Tuesday, July 17, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 6

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 5

"லேய் எல்லாம் சரி... மோட்டார் ரூம் கதை ஊருக்குள்ளே அரசல் புரசலா அடிபடுற விசயம் தான்... கண்டிப்பா நம்ம நம்ம ஊர் மக்களா இருக்காது.. வெளியூர்காரனாத் தான் இருக்கும்... இங்கே யாருக்கும் அப்படி தைரியம் வராதுலேய்.." இஸ்ரா விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தான்.

"நம்ம ஊர்ல்ல யார்ட்டல்லே யமஹா பைக் இருக்கு?"

"யார்ட்டயேயும் இல்ல..சும்மாக் குழப்பிட்டுத் திரியாதல்ல வெங்கலம்..மேட்ச்க்கு உனக்கு ஷூ ரெடி பண்ணிட்டேன்...இந்தா இன்னும் பத்து நிமிசத்துல்ல காபியைக் குடிச்சுட்டுக் கிளம்பு"
இஸ்ரா விளையாட தோதான உடையை மாட்டிகிட்டு ஷூவையும் மாட்டிகிட்டு காபி வாங்க அடுப்பாங்கரை பக்கம் போனான்.


நான் இன்னும் யோசனையில் ஆழ்ந்தப்படியே இருந்தேன்...ஒரு வழியா எதோ நினைப்பிலே ஷூவையும் மாட்டிகிட்டு இஸ்ரா நீட்டுனக் காபியையும் குடிச்சுப்புட்டு அவன் கூட விளையாடக் கிளம்புனேன்..

போற வழியெல்லாம் எங்கிட்டாவது யமஹாவோ... கருப்புச் சட்டையோ கண்ணுல்லப் படுதான்னு கண்ணை அகலமாத் திறந்துப் பாத்துகிட்டே போனேன். எந்தப் பக்கமும் நான் தேடுன எந்தப் பொருளும் கண்ணுல்ல சிக்கவே இல்ல.. ஒவ்வொரு தெருவா போய் டீம் மொத்தத்தையும் கூட்டிகிட்டு கிரவுண்ட் பார்த்துப் போனோம்..

"லேய் மக்கா நில்லுங்கடா..." பாம்பே போலீஸ்காரரின் சிங்கக்குரல் எங்களைத் தடுத்தது.. நிறுத்தியது. பாம்பே போலீஸ்காரருன்னு சொல்லுறதை விட ரேச்சல் அப்பான்னா உங்களூக்கு சட்டுன்னு புரிஞ்சிடும்.

"இது தான் புட் பால் டீமா.. யார்லே கேப்டன் இதுல்ல?"

"எட்வின் அண்ணன்..அவிய நேராக் கிரவுண்ட்க்கு வர்றேன்ன்னு சொல்லிட்டாவ.." இஸ்ரா தான் பதில் சொன்னான்.

"லேய் நீ தாவீது மகனா.. தூத்துக்குடியிலேத் தானே இருக்கா.. உங்க அத்தைக்கு ஒரு மகன் இருக்கான்லா மெட்ராஸ்காரன் அவனும் டீம்ல்ல இருக்கானா? எங்கேலே அவன்?"

என்னைப் பத்திக் கேக்குறார்ன்னு தெரிஞ்சதும் எனக்கு அடி வயிரில் லேசா ஒரு சின்னப் பிரளயமே நடந்து முடிஞ்சுப் போச்சு. நான் மெல்ல தலையை நீட்டி அவர் முன்னால் இஸ்ராவுக்கு நெருக்கமாய் போய் நின்னேன்.

"உங்க அப்பன் தாவீதும் நானும் சின்னக்குளம் புட் பால் டீமுக்கு ஆட இறங்குனோம்ன்னா செயிக்கமாத் திரும்ப மாட்டோம்.. இப்போ மவன் நீ.. அவன் இடத்தைப் பிடிச்சிருக்கா.. எனக்குப் பொட்டப்புள்ளயாப் போச்சி.. இல்லன்னா இறக்கி விளையாட விட்டராலாம்... " என்று சொல்லிவிட்டுச் சத்தம் போட்டு சிரித்தார்

"இப்போ இறக்கிவிட்டாலும் அவ நல்லாவே ஆடுவா.." வாய் வரை வந்த வார்த்தைகளை சொல்லாம விழுங்கிக்கொண்டேன்.

'சரி.. மூணு வருசமா தொடர்ந்து அந்தப் பிரகாசபுரம்காரன்வட்ட மிதிபட்டுட்டுல்லா கிடக்கியளாம்டே.. சின்ன்க்குளத்து இளவட்ட்ங்களுக்கு விளையாட்டு வரல்லயா இல்ல சொனைக் கெட்டுப் போச்சாடே..' என்று கேட்டு விட்டு எங்கள் பதிலுக்காக எங்களைப் பார்த்தார்.

"சொணை எல்லாம் கெடல்ல...விளையாடுறவங்க வினைச் சரி இல்ல..விளையாடத் தெரிஞ்சவனை இறக்கி விட்டாத் தானே விளையாட முடியும்.. சும்மா மெப்புக்கு ஓடத் தெரியாதவனை எல்லாம் ஆட விட்டா அலறி அடிப்பட்டுகிட்டுத் தான் வர்றணும்"

"இதான் உன் அத்தை மோவனா.. அவன் அம்மாவை மாதிரியாத் துடுக்காப் பேசுதான்.. ரேச்சல் உன்னியப் பத்தி நிறையச் சொல்லியிருக்கா..சரியாத் தான் இருக்கு, ஆமா உன்னிய ஆட்டத்துல்ல இறக்க மாட்டேன்னு யார் சொன்னது?" என்று சிரிச்சிகிட்டேக் கேட்டார்.

"மாமா சோமா இருக்கியளா...?"

"வாய்யா எட்வின்..உன்னியப் பத்தி பையக் குத்தம் சொல்லுதான்.. ஆட்டத்துல்ல இவனுவளைச் சேக்காமா ஒதுக்கி வைக்கியாமே ஏம்ப்பா?

"மாமா பைய இன்னும் பள்ளியூடத்துல்ல பத்தாப்பே முடிக்கல்ல...ஆனா ஆடணும்ங்கான்... பிரகாசபுரத்துல்ல எல்லாம் காலேஜ் முடிச்சப் பயல்வ.. இங்க நம்ம செட்ல்ல எல்லாம் சின்னப்பயல்வ... நான்..ஆல்டன்..ஜெபா..குரூஸ்.. இப்படி கொஞ்சம் வேர் தான் அவன்வ டீம்க்கு சரியான குரூப்...என்னப் பண்ண? எனக்கும் கால்ல அடிப் பட்டுருச்சு..இந்த வருசமும் கஷ்ட்டம் தான்.."

"பத்தாப்பு படிக்கப் பையன் பந்தடிச்சா பந்து கோல்குள்ளே போவாதோ... உங்க வயசு வரைக்கும் வளந்து தான் பந்தடிக்க வர்றணுமோ... மூணு வருசமா நாங்களும் தான் பாக்கோம்ல்ல.. உங்க குரூப் கும்பி கிழிஞ்சு வந்த நிக்கக் கதையை..." நான் கொஞ்சம் காட்டமாகவே பேசிவிட்டேன். எட்வின் அண்ணனுக்கு முகம் சிவந்து விட்டது.

"எலேய் மெட்ராஸ்காரா பேச்சு எல்லாம் உஙக ஊர் பொழ்ப்புக்கு வேணும்ன்னா சரியா வரும்... இந்தப் பக்கம் எல்லாம் வெத்துப் பேச்சு வெத்தலைச் சுண்ணாம்புக்குக் கூட ஆவாதுலேய்.." ரொம்ப விறைப்பும் முறைப்பும் சேர்த்துகிட்டு என்னைப் பாத்து எட்வின் அண்ணனிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுந்துச்சு.

'சரி மக்கா.. இந்த வருசம் போட்டியிலே நீங்க செயிச்சா.. ஆளுக்கு அம்பது ரூவாத் தாரேன்... என்ன?"
வார்த்தை வளர்வதைத் தடுக்க ரேச்சல் அப்பா இடையில் குறுக்கிட்டு தன் அறிவிப்பை வெளியிட்டார். அப்படித் தான் நான் நினைக்கிறேன்.

வார்த்தைகளின் வேக வீச்சு அப்போதைக்கு அங்கே கட்டுப்பட்டாலும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் பரிமாறுன பார்வையிலே அனல் சும்மா கொந்தளிச்சதுன்னு சொல்லணும். எட்வின் அண்ணன் (ம்ஹ்ம் இனிமே என்ன நொண்ணன் வேண்டிக்கிடக்கு..) எட்வின் என்னைப் பார்த்தப் பார்வையில் எனக்கு எல்லாச் சேதியும் திருத்தமா விளங்கிப் போச்சு. வில்லங்கத்தை மொத்தமா விலை பேசி வாங்கியாச்சுன்னு புரிஞ்சுப் போச்சு... எட்வின் என்னை மொறைப்பதை நிறுத்தவில்லை.. ஒரு கட்டத்தில் நானும் அடப் போடாங்க என்று திருப்பி மொறைக்க ஆரம்பிச்சேன்...

இப்படி ஒரு வரலாற்று மதிப்பு மிக்க பனிப்போர் துவங்கியதை கொஞ்சமும் உணராம மொத்த டீமும் ரேச்சல் அப்பாவின் அறிவிப்பைக் கேட்டு ஆர்வத்தில் ஆனந்தக் கூத்தாடிக்கொண்டிருந்தது.

எட்வின் நடந்துப் போவதையேப் பார்த்துக்கொண்டு நான் நின்றேன்... சந்துக்குள் போன எட்வினுக்குப் பின்னால் பைக் உறூமும் சத்தம் கேட்டது.. சந்தேகமின்றி அது யமஹா பைக் சத்தமே தான்.. வேற எதையும் யோசிக்காமல் நான் தெறிச்சுக் குதிச்சி சந்தை நோக்கி ஓடினேன்.

அங்கே கருப்புச் சட்டையைக் கழுத்தில் கட்டிக்கொண்டு மோட்டார் ரூம் அருகே நான் பார்த்த அதே யமஹா பைக்ல்ல ஏறி எட்வின் பறப்பதை நான் பார்த்தேன்...

"அடப்பாவி நீ தானா அவன்....உன்னியக் கண்டுபிடிச்சாச்சு உங்கூட இருந்த ராசாத்தியையும் கண்டுபிடிச்சுட்டேன்னு வை.. இருக்கட்டும் என் ராசாக்கட்டி... என்னையவா கட்டம் கட்டி மட்டம் தட்டுற..மெட்ராஸ் காரன் வாயைத் தொறந்துப் பேசுனா நீ முடிஞ்சுப் போயிருவடா என் எட்வின் அண்ணா"

அன்னிக்குச் சாயந்திரம் பிராக்டீஸ்க்கு எட்வின் வந்திருந்தாலும் விளையாடல்ல, நாங்க எல்லாம் விளையாடுனோம்... நான் நல்லா விளையாடியும் எட்வின் வேணும்ன்னு என்னை மட்டம் தட்டுனான். ஒரு கட்டத்துல்ல எனக்கு ஆத்திரம் பொங்கிருச்சு... பந்தை ஓங்கி அவன் மேல அடிக்கப் போயிட்டேன்.....இஸ்ரா வந்து நிறுத்திட்டான். எட்வினும் அதைக் கவனிக்கல்ல.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் எட்வின் என்னைக் எகடியம் பண்னிகிட்டு இருந்தான்.. நான் பொறுத்துப் போயிட்டு இருந்தேன்..காரணமே பெரிசா இல்லாம எனக்கும் எட்வினுக்கு பகை வளந்துகிட்டேப் போச்சு... சின்னப் பையன்னா அவ்வளவு இளக்காரமா.. உன்னை இந்த லீவு முடிஞ்சு ஊருக்குப் போறதுக்குள்ளேப் போட்டுக் கொடுக்காமப் போறதுல்லன்னு எனக்கு நானே சபதமெல்லாம் போட்டுகிட்டேன்.

எட்வின் பத்தி நான் கண்டுபிடிச்ச பரம ரகசியத்தை இன்னும் இஸ்ரா கிட்டச் சொல்லல்ல. அதுக்குச் சம்யம வாய்க்கல்ல. இஸ்ரா கிரவுண்டுக்கு வந்ததிலே இருந்து கிட்டத் தட்ட பிலேவின் மறுபிறப்பு ரேஞ்ச்சுக்கு படம் காட்டிகிட்டு இருந்தான்.

திடீரென்னு விளையாடிகிட்டு இருந்த அத்தனைப் பயலும் ஆட்டத்தை நிறுத்திட்டு திபு திபுன்னு கிரவுண்ட் ஓட ஒரு முக்குக்கு போய் குத்த வச்சுட்டாங்க...

அன்னிக்குத் தான் முதல் தடவையா பிராக்டீஸ் போயிருந்தாலே அதுக்கானக் காரணம் எனக்குப் புரியல்ல.. இஸ்ரா பிராக்டீஸ் போகும் நேரம் நான் பெருமபாலும் இழுத்து மூடிகிட்டு தூங்கிருவேன்... அழைக்காத இடத்துக்கு சும்மா வேடிக்கைப் பாக்கக் கூடப் போறதுல்லன்னு அவ்வளவு வைராக்கியம் எனக்கு..

நானும் இஸ்ராவும் தான் கடைசியாப் போனோம்...

எல்லாருக்கும் கொறிக்கறதுக்கு பலகாரம் வந்து இருந்துச்சு... அதிரசம், நெய் முறுக்கு, மஸ்கோத அல்வா, ஓமப்பொடி, ரவா லட்டு, விவிக்கா, முந்திரிக் கொத்துன்னு வகை வகையா வந்து இருந்துச்சு...ஆசையா எடுக்கப் போனவன்
"எலேய் நல்லாத் தின்னுப்புட்டு மல்லாந்துராதீய... விளையாடணும்... நாளைக்கு ஆட்டத்துல்ல செயிச்சா இதை மாதிரி இன்னும் ரெண்டு மடங்கு உண்டுல்லா" என்று எட்வின் சொன்னதைக் கேட்டு அப்படியே நகர்ந்து போய் சொம்புல்லருந்த தண்ணியை மடக் மடக்குன்னு குடிக்க ஆரம்பிச்சேன்..

தண்ணியைக் குடிச்சுட்டு தலையை இறக்கிப் பார்த்தா.. எதிரில் ரேச்சல் நிக்குறா...

அப்படியே மின்னல் கண்ணுக்குள்ளே வந்து வெட்டுற மாதிரி சிரிப்பு... சடைப் பின்னிச் சும்மா இரண்டு மொழம் பிச்சிப் பூவை வச்சுகிட்டு... சன்னமா முகத்துக்கு பவுடர் போட்டும் போடாமலும்.. கையிலே நாலு கல் வளையல்... காதுல்ல சின்னதா வைரக்கல வச்ச தொங்கட்டான் குலுங்குது.. அவளைப் பார்த்துகிட்டே குடிச்சத் தண்ணிய விழுங்க மறந்துட்டு வாயைத் தொறந்தப் படியே நின்னுட்டேன்.. ஆங் அந்த முன் நெத்தியிலே சுருளா சுருளாக் குவிஞ்ச முடியை வாயை வச்சு காத்து ஊதி கலைச்சு விட்டு கண் சிமிட்டினாப் பாருங்க... குடிச்சத் தண்ணி பொறை ஏறி இரும ஆரம்பிச்சேட்டேன்,

"ம்ஹூம் உங்க ஊர் பசங்க எல்லாம் நல்லா வாயைப் பொளந்துகிட்டு சைட் அடிக்க மட்டும் தாண்டா லாயக்கு...." என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

"யார் இப்போ சைட் அடிச்சா?"

"அப்போ இப்போ இவ்வளவு நேரம் .. நான் இங்கே வந்து அஞ்சு நிமிசம் ஆச்சு... இந்த அஞ்சு நிமிசமும் நீ என்ன நாலு கொயர் நோட்டு நிறைய டைப்பா அடிச்ச?"

"அது நான் உன்னை இப்படிப் பார்த்ததே இல்லையா அதான் கொஞ்சம் அதிர்ந்து நின்னூட்டேன்"

சுளுக்கெனச் சிரித்தவள்.." ஏன் இப்போ எனக்கு என்ன ஆயிருச்சுன்னு அதிர்ந்துட்டே?"

"அது நீ பொண்ணு மாதிரி எல்லாம் ... அது தான் தாவணி எல்லாம் போட்டுகிட்டு... எங்க ஊர் பொண்ணு மாதிரி தலை எல்லாம் வாரி.. பூ எல்லாம் வச்சு..." என்ன என்னவோ சொல்ல முயன்று உளற ஆரம்பிச்சேன்.

"அதாவது.. அன்னிக்கு சொன்னீயே .. பொண்ணுன்னா.. அப்படின்னு ஒரு டயலாக் அது மாதிரி இப்போ நான் இருக்கேனா?" லேசா வெட்கப்பட்ட மாதிரி இருந்தாள். அவள் ஏற்கனவே ரோஜாப் பூ கலர்.. இப்போ சிவப்பு ரோஜாக் கலருக்கு அவள் முகம் மாறியது.

"ம்ம்ம் " என்று நான் தலையசைக்க.. அவள் தாவணியின் நுனியெடுத்து முகம் மறைத்து வெட்கத்தை ரொம்பவே உறுதி செய்தாள்.

ரேச்சல் முகம் மூடிய நீலக் கலர் தாவணியின் நுனி கிழிந்திருந்தது என் கண்ணில் பளிச்செனப்பட்டது. அதைப் பார்த்த நான் சித்தம் தடுமாறி நின்ற அதே வேளையில்
அங்கே யமஹா பைக்ல்ல சீறி வந்த எட்வின் பைக்கை ஒரு முறுக்கு முறுக்கி...

"ரேச்சல் வாப் போலாம்.... நேரமாச்சுல்லா" என்றது இடிச் சத்தத்தை விடவும் பலமாய் என் காதுல்ல விழ்ந்துச்சு. தாவணியை விரல் நுனியாலே பிடிச்சுச் சுத்திகிட்டே ரேச்சலும் பைக்கில் ஏறப் போனா.

கிழிந்த நீலக் கலர் தாவணி, யமஹா பைக், எட்வின் எல்லாமாய் சேர்ந்து என்னை முறுக்கியது... எட்வின் வண்டியை இன்னும் முறுக்கினான்.
வண்டி சீறியதை விட எனக்குள் எதோ ஒன்று எக்குத் தப்பாய் சீறியது..ரேச்சல் மெதுவாய் நடந்துப் போய் வண்டியின் பின்னால் ஏறி கொண்டாள்.

அவ்வளவு தான்.. அதற்கு மேலும் என்னால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை...ஆன மட்டுக்கும் ஆவேசம் கொண்டு பைக்கைப் போய் மறிச்சு நின்னுகிட்டேன்..உள்ளுக்குள்ளே உறுமுன மனத்தின் ஓசையை வார்த்தைகளாய் வெடிச்சுத் தள்ள ஆரம்பிச்சேன்..

