Saturday, February 10, 2007

கதை 12:அவன்...இவன்.... அவள்

வானத்தில் இருக்க நட்சத்திரங்களை ஒண்ணு ஒண்ணா எண்ண முயற்சிப் பண்ணிகிட்டு இருந்தான் அவன். வானம் மனுசனோட மனசு மாதிரி.. கிட்டத் தட்ட அந்த மனசோடப் பிரதிபலிப்புங்கறது அவன் எண்ணம். மனசு மாதிரித் தான் வானமும் தனக்குள்ளே எத்தனை எத்தனைப் புதிர்களை ஒளிச்சு வச்சிருக்கு அப்படின்னு அவன் எதோ யோசனையிலே வானம் பார்த்துக்கிட்டே நின்றான்.

"வானம் எனக்கொரு போதி மரம்... நாளும் எனக்கு அது சேதித் தரும்..." ரேடியோப் பொட்டியிலே அந்நேரத்துக்கு ஏத்தாப்புல்லத் தான் பாட்டும் ஓடிச்சு.. கையிலிருந்த கிளாஸ்ல்லருந்து கடைசிச் சொட்டு வோட்காவை வாயில் கவிழ்த்தான். தொண்டைக்குழிக்குள் அந்த ஒரு துளி உருண்டோடியது. அந்த கிறக்கத்தில் இன்னும் அண்ணாந்து வானம் பார்த்தான். நிலா அவனுக்குன்னு பொழிஞ்ச மாதிரி இருந்தது. நிலா மழையில் மொத்தமாய் நனைந்தப் படி எதோ சிந்தனையில் ஆழ்ந்தான்.

அவன் பக்கத்துல்ல இவன் வந்து உட்கார்ந்தான்.. ரயில் பயணமாகும் தண்டவாளம் மாதிரி அவனுக்கும் இவனுக்கும் சினேகிதம்.. எண்ணங்களாலும் விலகிச் சென்றாலும் அவர்களின் பயணமும் பாதையும் ஒன்றிப் போயிருந்தது. இவன் பார்வையை மரத்திலிருந்து அசையும் இலைகள் மீது பதித்தான். இலைகளின் நடனத்தைத் தாளம் போட்டு ரசித்தான். அப்ப்டியே சவ்ரம் செய்யாத தன் மோவாக் கட்டையை இவன் விரல்களால் பதமா இதமா வருடி விட்டுக் கொண்டே இருந்தான்.

அப்படியே மணித்துளிகள் இரவின் பிடியில் கரைய.. மௌனம் அவனுக்கும் இவனுக்கும் இடையே அமர்ந்து வேடிக்கைப் பார்த்தப் படி இருந்தது.

ஒரு கட்டத்தில் மௌனத்திற்கு விடைக் கொடுத்து வார்த்தைகளுக்கு வரவேற்புரை எழுதினான் இவன்.. அவனும் தன் பங்குக்கு வார்த்தைகளுக்கு உபசாரம் செய்தான். மிதமானப் போக்கினில் பேச்சுப் பரிமாற்றம் நடக்க ஆரம்பித்தது. இவன் அதிகமாய் பேசினான். சிக்கீரம் களைத்துப் போனான். அவன் அதிகம் பேசவில்லை. பேசுவதற்கு அவனிடம் ஒன்றுமில்லை.. எதோ யோசனையில் தன்னைத் தானே மூழ்கடித்துக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் அவன் பேச ஆரம்பித்தான்.. வார்த்தைகளை வரிக்கு ஒன்றாய் பொறுக்கி எடுத்துப் பேசுவது போல் பேசினான். பேசலாமா என ஒரு ஆயிரம் முறை அவன் மனம் சிந்தனைப் பாறைகளில் மோதி உடைந்த வலியினை அவன் குரல் உணர்த்தியது.. இவனுக்கு அது புரிந்தது.

"இன்னிக்கு நான் அவளைப் பாத்தேன்..கிட்டத்தட்ட ஆறு வருஷத்துக்கு அப்புறம் அவளைப் பார்த்தேன்"

அவள் ..என்ற சொல் கேட்டதும் இவன் கண்களில் ஆச்சர்ய் மின்னல்கள் அவசரப் பிறப்பெடுத்து அதை விட அவசரமாய் செத்துப் போயின்....

