Friday, February 03, 2012

மீண்டும் தென்கிழக்கு வாசமல்லி - 3

முன் கதைப் படிக்க...

ட்ரிங் ட்ரிங்....ரஞ்சனி ப்ரியதர்ஷினி டெஸ்க்ல்ல இருந்த போன் அலறிகிட்டே இருந்துச்சு யாரும் எடுக்கல்ல...மூணாவது முறையா ட்ரை பண்ணேன்...கிட்டத்தட்ட கடுப்பாகி கட் போன நேரத்துல்ல "ஹலோ...ஆர்பி ஹியர்..."

தேன்ல்ல ஊறப்போட்ட
அதே குரல் காதுல்ல வந்து விழுந்துச்சு..குரல்ல வழியுற தேன்ல்ல மனசை நனைய விடக் கூடாதுன்னு தீர்மானம் பண்ணிகிட்டு குரலைச் சரிப்படுத்திகிட்டு...

"ஹலோ...டெஸ்டிங் லீட் பேசுறேன்ங்க...."அப்படின்னு ஆரம்பிச்சேன்
"ஓ..ஒகே...வாட்ஸ் இட் ரிகார்டிங்....(Oh Ok what is it Regarding)"

"அது வந்துங்க அந்த புது ரிக்கொயர்மென்ட்(Requirement) பத்தி..."
"ஓ..ரைட் நவ் அயம் ரன்னிங் பார் ஏ மீட்டிங்க்...கேன் யு செக் மை கேலண்டர் அன்ட் பிக்ஸ் அப் ஏ மீட்டீங் சம் டைம் டுமாரோ...(Oh Right now am running for a meeting..Can you Check my Calender and fix up a meeting sometime tommorrow)"

"இது கொஞ்சம் அவசரம்ங்க..."
"ஓ பாய்...கான்ட் யு அன்டர்ஸ்டேண்ட் ...ஐ கான்ட் ஹெல்ப் இட் ..யு ஹேவ் டு வெயிட் டில் டுமாரோ...சாரி...(Oh Boy..Can't you understand...I cant help it..you have to wait till Tommorrow...sorry")

ஓகேன்னு போனை வச்சிருக்கலாம்...ஆனா நான் வைக்கல்ல..என் விதிக்கு என்னை இழுத்து வீதியிலே விடுறதே வாடிக்கையாப் போச்சே
"நான் என்ன உங்களை சாயங்காலம் காபி டேக்கு டேட்டிங்க் போலாமான்னு கூப்பிட்டேன்.. புராஜ்க்கெட் விஷயமா பேச தானே கேட்டேன்...உங்க டைம் இப்போ அவசரமா வேணும்...யு பெட்டர் அன்டர்ஸ்டேன்ட் தட்...( You better understand it)"

அந்த பக்கம் பத்திக்கிச்சு...அவ அழுத்தமா மூச்சு விடுறதை வச்சே அங்கே இருக்க சூடு இங்கே எனக்கு தெரிஞ்சது..அதைப் பத்தி நான் கண்டுக்கல்ல..எனக்கு என் கோவம்..அவளுக்கு அவ கோவம்

"மைன்ட் யுவர் லாங்க்வேஜ் ( Mind your Language).. நீங்க கூப்பிட்ட நேரத்துக்கு வந்து நிக்க நான் ஒண்ணும் இங்கே வெட்டியா உக்காந்துட்டு இல்ல்...புரியுதா... சென்ட் மீ ஏ ரிக்கொஸ்ட் ஐ வில் ரெஸ்பான்ட் (Send me a request ..I will respond)" கெத்து குறையாமல் பொரிஞ்சு தள்ளுனா


நானும் இறங்கல்ல..."கோவம்ன்னு வந்தா தான் சில பேருக்கு சொந்த மொழி வருது.....தமிழுக்கு மாறிட்டீங்க...எனிவே தட்ஸ் நன் ஆப் மை பிசினெஸ்( Anyway thats none of my business)...நான் உங்களை மீட் பண்ணனும்...இன்னிக்கே மீட் பண்ணனும்...வேர் ஆர் யு சிட்டிங்? (Where are you seated)"


