Monday, July 09, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளூம் - 1

விடுமுறைகள்ன்னாவே சந்தோசம்... அதுவும் பள்ளிக்காலங்களும் அதோடு சேர்ந்த விடுமுறைகளூம் கேட்கவே வேணாம்.. கும்மாளம் தான் போங்க.. அப்படி என் வாழ்க்கையிலே வந்துப் போன விடுமுறைகளைப் பத்தித் தான் இப்போ என் மனசு யோசிச்சுகிட்டு இருக்கு....

ஆபிஸ்ல்ல வெள்ளைக்கார முதலாளிகிட்டே அழுது பொரண்டு லீவ் வாங்கிட்டு ஒரு வழியா மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு நீண்ட நாளாய் இதோ அதோ எனப் போக்குக் காட்டிக்கொண்டிருந்த இந்தியப் பயணத்துக்குச் செயல் வடிவம் கொடுத்தாச்சு..

35000 ஆயிரம் அடிகளுக்கு மேல் ஆகாயத்தில் நான் இருக்கேன்..பக்கத்தில் எதோ ஒரு ஆங்கில நாவலில் தலையைக் கவிழ்த்த என் அன்பு மனைவி.. நண்டும் சிண்டுமாய் நான் பெற்ற என் வம்ச விளக்குகள் ஜோஷ் மற்றும் ரதி. குழந்தைகள் முகத்தில் வார்த்தைகளில் பிடிபடாத குதுகாலம்.பார்த்துகிட்டு இருக்கும் போதே எனக்குள்ளும் அந்த உற்சாகம் தொற்றிகொள்கிறது.

விமானப்பணிப் பெண் குடிப்பதற்கு எதோ பானமொன்றை என்னிடம் நீட்ட.. என் கவனம் அங்கு இல்லை.. எதோ நினைப்பில் வேண்டாமெனத் தலையை ஆட்டிவிட்டு.. கண்களை மூடி சீட்டில் தலைச் சாய்த்தேன்... மனம் இருந்த இடத்தில் இருந்து இன்னொமொரு 35000 ஆயிரம் அடி உயரத்துக்கு எழும்பியது...இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது.

சின்னக்குளம்... தின்னவேலி மக்களுக்கே சரியாத் தெரியாத ஒரு குக்கிராமம்..
கிராமத்தைச் சுத்தி ஒரு பெரிய குளம்.(ஊர் பேருக்கும் குளத்து அளவுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை) கரையோரம் ஓட மரங்கள் என வட்டார வழக்கிலே சொல்லப்படும் முட்கள் நிறைந்த மரங்கள் வளர்ந்து புதராய் விரிந்துக் கிடந்தன..குளத்துக்கு மறுபக்கம் பசுமையான வயல்கள்.. அங்கே வந்து வந்து சிறகை விரிக்கும் அழகிய கொக்கு கூட்டம்... அந்தக் கொக்குகளைக் குறிபார்த்துக் குளத்திற்குள் குத்த வச்சி கையில் கவணுடன் காத்திருக்கும் சிறுவர் கூட்டம்.. அந்தக் கூட்டத்தில் பட்டணத்து வாசனை தடவிய உருப்படிகள் நானும் என் அத்தை மகன் இஸ்ராவும்.

நான் சுத்தப் பட்டணம்.. இஸ்ரா கொஞ்சம் டவுண் பையன்...அடிக்கடி ஊருக்கு வந்துப் போவான். என்னை விட உள்ளூர் பயல்வளை அவனுக்கு நல்ல பரிச்சயம். இஸ்ராவோடு ஓட்டியபடி நானும் அந்த கும்பலில் உறுப்பினர் அட்டைப் போடாத உறுப்பினன் ஆயிட்டேன்.

