
ஒருவனுக்கு ஒருத்தீ..யே
போதும்...
எரிந்துப் போன
மிச்சங்களில் இருந்து
ஒரு காதலனின் குரல்..
இந்தக் கதையின் முதல் பாகம் படிக்க இங்கே சொடுக்கவும்
நட்பென்னும் தீவினிலே - பகுதி 1
அலுவலக வேலை எதிர்பார்த்ததை விட சீக்கிராமவே முடிஞ்சுப் போயிடுச்சு மும்பை மாநகரம் அவசரத்திலும் அவசரமான நகரமாய் சுழன்று கொண்டிருந்தது. சென்னை, பெங்களூர் நகரங்கள் எவ்வளவோ தேவலாம்ன்னு நெனச்சுக்கிட்டேன். மறுநாள் மதியம் தான் சென்னைத் திரும்புதாய் திட்டம். என்னப் பண்ணுறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். எதிரில் இருந்த ஒரு மினி உணவகம் கண்ணில் பட்டது. நெல்லை புட் கோர்ட் என்ற அதன் பெயர் பிடித்ததோ என்னவோ தெரியல்ல..சாலையைத் தாண்டிப் போய் அந்த சாப்பாட்டுக் கடைக்குள்ளே நுழைஞ்சேன். சுமாரா ஒரு 20- 25 பேர் தாராளமா உட்கார்ந்து சாப்பிடலாம். நல்லா தூய்மையாவும் சுகாதாரமாவும் பராமரிப்பு இருந்தது. கல்லாப் பக்கம் பிரேம் செய்யப்பட்ட பெரிய கலைஞர் படம் மாட்டப்பட்டிருந்தது. பக்கத்துல்ல அதை விடக் கொஞ்சம் சின்னதா தளபதி படமும் மாட்டப்பட்டிருந்தது... திமுக அதிமுகவோ கட்சி சார்பு இல்லன்னாலும் கலைஞர். .தளபதி...அம்மான்னு சொல்லி பழகிருச்சு... நம்ம ஊர்கார பைய தான் இங்க கடைப் போட்டிருக்கான் போல இருக்கு..வாய் விட்டே சொன்னேன் வெளியூர் போய் நம்மாளுங்கப் படமோ... பேரையோ....அதுவும் நம்ம தமிழ் மொழியிலே பாத்தாலே வர்ற அந்த சந்தோஷமே தனி தான் போங்க. உள்ளூர்ல்ல தான் வேற்றுமை எல்லாம்... இதுக்குத் தான் உலகமே வானம்ன்னு சிறகை விரிக்கணுமோ என்னமோ?
ஆர்டர் பண்ண கும்பகோணம் காபி வரவும் அதை ரசிச்சு ருசிச்சுகிட்டே கடையை மேலும் நோட்டமிட்டேன்.
விஜய் நடிச்ச சிவகாசி படத்தின் பாட்டை சத்தமா வச்சிருந்தாங்க. " வடு மாங்கா.... செவியைக் கிழித்தது. அயலூர் போய் நம்மூர் குத்துப் பாட்டு கேட்டு ரசிப்பதிலும் ஒரு சுகம் இருக்கத் தான் செய்தது.
"இவ்வளவு பெரிய நகரத்துல்ல அமீதை எங்கே எப்படி போய் தேடுறது...ம்ஹூம்" நம்பிக்கைக் கொஞ்சம் கொஞ்சமாய் தடுமாற ஆரம்பித்தது.
ஆண்டவனாப் பார்த்து அமீதை என் கண் முன்னாடி அனுப்பி வச்சாத் தான் உண்டு.. எனக்குன்னு எந்த வழியும் பிடிபடல்ல.
நான் யோசனையில் இருக்கும் போதே பில்லை என் கையில் கொடுத்துட்டுப் போனான் கடைப் பையன். விலை கொஞ்சம் அதிகம் தான். பரவாயில்லை.. அந்தக் காபி சுவைக்குத் தாராளமாக் கொடுக்கலாம் ஒ.கே தான் எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். பாக்கெட்டில் இருந்து காசை எண்ணிக் கொடுத்துட்டு வெளியே நடையைக் கட்டினேன். மனம் என்னமோ யோசனையை விட்டு இறங்கவே இல்ல.ஆண்டவன் அமீதைக் கண்ணுல்ல காட்டுவானா என்ற அதே நினைப்புல்ல எதிரில் வந்தவர் மீது கவனிக்காமல் டமால்ன்னு மோதிட்டேன்.