"எங்கேப் போறீங்க... மோட்டார் ரூமுக்கா....ச்சீ... வெக்கமா இல்ல..."நான் இப்படிச் சொல்லக் கேட்டதும் எட்வின் கைச் சட்டென்று வண்டியில் இருந்து விடுபட வண்டி நின்று போனது.

ஆனால் எட்வின் எந்த மறுப்பும் சொல்லாதது எனக்கு அந்த நிலையிலும் ஆச்சரியம் அளித்தது. என் கோவத்தை மேலும் கிளறிவிட்டது.எட்வினை விட்டு விட்டு பின்னால் ரேச்சலை எட்டிப் பார்த்தேன்.. அவள் முகத்தைப் பார்க்க சுத்தமாய் திராணியற்று அவள் தலை தூக்கவும் நிலத்தைப் பாத்தேன்.

"உனக்கு என்னக் காட்டுப்பாதையிலே பம்பாய் பசங்க செய்யறதச் செய்ய இங்கே ஒரு ஆள் கிடைச்சுட்டானா....? அதுக்குத் தானே நீ ஆசைப் பட்ட... நான் பாத்தேன் எலலா இழவையும் பார்த்தேன்.... உங்க அசிங்கம் எல்லாத்தையும் பாத்துத் தொலைச்சேன்.... ச்சீ..த்தூ....' கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவன் போல கத்தினேன்.

விளையாடிக்கொண்டிருந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி இதெல்லாம் நடந்துக் கொண்டிருந்தது. இதற்குள் பலகாரம் சாப்பிட்டப் பல பேரும் கலைந்துப் போயிருந்தார்கள்... எட்வின் .. ரேச்சல்.. நான் மூவரும் மட்டும் மீதமிருந்தோம்....நான் போட்ட சத்தம் கேட்டு இஸ்ராவும் வந்துச் சேர்ந்தான்..

"இன்னும் ஏன் நிக்குறீங்க... போங்க.. போய்யா அவளை மோட்டார் ரூமுக்குக் கூட்டிட்டுப் போ... " என்று நான் முழுசாய் சொல்லி முடிக்கும் முன் என் கன்னத்தில் அது வரை நான் அறிந்திராத வலியைத் தர்ற மாதிரி ஒரு அறை விழுந்தது...காதுக்குள்ளே வண்டு வந்து கும்மி அடிக்கிறாப்பல்ல ஒரு எபெக்ட் ஆயிருச்சு.

வலியின் தீவிரம் என் நரம்பு மண்டலங்களில் வேகமாய் பரவிக்கொண்டிருந்தது...சில வினாடிகளுக்கு நடப்பது எதையும் என்னாலே கிரகிக்கக் கூட முடியாம தரையிலே உக்காந்துட்டேன்... லேசாத் தெளிஞ்சுப் பாத்தப் போது எட்வின் மவுனமாய் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டிருப்பது தெரிந்தது... அவன் தலைக் கவுந்துக் கிடந்தது.

வண்டி கிளம்பியது...வண்டியில் ரேச்சல் இருந்தாள் என் கண்ணில் இருந்து வண்டியும் ரேச்சலும் மெல்ல மெல்ல மறைஞ்சாங்க. அதே சமயம் என் கண்களில் கண்னீர் கட்டுப்ப்டாமல் ஓட ஆரம்பித்தது...

தரையில் கிடந்த என் மீது இஸ்ராவின் நிழல் நீண்டு கிடந்தது...

"நாளைக்கு மேட்ச் மட்டும் இல்லன்னா நீ பேசுன்ன பேச்சுக்கு உன்னிய இங்கேயே வெட்டிப் போட்டிருப்பேன்டா" பைக் மறைந்த பின் அங்கு நிலவிய கடும் மவுனத்தை அதிரும் வார்த்தைகளால் உடைச்சுப் போட்டான் இஸ்ரா.

பைக் போனத் தடத்தையே வெறித்துப் பார்த்தப் படி கையை முழங்காலில் குவித்து நான் உட்கார்ந்திருந்தேன்... சின்னக்குளத்தில் சாய்ங்காலச் சூரியன் சத்தமின்றி குளத்திற்குள் இறம்ங்கிக் கொண்டிருந்தது...

என் மீது படிஞ்சிருந்தப் புழுதியை எல்லாம் உதறி விட்டுக்கொண்டு கண்ணில் வழிந்த கண்ணீரை இன்னொரு கையை வச்சுத் துடைச்சிகிட்டுகடும் வெறி வந்தவனாய் எழும்பி நின்று எட்டு ஊருக்கும் கேட்கும் குரலில் நான் அலறினேன்...

"என்னை அடிச்சது எவன்டாஆஆஆஆஆஆஆஆஆ??"

விடுமுறையின் கடைசி நாள் பொழுது விடிய இன்னும் சரியாய் 12 மணி நேரம் மீதமிருந்தது..அந்த 12 மணி நேரத்துக்குப் பின்... தொடரும்

Monday, July 16, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 5

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 4


இன்னும் இரண்டு நாள் தான் மூணாவது நாள் மெட்ராஸ்க்கு ரயில் ஏற வேண்டியது தான்..

அன்னிக்கு காலையிலே வீட்டுக்கு முன்னாடியிருந்த வேப்பம் மரத்துல்ல இருந்த குச்சியை வச்சு (குச்சிக்கு மேல கோல்கேட் பேஸ்டும் வச்சுத் தான்) பல் விளக்கிட்டு இருக்கும் போது தான் இஸ்ரா வந்து என் கிட்ட அந்த விசயத்தைச் சொன்னான்.. விசயம் ஒண்ணுமில்லங்க.. எல்லாம் விளையாட்டு விவகாரம் தான்..

"எட்வின் அண்ணனுக்கு கால்ல சரியான அடிடா.. நாளைக்கு அவர் மேட்ச்ல்ல ஆடுறது சந்தேகம் தான்..வேற ஆளுக்கு எங்கேயும் போக முடியாது...உம் பேரை நான் தான் சொன்னேன்.. எடவின் அண்ணனும் ஒத்துக்கிட்டாவ.. எனக்காக வந்து விளையாடுலே..."

நான் பல் விளக்குவதில் தீவிரமாக் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

"மூணு வருசமா பிரகாசபுரத்துக்காரன்ட்ட தோத்துகிட்டு இருக்கோம்... இந்த மொறையாவது செயிக்கணும்ன்னுப் பாக்கோம்...லேய்.. நீ மெட்ராஸ்காரனாப் போனாலும் சின்னக்குளம் உனக்கும் சொந்த ஊர்ங்கறதா மறந்துராதே..."

எனக்கு சுள்ளென்று கோபம் தலைக்கேறிருச்சு.

"போன வருசம்.. மேட்ச் வச்சப்போ .. வந்து எவ்வளவு கெஞ்சியிருப்பேன்..உங்க எட்வின் நொண்ணேன் தானே நாலு பேர் பாக்க நக்கலடிச்சு நாணப்படுத்தி அனுப்புனாவ.. ஏன் இந்த் வருசமும் ஆரம்பத்துல்ல எல்லாம் கண்டுகிடவும் இல்ல.. கூப்பிடவுமில்ல... இப்போ டீம் நொண்டி அடிச்சவுடனே.. ஊர்... உறவு எல்லாத்தையும் சொல்லி வந்து நிக்குறீயளோ? போங்கடா... நீங்களூம்...."

"100 ரூபா பந்தயப் பணம்... நீ ஆடுனா உன் பங்கு ரெண்டு மடங்கு... கிட்டத் தட்ட 10 ரூபா வரும்...அது மட்டுமில்லாம செயிச்சா அன்னிக்கு ராத்திரி பனங்கள்ளும் உண்டு.... என்னச் சொல்லுத..?"

இஸ்ரா வேற எதுக்கும் இவன் ஒத்து வர மாட்டான் என நினைத்தானோ என்னவோ நேராகவே வியாபாரத்திற்கு வந்தான். எனக்கும் வியாபாரம் பிடிச்சுப் போச்சு.. பட்டுன்னு ஒத்துக்கிட்டா கொஞ்சம் கெத்து கொறஞ்சிரும் என யோசித்தேன்,

"இஸ்ரா.. அவிய எல்லாரும் என்னிய அசிங்கப்படுத்துனதையும் மறந்து மன்னிச்சி நான் விளையாட வார்ரேன்னா அது உனக்காக மட்டும் தான் வேற எதுக்காவும் இல்ல....நீ வந்து இவ்வளவு தூரம் பேசியிருக்கப் பார் அதுக்காக மட்டும் தான்... வேற எதுக்காகவும் இல்ல..." மீண்டும் ஒரு முறை அழுத்திச் சொன்னேன்.

"இன்னிக்கு சாயங்காலம் ஸ்கூல் கிரவுண்ட்ல்ல பிராக்டீஸ் இருக்கு வந்துரு.. உனக்கு ஷூ எல்லாம் நான் ஏற்பாடு பண்ணிடுறேன்.. நீ ஒழுங்கா வந்துச் சேர் அது போதும்."
இஸ்ரா மேட்ச்க்கான மிச்ச ஏற்பாடுகளைக் கவ்னிக்க கிளம்பிவிட்டான்.

எனக்கு சிறு வயசுல்ல இருந்தே கால்பந்தாட்டம்ன்னா ரொம்ப பிடிக்கும். எங்கப்பா வழியாக எனக்கு வந்த் ஆர்வம் அதுன்னு நினைக்கிறேன்.. மரடோனான்னா நமக்கு அப்படி ஒரு பாசம்ங்க.. என்ன ஒரு வேகம்.. என்ன ஒரு வீரம்.. விளையாட்டுன்னா அது கால்பந்தாட்டம் தான்... அப்படின்னு ஒரு எண்ணம் நமக்கு.. அந்த மாதிரி ஒரு எண்ணம் எனக்குள்ளே அழுத்தமா நிலைக்குறதுக்கு இன்னொரு காரணம் வருசந்தோறும் எங்கச் சின்னக்குளத்துல்ல நடந்துகிட்டு வர்ற விடுமுறை கால்பந்துப் போட்டி தான்..சின்ன வயசுல்ல இருந்து அந்த போட்டியை வருசம் தவறாம நான் பாத்துட்டு வந்துருக்கேன்.

ஒவ்வொரு வருச மே மாசம்மும், சரியா விடுமுறை முடியும் நேரம் சின்னக்குளத்துக்கும் அதுக்குப் பக்கத்துல்ல இருக்க பிர்காசபுரம்ங்கற ஊருக்கும் கால்பந்தாட்டப் போட்டி நடக்கும்.. சும்மா ஊரே ஒண்ணுக் கூடிருவாங்க்.. இந்தியா பாகிஸ்தான் ரேஞ்சுக்கு 90 நிமிசமும் கிரவுண்ட்ல்ல சூடு பறக்கும்.. மூஞ்சு மூக்கு எல்லாம் பேந்துப் போற அளவுக்கு விவகாரமா ஆட்டம் பட்டயக் கிளப்பும்.

அந்த விடுமுறை கால்பந்துப் போட்டிங்கறது ஒரு மானப்பிரச்சனை..ஊர் பெரியவர்கள் இந்தப் போட்டியை வெளிப்படையா ஆதரிக்கறதில்ல.. இருந்தாலும் பயல்வ ஜெயிக்கணும்ங்கற ஆசையைக் காட்டாம இருக்கறதும் இல்ல..

"எலேய் லீவுக்குன்னு வந்துபுட்டு எதுக்குலேய் இப்படி பந்தடிச்சிகிட்டு சாகுதீய... ஒழுக்கமா இந்தப் போட்டியை எல்லாம் நிறுத்துங்கலேய்" எங்கப் பாட்டியை மாதிரி தாய்குலங்களுக்கு இந்த் ஆட்டம் எப்போதுமே பிடிப்பதில்லை.. ஆனால் எங்களுக்கு அது ஒரு வீர விளையாட்டு.. ஒவ்வொரு விடுமுறையும் ஊருக்கு எங்களைப் போகச் சொல்லி வற்புறுத்தும் முக்கிய காரணங்களில் இந்தக் கால்பந்தாட்டமும் ஒன்று...

அப்புறம் நானும் ஒண்ணும் சும்மா காலபந்தை டிவியிலே பாத்து சத்தம் போடுற ஆள் இல்ல.. எங்க ஸ்கூல் டீம்க்கு ஸ்டைரக்கர்.. சும்மாக் கிரவுண்ட்ல்ல இறங்கிட்டோம்ன்னா நிலவரம் கலவரமா மாறும் வரைக்கும் ஓயமாட்டோம்ல்லா..

போன வருசம் எட்வின் அண்ணன்..(அவர் தான் சின்னக்குளம் கால்பந்து டீம்க்கு போன முணு வருசமாக் கேப்டன்) என்னியச் சின்னப் பையன்னு சொல்லி சேத்துக்காம கழிச்சு வைச்சது எனக்குப் பெருத்த அவமானமாப் போயிருச்சு... ஆனா இந்த வ்ருசம் அந்த எட்வின் அண்ணன் இடத்துல்ல நான் ஆடப் போறேன்.. இது தான் விதிங்கறதா.... இந்த வருசம் பிரகாசப் புரத்துக்காரன்வ முட்டி கெண்டைக் கால்ன்னு ஏறி மிதிச்சாவ்து செயிச்சு சின்னக்குளம் வரலாற்றிலே என் பேரைப் பதிச்சுரணும்டா.. எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்..

பஸ் ஸ்டாப் திண்ணையிலே உக்காந்து யோசிச்சிகிட்டே இருந்தேன்.. உச்சிப் பொழுது ஆயிருச்சு.. வயிர் பசி வேற உயிரை கிள்ளிகிட்டு இருந்துச்சு...பதனீர் வாங்கி கொஞ்சம் போல் குடித்து விட்டு மீண்டும் வீட்டைப் பார்த்து நடந்தேன்...

அந்த நேரம் சல்லென்று வேகமாய் பைக் ஒண்ணு வேகமாய என்னைத் தாண்டிப் போனது. போன வேகத்தில் சரட்ன்னு காட்டுப்பாதையில் இறங்கியது... அது யார்டா நம்ம ஊர்ல்ல பைக் எல்லாம் வச்சிருக்கது.. அதுவும் உச்சி நேரத்துல்ல காட்டுப் பாதைக்குள்ளே போறது...பைக் அந்தப் பாதையில் போகவே முடியாதே... பாதையிலே கிடக்க முள்ல்ல டயர் சிக்குன்னா அந்துப் போயிருமேப் போனவன் பொழப்பு..

பதனீரை தொண்டைக் குழிக்குள்ளே குலுங்க விட்டு ஓட்டமும் நடையும் காட்டுப்பாதைப் பக்கம் போனேன். டயர் தடம் பாத்துக்கிட்டே நடந்தேன்.. ஒரு அம்பது அடி தூரம் போயிருப்பேன்.. பைக் அங்கே ஒரு பனை மரத்து மேல சாய்த்து நிப்பாட்டப்பட்டிருந்தது.

சுற்றிலும் யாரையும் காணவில்லை... நான் பைக் பக்கம் போனேன். குனிஞ்சு டயரைச் சரி பார்த்தேன்.. டயருக்கு எந்த சேதாரமும் இல்ல... வந்தவன் அவசரத்துக்கு எங்கியாவது ஒதுங்கியிருப்பானோ...அத்துப்புடுங்குன வேகத்துல்ல இல்ல பாய்ந்து வந்தான்.. சத்தம் கொடுக்க நினைத்து அடக்கிக் கொண்டேன்.. சரி.. நம்ம வேலையைப் பார்ப்போம் என் திரும்பியவனை சற்று தொலைவில் இருந்து கேட்ட கிசுகிசுப்பான பேச்சு சத்தம் தடுத்து நிறுத்தியது...

"அஹா..மொட்டை வெயில்ல மெரீனாப் பீச்சுல்ல நடக்குற விசயம் இங்கேயும் நடக்குதா..."

மெதுவா சத்தம் வந்த பக்கம் அடியெடுத்து வச்சவன்.. ஒரு கணம் தயங்கி நின்னேன்.. இதை எல்லாம் தனியாப் போய் பார்த்தா எதாவது சேதாரம் வருமான்னு யோசிச்சேன்.. துணைக்கு இஸ்ரா இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்..எதாவது எக்குத் தப்பாப் போயிருச்சுன்னா எபப்டியாவது தப்பிக்க வழிச் சொல்லிருவான்..

அவனைப் போய் கூட்டிட்டு வரலாம்ன்னா..அது வரைக்கு காட்சி நடக்குமான்னுத் தெரியல்ல..சரி வருவது வரட்டும் அப்படின்னு சத்தம் வந்த இடம் நோக்கி அடி மேல் அடி வைத்து பூனை மாதிரி நகர்ந்தேன்.. வழக்கமாய் வேலை செய்யும் நம்ம ஏழாவது அறிவு சொன்னப் படி ஒரு முன்னெச்சரிக்கையாய் பைக் டயர்ல்ல காத்தைப் புடுங்கிட்டேன்... அங்கே நடப்பதை நான் பாக்க.. அதை அவன் பாக்க.. அப்புறம் பைக் எடுத்து அவன் துரத்த இந்த வில்லங்கம் எல்லாம் வேண்டாம்ன்னு தான் அப்படி ஒரு ஏற்பாடு..

இங்கே ஒரு மோட்டார் ரூமே இருக்கா... மண்டி கிடந்த புதரை ஒதுக்கி எட்டிப் பார்த்தேன்... மோட்டார் ரூமில் ஒரு பெண் குரலும் ஆண் குரலும் கேட்டது..

ஆண் மட்டும் தான் பேசினான்.. பெண் 'ம்' கொட்டுவதும்.. ச்சீ சொல்லுவதுமாய் இருந்தாள்.. பேச்சு ரொம்பச் சன்னமாப் போயிட்டு இருந்துச்சு..

வெறும் பேச்சு தானா.. இதுக்காடா இங்கே வந்தீங்க.. வெறும் பையல்களா... மனத்திற்குள் நானேச் சொல்லிகிட்டேன்.

எப்படியாவது உள்ளே யார் இருக்கறதுன்னுப் பாத்துரலாம்ன்னு பார்த்தா ஒண்ணும் முடியல்ல மோட்டார் ரூம் கதவு மூடியிருந்தது.

ஆணும் பெண்ணும் முதுகு காட்டியப்படி இருந்தனர்.. அதுவும் சுவத்துல்ல இருந்தச் சின்ன ஓட்டை வழியாப் பார்த்ததில்ல எதுவும் தெளிவாக தெரியவில்லை.. ஆண் போட்டிருந்த கருப்பு சட்டை ஒரளவுக்கு தெரிந்தது. பெண் அவன் மடியில் படுத்து இருந்ததால் அவளைப் பற்றிய் எதுவும் சரியாகத் தெரியவில்லை... அவள் தலை மட்டும் லேசாகத் தெரிந்தது...

