Wednesday, November 01, 2006

கதை10: கதிரேசன் கதை - பகுதி 3

கதிரேசன் கதை - பகுதி 1

கதிரேசன் கதை - பகுதி 2

மாலைக் காற்று முகத்தில் மோதி ஆனந்தனின் கேசம் கலைத்துப் போட்டது. ஆனந்தனின் தோள் பிடித்து மெல்ல மெல்ல நடந்த தாஸ் வாத்தியாரின் நடையில் கொஞ்சம் தெம்புத் தெரிந்தது.

மதிகெட்டான் சோலை நோக்கி இருவரும நடந்துச் சென்ற குறுக்குப் பாதை ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடந்தது. பாதையில் கட்டுபாடின்றி வளர்ந்திருந்த பச்சை தாவரங்களின் வாசம் உணர்வுகளை வருடியது. அந்த பாதை ஓரங்களில் ஒளிந்திருந்த வருணணைக்கு மீறிய இயற்கையின் அமைதியும் அதன் அர்த்தங்களும் ஆனந்தனின் மனத்தை பாரமாய் அழுத்த ஆரம்பித்தன.

தாஸ் வாத்தியார் அவன் தோள் பிடியில் இருந்து கையை விடுவித்துக் கொண்டு குறிப்பிட்ட அந்த இடம் வந்ததும் நின்றார். நிலத்தைப் பார்த்து எதையோத் தேடினார். இலைகளும் சருகுகளும் கோபுரமாய் குவிந்துக் கிடந்த இடத்தில் மண்டியிட்டு உட்கார்ந்துக் கொண்டார். தீடிரெனத் தன் வயதுக்கும் மீறிய சக்தியோடு கைகளால் அந்தக் குப்பைகளை அப்புறப் படுத்தத் தொடங்கினார்.அந்த குப்பைகளுக்குக் கீழே அழுக்கு அடைந்து உடையும் நிலையிலிருந்த சமாதியை வாஞ்சை ததும்பியக் கண்களோடு பார்த்த வண்ணம் பார்வையை நிறுத்தினார்.

"கதிரேசன் இங்கிட்டுத் தான் தூங்குறான்..." வார்த்தைகள் தெளிவாய் வெளிவந்தன. அவர் குரல் பல வருடங்களுக்கு முன்பிருந்த மாதிரி ஒலித்தது. ஆனந்தன் அதைக் கவனிக்காமல் அந்தச் சமாதியை வேதனைக் கலந்த உணர்வுகளோடு பார்த்தப் படி நின்று கொண்டிருந்தான்.அப்பொழுது அவன் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் சமாதியின் அழுக்குப் படிந்துப் பழுப்பேறிய இடங்களில் விழுந்துக் கொண்டிருந்தன. அவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

கண்ணீர் விழுந்த இடம் கண்டு தாஸ் வாத்தியார் இதழ்களில் ஒரு அழுத்தமான புன்னகை தோன்றியது.

அங்கு சூழந்த அமைதியின் காரணமாய் ஆனந்தன் மனம் பின்னோக்கி பயணமானது. கதிரேசன் உடல் ஊர் வீதியில் கண்டெடுக்கப்படுவதற்கு ஒரு வாரம் முன்...

"ககதிரை எப்படியாவது காப்பாத்தணும்... அ அவன் நல்லவன்.." தனக்குத் தானே பேசிக்கொண்டு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து இருந்தான் ஆனந்தன்.

"மாமா..."

ஆனந்தனின் உயிர் மூலையில் அவன் ரகசியமாய் பதிந்து வைத்திருந்த செண்பகத்தின் குரல் மிகவும் பக்கத்தில் கேட்டப் போது அவன் சிலிர்த்துப் போனான். தன் கவலைகளை ஒரு கணம் காணாமல் அடித்து விட்டு செண்பகத்தின் குரலில் கவனம் பதித்தான்.

