Wednesday, March 19, 2008

என் அண்ணன் பேரு சரவணன் - 7

முந்தைய பகுதி படிக்க

ரஞ்சனியோட நான் ஓட்டலுக்குப் போன விஷயம் அப்பாவோட பிரண்ட் ஒருத்தர் மூலமா அப்பாவுக்கு போய் அது வீட்டு நடுக்கூடத்துல்ல பெரிய பூகம்பமா வெடிச்சு நம்ம பேர் இன்னும் கொஞ்சம் ஆழமா அகலமா ரிப்பேர் ஆச்சு... சரவணன் காதுக்கும் இந்த விவரமெல்லாம் போச்சு.. ஆனா அவன் பெருசா அலட்டிக்கல்ல.. என் கிட்ட எதுவும் கேக்கல்ல...

அதுக்குப் பிறகு நான் ரஞ்சனியோடப் பேசறதைக் குறைச்சுக்க எவ்வளவோ முயற்சி பண்ணேன். ஆனா அதை அவப் புரிஞ்சிக்கவே இல்ல...காலேஜ் கல்சுரல்ஸ் வந்துச்சு.. மெக்கிடோஸ் 2000... அதுக்கு எல்லாரும் தயாராகிட்டிருந்தாங்க...

காலேஜ் ஹாஸ்ட்டல் மொட்டை மாடியிலே முழுசா நாலு சிகரெட்டை நடந்துகிட்டே ஊதி தள்ளூனேன்...பிரச்சனையின் பாரம் உச்சந்தலையை அழுத்துனதுல்ல கத்தையா முடி கொட்டுச்சு...நடந்த நடையிலே செருப்பும் மொட்டை மாடி தரையும் தேஞ்சுப் போச்சு.. ரொம்பவே யோசிச்சதுல்ல மூளையிலே மிச்சம் மீதி எல்லாம் தீஞ்சுப் போயிருமோன்னு பயம் வந்துருச்சு... வர்றது வரட்டும்டா... இனி சரவணன் கிட்டப் போய் இத்தனை நாளும் நான் உன் காதலை ரஞ்சனிகிட்ட சொல்லல்ல... சொன்னதா உங்க கிட்ட ரீல் தான் விட்டேன்னு சொன்னா விளைவு விபரீதமாப் போவுலாம்... இல்ல விவகாரமாவும் போவலாம்... அதுக்குப் பேசாம துணிஞ்சுப் போய் ரஞ்சனி கிட்ட சொல்லிருவோம்...எங்க அண்ணன் உன்னைக் காதலிக்கிறான்... உன்னை அண்ணியாத் தான் நான் பாக்குறேன்னு ( மனசைக் கல்லாக்கி...சரி வர்றல்லன்னா புல்லாக்க்கியாவது) சொல்லிரணும்டா

நாம் எல்லாம் யார்... வந்த வழி என்ன? மன்னன் பூங்குளத்தில் ஒண்ணா ரெண்டா வண்ண மீன்கள்...அட பாவி பைய சரவணன் சென்டிமெண்ட் டைப்... காதல் கருவாடு... சாதல் சடுகுடுன்னு ரைமிங்கா கவிதை எல்லாம் எழுதுறான்... நமக்கு இதயம் பெருசு... இன்னும் எத்தனைப் பேருக்கு அதை ரென்டுக்கு விட வேண்டியிருக்கு...

"டேய் சிவா.. உனக்குப் பாக்குற எல்லாப் பொண்ணுமே பியூட்டிபுல்டா.. கல்லிலும் கலைவண்ணம் காணும் சிற்பி மாதிரிடா நீ.. ஆனா சரவணன்... காதலிச்சு கவுந்துப் போன கப்பிடா... அதுன்னால்ல.... ரூட்டை மாத்து... பாட்டை மாத்து... போயிட்டே இருடா...." உள் மனசு உக்கார வச்சு அம்புட்டு நேர்த்தியாப் புத்தி சொன்னப் பிற்கும் கேக்கல்லன்னா எப்படி... ஒரளவு தெளிவாயிட்டேன்... ரஞ்சனியைப் பாக்கப் கிளம்புனேன்......