முழுசாப் பதினைஞ்சு நிமிசம் காத்திருந்தும் ஒண்ணும் நடக்கவில்லை... பதனீர் குடிச்சது வெளியே வர்றேன்னு தந்தி அடிச்சுச் சொல்லிகிட்டு இருந்தது.. அடக்க மாட்டாமல் அருவியாய் பாதையோரத்தை ஈரப்படுத்த்க் கிளம்பி... செயலும் ஆற்ற துவங்கிய நேரம்...

"எலேய்...இங்கே என்னலே பண்ணுதா?"
பக்கத்து வீட்டு பென்னி அண்ணன் குரல்... நாசரேத் போயிட்டு டிவிஸ் 50ல் திரும்பிக் கொண்டிருந்தார்.

வீட்டுக்குத் தானேப் போறா... அவர் குரல் உயர்த்தி பேசிக் கொண்டிருந்தார். என் பார்வை என் செயலில் பாதியும் மோட்டார் ரூமில் மீதியுமாய் அலைக்கழிந்துக் கொண்டிருந்தது.
மோட்டார் ரூம் பக்கம் என் பார்வைப் போவதைப் பார்த்த பென்னி அண்ணன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்தார். வேட்டியை ஏத்திக் கட்டிக் கொண்டு மோட்டார் ரூம் பக்கம் நடந்தார்.

நான் ஆர்வக்கோளாறில் பாதியிலே என் கடமையினை நிறுத்திவிட்டு பென்னி அண்ணன் பின்னால் நடந்தேன்..

"ஏய் யார்ல்லே அது மோட்டார் ரூம்லே இந்த நேரத்துல்ல.... போன மாசமே உங்களைப் பிடிக்கும் போது சாணியைக் கரைச்சுத் தலையிலே ஊத்தி ஊருக்குள்ளே ஊர்வலம் விட்டிருந்தா விளங்கிப் போயிருப்பீயே.. போனாப் போகுதுன்னு விட்டா.. இங்கிட்டு குடித்தனமா நடத்துறீய... நாத்தம் பிடிச்ச்ப் பயல்வளா?" கையில் ஒரு உருட்டுக் கட்டையை எடுத்துக் கொண்டார்

"ஆகா இது பல நாளா நடக்குற கூத்துப் போல இருக்கே.. நாசரேத் போய் படம் பாத்ததுக்கு இங்கிட்டு வந்திருந்தா டிக்கெட் இல்லாமலே ஓசியிலே படம் பாத்துருக்கலாம் போல இருக்கே.."

நான் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே பென்னி அண்ணன்.. மோட்டார் ரூம் கதவை ஓங்கி உதைத்து உள்ளேப் போனார்.. அண்ணனுக்கு பின்னால் நானும் போய் நின்னேன்.. உள்ளே யாரும் இல்லை.. அண்ணனின் டிவிஎஸ் சத்தம் கேட்ட ஓடனேயே மக்கள் தெறிச்சுட்டாங்கப் போலிருக்குன்னு நினைச்சிகிட்டேன்..

பென்னி அண்ணன் சுத்தி முத்திப் பாத்துட்டு..
"அடுத்த மொறை சிக்கட்டும் சுவத்துல்ல வச்சு மூஞ்சைத் தேச்சுரமாட்டேன்" என்று கருவிக்கொண்டார்.

அவர்கள் மீது இருந்த கவனம் இப்போ என் பக்கம் திரும்பியது..

"ஆமா நீ என்னலேய் இந்தப் பக்கம் பண்ணுதா?" என்னை முழு சந்தேகத்தோடுக் கேட்டாவ.

"அதுவா வீட்டுல்ல நேரம் போவல்ல... இந்தா இந்தப் பக்கம் ஒரு முசல் ஒண்ணு ஓடுச்சு.. கவணை வச்சு அடிக்கலாம்ன்னு வந்தேன்... அது இந்த மோட்டார் ரூம் பக்கம் வந்துருச்சு... அதைத் தொரத்திட்டு வந்த வேகத்தில்ல எனக்கு ஒண்ணுக்கும் வந்துச்சு... அதான் அந்த ரூமைப் பாத்துகிட்டு நீங்க வரும் போது...." என்று இழுத்தேன்..

நான் விட்ட கதை ஓரளவு நம்பும் படி இருந்ததால் பென்னி அண்ணனும் நம்பிட்டாவன்னுத் தான் சொல்லணும்...
'முயல் கிடக்கட்டும்.. இந்தப் பக்கம் எல்லாம் இப்படி திரியாதே.. இது சரியான இடம் இல்லலேய்.. வா என் கூட ஏறு வண்டில்ல "

மோட்டார் ரூம் விட்டு வெளியேறும் போது தான் பார்த்தேன்.. ஜன்னல் ஓரம் கிழிந்து தொங்கிய நீல நிற தாவணியின் நுனியை..பென்னி அண்ணன் அதைப் பார்க்கவில்லை.

"அடப் பாவிகளா அந்த சின்ன ஜன்னல் வழியா எப்படிடா வெளியேப் போனீங்க" எனக்கு நானே கேட்டுக்கிட்டேன்.

பென்னி அண்ணன் வண்டியில் ஏறி வீட்டுக்குக் கிளம்பினோம்...

"லேய்.. நீ இந்த வருசம் டீம்ல்ல இருக்காப் போலிருக்கு..."

"உங்களுக்கு எப்படி தெரியும்?"

"எட்வின் தான் சொன்னான்.. அவன் என் கிளாஸ் மேட்ல்லா.. அருமையான ஸ்ட்ரைக்கர் அவன்.. சவத்துப் பைய கால்ல அடியாம்ல்லா.. அதான் உன்னியச் சேத்ததாச் சொன்னான்... அவனுக்கு உன்னியச் சேக்கத்துல்ல விருப்பமே இல்ல.."

அதான் எனக்குத் தெரியுமே.. மனசுக்குள்ளேச் சொன்னாலும் வெளிக்கு வெறும் 'உம் ' கொட்டிக் கொண்டேன்.

"அந்தப் பிரகாசபுரம் டீம் மொத்தமும் எருமை மாட்டு பயல்வ... காட்டு ஆட்டம் தான் ஆடுவான்வ... உன்னைய அவன்வக் கூட ஆட விடுறது கோழிக் குஞ்சை மத யானைக்கூட்டத்துக்குள்ளே விடுற மாதிரின்னு சொல்லி வருத்தப்பட்டான் எட்வின்.. ஒருக்கா நீ மெட்ராஸ்ல்ல ஆடுன மேட்சை எட்வினும் பாத்துருக்கானாம்.. எதோ பீட்ஸ் கிரவுண்டாம்ல்லா.. எட்வின் மெட்ராஸ்ல்ல தானே போர்ட் ட்ரஸ்ட்ல்ல வேலைப் பாக்கான்.. உனக்குத் தெரியும்ல்லா.. உன் மேட்ச்ல்ல நீ ஆடுனதைப் பாத்தானாம்... பைய ஆடுவான் அதைப் பத்தி எல்லாம் பிரச்சனையில்ல.. சின்னப் பைய அந்த காட்டான்கிட்ட அடிகிடி வாங்கிரப்பிடாதுடேன்னு சொல்லிகிட்டு இருந்தான்"

பென்னி அண்ணன் பேசி முடிக்கவும் வீடு வந்து சேரவும் சரியாக இருந்தது.

"சரி என்ன அடி தாங்குவீயால்லே.." பென்னி அண்ணன் மறுபடியும் சிரித்துக்கொண்டேக் கேட்டாவ.

பென்னி அண்ணன் கேள்விக்கு நான் பதில் சொல்லும் முன் என்னைக் கடந்துப் போன பைக் மீது என் கவனம் பதிந்தது. மோட்டார் ரூம் அருகே பாத்த அதே பைக்..

அப்புறம் பைக் ஓட்டிட்டு போனவன் போட்டிருந்த சட்டையின் கலரும் கருப்பு...

ஆகா வில்லங்கம் வில்லேஜ்க்குள்ளேயே தான் இருக்கா.... இஸ்ராவை உடனேப் பார்க்க வேண்டும் என முடிவு செய்துக் கொண்டேன்.

விடுமுறை முடியப் போவதுங்கோ...

Thursday, July 12, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 4

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 3

"டேய்.. என்ன கேசட்டுடா இது?" இஸ்ரா என் கையில் இருந்த பெயர் எழுதப்படாத 90 டி.டி.கே கேசட் கவரைப் பார்த்துக் கேட்டான்.

"இஸ்ரா இது பாப் மியூசிக்.. மைக்கேல் ஜாக்ஸன் பாட்டு..மெட்ராஸ்ல்ல அம்பது ரூவாக் கொடுத்து ரெக்கார்ட் பண்ணி வச்சுருக்கேன்... வீட்டுக்குத் தெரியாது."

இதை வச்சு இந்த சின்னக்குளத்தை என்னலேய் பண்ணப் போறா?" இஸ்ரா மிரட்சியுடன் கேட்டான்.

"பாம்பேகாரிக்கு எங் கெத்தையும் காட்டணும்ல்லா... நாங்களும் இங்கிலீஸ் பாட்டு எல்லாம் கேப்போம்ன்னு சொல்லணும்ல்லா"

"எலேய் நம்ம வீட்டுல்ல வேதப் பாட்டைத் தவிர வேற பாட்டு போட்டா வெளுத்துருவாவலே.. இப்பவே சொல்லுதேன் எனக்கு இது சரியாப் படல்லே"

"வேதப்பாட்டைத் தவிர வேற பாட்டுப் போட்டா வெளுத்துருவாவங்கறது எங்களுக்கும் தெரியும்ல்லா..இதை இங்கிலீஷ் வேதப் பாட்டுன்னு கதை விட்டுருவோம்ல்லா"

"வெளக்கெண்ணெய்..பாட்டி அத்தை எங்கம்மாவைக் கூட ஒண்ணுக்கு மூணு தடவ அடிச்சுச் சொன்னா நம்பிருவாவ.. உங்க அப்பாவும் எங்க அப்பாவையும் ஏமாத்த முடியாதுல்லேய்... இப்படி கூத்துப் பாட்டைக் கூரையிலே போடுதான்னு தெரிஞ்சா தோலியை உரிச்சுருவாவ.. அதோட நம்மச் சோலி முடிஞ்சுன்னு நினைச்சுக்க.."

""எலேய் இஸ்ரா.. அதை எல்லாம் நாங்க யோசிக்கமலாக் காரியத்துல்ல இறங்குவோம் மதியம் உங்கப்பாவும் எங்கப்பாவும் தூத்துக்குடி டவுணுக்குப் போறாவளாம்.. 2 மணி ரத்னாவுக்கு..அவிய வர்றதுக்கு ராத்திரி ஆயிரும்..தாத்தா எதோ வேலைன்னு பிரகாசபுரம் பஞ்சாயத்து ஆபிஸ்க்குப் போறாவ..வீட்டுல்ல பொம்பளையல் மட்டும் தான் இருப்பாவ..இது இங்கிலீஸ் வேதப் பாட்டுன்னு சொல்லிட்டா அவ்வளவு பேரும் நம்பிருவாவ.. பக்தியா பாப் கேப்பாவ..பிரச்சனை இல்லை"

"சம்மர் லீவு சாப்பாட்டுக்குச் சேதாரம் ஆகாம இருந்தாச் சரிஆனாலும் நீ சாமிதி படப் போறான்னு எனக்குப் படுதுல்லே"

"எலேய் பயந்தா அந்தப் பாம்பேக்காரி போற போக்குல்ல அவ பாவாடைய என் கையிலேக் கொடுத்துக் கெட்டிக்கச் சொன்னாலும் சொல்லிருவா.. அதுன்னால முடிவு பண்ணிட்டோம்ல்லா பாப் மியூசிக்கைச் சும்மாக் கேக்கபிடாது மக்கா.. கெத்தாக் கேக்கணும்.."

மாமா பொன் போல பொத்தி வைத்துப் பாதுகாத்து வரும் சோனி டேப் ரிக்கார்டரை எடுத்து மொட்டை மாடியிலே ரெடி பண்ணிகிட்டோம். கரண்ட் கனெக்ஷன் வேலை எல்லாம் இஸ்ரா அருமையாச் செஞ்சு முடிச்சான். வெயில் காலம் தான்னாலும் ஓங்கி வளர்ந்த வேப்ப மர நிழல் குளிர்ச்சியா இருந்துச்சு.

கண்ணுல்ல கூலிங்க் கிளாஸ் மாட்டிகிட்டு சட்டையை பனியன் தெரிய திறந்துவிட்டுகிட்டு.. இஸ்ராவையும் நம்ம கெட் அப்க்கு மாத்திவிட்டு..

2 மணி ரத்னா ஊர் எல்லையைக் கடக்கக் காத்திருந்தோம்...

அந்தக் கேப்பிலே..அன்னிக்கு காலையில் எனக்கும் ரேச்சலுக்கும் நடுவில் நடந்த நிகழ்ச்சி மீண்டும் மீண்டும் என் மனதில் ரி வைண்ட் பட்டன் அழுத்தாமலே ஓடிக்கொண்டிருந்தது.

ரேச்சல் கொடுத்த கேக்கின் சுவை நாக்குல்ல இருந்து கரைவதற்குள் அவளுக்கு எதாவது கிப்ட் கொடுக்கணும்ன்னு முடிவு பண்ணிகிட்டு நான் ரூம்ல்ல குறுக்கும் நெடுக்கும் ந்டந்துகிட்டு இருந்தப்போ இஸ்ரா பொட்டியிலே இருந்த அந்தப் பொருள் என் கண்ணுல்லப் பட்டுச்சு...

பாழாப் போன என் பொருளாதார சூழ்நிலை.. என்னைக் கையேந்தச் சொல்லிச்சு.. ஆனா நம்ம புத்தி இறைவனிடம் மட்டும் தான் கையேந்தணும் இருக்கவன் கிட்ட இருந்து எடுத்துக்கணும்ன்னு எக்குத் தப்பாச் சொல்லிக்கொடுத்துச்சு...ரேச்சலுக்கு ஒரு அழகான கிரிஸ்டல் கீ செயின் கிப்ட் ரெடி..

கிளம்பும் போது..மேசையிலே தின்னவேலி இருட்டுக் கடை அல்வாப் பொட்டலம் ஒண்ணு.. மொத நாள் தாத்தாச் சொல்லிவிட்டு பக்கத்து வீட்டு பென்னி அண்ணன் வாங்கிட்டு வந்தது எடுத்துக்கச் சொல்லி வற்புறுத்திச்சு. மறுக்க முடியாம அதையும் எடுத்துக்கிட்டேன்.

"இந்தா..." அழகாச் சுருட்டப்பட்ட பொட்டலத்தை ரேச்சலிடம் நீட்டினேன்.

"என்னது...?"

"அல்வா"

"அடப்பாவி கடைசியாக் கொடுக்கறதை முதல்லயே கொடுக்குறீயா..உனக்கு தைரியம் ஜாஸ்தி தான்..எனக்கு வேண்டாம்.. நீயே சாப்பிடு"

"ஏய் இது என்னன்னு நினச்சுட்ட..இது தின்னவேலி இருட்டுக் கடை அல்வா..உங்க ஊர்ல்ல கிடைக்காது.. உன் பொறந்த நாளுக்கு கேக் தின்னுட்டு வாயைத் துடைச்சுட்டுப் போயிட்டேன்னு அவப் பெயர் எனக்கும் என் பின்னாடி வர்ற சந்ததிக்கு வந்துறக் கூடாதுல்லா.. அது தான் வாங்கிட்டு வந்தேன்.. பிரிச்சுப் பாரு அந்தப் பொட்டலத்துக்குள்ளே ஒரு சின்னப் பரிசும் இருக்கு"

ரேச்சல் வாக் மேனைக் காதில் மாட்டியப் படி பொட்டலத்தைப் பிரித்தாள்.. உள்ளே இருந்த அந்த கிரிஸ்டல் கீ செயினைக் கையில் எடுத்தாள்...சூரிய ஒளி அதில் படும் படி தூக்கி பிடித்து அவள் பார்க்கும் போது தான் நானும் அதைப் பார்த்தேன்... படித்தேன்..

TO MY BEST FRIEND ISRAEL...WITH LOVE ANITHA

கொஞ்சம் சத்தமாவே படித்துவிட்டேன்... இருட்டுல்ல அந்தக் கீ செயினை லவட்டிட்டு வரும் போது அதில்ல இப்படி ஒரு வில்லங்கம் ஒளிஞ்சு இருக்கும்ன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கல்ல...

ரேச்சல் முகத்திலே என்ன ரியாக்ஷன் இருக்கும்ன்னு பாக்கக் கூட திராணியில்லாமல் தலையைக் குனிஞ்சுக்கிட்டேன். அப்படியே தலையை நிம்ர்த்தாமல்

'ஆனா அல்வா சத்தியமா உனக்கே உனக்குன்னு வாங்குனது...அதையாவது எடுத்துக்கோ' கொஞ்சம் கெஞ்சலாய் சொல்லி பார்த்தேன்

"உங்க வீட்டுக்கு வந்து கேட்கவா?"

"என்னை நம்பு.. நான் அவ்வளவு மோசம் இல்ல... எதோ கிப்ட் மாறிடுச்சு"

என் கையைப் பிடித்து நீட்டி என் உள்ளங்கையில் அல்வாப் பொட்டலத்தையும் கீ செயினையும் வைத்தாள். வாக் மேனில் ப்ளே பட்டனை ஓங்கி அழுத்தினாள். வாய் இருந்து இருந்தால் அந்த பட்டன் அலறியிருக்கும்.

"என்னப் பாட்டு ஓடுது?"

"ம்ம்ம் பாப் மியூசிக்.. இங்கிலீஸ் ஆல்பம்.. பிஜீஸ்... உனக்குப் புரியாது... YOU R A REAL DUMBO" என்று சொல்லிவிட்டு விருட்டெனப் போய்விட்டாள்.


அதன் தொடர்ச்சியாகத் தான் எங்க வீட்டு மொட்டை மாடியில் பதில் கச்சேரிக்கு ஏற்பாடு நடந்துகிட்டு இருந்துச்சு.

ரத்னா பஸ் போய் பத்து நிமிசம் கழிச்சி டேப் ரிக்கார்டரில் அதிகப் பட்ச சத்தம் வச்சி மைக்கேல் ஜாக்ஸனை சின்னக்குளத்துக்கு நான் அறிமுகம் செய்து வைத்தேன்...அந்த ஏரியாவையே இப்படி அலற விடக்கூடிய ஒரே திறமை வாயந்த டேப் ரிக்கார்டர் எங்க் மாமாவோடது தான்...

சும்மா ஜாக்ஸன் அதிர... மதியம் தூங்கி வழிந்த சின்னக்குளம் சிலுத்துக்கிட்டு எழுந்துருச்சு......

இஸ்ரா பய நிலைமை நிதானம் தவறுவதைக் கண்டுகிட்டு நைசா நாய்ஸை யூஸ் பண்ணிகிட்டு எனக்குத் தெரியாம பக்கத்து வீட்டு மாடிக்குத் தாவி எஸ்கேப் ஆயிட்டான்..

இது எதையும் கொஞ்சம் கூட கவனிக்காமல் கண்ணாடி குலுங்க... தலையை பரபரக்க விட்டு நான் ஜாக்சன் இசைக்கு ஜாக்குவார் தங்கம் ரேஞ்சுக்கு ஸ்டண்ட் பண்ணிகிட்டு இருந்தது பெரும் கொடுமை.

