Thursday, September 28, 2006

கதை 9:ஆஷிரா

காமராஜ் உள்நாட்டு விமான நிலையத்தின் முன்னால் கம்பெனிக்கு சொந்தமான டாட்டா இன்டிக்கா காரின் டிரைவ்ர் சீட்டில் உட்கார்ந்து மூணாவது சிகரெட்டைப் புகைத்து முடித்தேன். நாலாவது சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கவும் செல்போன் சிணுங்கியது.டெல்லியில் இருந்து சென்னை வரும் விமானம் மேகமூட்டம் காரணமாக இன்னும் ஒரு இருபது நிமிடங்கள் தாமதமாக வரும் எனற எஸ்.எம் எஸ் படித்து விட்டு செல்போனைச் சட்டைப் பைக்குள் சொருகினேன்.

டெல்லியிருந்து ஆஷிரா வருகிறாள். ஆஷிரா எங்கள் குர்கான் அலுவலகத்தில் ERP பிரிவில் சீனியர் CRM CONSULTANT.வயது 27. அந்த வயதில் கிட்டத்தட்ட நான் வாங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகம் சம்பாதிக்கும் படு சாமர்த்தியசாலி. இங்கு நாங்கள் ஏற்று கொண்டு இருக்கும் ஒரு புதிய திட்டத்தைச் செயலாக்கப்படுத்தவும் எங்கள் அலுவலக ச்காக்களுக்கு பயிற்சி அளிக்கவும் சென்னைக்கு நான்கு மாதப் பயணமாக வருகிறாள்.

பெயரைப் பார்த்தா வடநாட்டுக் காரியாத் தெரியுது. வளமைக்கும் நுனி நாக்கு ஆங்கிலத்துக்கும் அரைகுறை உடுப்புக்கும் பஞசமிருக்காது. என் மனத்திற்குள் நானே ஒரு கணக்குப் போட்டுக் கொண்டேன். அவசரப் படாதீங்க.. நீங்க நினைக்கும் கணக்கு அல்ல இது.. இது போன்ற பெண்களைக் கண்டாலே எனக்கு அலர்ஜி. ஆனால் என்னச் செய்ய பொழப்பு அப்படியாகிப் போச்சு.. ஆஷிராவுக்காக இங்கு தேவுடு காத்து நிற்கிறேன். இன்னிக்கு ஞாயிற்று கிழ்மை. ஆபிஸ் டிரைவர் அவசர வேலையாக் கிளம்பிட்டான். அம்மணியோ ரொம்பவும் முக்கியப் புள்ளி. என் தல அதான் பாஸ் எனக்கு அன்புக் கட்டளைப் போட்டுட்டாரு...

"பன்னீர்..MAKE SURE THAT SHE REACHES THE GUEST HOUSE FROM THE AIRPORT SAFELY...SHE DOESNT KNOW CHENNAI"

போடாங்க... என்னப் பண்ண..பாஸ் உத்தரவு.. ஒரு நல்ல ஞாயித்துக்கிழமை காலைத்தூக்கம் போச்சு. நாலாவ்து சிகரெட் ஓயவும். டெல்லி விமானம் தரையிறங்கவும் சரியாக இருந்தது. என் கையில் ஆஷிரா என்று எழுதப் பட்டிருந்த அட்டையை வேண்டா வெறுப்பாய் தூக்கிப் பிடித்துக் கொண்டு வரிசையில் நின்றேன்.

"டிரைவர்.. மேரா சாமான் இதர் ஹை.. வண்டி எங்கே இருக்கு?"

அழுத்தமான ஆணவப் பெண்குரல் ஒன்று என் காதுகளைக் கிழித்துச் சென்றது.
மூர்க்கமான முகத்தோடு அவளைப் பார்த்தேன். உச்சி முதல் பாதம் வரை முழுசா உக்கிரமானப் பார்வைப் பார்த்தேன். அவள் அழகு தான்.. அழகை ரசிக்க விடாமல் அவள் ஆணவம் என்னைத் தடுத்தது.

"அரே டிரைவர்.. க்யா தேக் ரஹே ஹோ.. வண்டி சீக்கிரம் எடுப்பா"

என் கை கார் இருக்கும் இடம் நோக்கி சுட்டியது.. அவள் விறுவிறுவென்று காரை நோக்கி நடந்தாள். நான் வேறு வழியில்லாமல் அவள் மூட்டைகளை நகர்த்தியபடி காருக்கு வந்தேன். எதுவும் பேசாமல் காரை செலுத்தினேன். கொஞ்சம் வேகமாகவே ஓட்டினேன்.

பின் சீட் கண்ணாடியை அவள் இறக்கிவிட்டாள், சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்து புகையை வெளியே விட்டாள்.என்னிடம் எதுவும் பேசவில்லை.

நானும் எதுவும் பேசவில்லை. காரை வேகமாக ஈ.சி.ஆர் ரோட்டை நோக்கி விட்டேன். கார் நீலாங்கரை கம்பெனி கெஸ்ட் ஹவுஸை அடைந்தது. அவள் இறங்கினாள். கெஸ்ட் ஹவுஸ் வேலையாள் இம்முறை என்னை மூட்டைத் தூக்கவிடாமல் காப்பாற்றினான். அவள் சல்லென்று உள்ளேப் போய்விட்டாள். வேலையாளிடம் கார் சாவியைக் கொடுத்துவிட்டு பொடி நடையாய் பஸ் ஸ்டாண்ட நோக்கி நடந்தேன்.எனக்கு அவளைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதையும் மீறி பேருந்துப் பயணத்தில் அவள் வளைவு நெளிவுகள் என் சிந்தையில் வந்து மோதி என் மனத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

மறு நாள் காலை பத்து மணிக்கு தான் நான் அலுவலகம் போனேன். முன் கூட்டியே காலத் தாமத்திற்கு அனுமதி வாங்கியிருந்தேன்.என்னுடையக் கேபினை அவளுக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனக்கு எரிச்சல் அதிகமானது.எரிச்சலை உள்ளுக்குள்ளேப் புதைத்துவிட்டு எனக்கு ஒதுக்கியிருந்த வேறு இடத்தில் போய் அமர்ந்தேன். அங்கிருந்து அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது.

கலைந்த கேசம்... மிடுக்கானக் கண்கள்... நெற்றியில் புரளும் கற்றை முடி.. அதில் ஒரு விரல் வைத்த அவள் விளையாடியது.. கூர்மையான மூக்கு... மிருதுவான உதடுகள்.. ம்ம்மம் அம்சமாத் தான் இருக்கா.. அதான் திமிர் எனக்கு நானேச் சொல்லிக்கொண்டேன். பாஸ் எங்களை அறிமுகம் செய்து வைத்தார். முந்தைய நாள் என்னைப் பார்த்துப் பேசியதற்கான எந்த அறிகுறியும் அவள் நடவடிக்கையில் தென்படவே இல்லை.அப்போது தான் முதல் முறையாகப் பார்ப்பது போல் படு யதார்த்தமாகப் பேசினாள்.நானும் பாஸ் முன்னாடி சிரிச்சு வச்சேன்.

மத்தியானம் லஞ்சுக்கு வெளியேப் போயிருந்தோம். சாப்பிட்டு முடித்த உடன் தம் அடிக்க நான் வெளியே ஒதுங்கினேன். அவளும் வந்தாள். பற்ற வைக்க வத்திப் பெட்டி இல்லாமல் அக்கம் பக்கம் பார்த்து விட்டு என்னை நோக்கி வந்தாள். வந்துக் கேட்டாக் கண்டிப்பாக் கொடுக்க கூடாது. எனக்குள் ஒரு வைராக்கியம் நுழைத்துக் கொண்டு இறுக்கமாய் நின்றேன். அவள் என் பக்கமாய் வந்து என்னைக் கேட்காமலே என் வாயிலிருந்த சிகரெட்டை எடுத்து தன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு சாவகாசமாய் புகையை விட்டாள். என் கோபம் என் கட்டுப்பாட்டினை மீற துடித்தது.

"சோ இந்த் ஆபிஸ்ல்ல வாங்குற சம்பளம் உங்களுக்குப் பத்த மாட்டேங்குது அப்படித் தானே? என்று கேட்டு விட்டு தலையை ஸ்டலாக் ஒரு புறம் பார்த்து தாழ்த்தினாள்.
"எனக்குப் புரியல்ல.." என்று நான் தொண்டையைக் கனைத்துக் கொண்டேன்.

"இல்லை வீக் டேஸ்ல்ல SOFTWARE ஜாப். வீக் என்ட்ஸ்ல்ல டிரைவர் ஜாப்... வருமானம் நல்லாத் தான் இருக்கும் என்று கிண்டலாய் சிரித்தவள்... பட் யூ நோ.. யூ ட்ரைவ் த கார் வெல்" என்றாள்.
எனக்குக் கடுப்பு அதிகமானது. வெளியேக் காட்டிக் கொள்ளவில்லை. அவள் டைட் ஜீன்ஸை என் ஓரக் கண்ணால் அளவெடுத்தேன். அவள் இடுப்பில் சட்டைக்கும் ஜின்ஸ்க்கும் ஒரு நூல் அளவு இடைவெளி. அந்த இடைவெளியில் என் பார்வைப் பதிந்து நின்றது.

மாலை அலுவலக்ம் விடும் நேரத்துக்கு முன்பாக என்னையும் என் சகா கார்த்தியையும் பாஸ் கூப்பிடனுப்பி மாலையில் எங்களுக்கு என்ன வேலை என வினவினார்.
கார்த்தி எப்பவுமே உஷார் பார்ட்டி.. " பாட்டிக்கு கேட்ரக்ட் ஆப்பரேஷ்ன் சார்.. இன்னிக்குப் பாக்கப் போறேன்" டக்குன்னு அள்ளிவிட்டான்.
நான் சாதுவா ஒண்ணுமில்ல சார் என்று தலையாட்டி நின்றேன்.
"மச்சி பெரியப்பா எதாவது டாகுமெண்ட் வேலையை உன் தலையிலேக் கட்டப் போகுதுப் பார்" எனக் கிசுகிசுத்தான் கார்த்தி.

பாஸ் சொன்ன விஷ்யமே வேறு. ஆஷிரா மாலையில் சென்னையில் எங்கோப் போக வேண்டுமாம். அதுக்கு காவலாளி வேலைப் பார்க்க ஆள் வேண்டும். நான் தான் மீண்டும் சிக்கினேன். கார்த்தி கொந்தளித்துவிட்டான்.
"ம்ம் உனக்கு மச்சம்டீ.. அரேபியக் குதிரையை ஓட்டிட்டுப் போறே... ம்ம்ம்" அவன் விட்ட பெருமூச்சை சிலிண்டிரில் பிடித்து வைத்திருந்தால் ஒரு மாதம் சமையலுக்கு ஆகும்.மறுபடியும் அதே இன்டிக்கா... டிரைவர் சீட். இம்முறை அவள் பின்னால் உட்காராமல் முன்னால் உட்கார்ந்துக் கொண்டாள். செம பர்ப்யூம் வாசனை. மனுஷனைக் கும்முன்னு தூக்கிச்சு.

அதிசயமாச் சிகரெட் பிடிக்கவில்லை. கபாலிஸ்வரர் கோயிலுக்குப் போகணும்ன்னு சொன்னாள். வண்டியை மயிலாப்பூருக்கு விட்டேன்.
நான் கோயிலுக்குப் போகவில்லை. அவள் என்னைக வரச் சொல்லி கூப்பிடவுமில்லை, காரணுமும் கேட்கவில்லை. ஒரு மணி நேரம் காத்து இருந்தேன். வந்தாள். நெற்றியில் குங்குமம் இட்டு, பிரசாதம் கையில் ஏந்தி , தலையில் ஒரு முழம் மல்லிகைச் சூடி ஜின்ஸ் அணிந்த ஒரு தேவதையாய் வந்தாள்.

"ARE U AN ATHEIST?" அவள் கேட்டாள்
"நோ.. அடுத்து எஙகப் போகணும்? " என்று கேட்டேன்.
"அடையார் கேன்சர் இன் ஸ்டியூட்டிட்"
"அங்கே யார் இருக்கா?"
"அங்கேப் போகணும்" உறுதியானக் குரல் பதிலாய் வந்தது. அவள் கையில் ஒரு ரோஜாப் பூ இருந்தது. நான் வண்டி நிறுத்துமிடத்தில் நின்று கொண்டேன்.

அவள் போய் ஒரு அரை மணி நேரம் கழித்து வந்தாள். அவள் முகத்தில் ஒரு சின்னப் புன்னகைப் புதிதாய் பூத்திருந்தது.
"அடுத்து எங்கே?"
"நல்ல ரெஸ்டாரெண்ட் போலாம்"
"நான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்குவேன்"
"ரிலாக்ஸ் உங்களைப் பில் எல்லாம் கட்டச் சொல்லமாட்டேன்"
அவள் சிரித்தாள். நானும் சிரிக்க முயற்சித்தேன்.
"சிரிக்க வேண்டாம்.. உம்ன்னு இருந்தாலே ஜம்ன்னு இருக்கீங்க"

ஹோட்டலில் சைவ வகைகளை ஆர்டர் செய்தாள். நான் ஜீஸ் சொன்னேன்.

"எப்படியிருக்காங்க?"

"யார்?"

"கேன்சர் இன் ஸ்டிடியூட்ல்ல பாக்கப் போணீங்களே அவங்க.."

"ஓ அதுவா? அங்கே இப்போ யாரும் இல்ல. எங்க அப்பா அங்கே இருந்தார். கடைசியா எட்டு மாசம். வார்ட் நம்பர் 13. அப்போ எனக்கு எட்டு வயசு. நிறைய சிகரெட் பிடிப்பாராம். போயிட்டார். அவருக்கு ரோஸ் ரொம்ப பிடிக்கும்ன்னு பாட்டி சொல்லுவாங்க,, அதான் அவர் கடைசியா இருந்த ரூம்ல்ல ஒரு ரோஸ் வச்சுட்டு வந்தேன்" என்ற படபடப்பாய் பேசி முடித்தாள்.

"நீங்களும் நிறைய ஸ்மோக் பண்றீங்க?"

"அப்பா கிட்ட போகணும் அவர் கூட மிஸ் பண்ண சைல்ட்ஹூட் டேஸ் எல்லாம் மறுபடியும் வாழணும்ன்னு ஒரு ஆசை.. அதான் நானும் பிடிக்குறேன்.." என்று கலகலவெனச் சிரித்தாள்.எனக்குச் சிரிப்பு வரவில்லை. ஆர்டர் செயத் அயிட்டங்கள் பரிமாறபட்டன. அவள் ஒவ்வொன்றாய் எடுத்து ருசிக்க ஆரம்பித்தாள்.

"ஜோக் மேன்... காலேஜ் டேஸ்ல்ல ஜாலியா அப்படியே ஆரம்பிச்ச பழக்கம் இப்போ அப்படியே போகுது,,, நீ எப்படி மேன்? ரொம்ப மூடி டைப்பா இருக்கே?"

நீங்க தேயந்து நீயானது. அவள் கேட்டக் கேள்விக்கு என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் சிரித்தேன்.

"உங்க..உனக்கு தமிழ் எப்படி தெரியும்? " நானும் வேண்டுமென்று மரியாதைத் தவிர்த்தேன். என்னை விட ஒரு வயசு சின்னப் பொண்ணு தானேன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.

"நான் தமிழ் பொண்ணு தானே.. அப்பாவுக்கு பூர்வீகம் தஞ்சாவூர் பக்கம் நன்னிலம். ஆனா இது வரை தமிழ்நாட்டுக்கு வந்ததே இல்லை. இது தான் முதல் தடவை. பாட்டி உயிரோட இருந்த வரைக்கும் என்னைச் சென்னைப் பக்கம் விட்டதே இல்லை"

ஒரு நீருற்றாய் வார்த்தைகள் அவளை விட்டு புறப்பட்டன. அருவியாய் அவள் பேச்சு பொங்கியது. ஒரு நதியாய் என் காதுகளில் அவள் மொழி நடந்தது. ஒரு சில நிமிடங்களில் அவளைப் பற்றிய என் அபிப்பிராயங்கள் மாறத் துவங்கின. என்னவெல்லாமோ பேசினாள். ஆனால் எதிலும் அவள் தன் தாயைப் பற்றி மறந்தும் குறிப்பிடவில்லை. எனக்குக் கேட்க வேண்டும் என்று உறுத்தியது. ஆனாலும் கேட்கவில்லை.

அலுவலகம் வந்து விட்டால் வேலையில் கில்லியாய் நிற்பாள். வேலையைத் தவிர வேறு சிந்தனை எதுவுமே அவளிடம் இருக்காது. வேலைச் சொல்லிக் கொடுப்பதிலும் அவள் கெட்டிக்காரி.

ஒரு சனிக்கிழமை மாலை என்னை அவள் வீட்டுக்கு அழைத்திருந்தாள். நானும் போனேன்.
கதவைத் திறந்தவள் கால்சட்டையும் டீ-ஷர்ட்டும் அணிந்திருந்தாள். ஒரு நல்ல ஓட்டப் பந்தைய வீராங்கனைக்குரிய கால்களை அவள் பெற்றிருந்தாள்.

"கம் இன்"

அவள் அறையில் புத்தகங்கள் இறைந்துக் கிடந்தன. பாதிக்கும் மேல நமக்குப் புரியாத பிரெஞ்சு மொழியில் கிடந்தன.

"புக்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. மொழி பேதமில்லாமல் படிப்பேன்... படிக்கணும் அப்போத் தான் நம்ம உலகம் இன்னும் பெருசாகும்... பெரிய உலகத்திலே சின்ன சின்ன விஷ்யங்கள் காணாமல் போயிடும்"

நான் கையில் கிடைத்தப் புத்தகங்களைப் புரட்டினேன்.இசைத் தட்டுகளை ஆராய்ந்தேன். சுவற்றில் இருந்த படங்களைப் பார்த்தேன். அதில் ஒரு படத்தில் ஒரு அழகானச் சிறுமி இருந்தாள். அது ஆஷிராவாகத் தான் இருக்கும் என நினைத்துக் கொண்டேன். அவள் குடும்ப படம் இருந்தது. ஆஷிராவின் அம்மா படமும் இருந்தது. ஆஷிராவின் அம்மா கிட்டத்தட்ட ஆஷிராப் போலவே இருந்தாள்.

"சரி என்ன ட்ரிங்க் வேணும் விஸ்கியா ஜஸ்ட் பியரா?"
"நோ தாங்க்ஸ்"
"குடிக்க மாட்டியா? வெறும் தம்மு தானா?"
"இல்ல இப்போ வேணாம்"
"ஓ ஓஓஓஓ... ஏன்? " அவள் குரலில் நக்கல் இருந்தது.