"ம்ம் வாங்க பாக்கலாம்...ஐ யாம் வெயிட்டீங்...(I am waiting) அடுத்த 30 நிமிஷம் பேசலாம்...ரைட் அவே... (Right away) நான் சிறுசேரி ஆபிஸ்ல்ல இருக்கேன்....3வது ப்ளோர் லெப்ட் விங்க்...( 3rd Floor Left wing) சீட் நம்பர் 3A123 ( Seat number 3A123)
சொல்லி முடிக்கும் போதே அவ பேச்சுல்ல இருந்த திமிரோட அளவு அதிகரிப்பதை என்னால உணர முடிஞ்சுது..


நான் இருக்கது அண்ணா சாலை ஆபிஸ்... சிறுசேரிங்கறது பழைய மகாபலிபுரம் சாலையின் மறு கோடியில்ல இருக்கு..ஐடி கம்பெனி எல்லாம் மக்களுக்கு நிறைய வேலை வாய்ப்பு வசதி எல்லாம் பண்ணிக் கொடுக்க தோதா வருமான வரி விலக்கோட தொழில் நடத்த சென்னைக்கு ரொம்பவே கொஞ்சமா தள்ளி ஒரு தொழில் பூங்கா அமைச்சுருக்க இடம் தான் இந்த சிறுசேரி....என் கதை நடந்த காலத்துல்ல அது ஒரு பொட்டல் காடு...ஏன் சுடுகாடுன்னு கூட ஒரு கதை உண்டு...ராத்திரில்ல ஆபிஸ்ல்ல எல்லாம் எப்போவோ செத்து போன மக்கள் எல்லாம் உலா வந்து போவதா சிறுசேரி பத்தி பீதி கிளப்பும் கதைகள் ஏராளமா கேள்விபட்டதுண்டு..இப்போ கதையை நீங்க படிக்கிற காலத்துல்ல இருக்க சிறுசேரி ரியல் எஸ்டேட்டின் சொர்க்கபுரி...ஐடி மனிதர்களின் தொழில் சாம்ராஜ்ஜியம்...சரி கதைக்கு வருவோம்


எப்படி கிளம்பி எந்த ரேஸ் பைக்ல்ல காத்தை கிழிச்சுட்டு போனாலும் 30 நிமிச கெடுவுக்குள்ளே போய் சேருவது ரொம்ப ரொம்ப கஷ்ட்டம்..

ஆனாலும் தேவர் மகன்ல்ல கமல் சொல்லுவாரே நமக்குள்ளே தூங்கிட்டு இருக்க மிருகம் அதாங்க சிங்கம்...அந்த சிங்கத்தோட என்னைச் சும்மா இருக்க விடுல்ல...

"ஐ வில் பி தேர் இன் 30 மினிட்ஸ்(I will be there in 30 minutes) "அப்படின்னு சொல்லிட்டு அவ பதிலுக்கு காத்திருக்காம போனைத் துண்டிச்சுட்டு படுவேகமா கிளம்புனேன்...லிப்டை கூட எதிர்பாக்காம நாலாவது மாடியில் இருந்து பல படி தாவி இறங்கி பார்க்கிங்கை நோக்கி ஓடுனேன்..நான் செய்த ஒரே நிதானமான விசயம் கையோட ஹெல்மேட்டை எடுத்து வச்சுகிட்டது தான்னு நினைக்குறேன்..

யமஹாவை மெதுவா ஒரு தட்டு தட்டிக் கொடுத்துட்டு ஒரே தாவா தாவி ஏறி உக்காந்து கிக் ஸ்டார்ட்டை ஒரே உதை உதைச்சேன்...என் அவசரம் புரிஞ்ச என் யமாஹா தோழன் சர்ர்ர்ன்னு சீறுனான் அவனை இன்னும் கொஞ்சம் லாவகமா முறுக்கி பார்க்கிங் குறுக்காக ஓட்டுக்கிட்டு மெயின் ரோட்டில் பாஞ்சேன்..