பஸ் ஸ்டாப்க்கு எதிரில் வி.ஐ.பி பட போஸ்டர் ஓட்டி இருந்தாங்க...அங்கிட்டும் இங்கிட்டும் மேஞ்சிகிட்டு இருந்த நம்ம கண்ணு போஸ்டர்ல்ல இருந்த பொண்ணு மேல போய் கன்னு மாதிரி குறி வச்சு நின்னுருச்சு.. கையிலே நாயர் கடை டீ சட்டுன்னு ஓவர் சூடு ஆன மாதிரி ஒரு பிலீங்... யம்மாடி ஜீன் ஸ் டைட் பனியன்ன்னு புதுசா ஒரு குட்டி கோலிவுட்டுக்கு அறிமுகம் போலன்னு நெனச்சுகிட்டு டீயை உதட்டுக்கு ஒரு இன்ச் கீழே இறக்கி கொட்டவும்... அந்த நினைப்பு கூட இல்லாம நின்ன என்னை தோள்ல்ல தட்டி ஒரு கை உலுக்கிச்சு....

வூ இஸ் த டிஸ்டர்பன் ஸ் அப்படின்னு ஒரு மாதிரி கோவ எபெக்ட் காட்டி திரும்பிய நான் அப்படியே டீயை மொத்தமா கவுத்துட்டு திறந்த வாய் மூடாமல் நின்னேன்... பின்னே போஸ்ட்டர்ல்ல பார்த்த அதே பொண்ணு என் பக்கத்துல்ல அதே ட்ரெஸ்ல்ல வந்து நின்னா நான் என்ன ஆகியிருப்பேன்ன்னு யோசிச்சுப் பாருங்க....

ஏய்...என்ன.... டீயை எல்லாம் கொட்டிட்டு நிக்குறே..அப்படி என்ன யோசனை?

"இல்ல தீடிரென்னு டீ ஒவராக் கொதிக்க ஆரம்பிச்சுருச்சு அதான்.... " என்று கண்ணை இமைக்க மறந்து அவளையே பார்த்தேன்...

அன்னிக்கு சேலையிலே வந்து மனசை கேக்காமலே வாங்கிப் போனா,, அதைத் திருப்பி வாங்கவே நடையா நடந்து செருப்பையும் மொட்டை மாடியையும் தேய்ச்சு இப்பத் தான் கேக்கலாம்ன்னு வந்து நிக்குறேன்.. அதுக்குள்ள ஜீன் ஸ் ஷர்ட்ன்னு மாடர்ன்னா வந்து மனசை இரக்கமில்லாம மர்டர் பண்ணிருவாப் போலிருக்கே.... வி.ஐ.பியில்ல அறிமுகமான அந்தப் புது பொண்ணு யார்ன்னு கண்டுபிடிச்சிங்கன்னு வைங்க.. ரஞ்சனி எப்படி இருப்பான்னு உங்களுக்கும் தெரிஞ்சுப் போகும்...

"என்ன ஆனாலும் சிவா... ரிவர்ஸ் கியர் மட்டும் போடாதே... உனக்குன்னு ஒரு ரூட் இருக்கு.. இந்த கவிதை கதறல் எல்லாம் உனக்கு ஒத்து வராது... அதுன்னால்ல.."

உள்ளே இருந்த மனச்சாட்சி கிட்டத்தட்ட நெஞ்சாங் கூட்டை கிழிச்சிட்டு வெளியே வந்து என் செவட்டுல்ல நாலு அறை விட்டு, சொன்னதை எல்லாம் மறுபடியும் ஞாபகப்படுத்த முடிவு பண்ணிகிட்டு இருக்கறது எனக்கும் விளங்கிருச்சு...மனச்சாட்சியை உள்ளேயே இருக்கும் படி வேண்டி விரும்பி கேட்டுகிட்டு எடுத்த முடிவுல்ல உறுதியா இருக்கறதா இன்னொரு எக்ஸ்ட்ரா முடிவும் பண்ணிகிட்டேன்...

"ரஞ்சனி நான் உன் கிட்டத் தனியாப் பேசணும்....."

"கல்சுரல் முடியட்டுமே..."

"இல்ல அவசரம்..." நான் கொஞ்சம் பிடிவாதமாவே சொன்னேன்...

அதே ஹோட்டலுக்குப் போனோம்... காபியும் அவளுக்குப் பிடித்த வெங்காயத் தோசையும் சொன்னோம்... இரண்டு கைகளால் காபி கோப்பையைப் பிடித்தப் படி பாதி முகம் மறைத்து அந்த பெரிய விழிகளை விரித்து புருவம் உயர்த்தி என்ன என்பது போல் என்னை ரஞ்சனி கேட்ட அழகு இருக்கே.... ஆத்தாடி அதுக்காகவே அவளோட இன்னும் ஆயிரம் காபி குடிக்கலாம் போலிருக்கே...

அவளூடைய அந்த அலட்சியமான பாவனைகள் ஒவ்வொன்றும் என்னையுமறியாமல் என்னை வசப்படுத்திக் கொண்டு இருந்தன...