தன் திக்குவாய் காரணங்களால் செண்பகத்திடம் ஆனந்தன் அதிகம் பேசுவதில்லை. செணபகம் என்றில்லை யாரிடமும் அந்தக் காரணம் கருதியே அதிகம் பேசுவதில்லை. (அதற்கு கதிரேசன் மட்டும் விதிவிலக்கு.) அவளைப் பார்த்தால் ஒரு அசட்டுச் சிரிப்பு. ஓரிரு வார்த்தைகள் அவ்வளவுத் தான். அப்போதும் அவன் அவளிடம் என்ன என்று வாய் திறந்துக் கேட்கவில்லை, அவள் இருக்கும் பக்கம் தலையை மட்டும் திருப்பினான்.

" மாமா.. இதுல்ல மருந்து இருக்கு.. குண்டு அடிபட்ட உங்க கூட்டாளிக் காட்டுல்ல இருக்காரே அவர் காயத்துக்கு மருந்து..கொண்டு போய் கொடுக்குறீங்களா?"

"இ இதுது.. எல்லாலாம் ஓஒனக்கு எப்பபடி?"
ஆனந்தன் அவளை ஆச்சரியமாய் பார்த்தான். அவன் மனத்தில் ஆயிரத்தெட்டு கேள்விகள் எழுந்தன. அவன் நாக்கு கேள்விகளின் சுழலில் சிக்க செண்பகம் புரிந்துக் கொண்டாள்.

"திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்ல்ல வச்சு கொடுத்தாய்ங்க.. அவரோட இயக்கத்துக்காரயங்களாம். கதிரேசன் ஊர்கார பொண்ணு தானே நீயு.. ஒன் மாமன் ஆனந்தன் தான் கதிருக்கு ரொம்ப சினேகிதகாரன்.. அவன் கிட்ட இதைக் கொடுத்துரு.. அவன் இதைக் காட்டுக்குள்ளே எப்படியும் கதிர் கிட்டச் சேத்துருவாய்ன்.. கதிரைக் காப்ப்பாத்துணும்.. எங்களை அந்த மிராசு குருப்பும் , போலீஸும் தேடிகிட்டு இருக்கு.. கதிர் கிட்டச் சொல்லு... நெலமைச் சரியானதும் நாங்க அவனைப் பாக்குறோம்ன்னு... அது வரைக் காட்டுக்கு வெளியே கதிர் வர வேணாம்.. வந்த அந்த எஸ்.ஐ அரசுடையப்பன் போட்டுருவான்..... அப்படின்னு சொல்லி இந்த மருந்தைக் கொடுத்துட்டுப் போயிட்டாய்ங்க "
என்று மூச்சு விடாமல் தன்னிடம் அந்த மருந்து வந்து சேர்ந்தக் கதையை ஆனந்தனிடம் சொன்னாள்.

ஆனந்தன் செண்பகம் சொன்ன விசயங்களை மறு சிந்தனையின்றி மனத்தில் வாங்கிக் கொண்டான். அவனுக்கு முன்னை விட இன்னும் அதிகமாய் அந்தப் பொழுதினில் செண்பகத்தின் மேல் காதல் பொங்கி வழிந்தது. அது அவன் முகத்தில் தெரிந்தது.

"மாமா.. ஓங்க கூட்டாளிக்கு இந்த மருந்துப் போட ஆராவது இருக்காய்ங்களா..???"

" நானேத் தான் போடணும்..." திக்காமல் பேசினான் ஆனந்தன்

" மருந்துப் போட்டுவிட வேணும்ன்னா நானும் ஓங்க கூட வர்றேன்... இல்ல நர்ஸ் படிப்பு தானே நானும் படிக்கேன்.."

"அது காடு.. அங்கிட்டு நீ எல்லாம் வந்துக்கிட்டு அவ்வளவு உசிதம் இல்ல" மறுபடியும் வார்த்தைகள் தடையின்றி வந்தன.