அவள் விஸ்கி ஊற்றி கொண்டாள். கோப்பையிலிருந்து மெதுவாக எடுத்து பருகினாள்.
அவ்ள் கண்களில் ஒரு வித சோகம் இழையோடியது.

"ஹே.. ஒரு அழகான பொண்ணு..நான் அழகாத் தானே இருக்கேன்?"
நான் பதில் சொல்லாமல் இருந்தேன்.
"அப்புறம் அந்த அழகான பொண்ணு செக்ஸியான டிரெஸ்ல்ல.. தண்ணியடிச்சுட்டு இருக்கா.. அதுவும் தனியா இருக்கா.. உனக்கு செக்ஸ் எண்ணம் வரலியா?"

நான் உள்ளுக்குள் அதிர்ந்துப் போனேன். நம்ம மனசுக்குள்ளே இவ எட்டிப் பாக்குறாளான்னு ஒரு வினாடி திகைச்சுப் போயிட்டேன்.

"ஹே ரிலாக்ஸ் உங்க தமிழ் படத்துல்ல எல்லாம் அப்படித் தானே காட்டுவாங்க... தம் தண்ணி இதெல்லாம் ஒர் பொண்ணு அடிச்சா அவ எதுக்கும் தயார் அப்படி தானே உங்க நினைப்பு"

ஆஷிரா அதுக்கும் மேல் எவ்வளவோ பேசினாள். நான் ம்ம் கொட்டி வைத்தேன்.

"ஹே நீ யாரையாவ்து லவ் பண்ணி இருக்கீயாடா?"
"ம்ம் பண்ணியிருக்கேன்"
அவள் எக்காளமாய் சிரித்தாள்.
"இந்த சுடு மூஞ்சிய யார்ப்பா லவ் பண்ணா?"
"என் காலேஜ் மேட் அவப் பேர் ரஞ்சனி. இப்போ அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. யு.எஸ்ல்ல இருக்கா. அவளுக்கு ஒரு பையன் இருக்கான்"

கோப்பையில் இருந்த மதுவை மெல்ல விழுங்கினாள்.

"அவ பையனுக்கு உன் பெயரா வச்சுருக்கா? உன் காதலி" அவள் பேச்சில் ஒரு விட்டேத்தித் தனம்.

"இல்லை"
"ரொம்ப லவ் பண்ணீயோ?"
"ம்ம்"
"நானும் லவ் பண்ணேன்.. ஒரு வாட்டி ரெண்டு வாட்டி இல்ல.. நிறைய வாட்டி..இப்போ ஒரு ஆம்பிளைக் கிட்ட என்ன வேணும்ன்னு எனக்குத் தெரியும் " என்று என் அருகில் வந்தாள்.

நெற்றி முடியினைக் கையில் பிடித்தப்படி என் விழி பார்த்துச் சொன்னாள்.
"தைரியம்டா.. அது உங்க எவன்கிட்டயும் இல்லடா.. இருட்டல்ல இருக்க தைரியம் வெளிச்சம் வந்தா உங்களுக்குப் போயிடுதுடா..."

என் கன்னத்தில் பளீரென்று யாரோ அறைவதுப் போலிருந்தது. அந்த விடிந்தும் விடியாதுமான இரவினில் ரஞ்சனியை அவள் உறவுக்காரர்கள் வந்து இழுத்துப் போனதும்.. அவரகளுக்குப் பயந்து ரஞ்சனியின் கை உதறி நான் புதருக்குள் போய் பம்மியதும் நினைவுக்கு வந்தது..

"என்னாச்சு?" கொஞ்சலாய் அவள் உதடுகள் என் உதடுகளின் வெகு அருகினில் இப்போது. அவள் மூச்சின் உஷ்ணம் என் முகத்தில் மோதி அறைந்தது.

"நான் போகணும் ... ராத்திரி ஒம்போது மணிக்கு அம்மா ஊருல்ல இருந்து பேசுவாங்க.. செல்போனை ரூம்ல்லயே விட்டுட்டு வந்துட்டேன்" என்ற படி திரும்பி பார்க்காமல் நடந்தேன்.

Thursday, September 21, 2006

கவி 23:நான் நடந்து வந்த காதல் வீதி












என்னோடு நீ நடந்த வீதிகளில்
இப்போதும் நடக்கிறோம்
நானும் என் தனிமையும்

யாரும் பார்க்காத
கணப் பொழுதுகளில்
குனிந்துப் பொறுக்குகிறேன்
எப்போதோ எனக்காக
அந்த வீதியில் நீ வீசிச் சென்ற
காதல் பார்வைகளை...

வீதியின் ஓரங்களில்
பூத்திருக்கும் போகன்வில்லாப் பூக்களில்
நீ மிச்சம் வைத்துப் போனப்
புன்னகைகளைப் பத்திரமாய் சேமிக்கிறேன்..

உனக்குப் பிடித்த
அந்த மரத்தடி இருக்கையில்
ஓரிரு நிமிடங்கள் சாய்கிறேன்..
உன் நெருக்கத்தின்
புழுக்கத்தை
உள்ளுக்குள் தேக்கியபடி..

என் தோளில்
உன் முகமும்
உன் மடியில்
என் தலையும்..
அந்த நிமிடங்களை
மறுபடியும் வாழ முயற்சித்து
முடியாமல் எழுந்து நடக்கிறேன்..

முகத்தில் மோதும் காற்றில்
முன்னர் நீ சொன்ன
சின்ன சின்ன ரகசியங்கள்
கலந்து இருப்பதில்
கண்கள் தானாய் ஈரமாகின்றன...

அந்த மரத்தின் பின்னால்
என் முதல் முத்தத்திற்கு
வெட்கமாய் நீ சொன்ன ச்சீ
வண்டுகளின் மொழியில்
இன்னும் மறுஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

அந்த மரத்தின்
இலைகள் இன்னும்
சிவந்துப் போகின்றன..
அதன் அடியில்
உன் நினைவுகளோடு
நான் ஒதுங்கி நிற்கும் பொழுதுகளில்..

சாலையின் பெயர் பலகையில்
மங்கிய நிலையில் உன் பெயர்
மழையில் கரைந்த என் பெயரைத்
தேடி தேடித் தொலைகிறேன்

வீதியின் திருப்பங்களில்
மீண்டும் ஒரு முறை
மின்னலாய் நீ வருவாயென
எனக்கு நானே சொல்லும்
பொய்களில் காத்திருக்கிறேன்

ஆகாயம் உருகி
மழையாகி எனக்கெனப் பொழிய
வீதியில் காதல் வழிய
என் விரல்களின் இடையே
உனக்கென இடைவெளி விட்டு
மெல்ல நடக்கிறேன்...
நான் நடந்து வந்த காதல் வீதி நோக்கி

Monday, September 11, 2006

கவி 22:வான் தொடும் பொழுது

இன்றும் என் மீது மிச்சமிருக்கிறது
இன்னும் அந்த வலி என்னில் இருக்கிறது
மரணத்தோடு ஒரு சந்திப்பு
மௌனங்களின் ஆர்ப்பரிப்பு

எட்டிப் பிடிக்கும் தூரத்தில்
என்னருகே மரணம்
எல்லாம் முடிந்தது
என்னும் மரணத்தின் ஆணவம்

அறுத்தெறிந்து ஓடினேன்
அழுகையின் ஊடே ஓடினேன்
நிற்கவும் நேரமில்லை
நின்றாலும் ஆவது ஏதுமில்லை

பூக்களின் புன்னகை
பாதையின் ஓரமாய்
கண்ணாடி ஓவியங்கள்
காயங்களின் தோரணமாய்
பொக்கிஷ்மாய் நினைத்ததெல்லாம்
பொருட்டாய் தோன்றவில்லை

இன்னொருத்தனின் வலி
இதயம் தொடவில்லை
இன்னொரு குரல்
இம்மியளவும் என்னை நிறுத்தவில்லை

சாவின் சங்கிலிக்கு
சிக்கக் கூடாது
சாத்தான்கள் சத்தம்
சாட்டை சுழற்றியது

என் கைகளில்
என் உயிரின் சுவாசம்
பிழைத்துக் கொண்டேன்
பிறருக்கு இல்லாத பாக்கியம்
பிழைத்துக் கொண்டேன்

உயரங்கள் மிஞ்சவில்லை
உயிர் மட்டும் மிஞ்சியது..
உடைந்தக் கண்ணாடியில்
உடைந்த என் உருவம்

என் அடையாளம்
எனக்குத் தெரியவில்லை
என் முகம்
எனக்குப் பிடிக்கவில்லை

என்னை முத்தமிட வந்து
என்னைத் தேடிய மரணமே
என்னைக் காணாது
எத்தனைக் கோபம் உனக்கு?

அழுத கண்ணீர் காயந்துவிட்டது
அழிந்த உயிர்கள் ???

இன்று காலை இந்து நாளிதழில் 9/11 உலக வியாபார மையம் இடிப்பட்டப் போது அதில் சிக்கி உயிர் பிழைத்த ஒருவரது பேட்டியினைப் பிரசுரித்து இருந்தார்கள். கண்ணருக்கே பலரின் மரணம் கண்டு அதில் தான் பிழைத்ததுக் குறித்து அந்த மனிதனால் மகிழ்ச்சி கொள்ளமுடியவில்லை.. ஒரு வித குற்றயுணர்ச்சியினால் அந்த மனிதர் தவிக்கிறார். அந்த தாக்கத்தின் வெளிப்பாடு தான் இந்தக் கவிதை.

Friday, August 25, 2006

கவி 21:கல்லறை

இங்கே புதைக்கப்பட்டது
ஓர் உடல்
ஓராயிரம் கனவுகள்

மண்ணுக்கு உணவானாய் நீ
மண்ணுக்கு இன்னும் நோவாய் நான்

சில கடமைகள்
அவரசமாய் முடிக்கப்பட்டு
சிந்திய கண்ணீரினால்
அதினினும் அவசரமாய் கழுவப்பட்டன

முடிவில்லாப் பயணம்
முந்திக் கொண்டாய் நீ
முறிந்தச் சிறகுகளுக்குள்
முகம் புதைத்தப் படி நான்

உறவுகள் உன்
உறக்கத்தை
அலங்கரித்து விட்டு
அகன்றது

சில நாள் துக்கம்
சில கால ஞாபகம்
அவ்வளவு தான்
நீ அவர்களுக்கு

என் மொழியின்
நிரந்தர மௌனமடி நீ
என் மனத்தின்
ரகசிய ரணமடி நீ
ஒரு ஆயுள் கால
சேதமடி நீ எனக்கு...

கல்லறையிடம்
சொல்லும் காதலை
காத்திருந்தவளிடம்
சொல்லியிருக்கணும்...

Thursday, August 17, 2006

கவி 20:வாழ்க்கை ஒரு சிறு குறிப்பு

கான்கிரீட் காடுகளில்
கட்டடக் கூடுகள்...
உயரங்களின் தனிமையில்
உள்ளது என் முகவரி...

தொட்டு விடும் தூரத்தில் வானம்
தொலைவினில் எனக்கு நான்...
சாதனையின் தோரணங்கள்
என் வாசலுக்கு வெளியே...
சாகடிக்கும் வேதனைகள்
என் சுவாசத்தின் உள்ளே...

சில்லறைகளின் சிதறலில்
சிக்கிச் சிதறிய என் வாழ்க்கை
கல்லறைக்குப் போகும் வரை
தடுக்க முடியாது அதன் போக்கை

திரும்பிப் பார்க்கவில்லை
திரும்பவும் முடியுமா
தெரியவில்லை....

நின்று நிதானிக்க
நான் நினைத்ததில்லை
நிற்கவும் இல்லை...

எதையெல்லாம் இழந்தேன்
எதையெல்லாம் அடைந்தேன்
கணக்குப் புரியவில்லை
காலம் காத்திருக்கவில்லை...

பற்ற வைத்த சிகரெட்
புகைந்துக் கொண்டே இருக்கிறது
அதினும் வேகமாய்
அவ்வப்போது நானும்...

ஆரம்பம் உண்டென நம்பினால்
ஆண்டவனும் உண்டெனு நம்பு
ஆரோச் சொன்னார்
அப்போது யோசிக்கவில்லை...

இப்போது மட்டும் என்ன?
இன்னும் கொஞ்சம் நேரம்தான்
இதிலாவது வாழ்ந்து விடு
இதயத்தின் வேண்டுகோள்

கேட்கட்டுமா?
கேட்டுத் தான் பார்க்கட்டுமா?

காடு விட்டு மறு காடு
கிளம்பும் அந்த தருணம்..
கண்கள் தேடியது..
பொன்னை அல்ல
பொருளை அல்ல
புகழை அல்ல..

பெருமூச்சு எழும்பி
பெரிதாய் அடங்கியது

"பெரியவர் உறவுக்காரங்க ஆராவது இருந்தா...
பார்த்துடச் சொல்லுங்க..
போகுற உயிர் சந்தோஷமாப் போகும்"


கடைசி வார்த்தைககள்
காதினில் ஒலிக்க
கனவுகள் ஓய்ந்தன..
கதம் கதம்...

Thursday, August 10, 2006

கவி 19:மீண்டும் சென்னையில் ஒரு மழைக் காலம்




















நினைவில் இன்னும்
நனைந்தபடி அந்த நவம்பர் மாதம்..

இரு விழிகளின் ஓரம்
இருண்ட மேகங்களாய்
இமைகள் படபடக்க..

இன்னொரு புயல்
இதயத்தின் வெகு அருகில்
இன்னும் சில நிமிடம்
இதுவும் கடந்துப் போகும்

இடியின் சத்தம்..
இலக்கின்றி தாக்க...
மின்னல் கீற்று
முகத்தில் அறைய...

சோவெனக் கொட்டுது
சாரல் மழை...
இசைக்கும் மழை..
இனிக்கும் மழை...
இன்று இரண்டுமே இல்லை...

வார்த்தைகள்
வீசிய காற்றில்
வீழ்ந்துக் கிடக்க
கட்டியக் கோட்டைகள்
காரண வெள்ளங்களில்
கலங்கிச் சரிய...

வெற்று பார்வைகள்
வெளிறிய கனவுகள்.

கலகலப்பா சொல்லும் வாக்கியம்
காலத்தின் கட்டாயம்
களை இழந்தத் தொனியில்
கேட்க முடிந்தால்
கேட்டுப் போ..

ஜில்லென்று ஒரு காதல்..
ஜம்மென்று ஒரு கல்யாணம்...

ஈரமான அவள் திருமணப் பத்திரிக்கையில்
இடிந்துப் போன என் எதிர்கால உறவுகள்

Wednesday, June 21, 2006

கவி 18:தீவுத் தமிழா


தமிழகக் கரையோரம் மோதும்
தண்ணீர் அலைகள்
சமீபக் காலங்களில்
சற்று அதிகமாய் உவர்க்கிறதாம்...

விசாரித்த வரையில்
விவரங்கள் வியர்க்க வைக்கினறன்
தீவுத் தேசத்தில் தினமும்
தமிழன் கண்ணீர் சிந்துகிறானாம்

கண்ணீரும் கடலும் கைகோர்த்து
கடிதம் எழுதுகிறது
அலை வாயிலாக
அவசர அஞசல் வருகிறது

வாசிக்க வாசிக்க
வலிக்கிறது
வலியின் மிகுதியில்
வார்த்தைகளும் இறக்கின்றன

தேயிலைத் தோட்டங்களில்
தோட்டாக்கள் சாகுபடியா?
இயற்கையின் மடியில்
இன்னும் இனப்படுகொலைகளா?

ஆயுதம் கூட அழுதிருக்கும்
அந்த ஈனச் செயலில் இறங்கியதால்
இன்னும் மலராத மொட்டுக்களை
இரக்கம் பாராமல்
கொய்து எறிய
கொலை ஆயுதமே சம்மதியாதே!!!

உயிரின் மொத்தமும்
உலுங்கிப் போனது
வாழ்க்கையின் மீதான நம்பிக்கை
வழுக்கிப் போகுது

எதைச் சாய்ப்பதாய் உத்தேசம்
எதைச் சாதித்ததாய் எகத்தாளம்
கிழிந்தது மனிதன் என்னும் உங்கள் முகம்
காயப்பட்டது மனிதம் என்னும் மதம்

தீவுத் தமிழா
தீராத உன் ஏக்கம்
உன் ஓலங்களின்
உள்ளது என் மொழி

உன் உறக்கங்கள் ஊனப்பட்டு
உன் கனவுகள் களவாடப்படுகையில்
என்னவோ செய்கிறது
என்னிலும் உன் கண்ணீர் வழிகிறது...


வலை உலகிலும் பத்திரிக்கையிலும் படித்துப் பதறிய இலங்கை நிகழ்வுகளால் தட்டிய வார்த்தைகள்.எல்லாம் வல்ல இறைவனிடம் நம் சகோதர தமிழர்களுக்கு அமைதி தர வேண்டுகிறேன்.

Friday, June 16, 2006

கதை 8:சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்.

சைக்கிளை மாங்கு மாங்கு என்று மிதித்து விவேகானந்தாக் கல்லூரி வாசலுக்கு நான் வந்து சேர்ந்தப் போது மணி சரியாய் எட்டேமுக்கால்.

அப்போ எனக்கு வயசு 17. பிளஸ் டூ முடிச்சிருந்தேன். கல்லூரி வாழ்க்கையின் முதல் நாள். ஜீன்ஸ் பேண்ட் பிளாக் கலர் ஷ்ர்ட். கல்லூரி வாசலையே உத்து உத்துப் பாத்துகிட்டு நின்னேன். முதுகுல்ல பட்ன்னு ஒரு அடி. சுளீர்ன்னு கோபத்துல்ல திரும்புனேன். ஒரு நாலுப் பேர் வாட்டசாட்டமா நிக்குறாங்க.

அதுல்ல ஒருத்தன் விறைப்பா என்னை முறைச்சுப் பார்த்தான். நானும் திருப்பி முறைச்சேன்.

"டேய்... பர்ஸ்ட் இயரா"

" "

"த்தா.. கேக்குறோம் முழிக்கிறான் பாரு"

"மச்சி பிசிக்ஸ் ஆர்.ஆர் வர்றார்.. ராகிங்ன்னுப் பிடிச்சு டின் கட்டப் போறான்னுங்க.. வா இடத்தைக் காலி பண்ணுவோம்.. புள்ள எங்கேப் போயிடப் போகுது.. மறுபடியும் மாட்டும் அப்ப வச்சிக்கலாம் நம்ம கச்சேரியை...இப்போ பீரியா விடு"

முறைத்தவன் இன்னும் கடூரமாய் முறைத்தப் படியே நகர்ந்தான். எனக்கு லேசா உள்ளுக்குள் உதற ஆரம்பித்தது.

