Wednesday, June 21, 2006

கவி 18:தீவுத் தமிழா


தமிழகக் கரையோரம் மோதும்
தண்ணீர் அலைகள்
சமீபக் காலங்களில்
சற்று அதிகமாய் உவர்க்கிறதாம்...

விசாரித்த வரையில்
விவரங்கள் வியர்க்க வைக்கினறன்
தீவுத் தேசத்தில் தினமும்
தமிழன் கண்ணீர் சிந்துகிறானாம்

கண்ணீரும் கடலும் கைகோர்த்து
கடிதம் எழுதுகிறது
அலை வாயிலாக
அவசர அஞசல் வருகிறது

வாசிக்க வாசிக்க
வலிக்கிறது
வலியின் மிகுதியில்
வார்த்தைகளும் இறக்கின்றன

தேயிலைத் தோட்டங்களில்
தோட்டாக்கள் சாகுபடியா?
இயற்கையின் மடியில்
இன்னும் இனப்படுகொலைகளா?

ஆயுதம் கூட அழுதிருக்கும்
அந்த ஈனச் செயலில் இறங்கியதால்
இன்னும் மலராத மொட்டுக்களை
இரக்கம் பாராமல்
கொய்து எறிய
கொலை ஆயுதமே சம்மதியாதே!!!

உயிரின் மொத்தமும்
உலுங்கிப் போனது
வாழ்க்கையின் மீதான நம்பிக்கை
வழுக்கிப் போகுது

எதைச் சாய்ப்பதாய் உத்தேசம்
எதைச் சாதித்ததாய் எகத்தாளம்
கிழிந்தது மனிதன் என்னும் உங்கள் முகம்
காயப்பட்டது மனிதம் என்னும் மதம்

தீவுத் தமிழா
தீராத உன் ஏக்கம்
உன் ஓலங்களின்
உள்ளது என் மொழி

உன் உறக்கங்கள் ஊனப்பட்டு
உன் கனவுகள் களவாடப்படுகையில்
என்னவோ செய்கிறது
என்னிலும் உன் கண்ணீர் வழிகிறது...


வலை உலகிலும் பத்திரிக்கையிலும் படித்துப் பதறிய இலங்கை நிகழ்வுகளால் தட்டிய வார்த்தைகள்.எல்லாம் வல்ல இறைவனிடம் நம் சகோதர தமிழர்களுக்கு அமைதி தர வேண்டுகிறேன்.

20 comments:

இலவசக்கொத்தனார் said...

//எல்லாம் வல்ல இறைவனிடம் நம் சகோதர தமிழர்களுக்கு அமைதி தர வேண்டுகிறேன்.//

ஆமென்.

Jeyapalan said...

அருமை.
தண்ணீர் சுவை உவர்ப்பு மிகுவதைப் போல், நிறமும் சிவப்பாக மாறுவதாக எழுதி மெருகு கூட்டலாம்.
கரிசனைக்கும் கவிதைக்கும் நன்றி.

நாகை சிவா said...

//உன் உறக்கங்கள் ஊனப்பட்டு
உன் கனவுகள் களவாடப்படுகையில்
என்னவோ செய்கிறது
என்னிலும் உன் கண்ணீர் வழிகிறது...//
என் கண்களும் கலங்குகின்றன. உன் கண்ணீர்க்காக மட்டும் இல்லை. அதை தொடைக்க முடியாத குற்ற உணர்ச்சியிலும் தான்.

வெற்றி said...

தேவ்,
அருமையான கவிதை.

//தமிழகக் கரையோரம் மோதும்
தண்ணீர் அலைகள்
சமீபக் காலங்களில்
சற்று அதிகமாய் உவர்க்கிறதாம்...//

ஈழத்தில் தமிழினம் படும் இன்னல் கண்டு வேதனையடைந்து இதயக்கண்ணீர் விடும் தமிழக உறவுகளின் உணர்வலையை இக் கவிதையில் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். மிகவும் உணர்வுபூர்வமான கவிதை. உங்களின் உள்ளத்தின் வெளிப்பாடு. மிக்க நன்றி.

அன்புடன்
வெற்றி

வெற்றி said...

தேவ்,
அருமையான கவிதை.

//தமிழகக் கரையோரம் மோதும்
தண்ணீர் அலைகள்
சமீபக் காலங்களில்
சற்று அதிகமாய் உவர்க்கிறதாம்...//

ஈழத்தில் தமிழினம் படும் இன்னல் கண்டு வேதனையடைந்து இதயக்கண்ணீர் விடும் தமிழக உறவுகளின் உணர்வலையை இக் கவிதையில் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். மிகவும் உணர்வுபூர்வமான கவிதை. உங்களின் உள்ளத்தின் வெளிப்பாடு. மிக்க நன்றி.

அன்புடன்
வெற்றி

வெற்றி said...

தேவ்,
அருமையான கவிதை.