"இஸ்ரா பாவம்டா கொக்கு.. எவ்வளவு அழகாயிருக்கு... கல் எல்லாம் வச்சு அடிச்சா அதுக்கு வலிக்கும்டா"

"எலேய்... நேத்து சாயந்திரம் உப்பும் உரைப்புமா நாக்கைச் சுழட்டி சுழட்டிச் சாப்பிட்டால்லா.. இன்னும் ரெண்டு துண்டு கிடைக்குமான்னு சப்புக் கொட்டிகிட்டு கேட்டால்லா.. அப்போ கொக்குக்கு வலிக்கும்ன்னு நினைக்கல்லயோ... சும்மா வாயைப் பொத்திகிட்டுப் பின்னாலே நில்லு.. கொக்குப் பொரிச்சப் பொறவு சொல்லுதேன் திங்கரதுக்கு மட்டும் வாயைத் திறந்தாப் போதும்"

இஸ்ரா அடக்கி வைக்க.. உள்ளுக்குள் எழுந்த முந்தைய நாள் சாப்பிட்ட கொக்கின் ருசி என்னில் மிச்சம் இருந்த மீதி இரக்கத்தையும் அடக்கிவிட்டது.

"அய்யோ.. எந்த சவ்த்து மூதில்லா அது.. என் மேல கல்லைக் கொண்டு எறிஞ்ச்து... வந்தேன்னு தூக்கிப் போட்டு மிதிச்சுப்புடுவேன் ஆமா..." அதே தான்.. கல் கொக்கின் மீது வைத்த குறி தவ்றி சற்றே சாய்ந்த பாதையில் திசை திரும்பி வயலோரம 'அவுட் சைட்' போக ஒதுங்கிய எங்க ஊர் பெருசு எசேக்கியல் தாத்தா மீது பட்டு விட்டது. அவ்வளவு தான் மொத்தப் பேரும் ஆளுக்கு ஒரு பக்கமாய் தெறித்துப் பிரிந்தோம்.

மதியம் எங்கள் ஜமாவின் கூட்டாஞ்ச்சோறு வைபவம் வழக்கமாய் அரங்கேறும் ஊர் ஆரம்ப பள்ளியின் பின்புறம் ஒதுங்கினோம்.. பனங்கிழங்கு, வாத்துக் கூட்டத்தில் இருந்து களவாடிய வாத்து முட்டை, பனை வெல்லம்,அரிசி சோறு, ஒரு முழு கோழி...ஒவ்வொருப் பொருளா வெளிவந்து சமையல் ஆரம்பம் ஆச்சு... இன்னவென்று சொல்ல முடியாத ஒரு மார்க்கமான விருந்து அது.. விடலைக் கொண்டாட்டங்களின் உச்சக்க்ட்டம் அது..

"ஏ சாமோலு... உங்கண்ணன் பம்பாய்ல்ல இருந்து வர்றான்னு நாசரேத் சந்தையிலே வாங்கிட்டு வந்த வெடக்கோழியைக் காங்கல்லலியே .. எந்த களவாணி பைய கொண்டு போனானோத் தெரியல்லயே... எலேய் போய் தேடுங்களால்ல... கோழி கிடைக்கல்லன்னா களவாண்டவன் காலைத் தான் சூப் போட்டுக் கொடுக்கணும் இன்னிக்கு..." மூணாவ்து வீட்டு எஸ்தர் பாட்டி எட்டு வீதிக்கும் கேட்கும் படி காதில் பாம்படம் குதிக்க அலறியது எங்கள் ஜமாவின் சமையல் வேலைகளை இம்மியளவும் பாதிக்கவில்லை...விருந்து வெகு வேகமாக தயாராகி கொண்டிருந்தது..

அதே வேளையில் சின்னக்குளம் பெரிய தெருவின் புழுதியைக் கிளப்பியபடி வெள்ளை அம்பாசிடர் ஒண்ணு ஆர்ப்பாட்டமாய் ஊருக்குள் நுழைந்தது.