"எவ்வளவு காடா இருந்தா என்ன.. ஓங்கக் கூடத் தான் வர போறேன்.. என்னிய நீங்க காப்பாத்த மாட்டீங்களா"

"சரி வா" யோசிக்காமல் பளிச்செனச் சொன்னான் ஆனந்தன்.
"உன்னிய காப்பாத்தறதுக்காக தான் இந்த வாழ்க்கையே இன்னும் நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்..." தனக்குள் உரக்கச் சொல்லிச் சந்தோஷப் பட்டுக்கொண்டான்.

இந்த முறை மழைக் கொஞ்சம் வெறித்திருந்த நேரமாய் ஆனந்தன் செண்பகத்தைக் கூட்டிக் கொண்டு காட்டிற்குள் போனான்.

தனிமையில் செண்பகத்தோடு இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும்த் தன் பிறப்பின் பயனாய் நினைத்துக் கொண்டாடிய படி நடந்தான். ஒற்றையடி பாதையில் இருவரும் நெருக்கத்தில் நடந்துப் போய் கொண்டிருக்கும் போது ஒரு கணம் செண்பகம் பாதம் இடறி அவன் மீது அனிச்சையாய் சரிந்தாள். அந்த வினாடியில் அவன் மீது படர்ந்த செண்பகத்தின் வாசம் அவன் சித்தத்தைக் கலக்கியது.

"நீ முன்னாலப் போ செம்பகம்...."

அவளைப் பின் தொடர்ந்த அவன் மனம் அவள் அங்க அசைவுகளில் ஆட்டம் போட்டது. அடங்க மறுத்தது. அவனை ஆசை அலைகளில் சிக்கித் தடுமாறிப் போனான்.. அவன் மூச்சு காற்று அந்த குளிர் காட்டைத் தீயிலிடும் நோக்கில் அவன் நாசி விட்டு புறப்பட்டது.

"இல்ல .. இப்போ கதிரைப் பாக்கப் போறோம் .. செம்பகம் என்னிய நம்பி எனக்காக என் நண்பனுக்கு ஒதவி பண்ண எங்கூட வந்து இருக்கா.. கிறுக்குத் தனமா யோசிக்கக் கூடாது.." தனக்குத் தானே லகான் மாட்டிக் கொண்டான்.

"என்னிக்கிருந்தாலும் செம்பகமும் அவ மொத்த அழகும் எனக்குத் தான்..அப்போ அந்த மொத்த அழகையும் கொஞ்சம் கொஞ்சமா......" ரகசியமாய் தன் மனத்திற்குள் சிரித்துத் தொலைத்தான்..அவன் சிரித்த நிமிடம் செண்பகத்தின் விசும்பல் சத்தம் கேட்டு தலை நிமிர்ந்தான்.

செண்பக்த்தின் நினைப்பில் கொஞ்ச நேரம் தன்னை மறந்த நிலையில் நடந்த வந்த ஆனந்தன் அப்போது தான் சுயநிலைக்குத் திரும்பியிருந்தான்....

"செம்பகம் அழதாடா..."

அந்தக் குரல் தன்னுடையது இல்லையே என்று ஆனந்தன் முழுவதுமாய் யோசித்து முடிக்கும் முன்.. அவன் கண்கள் செண்பகம் கதிரேசனை இறுக கட்டிக் கொண்டு ஓ வென அழுதுக் கொண்டிருப்பதைக் கண்டன....

ஆனந்தன் கண்களிலும் கண்ணீர்...

"சீக்கிகிரர்ம் ச்செச்ம்ப்கம் ப்ப்போவ்வல்லாம்"

செண்பகம் கதிரேசனுக்கு மருந்திட்டுப் பணிவிடைகள் செய்து அவன் மார்பைத் தன் மொத்தக் கண்ணீராலும் நனைத்துப் பின் அவன் கன்னங்களில் தன் இதழ்கள் வலிக்க முத்தங்கள் பொழிந்து அவனை விட்டு இன்னும் அகல மனமின்றி நின்று கொண்டிருந்த தருணத்தில் ஆனந்தனின் வாயிலிருந்து வார்த்தைகள் வழக்கத்திற்கும் அதிகமாய் திக்கி வந்தன.