"அவ..இன்னும் மாறல்ல.. அப்படியேத் தான் இருக்கா.. அதே வேகம்...அதே குறுகுறுப்பு.. சிரிப்பு.. அதே.. " எதையோச் சொல்ல வந்து நாக்கை மடக்கிக் கொண்டான். அது என்னவென்று புரிந்துப் போனதில் இவன் கன்னம் சிவக்க சிரித்தான்.

"அந்தச் சந்தோசம் தான் இன்னிக்குக் கொண்டாட்டத்துக்குக் காரணாமா?" காலியான சாராயப் பாட்டில்களைச் சுட்டிக்காட்டி மறுபடியும் சிரித்தான்.

"பழசு எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா..அதிகமாப் பேச முடியல்ல... அவ அவசரமாக் கிளம்பிட்டா..எதோ ஒரு அட் ஏஜென்சியில்ல காபி ரைட்டரா இருக்காளாம்.. விசிட்டிங் கார்ட் கொடுத்தா.."

கார்ட் வாங்கி அவள் பெயர் பார்த்தான் இவன்.. அதில் அவள் பெயர் மட்டுமே இருந்தது.. இவனிடம் இருக்கும் கேள்விக்கான விடை இல்லை.

"இன்னும் அதே... தளுக்காத் தானே இருக்கா" வார்த்தையில் நாகரீகம் தவறாமல் இருக்க மெனக்கெட்டான் இவன். ஆனாலும் தோற்றான்.. "உன்னைக் கூப்பிட்டாளா.. போடா போய் ஜமாய்.." சொல்லும் போதே இவன் முகத்தில் ஒரு கேலிப் புன்னகை..

அவளைப் பத்தி என்ன ஆனாலும் சரி.. ஓங் கிட்டச் சொல்லக் கூடாது.. பேசக் கூடாதுன்னு தான் நினைச்சிகிட்டு இருந்தேன்.. என்னப் பண்ணித் தொலைக்கிறது. இந்த நாலு சுவத்தையும் உன்னையும் விட்டா நான் வாய் விட்டு பேசறதுக்கு வேற நாதி இல்லாமப் போயிடுச்சே.." காலியான மதுப் பாட்டில்களை காலால் உருட்டினான் அவன்.

இவன் அவன் கரம் பிடித்து அழுத்தினான்..

"பேச ஆரம்பிச்சாச்சு ..முடிச்சுட்டுப் போ" என்றான் இவன்.. வானம் நெட்டி முறித்தது. காற்று கொஞ்சம் வேகம் எடுத்து இவன் முகத்திலும் அவன் முகத்திலும் மாறி மாறி அறைந்தது.

"உனக்கு என்னிக்குமே அவளைப் பிடிக்காது.. இது தான் பிரச்சனை.. இது பல வருசமா நமக்குள்ளே நடக்குற சங்கதி தானே" அவன் இவன் முகம் பார்த்துச் சொன்னான். இவன் பதில் சொல்லாமல் நக்கலாய் சிரித்தான்.

"சரி.. அவளுக்கு எந்த இளிச்சவாயனாவது மாட்டியிருக்கானா.. இல்லையா.. அந்த விவரத்தைச் சொல்லு"

"அவ நம்மக் கூடப் படிச்சப் பொண்ணு.. கொஞ்சம் நாகரீகமாப் பேச முடியாதா உன்னாலே.." அவன் குரலில் வெப்பம் வெளிவந்தது.

"சரிப்பா.. அவளுக்கு எந்த ஆம்பளையாவது தாலின்னு ஒண்ணைக் கட்டிட்டு தொட்டானா.. இல்ல இன்னும் .ம்ம்ம் புரியல்லயா.. உன் நாகரீகப் பாஷையிலே அவளுக்குக் கல்யாணம் ஆயிருச்சான்னுக் கேட்டேன்"

இவன் எகத்தாளம் ஏணி போட்டு ஏறியது.. அவன் இவனைப் புழுவைப் பார்ப்பதுப் போல் பரிதாபப் பார்வைப் பார்த்தான். இவன் அந்தப் பார்வையை அசட்டைப் பண்ணி விட்டு ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைத்து நிலாவைப் பார்த்து வளையம் வளையமாப் புகையை ஊதினான். புகையின் ஊடே மீண்டும் இவனைப் பார்த்தான்.