"எலேய் என்ன ஆச்சு இவனுக்கு.. என்னது இது சீக்கு வந்த கோழி சிலுப்பிகிட்டு துள்ளுர மாத்திரி நடு வெயில்ல நட்டமா நின்னு ஆடிக்கிட்டு நிக்கா?" பாட்டிச் சொன்னது கேட்கவில்லை.

நங்கென்று நடு மண்டையில் முறத்தால் அடி ஒன்று விழுந்ததும் மைக்கேல் பாடுவதும் கேட்கவில்லை.. மை மதர் அடுக்கு மொழியில் என்னை ஏசியதும் கேட்கவில்லை..
எதோ ஒரு வீரத் தமிழச்சிகிட்ட ஒரு புலி முறத்தாலே அடி வாங்கியிருக்குன்னு கதைச் சொல்லக் கேட்டிருக்கேன். அந்த அடி பட்ட அந்தப் புலிக்கு எப்படி இருந்து இருக்கும்ன்னு அந்த வினாடியிலே இந்தப் புலிக்கு புரிந்தது...எங்க அம்மா ஒரு வீரத் தமிழ்ச்சியாயிட்டாங்க...சுத்தி சுழன்டு அப்போத் தான் பாத்தேன்..

ஊரே வீட்டு முன்னாலே கூடியிருச்சு..ஊர் கூடி என்னப் பயன் ... யாருக்காக இந்தக் கச்சேரியை ஏற்பாடு பண்ணியிருந்தேனோ அவளைக் கூட்டத்தின் ஒரு ஓரமாய் கூடக் காணல்ல.. இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல்ல... பாட்டி, அம்மா, அத்தைன்னு எல்லாரும் பொங்கி மாடிக்கு பாய்ஞ்சு வந்துருக்காங்க..

அக்கம் பக்கம் எல்லாம் சுற்றி நின்று என்னை வேடிக்கைப் பாத்துக்கிட்டு நின்னாங்க..நடு மண்டையைத் தடவிய படி நான் நின்னுகிட்டு இருந்தேன்.

"ஏய்யா இவனைக் கொண்டு ஜெபத்திலே வைங்க... நடு மத்தியானம் இப்படி மொட்டை வெயில்ல் கிறுக்காட்டம் போட்டுகிட்டு இருக்கான்... புத்திப் பேதலிச்சுப் போச்சோ என்னமோத் தெரியல்லயே.. ஏய்யா.. இவிய அய்யா வேற வெளியே போயிருக்காவளே... என்னப் பண்ணுறது?"
எங்கப் பாட்டி ஏகத்தும் எமோஷ்னல் ஆக... ஊர் கிழவிகளும் ஒண்ணு கூடி என் பாட்டிக்கு ஆளுக்கொரு ஆறுதல் என இரக்கமில்லாமல் என் மீது அருவாளை வீசுனாங்க...

"பய ராத்திரி எல்லாம் வெளியேத் திரிஞ்சாம் இல்ல... சாம்த்துல்ல சாத்தான் செஞ்ச வேலையாயிருக்கும்.. சரியாகிரும்"

இஸ்ரா அப்போத் தான் மாடிக்கு வருவது போல் படியேறி மெதுவாய் கூட்டம் விலக்கி என் பக்கம் வந்தான்...

"என்ன ஆச்சு...என்ன சத்தம்?" எதுவுமறியாதவன் போல மெதுவாக பாட்டு கேசட்டைக் கையில் எடுத்தான்.

"அடப்பாவி கொய்யால்ல..." ஒரளவுக்கு தெளிந்த நான் இஸ்ராவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

"ஆ..இது அந்த வெள்ளைக்கார பிரசங்கியார் கேசட்ல்லா.. போன வாரம் தின்னவேலில்ல பாத்தேனே... " நான் எழுதி பேசத் தவறுன்ன டயலாக் எல்லாம் இஸ்ரா சரமாரியாப் பேச ஆரம்பிச்சான். நான் கண் கலங்கி நின்றேன்.

"இவ்வளவு நேரம் இவன் கேட்டு ஆடிகிட்டு இருந்தது கடவுள் பாட்டா" எங்க பாட்டி கேட்டாங்க.

"பாட்டி நம்ம வீட்டுல்ல சினிமாப் பாட்டெல்லாம் என்னிக்கு ஓடியிருக்கு.. எப்போக் கேட்டிருக்கோம்..." இஸ்ரா நீ செல்லம்லேய்... என்ன காப்பாத்த வந்த மாமனிதன்லேய் நீ.. என் மனம் இஸ்ராவை வாழ்த்தியது.

"ஆமா இதை அவனேச் சொல்லியிருக்கலாமே"

"அவன் சொல்லியிருக்கலாம் பயலுக்கு பக்தி முத்திருச்சு..எதுவும் பேசியிருக்கமாட்டானே.. இந்தா ஆடு திருடிட்டு அகப்பட்டவன் மாதிரி முழிக்கான் பாருங்க" இஸ்ரா அவனுடைய மொத்தத் திறமையையும் காட்டிக்கொண்டிருந்தான்.

"நாங்க என்னவோ எதோன்னு பயந்துட்டோம்ய்யா... ஏய்யா இஸ்ரா சத்தத்தைக் குறைச்சு வச்சு கொஞ்சம் வெயில் இறங்கனப் பொறவு ஆடச் சொல்லு.. பயத் தனியா ஆட வேண்டாம்.. துணைக்கு நீயும் ஆடு... மத்தியானம் தூக்கம் கெடுதுல்லா.." பாட்டி பாசமாய் சொல்லிவிட்டு படி இறங்கினாங்க..

பாட்டிக்குப் பின்னாலே மொத்தக் கூட்டமும் இற்ங்கிப்போச்சு.. அம்மாவுக்கு மட்டும் சுத்தமாய் என் மீது நம்பிக்கை இல்லை..இறங்கும் போதுக் கூட மொறைப்பு குறையவே இல்லை.

அந்த நிமிடத்தில் ரேச்சலின் மொறைப்பும் எனக்கு ஞாபகம் வந்துப் போனதைத் தவிர்க்க முடியவில்லை.

கூட்டம் இறங்கிப் போனதும் இஸ்ராவை அப்படியேக் கட்டிப்பிடிச்சுக்கிட்டேன்...

"எலேய்.. என்ன இது என்னவெல்லாமோ பேசுன.. பிடிப்பட்ட ஓடனே கரண்ட் கம்பியிலே சிக்குன பட்டம் மாதிரி கவுந்து நின்னுட்ட... லேய்.. இதெல்லாம் சரி வராது.. பாம்பேகாரிக்கு இருக்க மெதப்பு இருந்துட்டுப் போவுதுன்னு உன் வழியைப் பாத்துட்டுப் போயிட்டே இரு.. அவக் கிட்ட மல்லுக்கு நிக்குறதை இத்தோட நிறுத்திக்க... அது தான் உனக்கு நல்லது... எனக்கு நல்லது.. இந்தா மொத்த சின்னக்குளத்துக்கும் நல்லது.. மைக்கேல் ஜாக்சனை எல்லாம் இந்த ஊர் தாங்காதுலேய்..".

நான் எந்தவிதப் பதிலும் சொல்லவில்லை.

"லேய்.. இன்னும் இரண்டு நாள் தான் அவ மும்பைக்குக் கிளம்பிருவா... அதுக்கு மேல ஒரு மூணு நாள் நீயும் மெட்ராச்க்கு வண்டி ஏறிருவ... இரண்டு நாள் எல்லாத்தையும் அடக்கிட்டு இரு..."

இஸ்ரா என் முகத்தை இழுத்துத் தன் பக்கம் திருப்பி வைத்துச் சொன்னான்.

அந்த இரண்டு நாட்கள் என்ன நடந்தது தொடரும்

Wednesday, July 11, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 3

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 2

வீட்டில் பாட்டி சுட்ட அதிரசமும் கைமுறுக்கும் கொறித்துக் கொண்டே மொட்டை மாடியில் இஸ்ராவும் நானும் உட்கார்ந்திருந்தோம். இஸ்ரா திருட்டு 'தம்' பற்ற வைத்தான். நானும் அவனும் மாறி மாறி ஆளுக்கு ஒரு இழுப்பு இழுத்தோம். கருப்பட்டி காப்பி ஆளுக்கு ஒரு தம்ளர் பக்கத்தில் எடுத்து வைத்திருந்தொம். அதையும் ருசி பார்த்து உறிஞ்சினோம்.

"பாம்பேகாரிக்கு நக்கல் அதிகமாப் போயிருச்சு.. தின்னவேலிகாரனுக்கு அருவாத் தூக்கத் தான் தெரியும்ன்னு எகடியம் பேசுதா.. அவளையேத் தூக்குறோம்லே.. அப்போத் தான் அவ கொழுப்பு அடங்கும்"
திருட்டு தம்மின் போதை ஏற சும்மா விரலைச் சொடக்கிட்டேச் சொன்னேன்

"எலே வெளக்கெண்ணெய்.. அவ போலீஸ்காரன் மோவா.. அவ அப்பன் காதுக்கு.. ம்ஹும் மூக்குக்கு நீ இப்போ முக்கி அலறுன விசயம் போச்சுன்னு வை... சரடு சரடா உன்னியப் பிரிச்சுத் தொங்கப் போட்டுருவான்...பொத்திகிட்டு இருக்கீயா"

இஸ்ரா அடக்குனாலும் எனக்கு கோவம் கொஞ்சமும் குறையவில்லை. கோவம் ஒரு பக்கம் இருந்தாலும் இஸ்ரா சொன்ன எதையும் ஒதுக்கியும் தள்ள முடியாது...அதுல்ல ஆபத்து என் அறுவுக்கும் எட்டாமல் இல்லை. இந்த யோசனையிலே அன்னிக்கு இரவு கழிந்துப் போயிடுச்சு.

விடிஞ்சும் விடியாம மறுநாள் காலையிலே மொத்த ஜமாவும் குளத்துக்குக் குளிக்கக் கிளம்பிட்டோம்

"ஏலேய்.. முங்கு நீச்சல் போடுவோமா.."

தீர்மானமாய் எல்லாப் பயல்வளும் தண்ணியில் இறங்கிட்டாங்க..நம்ம மெட்ராஸ் வாழ்க்கையிலே ஒரு பாக்கெட்டும் அரை பக்கெட்டுமாக் குளிச்சுப் பழகுன பழக்கத்திலே நீச்சலுக்கு ஏது வழி...அதுன்னால கரையோரமா உக்காந்து துணியை எல்லாம் காவல் காத்துகிட்டு இருந்தேன்..கையோடு கொண்டுப் போயிருந்த பக்கெட்ல்ல குளத்துத் தண்ணியை கோரி ஊத்தி மக் வைச்சு எடுத்து தெளிச்சு குளிக்கவும் முன்னேற்பாடு எல்லாம் பண்ணி வச்சுருந்தேன்.. நேரப் போக்குக்கு அவிச்ச பனங்கிழங்கு ரெண்டை மென்னு தின்னுகிட்டு இருந்தேன்.

ஆம்பளை ஆட்கள் குளிக்குற இடத்துக்கும் பொம்பளை ஆட்கள் குளிக்கும் இடத்துக்கும் பாதை ஒண்ணு தான் ஆனா இடைவெளி உண்டு...

ரேச்சலும் அவள் வீட்டு சிறுசுப் பட்டாளமும் குளிக்க குளத்துக்கு வந்துக் கொண்டிருந்தார்கள்.. அவள் என்னைப் பாக்கறதுக்கு முன்னாடியே நான் அவளைப் பாத்துட்டேன்...

பக்கெட்டும் மக்குமா என்னைப் பார்த்தா நம்ம கதைக் கிழிஞ்சிப் போயிரும்ன்னு அவசர அவசரமா பக்கெட் தண்ணியைச் சரிச்சுக் கொட்டுனேன். பக்கெட்டைத் துணிக்கு அடியிலேப் போட்டு மூடிட்டு துணியாவது மணியாவது என இடத்தைக் காலி செய்து கிளம்ப நினைக்கையில் இஸ்ராவின் குரல் எங்கிருந்தோ இடியாய் இறங்கி குறுக்கே குத்தவைத்து என் கால்களை ஓட முடியாமல் இடறிவிட்டது.

"எலேய் மெட்ராஸ்காரா.. அந்த துண்டை எடுத்துப் போடுடா.. இங்கன் மீன் நிறைய கிடக்கு இன்னிக்கு மீன் சோறு தான்..."

அவன் குரல் கேட்டு ரேச்சல் என் பக்கம் திரும்பினாள்.

"என்ன,,, குளிக்காம கரையோரமா உக்காந்து கவிதையா எழுதுற" ஒரு வித நமுட்டு சிரிப்போடு கேட்டாள். அவ சிரிப்பு என்னை உசுப்பேத்தும் பாருங்க... ஒரு மாதிரி ஆயிடும்,

"எனக்கு ஓடம்புக்கு சோமில்ல.. இருமல்..அதான் குளிக்கல்ல..." ஒரு வாறாக சமாளித்தேன். மூணு முறை தொண்டையைச் செருமி இருமி வேற காட்டுனேன்.

"நான் கூட நீச்சல் தெரியாமத் தான் இப்படி துணியைக் காவ்ல காத்துகிட்டு இருக்கீயோன்னு நினைச்சுட்டேன்" என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தாள்.

"மெட்ராஸ்ல்ல நம்ம குரூப்ல்ல நான் தான் பெரிய நீச்சக்காரன் தெரியும்ல்ல.. என்னியப் போய் எகத்தாளமா நினைக்கப்பிடாது.. போ போய் குளம் கலங்கறதுக்குள்ள குளிச்சு குருத்தா எழுந்து போ"

"மெட்ராஸ்ல்ல எங்கே நீந்துவ... கூவம் ஆத்துல்லய்யா" மறுபடியும் சிரிப்பு... இந்த முறை ஏகத்துக்கும் எகத்தாளம் ஓங்கி ஒலித்தது.

கரையில் நான் கதி கலங்கி நிற்பது தெரியாமல்...இஸ்ரா என்னமாய் வில்லத்தனம் பண்ணான் தெரியுமா.. அது எனக்கு சத்தியச் சோதனை..

"ஏலேய் வெளக்கெண்ணெய்.. தண்ணீயக் கண்டா ஜன்னியக் கண்டவன் மாதிரி ஓடுறான்னு தான் ஓரமா உக்காரச் சொல்லியிருக்கு... துண்டை எடுத்துப் போடச் சொன்னா அதுக்குமால்ல உனக்கு இடுப்பு வலிக்கு.. என்ன இழவு மெட்ராஸ்காரனோ.." இஸ்ரா சத்தமாய் என் பிரதாபங்களை ஊருக்கு ஒலிபரப்பு செய்த படிதண்ணியை விட்டு வெளியே வந்துக் கொண்டிருந்தான்..அவன் வந்த திசையில் இருந்த ஓட மரங்களின் மறைவு ரேச்சலின் இருப்பை அவனுக்கு அறிவிக்க வில்லை.. அவன் இன்னும் அதிகமாய் என் நீச்சல் சாதனைகளை புகழ்ந்தப் படியே வந்துக் கொண்டிருந்தான்..என்னாலும் அவனை எந்த விதத்திலும் தடுக்க முடிய்வில்லை.

"அட உனக்கு நீச்சல் தெரியாதா" இது அவள் கேட்டிருந்தாக் கூடப் பரவாயில்ல.. அவள் தம்பி குண்டோதரன் கேட்டது தான் எனக்கு ஓடனே தண்ணியிலே குதிச்சு தற்கொலை பண்ணிக்கணும்ன்னு யோசிக்க வச்சுருச்சு.

"தின்னவேலிகாரனவது அருவா தூக்க லாயக்கு.. நீ ம்ஹூம்..."
அப்படின்னு என்னை ஏற இறங்க பார்த்து இடுப்பில் கை வைத்து பி.எஸ் .வீரப்பா பாணியில் சிரித்தாள்.

"சரி சரி.. ப்சங்களா.. உங்க எல்லார் துணியையும் இந்த அண்ணன் கிட்டக் கொடுங்க இவர் பத்திரமாக் காவல் காத்துப்பார்... என்ன. வாங்கப் போலாம்... அப்படின்னு துணியை எல்லாம் வாங்கி என் அனுமதியைக் கூட எதிர்பாராமல் என் கையில் திணித்து விட்டு குளம் பார்த்து தன் கும்பலை நடத்திப் போனாள்.

இது நடக்கவும் இஸ்ராவும் என்னை வந்து அடையவும் சரியாய் இருந்தது.அவள் சிரிப்பு என் காதுக்குள் இன்னும் ஒலித்துக் கொண்டே இருந்தது.. அந்தச் சிரிப்போடு இஸ்ராவின் கேலியும் சேர்ந்துக் கொண்டது.

"எலேய் அதிர் வேட்டு போடப் போறேன்னு அலறுன.. இங்கே பாம்பேக்காரி துணி எல்லாம் காயப்போடறதுக்கு வ்சதியா கொடிக்கணக்கா ஆடாம் அசையாம பிடிச்சுக்கிட்டு நின்னுட்டு இருக்கீயே.."

எனக்கும் ரேச்சலுக்கும் இப்படி அரசல் புரசலாப் போயிட்டருந்த மோதல் இஸ்ராவுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கா அமைஞ்சுப் போனது என் துரதிர்ஷ்ட்டம்ன்னு தான் சொல்லணும்.

அதே வாரத்தில் ஒரு நாள் மொட்டை மாடியிலே பத்து மணி வரைக்கும் தூங்கிட்ட இருந்த என்னை அரக்க பரக்க வந்து எழுப்பினான் இஸ்ரா.

"எலேய் பாம்பேக்காரி நம்ம வீட்டுக்கு வந்துருக்கா... நேத்து என்னவாச்சும் வம்பு பண்ணீயா?"

அவன் சட்டெனக் கேட்டதும் பாதி தூக்கக் கலக்கமும் என்னை புரட்டிப்போட்டது. மடிச்சுக் கட்டிய லுங்கியை (லுங்கி கட்ட ஆரம்பிச்சு ஒரு மூணு மாசம் தான் ஆகியிருந்தது.) இன்னும் ஏத்தி கட்டிக்கிட்டு மாடிப் படியிலே இறங்கி ஓடுனேன், இஸ்ரா எனக்கு முன்னாடியே கீழே போயிட்டான். மாடிப் படி வீட்டுக்கு வெளியேத் தான் இருந்துச்சு.. அங்கே இருந்து அவளை வச்சக் கண்ணு வாங்காமப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

வீட்டுல்ல இருந்த எல்லாருக்கும் கேக் கொடுத்துட்டு ஆசி வாங்கிட்டு இருந்தா.