அந்த முழுச் சந்திப்பில் ஆனந்தன் கதிரேசனிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. கதிரேசன் ஆனந்தனை இறுக அணைத்துக் கொண்டான். செண்பகமும் கதிரேசனும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனந்தன் அந்த விவரஙகளைக் காதினில் வாங்கவே இல்லை. அவனுடைய உலகம் அவன் கண்முன்னே இடிந்துக் கொண்டிருந்தது. அதைப் பற்றி ஒன்றும் செய்ய முடியாதவனாய் உண்மையிலே திக்கிப் போயிருந்தான்.

மாலை நேரம் நெருங்கும் போது காட்டை விட்டு செண்பகமும் ஆனந்தனும் கிளம்பினார்கள். கிளம்பும் போது கதிரேசன் ஆனந்தனை இன்னொரு முறை இறுகத் தழுவினான்.

"ஓங்கிட்ட எல்லா விசயத்தையும் சொல்லியிருக்கணும்.. நான் சொல்லாதது தப்புத் தான்.. என்னிய மன்னிச்சுரு மாப்பி.. எல்லா விசயம்ங்கறது செம்பகத்தையும் சேத்தி தான் " என்று அவன் காதுகளில் கிசுகிசுப்பாய் சொன்னான்.

ஊர் திரும்பும் வரை ஆனந்தன் செண்பகத்திடம் எதுவும் பேசவில்லை. ஊர் எல்லை நெருங்கும் போது மழை வலுவாகப் பிடித்துக் கொண்டது

"திண்டுக்கல்ல கதிரேசன் கூட்டாளிக ஒங்கிட்ட மருந்துக் கொடுத்தனுப்ப நீ க்திரேசன் ஊர்காரிங்கறது மட்டும் தான் காரணமா....."
மழையின் சத்தங்களுக்கு இடையில் ஆனந்தன் நிதானமாய் செண்பகத்தை முகம் பார்த்துக் கேட்டான்.

'மாமா ஓங்க கிட்ட நான் எல்லாத்தையும் சொல்லியிருக்கணும் .. சொல்லாதது தப்புத் தான்...எல்லாத்தையும்ங்கற்து அவரையும் சேர்த்தி தான்.. என்னிய மன்னிச்சுருங்க" என்று சொன்ன செண்பகம் அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

"அவரை அந்த காட்டுக்குள்ளே யாரும் ஒண்ணும் செய்ய முடியாது.. அவர் இருக்க இடம் தாஸ் வாத்தியார் சொல்லித் தான் நமக்கே தெரியும்...அந்த அரசுடையப்பன் எஸ்.ஐயை யாராவது காட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போய் காட்டுனாத் தான் உண்டு.. அப்படி யார் இருக்கா இந்த சுத்துப் பட்டு கிராமத்துல்ல...நீங்க கவலைப் படாமப் போங்க..."

ஆனந்தனைச் சகஜ நிலைக்குக் கொண்டு வரச் செண்பகம் சொன்ன அறுதல் இது....

அன்றிரவு ஆனந்தன் தன் அறையைப் பூட்டிக்கொண்டு மவுனமாய் கதறினான். பல வருடங்களாய் செம்பகத்திற்கு கொடுப்பதற்கென அவன் பறித்து வைத்திருந்த ரோஜாப் பூக்களின் காய்ந்த இதழ்கள் மீது படுத்து அப்படியே உறங்கிப் போனான்.

சரியாக அதற்கு ஒரு வாரம் கழித்து கதிரேசனின் உடல் ஊர் வீதியில் கிடந்தது.