"நீ கேட்டிருந்தா.. உனக்கும் கூடத் தான் ஒரு வாய்ப்புக் கொடுத்திருப்பா.. நீ தான் நட்பு நாயகம் நாட்டாமைன்னு விட்டுட்ட... மாப்ளே அவ அப்படி தானேடா" இவன் அவனை மீண்டும் வம்பிழுத்தான்.

இவன் பேச்சுக்கு அவன் எதிர்ப் பேச்சு பேசுவதையே பாவம் என்று எண்ணியவன் போல அவன் வேறு பக்கம் திரும்பி நின்றான்..

"என்ன கஷ்ட்டாமாயிருக்கா.. உண்மை கசப்புத் தான் அப்பு.. சிக்சர் அடிச்சுட்டு அந்தச் சந்தோசத்தை சரக்குப் போட்டு கொண்டாட வேண்டிய நேரத்துல்ல நீ சிந்தாந்தம் இல்ல பேசிகிட்டு இருந்த சிட்டு சில்லுன்னு சிலிப்பிகிட்டுப் போயிருச்சு.. ஆனாலும் சிட்டு செமச் சிட்டுப்பா" இவன் ஓய்வதாய் இல்லை.

"அவளுக்கு ஆம்பளைத் தேவைடா.. அவப் பார்த்த பயல்வ லிஸ்ட் போட்டா கிட்டத் தட்ட மைலாப்பூர் தொகுதி வாக்காளர் பட்டியல் அளவுக்கு நீளும்... அவ ஒரு பக்காத் தே......சரி உனக்காக நாகரீகம் பார்த்து அந்த வார்த்தையை வாயோட வச்சிக்குறேன்.." என்று வாய்க்குள் அந்த வார்த்தையைச் சொல்லி முடித்தான் இவன்.

அவனுக்கு எதோ ஒரு கட்டத்தில் பொறுமை போயிருக்க வேண்டும்.. வேகமாய் இவன் பக்கம் திரும்பி இவன் வாயிலிருந்தப் பாதி புகைந்தச் சிகரெட்டைப் பிடுங்கி தூர எறிந்தான். இவன் சிகரெட் விழுந்தத் திசையை ஏக்க்மாய் பார்த்தான். அவன் கண்கள் கலங்கி துடித்தன..

"நிறுத்து.. யார் மேல உனக்குக் கோவம்.. வருசக்கணக்கா ஏன் இந்த் கோவம்.. உன் கோவம் உனக்குள்ளே உக்காந்து உன் புத்தியைத் திங்குது.. இப்போ வெறும் வக்கிரம் மட்டும் தான் உனக்குள்ளே வாழ்து.. அவ அப்படித் தான்னு சொல்லுறீயே நீ யார் அவளுக்கு சர்டிபிக்கேட் கொடுக்க? என்னத் தெரியும் உனக்கு?"

இவனுக்கு அவன் கோபம் பரிச்சயம் தான்.. ஆனால் இன்று அவன் கோப வெப்பத்தின் முன்னால் இவன் மனம் மூச்சுத் திணறி தடுமாறியது.

"அவ என்னிக்காவது உன்னை வான்னு கூப்பிட்டாளா.. இல்ல நீ அவளை எவனுக்காவ்து ரேட் பேசி கூட்டிக் கொடுத்துப் பொழச்சியா...போடாங்க... சொல்ல வந்துட்டான் "

அவன் கோபம் அவன் நெற்றியில் வேர்வைத் துளிகளாவும் பொங்கி வழிந்தது. இவன் மனம் மூச்சுக் காற்றுக்காக ஏங்கியது. மீண்டும் மௌனம் அழையாத நண்பனாய் அங்கு வந்து இவனுக்கும் அவனுக்கும் நடுவே அமர்ந்துக் கொண்டது. மௌனம் நல்ல நண்பனைப் போல் அவனையும் இவனையும் ஆற்றியது. மெல்ல தேற்றியது. மீண்டுமாய் விடைப் பெற்று வில்லெனக் கிளம்பியது.