போற வழியில் இருந்த எந்த சிக்னல் ரெட் லைட்டும் என் கண்ணுக்கு தெரியவே இல்லை...


"டேஏஏஏஏஏய் சாவுகிரக்கி..வூட்ல்ல சொல்லிட்டு வந்துட்டீயா....." சைதாப்பேட்டை மேம்பாலம் பக்கம் ஒரு சைக்கிள்காரர்


"பாதியில்ல பாடை ஏற போறியாடா பன்னாட..." கிண்டி திருப்பத்தில் சீறும் பாம்பை நம்பு சிரிக்காதான்னு மிகப் பெரிய தத்துவம் சுமந்த ஒரு ஆட்டோவுக்கு சொந்தக்காரர்


"அடிங்கொய்யாலே யமாஹா தானே ஓட்டுற ஏரோப்ளேன் ஓட்டுறா மாதிரி போற எங்கேயாச்சும் போய் சொருகிக்காதே சோ......ரி" முடி குறைந்த ஒரு மினி லாரி டிரைவர்


"ஸ்டுபிட் கிரிப்..... (Stupid Creep)" ஒரு காலேஜ் பிகர்...ஒரு நொடி நிறுத்தி திருப்பி பாத்து சாரி கேக்குறதுக்கு அது ஒர்த் தானான்னு அதே ஒரே நொடியிலே ஒரு முடிவுக்கு வந்து சாரி கேட்டுட்டு மீண்டும் வண்டியை விரட்டிட்டு போனேன்


இப்படி வகைவகையா வசவை எல்லாம் வாங்கி கட்டி வாரி சுருட்டிகிட்டு அண்ணாசாலை துவங்கி மத்தியகைலாஷ் சிவன் கோயில் வரை எங்கேயும் நிக்காமல் போயிகிட்டு இருந்தேன்...
இன்னிக்கு ஐடி உலகின் கனவு பாதையா இருக்க ராஜீவ் காந்தி சாலை அப்போத் தான் உருவாக்கத்தில் இருந்ததுச்சு...அதிகமா கூட்டமில்ல.. சாலையும் யமஹாவை விரட்டுற தரத்தில் இல்ல...அத எல்லாம் யோசிச்சு நிதானம் கடைப்பிடிக்குற தெளிவுல்ல சத்தியமா நானும் இல்ல...


திருவான்மியூர் பக்கம் வரும் போது மழை பிடிக்க ஆரம்பிச்சது...சாலை ஓர மரங்களாப் பாத்து பைக் ஓட்டுறவங்க எல்லாம் ஒதுங்க ஆரம்பிச்சாங்க...

புத்தி காட்டுற வழியிலே போனா வாழ்க்கையிலே சேதாரம் கம்மி..ஆனா மனசுன்னு ஒரு குரங்கு இருக்கே அது இழுக்குற இழுப்புக்கு போனா இழப்பு தான்..புத்தி மரத்தைக் காட்டி ஒதுங்குன்னு சொல்லிச்சு..ஆனா மனசு மசமசன்னு நிக்காம கிளம்பு....இன்னும் 13 நிமிசம் தான் இருக்குன்னு உசுப்பி விட்டுச்சு
.
யமஹா லேசா இருமிக் காட்டிச்சு...அதயே உறுமலா எடுத்துகிட்டு திரும்பவும் சிறுசேரிக்கு சாகசமாப் புறப்பட்டேன்..


பெருங்குடியைத் தாண்டும் போது மழை ரொம்பவே வலுக்க ஆரம்பிச்சிருச்சு... தானா குறைஞ்ச வேகத்தை குறையமாக் கூட்டுறதுல்லயே தான் என் கவனம் இருந்துச்சு...ஹெல்மெட் வைசர் வழியா மழைத் தண்ணி முகத்துல்ல வழிய ஆரம்பிச்சது அத துடைக்க கூட நிக்கமா போயிட்டே இருந்தேன்..


யார்கிட்ட திமிரு காட்டுற....30 நிமிசம் என்ன நான் மனசு வச்சா 30 செகண்ட் போதும் வந்து சேர....அவ முகம் பாத்து விரலை சொடுக்கி சொல்லிட்டு இருந்தேன்....