மறுபடியும் முதுகில் யாரோத் தட்ட கொஞ்சம் தயக்கமாய் திரும்பினேன்.

"பாஸ் ரிலாக்ஸ் நானும் பர்ஸ்ட் இயர் தான்... த்தா...****பசங்க என்ன உன்னக் கலாய்ச்சங்களா.. த்தா.. அவங்களை...." அதற்கு பிறகு அவன் பேசியது எதுவுமே அப்போது எனக்குப் புரியவில்லை. அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் மட்டும் என்னில் அப்போதைக்கு ஓங்கி வளர்ந்தது.

"ஆமா..பாஸ் ஏன் இப்படி முழிக்கிற? புரியல்லயா?"

"நான் இவங்களைப் பத்தி சார் கிட்ட சொல்லப் போறேன்...இது தப்பு..எங்க வீட்டுல்ல சொன்னா அவ்வளவு தான்..."

"தோடா.. பாஸ் நீ சரியான் பால் புட்டியா இருக்கே..சார் கிட்டே சொல்ல போறீயா.. அவனுங்களுக்குத் தெரிஞ்சா உன்னை உருட்டி உருட்டி அடிப் பின்னிடுவானுங்க....அவனுங்க எல்லாம் ....."
மறுபடியும் அதே அர்ச்சனையை அவிழ்த்து விட்டான். நான் லேசாய் முகம் சுளிப்பதை அவன் கவனித்திருக்க வேண்டும்.

"பாஸ் நீ எந்த ஏரியா?"

"மயிலாப்பூர்"

"எவ்வள்வு மார்க்?"

"87%"

"பாஸ் நீ படிக்கிற பார்ட்டியா? அதான் உனக்கு நம்மப் பேச்சு புரியல்ல"

அவன் சினேகமாய் சிரித்தான். நானும் சிரித்து வைத்தேன்.

"பாஸ் உனக்குப் பிடிச்ச நடிகர் யார்?"

"என் பேர் தேவ்... எனக்கு ரஜினி பிடிக்கும்"

"சாரிப்பா தேவ்ன்னே கூப்பிடுறேன்.. என் பேர் பாலாஜி... ராயபுரம் தான் நம்ம ஏரியா... தம் அடிப்ப இல்ல"

"அய்யய்யோ அதெல்லாம் கிடையாது" ஏறக்குறைய அலறிவிட்டேன்.

"தம் இல்லயா... அப்புறம் தலைவர் ரசிகன்னு சொல்லுற?"
நக்கலாய் சிரித்தான். " தம் அடிக்க வேணாம்.. டீக்கடைக்கு வருவே இல்ல ஒரு கம்பெனிக்கு"

நான் தலையாட்டினேன். இப்படித் தான் பாலாஜி எனக்கு அறிமுகமானான். அடுத்து வந்தக் காலங்களில் அவனே என் வாழ்வின் ஆசான் ஆனான்.

டீக் கடையில் அண்ணா நகரில் இருந்து வந்த சிவாவும், ஆவடியில் இருந்து வந்த குமாரும் ஒரு குடும்பமாய் ஒன்று சேர்ந்தோம். கோடம்பாக்கம் பழனி எப்போ எங்க குரூப்ல்ல சேர்ந்தான்னு சரியா ஞாபகம் இல்லை.

சரியா மூன்று மாசம் கழிச்சு அதே டீக்கடையில்

"மச்சி... அஞ்சு கிங்ஸ் சொல்லு"
பாலாஜி பற்ற வைத்த சிகரெட்டில் என்னுடைய சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.

"எப்படி மச்சி தலைவர் ஸ்டைல்ல பிடிக்கிறேனா?"

"தோடா..." மற்ற நால்வரும் கோரசாய் சிரித்தனர்.

"த்தா ஏன்டா சிரிக்கிறீங்க... இங்கே என்ன ஷோவாக் காட்டுறாங்க"
நான் சீறினேன்.

"மச்சி அன்னிக்கு உன்னை ராக் பண்ணானே அவன் வர்றான் பாரு"

"யார் அந்த டோரி கண்ணனா.. வர்றட்டும்... ஒரு நாளைக்கு அவனுக்கு இருக்கு பாரேன்.. பிஷ்கார்டன் தாண்டி தான் வீட்டுக்குப் போறான்.. ஒரு நாளைக்கு முகத்துல்ல துணிப் போட்டு அவனை அடிப் பின்னப் போறேன் பாரேன்"

"சரி இப்போ போலாம் வா... தேவில்ல எதோ புது இந்தி படம் போட்டு இருக்கான்டா.."

"இந்தி எழவு எவனுக்கு விளங்கும்.?" சிவா சொன்னான்.

"அடேய்.. இந்தி விளங்காட்டி பரவாயில்ல. அங்கே படம் பார்க்க வர்ற சேட்டு குட்டிங்களோட நடை உடை விளங்குனாப் போதாது" பழனியின் கருத்து.

"என்ன இழவுடா அந்த மைதா மாவு மூஞ்சிகளையே எவ்வளவு நேரம் பாக்குறது... வேஸ்ட்டா" குமார் சொன்னான்.

"மூஞ்சியை ஏன்டா பாக்குறீங்க" பாலாஜி எடுத்துவிட்டான்.

"நான் வர்றல்ல.. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு"
சிவா ஜகா வாங்கினான். மற்ற நான்கு பேரின் சந்தேகப் பாரவையும் சிவாவின் மீது படிந்தது.

"தோடா கிளாஸ் கட் அடிச்சிட்டு வந்து உக்காந்து இருக்கோம்.. உனக்கு என்னடா பெரிய மசுரு வெட்டுற வேலை" பழ்னி சீண்டினான்.

"மச்சி அது ஒண்ணும் இல்லடா... அந்த எத்திராஜ் காலேஜ் திவ்யா சாயங்காலம் கம்யூட்டர் கிளாஸ்க்கு வருவா.. நம்ம மச்சான் போய் வெளியே நின்னு ஆஜர் கொடுப்பார்.. நம்ம கூட படத்துக்கு வந்தா அந்தப் பொன்னான வாய்ப்பு மிஸ் ஆயிடுமே அதான் வர்றல்ல" நான் சொன்னேன்.

"எத்திராஜ் காலேஜ் திவ்யான்னா... அந்த 27டி பிகரா.. அன்னிக்குக் கூட அபிராமி போறப்போ நீ காட்டுனிய அதுவா.. அந்த ஹட் பிகரையா மாமா நீ லுக் விடுற?" குமார் கொஞ்சம் எகத் தாளமாய் பேசிவிட்டான்.

"டேய் குமார்.. இது என் பர்சனல் மேட்டர்..இன்னொரு வார்த்தை அவளைப் பத்திப் பேசுன.. மவனே உன் கழுத்தை நெறிச்சுக் கொன்னுடுவேன்டா"

சிவா டக்கென எழுந்து அங்கிருந்து வேகமாய் நடந்தான். எங்களுக்கு அவனைத் திருப்பிக் கூப்பிடணும்ன்னு தோன்றவே இல்லை. குமாரின் கண்கள் சட்டேனக் கலங்கி விட்டன. குமார் அழுதது மனசுக்கு ரொம்பவே கஷ்ட்டமாப் போச்சு.

"டேய் அவன் என்னப் பேசிட்டுப் போறான் பார்த்தீயா... உங்களை எல்லாம் எனக்கு மூணு மாசமாத் தான் தெரியும் அவன் என் கூட பிரைமரி ஸ்கூல்லருந்துப் படிச்சான்டா.. ஒரு பொண்ணுக்காக என்னை கொன்னுடுவேன்னு சொல்லுறான்டா"

பாலாஜி தோள்ல்ல குமார் சாய்ஞ்சுக்கிட்டான். அன்னிக்கு நாங்க சினிமாவுக்குப் போகல்ல. முதல் முறையா பாருக்குப் போனோம். நண்பனுடைய துக்கம் எங்க துக்கம்ன்னு முடிவு பண்ணி முதல் முதலாத் தண்ணியடிச்சோம். எவ்வளவு ஒரு கசப்பான அனுபவம். பாலாஜி அவன் மோதிரத்தை அடகு வச்சு எங்களுக்கு தாராளமாத் தண்ணீ ஊத்துனான்.
குமாருக்கு முன்னாடியே லைட்டாப் பழக்கம் இருக்கவே.. குடிச்சுட்டு கும்மாளமாப் பாட்டு பாட ஆரம்பிச்சான். கூட்வே பாலாஜியும் பக்கவாத்தியமா பார் பெஞ்ச்சுல்ல தாளம் கட்டுனான். நானும் பழ்னியும் மோந்துப் பாத்தவுடனேயே மட்டையாகிட்டோம்.

அடுத்த நாளும் நாங்க காலேஜ்க்குப் போகல்ல. சிவாவைப் பார்க்கவே இல்லை. வாரம் தவறாம தண்ணிப் போட ஆரம்பிச்சோம். வாரம் ஒரு காரணம். என்னிக்கோ செத்துப் போன பாலாஜி தாத்தாவுக்கெல்லாம் துக்கம் கொண்டாடி தண்ணியடிச்சோம். அப்படி வளர்ந்தோம்.
அந்த நேரம் காலேஜ் ஒரே போராப் போச்சு. சிவா அவ்வளவாக் காலேஜ்க்கு வர்றதே இல்ல. ஒரு ஓரமா வருத்தப் பட்டாலும் குமாருக்காக அந்த வருத்ததை அமுக்கி வச்சிக்கிட்டோம்.

எங்க காலேஜ்க்கு பக்கத்துல்ல இன்னொரு காலேஜ்க்கும் தகராறு வந்து கலவ்ரமான நேரம்.
"மச்சி ஒரு ரெண்டு பஸ் கண்ணாடியாவது உடைக்கணும்டா... அப்போத் தான் நம்ம பவரைக் காட்ட முடியும்" குமார் சொன்னான்.

" மச்சி நான் கூட ஒரு போலீஸ்காரன் மண்டையாவது உடைக்கணும்டா" பழனியின் ஆசை இது.

"இது தான் சான்ஸ் அந்த ஆர்.கே வாத்தியார் ஸ்கூட்டரை போட்டு உடைக்கணும்டா" என்னுடைய நீண்ட நாள் கோவம் அது.

"ஏன்டா அந்த ஆள் மேல அவ்வளவு கோவம்"

" மச்சி நான் பெயிலான அல்ஜிப்ரா பேப்பரை கிளாஸ்ல்ல வச்சு எல்லாருக்கும் காட்டி என்னை அவமானப் படுத்துன அந்தாளைப் பழிக்குப் பழி வாங்கியே தீரணும்டா" நான் பொங்கினேன்.

அடுத்து அப்படி இப்படி என் ஆயிரம் விவாதங்களுக்குப் பிறகு வாசலில் இரண்டு போலீஸ் வேன்கள் நிற்பதாய் கேள்விப்பட்டு பம்மி பின் வாசல் வழியாக அவரவர் வீடு போனது வேறு விஷயம். சிவா கல்லூரி பக்கம் வந்து ஒரு மாசம் ஆச்சு.

யாரும் கவலைப் படவே இல்லை. ஸ்டைரக் தீவிரமாப் போன டைம். எங்களுக்கு என்னச் செய்யுரதுன்னு தெரியாத நேரம்.

"மச்சான்... எதாவது படம் போலாமாடா? " பாலாஜி ஆரம்பித்தான்.

"என்ன படம் ஓடுது எல்லாம் கடி படம்" இது நான்.

"அடுத்த வாரம் நம்ம தளபதி படம் ரிலீஸ்...காதலுக்கு மரியாதை... அக்கா ஷாலினி ஜோடி.. கண்டிப்பா ரீலிஸ் அன்னிக்கேப் பார்த்து தியேட்டரை அல்லோல்லப் படுத்தணும் ஓ.கேவா" பழனி தீவிர விஜய் ரசிகனாய் உருவாகி கொண்டிருந்தான்.

"அது அடுத்த வாரம்.. இப்போ இந்த டைனமிக்ஸ் வாத்தி லொள்ளூ தாங்க முடியாது சொல்லுங்கடா" குமார் ஏறக்குறைய கதறினான்.

"என்னடா கெயிட்டிப் போலாமா?" பாலாஜி கண்ணடித்தான்.

"டேய் நான் வர்றல்ல... போன வாரம் அந்தப் பக்கம் போனப்போ எங்க அண்ணன் பிரண்ட் ஒருத்தன் பாத்துப் பெரும் பிரச்சனையகிப் போச்சு" குமார் கும்பிட்டுச் சொன்னான்.

"டேய்.. கெய்ட்டி.. எல்லாம் வேலைக்கு ஆவாது. இன்ட்ர் நெட் போவோம்.. நிறைய மேட்டர் சைட் இருக்காம்... ஒரு மணி நேரத்துக்கு நாப்பது ரூபா... ஒரு ரெண்டு மணி நேரம் குஜால்ஸாப் போகும் என்னச் சொல்லுறீங்க?"

"செல்லம்டா நீ பழனி.. என்னமா ஐடியா கொடுக்குறே?"

"ஆனா பணம்...." பாலாஜி கேட்டான்.

"ஏன்டா உன் கிட்ட இல்லையா?"

"தோடா.. மோதிரத்துல்லருந்து.. எல்லாத்தையும் வித்து கலக்கியாச்சு.. மிச்சமா இப்போ ஒண்ணும் இல்ல.. வீட்டுல்ல எல்லாம் தொலைஞ்சுப் போச்சுன்னு சீன் போட்டிருக்கேன்.. அடுத்த மாசம் எங்க அப்பாவுக்கு எதோ பிசினஸ்ல்ல ஒரு அமவுண்ட் வருதாம் அதுல்ல செயினே செஞ்சிப் போடுறேன்னு சொல்லியிருக்கார்.. அது வரைக்கும் நான் ஆண்டி தான்"

"தேவ் உன் பாக்கெட்ல்ல இருக்க பணம்..அது எக்ஸாம் பீஸ்டா"

"ஒரு எம்பது ரூபா தாண்டா.. நம்ம எல்லார் சந்தோஷமும் உன் கையிலேத் தான் இருக்கு"
நண்பர்களின் சந்தோஷம் முக்கியம், அதற்கு முன்னால் எக்ஸாமவது பீசாவது.. எண்பது ரூபாய்க்கு என்ன கணக்கு சொல்லலாம் வீட்டில் என மூளை முக்காடுப் போட்டு யோசிக்க ஆரம்பித்தது.

அதற்குள் பழனி இணைய உலகில் இன்ப வீதிகளின் விலாசம் தாங்கிய ஒரு நீளப் பட்டிய்லோடு வந்துச் சேர்ந்தான். அடுத்த ரெண்டு மணி நேரத்தை மையிலாப்பூரின் ஒரு முக்கு சந்து இன்டர்நெட் கபேவில் கழிக்க கிளம்பினோம்.

"அடச்சே எந்த சைட் போனாலும் கிரடிட் கார்ட் கேக்குறான்டா"

"எதாவது ஒரு நம்பர் போடுடா"

"போட்டுப் பார்த்துட்டேன்டா.. ஒண்ணும் வேலைக்கு ஆகல்ல"

"மச்சி நான் சொல்லுற மாதிரி செய்... அந்த வெள்ளைப் பொட்டியிலே நாங்க எல்லாம் ஏழைக் குடும்பத்துப் பசங்க.. எதோ எவ்வளவு இலவசமாக் காட்ட முடியுமோ அவ்வளவுக் காட்டுங்கன்னு இங்கீலீஷ்ல்ல டைப் அடிச்சுக் கேளுடா"
இது இன்று இணைய வளர்ச்சியினால் சோத்துப் பாட்டை நகர்த்தும் அன்றைய எனது கணிணி அறிவின் வெளிப்பாடு.

அதையும் நம்ம ஆள் ஒருத்தன் இலக்கணமெல்லாம் சரிப்பார்த்து கீபோர்டில் தட்டி PLEASE ENTER VALID INPUT என்று ஸ்கீரின் தூப்பியதைப் பார்த்துக் கோபம் வேறு கொண்டான்.

"த்தா இன்டர்நெட் எல்லாம் ஏமாத்து வேலை ஒழுங்கா கெயிட்டிக்கு போய் சுவப்பன சுந்தரியின் இந்திர இரவுகள் படம் பார்த்து இருக்கலாம்"
என்று ஏக்கப் பெருமூச்சு விட்டான் பாலாஜி. எல்லாரும் அந்த ஏக்கப் பெரூமூச்சில் கலந்துக் கொண்டோம்.

மறு நாள் சிவாவை ஹெச்.ஓ.டி ரூம் வாசலில் பார்த்து நாங்கள் லேசாக் கலவரமானோம். ஒன்றரை மாசத்துக்கு அப்புறம் கல்லூரிக்கு வந்திருந்தான். அவனைப் பார்த்துப் பேசுவதா வேண்டாமா எங்களுக்கும் தயக்கம் அவனுக்கும் தயக்கம். பேசவில்லை.

லஞ்ச் பிரேக்கில் கேன்டீனில் நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் வந்து நின்றான்.நாங்கள் கவனிக்காததுப் போல் எங்கள் உணவு டப்பாக்களைத் திறந்து சாப்பிட ஆரம்பித்தோம். எங்க எல்லோருடைய மனசும் கனத்துக் கிடந்தது. ஒருத்தருடைய இதயத்துடிப்பு இன்னொருத்தனுக்குக் கேட்டது.
"நான் லஞ்ச் கொண்டு வர்றல்ல" சிவா மெதுவானக் குரலில் சொன்னான்.
""
"உங்க கிட்டேத் தான் சொல்லுறேன்.. நான் லஞ்ச் கொண்டு வர்றல்லன்னு" அதிகப்படியான சத்தத்தில் கத்தினான் சிவா.

குமார் அவசர அவசரமாய் தன்னுடைய டிபன் பாக்ஸைத் திறந்து மூடியில் சாப்பாட்டைத் தட்டி சிவா பக்கம் எடுத்து வைத்தான். அடுத்த சில வினாடிகளில் எல்லாருடைய சாப்பாடும் சிவாவுக்கு பரிமாறப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பின் கலகலப்பாய் மதிய உணவை உண்டு முடித்தோம்.

அன்று மாலை நண்பன் ரூமில் அவன் உபயத்தில் தீர்த்தமாடியப் பொழுதினில் சிவா வாயைத் திறந்தான்.

" அவ இல்லாமல் என்னால வாழ முடியாது மச்சி... ஐ லவ் திவ்யா.. ஐ லவ் யூ திவ்யா"
நான் கொஞ்சம் அதிகமாய் ஊற்றினேன்.

