக மாற வேண்டி போச்சு... எஸ் ஐ பெல் இன் லவ்.... லவ்..அப்படி ஒரு லவ்...

அழகானப் பொண்ணைப் பாத்தா ஒரு மயக்கம் வரும் ஒரு கிறக்கம் வரும்... வாலிப வயசுல்ல அதெல்லாம் சகஜம் தானே...எனக்கும் அது பல தடவை வந்து இருக்கு...போயிருக்கு... ரஞ்சனி விஷ்யமும் அப்படித் தானோன்னு கூட முதல்ல யோசிச்சேன்... இந்தப் பாத்த உடனே காதல் வரும்... அப்படிங்கற கருத்துக்கு பெருசா கொடி பிடிக்கிற ஆளு நான் கிடையாது...

ரஞ்சனியைப் பாக்குற வரைக்கும் காதல்ன்னா என்னவோன்னு நினைச்சிட்டு இருந்தேன்... அவளைப் பாத்தப் பிறகு காதல்ன்னா என்னன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்...

தினமும் அவளை ஒரு முன்னூறு முறையாவது ஆபிஸ்ல்ல பாக்குறது உண்டு... போகும் போது வரும் போது... கேன்டீன்ல்ல...பைக் பார்க்ல்ல... மீட்டிங் ஹால்ல.... அவகிட்ட பேசக் கூட செஞ்சு இருக்கேன்...
வழியிலே நிக்கும் போது ஒரு முப்பத்து மூணு தடவை எக்ஸ்க்யூமீ... கேட்டு இருக்கேன்...அப்புறம் கேன்டீன் லைன்ல்ல நிக்கும் போது ப்ளீஸ் இதை பாஸ் பண்ணுறீங்களா.. இப்படி ஒரு இருபது தடவை... ஒரு இரண்டு தடவை குட் மார்னிங் கூட சொல்லியிருக்கேன்...

இப்படி எல்லாம் அவளை நான் சுத்தி இருந்தப்போ ஜில்ன்னு ஐஸ்கிரீம் தொண்டைக்குள்ளே வச்ச எபெக்ட் தான் வரும்.... அது ஒரு வித சுகம்.. அடுத்த தடவை ஐஸ் கிரீம் சாப்பிடும் போது காதலோடு சாப்பிட்டு பாருங்க.. உங்க காதல் உங்க தொண்டைக் குழியோரம் ஜில்லுன்னு வந்து போகும்...

முதல் முறையாக ரஞ்சனி மூணு நாள் ஆபிசுக்கு வரவில்லை....
முதல் நாள் யாரைக் கேட்பது என புரியவில்லை... இரண்டாவ்து யாரைக் கேட்டாலும் விவரம் தெரிஞ்சா பரவாயில்லை என்று ஆனது... மூன்றாவது நாள் சத்தியமாக பொறுக்க முடியவில்லை...

அது தான் காதல் என அந்த வினாடி எனக்குள் எதோ ஒன்று ஊர்ஜிதம் செய்தது... சொல்ல முடியாத வலி என்னைக் கொன்று விழுங்கத் துவங்கியது... அட போங்கடா அவ இல்லாம ஆபிஸ் என்னடா ஆபிஸ் இழுத்து பூட்டுங்கடா... அப்படின்னு மெயில் கூட டைப் அடித்து ட்ராப்ட்ல்ல வச்சுட்டு அவள் ஞாபகத்தில் அதை அனுப்ப மறந்து அப்போதைக்கு என் வேலையையும் காப்பாத்திக் கொண்டேன்,...

அமாவசைன்னு ஒண்ணு இல்லனா பவுணர்மிக்கு ஏதுங்க மரியாதை.... நாலாவது நாள் எங்க ஆபிஸ்க்கு பவுணர்மி வந்துச்சு... அவ கை நிறைய திருச்சூர் நேந்தரங்கா சிப்ஸ்...சீடை.. முறுக்குன்னு எல்லாருக்கும் கொண்டு வந்தா...பொதுவுல்ல இருந்ததை எதோ ஒண்ணு தடுக்க நான் எடுக்காமல் விட்டது எவ்வளவு அபத்தமானது... அடுத்த சில நிமிடங்களில் காலியான வெறும் பாக்கெட்கள் மட்டுமே மிஞ்சின...அதை நான் சேகரித்து எடுத்து சிலாகித்து வைத்தது தனிக்கதை...மூன்று நாட்களாக ரஞ்சனியின் கூந்தல் உதிர்க்கும் மல்லிகை பூக்களுக்கு ஏங்கிய அவள் இருக்கை அன்று அதன் ஏக்கம் தீர்ந்து மல்லிகை வாசனையில் குளித்தது.. தனியாக என்னைப் பார்த்து சிரித்தது...

இப்படியே ஒரு ஏழு எட்டு மாசம் ஓடிப் போச்சு.. டிசம்பர் 31... வேலையை முடிச்சிட்டு நாங்க கிளம்புற நேரம்... எல்லாரும் எல்லாருக்கும் ஹேப்பி நியு இயர் சொல்லிகிட்டு இருந்தோம்... ரஞ்சனியை என கண்கள் எல்லாப் பக்கமும் தேடிகிட்டு இருந்தன... ஆனா அவளை கண்டு பிடிச்சது என்னவோ என் காதுகள் தான்..