"ஏண்ணே... ஊருக்கு பிளசர் கார் வந்து இருக்கு... எஸ்தர் பாட்டி வீட்டுக்கு ஓறவுகாரவீய வந்து இருக்காவ... மூட்டை மூட்டையாச் சாமான் வந்து இருக்கு.. கோயிலுக்கு நட்டமா நின்னு காத்து வீசுற பேனு.. லைட் செட்.. எல்லாம் வந்து இருக்கு... கார்ல்ல குழாய் பேண்ட் போட்ட அக்கா ஒருத்தவீயளும் வந்து இருக்காவ.. காதுல்ல எதோ மிஷின் வச்சுகிட்டு இருக்காவ... பாடுற மிஷினாம்..."

விழுந்தடித்து மூச்சிரைக்க ஓடி வந்து தொப்புளான் சொன்ன மற்ற விஷயங்கள் எங்களைக் கவர்ந்துச்சோ இல்லையோ... அந்த குழாய் போட்ட அக்கா விஷயம் எங்களை கிறங்க வச்சுருச்சு... கால் தரைக்கு அரை இஞ்சு மேல் எழும்ப விழுந்தடித்து ஓடினோம்.. எஸ்தர் பாட்டி வீடு நன்றாக பார்வையில் படும் இடம் பார்த்து முண்டியடித்து நின்று கொண்டோம்.

காரும் பொருட்களும் தெளிவாகத் தெரிந்தன. காரில் முறுக்கிய மீசையோடு ஒருத்தர் இறங்கினார்.

"மக்கா அது தான் எஸ்தர் பாட்டியோட மூத்த மவன்.. பம்பாய்ல்ல போலீஸ்ல்ல இருக்காராம்.. பேரு ஆசிர்வாதம்."

அவருக்கு தோற்றத்தில் ஒத்த ஒரு பெண்மணி இறங்கினார்.

"அது அவர் பெஞ்சாதி..அந்தம்மாவை இவர் லவ் பண்ணி கலியாணம் கெட்டிக்கிட்டார்ன்னு சொல்லுறாவ.. பாட்டிக்கும் அந்தம்மாவுக்கும் ஆகாதாம்"

அவர்களைத் தொடர்ந்து காரில் இருந்து ஒரு பொடியன் இறங்கினான்.

"இது.." தொடர்ச்சியா வருணனைக் கொடுத்தவன் வாயைச் சட்டெனப் பொத்தினான் இஸ்ரா..காரணம் பொடியனுக்குப் பின்னால் பளிச்சென அவன் அக்கா இறங்கினாள்.

"டேய் மக்கா.. வெள்ளைத் தோல்டா... நம்மூர்காரியாடா இவ... "

நாங்க எல்லாரும் எங்க நிறத்தை ஒருமுறைக்கு இருமுறைக்கு பார்த்துக்கொண்டோம்...

"மின்னல் மாதிரி மினுக்கு மினுக்குன்னு இருக்காளே... எப்படிரா.. அவங்க அப்பனைப் பார்த்தா அபப்டி தெரியல்லயேடா.."

"அவங்க அம்மாக்காரி அவளுக்கு கழுதைப் பால் ஊத்தி குளிப்பாட்டியிருப்பாடா.. அதான் இந்தக் கலர்ல்ல இருக்கா"

"ஏன் இஸ்ரா கழுதைப் பால்ல குளிச்சா தோல் வெளுத்துருமா என்ன?" யாரோ ஒருத்தன் நிஜமான அக்கறையோடுக் கேட்டான்.

இஸ்ரா பதில் சொல்லவில்லை,, அவன் சொக்கி போய் விட்டான்.

எல்லோரும் அந்தப் பொண்ணை அப்படி மாஞ்சு மாஞ்சுப் பாத்துகிட்டே இருக்க.. எனக்கு நல்லா தெளிவாகப் பாக்கறதுக்கு தோதா இடம அமையல்ல.. யார் மண்டையாவது மறைச்சுகிட்டே இருந்துச்சு.

"இஸ்ரா.. எனக்குத் தெரியல்லடா...கொஞ்சம் கேப் விடுடா.."

"டேய்.என் கலருக்கே அவளைப் பாக்குறதே அதிகம்ன்னு யோசிச்சுகிட்டே பாக்குறேன்.. உன் கலருக்கு நீ எல்லாம் அவளைப் பாக்கணும்ன்னு நினைக்கவேக் கூடாது சொல்லிட்டேன்.."