"அவளும் உன்னை லவ் பண்றாளாடா"

"இல்லியே... அவ என்னைத் திரும்பிக் கூடப் பாக்க மாட்டேங்குறாளே...."
சிவா தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்.

"அவ என்ன பெரிய ஐஸ்வர்யா ராயாடா உன்னை லவ் பண்ண மாட்டாளாமா.. அவளை...சாரி மச்சி நான் அவளைத் திட்ட மாட்டேன்.. அவளைத் திட்டுனா உனக்குப் பிடிக்காது எனக்குத் தெரியும்...சாரி"
குமார் உளறினான்.

"மச்சி அவளை உனக்குச் சேத்து வைக்கிறோம்டா... நாங்கச் சேத்து வைக்கிறோம்"
இது நான்.

"ஆமாடா மாப்பூ... இப்போ நீ டென்ஷன் ஆவாதே ...கூலா இரு.. அவன் அப்பன் என்னப் பெரிய...*****'"
பாலாஜியின் பைந்தமிழ் செவிகளைத் தீய்த்தது.

"மச்சி எங்கப்பா என்ன படி படின்னு உயிரை வாங்குராருடா... அவர் படிக்காத்தை எல்லாம் என்னப் படிக்கச் சொன்னா என்ன மாப்பூ நியாயம்...நான் மட்டும் பெயில் ஆனா அடுத்த வருஷம் என்னை தஞ்சாவூருக்கு என் மிலிட்டிரி மாமான் வீட்டுக்கு அனுப்பிடுவேன்னு மிரட்டுராருடா"
பழனி அவன் சோகத்தை சைடில் சொருகினான்.

"கவலைப்படாதே.. பிட் அடிச்சாவது நீ பாஸ் பண்ணுறே.. உன்னைப் பாஸ் பண்ண வைக்கிறது என் பொறுப்பு...ஆமா உன் மிலிட்டிரி மாமாவுக்கு பொண்ணு இருக்கா?"
நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும் முன் பழனி மட்டையாகி விட்டான்.

அன்றையப் பொழுது அப்படியே முடிந்தது... கல்லூரி நாட்கள் வேகமாய் ஓடி முடிந்தன..

இன்று நான் ஒரு மென்பொருளாராய் எதோ வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்...

பழனி அவனுடைய மிலிட்டிரி மாமாப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு பாரிசில் ஒரு ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை வச்சிருக்கான். இரண்டு குழந்தைங்க.

குமார் இப்போ அமெரிக்காவில்ல ஒரு கணிணி நிறுவனத்துல்ல உயர் அதிகாரியா இருக்கான். இன்னும் கல்யாணம் ஆகல்ல அவன் வீட்டுல்ல பொண்ணுப் பார்த்துகிட்டு இருக்காங்க...

பாலாஜியைக் கடைசியாப் பார்த்தது...ஆங் பெரம்பூர்ல்ல

பாலாஜி முதல் வருஷத்தோடக் கல்லூரி படிப்பை நிறுத்திட்டான். எதுக்குன்னு எங்க யாருக்குமே காரணம் தெரியாது. அவன் கூட வர்ற அவன் ஏரியாப் பசங்களை விசாரிச்ச வரைக்கும் ஒரு விவரமும் தெரியல்ல.
எங்க அஞ்சுப் பேர் வட்டத்துல்ல மையப் புள்ளியா இருந்தாப் பாலாஜி எங்க வாழ்கையிலே இருந்துச் சொல்லாமல் கொள்ளாமல் விலகிப் போயிட்டான். ஆரம்பத்துல்ல நாங்க அதைத் தாங்கிக்க முடியாமல் தவிச்சுப் போயிட்டோம். அவனைப் பத்தியே பேசுவோம்... அந்தப் பேச்சுக் கொஞ்சம் கொஞ்சமாக் குறைஞ்சு ஒரு கட்டத்துல்ல சுத்தமா நின்னுப் போயிடுச்சு...

அப்படி ஒரு நாள் தான் நாங்கப் பாலாஜியைப் பெரம்பூர்ல்ல பார்த்தோம். ஆமா நாலு பேரும் தான் பார்த்தோம். பிருந்தாத் தியேட்டர் வாசல்ல எதோ ஒரு படத்துக்கு டிக்கெட் எடுத்துட்டு நிக்கும் போது ..


ஒரு அழுக்கு காக்கி டவசர்.. ஒடுங்கி ஒல்லியாப் போன அந்தப் பையன் எங்கப் பாலாஜி தான். ஒரு நிமிஷம் பதறிப் போயிட்டோம். நாலுப் பேருக்கும் வாயிலே இருந்து வார்த்தை வர்றல்ல.

"எதிரே இருக்க கேரேஜ்ல்ல தான் வேலை செய்யுறேன்டா"
பாலாஜியின் வேகம் காணாமல் போயிருந்தது. அவன் பேச்சு நடவடிக்கை எதுவுமே எங்களுக்குப் பிடிபடவில்லை.

"டீ சாப்புடுறீங்களா?"
எங்களுக்கு நாக்கு உள்ளுக்குப் போய் ஒட்டிக் கொண்டது

"சாரிடா.. உங்க யார் கிட்டயும் சொல்ல முடியல்ல.. அப்பா தீடிரென்னு சூசைட் பண்ணிக்கிட்டார். பிசினஸ்ல்ல லாஸாம். ஒண்ணும் புரியல்ல. ஓவர் நைட்ல்ல வீதிக்கு வந்துட்டோம். எதுவும் தோணல்ல... அக்கா..தங்கச்சி.. நான் மட்டும் தான் பையன். அம்மா ஒரு ஓரமா உக்காந்து அழுவுறாங்க... எல்லாரும் செத்துப் போயிடலாம்ன்னு சொல்லுறாங்க... எனக்கு என்னப் பண்ணுறதுன்னு தெரியல்ல..எங்கப்பா மாதிரி முட்டாத்தனம் பண்ண எனக்கு மனசு வர்றல்ல.. அதான் இப்படி எங்க மாமா கேரேஜ் தான்.. இப்போ பரவாயில்ல.. அக்காவுக்கு கல்யாணம் பேசியிருக்கோம்.. பத்திரிக்கை வைப்பேன் கட்டாயம் வர்றணும்..."

பாலாஜி எங்களை விட்டு எங்கோ போய்விட்டான் என்பது எங்களுக்குப் புரிந்தது. அவன் பேசினான். நாங்கள் ஆறிய டீயை மெல்ல உறிஞ்சினோம். பேசுவதற்கு எங்களிடம் ஒன்றும் இல்லை. நாங்கள் தம் அடித்தோம். அவன் அடிக்கவில்லை. ஏனோ அவனை அடிக்கச் சொல்லி நாங்கள் யாரும் வற்புறுத்தவில்லை.

அவனிடம் விடைப் பெறும் போது தவிர்க்க முடியாமல் கேட்டே விட்டான்.
"மச்சி பாலா.. ரொம்ப பெரிய மனுஷன் மாதிரி பேசுறடா.. எனக்கு ஒண்ணுமேப் புரியல்லடா"

அவன் சிரித்தான். அவன் அக்காவுக்கு கல்யாணம் ஆச்சா இல்லையாத் தெரியாது. அவன் எங்கள் யாருக்கும் பத்திரிக்கை அனுப்பவில்லை. அதற்கு பிறகு இன்று வரை நான் பாலாஜியைச் சந்திக்கவில்லை.

அப்புறம் சிவா...

கடைசி வரைக்கும் சிவாவை திவ்யா காதலிக்கவே இல்லை. அந்த ஏக்கத்தில்ல சிவா ஒரு நாள் ஆவடி டிரெயின்ல்ல போய் விழுந்துச் செத்துப் போயிட்டான்.

அவன் முகத்தைப் பாக்கக் கூட எங்களுக்குக் கொடுத்து வைக்கல்ல. சிவா செத்தப்போ அவன் வீட்டுல்ல அவங்க அம்மா அழுததது இன்னும் நினைவிருக்கு. அந்த ஞாபகம் வரும் போதெல்லாம் அடிவயிறே புரளுது...

"அய்யா... இதுக்கா உன்னைப் பெத்தேன்... பாத்துப் பாத்து வளத்தேன்.... ஏன்ய்யா.. எதுக்குய்யா இப்படிப் பண்ணிக்கிட்டே...."

என் விடலைப் பருவம் என்கிட்டே இருந்துப் போயிடுச்சா இல்ல இன்னும் இருக்கான்னு தெரியல்ல ஆனா..பாலாஜியை அந்த அழுக்கு டவுசர்ல்லப் பார்த்தப்போவும் சிவா செத்தப் போவும்.. எனக்குள்ளே எனக்கே தெரியாம என்னவெல்லாமோ நடந்துப் போனது உண்மை... ஒரு உளி சத்தம் உள்ளுக்குள்ளே ஒலிக்க ஆரம்பிச்சது அப்போத்திலிருந்து தான்னு நினைக்கிறேன்.

Thursday, May 25, 2006

கவி 17: பழையக் கிறுக்கல்கள்



என் மனசு
வெள்ளையாய் தான் இருந்தது..
நீ...உன் பார்வைகளால்
அதில் ரங்கோலிபோடும் வரை....

------------------------------------------------

உன் கண்ணில்
தூசு விழுந்தாலும்
கலங்கிப் போவதென்னவோ
நான் தான்..
உன் கருவிழி குளத்திற்குள்
கலங்கலாய் என் உருவம்..

-------------------------------------

சொல்லித் தெரிவதில்லை
காதல்...
நீ சொன்னது...
கடற்கரையோரம்...
திரும்பி பார்த்தேன்...
என் பாதச் சுவடுகள் மீது
உன் சின்னக் காலடி தடங்கள்..

---------------------------------------------

உனக்கு வெட்கப் படத் தெரியுமா?
ச்சீ போடா...என்றாய்
உன் கன்னம் சிவந்தது
அந்த கன்னச் சிவப்பில்
நான் படித்து ரசித்த
மூன்றெழுத்து கவிதை
கா...த...ல்......

Wednesday, May 17, 2006

கதை 7:நண்பனின் காதலி (3)

நண்பனின் காதலி - பகுதி 1

நண்பனின் காதலி - பகுதி 2

பீச் ரயில் நிலையத்தில் காலையில் இருந்து காக்க காக்க வைத்தான் நண்பன் சிரீஷ்.

"இன்னிக்கு அவ எப்படியும் வ்ருவா...இதை விட்டா எனக்கு வேற வாய்ப்பு அமையாது மாப்ளே.."

மதியம் உச்சி பொழுதுல்ல கொளுத்துற வெயில்ல நண்பனோடக் காதலுக்கு நீர் பாய்ச்சும் வேலைப் பாக்க வந்த என்னை நானே நொந்துக்கறதைத் தவிர எனக்கு வேற வழி தெரியல்ல.

மூணாவது ஓசி சிகரெட்டும் முழுசா ஊதி முடிச்சு க்டுப்பு தலைக்கேற உக்காந்து இருந்தேன். அந்நேரம் எந்த வடநாட்டுப் புண்ணியவானும் புண்ணியவாட்டியும் பெத்தெடுத்தாயங்களோ அவங்க வாழ்க.... கோதுமை அல்வா கடை ஒண்ணு... டைட்டா ஜீன்ஸ் போட்டுகிட்டு தனியா அங்கே வந்துச் சேர்ந்ததுச்சு.

அந்த கொஞ்ச நேரத்துல்ல எனக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஏற்ப்ட்ட தவிர்க்க முடியாத ஒருதலைக் காதல் காவியத்தைப் பத்திப் பிறகு விரிவாச் சொல்லுறேன். இப்போதைக்கு என் நண்பனின் காதல் கதையிலே கவனம் செலுத்துவோம்

அல்வாக் கடையை வாய் பிளந்துப் பாத்துகிட்டு எனக்குத் தெரிஞ்ச பிராத்மிக் ஹிந்தியிலே ஒரு மூணு ஹிந்திப் பாட்டை அதுல்ல கொஞசம் இதுல்ல கொஞ்சம்ன்னு கலந்துப் பாடிகிட்டு இருந்தேன்.

நண்பன் சிரீஷ் படு டென்சனா வர்ற போற ஒவ்வொரு ரயில் பொட்டியிலும் அவளை அதான் அவன் காதலிக்கற அவளைத் தேடிக்கிட்டு இருந்தான்...

ஒரு சின்ன பிரேக் எடுக்க நம்ம பக்கம் வந்தான். நான் பாட முயற்சி பண்ணிகிட்டு இருந்த ஹிந்திப் பாட்டுக்கு வார்த்தை எடுத்துக் கொடுத்து ஹெல்ப் பண்ணான். நான் வெட்கம் பார்க்காமல் தேங்க்ஸ் சொன்னேன்.

"ச்சீ... எனக்கு உதவி பண்ண வந்துட்டு....தனியா ரூட் போட்டு... தப்பு தப்பா இந்தி பாட்டுப் பாடிகிட்டு உக்காந்து இருக்க.... இதுல்ல எனக்கு தேங்க்ஸ் வேற சொல்லுற....உன்னை....."
சிரீஷ் கோபத்தையும் எரிச்சலையும் காட்ட ஒரு ஆள் தேவை. அந்த இடத்தில் என்னை விட்டால் அவனிடம் அகப்படுவார் யாரும் இல்ல.

"இந்தா மச்சி இந்த தம் போடு... அப்புறம் கூலா ஆயிடுவே..."

"அடிங்க... என் காதலுக்கு ஆப்பு வைக்கிற முடிவில்ல உறுதியா இருக்க நீயி.. அவ இப்போ வர்ற நேரம் நான் தம் பத்த வக்கணும் அதை அவ பாக்கணும்... அத்தோட எல்லாத்துக்கும் மங்களம் பாடணும் நல்ல நண்பன்டா நீயி.. வாழ்க உன் நட்பு"

ம் எனக்கும் கோவம் வந்தது.. சரி இப்போ வேணாம் அப்புறம் வச்சிக்கிறேன் உனக்கு தனி கச்சேரி. இப்போ நீ வாசிடா மகனே.. என மவுனம் காத்தேன்.

இன்னொரு சிகரெட் எடுத்து பற்ற வைக்கப் போனேன். என் உதட்டில் வைத்த சிகரெட்டை ஈவு இரக்கமின்றி பிடுங்கி எறிந்தான்.

"ப்ளீஸ் அவ வந்துப் போற வரைக்கும்.. என் செல்லம் இல்ல" இருகைக் கூப்பியது என் நட்பு. நான் ஒப்புக் கொண்டேன்.

"வருவாளா?" இது நான்.

"இன்னும் இருபது நிமிஷம் இருக்கு.. அடுத்த ட்ரெயின்ல்ல கண்டிப்பா வருவா" அவன் பதில் சொன்னான்.
"சரி லெட்டரை ஒரு நல்ல கவர்ல்ல போட்டுக் கொடு" நான் ஐடியா கொடுத்தேன்.

"OH MY GOD"அவன் கரண்ட் கம்பியில் கால் வைத்ததுப் போல் அலறினான்.

மொத்த பீச் ஸ்டேஷனும் திரும்பிப் பார்த்தது. ம்ம் மொத்தம்ன்னு நான் சொன்னது அங்கிருந்த ஒரு பத்து பேர். அதுல்ல என்னுடைய அல்வா கடையும் அடக்கம்... யப்பா என்ன ஒரு லுக்..அதை ரசிக்க விடாமல் படுபாவி மறுபடியும் அலறினான்.

"அந்த லெட்டர் தான் அன்னிக்கு தண்ணி அடிக்கும் போது வாங்கி நீ கிழிச்சிப் போட்டுட்டியே"
"ஆமா.. வேற லெட்டர் எழுதிட்டு வர்றல்லயா"

"அப்படின்னு லெட்டர் இல்ல... நேராச் சொல்லிடு"

"நான் மாட்டேன்"
"ஏன்"
"அது வந்து மாட்டேன்னா.. மாட்டேன்"

"ஓ.. செருப்பு டயலாக் ஞாபகம் வந்துருச்சோ"

அவன் பதில் சொல்லவில்லை.
எனக்கென்ன உங்களூக்கும் தான் காரணம் புரிந்திருக்கும்

"ஒண்ணு பண்ணு வீட்டுக்குப் போய் நிதானமா லவ் லெட்டர் எழுதிட்டு வந்து நாளைக்குக் கொடுப்போம்... இன்னிக்கு ஓர்க் அவுட் ஆகாது போ"
என் கண்கள் அல்வா கடையை வட்டம் இட்டன. யப்பா என்ன ஒரு....அவன் மறுபடியும் அலறினான்.

"நீ நினைச்சா எனக்கு உதவி பண்ணலாம்?"
"என்ன உதவி?"

"எனக்கு அவசரமா நீ ஒரு லவ் லெட்டர் எழுதி கொடுடா மாப்பூ.. உம் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்குடா"
"பதினைஞ்சு நிமிசத்துல்ல காதல் கடிதமா? நோ..நோ..."
"ப்ளீஸ் டா.. இதை விட்டா எனக்கு வாய்ப்பு கிடைக்காதுடா"

அவனைப் பார்த்தால் பாவமாய் இருந்துச்சு. ஒத்துக் கொண்டேன்.

"மச்சி நான் சொல்ல சொல்ல நீ எழுதுடா"

"எனக்கு நல்ல நேரத்துல்லயே தமிழ் தகராறு.. அதுவும் இந்த நேரத்துல்ல யுத்தமே வந்துறும்டா.. ப்ளீஸ்டா"

அவன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருந்ததை என்னால் மறுக்க முடியவில்லை.

ஒரு வெள்ளைப் பேப்பர்... பால் பாயிண்ட் பேனா என் கைக்கு வந்தது.
உபயம் சிரீஷ்.

அல்வா கடையைப் பார்த்ததில் எனக்குள் காதல் மழைப் பொழியத் துவங்கியது.. கூடவே கவிதையும் புயலெனப் புறப்பட்டது.

ஒரு பெண் ஒரு ஆணுக்குள் எப்படியெல்லாம் அரசாங்கம் செய்கிறாள்.

இரு விழிகளால் ...அவன் இதயம் கிழித்து..
தனக்கென அவனில் ஒரு இடம் பிடித்து...
சின்னச் சிரிப்பினால் அவனைச் சிறையெடுத்து...
அவனைத் தன்னுடையவனாக்கி...
அவனை மெல்ல மெல்ல ஆளுகிறாள்...
இப்படி ஆளப்படுவதையே ஒவ்வொரு ஆணும் உள்ளூர விரும்புகிறான்....

எழுதினேன்... வார்த்தைகளை அப்படி இப்படின்னு புரட்டிப் போட்டு.. என்னமா எழுதினேன் தெரியுமா?