எனக்குப் பின்னால் அவள் குரல் கேட்கவே கொஞ்சம் நிதானித்து எனக்குள் ஒத்திகை எல்லாம் பார்த்து திரும்பினேன்... சேம் டூ யூ...,சேம் டூ யூ... வெரு ஹேப்பி நியூ இயர்.. சேம் டூ யூ... இப்படி சொல்லி சொல்லி பார்த்துகிட்டு இருந்த என் தோளை யாரோ தட்ட ....அப்படியே டக்குன்னு திரும்பி.... "சேம் டூ யூ....." சொன்னால் அங்கு நின்றது என் நண்பன் அருண்...

"டேய் வாங்குன கடனை திருப்பித் தாடான்னு தோளை தட்டி கூப்பிட்டுக் கேட்டா... சேம் டூ யூவா.... -ஷேம் டு யூடா....." கடுகடுன்னு பையன் கடித்து வைக்க...,நான் அப்படியே கண்ணைப் பொத்த அதே வினாடியில் அருணின் கை குலுக்கி "ஹேப்பி நியூ இயர் அருண்...." சொல்லிட்டு ரஞ்சனி அங்கிருந்து நகர்ந்துப் போனாள்....வினாடிக்கும் குறைவான அந்த கணப்பொழுதில் தீ போல் என்னை கொளுத்தி விட்டு போகும் பார்வை ஒன்றை அவள் என் மீது பாய்ச்சியதாய் எனக்குள் ஒரு உணர்வு...சின்னதாய் ஒரு நிலநடுக்கம் எனக்குள் வந்து போனது..ரிக்டர் ஸ்கேல் ஞானம் இல்லாத காரணத்தால் என்னால் அளவைக் குறிக்க முடியவில்லை

"படுபாவி... ஒரு நூறு ரூபா...அதுக்காக இப்படி மானத்தை வாங்கிட்டானே... அவளுக்கு கேட்டிருக்குமோ... இருக்காது... இருக்குமோ..." இப்படியே யோசிச்சதுல்ல நேரமும் நகர்ந்து போனது... ரஞ்சனியும் கிளம்பி விட்டாள்...

"டேய் கிளம்பலாம் வா... நூறு ரூபா பெட்ரோலுக்கு இல்ல அதான் கேட்டேன் கோச்சுக்காதே மச்சி.. வண்டிக்கும் எனக்கும் சேர்த்து போடணும்ல்ல... நியு இயர் ஆச்சே.." அருண் கூப்பிட்டான்... அவனோடு புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து போதையில் கரையேரிய போது மறு நாள் சூரியன் நடு வானில் நின்று நான் பல் விளக்காமல் காபி குடிப்பதைக் கேலியாய் பார்த்துக் கொண்டிருந்தான்...

"ம்ம்ம் அருண் இது என்னடா.. டேபிள்ல்ல.... ?" புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு வாரம் என்னைக் காய்ச்சலில் கொண்டு விட்டதில் அலுவலகம் செல்லாத நான் என் மேஜை மீது இருந்த பத்திரிக்கை பார்த்து கேட்டேன்...

"கல்யாணப் பத்திரிக்கை... நம்ம ரஞ்சனிக்கு.டா... உனக்கு எங்கே தெரியும்.. நீ தான் அவக் கூட சரியா முகம் கொடுத்து கூட பேச மாட்டியே.... எப்போ அவளை பாத்தாலும் தலையை குனிஞ்சுட்டு அப்படி போய் நின்னுக்குவீயே... இருந்தாலும் நல்ல பொண்ணுடா.. உங்க பிரெண்ட் அந்த சைலண்ட் பார்ட்டிக்கும் கார்ட் கொடுத்துடுங்கன்னு சொல்லி உன் பேர் எழுதி கார்ட் வச்சிருக்கா... கல்யாணம் கேரளாவில்ல... அவ நேத்தோட ஆபிஸ்ல்ல லாஸ்ட் டே.... வி வில் மிஸ் ஹெர் டா...அப்புறம் நியூ இயர்க்கு ஆபிஸ்ல்ல டைரி கொடுத்துருக்காங்க... ரிசப்ஷ்னிஸ்ட் தன்யா கிட்ட இருக்கு உன் டைரி போய் வாங்கிக்க...." இந்தத் தகவலைச் சொல்லிட்டு அருண் அடுத்த வேலைப் பாக்க போயிட்டான்...

ம்ம்ம் அந்த ரிசப்னிஷ்ட் பேரை சொல்லுறேன்னு சொன்னேனெ இப்போ சொல்லிட்டேன்.. தன்யா கிட்ட டைரி வாங்கிட்டு நேரா பைக் பார்க் போய் உக்காந்தேன்...

டைரியைத் திறந்து.... என்னத் தோணுச்சோ அதை அப்படியே எழுதுனேன்.... அது...