அதற்குப் பின் செண்பகத்தின் அப்பா உபயத்தில் ஊர் அரசியலில் சின்னதாய் இடம் பிடித்தது. அவர் கைகாட்டியதில் ஊர் தாண்டி அவன் எல்லைகள் விரிந்தது.. ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன் எனப் பெயர் வாங்கிய அவன் சென்னை வரை போனது... பின்னொரு நாளில் செண்பகத்தின் அப்பா அரசியல் காரணுங்களுக்காக செண்பகத்தை அவனுக்குக் கல்யாணம் செயது வைத்தது. செண்பகத்தை மணந்தானே தவிரச் செண்பகத்துடன் அவனுகிருந்த காதல் செத்துப் போயிருந்தது. இப்போது நினைத்துப் பார்க்கும் போது அவனுக்கு எல்லாமே ஒரு கனவு போலிருந்தது..

இன்று அவன் மாண்புமிகு தமிழக அரசு அமைச்சர் ஆனந்தன்... அந்த உணர்வு தட்ட கண்களைத் திறந்தப் பார்த்தான்...

அங்கு அவன் முன்னால் சாமாதி மீது, தவத்திலிருக்கும் ஒரு முனிவர் போல தாஸ் வாத்தியார் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். வலது கையில் ஒரு துப்பாக்கியைச் சரித்துப் பிடித்து இருந்தார்.

ஆனந்தனை ஆழ ஊடுருவி பார்த்த தாஸ் வாத்தியார் துப்பாக்கியைத் தூக்கி அவன் முகத்திற்கு நேராக குறி வைத்தார்.

"இங்கிட்டு வச்சுத் தான் எஸ்.ஐ அரசுடையப்பனைப் போட்டேன்... கதிரேசனை வீரனாத் தான் வளத்தேன்.. ஆனா அவன் முதுகுல்ல குண்டு பட்டுச் செத்துருக்கான்ய்ன்.."

தாஸ் வாத்தியார் எழுந்து வந்து துப்பாக்கி முனையை ஆனந்தனின் நெற்றி பொட்டில் வைத்து அழுத்தினார். மறு கையைத் தன் நெஞ்சின் மீது வைத்து இரண்டு தடவை அடித்துக் கொண்டார்.

"ஆனந்தா... எதுக்காக இப்படி பண்ணுன?" கேள்வியில் ஆற்றாமையும் அவதியும் வலியும் கலந்து வழிந்தன.

"க்க்திரேச்சன் செம்பகத்தக் காகாதலிச்ச்சருக்கக் கூடாதுது...காததலிச்ச்" இரண்டாவது முறை அவன் முடிப்பதற்குள் அவன் நெற்றியினை தாஸ் வாத்தியாரின் துப்பாக்கித் தோட்டாத் துளைத்தது....

பறவைகள் கிரிச்சிடும் சத்தம் கேட்டது.

சட்டைப் பையிலிருந்த சிகப்பு ரோஜாவை எடுத்து அவன் உடல் மீது வைத்து விட்டு காட்டை நோக்கி நடந்தார் தாஸ் வாத்தியார்

-The end

17 comments:

Unknown said...

கதையின் இப்பகுதி தாமதமாய் வெளியிட்டதற்கு மன்னிக்கவும். நன்றி

நாமக்கல் சிபி said...

கதை அருமையா இருந்தது தேவ்...

கைப்புள்ள said...

//"க்க்திரேச்சன் செம்பகத்தக் காகாதலிச்ச்சருக்கக் கூடாதுது...காததலிச்ச்" இரண்டாவது முறை அவன் முடிப்பதற்குள் அவன் நெற்றியினை தாஸ் வாத்தியாரின் துப்பாக்கித் தோட்டாத் துளைத்தது....//

ஹை! த்ரில்லர் கதை. நல்லாருக்கு தேவ். ஆனா ஓரளவுக்கு யூகிச்சேன் செண்பகமும் ஆனந்தனும் காட்டுலேருந்து திரும்ப வரும் போது பேசிக்கறதை வச்சி. மதுரை ஸ்லாங்...கதை எழுதுன விதம் எல்லாம் சூப்பர்.