கிட்டத்தட்ட எழுதி முடித்த நிலையில மறுபடியும் அவனிடமிருந்து ஒரு அலறல்...

"அவ வந்துட்டா டா"
நான் லெட்டரை அவனிடம் நீட்டினேன். அவன் வாங்கிக் கொண்டு ஓடினான்.

"டேய் ஒரு தடவப் படிச்சுப் பாத்துட்டு கொடுடா"

"நீ எழுதுனாச் சரியாத் தான் இருக்கும்"
சொல்லிக்கிட்டே அவளை நோக்கி ஓடினான். எனக்குள் ஒரு பெருமிதம்.
நட்பின் பெருமிதம்.

பெருமித உணர்வினில் இருந்து விடுபட்டு அல்வாக் கடைப் பக்கம் பார்வையைத் திருப்பினேன்.

அங்கே....

ஜாங்கிரி கல்ர்ல்ல ஒரு சேட்டு பையன் அல்வா கடை இடுப்பை வளைச்சி என்னமோ பண்ணிகிட்டு இருந்தான். வளைஞ்சது அவ இடுப்பு. ஆனா ஒடைஞ்சது என்னமோ என் மனசு.

அண்ணா சொன்னார் எதையும் தாங்கும் இதயம் வேண்டும்ன்னு.. அது எனக்கே எனக்கு சொன்னார் போலன்னு பாக்கெட்டுல்ல கைவிட்டு சிகரெட் தேடுனேன்.

நான் சிகரெட் தேடவும் சிரீஷ் ஓட்டமா வந்து என்னை இடிக்கவும் சரியா இருந்துச்சு..

பின்னாடி செருப்பு வருதான்னு தலையைச் சாய்ச்சி டவுட்டா நான் பாத்தேன். அப்படி எதுவும் இல்ல.

ஷிரீஷ் சிகரெட் பற்ற வைத்தான் எனக்கும் சேர்த்து. இரண்டு பேரும் படிக்கட்டு மறைவினில் அம்ர்ந்தோம்.

"லெட்டரைக் கொடுத்துட்டேன்"

"என்னச் சொன்னா?"

"எங்கப்பா உங்களுக்குப் பின்னாடி வந்துட்டு இருக்கார்.. அப்படியே போயிடுங்கன்னு சொன்னா"

"அப்புறம்"

"அதான் பாத்தி இல்ல.. ஓடி வந்துட்டேன்..நீ என்ன நினைக்கிற?"

"ம் சோ.. செருப்புத் தூக்கல்ல... உன்னை அவங்க அப்பா கிட்டப் போட்டும் கொடுக்கல்ல..."

"ஆமா"

சிரீஷின் கன்னங்கள் ஆப்பிளாய் சிவந்தன். பொண்ணு வெக்கப் படுறதைவிட ஒரு ஆண் வெட்கப்படுறது இன்னும் அழகு தான். காதலித்தால் ஆணுக்கும் வெட்கம் வரும் போலும்.

மாடிப் படிகளில் ஏறி போன ரஞ்சனி அங்கிருந்து சிரீஷ் தென்படுகிறானா என கண்களை நாலுபுறமும் சுழல விட்டாள்...அவனைக் காணாமல் அவள் முகம் சுருங்கியது. காதலுக்கே உரிய உலக குணங்கள் அவள் முகத்தில் தென்பட்டன.

நான் சிரீஷ் பக்கம் திரும்பினேன்.

சிரீஷ் பெரிய காரியத்தைச் சாதித்துவிட்ட திருப்தியில் சிக்ரெட்டை ஆழமாய் சுவைத்து வானம் பார்த்து ஊதினான். தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

அவன் சந்தோஷம் என்னையும் தொற்றிகொண்டது.

அப்போதைக்கு ஒலிம்பிக்ல்ல ஓடி கோல்ட் மெடல் வாங்கியிருந்தாக் கூட அவ்வள்வு சந்தோஷப் பட்டிருப்போமோ என்றால் சத்தியமாக இல்லை என்றே சொல்லுவேன்.

" யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்" இருவரும் ஒரே சத்தமாய் கத்தினோம்...

நாங்கள் கத்தி முடிக்கவும் .. அந்த அல்வா கடை அவளுடன் இருந்த ஜாங்கிரி தோளில் சாய்ந்துக் கொண்டு எங்களைக் கடப்பதற்கும் சரியாக இருந்தது.

"யே லோக் பாகல் ஹெய்ன்" என்று குச் குச் ராணி குரலில் அவனிடம் குறிப்பாக என்னைக் காட்டிச் சொன்னாள்.

"அடிங்க..." என்று எழுந்த சிரீஷின் கையைப் பிடிச்சு இழுத்து உட்கார வைச்சேன்.

"என்னடா?" என்று பரிவாய் கேட்டான் சிரீஷ்.

"விடுடா.. அவளை நான் லவ் பண்ணிட்டேன் .. பொழைச்சுப் போகட்டும் "

நான் சிரியசாச் சொன்னான். படுபாவி சிரீஷ் விழுந்து விழுந்து சிரித்தான். இப்படி அன்று மாலைக் கும்மாளமாய் வீடு திரும்பினோம்.

அது நடந்தது 2000ஆம் வருடம் மே மாதம்....
அன்னிக்கு பீச் ஸ்டேஷ்னில் ரஞ்சனியைப் பாத்ததுக்கு அப்புறம் அவளை சிரீஷ் ம்றுபடியும் பாத்தது...கதையின் முதல் பகுதிக்குப் போங்க...

தன் அலுவலகத்தில் தனக்கு மேலதிகாரியாக தான்...

இடையில் என்ன நடந்திருக்கும்....

எப்படி யோசிச்சுப் பார்த்தாலும் ஒண்ணும் விளங்கல்ல.

அதுக்கு மறுநாள் சிரீஷ் எதோ இன்டர்வியூன்னு அலைஞ்சுட்டு இருந்தான். அவனுக்கு அந்த இன்ட்ர்வியூ கிளிக்காகி மும்பையிலே ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்திலே வேலைக் கிடைச்சுது.

அந்த நல்ல செய்தியைச் சொல்ல அவளைத் தேடி அவ அட்ர்ஸ் கண்டுப் பிடிச்சு அவ வீட்டுக்கேப் போனான். அவங்க வீட்டோட சம்மருக்கு கும்பகோணம் போயிருக்காங்கன்னு தெரிஞ்சது.

சரி ஒரு மாசம் வந்துறுவாங்கன்னு மனசைத் தேத்திகிட்டு மனசை வேற விஷயத்துல்ல செலுத்திகிட்டு சம்மரை ஜாலியாக் கழிச்சான்.

அவன் மும்பைக் கிளம்புற நாளும் வந்துச்சு...அவக் கும்பக்கோணத்துல்ல இருந்து திரும்பல்ல. அப்போக் கூட நான் தான் அவன் மனசைத் தேற்றி ஒரு வழியா பிளைட் ஏத்தி அனுப்பினேன்..

"மச்சி.. அவளுக்கு என்னைப் பிடிக்கல்லயாடா?" பாவமாய் கேட்டான் சிரீஷ்.
"அப்படி எல்லாம் இல்லடா"

"அவங்க வீட்டுல்ல வேற எதாவது நடந்திருக்குமா?" பதட்டத்தில் சிரீஷ்.
"மாப்பு... சும்மா குழம்பாதே... இப்போ நீ உன் ஜாப்ல்ல கவனம் வை... மும்பைக்குத் தானேப் போற.. நினைச்சாத் திரும்பி வந்துடலாம்... நீ நெக்ஸ்ட் டைம் திரும்பி வரும் போது ஏர்போர்ட்க்கு உன்னை ரீசிவ் பண்ணவே அவ வருவாப் பாரேன்"
இப்படி அவன் மனசுக்கு மருந்துப் போட்டு அனுப்பி வைச்சேன். அவனும் போனான். போய் அடிக்கடி போன் பண்ணுவான். அவனைப் பத்திப் பேசுறதை விட அவளைப் பத்தி அதிகம் பேசுவான்.

அப்படி இப்படி அவ போன் நம்பரையும் மெயில் ஐடியையும் அவனுக்கு வாங்கிக் கொடுத்தேன்...அவன் அனுப்புன எந்த மெயிலுக்கும் அவ பதில் அனுப்பல்ல. அவன் எனோ பிடிவாதமாப் போன் பண்ண மறுத்துட்டான். ( அது அவங்கப் பக்கத்து வீட்டு போன்.. செல் எல்லாம் அப்போ ஏது)
இப்படியே காலம் உருண்டுப் போச்சு...எனக்கும் ஒரு வேலைக் கிடைச்சு அதுல்ல அல்லாடி தள்ளாடி தடுமாறி முன்னேறிகிட்டு இருந்தக் காலம். சிரீஷ் மும்பைப் போன மூணாவது மாசம் இங்கிலாந்துப் போனான் அப்படியே அங்கேயே நாலு வருஷம் இருந்தான். வருஷம் ஒரு தடவ வருவான். அப்படி வரும் போதெல்லாம் அவளைப் பாக்க முயற்சி செய்வான். அது தோல்வியில் முடியும். பின்னர் ஒரு குவார்ட்டர் கண்ணீரிலும் ஊறுகாய் புலம்பலிலும் முடியும்.

இப்படி ஒரு முறை வந்தப் போது சுனிதாவின் புகைப்படததை என்னிடம் காட்டி
"பொண்ணு எப்படி இருக்கா?" என்று கருத்துக் கேட்டான்.
"நல்லா இருக்கா... ஆனா..."
"இவத் தான் எனக்கு எங்க வீட்டுல்ல எனக்குப் பார்த்து இருக்க பொண்ணு... அடுத்த மாசம் கல்யாணம்" என்னைப் பேசவிடாமல் அவனேச் சொல்லி முடித்தான்.

"அப்போ ரஞ்சனி..."
"யார் அவ? எதோ வந்தா... போனா... என்ன போகும் போது காயப்டுத்திட்டுப் போயிட்டா அவ்வளவு தான்"

என்னப் பேசுவதென்று தெரியவில்லை. அது அவன் காதல்...அவன் வாழ்க்கை... நான் .. I KNOW EVERY FRIENDSHIP HAS ITS LIMITS I DIDNT WANT TO CROSS IT.

"எப்பவும் நீ கூப்பிடுவே.. இப்போ நான் கூப்பிடுறேன் வாடா .. போய் மூச்சு முட்ட குடிச்சுட்டுக் கொண்டாடலாம்"

சிரீஷின் அழைப்பை ஏற்று மவுனமாய் அவனைப் பின் தொடர்ந்தேன்.
சிரீஷ் அன்று இஷ்ட்டத்திற்கு குடித்தான்.. நான் அவனைத் தடுக்கவில்லை.

"டேய் மாமா... ஒண்ணு சொல்லுறேன் கேளு.. இது என் சொந்தச் சரக்கு இல்ல எங்கியோ கேட்டது..ஆனா ரொம்பக் க்ரெக்ட்டான மேட்டர் மாமா...ஆமா கேளு....

IF U LOVE SOMETHING SET IT FREE
IF IT COMES BACKTO YOU
IT BELONGS TO YOU

IF IT DOES NOT.. DONT WORRY IT NEVER BELONGED TO YOU...

போதையில் நான் உதிர்த்த தத்துவம் தான்...

"இப்போ இல்லாட்டியும் என்னிக்காவது ஒரு நாள் வருவாடா.... ம்ம்ம் நீ கொஞ்சம் கூட நினைச்சுப் பாக்காத வேளையிலே வருவாப் பாருடீ...."

சிரீஷின் கண்களில் கண்ணீர்... நானும் அழுதேன்....

இதோ அதுக்கு அப்புறம் சிரீஷிற்கும் சுனிதாவுக்கும் கல்யாணம் ஆச்சு. சந்தோஷமா வாழ்க்கைப் போகுது. அழகான குழந்தை.

பிளாஷ் பேக் ஓவர்.

ட்ரிங்..ட்ரிங்.... சிரீஷ் கால் தான்.

"ஹாய் மச்சி...சொல்லுடா.. உன் புது பாஸ் என்னச் சொல்லுறா?"
"எங்க புரொஜக்ட் முடிஞ்சுப் போச்சுடா... இன்னிக்கு டீம் மீட்டிங்... அவப் பேசுனாடா..."
"டீம் மீட்ன்னா டீம் லீட் பேசத் தானேச் செய்வா...அதுல்ல என்ன ஆச்சரியம்"
"எல்லாரையும் தேங்க் பண்ணிப் பேசுனா... அவளுக்கு கல்யாணமாம்டா.. அவ வுட்பீ கூட வந்திருந்தான்.. ஆள் நல்லாத் தான் இருக்கான் அவளுக்குப் பொருத்தமா...மீதிய டிஜில்ல எடுத்து வச்சுருக்கேன் வாயேன் பாக்கலாம் " என்றான்.

"வழக்கமான் டீம் மீட்ன்னா விடியோ எல்லாம் எடுக்க மாட்டோம் ... எங்க கம்பெனிக்கெ பெரிய மைல்ஸ்டோன்டா இந்த புரொஜ்க்ட் சக்ஸஸ். இதுன்னாலே எங்க லாபம் எங்கியோ போகப் போகுது."

ரஞ்சனி புடவைக் கட்டி அழகாய் வந்திருந்தாள். கம்பீரமானப் பெண்.
வழக்கமான் நன்றிகளைச் சொன்னாள். தன் வருங்காலக் கணவனைப் பற்றி சொன்னாள். கடைசியாக...சிரீஷ் கம்ப்யூட்டர் வால்யூமைக் கூட்டினான்...
" Now I should thank and appreciate the most important man of this project.. The ever admirable Sirish Ragahavan(இந்த இடத்தில் கரவொலிகளும் உற்சாகக் குரல்களும் ஏராளமாய கேட்டன.) My college senior... blah blah..........I think hes the most right person to lead this project in the coming years "என்று முடித்தாள்.

முடித்தப் பின் சிரீஷை அவள் பார்த்த பார்வை எனக்குப்
பீச் ஸ்டேஷ்னில் சிரீஷை அவள் தேடிய அந்தச் சிலக் கணங்களை ஞாபகப் படுத்தியது.

நான் திடுக்கிட்டு எழுந்தேன்.

"என்னடா?" என்றான் சிரீஷ்.

"ஒண்ணுமில்ல.... ஒண்ணுமில்ல...ப்ச் தண்ணி அடிக்கிறதை நீ நிறுத்திட்டே இல்லன்னா இன்னிக்கு ஒரு பார்ட்டி வச்சு ஜமாய்ச்சுடலாம்" என்றேன்.

அவன் சிரித்தான். நானும் சிரித்தேன்.

ஒரு நெடுநாளையக் கேள்விக்குத் திருத்தாமான விடைக் கிடைச்சிருச்சே.
ம்ம் இந்த விடை எனக்கும் இதைப் படிக்கும் உங்களுக்கும் மட்டும் தெரிந்த ரகசியமா இருந்துட்டுப் போகட்டும்..

சிரீஷ்க்கு தெரிய வேணாம்... ப்ளீஸ்...

நன்றி....:)

Tuesday, May 02, 2006

கதை 7:நண்பனின் காதலி (2)

நண்பனின் காதலி - பகுதி 1

1998 கல்லூரி காலம்... மறுபடியும் உங்களை எல்லாம் ஒரு பிளாஷ்பேக் மூட்க்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுப்பட்டால் வார்த்தைகள் விரயம் ஆகும் அதனால் நேரா விஷயத்துக்குப் போவோம்.

அது ஒரு மாலை இளவெயில் நேரம்... ஆகாயம் பார்த்து நம்ம நண்பன் வைரமுத்து ஆகும் முயற்சியில் தான் யார் என்பதையே மறந்துக்கொண்டிருந்த வேளையில் அவனை நான் மெரீனா அலைகளின் ஓரம் சந்தித்தேன்.... ஆமாங்க அவன் கவிதைங்கற பேர்ல்ல என் கழுத்தை கடித்துக் குதறினான். கேட்க யாருமில்லை என்னைத் தவிர.

எனக்குப் புரிஞ்சுப் போச்சு பையன் யாரோ ஒரு பொண்ணைப் பாத்து சித்தம் கலங்கி சீட்டியடிச்சுகிட்டு இருக்கான்னு தெளிவா விளங்கிப் போச்சு...

யாருடா அந்தப் புது பிகரு...?

பிகருன்னு சொல்லாதே ....I AM VERY SERIOUS ABOUT HER"

"ஆஹா இது என்ன புது கரடி... மச்சி சும்மா தமாஸ் பண்ணாதேடா...சொல்லு பிகர் எந்த ஏரியா?"

பிகருன்னு சொல்லாதே...எனக்கு கோவம் வரும்... அவ பேர் ரஞ்சனி... என் காலேஜ் ஜூனியர்... கோடம்பாக்கத்துல்ல இருந்து வர்றா... நான் ட்ரெயின்ல்ல பார்த்தேன்... மச்சி அவ செம ஹோம்லி லுக் மச்சி.....

நான் கேட்ட தகவலையும் தாண்டி அவள் புராணம் பாட ஆரம்பித்தான் சிரீஷ். நான் கொஞ்சம் டென்ஷனாகிப் போனேன்.

"டேய் டேய் நிறுத்துடா... நான் NIITல்ல பாக்காத பிகரா... இல்ல கோயில் வாசல்ல தாவணிப் போட்டு ஹார்ட் பீட்டை எகிற வைக்காத குத்துவிளக்குகளாடா... அப்படி என்னடா இவ பெரிய்ய...."

"போதும் நிறுத்து... இவ ஸ்பெஷல் தான்... அவ அழகை வேணும்ன்னா எனக்கு சரியா சொல்லத் தெரியாம இருக்கலாம்.. ப்ட் அவளை எனக்குப் பிடிச்சிருக்கு.. அவளைப் பார்த்தா மனசுக்கு சந்தோஷமா இருக்கு.... மறுபடியும் பாக்கணும்னு தோணுது..பாத்துகிட்டே இருக்கணும்ன்னு தோணுது...அவக் கிட்ட பேசணும்...அவப் பேச்சைக் கேக்கணும்.. அவச் சிரிப்பைப் பாக்கணும்.. அப்புறம்.."

"மாப்பூ... ஆளை விடுறா... தெரியாம கேட்டுட்டேன்... அவளை இம்புட்டு இதயம் நோக நீ லவ்றங்கற மேட்டர் எனக்குப் புரியாமப் போச்சுடா.. இப்போ புரியுது... சோ நீ எப்படியாவது அவளையே லவ் பண்ணி நாசமாப் போடா... இப்போ நைட் பீர் உட போலாம எப்படி?"