பூக்கும் பூக்கள் எல்லாம்
கிளைகளுக்குச் சொந்தமில்லை...
மரத்தில் இருந்து உதிர்ந்தப் பின்னால்
இலைகளுக்கு முகவ்ரி இல்லை..
இறுக கட்டியணைத்தாலும்
கடுகளவு காற்று கூட
கைகளில் தங்குவதில்லை...
வாரியிறைந்தப் பின்னால்
மழைத்துளிகள் வானம் தேடுவதில்லை...
விழுந்தப் பின்னால் வார்த்தைகள்
உதடுகளுக்குத் திரும்புவது இல்லை...

20 comments:

ILA said...

வாடா நண்பா! இப்போதான் பழைய நெலைமைக்கு வந்திருக்கே. காய்ஞ்சி கிடக்கு பதிவுலகம், இந்த மாதிரி பதிவெல்லாம் போட்டு பசுமையாக்கு

இலவசக்கொத்தனார் said...

திகட்டுது!! :)

மங்கலத்தார் said...

அருமையான குறிப்பு :-)

கபீஷ் said...

அருமை!!!!சொந்த அனுபவமா?

Divya said...

தேவ் அண்ணா........ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவு போட்டிருக்கிறீங்க, சூப்பர்!!!

Divya said...

\\பூக்கும் பூக்கள் எல்லாம்
கிளைகளுக்குச் சொந்தமில்லை...
மரத்தில் இருந்து உதிர்ந்தப் பின்னால்
இலைகளுக்கு முகவ்ரி இல்லை..
இறுக கட்டியணைத்தாலும்
கடுகளவு காற்று கூட
கைகளில் தங்குவதில்லை...
வாரியிறைந்தப் பின்னால்
மழைத்துளிகள் வானம் தேடுவதில்லை...
விழுந்தப் பின்னால் வார்த்தைகள்
உதடுகளுக்குத் திரும்புவது இல்லை...\\

வரிகள் அனைத்தும் அருமை!!

Divya said...

இனிமே இப்படி லாங் லீவ் எடுக்காம.....அடிக்கடி பதிவு போடுகண்ணா:)))

கைப்புள்ள said...

அருமை மாப்பி. பேக் டு ஃபார்ம் போல. ஒவ்வொரு வரியிலும் கற்பனை நயம் சொட்டுது.

இனியவன் said...

ரொம்ப நாளைக்கபுறம்...

நிமல்-NiMaL said...

நல்ல பதிவு... அருமையான குறிப்புக்கள்...!

நாகை சிவா said...

அண்ணாத்த...

ஏகப்பட்ட குசும்பு ஒடிக் விளையாடுது இந்த பதிவுல...

அதிலும் மானாட மயிலாட, கதையல்ல நிஜம் னு பின்னி இருக்கீங்க...


//பொதுவுல்ல இருந்ததை எதோ ஒண்ணு தடுக்க நான் எடுக்காமல் விட்டது எவ்வளவு அபத்தமானது... //

:))))))))))))))))))))))))))))))))))

//அடுத்த தடவை ஐஸ் கிரீம் சாப்பிடும் போது காதலோடு சாப்பிட்டு பாருங்க.. உங்க காதல் உங்க தொண்டைக் குழியோரம் ஜில்லுன்னு வந்து போகும்...//

இது எல்லாம் ரொம்பவே ஒவர்....

பேரு ஞாபகம் வரும் போது சொல்லுறேன் என்று சொல்லி அதை கடைசியில் சொல்லும் போது... கிரேஸி மோகனை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்...

இது கச்சேரியில் வந்து இருக்க வேண்டிய பதிவு... 78ல பக்கத்தில் ஏன் போட்டீங்க...

கோபிநாத் said...

ஏய்ய்ய்ய்...எங்க தேவ் அண்ணாச்சி மீண்டும் வந்துட்டாரு ;)))

சூப்பர் சரக்குண்ணே ;))

\\\\\அதை நான் சேகரித்து எடுத்து சிலாகித்து வைத்தது தனிக்கதை\\\

:))))

ஒவ்வொரு வரிகளையும் ரசித்து படித்தேன் ;;)

சென்ஷி said...

வாங்க மக்கா.. வாங்க.. வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.. யேய் யப்பா சாருக்கு கார்னர் சீட்டா பார்த்து குடு :))

கப்பி | Kappi said...

செம கலக்கல்ஸ்!

நவீன் ப்ரகாஷ் said...

வாங்க தேவ் வாங்க....

ரொம்ப அழகான தேவ் 'டச்'....

ரசித்துப்படித்தேன்... :)))

ஸ்ரீமதி said...

வாவ் அண்ணா சூப்பர் சூப்பர் :))))

இராம்/Raam said...

எங்க நான் போட்ட பின்னூட்டம்???

இராம்/Raam said...

திரும்ப அதுவே இப்போ... :)

ஏண்ணே, இந்த ரஞ்சனி'ய விடமாட்டிங்களா?? கதை நல்லாயிருக்கு... :)

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

Michael Ayu said...

ஜில்லுன்னு இருக்கு :)