இஸ்ரா என்னை விட கொஞ்சம் கலர்.. பொது நிறம்ன்னு சொல்லலாம்.. நான் கருப்பு தான்.. ஆனா களையான முகம்ன்னு எங்க அம்மா சொல்லுவாங்க.."

"போடா இஸ்ரா.. உன் மேல ஒரு சட்டி தார் ஊத்தி என் கலரைக் கருக்கல்ல என் பேரை மாத்தி வசிக்குறேன்டா" அப்படின்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேன்.

"டேய் இஸ்ரா எஙக் மெட்ராஸ்ல்ல இதே மாதிரி நிறைய வெள்ளையா இருக்க பொண்ணுங்களை நானும் பாத்துருக்கேன்.. சும்மா அலட்டாதடா.. ஆனாலும் ஒரு பொண்ணுக்காக என்னை அசிங்கமாப் பேசிட்டல்ல நீ.. பாருடா"
நான் எதே எதோ புலம்பிக் கொண்டே நடந்தேன். இஸ்ரோ அவன் வேலையிலே தீவிரமாய் இருந்தான்.

அப்போ டக்குன்னு என் மண்டையிலே அந்த ஐடியா வந்துப் போச்சு.. அவ்வளவு தான்.. எனக்கு சந்தோஷம் பொங்கிருச்சு..


"EXCUSE ME THIS IS YOUR GRAND MOTHERS HEN, SHE WAS LOOKING FOR IT.. I FOUND THIS IN THE BUSHES"

அய்யா தான்.. மெட்ராஸ்காரன்லேய்.. சும்மா இங்கீலிஸ்ல்ல அடிச்சு விட்டுட்டு அந்தப் பொண்ணு கையிலே கோழியை வச்சு அமுக்குற சாக்குல்ல லேசாத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். தொட்டத்துக்கு கூச்சத்தோடு ஒரு 'சாரியும்' சொல்லி அவளுடைய புன்னைகையைப் பரிசா வாங்கி சட்டைப் பைக்குள்ளே போட்டுகிட்டேன்.

"யார் மரியா பேரன் மெட்ராஸ்காரனா.. வாய்யா.. நல்ல காரியம் பண்ண.. கோழியைக் காங்கல்லன்னு முழி பிதுங்கிப் போச்சு.. காபிக் குடிச்சுட்டு போ" எஸ்தர் பாட்டி கூப்பிடவும். நான் தலையைத் திருப்பி நம்ம சகாக்களின் மறைவிடம் பார்த்தேன். இஸ்ரா கண்களில் ஏவுகணை எரிச்சல் கிளம்பியது. மற்றவர்களுக்கோ கோழி கோவம் தலைக்கு ஏறியது...

"WHAT IS YOUR NAME AND WHAT DO U DO?"

மறுபடியும் தெரிஞ்ச இங்கிலீஷை அள்ளி விட்டேன்.

"என் பேர் ரேச்சல்.. காலேஜ் சேரப் போறேன்...நீ என்னப் பண்ணுற? " நிறுத்தி நிதானமாய் தமிழில் பேசினாள்.

"ஓ நல்லாத் தமிழ் பேசுற நீ...நானும் காலேஜ் சேரப் போறேன்..." பத்தாவது ரிசல்ட்க்கு பாயைப் போர்த்தி பாதி ராத்திரியிலும் பயந்து கிடக்கும் நான் கூச்சப்படாமல் சொன்னேன்..

"OH NICE MEETING YOU " என்றாள் ரேச்சல்.

"உன் பேரைச் சொல்லல்லயே"

"ஜெரீஷ்.. நீ ஜெர்ரின்னு கூப்பிடு போதும்" என்று ப்டு ஸ்டைலாகச் சொல்லிவிட்டு.. இஸ்ராவைப் பார்த்தேன்.. அவன் என் மீது கொலை வெறி கொண்டு நிற்பதை நான் சொல்லித் தான் உங்களுக்குத் தெரியணுமா என்ன?