ஐயாம் சாரி....அந்த தேன் தொட்ட குரல்ல அவ குழைஞ்சு நெளிஞ்சு சொல்லுறதக் கேக்க கொடுத்து வச்சிருக்கணும்...

அவ்வளவு என்ன ஒரு பொண்ணுக்கு ஆணவம்...ஒரு ஆம்பளை கிட்ட பேசும் போது எப்படி பேசணும்ன்னு தெரியாம வளந்துருக்கா...சொல்லிக் கொடுப்பேன்ல்ல...

வேலை வெட்டி இல்லையா நீ கூப்பிட்டா வர்றதுக்குன்னு கேக்குற...அன்னிக்கு நீ போன் பண்ணி கூப்பிட்டன்னு தானே சனிக்கிழமைன்னு கூட பாக்கமா காலையிலே 8 மணிக்கு எல்லாம் ஆபிஸ் வாசல்ல வந்து நின்னோம்....எங்களுக்கு வேலை வெட்டி இல்லையா....

இப்படி எல்லாம் மனசுக்குள்ளே மாறி மாறி ஓடிட்டுருந்த மொத்த ரீலும் ஒரே கணத்துல்ல அறுந்து தொங்கிச்சு...என்ன ஆச்சுன்னு நான் முழுசா புரிஞ்சுக்கறதுக்குள்ளே..

யமஹா ஒரு பக்கம்...ஒரு பக்கம்ன்னு...சிதறி தெறிச்சுட்டுருந்தோம்...கண்ணை மூடி திறந்தப்போ எதோ ஒண்ணு பெருசா மொத்த பார்வையும் மூடிருச்சு... முகத்துல்ல வழிஞ்ச ரத்தத்தை கைல்ல லேசா தொட்ட மாதிரி இருந்துச்சு.....அப்படியே கண் எல்லாம் இருட்டிட்டு வந்துருச்சு...

அய்யோ யாரு பெத்தப் புள்ளயோ.... ஒரு குரல் லேசா காதுல்ல விழுந்துச்சு....அது ஒரு வயசானப் பாட்டி குரலாத் தான் இருக்கணும்...அதுக்கு மேல காதுல்லயும் எதுவும் விழல்ல

சில பேரு கும்பலா வந்து என்னைத் தொட்டு தூக்குற மாதிரி இருந்துச்சு...அந்த உணர்வு அடுத்த சில வினாடிகள்ல்ல கொஞ்சமா கொஞ்சமா குறைஞ்சு மொத்தமா ஒரு சூனியத்துக்குள்ளே நான் போயிட்டேன்...

சாதரணமாச் சொல்லணும்ன்னா வேகமா போன என் யமாஹாவும் நானும் ஒரு பள்ளத்துல்ல தடுமாறி நிலை சரிஞ்சு....விபத்துல்ல சிக்கிட்டோம்....

எத்தனை நாள்...எத்தனை வாரம் எதுவும் ஞாபகம் இல்ல....ஆஸ்பத்திரில்ல இருந்து இருக்கேன்...தலையிலே அடியாம்...ஆனாலும் காப்பாத்தி இருக்காங்க...கம்பெனி இன்சுரன் ஸ் உதவியிருக்கு...

அப்பா அம்மா டாம் மூணு பேரும் இருந்தாங்க....பேசணும்ன்னு நினைச்சு வாயைத் திறந்தா பேச்சு வர்றல்ல...சிரமப்படுத்திக்க வேணாம்ன்னு சொன்னாங்க...

"பைக்கை கொண்டு போய் அப்படி விட்டுருக்க....குடிச்சுருந்தியாக் கேட்டாங்க போலீஸ்ல்ல..அப்படி என்ன அவசரம் உனக்கு என்கிட்டக் கூட சொல்லாம எங்கே கிளம்புன..." டாம் கைல்ல ஆரஞ்சு ஜூஸ் கிளாஸ் எனக்கு குடுக்காம அவனே முழுசையும் குடிச்சுட்டு பேசிட்டே இருந்தான்

அம்மா அப்பா பாக்கவேக் கஷ்ட்டமா இருந்துச்சு...எதுவும் பேச முடியல்ல....அப்பா ஆதரவாத் தலையை வருடிட்டி எழுந்து வெளியே போனார்...அம்மா அழுதாங்க....