"என்னவோ சொல்லணும்ன்னு சொன்ன.. ஒண்ணும் பேசமா உக்காந்து இருக்க...." ஒரு வித கேலியும் கிண்டலும் கலந்துக் கேட்டாள்..

"அது வந்து.. எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல்ல" நான் ஒரு ராகமாய் இழுத்தேன்...

"உங்க அண்ணன்ன்னு ஒருத்தன் சுத்திகிட்டு இருக்கானே சரவணனா அவன் பேரு... அவன் சொன்னா மாதிரி... நீயும் சொல்லப் போறீயா...?"

எனக்குள் எங்கோ சுருக்கென்று அவள் கேள்வியில்ல ஒளிஞ்சிருந்த ஏளனம் குத்தியிருச்சு...கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்குள்ளே இருந்த மயக்கம் கிறக்கம் எல்லாம் அப்படியே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிகிட்டு இருந்தன...ஒரு மாதிரியான இறுக்கம் என்னை அப்படியே வந்து பிடிச்சு அழுத்திச்சு...

"என்னை லவ் பண்ணுறானாம்... என்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறானாம்... என் கூட ரெண்டு குழந்தைப் பெத்துக்கப் போறானாம்... பேர் எல்லாம் கூடச் சொன்னான்... இதை எல்லாம் சொல்லுறதுக்கு அவனுக்கு எப்படி.....இந்த இடத்தில் ஒரு அலட்சிய புன்னகை சிந்தியவள் மேலயும் பேசுனா... உங்க அண்ணன் மாதிரி போன ஒரு வருசத்துல்ல என் கிட்ட ஆறு பேர் வந்து சொல்லிட்டானுங்க...எல்லாவன் மூக்கையும் உடைச்சு அனுப்பிட்டேன்... இப்போ நீயும் எதோ சொல்லணும்ன்னு ஆரம்பிக்குறே... என்னச் சொல்லப் போற.. ஐ லவ் யூ வா....?"

அது என்ன எவனுக்கும் அடங்காதப் பேச்சு..அதுவும் என் அண்ணனையே அவமானப்படுத்துற பேச்சு.. அதுவும் என் கிட்டேயே....எனக்குள்ள.. எங்கேயோ ஓரமா படுத்து கால் நீட்டி படுத்துகிட்டு இருந்த சனியன் சட்டுன்னு என் நாக்குல்ல ஏறி நடுமத்தியிலே கால் மேல கால் போட்டு உக்காந்துகிட்டான்... அந்த விவரம் தெரியாத நான் படு பந்தாவா மவுத்தை நல்லா ஓப்பன் பண்ணி சவுண்டா ( சினிமான்னா இந்த சீனுக்கு எக்கோ எபெக்ட் எல்லாம் டி.டி.எஸ்ல்ல் பி.ஜி.எம்மா சேத்துருப்பாங்க) சொன்னேன்....

"ஆமா ரஞ்சனி நான் உன் கிட்ட ஐ லவ் யூ சொல்லத் தான் இங்கே கூட்டிட்டு வந்தேன்... இதோ இப்போவும் சொல்லுறேன்... ரஞ்சனி ஐ லவ் யூ..."

அடுத்து அப்படியே பொங்குவா... வெங்காய தோசையில்ல் மீதி இருந்த தேங்கா சட்னியை எடுத்து முகத்துல்ல வீசுவான்னு ஒரு மாபெரும் யுத்தத்துக்கு ரெடியாவுற போர் வீரன் மாதிரி உள்ளுக்குள்ளே ஒத்திகை எல்லாம் பாத்துட்டு அவளை பாத்தேன்...

அவப் பொங்கவே இல்ல... பொங்குற மாதிரியும் தெரியல்ல... மிச்சம் இருந்த வெங்காயத் தோசையை வெக்கம் இல்லாம தின்னுகிட்டு இருந்தா... வெக்கம் எதுக்குன்னாக் கேக்குறீங்க... போருக்கு நான் ஆயத்தம் ஆன கேப்ல்ல என் தட்டுல்ல மிச்சம் இருந்த வெங்காயத் தோசையை இல்ல அவ தின்னுகிட்டு இருந்தா..

உள்ளுக்குள்ளே இருந்த மனச்சாட்சிங்கற மானஸ்தன் அன் பிளான்ட்(unplanned) லீவை என் கிட்டச் சொல்லாமலே எடுத்துட்டு ஏழு கடல் தாண்டி ஏழு வருசம் பயணம் கிளம்பிட்டான்...

"எல்லாவனுக்கும் சொன்ன பதிலை உனக்குச் சொல்ல முடியாது சிவா... " அவள் விரல்கள் வெங்காயத் தோசையில் மெல்லிய கோலம் போட்டுக்கிட்டு இருந்தன...