"இல்ல மச்சி எனக்கே அவ நினைப்பே பீர்ல்ல குளிச்ச பீலிங்கையே தருதுடா... நான் வர்றல்ல"

யப்பா சாமீ இந்த மாதிரி பேச்சு எல்லாம் என் லிட்டில் ஹார்ட் தாங்காதுடா சாமீ... நான் போய் இன்னிக்கு ஹாட் அடிச்சுட்டு அந்தர் பல்டி அடிச்சாத் தான் நான் நார்மல் ஆவேன் போலிருக்கு"

சிரீஷ் எழுந்து போய்விட்டான்.. நான் ரொம்ப நேரம் அலைப் பார்த்து உட்கார்ந்திருந்தேன்...சிரீஷ்க்கு காதல் வந்துறுச்சுப் போலிருக்கு... எனக்கு நானேப் பேசிக் கொண்டேன்... சிரித்துக் கொண்டேன்.. சுண்டல் விற்கவந்த சின்னப் பையன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு ஒதுங்கி சென்றான்.

இதற்கு பிறகுத் தறுதலையாய்... சாரி ஒரு தலையாய்... சிரீஷின் காதல் புல்லட் ட்ரெயின் வேகத்தின் சிட்டி ட்ரெயினின் கம்பார்ட்மென்ட்களில் வளர்ந்தது...
சிரீஷ் கிட்டத்தட்ட தேவதாஸ் கோலம் பூண்டுவிட்டான்.. அந்த தேவதாஸ் பக்கத்தில் ஒரு நாய் உண்டு... இவன் பக்கத்தில் என்னை விட்டால் யாருண்டு.

மூணு வருஷமாச்சு... சொல்லித் தான் தொலையேன்டா

சொல்லி அவ வேற மாதிரி எதாவது சொல்லிட்டா... என்னாலே அதை தாங்க முடியாதுடா

"முடியாதுன்னு அவ சொல்லிட்டா சூசைட் பண்ணிப்பியா....?"

"சே..சே அதெல்லாம் செய்ய மாட்டேன்டா..."
"அப்புறம்..."
"தெரியல்ல என்னப் பண்ணுவேன்னு எனக்கே தெரியல்ல..."

"நான் சொல்லுறேன்... போய் சொல்லு...அவ ஒ.கே சொன்னா... கிளப் போறோம்... மூக்கு முட்ட தண்ணியப் போட்டு அந்த சந்தோஷத்தை விடிய விடிய கொண்டாடுறோம் என்ன?"

"நோ சொல்லிட்டா என்னடாப் பண்ணுறது??"

"ம்ம்ம் இருக்கே வழி நேரா அப்பவும் கிளப் போறோம் மூக்கு முட்ட தண்ணியப் போட்டுட்டு விடிய் விடிய சோகத்தைத் தண்ணியிலே கரைச்சுட்டு வீட்டுக்குப் போய் குப்புறப் படுத்துட்டு குறட்டை விடலாம் என்ன?"

சிரீஷ் என்னைப் பார்த்தப் பார்வையில் அவன் மட்டும் நக்கீரனாய் இருந்திருந்தால் சத்தியமாய் என் சாம்பல் கூட மிஞ்சியிருக்காது. அப்பாடியோ... காதல்டா சாமி...

"சரி..சிரிஷ்.. நீ நேராச் சொல்ல வேண்டாம் ... யார்கிட்டயாவது உன் விருப்பத்தைச் சொல்லி இந்தப் படத்துல்ல எல்லாம் வர்ற மாதிரி தூது அனுப்பக் கூடாதா?"

"எங்களுக்குள்ளே அப்படி எந்த ஒரு பொதுவான பிரண்ட்ம் இல்லயே... "

"லவ் லெட்டர்.. அதான் ஒரே வழி..."

கற்காலக் காதல் துவங்கி கலிகாலக் காதல் வரைக்கும் சீராய் வளர்வதற்கும் சிதைந்து சிதறுவதற்கும் வழிவகை செய்யும் ஒரே காதல் யுக்தி காதல் கடிதம் தான். என் அறிவுக்கு எட்டிய மகத்தான ஐடியாவை அடுத்த சில நாட்களில் செயல் வடிவம் கொடுக்கும் முயற்சியில் இறங்கினோம்.
ம்ம்..அப்படி ஒரு டீம் ஓர்க். எத்தனைப் புத்தகங்கள் எத்தனை கவிஞர்கள்.. எத்தனை எழுத்தாளர்கள்..எங்களுக்கு உதவி இருப்பார்கள் தெரியுமா? பின்னே கண்ணதாசனிலிருந்து பழனிபாரதி வரை ஒரு கவிஞரின் வரி விடாது படித்துப் பார்த்து பார்த்து நகல் எடுக்கப் பட்ட ஒரு உன்னதக் காதல் கடிதம் அது...

முழுசா மூணு நாள் உக்காந்து எழுதி முடிச்சு... இதுல்ல ஒரு நாள் காலேஜ்க்கு கட் அடிச்சுட்டு வேற இந்த வேலையை முடிச்சோம்.

இப்போ காதல் என்னும் தேர்வு எழுதும் அந்த முக்கியமான நாள் வந்து நின்னுச்சு. எனக்கு தேர்வு நேரம்.
நம்ம நண்பனைப் பார்த்துக் கடைசி நேரக் கோச்சிங் எல்லாம் கொடுக்க முடியல்ல. அப்போ செல் போன் எல்லாம் பணக்காரகளுக்கு மட்டுமே சொந்தம் என்ற உயர்வான நிலையிலிருந்த ஒரு ஏற்ற தாழ்வின் காலம்.

வீட்டு போனிலிருந்து முனகலாய்... "மச்சி தைரியம்டா.. ஆல் த பெஸ்ட்..." சொல்லிவிட்டு நிமிர...

"ஆமா யாருக்கு குசுகுசுன்னு ஆல் த பெஸ்ட் சொல்லுற கேர்ள்பிரண்ட்க்கா..." என் பாசக்கார கசின் அக்கா கேட்டுச் சிரிக்க... நான் கெக்கப் பிக்கே எனப் பதிலுக்குச் சிரித்து என் கெத்தைக் காப்பாற்ற வேண்டியக் கட்டாயத்துக்குத் தள்ளபப்ட்டேன்.

நம்ம பரீட்சை டென்ஷ்ன் விட நண்பன் வாழ்க்கைப் பரீட்சைத் தான் நமக்கு அதிக டென்ஷன் கொடுத்தது. சாயங்காலம் வீடு வந்ததும்... டெலிபோனைச் சுத்த ஆரம்பிச்சேன்.. கை விரல் ஒரு முக்கா இஞ்ச் தேஞ்சு டேமெஜ் ஆகிப் போற அளவுக்குப் போயிருச்சு... போன் மணி அடிக்குது. அவங்க வீட்டுல்ல யாரும் போனை எடுத்தப் பாடில்லை.

நமக்கா தாள மாட்டேங்குது.

என்னாச்சோ?

ஒருவேளை இப்படி இருக்குமோ? இல்லை அப்படி இருக்குமோ?

மனசு ஒரு நிலை இல்லாமல் தவிச்சுப் போச்சு... இதுக்கு மேலயும் நமக்குத் தாங்காது.

அப்போ சிரீஷ் வீடு மயிலாப்பூர்ல்லயும் என் வீடு திருவான்மியூரிலும் இருந்துச்சு... என் டி.வி.எஸ் 50ஐ எடுத்துகிட்டு அதுல்ல பெட்ரோல் இல்லாமப் போய் நான் அல்லல் பட்டது தனிக்கதை... அவன் வீட்டுக்கு போய் நிக்கும் போது மணி எட்டு.

அண்ணன் வழக்கம் போல் மொட்டை மாடியிலே தவக் கோலம் பூண்டிருந்தார். நான் மூச்சிரைக்க ஓவர் ஹெட் டாங்க் பக்கம் போய் நின்னேன். அவன் எந்த வித சலனமும் இல்லாமல் என்னை நிமிர்ந்துப் பாத்தான். கிட்டத்தட்ட 100 மீ ரேஸ் ஓடி கடைசியா வந்தவன் ( அந்த அனுபவம் நமக்கு ரொம்ப ஜாஸ்திங்க) மாதிரி நான் அவனையேப் பாக்குறேன்...

"காலெஜ் போனீயா?"
"ம்.."

"ம் ண்னா"

"போனேன்"

"அவளைப் பார்த்தீயா?"

"ம்ம்.பாத்தேன்"

"கொடுத்தியா?"

"இல்ல" என்றவன் வானம் பார்த்து லுக் விட்டான். நான் செமக் கடுப்பு ஆயிட்டேன்.

"டேய் என்னடா? விளையாடுறீயா? சொல்லுடா?"

"இல்லடா மச்சி.. காலையிலே அவக் கிட்டே லெட்டர் கொடுக்கத் தான் போனேன். அப்போ இன்னொரு சீனியர் பையன் எனக்கு ஜஸ்ட் முன்னாடி போய் அவக்கிட்ட ஒரு லெட்டர் கொடுத்துட்டான்டா"

"அப்புறம்"

"அவ அழ் ஆரம்பிச்சுட்டா.... பெரிய கலாட்டா ஆயிடுச்சு... கோவத்தில்ல அவனைப் பார்த்து செருப்புப் பிஞ்சிடும் ராஸ்கல்ன்னு வேற சவுண்ட் விட்டாளா நான் கொஞசம் பயந்துப் போயிட்டேன்"

என் மூட் சட்டென மாறி எனக்கு கொல்லெனச் சிரிப்பு வந்தது. விழுந்து விழுந்துச் சிரித்தேன். சிரிஷ் ஒரு மாதிரி ஏக்கத்தில் உட்கார்ந்திருந்தான்.

"மச்சி.. பாப்பா படிப்ஸ் பார்ட்டி போலிருக்கு...சோ யார் பண்ண புண்ணியமோ இன்னிக்கு நீ பப்ளிக்கா செருப்பட் வாங்கமா எஸ்கேப் ஆயிட்டே...சரி சரி இதெல்லாம் உனக்கு ஒத்துவராது... நம்ம வேலையப் பாப்போம் கிளம்பு" என்றேன் நான்.

"ஆமா.. அந்த லெட்டர என்னப் பண்ணுன...?" பாதி பீர் உள்ளேப் போயிருந்தப் பொழுதினில் கேட்டேன்.

"இதோ என் இதயத்துக்கு பக்கமா சேப்டியா வச்சிருக்கேன் மாப்ளே"

"போடா.. வென்று... ஆம்பிளையப் பாத்துச் செருப்பாலே அடிப்பேங்கறா.. அவளுக்கு எழுதுன லெட்டர் அங்கே எதுக்கு ?"
நான் வலுக்கட்டாயமாக அந்த லெட்டரைப் பிடுங்கி சுக்கல் சுக்கலாக் கிழித்து கசக்கி காற்றில் பறக்க விட்டு சிரித்தேன்.
அவனும் போதையில் சிரித்தான் என்று தான் நினைக்கிறேன்.

அதற்கு பிறகு நான் என் தேர்வுகளில் தீவிரமாகக் கவனமானதில் எனக்கும் சிரீஷ்க்கும் ஒரு சின்ன இடைவெளி விழுந்தது.
ஒரு மூணு வாரம் கழிச்சு அவனை அதே தவக் கோலத்தில் அவன் வீட்டு மொட்டை மாடியில் மீண்டும் ஒரு இளம் மாலைப் பொழுதினில் சந்தித்தேன்.
எனக்கு ஒரளவிற்கு விவரம் எல்லாம் புரிஞ்சுப் போச்சு... ம்ஹம் எல்லாம் காதல் செய்த மாயமந்திரம்.
" என்னாலே அவளை மறக்க முடியல்லடா... நான் என்னச் செய்யுறது சொல்லு?"
நண்பனின் மனசு என் கண்ணிலும் நீர்க் கோர்த்தது.

" இன்னும் மூணு நாள்... அப்புறம் காலேஜ் முடிஞ்சுப் போயிடும்டா..
நான் அவளைக் காதலிச்சது அவ்ளுக்கு தெரியாமலே போயிடும்ன்னு நினைக்கும் போது தான் என் மனசுக்கு ரொம்பக் கஷ்ட்டமாயிருக்குடா... முதல்ல எங்கே அவ என்னை விட்டு விலகிடுவாளோன்னு பயந்தேன்... இப்போ நான் சொல்லாட்டியும் விலகத் தான் போறா.. ஒரு வேளை என் காதலை நான் அவக்கிட்டச் சொல்லி அவ என் காதலுக்கு ஓ,கே சொல்லிட்டா... அவ எங்கூடவே இருந்துடுவா இல்லையா?
அதனால நான் என் காதலைச் சொல்லணும்டா"

அவன் அப்படி பேசும் போது அவன் எல்லாத்தையும் மறந்து ஒரு ஆனந்த நிலைக்குப் போயிட்டான்.

ஓ.. ஓ ஒரு வேளை அது தான் காதல் மயக்கமோ... எனக்கு அது என்னன்னு தெரியல்ல...

ஆனா சிரீஷ்வோட மொத்த சந்தோஷமும் அந்த பொன்ணுகிட்ட்த் தான் இருக்குன்னு மட்டும் எனக்கு தெரிஞ்சது... என் நண்பனுக்கு அவன் சந்தோஷம் கிடைக்கணும்ன்னு விரும்புனேன்...

அதுக்கு மறுநாள்....

நண்பனின் காதலி - பகுதி 3

Friday, April 28, 2006

கதை 7:நண்பனின் காதலி (1)

"எதுக்கு இப்போ என்னை அவசரமா வரச் சொல்லுற? ... இன்னிக்கு புதன் கிழமைப்பா .. கிளைன்ட் கால் இருக்கு...புரிஞ்சுக்கோ மச்சி"

" எனக்கு உன் கூடப் பேசணும்... அவசரமாப் பேசணும்.... பிளடி ஹெல்... ஐ அம் இன் கிரைசிஸ் இடியட்"
செல்போனின் மறுமுனையில் என் ஆத்ம நண்பன் சிரீஷ் ஏறக்குறைய உயிர் போகும் அவசரத்தில் கத்தினான்.

"சிரீஷ் ரிலாக்ஸ்டா.... நானும் ஸ்கூல்.. காலேஜ் எல்லாம் முடிச்சு வருஷமாச்சு... நீ ஒரு குழ்ந்தைக்கு அப்பனாவும் ஆயாச்சு... சோ கூல் இட் ஆப் பட்டீ"
சிரீஷை எப்படியாவது அமைதிப்படுத்தி விட வேண்டும் என அதி தீவிரமான முயற்சியில் இறங்கி வழுக்கி விழுந்தேன்... பின்னே அவன் அடுத்துக் கேட்ட கேள்வி அப்படி....

"நட்புன்னா என்னான்னு தெரியுமா உனக்கு...? தேவான்னா என்னான்னா தெரியுமா உனக்கு அப்படின்னு அடிக்கடி தலைவர் டயலாக்க எடுத்து விட்டா மட்டும் பத்தாது... நண்பனுக்கு ஒண்ணுன்னா அப்படியே துடிச்சு கிளம்பி வரணும்.... இப்படி நண்பனைக் கெஞ்ச விட்டுட்டு முதலாளிக்குச் சொம்பு தூக்கிட்டுப் போகக் கூடாது... புரியுதா?"
கொஞ்சம் என்ன ரொம்பவும் ஒவராவேப் பேசிட்டு காதுல்ல அடிக்கற மாதிரி படக்குன்னு போனை வைச்சுட்டான் சிரீஷ்.

காபி மெஷின்ல்ல சூடா ஒரு கேப்பசின்னோ கப் எடுத்துட்டு தனியா போய் உட்கார்ந்தேன்.... ஜன்னல் வழியா என்னை தாலாட்டி சீராட்டி வளர்த்த சென்னை மாநகரம் தகதகன்னு மாலை வெயில்ல ஜொலிக்கறது தெரிஞ்சுது.

மனசு அப்படியே அதில்ல மயங்கிப் போச்சு....

ம்ம்ம் கதைப் படிக்கிற உங்களுக்கு ஒரு பிளாஷ் பேக் மூட் கொண்டு வரணும் இல்ல.. அதான் இந்த ஜன்னல் மேட்டர்....
கதை ரொம்ப சிறிசு தான்.... ஒரு இரண்டு வரி... கூட ஒரு நாலு வரி வரும்...

சிரீஷ் என் பள்ளித் தோழன் ... நாலாவதுல்ல இருந்து பன்னிரண்டாவது வரைக்கும் ஒண்ணாப் படிச்சோம்... அதுக்கு அப்புறம் அவன் எஞ்ஜினீயரிங் போனதும் நான் நுழைவுத் தேர்வில் கோலடித்து கிடைச்ச சீட்டில் விவேகாவில் கணக்கு படித்து .....
அவன் சீக்கிரமே மும்பைக்கு வேலையாகிப் போனது... நான் கணிதம் முடித்து நிர்வாகப் படிப்பில் இன்னொரு டிகிரி முடித்து அப்பா வாங்கி கொடுத்தக் பைக்கில் அவர் காசில் பெட்ரோலும் போட்டு வீதி வீதியாய் வேலைத் தேடி அலைந்ததும் வரலாற்று ஆசிரியர்களால் இருட்டிக்கப் பட்ட உண்மைகள்...

வாழ்க்கையின் வெவ்வேறு திசைகளில் நாங்கள் இருவரும் நகர்ந்தப் போதும் எங்களுக்குள் இருந்த நட்பு எங்க நெஞ்சாங்கூட்டை விட்டு நகரவில்லைன்னா பாருங்க...
அவன் வாழ்க்கையின் எக்கு தப்புக்கள் எனக்குள் புதைக்கப்பட்டதும்... என் வாழ்க்கையின் புனிதங்கள் அவன் மனத்தில் எரிக்கப்பட்டதும் சத்தியமாய் யாருக்கும் தெரியாது இனி யாருக்கும் தெரியப் போவதுமில்லை...அப்படி ஒரு நட்பு எங்களுக்குள்ளே....
அந்த நட்பு இன்றும் நீடிப்பதில் இருவருக்குமே சந்தோஷம்....

ஆனால் அன்றுப் போலவே இன்றும் சிர்ரிஷின் பிடிவாதம் தொடர்வதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தோஷம் இல்லைங்க....அவன் கிட்டே எவ்வளவு தான் எடுத்துச் சொல்லுறது.. கேட்க மாட்டான்... சின்ன சின்ன விஷயத்துக்கும் ஆகாயத்தும் பூமிக்கு தாவுவான்.. தவ்வுவான்.... நம்மளையும் சேத்து தவ்வ வைப்பான்... ஆனா சிரீஷ் சிர்ரீஷ் தான்...அவனுக்காக அவன் செய்யுற எல்லா இம்சையும் பொறுத்துக்கலாம்...