"இதுக்கு முன்னால் நான்.. நீ.. அவளைப் பத்திப் பேசியிருக்கோம்...ஆனா உன் கிட்ட இவ்வளவுக் கோபம் நான் பார்த்தது கிடையாது.. வேணாம்டா அவளுக்காக உனக்கும் எனக்கும் சண்டை வேணாம்.. மன்னிச்சுருடா" இவன் மருகினான்.

"எதுக்கும் ஒரு எல்லை இருக்கு நண்பா.. எனக்கும் இருக்கு.. நான் கோபப்ப்டல்ல நண்பா.. உன்னைப் பார்த்துப் பரிதாபப்படுறேன்.. வருத்தப்படுறேன்...திசைகள் நாலு.. ஒவ்வொரு திசையில்ல இருந்துப் பாக்கரவ்னுக்கும் ஒவ்வொரு மாதிரி வாழ்க்கைத் தெரியும்...ஆனையை தடவுன பார்வை இல்லாதவங்க மாதிரி.. யானை இப்படித் தான் இருக்கும்ன்னு சொல்லுறவன் நீ.. நீ பிடிச்ச முயலுக்கு மூணு கால்ங்கறது உன் கருத்து.."

"ஏன் நான் பிடிச்சது நொண்டி முயலா இருக்கக் கூடாதா?" இவன் இடைச் செருகினான்.

"ஒத்துக்கிறேன் உன் பதில்ல புத்திச்சாலித் தனம் இருக்கு.. அந்தப் புத்திச்சாலித் தனம் மட்டும் உன்னை விளங்க வச்சுராது.. நேராவேச் சொல்லுறேன்.. உனக்கு அவ்ளைப் பிடிக்கல்ல.. அப்புறம் எதுக்காக அவ்ளைப் பத்திப் பேசணும்.. அசிங்கப்படுத்தணும்.. ஏன்.. ?"

"அவ நாலுப் பசங்களோட நெருக்கமா நின்னுச் பேசுறது.. தோள்ல்ல கைப் போடுறது.. பைக்ல்ல டக்குன்னு ஏறுறது.. கொஞ்சம் மாடர்ன்னா ட்ரெஸ் பண்றது.. இது தான் அவளை தே... சரி நீயே சொல்லாத வார்த்தை நான் ஏன் சொல்லணும்... அப்படின்னு முடிவு பண்ணக் காரணம்...நம்ம ஊர்ல்ல தாண்டா ஒரு பொண்ணோட கற்பை அளக்க இப்படி எல்லாம் அளவு கோல் கண்டுப் பிடிச்சிருக்கீங்க... சூப்பர்டா என்னப் பண்றது? அவ மார்பைப் பார்த்த அளவுக்கு அதுக்குப் பின்னாடி இருக்க அவ மன்சைப் பாக்கற பாக்கியம் உனக்குக் கிடைக்கல்லயே"

அவன் முகத்தில் இவனைப் பார்த்து ஏளனப் புன்னகை ஒன்று பூத்தது.

"அவளை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்ன்னு பார்த்து இருக்க.. கதைக் கட்டி விட்டவன் கிட்டக் கதைக் கேட்டிருப்ப...எனக்கு அவளை நல்லாத் தெரியும்டா.. அவ அழுகைய நான் பார்த்து இருக்கேன்டா.. அவ வெக்கத்தைப் பார்த்து இருக்கேன்டா...இந்தா இதே கையிலே அவ அழுதக் கண்ணீரைத் தாங்கி இருக்கேன்டா...அவ எல்லாம் தேவதைடா அவக் கூட வாழக் கொடுத்து வச்சுருக்கணும்டா" ப்ச் என்று உதட்டைப் பிதுக்கினான் அவன்.
அவன் கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சி வசப்பட்டான்...

"காதலா? உனக்கும் அவளுக்கும் காதலா?" இவன் மெதுவாகக் கேட்டான்..அவன் இவனைப் பார்த்து சத்தமாய் சிரித்தான்...