"எங்க அண்ணனுக்கு என்ன குறை...?" எப்படியோ கஷ்ட்டப்பட்டு அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டேன்...

"உன் அண்ணன் கிட்ட என்ன குறைன்னு எனக்கு தெரியாது.. ஆனா நீ என் கூட இருந்தா எந்த குறை இருந்தாலும் பெருசாத் தெரியாதுன்னு மட்டும் மனசுக்குப் படுது சிவா..."

எனக்கு என்னச் சொல்லுறது தெரியாம நின்னேன்...

அதிசயமாய் அந்த மார்ச் மாதத்து பகலில் மழை பெய்தது...

ரஞ்சனிக்குக் காத்திருக்காமல் மழையில் நனைந்தப் படி காலேஜ் நோக்கி நடக்க ஆரம்பிச்சேன்....

காலேஜ் வாசலில் நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை சரவணன் எனக்காக காத்திருப்பான்னு...

தொடரும்

10 comments:

CVR said...

என்ன கொடுமை சரவணன் இது!!!
:-)))))))))))

பாவம்யா அந்த அண்ணன்!! மொதல்லையே அவனே போய் மேட்டரை சொல்லியிருந்தா இந்த குழப்பங்களே இல்லாம போயிருக்கும்!! :-D

என்னத்த சொல்ல!!
விதி வலியது!! :-P

கப்பி | Kappi said...

ஒன்னுமே புரியல ஒலகத்துல
என்னமோ நடக்குது
மர்மமாய் இருக்குது :))

Unknown said...

//"உன் அண்ணன் கிட்ட என்ன குறைன்னு எனக்கு தெரியாது.. ஆனா நீ என் கூட இருந்தா எந்த குறை இருந்தாலும் பெருசாத் தெரியாதுன்னு மட்டும் மனசுக்குப் படுது சிவா..."//

வாவ்!!

அடுத்த பகுதிய சீக்கிரமா போட்டுருங்க!!

Divya said...

ஐய்யோ 'அண்ணன்'பாவம் ........இப்படி பண்ணிட்டியே சரவணா??

கல்லூரி வாசலில் நின்ற அண்ணனிடம் சரவணன் உண்மையை இப்போவாவது சொல்வானா??.......அறிந்துக் கொள்ள ஆவலுடன் வெயிட்டிங்க்ஸ்!


\\ காதலிச்சு கவுந்துப் போன கப்பிடா\\

ROTFL:))

கோபிநாத் said...

அய்யோ பாவம் சரவணன்..;(

இந்த மாதிரி விஷயத்துக்கு எல்லாம் ஆளு வச்சிக்க கூடாதுன்னு சொல்றது.

Divya said...

காதல் தூதிற்கு சொந்த தம்பியை கூட நம்ப கூடாது போலிருக்கு!!

\\இரண்டு கைகளால் காபி கோப்பையைப் பிடித்தப் படி பாதி முகம் மறைத்து அந்த பெரிய விழிகளை விரித்து புருவம் உயர்த்தி என்ன என்பது போல் என்னை ரஞ்சனி கேட்ட அழகு இருக்கே.... ஆத்தாடி அதுக்காகவே அவளோட இன்னும் ஆயிரம் காபி குடிக்கலாம் போலிருக்கே...\\

காஃபி குடிக்கும் அழகைகூட இவ்வளவு நேர்த்தியாக விவரிக்க முடியுமா??
சூப்பரு தேவ் அண்ணா!

இலவசக்கொத்தனார் said...

படிச்சுக்கிட்டுதான் இருக்கேன். நடாத்தும்!! :))

துளசி கோபால் said...

அடப்பாவிகளா...:-)

கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்லலியே.......த்சு....


வி ஐ பி படம் புதுமுகம் சிம்ரன்.

அப்படின்னு நினைக்கிறேன்

G.Ragavan said...

இந்தக் காதல் எங்குட்டுருந்து வருதுன்னு தெரிஞ்சா இந்தப் பிரச்சனையெல்லாம் வராது. ஆனா இதுக்கெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. வரனும்னா வந்தே தீரும். படனும்னா பட்டே தீரும்.

Unknown said...

//துளசி கோபால் said...

அடப்பாவிகளா...:-)

கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்லலியே.......த்சு....


வி ஐ பி படம் புதுமுகம் சிம்ரன்.

அப்படின்னு நினைக்கிறேன்//

வாங்க துளசி அக்கா.. பசங்க பாடத்துல்ல எவ்வளவு வீக் பாத்தீங்களா .... கடைசியா டீச்சரே வந்து பதில் சொல்ல வேண்டியிருக்கு :))))