இதோ அவன் என்னைத் திட்டிட்டான்... ஆனா மனசு கேட்கல்ல... அவனுக்கு எதோ பிரச்சனை அதான் அப்படி பேசிட்டான்... நான் தான் போகணும்... போய என்னன்னு கேட்கணும்.

ஆனா இதே வார்த்தையை வேற எவனாவது பேசியிருந்தா அவ்வளவு தான்..... எப்படி பேச முடியும் நம்ம கதை நம்ம நட்புக்களுக்கு மட்டும் தானே தெரியும் ... அவங்களுக்கு தானே அந்த உரிமை இருக்கு....

"தேவ்... கிளைன்ட் ஆன் லைன்....உங்கிட்டே பேசணுமாம்...." புதுசா வேலைக்கு சேர்ந்திருந்த திருச்சிப் பொண்ணு சொன்னது பாதி காதில் விழுந்தது.....ஜஸ்ட் டெல் ஹிம்... ஐ வில் கால் பேக்...."
வழக்கமான கால். ஒரு நாள் விட்டா ஓரு ரோமத்துக்கும் சேதாரம் வராது.அரை நாள் விடுப்பில் கிளம்பினேன்.காரை நேராக அடையார் நோக்கி பறக்க விட்டேன்.
கார் ரேடியோவில்... வேட்டையாடு விளையாடு பாட்டு ஓடிக் கொண்டிருந்தது... சும்மாச் சொல்லக் கூடாது ஹாரிஸ் மியுசிக் நல்லாவே போட்டிருக்கான்ப்பா.

இந்திரா நகரில் அவன் வீட்டு வாசலில் காரை நிறுத்தினேன்.... என் நண்பனின் மூன்று வயது ஜூனியர் துவாஷ் துள்ளி வந்து என்னைக் கட்டிக்கொண்டான்... என் பாக்கெட்டில் அவனுக்காக ரெடிமேட்டாகக் காத்திருந்த டெம்டெஷன் சாக்லேட்டை எடுத்து அவனிடம் நீட்டினேன்.சிரீஷின் மனைவி சுனிதா சிரித்தப் படி வாசலுக்கு வந்தாள்.

"அண்ணா... அவனை நல்லாக் கெடுத்து வைங்க... எப்போப் பாரு சாக்லேட்.... "
"சின்னப் பையனுக்கு அது தான் கொடுக்க முடியும்..எங்க உன் சுவீட் ஸ்பெண்ட்?"
"மேலே ரூம்ல்ல... ஒரே டென்ஷன்... வேலையை விடப் போறாராம்... ஒரே புலம்பல்... என்னால கிட்டப் போக முடியல்ல காட்டுக் கத்தல் வேற. நீங்கத் தான் உங்க பிரண்ட்க்குச் சரி."

மொட்டை மாடியில் வாட்டர் டாங்க் மேல அந்த அகோர வெயில்ல கையை முட்டிக்கு மேலே மடக்கி வச்சுட்டு தலைக் குனிஞ்சு உட்கார்ந்திருந்தான். எனக்கு சுளுக்குன்னு சிரிப்பு வந்துடுச்சு.

இதே போஸ்ல்ல அவனை நான் ஸ்கூல் டேஸ்ல்லருந்து பாத்துட்டு இருக்கேன். சிரீஷ் இப்படி தவக்கோலம் பூண்டு இருக்கான்னா அவனுக்கு சீரியசாவே எதோ பிரச்சனைன்னு அர்த்தம். அதாவது அந்தப் பிரச்சனை அவனுக்கு சிரீய்ஸ்ன்னு அர்த்தம். சிரிப்பை அடக்கிட்டு.. மெதுவா அவன் பக்கம் போய் ஆஜர் கொடுத்தேன்.

"உன் வாய் வாக்குப் பலிச்சுடுச்சு. இப்போ எனக்கு வேற வழி இல்ல... வேலையை விடப் போறேன்.. உனக்கு சந்தோஷ்ம் தானே." படபடவென வெடித்து தள்ளினான்.

அவனைப் பேசவிட்டுக் கேட்பது தான் சிறந்ததுன்னு முடிவு பண்ணிகிட்டு அமைதியா நின்னேன். அவன் பாட்டுக்குப் புலம்பி தீர்த்தான்.
ஒரு 30 முழுசா அவன் புலம்பலைக் கேட்டும் அவன் பிரச்சனையின் மையப்புள்ளியை என்னால் நெருங்க முடியாது போகவே.... அவன் சட்டையைப் பிடித்து இழுத்து அவன் பேச்சை நிறுத்தினேன்.

"என் ஆபிஸ்ல்ல எனக்கு ப்ராப்ளம் இல்லன்னு நினைக்கிறீயா... DAMN IT.. EVERYBODY HAVE THEIR OWN PROBLEMS U *$%@%^"

அவன் மேலுக்கு கொஞ்சம் சாந்தம் அடைந்ததுப் போலிருந்தது.... அவனுக்குள் அலை அடித்தது என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

"இப்போ சொல்லு...WHAT IS YOUR PROBLEM?"
சட்டையைப் பிடித்திருந்த என் கையை விடுவிக்காமலே நின்றான் சிரீஷ். நானும் விடறதா இல்லை.
"ர ஞ் சனி..."
அவன் சேர்த்து தான் சொன்னான். எனக்கு தான் எக்கோ எபெக்டில் கேட்டது.
சட்டையை விட்டிட்டு சகஜ நிலைமைக்குத் திரும்புனேன்.

"யார் மாமா.. உன் காலேஜ் ஜீனியர்... அந்த கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரம் பிகரா...."

"கோடம்பாக்கத்துல்ல தான் இன்னும் இருக்காளான்னு எனக்கு தெரியாது.. இப்போ என் ஆபிஸ்ல்ல இருக்கா..."

"வாவ்... மீண்டுமொரு காதல் கதை... நீ மச்சக்காரன்டா மாப்பூ நடத்துடா" என்று அவனை ஏத்தி விட்டேன்.

"செருப்பாலேயே அடிப்பேன்... "

"மச்சி.. இது அவ டயலாக் மச்சி... நீ ஏன்டா மாத்தி பேசுற?"

"மவனே... எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்னை முழுசா மூணுவாட்டி வெட்டிப் போட்டாலும் தீராதுடா" சிரீஷ் சீறினான்.

"மச்சி... கூல் டவுண்... அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? விசாரிச்சீயா....?"

"அது இப்போ ரொம்ப முக்கியம்..."என்று அலறியவன் அடிக்குரலில் "இல்லைன்னு தான் நினைக்கிறேன்" என்று ராகம் போட்டான்.

"இல்லீயா... வெரி குட்... உனக்கு செகண்ட் இன்னிங்க்ஸ்க்கு வாய்ப்பு மச்சி" என்று அவனை மேலும் கிண்டிவிட்டேன்.

இது வரைப் படித்தவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியென சூழ்நிலைவிளங்கியிருக்கும்ன்னு நம்புறேன்.

இருந்தாலும் ஒரு சின்ன ரீகேப் ஓகேவா?

1998... நானும் சீரிஷ்ம் காலேஜ் படிச்ச டைம்... கைப்பு சொல்லுறாப்பல்ல எங்களுக்கு அப்போ வாலிப வயசு...கொஞ்சம் அழகான பொண்ணைப் பார்த்துட்டாலே உடனே நான் அவனை மச்சாங்கறதும்.. அவன் என்னை மாமாங்கற்தும் சகஜமானக் காலம்... இப்படி எங்களுக்குள் நாங்க எத்தனையோப் பொண்ணுங்களைக் கொடுத்து வாங்கி... அந்தப் பொண்ணுங்க வேற யார் கூடவோ போறதைப் பார்த்து உள்ளம் வீங்கிய அது ஒரு அழகிய கனாக் காலம்...

நாம் எல்லோரும் நம் வாழ்க்கையில் அப்படி ஒரு காலகட்டத்தைக் கட்டாயம் கடந்து வந்திருப்போம்.
சிரீஷ் வாழ்க்கையில் அப்படி ஒரு பூங்காற்றாய் புகுந்தவள் தான் ரஞ்சனி.... என் நண்பனின் காதலி.

"ஒகே சிரீஷ்... ஜோக்ஸ் அப்பார்ட்....இன்னும் அவ பழைய விஷயங்களை எல்லாம் ஞாபகம் வச்சுருப்பான்னு நினைக்கிறீயா..."
சுனிதாப் போட்டக் காபி செம ஸ்ட்ராங்க்... காபியைப் பருகியப் படி பிரச்சனையை அலச ஆரம்பித்தோம்.

"ம்ம்...ஞாபகம் இருக்குன்னு தான் நினைக்கிறேன்..."

"மச்சி.. காலேஜ் வாழ்க்கைங்கறது பட்டாம்பூச்சி தினங்கள்... யூ நோ இந்த மாதிரி சின்ன சின்ன குறும்புகள் எல்லாம் அதுல்ல சகஜம்....அப்போ அவ சின்னப் பொண்ணு ... மே பி 18... இப்போ அவ 28... அவளூக்கு இப்போ பக்குவம் இருக்கும் ...சோ I DONT THINK THERES ANY NEED FOR YOU TO BRING THE HOUSE DOWN"

"இல்ல.. நீ தப்பா புரிஞ்சுட்டு இருக்கே... நானும் அப்படித் தான் நினைச்சேன்...போன வாரம் என்னோட பாஸ் என்னைக் கூப்பிட்டு இந்தப் புது புராஜெக்ட் பத்தி பிரீப் பண்ணும் போது...என்னோட சந்தோஷத்துக்கு அளவே இல்ல... I THOUGHT MY LIFE IS MADE... எல்லாம் புராஜெக்ட் லீடா அவளைப் பார்க்கற வரைக்கும்...I AM NOT A MALE CHAVENIST... இதுக்கு முன்னாடி நான் லேடி பாஸ்கிட்டே ஓர்க் பண்ணியிருக்கேன்...இவளுக்கு என்னைப் பார்த்த உடனே அப்படி ஒரு கடுப்பு...."

"இருக்காதாப் பின்னே" இது என்னுடைய இடைச்செருகல்.

"என்ன இருக்காதேப் பின்னே நக்கல்... யூ நோ என்னை அவ எப்படிப் பார்த்தாத் தெரியுமா? அமெரிக்காகாரான் ஈராக்காரனைப் பாக்குற மாதிரியே பார்த்தாடா... எனக்கு அப்பவேப் புரிஞ்சுப் போச்சு... "

"DONT OVER REACT" இது நான்.

"இல்ல நான் ஓவர் ரிஆக்ட் பண்ணல்ல... அவளுக்கும் என்னப் பிடிக்கல்ல.. எனக்கு அது புரியுது"

"என்ன நடந்துச்சுன்னு விவரமாச் சொல்லுறீயா?"

"என் பாஸ் எல்லோரையும் அவளுக்கு அறிமுகம் செஞ்சு வச்சார்... நான் தான் கடைசி.. எல்லாருக்கும் சிரிச்சுகிட்டே கைக்கொடுத்து ஹாய் சொன்னவ என்னைப் பார்த்ததும் உதட்டை பிதுக்க்ட்டு வெறுமெ தலையை மட்டும் ஆட்டுனா.. அந்த உதட்டை அஷ்ட்டகோணலாப் பிதுக்குனதுக்குப் பேர் ஸ்மைலாம்... அதுப் பார்த்து நாலு பேரு உருகுறான்..."
எனக்கு சிரிப்பு வந்தது.

"என்னை என்ன நினைச்சுட்டான்னாத் தெரியல்ல... வந்த உடனே என் கேபினை மாத்திட்டா.. கேட்டா எதோ மேனஜ்மென்ட் ஸ்டெரஜின்னு எக்ஸ்க்யூஸ் கொடுக்குறா.. ஒரமா ஒதுக்கி ஒரு கேபின்.. அவ்க் கண்ணுல்லயே நான் படக் கூடாதாம் அதான் அப்படி ஒரு ஏற்பாடு.. I CAN UNDERSTAND ALL HER DAMN MOVES"
எனக்கு மேலும் சிரிப்பு வந்தது.

"இப்படி அவமானப் பட்டு அவகிட்ட வேலை செய்ய எனக்கு இஷ்ட்டம் இல்லை.. நான் பிரொபஷனல்.. வேலைக்காரன் எங்கேப் போனாலும் பொழைச்சுக்குவேன்டா.. I AM GOING TO RESIGN"

அவன் வார்த்தையே அவனை மடக்க உதவும்ன்னு நான் நினைக்க்வே இல்லை. ஆனா உதவியா ஆகிப்போச்சு.. நான் அதைச் சரியாப் பயன்படுத்த முடிவுப் பன்ணிட்டேன்.

"எங்கேப் போனாலும் நீ பொழைச்சுக்குவே அப்படிதானே?"

"அதில உனக்கென்ன சந்தேகம்...? "

"அப்படின்னா இங்கேயேப் பொழைச்சுக் காட்டுடா..."

அவன் விரித்த வலையில் அவனையே விழ வைத்தேன்.. அவன் கொஞ்சமும் எதிர்பார்க்காத அஸ்திரம் என்னிடமிருந்து புறப்பட்டது.. அவன் எதுவும் பேசவில்லை. அவன் யோசிக்கிறான் எனபது எனக்குப் புரிந்தது... நான் கொஞ்சம் நகர்ந்து எதிர்பக்கம் சென்று நின்றேன். மறுபடியும் ஒரு சின்ன பிளாஷ் பேக்...

1998 சிரீஷின் காதல் கதைத் தொடரும்...

நண்பனின் காதலி - பகுதி 2
நண்பனின் காதலி - பகுதி 3

Thursday, April 27, 2006

கவி 16: ஒரு முடிவின் கதை

அன்றொரு அந்திப் பொழுதினில்
அருகினில் நீயிருந்தாய்...
ஆசையில் நானிருந்தேன்...
விரல் பட்டது
வெட்கத்தை நீ உடுத்தினாய்..
விழி சுட்டது..
வெப்பத்தில் நான் எரிந்தேன்....
மல்லிகை வாசம்...
உன்னில் பூக்க...
இதழ் தேடினேன்
இதயம் திருடினாய்....
உன்னில் தொலைத்தது
உன்னில் தேட....
என் மொத்தமும்
உன்னில் சங்கமம்....
மார்பில் பூக்கோலங்கள்..
கண்ணீரால் இதய வாசல் தெளித்தாய்...
கையளவு உலகம்
அதில் நீயும் நானும் மட்டும்..
வார்த்தைகள் வழிவிட்டு நிற்க...
உயிரெழுத்தாய் நீயும்
மெய்யெழுத்தாய் நானும்
ஆய்தெழுத்தாய் நம் காதலும்...
உன்னில் புதையவா...
உன்னில் கரையவா...
மொழிகளுக்கு மவுனம் உடுத்தி...
வளைகளுக்கு வார்த்தைப்
பயிற்சி கொடுத்ததில்
கிடைத்தக் காயங்கள்
அன்பு பரிசு....
சுவாசத்தின் ஓசைகளில்
யாருமறியாக் கவிதைகள்
இயற்றினோம்...
கவிதைகளை...
அச்சுக் கோர்க்க...
ச்சீ வெட்கம்
வேண்டாம்....
இது நமக்கான கவிதை...
அந்தக் கணத்தில்
எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்
"வாழ்க்கை எவ்வளவு அழகானது?"
மீண்டும் விழி திறந்தாய்...
உன் கண்ணீர் இம்முறை
சுடவில்லை...
மாறாக குளிர்ந்தது.....
கரம் பற்றிய படி...
விரல் பேசிய படி...
உன் விழியில் நானும்...
என் விழியில் நீயும்...
அப்படியே கரைந்துப்
போயிருக்கக் கூடாதா?
ஆ....
ஆ...
ஆ..
அந்த இரவினைக் குடித்தக்
களிப்பில்
சிவந்த சூரியன்....
சுள்ளென முகத்தில் அரைய...
விழித்துக் கொண்டேன்...
என் நிர்வாணம்
என்னை நிந்தித்தது...
உதிர்ந்த மல்லிகையும்...
புகைந்த சிகரெட்டும்...
உடைந்த மதுக் கோப்பையும்...
கண்ணீர் மறந்தக் கண்களும்....
அத்தோடு...
ஜன்னலோரமாய்
என்றோ கிழிந்து
இன்னும் தொங்கும்
என் காதலும்....

Wednesday, April 12, 2006

கவி 15: ரகசியம்


உன்னைப் பற்றி
ஒரு கவிதை எழுதி
ரகசியமாய்
ஒளித்து வைத்திருந்தேன்
என் விழிகளுக்குள்...

பிரியும் நேரத்தில்
ரகசியம்
வெளியானது
நீ புரிந்துக் கொண்டாயா?
அது தெரியாது
எனக்கு..

எழுதிய கவிதை
இன்னும் விழிகளுக்குள்
பத்திரமாய்...

எனக்கானப் பொழுதுகளில்
உன் நினைவுகள்
நீள்கையில்
அந்தக் கவிதையை
இன்றும் வாசிக்கிறேன்
ரகசியமாய்.....

Wednesday, March 01, 2006

கவி 14: எனக்கொரு கனவு

எனக்கொரு
கனவு உண்டு

கல்லெறியப் பட்டுக்
காயப்பட்ட கனவு

உங்களால்
கேலிச் செய்யப்பட்டு
கண்ணீர் சிந்தும் கனவு

இருந்தும்...
அது
என் நம்பிக்கை

என் காயப்பட்டக் கனவுகளுக்கு
மருந்திடுவதே இப்போது எனக்கு
வாழ்க்கையாகிப் போனது

ஏனெனில்
எனக்குத் தெரியும்
என் கனவு
செத்துப் போன
மறுகணமே
நான் செத்துப் போவேன் என்று..