"உனக்கு ஒண்ணுமே புரியாதா.. இல்ல புரியாத மாதிரியே வாழ்ந்து முடிச்சுருவியாடா?"

அவன் கேட்டக் கேள்வி இவனை உறுத்தியது...

இரவு இன்னொரு விடியலுக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொண்டிருந்தது.

அவன் தூங்கிப் போனான்.. இவன் தூக்கம் தொலைத்திருந்தான்.. அவள்.. புரிந்தவர்கள் புரிந்துக் கொள்ளுங்கள்

31 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

me the first-uu.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

கதை நன்றாகத்தான் இருந்தது... ஆனால், இவன் அவனுக்கு பதிலாக பெயர் வைத்து கூப்பிடிருக்கலாமோ?

இவன் அவன் என்று கொஞ்ச கன்ஃபியுஸ் (confuse) ஆயிட்டேன்..

Anonymous said...

perukku panjama dev :O ======rasigai

Anonymous said...

story is too good :) ====rasigai

தேவ் | Dev said...

//.:: மை ஃபிரண்ட் ::. @ .:: My Friend ::. said...
me the first-uu.. ;-) //


yes yes u the firtuuuu :)

தேவ் | Dev said...

//கதை நன்றாகத்தான் இருந்தது... ஆனால், இவன் அவனுக்கு பதிலாக பெயர் வைத்து கூப்பிடிருக்கலாமோ?

இவன் அவன் என்று கொஞ்ச கன்ஃபியுஸ் (confuse) ஆயிட்டேன்..//


நன்றி மை பிரெண்ட்.. பெயர்கள் வந்து வலுக்கட்டாயமத் தான் தவிர்த்தேன்.. இந்த கதையில்ல வர்ற அவன்.. இவன்.. அவள் பாத்திரங்கள் நாம் எல்லாரும் நம்ம அன்றாட வாழ்க்கையில்ல சந்திக்கற முகங்கள் தான்.. அதுன்னாலத் தான் பெயரை தவிர்த்தேன்..

தேவ் | Dev said...

வாங்க ரசிகை, பேருக்கு எல்லாம் பஞ்சமில்லைங்க.. இது நிதம் நிதம் நம்மச் சுத்தி இருக்க மக்களின் கதை இதைத் தனியாப் பெயர் போட்டு எழுத வேணாம்ன்னு பார்த்தேன் அதான் பேர் போடல்ல.

தேவ் | Dev said...

//story is too good :) ====rasigai //


ரொம்ப நன்றி ரசிகை.

இலவசக்கொத்தனார் said...

//அவன் தூங்கிப் போனான்.. இவன் தூக்கம் தொலைத்திருந்தான்.. அவள்.. புரிந்தவர்கள் புரிந்துக் கொள்ளுங்கள்//

ஒண்ணியும் புர்ல வாத்தியாரே, நமக்கு எல்லாம் எடுத்தேன் கவுத்தேன்னு எளுதினாலே புரியாது. இது என்னமோ ஒரு மார்க்கமா எளுதிக்கீற போலத் தெரிது. நம்ம இளக்கியவாதிங்க எல்லாம் வந்து சர்டிபிகேட் குடுப்பாங்கப்பா, நானு அப்பாலிகா நின்னு வேடிக்க மட்டும் பாக்கறேன்.

ஓக்கேவா!

மனதின் ஓசை said...

//ஒண்ணியும் புர்ல வாத்தியாரே, நமக்கு எல்லாம் எடுத்தேன் கவுத்தேன்னு எளுதினாலே புரியாது. இது என்னமோ ஒரு மார்க்கமா எளுதிக்கீற போலத் தெரிது. நம்ம இளக்கியவாதிங்க எல்லாம் வந்து சர்டிபிகேட் குடுப்பாங்கப்பா, நானு அப்பாலிகா நின்னு வேடிக்க மட்டும் பாக்கறேன்.//

நானும்..

.:: மை ஃபிரண்ட் ::. said...