என்னாத் தான் திமிர் பிடிச்சவளா இருந்தாலும் மெட்ராஸ்ல்ல கூட நான் இப்படி ஒரு அழகைப் பார்த்தது இல்லை.. ம்ம்ம் பெருமூச்சு விட்டுகிட்டேன்.. அந்த கண்ணு சும்மா என்னமா விளையாடுது... உதட்டை மடிச்சு.. குவிச்சு...அய்யோ அதை அப்படியே பாத்துகிட்டே இருக்கலாம் போலிருக்கே.. கழுத்துல்ல சின்னதா ஒரு தங்க செயின்.. அதுல்ல ஒரு சின்ன சிலுவை... அம்மா செய்யுற மைசூர் பாக் கலர்ல்ல கழுத்து.. அதுக்கு.. இப்படி என் பார்வை பயணம் போய்கிட்டு இருக்கும் போது இஸ்ரா வந்து பிரேக் போட்டான்.

"லேய் இன்னிக்கு ரேச்சலுக்கு பிறந்தநாளாம்... கேக் கொண்டு வந்துருக்கா.. எடுத்துக்கலே..."

"HAPPY BIRTHDAY...அப்படியே பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பார்த்த மாதிரி அவளையே பாத்துகிட்டு நின்னேன்.. அப்புறம் லேசா கிறக்கம் குறைஞ்சு..

"உன் ட்ரெஸ் ரொம்ப சூப்பரா இருக்கு.. பாம்பேல்ல எடுத்ததா?"
கேட்கணும்ன்னு கேட்டாலும்.. அந்த ட்ரெஸ் அவளுக்கு அவ்வளவு பாந்தமாப் பொருந்திப் போயிருச்சு.. சந்தன கலர் பிறகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான நிறமா மாறிப் போனதற்கு அன்னிக்கு ரேச்சலை அந்த ட்ரேஸில் பார்த்ததும் ஒரு காரணமா இருக்குமோன்னு அடிக்கடி நினைச்சுக்குவேன்.

"ம்.. சரி ப்ர்த் டேன்னா எங்க பாம்பேல்ல பிரண்ட்ஸ் எல்லாம் கிப்ட் கொடுப்பாங்க.. உங்க மெட்ராஸ்ல்ல கொடுப்பீங்களா.. இல்லை கேக் மட்டும் வாங்கி சாப்பிட்டுட்டு வாயைத் துடைக்காமப் போயிடுவீங்களா?"

வலது கையை வச்சு வாயைத் துடைச்சுகிட்டேன். அவ அதுக்கும் சிரிச்சா..

"கிப்ட் எல்லாம் கொடுப்போம்.. பொம்பிளை பிள்ளைக்குக் கொடுக்குற மாதிரி கிப்ட் கொடுக்கலாம்ன்னா.. நீ என்னப் பொம்பிள்ளை பிள்ளை மாதிரியா நடந்துக்குற?"

"பொம்பிள்ளை பிள்ளைன்னா எப்படி நடந்துக்கணும்?" இடுப்பில் கை வைத்து தலையை சரித்து உதட்டுல்ல கோபம் தேக்கி கேட்டாள். நான் கிறங்கிப் போயிட்டேன்.

"அது.. எப்படின்னு விளக்கம் எல்லாம் எனக்குச் சொல்லத் தெரியாது... ஆனா எங்க ஊர் பொம்பிளைப் பிள்ள மாதிரி நீ இல்ல.. அது மட்டும் என்னாலே அடிச்சு சொல்ல முடியும்.."

"ம்"

"சரி.. உனக்கு என்ன கிப்ட் வேணும் கேளு.. முடிஞ்சா வாங்கித் தாரேன்.. நீ கொடுத்தக் கேக்கைத் தின்னுட்டு சும்மாப் போயிட்டேன்ங்கற பேர் எல்லாம் என் பரம்பரைக்கு வேணாம்"

"ம்..ப்ச்.. வேணாம்.... உன் கிப்டை உனக்குப் பிடிச்ச மாதிரி உங்க ஊர் பொம்பிளை பிள்ளைக்கு ப்ர்த் டே வந்தாப் போய் வாங்கிக் கொடு.. நானும் எனக்குப் பிடிச்ச மாதிரி ஆம்பிளை பையன் கிட்ட வாங்கிக்குறேன்.." என்று சொல்லிவிட்டு விருட்டெனப் போனவள் முன்னால் ஓடிப் போய் மறித்து நின்றேன்.

"என்ன நக்கலா.. வேணாம்... அது என்ன? உனக்கு பிடிச்ச மாதிரி ஆம்பிளை பையன்... பாம்பேகாரனா இருக்கணுமோ.. மழு மழுன்னு வெள்ளையா சேட் வீட்டு பையனா... இந்தி எல்லாம் பேசணுமோ...சொல்லு"

"ம்ம்ம்.. அதெல்லாம் எனக்கு விளக்கமாச் சொல்லத் தெரியாது... விடு... இது என்ன சென்னைப் பேஷ்னா?"

அப்போது தான் நானும் கவ்னித்தேன்.. அவளைப் பார்க்கும் ஆவலில் அரக்க்ப் பரக்க வந்த வேகத்தில் லுங்கிக்குப் பதில் போர்வையை மடித்து அதை ஏற்றி வேறு கட்டி வந்திருக்கிறேன் என்று..

விடுமுறை அனுபவங்கள் தொடரும்

Monday, July 09, 2007

சின்னக்குளமும் சில விடுமுறைகளும் - 2

சின்னக்குளமும் விடுமுறைகளும் - 1

வீட்டுக்குள் நுழையும் முன் சந்து முனையில் நான் தடுக்கப்பட்டேன்.

"ஆஆஅம்மா.." பளீர்ன்னு கன்னத்தில் விழுந்த அறையில் கண் இருட்டி விட்டது எனக்கு. அதைத் தொடர்ந்து ஆள் ஆளுக்குப் போட்டு அமுக்கி மிதித்துவிட்டார்கள். சட்டைக் கிழிந்து... புழுதி எல்லாம் முகத்தில் அப்பிக் கிடக்க..படு பயங்கரமான அவமானத்தோடு நான் எழும்பிய நேரம் இஸ்ரா வேகமாய் என் உதவிக்கு வந்தான்.

"போடா " என அவனை உதறிவிட்டு கண்களில் நீர் வழிய நடக்க ஆரம்பித்தேன்.. நடக்க நடக்க அவமான உணர்ச்சி அதிகமாக திடீர் என திரும்பினேன்... என்னைக் கன்னத்தில் அறைஞ்சானே அந்த நெட்டக் கொக்கன் மட்டும் தான் என் கண்ணில் தெரிந்தான். ஒரு பேய்தனமான வெறி என்னில் ஏற அவனைப் பார்த்து வேகமாய் ஓடினேன். பாய்ந்து அவன் கையை ஒரு கடி கடித்தேன்... அவன் கையில் இருந்து ரத்தம் பீய்ச்சி அடித்தது. மத்தப் பசங்க எல்லாம் என் ஆவேசத்தைப் பார்த்து கொஞ்சம் இல்லை ரொம்பவே மிரண்டு ஒதுங்கிட்டாங்க.... இஸ்ராவே கூட கொஞ்சம் நடுங்கித் தான் போயிட்டான்.

"வாங்கடா... வாங்க இப்போ வந்து அடிங்க..." நான் கையில் மண்ணைக் குவித்து வீசிய படி வட்டம் போட்டேன். கடிப்பட்டவன் அலறல் கேட்டு பெரியவர்கள் கூட்டம் விரைந்து வர.. இஸ்ரா என்னைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான். எனக்கு வெறி மட்டும் அடங்கவில்லை. யார் கண்ணிலும் படாமல் மாடி அறைக்கு என்னைக் கூட்டிப் போய் படுக்க வைத்தான் இஸ்ரா. காயங்களைக் கழுவி ஒத்தடம் கொடுத்தான். வீட்டில் எப்படியோ விவரம் தெரியவராமல் சமாளித்து முடித்தோம்.

'உனக்கு ஏன்லே இவ்வளவு வெறி?"

"அவனைப் பயங்கரமாக் கடிச்சுட்டேனா?... "

"வெறி நாய் தோத்ததுப் போ"

"ஊசி போடணுமா என்ன?"

"ம்ஹ்ம்.. தெரியல்ல.. பாவம்லே அவன்.."

"நான் மட்டும்.. இங்கே பார்.. அஞ்சு விரலும் பதிஞ்சு இருக்கு.." என் கன்னத்தைக் காட்டினேன்.

ஒருவழியாக சண்டை முடிந்து இஸ்ராவின் உபயத்தில் சமாதானம் பேசப்பட்டது.. பழையபடி கூட்டாஞ்ச்சோறு.. குளத்து மேட்டில் கிரிக்கெட் என வாழ்க்கை சகஜ நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருந்தது.

ஒரு மதிய பொழுதில் மாமாவின் சைக்கிளை இரவல் வாங்கிக் கொண்டு நாசரேத் ரூபி தியேட்டருக்குப் படம் பார்க்கக் கிளம்பினே. இஸ்ரா நேராகத் தியேட்டருக்கு வருவதாக வாக்குக் கொடுத்துவிட்டு காலையில் தூத்துக்குடி டவுண் வரைக்கும் எதோ வேலையாகப் போயிருந்தான். சைக்கிள் டயரில் காத்தை முழுசா நிரப்பிக்கொண்டு.. சும்மா வாருன தலையைக் கலைச்சு விட்டுட்டு பர்மா பஜார்ல்ல வாங்குன கூலிங் கிளாஸைக் கண்ணுல்ல மாட்டிக்கிட்டு... நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா.. பக்கத்துல்ல பட்டுல்ல ரோஜா பாட்டை வாய் விட்டு சத்தமாப் பாடிக்கிட்டுச் சைக்கிளை அழுத்தி மிதித்தேன்.

சின்னக்குளம் பஸ் நிறுத்தம்.. (அந்த ஊருக்கு மொத்தம் வந்து போறதே நாலு பஸ் அதுக்கு ஒரு பஸ் நிறுத்தம் வேற..) அருகே வரும் போது பாட்டு சத்தம் என்னையுமறியாமல் உச்சஸ்துதியை அடைந்திருந்தது... என்னைக்குமே எனக்கு நீ தான் பொண்டாட்டி.. என்னைக்குமே எனக்கு நீ தான் பொண்டாட்டி.. அதே வரியைப் பாடிகிட்டே போனவன் சுளுக்குன்னு சிரிப்பு சத்தம் கேட்டு சைக்கிளை நிறூத்துனேன்... பஸ் ஸ்டாண்ட்ல்ல ரேச்சல் நின்னுகிட்டு இருக்கா..

"என்ன இந்தப் பக்கம்?"

"2 மணி ரத்னா பஸ்க்கு வெயிட் பண்ணுறேன்"

"தூத்துக்குடிக்கா?"

"இல்ல நாசரேதுக்கு.. அங்கே எதோ தியேட்டர்ல்ல போக்கிரி ராஜா படம் போட்டுருக்காங்களாம்.. ரஜினி படம் அதான் பார்க்கக் கிளம்பியாச்சு"

"ஓகோ நீங்களூம் ரஜினி பேனா... நான் தீவிர பேன்.. " அதோட நிறுத்தியிருக்கலாம். தலையைக் கலைச்சுட்டு அப்புறம் கண்ணாடியைச் சுழட்டிச் சுத்திப் போட்டு... அப்படி இப்படின்னு ரஜினி மாதிரி நடந்து நாட்டியம் எல்லாம் ஆடி முடிக்கவும் தான் ரேச்சல் பேசுனா.

"ச்சீ ச்சீ எனக்கு ரஜினி எல்லாம் பிடிக்காது.. நான் கமல் பேன்.. அவர் என்ன அழகு.. சும்மா ரோஜாப்பூ மாதிரி கலர்..ச்சோ சுவீட்" ரேச்சல் சொர்க்கலோகம் போவது போல் கண்களை மூடி கைகளைக் கன்னத்தில் வைத்தாள்.

ரேச்சலின் அந்த கோலத்தைப் பார்த்து எனக்கு ச்சோ சுவீட் சொல்லணும் போல இருந்துச்சு...ஆனாலும் அதை எல்லாம் அடக்கி வச்சுக்கிட்டு "ஆமா ரஜினி பிடிக்கல்லன்னா பொறவு எதுக்கு ரஜினி படம்"

"இவனுக்கு ரஜினி மட்டும் தான் பிடிக்கும் அதான்.." பக்கத்து புதரில் இருந்து பேண்ட் ஜிப்பைப் போட சிரமப்பட்டுக்கொண்டே பொடியன் வெளியே வந்தான். இவள் அவனுக்கு ஜிப்பைப் போட்டு விட்டாள்.

"என் தம்பி.. தேர்ட் கிளாஸ் படிக்கிறான்.. பெரிய ரஜினி பேன்.." என்று அறிமுகம் செய்தாள்.

"ரஜினி பண்ற ஸ்டைல் பிடிக்குதோ இல்லையோ.. கொஞ்சம் முன்னாடி ரஜினி மாதிரி நீ பண்ண ஸ்டைல் எல்லாம் செம காமெடியா இருந்துச்சு.. இன்னும் சிரிப்பு வருது" சொல்லிவிட்டு சிரித்தாள்.

காமெடியா.. நான் பண்ணது காமெடியா.. மும்பை முழு குசும்பா.. சென்னைக் கெத்தைக் காட்டுறேன் பார் அப்படின்னு உள்ளுக்குள்ளேச் சொல்லிகிட்டேன்.

"2 மணி ரத்னா தூத்துக்குடி தான் போகும்.. நாசரேத் போகணும்ன்னா நடந்து தான் போகணும்"

"நீ எங்கேப் போற.?"

"நான் நாசரேத்க்குத் தான் போறேன்..."

"அப்படின்னா என் தம்பியைப் படத்துக்குக் கூட்டிட்டுப் போறியா?"

"ஏன் நீ வர்றல்லயா? ரஜினி படம் நல்லாத் தான் இருக்கும்"

"அதுக்கு இல்ல.. இருக்கது ஒரு சைக்கிள்..அதுல்ல டபுள்ஸ் போலாம்... நான் எப்படி வர்றது..அதுவும் உன்னாலே ரெண்டு பேரை வச்சு ஓட்ட முடியுமா?"

அவ்வளவு அவள் அப்படிக் கேட்டதும் எனக்கு வீரம் தீரம் எல்லாம் பொங்கிப் புனல் எடுத்துருச்சு.

"ஹலோ நான் எல்லாம் ஏத்தத்துல்ல ஏழு குடம் தண்ணியை வச்சு மிதிச்சவன்... சென்னையிலே தண்ணிப் பஞ்சத்திலே எங்க வீட்டுக்கு முழு தண்ணி சப்ளை நான் தான் தெரியும்ல்ல.. நீயும் உன் தம்பியும் எனக்கு ஜூஜூஜூபி..." என்று சொல்லிவிட்டு கண்ணாடியைச் சுத்திப் போட்டேன்.

அவள் தம்பி குண்டோதரன் குடுகுடுன்னு ஓடி வந்து முன்னாடி பாரில் ஏறி உட்கார்ந்துக்கிட்டான். நானும் ஏறி உட்காந்ததும் ரேச்சல் ரொம்பவே ஒயிலா ஏறி பின்னால் உட்கார்ந்தாள். ஒன்பது கிலோ மீட்டர் சைக்கிள் மிதிக்கணும்ன்னு நினைக்கும் போதே முன் பாரம் மூச்சை நிறுத்தியது. இருந்தாலும் வீரம் தீரம் எலலத்தையும் கூட்டி கையிலேயும் கால்லயும் வ்ச்சுகிட்டு வழித்துணைக்கு முப்பாட்டன் அவர் தாத்தன்னு எல்லாரையும் மனசுக்குள்ளே கூப்பிட்டுகிட்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பிச்சேன்.. இஸ்ரா எனக்கு எப்போவோ ஒரு முறை காட்டிக்கொடுத்த காட்டுப் பாதையிலே சைக்கிளை விட்டேன்..

மிதிக்கும் சோர்வு தெரியாமல் இருக்க அவளிடம் பேச்சுக் கொடுத்ததில் அவள் பயங்கர படிப்பாளி என்று தெரிய வந்தது.. பாடச்சம்பந்தமாய் பேசுவதைத் தவிர்த்தா அவளுக்கும் நல்லது எனக்கும் நல்லதுன்னு முடிவு பண்ணிகிட்டு விளையாட்டு பக்கம் பேச்சைத் திருப்புனா..அவங்க அப்பா போலீஸ்காரர் அதுல்லயும் அவளை நல்லாவே கோச் பண்ணி வ்ச்சிருக்கார்.. இப்படியே ஏழு கிலோ மீட்டர் தூரம் பேச்சிலே வண்டியை மிதிச்சுட்டுப் போயிட்டேன். அவளைப் பத்தியும் கூடவே தேவை இல்லாமல் அவள் தம்பியைப் பற்றியும் நிறைய விசயங்களை அறிந்துக்கொள்ள முடிந்தது.

காட்டுப் பாதை முடியும் இடம் வந்தது.. தியேட்டர் இன்னும் கொஞ்சம் தூரம் தான்..எதாவது பேசணுமே..

"ஆமா இப்படி ஒரு பையனை நம்பி சைக்கிள்ல்ல காடு வழியா வர்றீய உனக்கும் பயமா இல்லையா?"

"எங்க அக்கா பிளாக் பெல்ட் தெரியும்ல்ல... ஒரே நேரத்துல்ல ஓம்பது பேரை அடிப்பா..அக்காக் கூட பைட் பண்ணுறீயா?" பொடியன் குண்டைத் தூக்கிப் போட்டான்.

"அப்படியா.. எனக்குக் கூட சிலம்பம் எல்லாம் தெரியும்.. அதுல்ல நானும் பிளாக் பெல்ட்..நமக்குள்ளே சண்டை எல்லாம் வேணாம் சமாதானமாப் போயிருவோம்.. தியேட்டர் வந்துருச்சு " என நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு நிற்கும் போது ரேச்சல் என்னருகில் வந்தாள். எனக்கும் மட்டுமே கேட்கும் குரலில் மெதுவாகப் பேசினாள்.

"இதே மாதிரி பாம்பேல்ல ஒரு பொண்ணும் பையனும் தனியாக் காட்டு வழியா வந்து இருந்தா ஒரு முத்தம் கொடுக்கவாது பையன் ட்ரை பண்ணியிருப்பான்... தின்னவேலிப் பசங்க எல்லாம் வெறும் அருவாளைத் தூக்கிட்டு குரலை உயர்த்தத் தாண்டா லாய்க்குகிறது சரியாத் தான் இருக்கு போ"

அவள் சொல்லிவிட்டு ஒய்யாரமா நடந்து தியேட்டருக்குள் போனாள். எனக்கு லேசாப் பொசிஞ்ச சாரல் மழையையும் மீறி வேர்த்துக் கொட்டுச்சு... அவள் போவதையேப் பார்த்தவன் சைக்கிளுக்கு ஸ்டாண்ட் சரியாப் போடாம அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொத்த சைக்கிளையும் விழவச்சேன்..

ஸடாண்ட்கார அண்ணாச்சி திட்டுவதுக் கூடக் காதில் விழமால் பேயடிச்சவன் மாதிரி எதோ திசையில் நடந்தவனை இஸ்ரா வந்து ஒரு உலுக்கு உலுக்கி எழுப்பி விட்டான்..