அதே தான்.. நீங்க நினைப்பது மிகவும் சரியே
சாரி சொல்லணும்னு திரும்பி முகத்தைப் பாத்தா.... அவன் தான்...அவனே தான்.. அங்கே நின்று கொண்டிருக்கிறான்... ஆண்டவன் சத்தியமா.... நிச்சயமா... இருக்கான்.. நம்புங்கப்பா!!! நான் சொல்லுறேன் அனுபவிச்சு சொல்லுறேன்
"தேவா..." அந்த குரலைக் கேட்டு எவ்வளவு வருஷம் ஆகயிருக்கும். ரெண்டு பேரும் அப்படியே ஒருத்தரை ஒருத்தர் அணைச்சுகிட்டோம். வார்த்தைகள் வர்றல்ல. அந்த அணைப்பிலேயே சில... பல... பரஸ்பர விசாரிப்புக்கள் முடிஞ்சுப் போச்சு.
அமீது...இன்னும் கெத்து கூடி போயிருந்தான்.. லேசாத் தொப்பை. ம்ம் அதுவும் அவனுக்கு அழகாத் தான் இருந்தது. அதே வசீகரமான சிரிப்பு கொஞ்சம் கூடக் குறையாமல் அவன் முகத்தில் தவழ்ந்தது. வழக்கம் போல அவனைப் பார்த்ததும் அவன் உற்சாகம் எனக்கும் தொற்றி கொண்டது. என்னைப் பற்றி.. என் குடும்பத்தைப் பற்றி... ஜெராப் பற்றி....மனோப் பற்றி... ஊர் பற்றி....ம்ம்ம் விட்டுப் போன எல்லா விவரங்களையும் அவன் விசாரித்தான். பேச்சு சுவாரஸ்யத்தில் மறுபடியும் உணவகத்திற்குள் வந்தோம். அவன் சமோசா சுண்டல் தருவித்தான்.
"அமீது .. என் சமோசா சுண்டல் பிரியம் உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு... நீ எதையும் மறக்கல்லடா..."
அமீது கலகலன்னு சிரிச்சான். அவனுக்கு ஸ்பெஷல் டீ சொன்னான். கடைப் பையன் பவ்யமாக் கொண்டு வந்து கொடுத்தான்.
"அப்புறம்.. மாப்பு.. உன் சந்தோஷம் உன் முகத்திலேத் தெரியுது... இருந்தாலும் உன் வாயாலே உன் கதையக் கேட்கணும்டா... எப்படிப் போகுது உன் வாழ்க்கை?"
"அல்லா கருணையிலே வாழ்க்கை எந்தக் குறையுமில்லாம் நல்லாப் போகுதுப்பா."
"அண்ணே வேற எதாவது வேணுமா?" சமோசா சுண்டல் கொண்டு வந்து வைத்து விட்டு கேட்டான் கடைப் பையன். அவன்கிட்டே பணிவு அளவுக்கதிகமாவே இருந்ததுப் போல் எனக்கு தோன்றியது.
" அமீது.. பையன் ரொம்ப பழக்கமா அநியாயத்துக்கு பம்முறான்?" சமோசா சுண்டலை சுவைத்தப் படி கேட்டேன்.
" இங்கே எல்லாரும் நமக்கு பழக்கம் தான் வேண்டப்பட்டவங்கத் தான்"
" ஒஹோ.. மாப்பு இங்கே ரெகுலர் கஸ்டமரோ...அதான் இந்தக் கவனிப்பா?"
"மச்சான்.. ரெகுலர் தான் ஆனா கஸ்டமரா இல்ல... முதலாளியா.... இது நம்மக் கடை தான்"
எனக்கு ஆச்சரியம் ப்ளஸ் சந்தோஷம். நம்ம பையன் மும்பையிலே ரெஸ்டரண்ட் ( நண்பன் ஒனர் அப்புறம் இனி அதை கடை கிடைன்னு அசிங்கமாச் சொல்லிகிட்டு. இனி அது ரெஸ்டாரன்ட் தான்)
" மாப்பி தான் ஓனரா? எனக்கு ஒரே சந்தோஷம்டா"
"இதே மாதிரி இன்னும் ரெண்டு இருக்கு... ஒண்ணு செம்பூர்ல்ல.. இன்னொன்னு.. தாதர்ல்ல... புதுசா ஒண்ணு பாந்த்ராவில்ல ஆரம்பிக்கப் போறேன்..."