Friday, February 17, 2006

கதை 6: ஒரு அம்மாவின் டைரிக் குறிப்பு

என் பெயர் என்ன... கடந்து வந்து காலங்களில் நான் மறந்துப் போன எத்தனையோ விஷயங்களில் என் பெயரும் ஒன்று...
அவசியம் உங்களுக்கு என் பெயர் தெரிய வேண்டுமானால் கொஞ்சம் பொறுங்கள்...
என்னைப் பற்றி சொல்ல என்ன இருக்கு..? என் உலகம் மிகவும் சின்னது. அதில் நானும்...என் இரண்டு தேவதைகளும் அடக்கம்... மூத்தவள் பெயர் ரியா...அடுத்தவள் பெயர் லயா...(எனக்குப் பிடித்தப் பெயர்). மூத்தவளுக்கு வயது 7, அடுத்தவளுக்கு வயது 6...
ரியா என்னுடைய நாடக ராணி... தொட்டதற்க்கெல்லாம் அழுது அடம் பிடித்து சாதிக்கும் குணம் கொண்டவள்...(அவங்க அப்பா மாதிரி).
லயா நிதானமானவள்... நல்லா சிரிப்பா...வேண்டியது கிடைக்காதப் போதும் அவக் கிட்ட இருந்து அந்த சிரிப்பு மறையாது... உலகம் என்னைக் காயப்படுத்தும் போது எல்லாம் எனக்கு மருந்துப் போடுறது லயாவோடச் சிரிப்பு தான்.
இந்த இரண்டு தேவதைகளும் தான் என்னோட ராஜகுமாரன் என்னோட இல்லைங்கற என் ஏக்கத்தை தாங்க எனக்கு சக்தி கொடுக்கிறவங்க... நான் சொன்ன ராஜகுமாரன் எனக்கு மூணாவதாப் பொறந்த பையன்... அவன் பேர் அஷ்வத்.
அஷ்வத் மத்த குழந்தைகள் மாதிரி கிடையாது... இறைவன் எனக்குன்னு விஷேசமாப் படைச்சப் பரிசு அவன். அவனுக்கு மூளை வளர்ச்சி கிடையாதுன்னு உலகம் சொல்லுது. அவனை என்னோட வச்சுப் பார்த்துக்க என்னால முடியல்ல. ஆசை இருந்தும் வசதி பத்தல்ல. அவனுக்கு அதிகமானக் கவனம் தேவைப்பட்டுச்சு. எனக்கு நேரம் போதல்ல. அதான் மனசைக் கல்லாக்கிட்டு அவனை ஒரு இல்லத்துல்லச் சேர்த்துட்டேன். அங்கே அவனை நல்லாக் கவனிச்சுகிறாங்க... அவன் சந்தோஷமா இருக்கான்.

இப்போ அவன் கிட்டார் எல்லாம் வாசிக்கிறான். ரஹ்மான் பாட்டுப் போட்டாத் துள்ளிக் குதிக்கிறான். அவன் சந்தோஷத்தைப் பார்த்து என் மனசும் ஆறுதலடையுது. வாரத்தில்ல இரண்டு நாள் அவனைப் போய் பார்க்கிறேன். ஒரு இரண்டு மணி நேரமாவது அவனோட இருக்கிறேன்.

லயாவுக்கு அவன் மேல பாசம் ஜாஸ்தி. அஷ்வத்தை யாராவது தப்பாப் பேசிட்டா அவ முகத்திலிருந்து சிரிப்புக் காணாமல் போயிடும். மாசம் ஒரு தடவை அஷ்வத்தைப் பார்க்க ரியாவும், லயாவும் என் கூட வருவாங்க.
சம்பளத் தேதியை ஒட்டி அந்தச் சந்திப்பு நடக்கும்.

அஷ்வ்த்துக்கு அவனுக்கு பிடிச்ச ஏ.ஆர்.ரஹமான் சி.டி. ரியாவுக்கு டெம்டெஷன் சாக்லேட், லயாவுக்கு கோல்ட் பிஷ் இதெல்லாம் வாங்கப் பணம் வேணுமே, அந்தப் பணம் சம்பளத்து அன்னிக்குத் தான் கிடைக்கும். அந்த ஒரு நாள் நான் என்னையே மறந்துப் போயிடுவேன். என் குழ்ந்தைகளின் ச்ந்தோஷத்துக்கு முன்னாடி என் மனசு ரெக்கை முளைச்சுப் பறக்கும்....

மத்தப்படி என் வழக்கமான வாழ்க்கை,
காலை 5 மணிக்கு ஆரம்பிக்கும்... லேசாக் கால்களில் அலை வருட பீச்சல்ல ஒரு மணி நேரம் நடப்பேன்.
ஆறு மணிக்கு போர்வைக்குள்ளே ஒளிஞ்ச்சுட்டு இருக்க என் இரண்டு குட்டி தேவதைகளையும் அவங்க உள்ளங்காலை என் விரலால வருடி எழுப்புவேன்.
அவர்களைச் சோப்புப் போட்டுக் குளிக்க வச்சு... சீவி.. சிங்காரிச்சு...ஸ்கூலுக்கு தயார் செய்வேன்.
ரியாவுக்கு முன் நெத்தியிலே ஒரு இரண்டு முடி புரள்ற மாதிரி முடி வாரி விடணும் அப்போத் தான் அவளுக்கு ச்ந்தோஷம். அந்தச் சந்தோஷத்துல்ல பச்சக்ன்னு என் கன்னத்துல்ல அழுத்தி ஒரு முத்தம் கொடுப்பாப் பாருங்க.. அந்தச் சுகம் எனக்கே எனக்காக ஆண்டவன் படைச்சது.
லயா ரொம்பச் சுத்தம் பார்ப்பா.. போடுற உடுப்புல்ல சின்ன அழுக்கு இருந்தாலும் அவ பட்டு முகம் சுருங்கிப் போயிடும்...ரொம்ப் பார்த்துத் துணியைத் துவைக்கணும் அவளுக்கு. I simply love my little angels.

அப்புறம் அவங்க கைப் பிடிச்சுட்டு ஸ்கூல்லுக்குக் கூட்டிட்டுப் போவேன். லயாவும், ரியாவும் மாறி மாறி ரைம்ஸ் சொல்லுற அந்த அழகை நான் அணு அணுவா ரசிச்சு அனுபவிப்பேன்...அப்படி ஒரு ஆனந்தம்.... அதில் இருக்கும்.
அம்மா டாட்டான்னு சொல்லிட்டு ரெண்டும் கிளாஸ் பார்த்து குடுகுடுன்னு ஓடும்.
ரியா மட்டும் யாராவது குழந்தையை அவங்க அப்பாக் கூட்டிட்டு வந்து பைக்கில்ல இருந்து இறக்கி விடுறதைப் பார்த்தா கண்கள்ல்ல ஒரு தீராத ஏக்கத்தோட அப்படியே பார்த்துகிட்டே நின்னுடுவா.
என் இதயம் அந்த வினாடிகளில் அபபடியே சுக்கு நூறா உடைஞ்சுப் போகும். கஷ்ட்டப்பட்டு என்னைக் கட்டுப்படுத்திகிட்டு ரியா கிட்டேப் போவேன். அவ கண்ணைப் பார்த்து நிதானமா அவங்க அப்பா அவளை எவ்வளவு நேசிச்சாருங்கறதைச் சொல்லுவேன். Her Dad was the best in the world ன்னு அவகிட்டே சொல்லுவேன்.
சொல்லும் போதே சில சமயம் என் கண் எனக்கேத் தெரியாம கலங்கிடும். என் கண் கலங்குறது தெரிஞ்ச உடனே லயா என் பக்கமா வந்து நின்னுக்குவா. பெரிய மனுஷி மாதிரி என் தோளை அழுத்திப் பிடிச்சுக்குவா. அவளுக்கு எல்லாம் தெரியுமோன்னுக் கூட நான் நினைப்பேன்.
"ம்மா ஒண்ணுமில்ல.. எல்லாம் சரியாப் போயிடும்"ன்னு அவ வயசுக்குரிய அந்த மழலைக் குரலில் அவச் சொல்லும் போது என் மனசு அப்படியே நெகிழ்ந்து நிக்கும்.

இரண்டு பேரையும் ஸ்கூல்ல விட்டுட்டு வீட்டுக்கு வந்துக் குளிப்பேன்... ஷ்வர்ல்ல தண்ணியைத் திறந்து விட்டுட்டு மனசு ஓயர மட்டும் அழுவேன்.... என் குழந்தைகளின் மனக்காயங்களுக்கு மருந்தாய் நான் தரும் பொய்களை நினைத்து தேம்பி தேம்பி அழுவேன்.

அவன்... ஆம் என் குழந்தைகளின் தகப்பன்.... என் கடைக்குட்டி லயா என் வயிற்றில இருக்கும் போது ஒர் இரவு என்னை ஒரேடியா உதறிட்டுப் போனதை அவங்க கிட்ட நான் எப்படி சொல்லுவேன்....
ரியாவை அவன் ஒரு நாள் கூடத் தூக்கிக் கொஞ்சாத அந்த இரக்கமற்ற செயல்களை அந்த சின்ன உயிர்களுக்கு எப்படி விவரிப்பேன்..

அவன் செத்துப் போனான்... என் பிள்ளைகளுக்கும் எனக்கும் இருக்கும் வரை எந்த நிலையிலும் அவன் அன்பு காட்டவே இல்லை.... இது தான் உண்மை.... ஆனால்... இந்த உண்மைகளை நான் அவன் என்னிக்குச் செத்தானோ அன்னிக்கே அவனோடப் புதைச்சுட்டேன்.....

என் குழ்ந்தைகளுக்கு... ஒரு அன்பான தகப்பன் தேவை.. அதை என் பொய்கள் அவர்களுக்குக் கொடுக்கும்....

என்றாவது இந்தப் பொய்களுக்கு விடைக் கொடுக்கவேண்டி இருக்கும் அது வரை எனக்கும் என் டைரிக்கும் இந்தப் பொய்கள் சுமையாய் இருந்துவிட்டு போகிறது...

ஆங்...என் பெயரைத் தெரிஞ்சுக்குற ஆவல்ல இதுவரைக்கும் பொறுமையாப் படிச்சவங்களுக்கு என் பெயர் சொல்லணும் இல்ல... என் பெயர் அம்மா... இரண்டு குட்டித் தேவதைகளின் அம்மா....கூடவே ஒரு ராஜகுமாரனுக்கும்

கவி 13: உதிர்ந்த ரோஜா



வானத்தில் அந்தியின்
நாணக் கோலங்கள்
அந்தப் பொழுதில்
அரை நிலாவின்
அலங்கார வெளிச்சத்தில்
முழு நிலாவாய்
பக்கத்தில் நீயிருந்தாய்..

மறக்க முடியவில்லை..

நெஞ்சாம் கூட்டில்
பொன் முகம் புதைத்து
பொல பொலவென நீ
வடித்தக் கண்ணீர்..
இன்றும்
இமை மூடினால்
கண்ணுக்குள்
குளம் கட்டுதே...
பூவிரல் தூரிகையால்
என் மார்பின் மத்தியில்
நீ எழுதிய எழுத்து
உளியாய் உள்ளுக்குள்ளே
இறங்கி நிற்குதே...

மறக்க முடியவில்லை..

மரணம் என்னை
மொத்தமாய் விழுங்கும் வரை
மறக்கவும் முடியாத
நிமிடங்கள்...

அந்தி மாலையும்
அரும்பிய இரவும்
ஆரத் தழுவிய
ஆசை நிமிடங்கள்
வானம் வெறித்து
பார்க்க...
மொழி மறந்து
மௌனம் உடையாக
வார்த்தைகள் தொலைந்து
விழிகளில் தேட..
இதழ்கள் வழியே
இதயங்கள் இணைக்கும்
முயற்சியில்
நீயும் நானும்...
உன் மூச்சுகாற்று
உள்ளத்தைஉலையிலிட..
உள்ளும் புறமும்
உன் வாசம் படர..
உணர்வுகள் இடர...
ஒரு வினாடி
மின்னலாய்..
உன் பார்வை
உரசிப் போக....
இடை நெளிந்தாய்...
இருகரம் நடுவினில்
இடைவெளி
ஒரு கரம் உனது...
மறுகரம் எனது....
என் பெருமூச்சுகள்
என் அனுமதியின்றி
உன்னிடம் விடைக் கோரி நிற்க
என் பார்வையில் வெறுமை...

சூரியக் கூட்டுக்கு கதிர்கள்
திரும்பிக் கொண்டிருக்க
அன்று நான்
கண்டதும் உணர்ந்ததும்
இரண்டு அஸ்தமனங்கள்

நீ போனத் திசையில்
மணலில் ஓவியங்கள்
வெற்று பார்வை
நிறைக்கும்
உன் பாதச்சுவடுகள்...
விடியலுக்கு முன்பொழுது
இருட்டில் நானும்
எனக்கு துணையாக
உன் கூந்தல் விட்டுச் சென்ற
உதிர்ந்த ரோஜாவும்....

Wednesday, February 08, 2006

கவி 12:முகங்கள்



(இந்தக் கவிதை என் தாத்தாவின் நினைவாக எழுதப் பட்டது...புகைப்படங்களில் நான் காணக் கிடைத்த அந்த மனித அடையாளங்கள் என் தாத்தா என்பதை நான் நம்புவதற்கே எனக்கு நீண்ட கால அவகாசம் தேவைப்பட்டது...)

வாழ்ந்தும் வாழும் முதியவர்களுக்கு இந்தக் கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்...

ஒற்றை மனிதனுக்கு
எத்தனை முகங்கள்
தாய் பாலில் கழுவியெடுத்தப்
பச்சிளம் பூமுகம்
மழலையின் திரவியம் பூசிய
சிறு பிள்ளை முகம்
பருவத்தின் வாசலில்
பருக்கள் பூத்த முகம்
பால்யத்தைத் தொலைத்துத்
தடுமாறி தவித்த முகம்
இளமையில்
இரும்பு முகம்
இப்படி
எத்தனை முகங்கள்
மணமாலைக்குள்
மணக்கும் முகம்
சிரிப்பைச் சூடிய
சிங்கார முகம்
வாரிசை
வரவேற்ற பெருமை முகம்

முகம் மாற்றி
முகம் மாற்றி
முகவரி கிடைத்ததில்
முகத்திலும் வரிகள்
வாழ்க்கையில் ஏறுமுகம்
வாழ்ந்ததில் வற்றிப் போன முகம்
இறுகிப் போன
இயந்திர முகம்
இற்றுப் போன
இனறைய முகம்

ஒற்றை மனிதனுக்கு
எத்தனை முகங்கள்
தாத்தாவின் புகைப்படங்களைத்
தூசுத் தட்டிப் பார்த்து முடித்தேன்...

Monday, February 06, 2006

கவி11:ஒரு கிராமத்துக் காதல்...

கார்கில் போர் செய்திகள் வந்துக் கொண்டிருந்த நேரத்தில் எழுதிய கவிதை... கொஞ்சம் பெரியக் கவிதை...



ஒசந்தப் பனை மரத்தடியிலே...
ஒத்த உசுரா நிக்குறேனே சின்னப்புள்ள..

பட்டாளம்ப் போன மாமன்
பட்டாடை கொண்டு வருவான் என்று..
பாதையோரம் விழி பதிச்சு..
பச்சைக் கிளி ஒண்ணு காத்து நிக்குது....

கால்சட்டைப் போட்ட வயசுல்ல...
காதல் கடிதாசுக் கொடுத்து...
பாவி மனசைக் கலைச்சவரே...
பஞ்ச வர்ணமாப் பதிஞ்சவரே..
நெஞ்சமெல்லாம் பொங்குதய்யா
நித்தம் நித்தம் உன் நினைப்பில்...

கண்ணு ரெண்டும் நவாப்பழம்
கன்னம் ரெண்டும் ஆப்பிள் பழம்
கடிச்சுத் தின்னவா கண்மணியே
காதோரம் காதல் சொன்னவரே
உள்ளத்தின் இடுக்கில் எல்லாம்
உன் குரல் தான் கேட்குதய்யா...
உதட்டோடு விரலை உரசி...
உள்ளுக்குள் தீ வைத்தீரே..
இடுப்பின் இடைவெளியில்...
இதயத்தை சொருகிவிட்டுப் போனீரே..
மாராப்பை விலக்காம..
மனசை மட்டும் களவாடிப் போனீரே..
முகத்தோரம் குத்துதய்யா..
முள் முள்ளா உன் மீசை முடி
மூஞ்சுக்குள்ளே சுத்துதய்யா உன்
மூச்சுக் காத்தின் அனல் வீச்சு...
தலை முடிக்கு நாளாச்சு
தண்ணி வச்சு..
கோதிவிட்ட உன் கைவாசம்
கலந்திருக்கே என் கேசத்திலே..
ஓடக் கரையிலே வச்சு..
ஒத்தை முத்தம் நீ கேட்க..
வெக்கத்திலே நான் ஓட...
விழ போனவளைத் தாங்கி நீ பிடிக்க...
இப்பவும் செவந்துப் போகுது அந்த இடம்...
இனிப்பான் உன் நினைப்பு தான் காரணம்.

போருக்குப் போனவரே
போகையிலே சொன்னதென்ன?
காத்திரு செல்லக் கிளி...
கல்யாண வேளை வரும்..
கழுத்துக்கு தாலியும் மாலையும்
கையோடு கொண்டு வருவேன் நிச்சயமா...

சொன்னதைச் செய்யும் சொக்கத்தங்கமே...
சொந்தமெல்லாம் எதிர்பார்த்திருக்க...
ஊரு மொத்தமும் கூடியிருக்க
உனக்காக மட்டுமே
உசுரைப் புடிச்சிகிட்டு நான் இருக்க..
வானம் மழையைப் பூவாத் தூவ..
வந்தாயே ராசா...
மார் மேலத் தேசக்கொடி தாங்கி..
மாலையோட மதுரை வீரனாய்..
மண்ணுக்காகப் போராடிச் செயிச்சுப்புட்டு
மரணத்தேவன் கிட்டேத் தோத்தீராம்
சொன்னாங்க...
சொல்லிக்கிட்டாங்க..
தூரப்பயணம்...
துணை விட்டுப் போனவரே...

இங்கே...இப்போ....
ஓசந்தப் பனைமரத்தடியிலே...
ஒத்த உசுரா நிக்குறேனே சின்னப்புள்ள...

Thursday, February 02, 2006

கவி10: காதல் மாசம்



டீக் கடைகளில்
தினமும் புகையும்...
நண்பர்களின் சிகரெட்டுக்கு
ஊடே என் காதல்...

தங்கையின் கேலியிலும்...
விவரமறிந்த சித்தியின்
கிண்டலிலும்...
வெட்கப்பட்டுப் புன்னகைக்கும்..
என் காதல்....

வானொலிப் பெட்டியில்
நேயர் விருப்பமாய்
வாசிக்கப்படும்...
சின்னத்திரையில்
குறுஞ்செய்தியாய்
குறுக்கும் நெடுக்கும் ஓடும்...
என் காதல்...

மொட்டை மாடி
கட்டைச் சுவரில்...
சாயங்கால
கடற்கரை மணலில்...
தமிழ் பேசும்
என் காதல்...

எங்கும் எதிலும்...
திசைகள் எட்டிலும்...
கண்கள் தாண்டியும்...
ஆழங்கள் உயரங்கள் என
எல்லாவற்றிலும்...
என் காதல்

அவள் மனசு...

அது ஒன்றைத் தவிர...