விடுமுறை அனுபவங்கள் இன்னும் தொடரும்..

சின்னக்குளமும் சில விடுமுறைகளூம் - 1

விடுமுறைகள்ன்னாவே சந்தோசம்... அதுவும் பள்ளிக்காலங்களும் அதோடு சேர்ந்த விடுமுறைகளூம் கேட்கவே வேணாம்.. கும்மாளம் தான் போங்க.. அப்படி என் வாழ்க்கையிலே வந்துப் போன விடுமுறைகளைப் பத்தித் தான் இப்போ என் மனசு யோசிச்சுகிட்டு இருக்கு....

ஆபிஸ்ல்ல வெள்ளைக்கார முதலாளிகிட்டே அழுது பொரண்டு லீவ் வாங்கிட்டு ஒரு வழியா மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு நீண்ட நாளாய் இதோ அதோ எனப் போக்குக் காட்டிக்கொண்டிருந்த இந்தியப் பயணத்துக்குச் செயல் வடிவம் கொடுத்தாச்சு..

35000 ஆயிரம் அடிகளுக்கு மேல் ஆகாயத்தில் நான் இருக்கேன்..பக்கத்தில் எதோ ஒரு ஆங்கில நாவலில் தலையைக் கவிழ்த்த என் அன்பு மனைவி.. நண்டும் சிண்டுமாய் நான் பெற்ற என் வம்ச விளக்குகள் ஜோஷ் மற்றும் ரதி. குழந்தைகள் முகத்தில் வார்த்தைகளில் பிடிபடாத குதுகாலம்.பார்த்துகிட்டு இருக்கும் போதே எனக்குள்ளும் அந்த உற்சாகம் தொற்றிகொள்கிறது.

விமானப்பணிப் பெண் குடிப்பதற்கு எதோ பானமொன்றை என்னிடம் நீட்ட.. என் கவனம் அங்கு இல்லை.. எதோ நினைப்பில் வேண்டாமெனத் தலையை ஆட்டிவிட்டு.. கண்களை மூடி சீட்டில் தலைச் சாய்த்தேன்... மனம் இருந்த இடத்தில் இருந்து இன்னொமொரு 35000 ஆயிரம் அடி உயரத்துக்கு எழும்பியது...இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது.

சின்னக்குளம்... தின்னவேலி மக்களுக்கே சரியாத் தெரியாத ஒரு குக்கிராமம்..
கிராமத்தைச் சுத்தி ஒரு பெரிய குளம்.(ஊர் பேருக்கும் குளத்து அளவுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை) கரையோரம் ஓட மரங்கள் என வட்டார வழக்கிலே சொல்லப்படும் முட்கள் நிறைந்த மரங்கள் வளர்ந்து புதராய் விரிந்துக் கிடந்தன..குளத்துக்கு மறுபக்கம் பசுமையான வயல்கள்.. அங்கே வந்து வந்து சிறகை விரிக்கும் அழகிய கொக்கு கூட்டம்... அந்தக் கொக்குகளைக் குறிபார்த்துக் குளத்திற்குள் குத்த வச்சி கையில் கவணுடன் காத்திருக்கும் சிறுவர் கூட்டம்.. அந்தக் கூட்டத்தில் பட்டணத்து வாசனை தடவிய உருப்படிகள் நானும் என் அத்தை மகன் இஸ்ராவும்.

நான் சுத்தப் பட்டணம்.. இஸ்ரா கொஞ்சம் டவுண் பையன்...அடிக்கடி ஊருக்கு வந்துப் போவான். என்னை விட உள்ளூர் பயல்வளை அவனுக்கு நல்ல பரிச்சயம். இஸ்ராவோடு ஓட்டியபடி நானும் அந்த கும்பலில் உறுப்பினர் அட்டைப் போடாத உறுப்பினன் ஆயிட்டேன்.

"இஸ்ரா பாவம்டா கொக்கு.. எவ்வளவு அழகாயிருக்கு... கல் எல்லாம் வச்சு அடிச்சா அதுக்கு வலிக்கும்டா"

"எலேய்... நேத்து சாயந்திரம் உப்பும் உரைப்புமா நாக்கைச் சுழட்டி சுழட்டிச் சாப்பிட்டால்லா.. இன்னும் ரெண்டு துண்டு கிடைக்குமான்னு சப்புக் கொட்டிகிட்டு கேட்டால்லா.. அப்போ கொக்குக்கு வலிக்கும்ன்னு நினைக்கல்லயோ... சும்மா வாயைப் பொத்திகிட்டுப் பின்னாலே நில்லு.. கொக்குப் பொரிச்சப் பொறவு சொல்லுதேன் திங்கரதுக்கு மட்டும் வாயைத் திறந்தாப் போதும்"

இஸ்ரா அடக்கி வைக்க.. உள்ளுக்குள் எழுந்த முந்தைய நாள் சாப்பிட்ட கொக்கின் ருசி என்னில் மிச்சம் இருந்த மீதி இரக்கத்தையும் அடக்கிவிட்டது.

"அய்யோ.. எந்த சவ்த்து மூதில்லா அது.. என் மேல கல்லைக் கொண்டு எறிஞ்ச்து... வந்தேன்னு தூக்கிப் போட்டு மிதிச்சுப்புடுவேன் ஆமா..." அதே தான்.. கல் கொக்கின் மீது வைத்த குறி தவ்றி சற்றே சாய்ந்த பாதையில் திசை திரும்பி வயலோரம 'அவுட் சைட்' போக ஒதுங்கிய எங்க ஊர் பெருசு எசேக்கியல் தாத்தா மீது பட்டு விட்டது. அவ்வளவு தான் மொத்தப் பேரும் ஆளுக்கு ஒரு பக்கமாய் தெறித்துப் பிரிந்தோம்.

மதியம் எங்கள் ஜமாவின் கூட்டாஞ்ச்சோறு வைபவம் வழக்கமாய் அரங்கேறும் ஊர் ஆரம்ப பள்ளியின் பின்புறம் ஒதுங்கினோம்.. பனங்கிழங்கு, வாத்துக் கூட்டத்தில் இருந்து களவாடிய வாத்து முட்டை, பனை வெல்லம்,அரிசி சோறு, ஒரு முழு கோழி...ஒவ்வொருப் பொருளா வெளிவந்து சமையல் ஆரம்பம் ஆச்சு... இன்னவென்று சொல்ல முடியாத ஒரு மார்க்கமான விருந்து அது.. விடலைக் கொண்டாட்டங்களின் உச்சக்க்ட்டம் அது..

"ஏ சாமோலு... உங்கண்ணன் பம்பாய்ல்ல இருந்து வர்றான்னு நாசரேத் சந்தையிலே வாங்கிட்டு வந்த வெடக்கோழியைக் காங்கல்லலியே .. எந்த களவாணி பைய கொண்டு போனானோத் தெரியல்லயே... எலேய் போய் தேடுங்களால்ல... கோழி கிடைக்கல்லன்னா களவாண்டவன் காலைத் தான் சூப் போட்டுக் கொடுக்கணும் இன்னிக்கு..." மூணாவ்து வீட்டு எஸ்தர் பாட்டி எட்டு வீதிக்கும் கேட்கும் படி காதில் பாம்படம் குதிக்க அலறியது எங்கள் ஜமாவின் சமையல் வேலைகளை இம்மியளவும் பாதிக்கவில்லை...விருந்து வெகு வேகமாக தயாராகி கொண்டிருந்தது..

அதே வேளையில் சின்னக்குளம் பெரிய தெருவின் புழுதியைக் கிளப்பியபடி வெள்ளை அம்பாசிடர் ஒண்ணு ஆர்ப்பாட்டமாய் ஊருக்குள் நுழைந்தது.

"ஏண்ணே... ஊருக்கு பிளசர் கார் வந்து இருக்கு... எஸ்தர் பாட்டி வீட்டுக்கு ஓறவுகாரவீய வந்து இருக்காவ... மூட்டை மூட்டையாச் சாமான் வந்து இருக்கு.. கோயிலுக்கு நட்டமா நின்னு காத்து வீசுற பேனு.. லைட் செட்.. எல்லாம் வந்து இருக்கு... கார்ல்ல குழாய் பேண்ட் போட்ட அக்கா ஒருத்தவீயளும் வந்து இருக்காவ.. காதுல்ல எதோ மிஷின் வச்சுகிட்டு இருக்காவ... பாடுற மிஷினாம்..."

விழுந்தடித்து மூச்சிரைக்க ஓடி வந்து தொப்புளான் சொன்ன மற்ற விஷயங்கள் எங்களைக் கவர்ந்துச்சோ இல்லையோ... அந்த குழாய் போட்ட அக்கா விஷயம் எங்களை கிறங்க வச்சுருச்சு... கால் தரைக்கு அரை இஞ்சு மேல் எழும்ப விழுந்தடித்து ஓடினோம்.. எஸ்தர் பாட்டி வீடு நன்றாக பார்வையில் படும் இடம் பார்த்து முண்டியடித்து நின்று கொண்டோம்.

காரும் பொருட்களும் தெளிவாகத் தெரிந்தன. காரில் முறுக்கிய மீசையோடு ஒருத்தர் இறங்கினார்.

"மக்கா அது தான் எஸ்தர் பாட்டியோட மூத்த மவன்.. பம்பாய்ல்ல போலீஸ்ல்ல இருக்காராம்.. பேரு ஆசிர்வாதம்."

அவருக்கு தோற்றத்தில் ஒத்த ஒரு பெண்மணி இறங்கினார்.

"அது அவர் பெஞ்சாதி..அந்தம்மாவை இவர் லவ் பண்ணி கலியாணம் கெட்டிக்கிட்டார்ன்னு சொல்லுறாவ.. பாட்டிக்கும் அந்தம்மாவுக்கும் ஆகாதாம்"

அவர்களைத் தொடர்ந்து காரில் இருந்து ஒரு பொடியன் இறங்கினான்.

"இது.." தொடர்ச்சியா வருணனைக் கொடுத்தவன் வாயைச் சட்டெனப் பொத்தினான் இஸ்ரா..காரணம் பொடியனுக்குப் பின்னால் பளிச்சென அவன் அக்கா இறங்கினாள்.

"டேய் மக்கா.. வெள்ளைத் தோல்டா... நம்மூர்காரியாடா இவ... "

நாங்க எல்லாரும் எங்க நிறத்தை ஒருமுறைக்கு இருமுறைக்கு பார்த்துக்கொண்டோம்...

"மின்னல் மாதிரி மினுக்கு மினுக்குன்னு இருக்காளே... எப்படிரா.. அவங்க அப்பனைப் பார்த்தா அபப்டி தெரியல்லயேடா.."

"அவங்க அம்மாக்காரி அவளுக்கு கழுதைப் பால் ஊத்தி குளிப்பாட்டியிருப்பாடா.. அதான் இந்தக் கலர்ல்ல இருக்கா"

"ஏன் இஸ்ரா கழுதைப் பால்ல குளிச்சா தோல் வெளுத்துருமா என்ன?" யாரோ ஒருத்தன் நிஜமான அக்கறையோடுக் கேட்டான்.

இஸ்ரா பதில் சொல்லவில்லை,, அவன் சொக்கி போய் விட்டான்.

எல்லோரும் அந்தப் பொண்ணை அப்படி மாஞ்சு மாஞ்சுப் பாத்துகிட்டே இருக்க.. எனக்கு நல்லா தெளிவாகப் பாக்கறதுக்கு தோதா இடம அமையல்ல.. யார் மண்டையாவது மறைச்சுகிட்டே இருந்துச்சு.

"இஸ்ரா.. எனக்குத் தெரியல்லடா...கொஞ்சம் கேப் விடுடா.."

"டேய்.என் கலருக்கே அவளைப் பாக்குறதே அதிகம்ன்னு யோசிச்சுகிட்டே பாக்குறேன்.. உன் கலருக்கு நீ எல்லாம் அவளைப் பாக்கணும்ன்னு நினைக்கவேக் கூடாது சொல்லிட்டேன்.."

இஸ்ரா என்னை விட கொஞ்சம் கலர்.. பொது நிறம்ன்னு சொல்லலாம்.. நான் கருப்பு தான்.. ஆனா களையான முகம்ன்னு எங்க அம்மா சொல்லுவாங்க.."

"போடா இஸ்ரா.. உன் மேல ஒரு சட்டி தார் ஊத்தி என் கலரைக் கருக்கல்ல என் பேரை மாத்தி வசிக்குறேன்டா" அப்படின்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேன்.

"டேய் இஸ்ரா எஙக் மெட்ராஸ்ல்ல இதே மாதிரி நிறைய வெள்ளையா இருக்க பொண்ணுங்களை நானும் பாத்துருக்கேன்.. சும்மா அலட்டாதடா.. ஆனாலும் ஒரு பொண்ணுக்காக என்னை அசிங்கமாப் பேசிட்டல்ல நீ.. பாருடா"
நான் எதே எதோ புலம்பிக் கொண்டே நடந்தேன். இஸ்ரோ அவன் வேலையிலே தீவிரமாய் இருந்தான்.

அப்போ டக்குன்னு என் மண்டையிலே அந்த ஐடியா வந்துப் போச்சு.. அவ்வளவு தான்.. எனக்கு சந்தோஷம் பொங்கிருச்சு..


"EXCUSE ME THIS IS YOUR GRAND MOTHERS HEN, SHE WAS LOOKING FOR IT.. I FOUND THIS IN THE BUSHES"

அய்யா தான்.. மெட்ராஸ்காரன்லேய்.. சும்மா இங்கீலிஸ்ல்ல அடிச்சு விட்டுட்டு அந்தப் பொண்ணு கையிலே கோழியை வச்சு அமுக்குற சாக்குல்ல லேசாத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். தொட்டத்துக்கு கூச்சத்தோடு ஒரு 'சாரியும்' சொல்லி அவளுடைய புன்னைகையைப் பரிசா வாங்கி சட்டைப் பைக்குள்ளே போட்டுகிட்டேன்.

"யார் மரியா பேரன் மெட்ராஸ்காரனா.. வாய்யா.. நல்ல காரியம் பண்ண.. கோழியைக் காங்கல்லன்னு முழி பிதுங்கிப் போச்சு.. காபிக் குடிச்சுட்டு போ" எஸ்தர் பாட்டி கூப்பிடவும். நான் தலையைத் திருப்பி நம்ம சகாக்களின் மறைவிடம் பார்த்தேன். இஸ்ரா கண்களில் ஏவுகணை எரிச்சல் கிளம்பியது. மற்றவர்களுக்கோ கோழி கோவம் தலைக்கு ஏறியது...

"WHAT IS YOUR NAME AND WHAT DO U DO?"

மறுபடியும் தெரிஞ்ச இங்கிலீஷை அள்ளி விட்டேன்.

"என் பேர் ரேச்சல்.. காலேஜ் சேரப் போறேன்...நீ என்னப் பண்ணுற? " நிறுத்தி நிதானமாய் தமிழில் பேசினாள்.

"ஓ நல்லாத் தமிழ் பேசுற நீ...நானும் காலேஜ் சேரப் போறேன்..." பத்தாவது ரிசல்ட்க்கு பாயைப் போர்த்தி பாதி ராத்திரியிலும் பயந்து கிடக்கும் நான் கூச்சப்படாமல் சொன்னேன்..

"OH NICE MEETING YOU " என்றாள் ரேச்சல்.

"உன் பேரைச் சொல்லல்லயே"

"ஜெரீஷ்.. நீ ஜெர்ரின்னு கூப்பிடு போதும்" என்று ப்டு ஸ்டைலாகச் சொல்லிவிட்டு.. இஸ்ராவைப் பார்த்தேன்.. அவன் என் மீது கொலை வெறி கொண்டு நிற்பதை நான் சொல்லித் தான் உங்களுக்குத் தெரியணுமா என்ன?

விடுமுறை அனுபவங்கள் தொடரும்

Thursday, June 21, 2007

கவி 33:ஒரு மழை காதல் கவிதை



கார்மேகம்
காலமெல்லாம்
சேர்த்து வைத்தக்
காதலை
இந்த மழை நாளில்
பூமிப் பெண்ணுக்கு
செலவழிக்குதோ...

காதலைச் சொல்ல
மின்னலை பூச்செண்டுக்குதோ
இடிச் சத்தத்தை
இதயத்தின் ஒலியாக்குதோ

மண்மகளை முத்தமிட
மழையெனப் பொழியுதோ
வெட்கத்தின் விழைவென
மழைத் தொட்ட
மண்மகளும் விலகி ஓடியதோ

மழையின் ஒவ்வொரு துளியிலும்
மனம் காதலைக் கொண்டாடியது
மழையின் கடைசி துளி
மவுனமாய் மனம் கிளறியது..

உயிரை உருக்கி
உணர்வைச் செதுக்கி
பத்திரமாய் உனக்க்கென உள்ளுக்குள்
பூட்டி வைத்திருந்த காதல்

மழை வாசம் முகர்ந்து
மனமெங்கும் உன் வாசம் பரப்ப
ஞாபகங்கள் நிழலாய்
நெஞ்சினில் படிய
தொண்டைக் குழிக்குள்
தொக்கியக் காதலை

இன்னுமொரு முறை
இரக்கமின்றி கொன்றேன்..
இறந்தப் போனக் காதலுக்கு
இரண்டு கண்களிலும் அழுதேன்

மழை வரும் போதெல்லாம்
மரணமும் சேர்ந்தே வருகிறது
எனக்கும்
எனக்குள் இருக்கும் காதலுக்கும்

Thursday, May 17, 2007

கவி 32:ஒரு காதலும்.. இன்னுமொரு யுத்தமும்..

நீண்ட இரவுகள்
சட்டென விடியும்
ஒற்றை பொழுதினிலே..

ஆடைகளை மறந்து
முழுக்க முழுக்க
காதலை உடுத்திய
முந்தைய இரவு
கட்டில் முனையில்
காதலியின் கருவிழியோரம்
கண்ணீர் மொட்டுக்களாய்

காதலும் கண்ணீரும்
இயல்பான கூட்டணியோ..
கண்ணீர் பூக்கும் முன்
இதழ் முத்தம் கொண்டு
அதை மூடியதில்.
காதல் பூத்தது..

காதலின் வாசம்..
கட்டி இழுக்க..
இன்னொரு தேரோட்டம்
துவங்கியது..
கெஞ்சலும்..
கொஞ்சலும்..
ஆயுதமென
தாக்குதல் தொடர்ந்தது..

மன்மதப் போரின்
அரைப் புள்ளியில்
மயிலறகாய் வருடியபடி
காதலின் காயங்களுக்கு
மருந்திட்டுப் போனது
காதலியின் குழல்
கலைத்துப் போன
என் தேசத்துக்
குறும்பு காற்று..

காற்று நுழைந்த
ஜன்னல் வழியே
கண் சிமிட்டுகிறது..
காதலி கன்னம் போல்
சிவந்து நிற்கும் ரோசாப் பூ..