அட அட நம்ம பையப் பின்றான்டா. மனசுத் துள்ளிக் குதிச்சது.
" மச்சான் ஒரு நிமிஷம்..." என்று எழுந்து கல்லாப் பக்கம் போனான். நம்ம பைய ஜெயிச்சுட்டான்ங்கற விஷயத்தை உடனே ஜெராவுக்கும், மனோவுக்கும் சொல்லணும்னு மனசு துடிச்சுது..ம்ம்ம் செல்போன்ல்ல நம்பர் தட்டப் போயிட்டேன். இருக்கட்டும்..இப்போ வேணாம்.. அமீது கல்யாணத்துக்கு வந்தா அது ஒரு பெரிய சர்ப்பிரைஸா இருக்கும்ன்னு என் ஆர்வத்தை அடக்கி வச்சேன்.
அமீது கையிலே ஒரு சின்ன பார்சலோட வந்து உட்கார்ந்தான்.
"மும்பை வந்தப்போ என்கிட்டே எதுவுமே இல்ல... படிப்பை பாதியிலேப் பறக்கவிட்டுட்டு வந்துட்டேன்ல்ல.. நீ..ஜெரா.. மனோ.. மூணு பேரும் கொடுத்த உங்க செயின்.. மோதிரம்.. வாட்ச் மட்டும் தான் கையிலே..." அமீது குரலில் ஒரு வித விரக்தி தெறிச்சதை என்னாலே உணர முடிஞ்சுது.
"மும்பை வந்தப்போ ஒரு டீக்கடையிலே கிளாஸ் கழுவுற வேலைக் கிடைச்சுது.. ஆறு மாசம் அந்த வேலைச் செஞ்சேன்." அமீது குரல் உடைந்தது. அவனே அதைச் சரிப் பண்ணிகிட்டான்.
"கொஞ்சம் கொஞ்சமா கஷ்ட்டப்பட்டு.. ஒரு சின்ன டீக்கடை போட்டேன். அதுக்கு முதல் நீங்கக் கொடுத்த பொருள் தான் உதவியா இருந்துச்சு"
அவன் பார்சலைப் பிரித்தான். அதுக்குள்ள செயின்.. மோதிரம்.. வாட்ச்... ஏழு வருஷம் முன்னாடி நாங்க மூணு பேர் அவனுக்கும் அவன் காதலுக்கும் கொடுத்தக் காணிக்கை இருந்துச்சு. நான் கனமான மனசோட அதையெல்லாம் பார்த்துகிட்டு இருந்தேன்.
"என்னிக்காவது இதையெல்லாம் உங்க கிட்டேத் திருப்பிக் கொடுக்கணும்ன்னு தான் பத்திரமா வச்சிருந்தேன்... இந்தா வாங்கிக்க"
எனக்கு பக்கென்றது.அவன் குரலில் ஒரு வெறுமை ஒலிச்சுது. எனக்கு வெடவெடக்க ஆரம்பிச்சது.
"அமீது இப்போ எதுக்கு இதெல்லாம்... இது உன்னோடக் கல்யாணத்துக்கு எங்க கிப்ட் டா.. இதைத் திருப்பிக் கொடுக்காத.. கஷ்ட்டமாயிருக்குடா"
"கல்யாணமா.... வைக்கும் போது கூப்பிடுறேன் வந்து கிப்ட் கொடுங்க...."
அமீது குரல் இரும்பாய் ஒலித்தது.
எனக்கு அதற்கு மேலும் அவனை விவரம் கேட்டுக் காயப்படுத்தவும்... காயம் படவும்... திராணி இல்ல.
மூணு டம்ளர் தண்ணியை மடக் மடக்ன்னு குடிச்சேன். தொண்டைக்குள்ள இருந்த அடைப்பு அப்படியேத் தான் இருந்துச்சு.
"ஏன் தேவா.. அப்போ அந்த வயசுல்ல.. அப்படி நான் அவளைக் கூட்டிட்டுக் கிளம்புனது தப்புன்னு உனக்கு எப்போவாச்சும் தோணியிருக்காடா..?"
சென்னை செல்லும் விமானத்தின் அதிகமானக் குளிரையும் தாண்டி எனக்கு வியர்த்து கொட்டியது.
அமீதின் கேள்விக்குப் பதில் தெரிஞ்சும் என்னால் ஒன்றும் சொல்லமுடியாமல் போனது என் மனத்தைச் சுட்டது.