//பெயர்கள் வந்து வலுக்கட்டாயமத் தான் தவிர்த்தேன்.. இந்த கதையில்ல வர்ற அவன்.. இவன்.. அவள் பாத்திரங்கள் நாம் எல்லாரும் நம்ம அன்றாட வாழ்க்கையில்ல சந்திக்கற முகங்கள் தான்.. அதுன்னாலத் தான் பெயரை தவிர்த்தேன்..//

yes yes.. அன்றாட வாழ்க்கை கதா பாத்திரங்களை போலத்தான் இருக்கிறது.. ;-)

வெட்டிப்பயல் said...

கலக்கல் கதை தேவ்!!!

எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியுதோ???

தேவ் | Dev said...

//ஒண்ணியும் புர்ல வாத்தியாரே, நமக்கு எல்லாம் எடுத்தேன் கவுத்தேன்னு எளுதினாலே புரியாது. இது என்னமோ ஒரு மார்க்கமா எளுதிக்கீற போலத் தெரிது. நம்ம இளக்கியவாதிங்க எல்லாம் வந்து சர்டிபிகேட் குடுப்பாங்கப்பா, நானு அப்பாலிகா நின்னு வேடிக்க மட்டும் பாக்கறேன்.

ஓக்கேவா! //

கலாய்ச்சிட்டீங்களே தலைவரே.. இதுல்ல வர்ற அவன் இவன் அவள் எல்லாம் நித்தம் நம் வாழ்க்கையில் சந்திக்கும் மக்கள் தான்.. தனியாப் பேர் கொடுக்க வேண்டாம்ன்னு நினைச்சேன்.. அதுக் கொஞ்சம் குழ்ப்பிருச்சோ என்னமோ!!!

தேவ் | Dev said...

//ஒண்ணியும் புர்ல வாத்தியாரே, நமக்கு எல்லாம் எடுத்தேன் கவுத்தேன்னு எளுதினாலே புரியாது. இது என்னமோ ஒரு மார்க்கமா எளுதிக்கீற போலத் தெரிது. நம்ம இளக்கியவாதிங்க எல்லாம் வந்து சர்டிபிகேட் குடுப்பாங்கப்பா, நானு அப்பாலிகா நின்னு வேடிக்க மட்டும் பாக்கறேன்.//

நானும்.. //

மனதின் ஓசையாரே நீயுமா!!!!! :))

தேவ் | Dev said...

//yes yes.. அன்றாட வாழ்க்கை கதா பாத்திரங்களை போலத்தான் இருக்கிறது.. ;-)//

வாங்க மை பிரெண்ட்.. நிறையப் பேருக்கு இந்த குறியீட்டு முறையில் பெயர் போட்டது பிடிக்கல்ல.. என்னச் செய்யறது...
!!!

தேவ் | Dev said...

//கலக்கல் கதை தேவ்!!!

எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியுதோ??? //

நன்றி வெட்டி.. இது ஒரு அஞ்சு ஆறு வருசம் முன்னாடி நான் கல்லூரியில் சந்தித்தச் சில அனுபவங்களை வச்சு எழுதுனக் கதை... இப்போச் சிலத் திருத்தங்கள் மட்டும் செய்து பதிவாப் போட்டுட்டேன்.. அவ்வள்வு தான்.

அருட்பெருங்கோ said...

எல்லாருக்குள்ளும் அவனும் இருக்கிறான் இவனும் இருக்கிறான்...

் எவன் எவனைக் கொல்கிறான் என்பதுதானே வாழ்க்கை?

[எப்படி உங்கக் கதை மாதிரியே ஒரு மார்க்கமா கருத்து சொல்லிட்டேனா? ;-) ]

நவீன் ப்ரகாஷ் said...

இவளுக்கான இவனின் பார்வை அவளுக்கான அவனின் பார்வையிலிருந்து ஏற்படும் திரிபுகளை திறம்பட இயம்பியிருக்கிறீர்கள் தேவ் !! :)) சிற்சில இடங்களில் புரிதலின் தடுமாற்றங்கள் தடம்புரட்டினாலும் இவனையும் அவனையும் ஆட்டிவைத்துக்கொண்டிருக்கிற இவள்கள் எங்கும் நிரம்பியிருக்கிறார்கள் காற்றப்போல!! அல்லவா ??

இலவசக்கொத்தனார் said...