விடுமுறை அனுபவங்கள் தொடரும்

14 comments:

நாமக்கல் சிபி said...

நல்லாத்தேன்யா இருக்கு!

கலக்குறே!

தொடர்ச்சிய சீக்கிரம் எழுதுவியாம்!

TBR. JOSPEH said...

நல்லால்லன்னு சொன்னா கேக்கவா போறீங்க?

அவுத்து விடுங்க...

சரி... இந்த ஃப்ளாஷ் பேக்கு ஒங்க wife தெரியாம இருந்தா நல்லது. இல்லன்னா ஹாலிடே காலிடே ஆயிரும்.. பாத்துக்குங்க:-)

இலவசக்கொத்தனார் said...

ஜோசப் சார், இவரு திரும்பிப் பார்க்கலை!! அல்லாம் நடக்காத விஷயத்தைக் கதையா எழுதி மன்சைத் தேத்திக்கறாரு.

நல்லாத்தாண்டே எழுதற!

குசும்பன் said...

அருமையாக எழுதி இருக்கிறீர்கள், தொடருங்கள் தேவ்.

"நான் கருப்பு தான்.. ஆனா களையான முகம்ன்னு எங்க அம்மா சொல்லுவாங்க.."

காக்கைக்கு தன் குஞ்சு பொண் குஞ்சு என்று சொல்லுவாங்க

கோபிநாத் said...

\\விடுமுறை அனுபவங்கள் தொடரும்\\

அருமையான எழுத்து நடை தல ;)))

கலக்குங்க ;))

MyFriend said...

ithukkuthaane iththanai naalaai kaaththirunthen! :-D

innaikku night padikkiren. ;-)

TBR. JOSPEH said...

இவரு திரும்பிப் பார்க்கலை!! அல்லாம் நடக்காத விஷயத்தைக் கதையா எழுதி மன்சைத் தேத்திக்கறாரு.//

இவரு மட்டுமில்லை... நம்மள்ல நிறைய பேர் இப்படித்தான்:-)))

அனுசுயா said...

//காதுல்ல எதோ மிஷின் வச்சுகிட்டு இருக்காவ... பாடுற மிஷினாம்// நல்லாத்தேன் எழுதியிருக்கீக. தேவ் இது திரும்பி பார்த்ததா? திரும்பாம பார்த்ததாங்க ?

கதிர் said...

அழகா போகுது கிராமத்து வாசனையோட.

Santhosh said...

கதை நல்லா இருக்குது மக்கா.

சேதுக்கரசி said...

ஜாலியா போகுது தேவ். நல்லா எழுதறீங்க.. நான் சொன்ன "நாலு வரி பரீட்சை"ல் நீ(ங்க) இப்ப பாஸ் பாஸ். (பொதுவா கதை படிக்கமாட்டேன், முதல் சில வரிகளைத் தாண்டிட்டா படிச்சிருவேன்னு சொன்னேன்ல..)

சேதுக்கரசி said...

//இவரு மட்டுமில்லை... நம்மள்ல நிறைய பேர் இப்படித்தான்:-)))//

யார் யாருன்னு லிஸ்ட் குடுங்கப்பா.. நேரமிருக்கிறப்ப படிக்கிறேன். (க்கும்.. இதுக்கொண்ணும் கொறைச்சலில்ல.. ஏற்கனவே வெட்டிப்பயலும் ஜிராவும் எழுதின தொடர்களைப் படிக்கவே நேரத்தக் காணோம்!)

G.Ragavan said...

கலக்கல். அடுத்தடுத்து படக்குன்னு படிக்கனுமே...

அதுசரி..திருனவேலி மாவட்டத்துலயும் கருப்பட்டிதான. பனவெல்லம்னு வடக்கத்திக்காரக பேச்சப் போட்டிருக்கீரே. சரியில்லயே. ;)

Tamil Home Recipes said...

மிகவும் அருமை