கைப்புள்ள said...

//"க்க்திரேச்சன் செம்பகத்தக் காகாதலிச்ச்சருக்கக் கூடாதுது...காததலிச்ச்" இரண்டாவது முறை அவன் முடிப்பதற்குள் அவன் நெற்றியினை தாஸ் வாத்தியாரின் துப்பாக்கித் தோட்டாத் துளைத்தது....//

ஹை! த்ரில்லர் கதை. நல்லாருக்கு தேவ். ஆனா ஓரளவுக்கு யூகிச்சேன் செண்பகமும் ஆனந்தனும் காட்டுலேருந்து திரும்ப வரும் போது பேசிக்கறதை வச்சி. மதுரை ஸ்லாங்...கதை எழுதுன விதம் எல்லாம் சூப்பர்.

நாமக்கல் சிபி said...

கதை அருமை தேவ்...

ஏன் இத்தனை நாளா வாத்தியார் ஆனந்தனை கொல்லாம விட்டுட்டார்னு ஒரு கேள்வி தோனுது...

இந்த கதை எப்படியும் இன்னும் கொஞ்ச நாளைக்கு மனசுல நிக்கும்...

Unknown said...

வெட்டி கருத்துக்கு நன்றி.

//ஏன் இத்தனை நாளா வாத்தியார் ஆனந்தனை கொல்லாம விட்டுட்டார்னு ஒரு கேள்வி தோனுது...//

வாத்தியார் ஆனந்தனை அதிகம் நம்பினார். அந்த நம்பிக்கை எப்படி தகரந்தது என்பது எஸ்.ஐ அரசுடைப்பன் கொல்லப்படுவதாய் வரும் வரியினில் மறைமுகமாய் உணர்த்த முயற்சி பண்ணியிருக்கேன். அந்த சம்பவங்கள் நடப்பதற்குள் ஏற்பட்ட காலத் தாமதம்.. அதற்குள் ஆனந்தன் ஊர் விட்டு ஊர் மாறி செல்லுதல்.. இப்படி பல விஷயங்கள் காரணம்...

இன்னும் சொல்ல போனால் வாத்தியார் ஆனந்தனைத் தேடி சென்று கொல்ல விரும்பவில்லை. அவனுக்காக காத்திருக்க முடிவு செய்தார்ன்னு சொல்லலாம். அவர் காத்திருப்பு முடிந்தது..

Unknown said...

//ஹை! த்ரில்லர் கதை. நல்லாருக்கு தேவ். //

நன்றி மோகன்

//ஆனா ஓரளவுக்கு யூகிச்சேன் செண்பகமும் ஆனந்தனும் காட்டுலேருந்து திரும்ப வரும் போது பேசிக்கறதை வச்சி.//
செண்பகம் ஆனந்தன் உரையாடல் கதையின் முடிவிற்கு ஒரு மெல்லிய முன்னோட்டம் கொடுக்கவே சித்தரிக்கப்பட்டது. அதை நீங்கப் புரிஞ்சிகிட்டீங்க நன்றி.

மனதின் ஓசை said...

தேவ்..
அருமையான நடை.. சம்பவங்களை சொல்லி சொல்லாமல் கோர்த்த விதம் மிக அருமை. உன் எழுத்துதிறன் மேலும் மேம்பட்டுக்கொண்டு இருப்பது மகிழ்ச்சி கொடுக்கிறது.

நட்பு, வெறுப்பு, காதல், பாசம், தீவிரவாதம்(சரியான வார்த்தை கிடைக்கவில்லை), அரசியல் அனைத்தும் கலந்த நல்ல கலவை.