//இவளுக்கான இவனின் பார்வை அவளுக்கான அவனின் பார்வையிலிருந்து ஏற்படும் திரிபுகளை திறம்பட இயம்பியிருக்கிறீர்கள் தேவ் !! :)) சிற்சில இடங்களில் புரிதலின் தடுமாற்றங்கள் தடம்புரட்டினாலும் இவனையும் அவனையும் ஆட்டிவைத்துக்கொண்டிருக்கிற இவள்கள் எங்கும் நிரம்பியிருக்கிறார்கள் காற்றப்போல!! அல்லவா ??//

ஆஹா! இதுக்கு உம்ம கதையே தேவலாம் போல. பேசாம இவர் பெயரை பின்நவீன ப்ரகாஷ் அப்படின்னு மாத்திடலாமா?

இந்த மாதிரி ஆளுங்களுக்குன்னே எழுதின கதையாப்பா? அடுத்தவாட்டி இதையெல்லாம் முதலில் டிஸ்கியா போட்டா நாங்க எல்லாம் இந்தப் பக்கம் வராம அப்பீட் ஆவோமில்ல. கொஞ்சம் கருணை காட்டப்பா!

நவீன் ப்ரகாஷ் said...

// இலவசக்கொத்தனார் said...

ஆஹா! இதுக்கு உம்ம கதையே தேவலாம் போல. பேசாம இவர் பெயரை பின்நவீன ப்ரகாஷ் அப்படின்னு மாத்திடலாமா? //

என்னங்க கொத்தனாரே !:))
என் பெயரை உங்களுக்கு எப்படி விளிக்க விருப்பமோ அப்படியே விளியுங்களேன் ஆட்சேபணை இல்லை :)))))))

//இந்த மாதிரி ஆளுங்களுக்குன்னே எழுதின கதையாப்பா? //

இதில் நீங்கள் என் பின்னூட்டத்தை சொல்கிறீர்களா இல்லை தேவின் கதையைப் பற்றி சொல்கிறீர்களா ??;)))))))))))))

//அடுத்தவாட்டி இதையெல்லாம் முதலில் டிஸ்கியா போட்டா நாங்க எல்லாம் இந்தப் பக்கம் வராம அப்பீட் ஆவோமில்ல. கொஞ்சம் கருணை காட்டப்பா! //

ஏதேனும் உள்குத்து இருக்கிறதா இதில் ? கொஞ்சம் விளக்குங்களேன் வெண்பா புலவரே !! :)))))))))

தேவ் | Dev said...

//எல்லாருக்குள்ளும் அவனும் இருக்கிறான் இவனும் இருக்கிறான்.../

ரைட் ஓ ரைட் காதல் முரசு..

//் எவன் எவனைக் கொல்கிறான் என்பதுதானே வாழ்க்கை?//
கேக்குறீங்களா? சொல்லுறீங்களா?

//[எப்படி உங்கக் கதை மாதிரியே ஒரு மார்க்கமா கருத்து சொல்லிட்டேனா? ;-) ] //

கதை எல்லாம் தாண்டி எங்கேயோப் போயிட்டீங்கய்யா..:)))

தேவ் | Dev said...

//இவளுக்கான இவனின் பார்வை அவளுக்கான அவனின் பார்வையிலிருந்து ஏற்படும் திரிபுகளை திறம்பட இயம்பியிருக்கிறீர்கள் தேவ் !! :)) //

உங்கள் கதைப் பற்றிய புரிதலுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி நவீன்.:)) ( ஓங்க ஒருத்தருக்காவது நான் எழுதுனது புரிஞ்சுடுச்சே சந்தோசமா இருக்குங்க)

//சிற்சில இடங்களில் புரிதலின் தடுமாற்றங்கள் தடம்புரட்டினாலும் இவனையும் அவனையும் ஆட்டிவைத்துக்கொண்டிருக்கிற இவள்கள் எங்கும் நிரம்பியிருக்கிறார்கள் காற்றப்போல!! அல்லவா ?? //

இது நிஜம்..

தேவ் | Dev said...

கொத்ஸ் நவீன் எதுவா இருந்தாலும் இங்கேயே வந்துப் பேசி பேசி (பின்னூட்டி பின்னூட்டித் தீர்த்துக்குங்கோய்யா) புண்ணியமாப் போகும் பதிவுக்கு இன்னும் ஒரு இரண்டு மூணு கணக்குல்ல ஏறும்

Nandha said...