ரேடியோவைப் போடச் சொல்லி சைகை காமிச்சேன்....நேரங்கெட்ட நேரத்துல்ல எனக்கு பிடிச்ச பாட்டைப் போட்டான் சூரியன் எப் எம்ல்ல...

"நான் உள்ளே வரலாமா.....?" அந்த தேன் தொட்ட குரல்...அவளே தான்....

தலையைத் திருப்ப முடியாம அவ முகம் பாக்க சிரமப்பட்டேன்..

"தம்பி...எவ்வளவு வருசமாச்சு...ஆனாலும் நம்மளை எல்லாம் ஞாபகம் வச்சிருக்காப்பா...தேவதை மாதிரி வந்து உதவியிருக்காப்பா...ஆசுபத்திரில்ல இருந்த அஞ்சு வாரமும் தவறாம வந்து விசாரிச்சாப்பல்ல எல்லா விதத்துல்லயும் துணையா இருந்தாப்பா....ஆனா நீ தான் ஒரு வார்த்தையும் சொல்லவே இல்லப்பா"

அம்மா சொல்ல சொல்ல ஒண்ணும் புரியாம கண்ணை உருட்டுனேன்... சந்தன வாசம் அப்படியே காத்துல்ல தவழ்ந்து வந்து நாசியிலே நிரம்பி நின்னுச்சு....

அவ கிட்ட வந்துட்டா...சரசரன்னு பட்டு புடவை...லேசா ஒலி எழுப்புற கொலுசு....கொஞ்சமா குலுங்குற வளையோசை.முகத்துல்ல விழுந்து கத்தை முடியை ஒத்த விரல் வச்சு வழிச்சு அவ விசிறி விட்டதுல்ல நிலாவுல்ல பனித்துளி பட்டு தெறிச்சா எப்படி இருக்கும்ன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு...மிச்ச முடியையும் தள்ளிவிட்டு என் பக்கமா முகம் திருப்புனப்போ...ஒரு கணம் என் உயிர் என்னைவிட்டு போயேப் போச்சு....

ர ஞ் சனி.. சத்தம் வராமல் என் உதடு மட்டும் அசைஞ்ச அதே பொழுதுல்ல...

ஹாய்...ஆர்.பி....ஹியர்..... சிரிச்சுகிட்டே என்னைப் பாத்தா....

என்னம்மா பட்டுப் புடவை எல்லாம் கட்டிகிட்டு கல்யாண பொண்ணு மாதிரி அமர்களமா இருக்கே..." அம்மா கேட்டாங்க

ஆமா ஆன்ட்டீ கல்யாணம் தான்...அடுத்த மாசம் 26ஆம் தேதி....இதோ பத்திரிக்கை...கொடுத்துட்டு சாரையும் பாத்துட்டு போலாம்ன்னு தான் கோயில் போயிட்டு நேரா வர்றேன்...இந்தாங்க பிரசாதம்..."

அப்புறம் கல்யாண பத்திரிக்கை...கண்டிப்பா வரணும்....முக்கியமா சார் வரணும் அவர் வர்றல்ல எப்படி என் கல்யாணம் நடக்கும்" சிரிச்சிட்டே இருந்தா....

எத்தனை வருசம்....எவ்வளவு நாள்....மறுபடியும் உன்னை சந்திப்பேன்னு நான் நினைக்கவே இல்ல...அதுவும் இப்படி.....

ரேடியோவில் பாட்டு முடிஞ்சுது....என் மனசுல்ல பாட்டு மறுபடியும் முதல்ல இருந்து ஓட ஆரம்பிச்சது...

தொடரும்

2 comments:

Unknown said...
This comment has been removed by the author.
கோபிநாத் said...

சூப்பரு ;-)))

ஆனா இத்தோட வாசம் எப்போ வீசுமுன்னு உங்களுக்கே தெரியாதே...! ;-)