//தமிழகக் கரையோரம் மோதும்
தண்ணீர் அலைகள்
சமீபக் காலங்களில்
சற்று அதிகமாய் உவர்க்கிறதாம்...//

ஈழத்தில் தமிழினம் படும் இன்னல் கண்டு வேதனையடைந்து இதயக்கண்ணீர் விடும் தமிழக உறவுகளின் உணர்வலையை இக் கவிதையில் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். மிகவும் உணர்வுபூர்வமான கவிதை. உங்களின் உள்ளத்தின் வெளிப்பாடு. மிக்க நன்றி.

அன்புடன்
வெற்றி

நவீன் ப்ரகாஷ் said...

//தீவுத் தமிழா
தீராத உன் ஏக்கம்
உன் ஓலங்களின்
உள்ளது என் மொழி//

எம்மொழி
செம்மொழியானது
இங்கு!
எம்மொழி பேசுவதானால்
செங்குருதி
சிந்துகிறான்
அங்கு !

என்று தணியும் இந்த கொடூரத்தின் தாகம் ??

Unknown said...

கொத்ஸ்,

என் பிரார்த்தனையும் அதுவே ஆமென்

Unknown said...

//அருமை.
தண்ணீர் சுவை உவர்ப்பு மிகுவதைப் போல், நிறமும் சிவப்பாக மாறுவதாக எழுதி மெருகு கூட்டலாம்.
கரிசனைக்கும் கவிதைக்கும் நன்றி.//

ஜெயபால் தண்ணீர் ரத்தமாக மாறிவிடுமோ என்ற அச்சம் அடிமனத்தில் இருக்கத் தான் செய்கிறது

கருத்துக்கு நன்றி

Unknown said...

//என் கண்களும் கலங்குகின்றன. உன் கண்ணீர்க்காக மட்டும் இல்லை. அதை தொடைக்க முடியாத குற்ற உணர்ச்சியிலும் தான். //

என் உள்ளத்து உணர்வுகளை உங்கள் வார்த்தைகளில் காண்கிறேன் சிவா

Unknown said...

//ஈழத்தில் தமிழினம் படும் இன்னல் கண்டு வேதனையடைந்து இதயக்கண்ணீர் விடும் தமிழக உறவுகளின் உணர்வலையை இக் கவிதையில் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். மிகவும் உணர்வுபூர்வமான கவிதை. உங்களின் உள்ளத்தின் வெளிப்பாடு. மிக்க நன்றி.//

என் வலிகளை வெளியிட வேறு வழி தெரியவில்லை.

நன்றி வெற்றி.

Unknown said...

//எம்மொழி
செம்மொழியானது
இங்கு!
எம்மொழி பேசுவதானால்
செங்குருதி
சிந்துகிறான்
அங்கு !//

நவீன் வலிமையான வரிகள். நன்றாக உள்ளது.

//என்று தணியும் இந்த கொடூரத்தின் தாகம் ?? //

பிரார்த்தனைகள் தொடரும்

Anu said...

தேவ்
அருமையான கவிதை
உணர்வுபூர்வமாய் எழுதி இருக்கீஙக

கவிதா | Kavitha said...

தேவ், கவிதை நன்றாக இருக்கிறது, கதையில தான் கலக்கறீங்கன்னு பார்த்தா.. கவிதையிலும்...

//வாசிக்க வாசிக்க
வலிக்கிறது
வலியின் மிகுதியில்
வார்த்தைகளும் இறக்கின்றன//

ஆம் வலிக்கின்றன..

கானா பிரபா said...

எங்கள் சகோதரர்களின் உப்புக்கரிக்கும் வாழ்க்கைக்கு வார்த்தை வடிவம் கொடுத்தமைக்கு நன்றிகள்

Unknown said...

அனிதா வருகைக்கும் தருகைக்கும் நன்றி.

இந்த எழுத்துக்கள் தீவுத் தேசத்து மக்கள் படும் துயரங்களுக்கு வார்த்தைகளில் மருந்து தேடும் முயற்சி...

Unknown said...

கவிதா வருகைக்கும் தருகைக்கும் நன்றி.

Unknown said...

பிரபா,

நீங்கள் எங்களுக்கும் சகோதரர்களே.. சக மனிதனின் உணர்வுகள் எங்கெல்லாம் மிதிக்கப் படுகிறதோ அங்கெல்லாம் வலியின் வேதனையில் இப்படியான வார்த்தைகள் பிறக்கின்றன...

வந்தியத்தேவன் said...

தேவ் எமக்காக குரல் கொடுக்க சகோதரர்கள் நீங்கள் இருக்கும் துணிவில்தாம் நாம் இன்னமும் போராடுகிறோம். தொப்புள்கொடி உறவை யாராலும் அறுக்கமுடியாது தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது இதுதான்.

Unknown said...

போராட்டங்கள் ஒரு நாள் முடியும் நல்லதொரு விடியல் வரும் என நம்புங்கள். அமைதி மலரும்.. இன்பம் பூக்கும் இது நிச்சயம் தமிழா