//"காதலா? உனக்கும் அவளுக்கும் காதலா?" இவன் மெதுவாகக் கேட்டான்..அவன் இவனைப் பார்த்து சத்தமாய் சிரித்தான்...

"உனக்கு ஒண்ணுமே புரியாதா.. இல்ல புரியாத மாதிரியே வாழ்ந்து முடிச்சுருவியாடா?"//

எவ்வளவு அருமையான வரிகள். கொஞ்சம் என் லைஃப்லயும் நடந்த விஷயங்கள் இருப்பதாலோ என்னமோ இந்த கதை என்னை ரொம்பவே பாதித்து விட்டது.

தேவ் | Dev said...

//எவ்வளவு அருமையான வரிகள். கொஞ்சம் என் லைஃப்லயும் நடந்த விஷயங்கள் இருப்பதாலோ என்னமோ இந்த கதை என்னை ரொம்பவே பாதித்து விட்டது. //

வாங்க நந்தா,

கதைகளின் வரிகள் உங்க வாழ்க்கையை நியாபகப் படுத்தி இருப்பதாகச் சொல்லியிருக்கீங்க.. நீங்க அவனா? இல்லை இவனா? :-)))

Nandha said...

'அவன்' தாங்க. அதாவது
//"உனக்கு ஒண்ணுமே புரியாதா.. இல்ல புரியாத மாதிரியே வாழ்ந்து முடிச்சுருவியாடா?"//

இதை சொல்றவன். எனக்கும் இதே மாதிரி ஒரு 'இவன்' வந்து வாய்ச்சிருக்கான்.

தேவ் | Dev said...

//'அவன்' தாங்க. அதாவது
//"உனக்கு ஒண்ணுமே புரியாதா.. இல்ல புரியாத மாதிரியே வாழ்ந்து முடிச்சுருவியாடா?"//

இதை சொல்றவன். எனக்கும் இதே மாதிரி ஒரு 'இவன்' வந்து வாய்ச்சிருக்கான்.

//
அவன்களும் இவன்களும் நீக்கமற் நிறைந்துள்ள மனிதச் சமுதாயம் இது... நந்தா.. உங்க கதையையும் தனியாப் பதிவு செய்யலாம் போலிருக்கே!!!

Joe said...

Consider me as your fan for your stories. Keep on the good work.

தேவ் | Dev said...

//Consider me as your fan for your stories. Keep on the good work. //

Thanks Joe.. with your support woill continue to do so.:)

G.Ragavan said...

அவனும் இவனும் ஒன்னு. ரெண்டும் ஒன்னுக்குள்ள ஒன்னு. அதாவரு ஒருவனின் இருமனங்கள் பேசிக்குது. பாசத்துக்கும் சந்தேசகத்துக்கும் நடுவுல ஊஞ்சலாடுது. எப்ப எது கூடுதோ..அப்ப அடுத்தது தோக்குது. அப்ப வெற்றி எப்பல்லாம் உண்டோ..தோல்வி அப்பல்லாம் உண்டு. இதான நீங்க சொல்ல வர்ரது. சரியா தப்பாப் புரிஞ்சிக்கிட்டேனா?

தேவ் | Dev said...

//G.Ragavan said...
அவனும் இவனும் ஒன்னு. ரெண்டும் ஒன்னுக்குள்ள ஒன்னு. அதாவரு ஒருவனின் இருமனங்கள் பேசிக்குது. பாசத்துக்கும் சந்தேசகத்துக்கும் நடுவுல ஊஞ்சலாடுது. எப்ப எது கூடுதோ..அப்ப அடுத்தது தோக்குது. அப்ப வெற்றி எப்பல்லாம் உண்டோ..தோல்வி அப்பல்லாம் உண்டு. இதான நீங்க சொல்ல வர்ரது. சரியா தப்பாப் புரிஞ்சிக்கிட்டேனா?//

ரொம்பச் சரியா ரொம்பத் தப்பாப் புரிஞ்சிக்கிடீங்க ஜிரா :))