மறுபடியும் மறுபடியும்..
காதல் வானிலை
மழை பொழிய
எத்தனிக்க..
வெட்கத்தை
வாரியிறைத்து
விடைப் பெறுகிறாள் காதலி..

படுக்கையில்
களைத்திருக்கும்
காதலை உள்ளுக்குள்
ஓயவெடுக்கச் சொல்லிவிட்டு
கண்கள் கனவுலகம்
பயணம் போகினற
விநாடி பொழுதில்..
எங்கிருந்தோக் கேட்கிறது..

செல்லடிக்கிறாங்க...
செல்லடிக்கிறாங்க..

என் காதல்
ஓய்வெடுக்க மறுத்து
ஓடுகிறது..


கண் சிமிட்டிய
ரோசாப் பூ...

கிழிந்துக் கிடக்கும்
காதலியின் கன்னத்தில்
கசங்கிக் கிடக்கிறது..

காதலின் அலறல்..
அடுத்த குண்டுச் சத்தத்தில்
அமிழ்ந்துப் போகிறது..
யுத்தப் பூமியில்
முத்தச் சத்தங்களுக்கு
என்ன வேலை?

துப்பாக்கியின் கேள்விக்குப்
பதில் சொல்ல
காதல் அங்கு
உயிரோடில்லை...

Monday, April 30, 2007

கவி 31:இதுவும் ஒரு கவிதை தான்




ரகசிய பார்வைகள்
மெளன மொழிகளில்
வரைந்த ஒரிரு கடிதங்கள்

காற்றில் கலந்து
ஜன்னல் தட்டும்
ஆசையின் முத்தங்கள்

கசக்கிய காகிதங்களில்
வழியும் கவிதைகளில்
இருந்து எட்டிப் பார்த்துச் சிரிக்கும்
அன்புத் தோழியாய் தமிழ் மொழி..

அம்மாவின் புடவையில்
அழகாய்த் தானிருக்கிறாய்
கணினித் திரையில்
மாயாஜாலச் சித்து வேலை..

அதிகாலைக் கனவினில்
மாலைகள் மாற்றியாச்சு
பலிக்கும் என்றும
பக்கத்து அறை நண்பன் சொல்லி வைக்க
பிள்ளைகளுக்குப் பேரும் கூட வைச்சாச்சு..

வாழ்க்கையின் அர்த்தம்
எப்படி யோசித்தாலும்
வட்ட நிலா முகத்தழகி
வீட்டு வாசலுக்கே வழி சொல்ல..

முடிவெடுக்க முடிந்தது
வார்த்தைகளுக்கு வண்ணம் அடித்து
அழகிய ஆரமொன்று
கோர்த்து எடுத்து
விருப்பம் சொல்ல நினைக்கையிலே

கல்யாணம் என்று
கலகலப்பாய் பத்திரிக்கை
நீட்டுகிறாள்
கருவிழிக்குச் சொந்தக்காரி..

சேர்த்து வைத்த ஆசைகளை
கண்ணீராய் கண்ணுக்குள் புதைத்து விட்டு
வலியிலே பூத்த பூவாம் புன்னகையை
கல்யாணத்தின் முதல் பரிசாய்
கன்னியிடம் கொடுத்து நடக்கிறேன்...

(பி.கு.இது சிந்தாநதி அறிவித்துள்ளப் போட்டிக்காக எழுதப்பட்ட கவிதை)

Monday, March 05, 2007

கவி 30:காதல் சாதி

காதலுக்குக் கண்ணில்லை
பஞ்சாயத்தில் முடிவானது..
அடப் பாவிகளா..
நீங்கள் எழுதியத் தீர்ப்பில்
தெரிகிறதே
உங்களுக்கு இதயமில்லை
என்று..
கண்ணைத் தொலைத்தாலும்
வாழலாம்..
இதயம் தொலைத்து....
ஊர் பஞ்சாயத்தின்
இறுதி ஊர்வலத்தில்
காதல் கல்லெறிப்பட்டது...

காதலை வெட்டிப் புதைப்பாங்களாம்..
மார்தட்டினார்கள்..
எங்கே வெட்டுங்கள் பார்ப்போம்..
வீசிய அரிவாள்களின் முனையில்
பூக்கள் பூத்த மாயமென்ன..
காதலை உரசியதில்
அரிவாள்களும்
அர்த்தம் பெற்றன...
அதைப் பிடித்தவர்களோ
அர்த்தம் இழந்தனர்...

காதல் செய்தால்
கொளுத்துவோம்
கொளுத்துங்கள்..
கொழுந்து விட்டு
எரியட்டும் காதல் சோதி...
திக்கெட்டும்
தெரியட்டும்
காதலின் சேதி...

கட்டி வச்சி அடிப்போம்..
காதலை காயப்படுத்தி
கலவரப் படுத்துவது
அவர்கள் நோக்கம்
காயம்பட்டால் என்ன
காதலுக்கு காதலே
அல்லவா மருந்து..
காதல் அங்கே
மறுபடி மறுபடி
சுரந்தது.....

ஆயுதங்கள் அனுதாபப்பட்ட
அளவிற்கு
ஆட்கள் அசையவில்லை..
கைகளாலே
காதலுக்கு
எழுப்பினார்கள்
கல்லறை..
காற்றில் உதிர்ந்தப்
பூக்கள் அதில் படர...
கல்லறைக்கு மேல் அமர்ந்து
காதல் சிரித்தது...

காதல் தொலைந்தது
சொல்லியப் படி
கூட்டம் கலைந்தது
ஊர் சுத்தமானதாய்
கொட்டடித்து
முழங்கியது...

உன்னையும் என்னையும்
பிரித்தவர்கள்
சுத்தமாக்கிய
ஊர் வீதிகளிலே
கைகோர்த்தப் படி
உன் காதலும்
என் காதலும்
நடந்துப் போகிறது...

என்ன செய்ய
முடிகிறது
இவர்களால்...!

Saturday, February 17, 2007

கவி 29:ரசிகன்டா



இவனுக்கு அறிமுகம்
தேவை இல்லை...

இவன் இன்னொரு
முகத்திற்காக
தன் சொந்த முகம்
தொலைத்தவன்

கரவொலிகளும்
விசில் வேட்டுகளும்
இவன் அடையாளங்கள்

நடித்தவன்
நிமிர்ந்து எழும்ப
இவன் வீழ்ந்துக் கிடப்பான்

அவன் புகழ்
வெளிச்சத்தில் திளைக்க
இவன் விழிகளை
விற்று இருளை
உடுத்திக் கொள்வான்

தலைவனுக்குக்
கொடிக் கட்ட
இவன் தன்
கோவணத்தையும் துறப்பான்

பிள்ளைப் பால்
கேட்டுக் கதறும்
செவிடனாய் இவன்
கட் அவுட்டிற்கு
பாலாபிஷேகம் செய்வான்

கட்டி வந்தவள் கூந்தலில்
கால் முழப் பூ சூட்டாத இவன்
போஸ்டர்க்கு மலர் மாலை
மாட்டி மகிழ்வான்

அவன் அப்படித் தான்
அவன் ரசிகன்டா..
நாளைய முதல்வர்களின்
இன்றைய தொண்டன்டா..

Friday, February 16, 2007

கவி 28:இன்னொரு காதலர் தினத்தில்



நீ தினம் எனக்குக்
காதலைச் சொன்னப்
பொழுதுகளில் புரியாமல்
போன செய்தி...

பின்னொரு காதலர் தினத்தில்
தொண்டைக்குழிக்குள்
பந்தாய் எழும்பிக்
கண்ணிடுக்கில் கண்ணீர் துளியாய்
கலவரப் படுத்தியது என்னை..

கனவுகளின் பின்னே
கால் வலிக்க ஓடியதில்
காணாமல் போனவைகள்
பட்டியலில்
முதலிடம் எனக்கும்
அடுத்த இடம்
நம் காதலுக்கும்..

பந்தயங்களில்
பரிசுப் பணம்
பாதைகளில்
புகழாரம்..
சேர்த்து சேர்த்து
சோர்ந்தக் கதையின்
சிக்கலானப் பக்கங்களாய்
வாழ்க்கை..

சோர்வையும் சோர்வடிக்க
வித்தைகள் பழகி
விண்ணைத் தொட்டு
விடுவேன் மூச்சை
என்ற படி ஓடியவன்
சிகரங்களின் சிங்காரத்தில்
சில்லிட்டு நிற்கும் போது..

என்னைச் சுற்றிலும்
பேரிரிச்சலாய்
ஆரவார அலைகள்
எனக்குள்ளே
மயான அமைதி...

நிழல்களில் பதுங்கியதில்
நிஜங்களைத் தொலைத்தாயிற்று..
நினைவுகளில் நனைந்தப் படி
ஞாபகங்களில் வெந்துப் போகிறேன்

மொத்தமாய் முடிவதற்குள்
ஒரு முறை
வந்துப் போ

உன் புன்னகையால்
என்னை பெற்று எடு..
இல்லையேல்
உன் நெருப்புப் பார்வையால்
எனக்குக் கொள்ளியிடு..

Saturday, February 10, 2007

கதை 12:அவன்...இவன்.... அவள்

வானத்தில் இருக்க நட்சத்திரங்களை ஒண்ணு ஒண்ணா எண்ண முயற்சிப் பண்ணிகிட்டு இருந்தான் அவன். வானம் மனுசனோட மனசு மாதிரி.. கிட்டத் தட்ட அந்த மனசோடப் பிரதிபலிப்புங்கறது அவன் எண்ணம். மனசு மாதிரித் தான் வானமும் தனக்குள்ளே எத்தனை எத்தனைப் புதிர்களை ஒளிச்சு வச்சிருக்கு அப்படின்னு அவன் எதோ யோசனையிலே வானம் பார்த்துக்கிட்டே நின்றான்.

"வானம் எனக்கொரு போதி மரம்... நாளும் எனக்கு அது சேதித் தரும்..." ரேடியோப் பொட்டியிலே அந்நேரத்துக்கு ஏத்தாப்புல்லத் தான் பாட்டும் ஓடிச்சு.. கையிலிருந்த கிளாஸ்ல்லருந்து கடைசிச் சொட்டு வோட்காவை வாயில் கவிழ்த்தான். தொண்டைக்குழிக்குள் அந்த ஒரு துளி உருண்டோடியது. அந்த கிறக்கத்தில் இன்னும் அண்ணாந்து வானம் பார்த்தான். நிலா அவனுக்குன்னு பொழிஞ்ச மாதிரி இருந்தது. நிலா மழையில் மொத்தமாய் நனைந்தப் படி எதோ சிந்தனையில் ஆழ்ந்தான்.

அவன் பக்கத்துல்ல இவன் வந்து உட்கார்ந்தான்.. ரயில் பயணமாகும் தண்டவாளம் மாதிரி அவனுக்கும் இவனுக்கும் சினேகிதம்.. எண்ணங்களாலும் விலகிச் சென்றாலும் அவர்களின் பயணமும் பாதையும் ஒன்றிப் போயிருந்தது. இவன் பார்வையை மரத்திலிருந்து அசையும் இலைகள் மீது பதித்தான். இலைகளின் நடனத்தைத் தாளம் போட்டு ரசித்தான். அப்ப்டியே சவ்ரம் செய்யாத தன் மோவாக் கட்டையை இவன் விரல்களால் பதமா இதமா வருடி விட்டுக் கொண்டே இருந்தான்.

அப்படியே மணித்துளிகள் இரவின் பிடியில் கரைய.. மௌனம் அவனுக்கும் இவனுக்கும் இடையே அமர்ந்து வேடிக்கைப் பார்த்தப் படி இருந்தது.

ஒரு கட்டத்தில் மௌனத்திற்கு விடைக் கொடுத்து வார்த்தைகளுக்கு வரவேற்புரை எழுதினான் இவன்.. அவனும் தன் பங்குக்கு வார்த்தைகளுக்கு உபசாரம் செய்தான். மிதமானப் போக்கினில் பேச்சுப் பரிமாற்றம் நடக்க ஆரம்பித்தது. இவன் அதிகமாய் பேசினான். சிக்கீரம் களைத்துப் போனான். அவன் அதிகம் பேசவில்லை. பேசுவதற்கு அவனிடம் ஒன்றுமில்லை.. எதோ யோசனையில் தன்னைத் தானே மூழ்கடித்துக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் அவன் பேச ஆரம்பித்தான்.. வார்த்தைகளை வரிக்கு ஒன்றாய் பொறுக்கி எடுத்துப் பேசுவது போல் பேசினான். பேசலாமா என ஒரு ஆயிரம் முறை அவன் மனம் சிந்தனைப் பாறைகளில் மோதி உடைந்த வலியினை அவன் குரல் உணர்த்தியது.. இவனுக்கு அது புரிந்தது.

"இன்னிக்கு நான் அவளைப் பாத்தேன்..கிட்டத்தட்ட ஆறு வருஷத்துக்கு அப்புறம் அவளைப் பார்த்தேன்"

அவள் ..என்ற சொல் கேட்டதும் இவன் கண்களில் ஆச்சர்ய் மின்னல்கள் அவசரப் பிறப்பெடுத்து அதை விட அவசரமாய் செத்துப் போயின்....

"அவ..இன்னும் மாறல்ல.. அப்படியேத் தான் இருக்கா.. அதே வேகம்...அதே குறுகுறுப்பு.. சிரிப்பு.. அதே.. " எதையோச் சொல்ல வந்து நாக்கை மடக்கிக் கொண்டான். அது என்னவென்று புரிந்துப் போனதில் இவன் கன்னம் சிவக்க சிரித்தான்.

"அந்தச் சந்தோசம் தான் இன்னிக்குக் கொண்டாட்டத்துக்குக் காரணாமா?" காலியான சாராயப் பாட்டில்களைச் சுட்டிக்காட்டி மறுபடியும் சிரித்தான்.

"பழசு எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா..அதிகமாப் பேச முடியல்ல... அவ அவசரமாக் கிளம்பிட்டா..எதோ ஒரு அட் ஏஜென்சியில்ல காபி ரைட்டரா இருக்காளாம்.. விசிட்டிங் கார்ட் கொடுத்தா.."

கார்ட் வாங்கி அவள் பெயர் பார்த்தான் இவன்.. அதில் அவள் பெயர் மட்டுமே இருந்தது.. இவனிடம் இருக்கும் கேள்விக்கான விடை இல்லை.

"இன்னும் அதே... தளுக்காத் தானே இருக்கா" வார்த்தையில் நாகரீகம் தவறாமல் இருக்க மெனக்கெட்டான் இவன். ஆனாலும் தோற்றான்.. "உன்னைக் கூப்பிட்டாளா.. போடா போய் ஜமாய்.." சொல்லும் போதே இவன் முகத்தில் ஒரு கேலிப் புன்னகை..

அவளைப் பத்தி என்ன ஆனாலும் சரி.. ஓங் கிட்டச் சொல்லக் கூடாது.. பேசக் கூடாதுன்னு தான் நினைச்சிகிட்டு இருந்தேன்.. என்னப் பண்ணித் தொலைக்கிறது. இந்த நாலு சுவத்தையும் உன்னையும் விட்டா நான் வாய் விட்டு பேசறதுக்கு வேற நாதி இல்லாமப் போயிடுச்சே.." காலியான மதுப் பாட்டில்களை காலால் உருட்டினான் அவன்.

இவன் அவன் கரம் பிடித்து அழுத்தினான்..

"பேச ஆரம்பிச்சாச்சு ..முடிச்சுட்டுப் போ" என்றான் இவன்.. வானம் நெட்டி முறித்தது. காற்று கொஞ்சம் வேகம் எடுத்து இவன் முகத்திலும் அவன் முகத்திலும் மாறி மாறி அறைந்தது.

"உனக்கு என்னிக்குமே அவளைப் பிடிக்காது.. இது தான் பிரச்சனை.. இது பல வருசமா நமக்குள்ளே நடக்குற சங்கதி தானே" அவன் இவன் முகம் பார்த்துச் சொன்னான். இவன் பதில் சொல்லாமல் நக்கலாய் சிரித்தான்.

"சரி.. அவளுக்கு எந்த இளிச்சவாயனாவது மாட்டியிருக்கானா.. இல்லையா.. அந்த விவரத்தைச் சொல்லு"

"அவ நம்மக் கூடப் படிச்சப் பொண்ணு.. கொஞ்சம் நாகரீகமாப் பேச முடியாதா உன்னாலே.." அவன் குரலில் வெப்பம் வெளிவந்தது.

"சரிப்பா.. அவளுக்கு எந்த ஆம்பளையாவது தாலின்னு ஒண்ணைக் கட்டிட்டு தொட்டானா.. இல்ல இன்னும் .ம்ம்ம் புரியல்லயா.. உன் நாகரீகப் பாஷையிலே அவளுக்குக் கல்யாணம் ஆயிருச்சான்னுக் கேட்டேன்"

இவன் எகத்தாளம் ஏணி போட்டு ஏறியது.. அவன் இவனைப் புழுவைப் பார்ப்பதுப் போல் பரிதாபப் பார்வைப் பார்த்தான். இவன் அந்தப் பார்வையை அசட்டைப் பண்ணி விட்டு ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைத்து நிலாவைப் பார்த்து வளையம் வளையமாப் புகையை ஊதினான். புகையின் ஊடே மீண்டும் இவனைப் பார்த்தான்.

"நீ கேட்டிருந்தா.. உனக்கும் கூடத் தான் ஒரு வாய்ப்புக் கொடுத்திருப்பா.. நீ தான் நட்பு நாயகம் நாட்டாமைன்னு விட்டுட்ட... மாப்ளே அவ அப்படி தானேடா" இவன் அவனை மீண்டும் வம்பிழுத்தான்.

இவன் பேச்சுக்கு அவன் எதிர்ப் பேச்சு பேசுவதையே பாவம் என்று எண்ணியவன் போல அவன் வேறு பக்கம் திரும்பி நின்றான்..

"என்ன கஷ்ட்டாமாயிருக்கா.. உண்மை கசப்புத் தான் அப்பு.. சிக்சர் அடிச்சுட்டு அந்தச் சந்தோசத்தை சரக்குப் போட்டு கொண்டாட வேண்டிய நேரத்துல்ல நீ சிந்தாந்தம் இல்ல பேசிகிட்டு இருந்த சிட்டு சில்லுன்னு சிலிப்பிகிட்டுப் போயிருச்சு.. ஆனாலும் சிட்டு செமச் சிட்டுப்பா" இவன் ஓய்வதாய் இல்லை.

"அவளுக்கு ஆம்பளைத் தேவைடா.. அவப் பார்த்த பயல்வ லிஸ்ட் போட்டா கிட்டத் தட்ட மைலாப்பூர் தொகுதி வாக்காளர் பட்டியல் அளவுக்கு நீளும்... அவ ஒரு பக்காத் தே......சரி உனக்காக நாகரீகம் பார்த்து அந்த வார்த்தையை வாயோட வச்சிக்குறேன்.." என்று வாய்க்குள் அந்த வார்த்தையைச் சொல்லி முடித்தான் இவன்.