ஏதேனும் ஒன்றை மட்டும் கருவாக எடுத்து இருந்தால் அழுத்தம் நன்றாக இருந்து இருக்கும்.

அதே சமயம்,
மற்ற கதைகளில் வரும் யதார்த்தமான நாம் வாழ்வில் சாதாரனமாக சந்திக்கும் பாத்திரங்கள் இல்லை இந்த கதையில்.. அது கொஞ்சம் சினிமாத்தனத்தை கொடுக்கிறது. முக்கோண காதலும் அப்படியே.

இவற்றை களைந்து நீ படைக்கும் இன்னும் அழகான இது போன்ற கதைகளை படிக்க ஆவலாக உள்ளேன்..

தொடர்ந்து எழுதவும்.. வாழ்த்துக்கள்.

Anonymous said...

Dev...

Nalla kathai... konjum madhurai thamizh.. romba baathichu irukku intha kathai...

senbagathai kalyanam panikittan .. aana kadhal sethu poochu'nu solli irundeenga apparam eppadi 3 pillaigal ivangalukku?? ithukkum senbagam intha oorukku varaathathukkum enna connection?? kathiresan sethathuthaanna.. avan sethathula irundhu anandhanai kattikira varaikkum amma enga irundhaanga??

ippadi sila kelvigalai thavira .. kathai super... aana romba descriptive'a irundhuchu.. as in scene by scene kannu munnadi nadakura maathiri irundhuchu... novel'ku ithu ok... aana ithu short story list'la thaane varum...

aana Mr. vettipayal sonna maathiri intha kathai innum konja naal enga ninaivugalil asai poodum!!

Unknown said...

மனதின் ஓசையாரே,

உங்க வாழ்த்துக்களுக்கும் கதைப் பற்றி சொல்லியிருக்கும் பல கருத்துக்களுக்கும் நன்றி, இனி எழுதப் போற கதைகளில் நீங்கச் சொல்லியிருக்கும் கருத்துக்களைக் கவனத்தில் எடுத்துக்குறேன்.
வழக்கம் போல் ஆதரியுங்கள். மீண்டும் நன்றி.

Unknown said...

வாங்க கன்யா,

வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்க கேட்டு இருக்க கேள்விகளுக்கு உங்களுக்கேச் சில பதில்கள் நிச்சயமாத் தோனியிருக்கும். அதை முதலில் சொல்லுங்க...

இந்தக் கதையப் பொருத்த மட்டில்ல இந்தக் கேள்விகளுக்குரிய பதில்களை முழுசாச் சொல்லாமல் படிக்கறவங்க ஊகத்துக்கே விட்டுடலாம்ன்னு தோணுச்சு.. அதான் அப்படியே விட்டாச்சு.

Divya said...

அருமையான கதை தேவ்

Unknown said...

நன்றி திவ்யா

Anonymous said...

Intha kathaiya ippo thaan padikka chance kedachathu dev. Anyway itz good. romba iyalbalana nadaila ezhuthi irukeenga. ithu tirunelveli tamizha????? illa enga oor tamizha??? :) rasigai

Unknown said...

உங்க ஊர் மொழி நடை தான்.. ஆனா கொஞ்சம் நெல்லை வாடை வீசிருச்சோ.. வழக்கம் போல உங்க பாராட்டுக்களுக்கு நன்றி ரசிகை :)

Dr.Srishiv said...

ஒரெ மூச்சில் படித்து முடித்தேன், அருமையாக வந்திருக்கின்றது தேவ்..>:) வாழ்த்துக்கள்
ஸ்ரீஷிவ்...:)

Unknown said...

//ஒரெ மூச்சில் படித்து முடித்தேன், அருமையாக வந்திருக்கின்றது தேவ்..>:) வாழ்த்துக்கள்//

நன்றி ஸ்ரீஷிவ்.
நேரம் கிடைக்கும் போது பக்கம் 78க்கு வாங்க.. கருத்துக்களைச் சொல்லுங்க..