அவனுக்கு எதோ ஒரு கட்டத்தில் பொறுமை போயிருக்க வேண்டும்.. வேகமாய் இவன் பக்கம் திரும்பி இவன் வாயிலிருந்தப் பாதி புகைந்தச் சிகரெட்டைப் பிடுங்கி தூர எறிந்தான். இவன் சிகரெட் விழுந்தத் திசையை ஏக்க்மாய் பார்த்தான். அவன் கண்கள் கலங்கி துடித்தன..

"நிறுத்து.. யார் மேல உனக்குக் கோவம்.. வருசக்கணக்கா ஏன் இந்த் கோவம்.. உன் கோவம் உனக்குள்ளே உக்காந்து உன் புத்தியைத் திங்குது.. இப்போ வெறும் வக்கிரம் மட்டும் தான் உனக்குள்ளே வாழ்து.. அவ அப்படித் தான்னு சொல்லுறீயே நீ யார் அவளுக்கு சர்டிபிக்கேட் கொடுக்க? என்னத் தெரியும் உனக்கு?"

இவனுக்கு அவன் கோபம் பரிச்சயம் தான்.. ஆனால் இன்று அவன் கோப வெப்பத்தின் முன்னால் இவன் மனம் மூச்சுத் திணறி தடுமாறியது.

"அவ என்னிக்காவது உன்னை வான்னு கூப்பிட்டாளா.. இல்ல நீ அவளை எவனுக்காவ்து ரேட் பேசி கூட்டிக் கொடுத்துப் பொழச்சியா...போடாங்க... சொல்ல வந்துட்டான் "

அவன் கோபம் அவன் நெற்றியில் வேர்வைத் துளிகளாவும் பொங்கி வழிந்தது. இவன் மனம் மூச்சுக் காற்றுக்காக ஏங்கியது. மீண்டும் மௌனம் அழையாத நண்பனாய் அங்கு வந்து இவனுக்கும் அவனுக்கும் நடுவே அமர்ந்துக் கொண்டது. மௌனம் நல்ல நண்பனைப் போல் அவனையும் இவனையும் ஆற்றியது. மெல்ல தேற்றியது. மீண்டுமாய் விடைப் பெற்று வில்லெனக் கிளம்பியது.

"இதுக்கு முன்னால் நான்.. நீ.. அவளைப் பத்திப் பேசியிருக்கோம்...ஆனா உன் கிட்ட இவ்வளவுக் கோபம் நான் பார்த்தது கிடையாது.. வேணாம்டா அவளுக்காக உனக்கும் எனக்கும் சண்டை வேணாம்.. மன்னிச்சுருடா" இவன் மருகினான்.

"எதுக்கும் ஒரு எல்லை இருக்கு நண்பா.. எனக்கும் இருக்கு.. நான் கோபப்ப்டல்ல நண்பா.. உன்னைப் பார்த்துப் பரிதாபப்படுறேன்.. வருத்தப்படுறேன்...திசைகள் நாலு.. ஒவ்வொரு திசையில்ல இருந்துப் பாக்கரவ்னுக்கும் ஒவ்வொரு மாதிரி வாழ்க்கைத் தெரியும்...ஆனையை தடவுன பார்வை இல்லாதவங்க மாதிரி.. யானை இப்படித் தான் இருக்கும்ன்னு சொல்லுறவன் நீ.. நீ பிடிச்ச முயலுக்கு மூணு கால்ங்கறது உன் கருத்து.."

"ஏன் நான் பிடிச்சது நொண்டி முயலா இருக்கக் கூடாதா?" இவன் இடைச் செருகினான்.

"ஒத்துக்கிறேன் உன் பதில்ல புத்திச்சாலித் தனம் இருக்கு.. அந்தப் புத்திச்சாலித் தனம் மட்டும் உன்னை விளங்க வச்சுராது.. நேராவேச் சொல்லுறேன்.. உனக்கு அவ்ளைப் பிடிக்கல்ல.. அப்புறம் எதுக்காக அவ்ளைப் பத்திப் பேசணும்.. அசிங்கப்படுத்தணும்.. ஏன்.. ?"

"அவ நாலுப் பசங்களோட நெருக்கமா நின்னுச் பேசுறது.. தோள்ல்ல கைப் போடுறது.. பைக்ல்ல டக்குன்னு ஏறுறது.. கொஞ்சம் மாடர்ன்னா ட்ரெஸ் பண்றது.. இது தான் அவளை தே... சரி நீயே சொல்லாத வார்த்தை நான் ஏன் சொல்லணும்... அப்படின்னு முடிவு பண்ணக் காரணம்...நம்ம ஊர்ல்ல தாண்டா ஒரு பொண்ணோட கற்பை அளக்க இப்படி எல்லாம் அளவு கோல் கண்டுப் பிடிச்சிருக்கீங்க... சூப்பர்டா என்னப் பண்றது? அவ மார்பைப் பார்த்த அளவுக்கு அதுக்குப் பின்னாடி இருக்க அவ மன்சைப் பாக்கற பாக்கியம் உனக்குக் கிடைக்கல்லயே"

அவன் முகத்தில் இவனைப் பார்த்து ஏளனப் புன்னகை ஒன்று பூத்தது.

"அவளை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்ன்னு பார்த்து இருக்க.. கதைக் கட்டி விட்டவன் கிட்டக் கதைக் கேட்டிருப்ப...எனக்கு அவளை நல்லாத் தெரியும்டா.. அவ அழுகைய நான் பார்த்து இருக்கேன்டா.. அவ வெக்கத்தைப் பார்த்து இருக்கேன்டா...இந்தா இதே கையிலே அவ அழுதக் கண்ணீரைத் தாங்கி இருக்கேன்டா...அவ எல்லாம் தேவதைடா அவக் கூட வாழக் கொடுத்து வச்சுருக்கணும்டா" ப்ச் என்று உதட்டைப் பிதுக்கினான் அவன்.
அவன் கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சி வசப்பட்டான்...

"காதலா? உனக்கும் அவளுக்கும் காதலா?" இவன் மெதுவாகக் கேட்டான்..அவன் இவனைப் பார்த்து சத்தமாய் சிரித்தான்...

"உனக்கு ஒண்ணுமே புரியாதா.. இல்ல புரியாத மாதிரியே வாழ்ந்து முடிச்சுருவியாடா?"

அவன் கேட்டக் கேள்வி இவனை உறுத்தியது...

இரவு இன்னொரு விடியலுக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொண்டிருந்தது.

அவன் தூங்கிப் போனான்.. இவன் தூக்கம் தொலைத்திருந்தான்.. அவள்.. புரிந்தவர்கள் புரிந்துக் கொள்ளுங்கள்

Wednesday, January 31, 2007

கதை 11: இது விச்சுவின் கதை - பகுதி 2

இது விச்சுவின் கதை - பகுதி 1

விச்சுவின் கதை இந்தப் பகுதியிலிருந்து நந்தினியின் கதையா மாறிடுச்சு... ஆனாலும் இதை நாம விச்சுவின் கதையாவேப் பார்ப்போம் என்ன ரைட்டா? இனி நந்தினியின் கதை உங்கள் பார்வைக்கு...

போட்டோவில் வலது ஓரம் இருப்பவனைப் பார்த்தவுடன் எனக்குச் சிரிப்பு வந்தது.

"விச்சு இவன் தான் செல்லப்பனா?"

"ஆமா இவனே தான்... எப்படிக் கண்டுபிடிச்சீங்க?"

"எல்லாம் ஒரு யூகம் தான்..அந்தப் புட்பால் மேட்ச்ல்ல சேம் சைட் கோல் போட்டு உங்க கிட்ட அடி வாங்குன பையன் தானே ஒரு அப்பாவி முழி அப்படியே இருக்கே "

"அவனா அப்பாவி.. அடப் பாவின்னு சொன்னா அவனுக்கு கரெக்ட்டாப் பொருந்தும்.
புட் பால் மேட்ச்க்கு வந்துப் பொண்ணுங்கப் பாக்குறாங்கன்ன ஓடனே பையனுக்கு அடுத்தவன் கோலுக்கும் எங்க கோலுக்கும் வித்தியாசம் தெரியாமப் போச்சு.. ஆர்வத்துல்ல எங்க கோலுக்கே பாலை அடிச்சி.. ஸ்கூலைத் தோக்க வைச்சுட்டான்..."

"ம்ம்ம் அது சரி... விளையாடத் தெரியாதப் பையனை நீங்கத் தானேடா டீம்ல்ல சேர்த்தீங்க..."

"ஆள் கம்மின்னு சேர்த்தோம்...அதுக்குன்னு..." விச்சுவின் மொபைல் சிணுங்கியது. அவன் எழுந்துச் சென்றான்.

செல்லப்பனை எனக்குத் தெரியும். நேரடி அறிமுகம் இல்லையேத் தவிர செல்லப்பனின் கதைகள் அனைத்தும் எனக்கு அத்துப் படி. செல்லப்பன் கிட்டத்தட்ட விச்சுவின் பள்ளிக்கால கைப்புள்ளன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு அப்புராணி. அவனை உசுப்பேத்தி அவன் உடம்பை ரணகளமாக்கிப் பார்ப்பதில் விச்சுவுக்கும் அவன் கடைசி பெஞ்ச் நண்பர்களுக்கும் அலாதி பிரியம்.அந்தக் கதைகளைத் தனியா தொடராவேப் போடலாம். மீண்டும் நந்தினிக்கு வருவோம். விச்சு போன் பேசி முடித்து விட்டு கையில் முறுக்குகள் நிறைந்த தட்டோடு வந்தான்.

"நந்தினி யார்ன்னு சொல்லலியே...கூட வேற நிக்குற..."

"தேவ்.. நம்ம செல்லப்பன் ஒரு பொண்ணைத் தீவிரமாக் காதலிச்சான்னு சொல்லுவேனே அந்தப் பொண்ணு தான் இந்த நந்தினி..."

நான் மறுபடியும் நந்தினியைப் பார்த்தேன்... நம்ம வெயில் படத்துல்ல வர்ற பாவனா மாதிரி பளிச்சுன்னு இருந்தாப் பொண்ணு.. கண்ணுல்ல ஒரு ஈர்ப்பு சக்தி.. உதட்டுல்ல புன்னகைத் தொழிற்சாலைன்னு அழகாப் பாந்தமா இருந்தா.

"செல்லப்பன் எங்க கூட இருந்தாலும் நல்லாப் படிப்பான்.. கிளாஸ் பர்ஸ்ட்.. அந்த நந்தினி கிளாஸ் செகண்ட்.. நான் எல்லாம் எதோ பாஸ் ஆவேன்.. என் கூட இருந்த காசி என்னை விட மோசம்.. இந்த செல்லப்பனாலே எனக்கும் காசிக்கும் எப்பவுமே கெட்டப் பெயர் தான்.. எல்லா வாத்தியார் கிட்டயும் பின்னாலே அடி வாங்கியே காசிக்குப் பழுத்துப் போச்சு.. நான் கொஞ்சம் பட்ட.. கழுத்துல்ல கொட்டைன்னு மெயின்டெயின் பண்ணி பிரம்புக்கு தப்பிச்சுக்குவேன்..."

லாரா இன்னொரு சிக்ஸ் அடிக்க அதில் லயித்த விச்சு கதையைச் நிறுத்திட்டு கைத் தட்ட ஆரம்பிச்சான். அவன் மறுபடியும் கதைச் சொல்ல ஆரம்பிக்கும் வரை நான் இரண்டு நெய் முறுக்கினை எடுத்து வாயில் போட்டேன்.. என்ன ருசிடா சாமி.

"அப்புறம் என்ன நான் ஒரு மாஸ்ட்டர் பிளான் போட்டேன். காசி எனக்கு அதுல்ல கூட்டு.. எங்க கிளாஸேப் பார்த்து மயங்கி நிற்கிற நந்தினி செல்லப்பனை விரும்புறதா அவனை உசுப்பேத்த ஆரம்பிச்சோம்.. காசியும் அதுக்கு ஒத்து ஊதுனேன்..பையன் ஆரம்பத்துல்ல மசியல்ல.. நாங்க மெதுவாப் பல செட் அப் வேலை எல்லாம் செய்து அவன் மனசைக் கெடுத்தோம்.. அப்புறம் என்ன .. ஒழுங்காத் தலைவாரிகிட்டு இருந்தவன் தலையைக் கலைச்சுக் கோதிகிட்டான்... பள்ளிக்கொடம் முடிஞ்சதும் ஜிம்க்கு போக ஆரம்பிச்சான்.. ட்யூஷனுக்கு டைட் ஷ்ர்ட்.. டைட் பேண்ட்.. சைக்கிள்ல்ல எஸ் என் அப்படின்னு ஸ்டிக்கர்ன்னு பயலைக் கிறுக்கு புடிச்சு அலையவிட்டோம்."

"அட பாவிகளா அடுக்குமாடா... ??"முறுக்கைக் கடித்தப் படி நான் கேட்டேன்.

"மச்சி அவ உன்னியத் தான் பாக்குறா.. நீ கிரவுண்ட்ல்ல எக்ஸ்ர்சைஸ் பண்றத அவ நேத்துக் கூடப் பார்த்தாடா..அப்படின்னு நான் சொல்ல..காசி அதுக்கு பயங்கரமா ஆமாப் போடுவான்.. பைய இப்படியே படிப்புல்ல கோல் போட்டுட்டு சதா சர்வ காலமும் நந்தினி நந்தினின்னு திரிய ஆரம்பிச்சான்"

" ம்ம்ம் யப்பா எம்புட்டு நல்ல காரியம் பண்ணியிருக்கீங்கடா " தண்ணி சொம்பை வாயில் கவிழ்த்தேன்.

"எங்களுக்கு அப்படி ஒரு சந்தோசம்.. அப்புறம் எங்கக் கூட சேர்ந்து செல்லப்பனும் அடி வாங்க ஆரம்பிச்சான்.. அரையாண்டுல்ல ஒரு பாடத்துல்ல பெயில் வேற ஆயிட்டான்..."

"சந்தோசமா.. அது வேறயா" வாய் விட்டுச் சொன்னேன்

"காசியும் நானும் மரத்தடியிலே உக்காந்து திருட்டு தம் போட்டுகிட்டு இருந்தோம்.. செல்லப்பன் வந்தான்... எனக்கு ஒரு உடனே இப்போ நந்தினி என்னை லவ் பண்றாளா இல்லையான்னு உண்மைத் தெரியணும்ன்னு கோவமாப் பேசிட்டான்."

"பரவாயில்ல பய உஷாரா ஆயிட்டானா? "

"காசியும் நானும் எவ்வளவோ அவனைச் சமாதானப்படுத்திப் பார்த்தும் முடியல்ல.. அவன் நேரா நந்தினியைப் பாக்கப் போயிட்டான்... நானும் காசியும் அவன் பின்னாடி போறதா வேண்டாமான்னு முடிவு எடுக்க முடியாம அங்கேயே நின்னுட்டோம்.."

தட்டில் முறுக்கு தீர்ந்துப் போய் விட்டதால் விச்சு கீழேப் போய் திரும்பி வரும் போது தட்டில் முந்திரி பக்கோடா எடுது வந்தான்.

"அது நடந்து மூணு நாளா செல்லப்பன் ஸ்கூல் பக்கம் வரவே இல்ல... எனக்கும் காசிக்கும் கொஞ்சம் வருத்தமாப் போச்சு.. செல்லப்பன் வீட்டுக்குப் போனா அங்கே செல்லப்பன் படுக்கையிலே கால் ஓடிஞ்சுப் படுத்து கிடந்தான்.. அவ்ங்க அம்மா செல்லப்பன் சிமேண்ட் ரோட்ல்ல வரும் போது தடுக்கி விழுந்துட்டான் அதுன்னால கால் ஒடைஞ்சுப் போச்சுன்னு சொன்னாங்க. நாங்க அதை நம்பல்ல"

"அப்புறம் என்ன ஆச்சு?"

"செல்லப்பன் எங்களை முகத்துக்கு முகம் பார்க்காமலே பேசினான்.. ஏன்டா பொய் சொன்னீங்க.. நந்தினி என்னைக் காதலிக்கல்லடா.. அவ்வ்ளவு ஏன் என்னிய சுத்தமாப் பிடிக்காதுன்னு சொல்லிட்டா.. தீயிலே விழுந்த தேவாங்கு மாதிரி இருந்துகிட்டு ஒனக்கு எல்லாம் லவ் கேக்குதான்னு அவன் அண்ணன் வந்து கேட்டுட்டுன்னு மென்னு முழுங்குனான்..."

"ம்ம்ம்"

"எனக்கும் காசிக்கும் செல்லப்பனின் கால் எப்படி உடைஞ்சிருக்கும்ன்னு இப்போப் புரிஞ்சுப் போச்சு... எனக்கு கோவம் தலைக்கேறிப் போச்சு.. காசியும் கொந்தளிச்சுப் போயிட்டான்...செல்லப்பன் பயந்துப் போயிட்டான்.. டேய் எங்க வீட்டுல்ல தெரிஞ்சா எங்கப்பா எனக்கு இருக்க இன்னொரு காலையும் ஓடைச்சு விட்டுருவார்டா இத்தோட இதை மறந்துரலாம்டான்னு சொன்னான். அப்போதைக்குத் தலை ஆட்டிட்டு..செல்லப்பன் கால் குணமடையும் வரை காத்திகிட்டு இருந்தோம். நந்தின் எதுவுமே நடக்காதது மாதிரி ஸ்கூலுக்கு வந்துப் போயிட்டு இருந்தது எங்களுக்கும் இன்னும் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது."

"என்னடா செஞ்சீங்க?"

"செல்லப்பன் வீட்டுல்ல ஓய்வா இருந்தது நல்லதாப் போச்சு.. விட்டப் பாடத்தை எல்லாம் படிச்சு பழைய அளவுக்குத் தேறிட்டான். அவன் கால் சரியானதும்.. மூணு பேரும் நந்தினி அண்ணன் வழக்கமா காலேஜ் விட்டு வீடு திரும்பும் வழியில் ஒரு மறைவான இடத்தில் ஒளிந்து நின்று கொண்டோம்.. எங்களோடு துணைக்கு காசியின் சித்தி பையனும் வந்திருந்தான். செல்லப்பனுக்கு வெலவெலத்துப் போனது.. நான் போறேன்டா.. என்னை விட்டுருங்க.. இதெல்லாம் வேணாம்..பயம் போகணும்ன்னா இதைக் குடிங்கடா.. காசியின் சித்தி பையன் ஊத்தி கொடுத்த என்ன எழவையோ ( பிற்காலத்துல்லா நான் கொஞ்சி குலாவும் பீர் தான் அந்த எழுவுன்னு எனக்கு அப்போத் தெரியாது). குடிச்சதுல்ல மூணு பேருக்கும் யானை பலம் வந்துருச்சு...அப்புறம் என்ன... நந்தினி அண்ணன் தனியாத் தான் அந்தப் பக்கம் ... நாலு எருமை அவன் மேல ஏறி ஓடுனா என்ன ஆகியிருக்குமோ அந்த அளவுக்கு அவனைச் சேதப் படுத்தி அனுப்புனோம்"

"நந்தினி உங்க மொகத்தைப் பாக்கமலாப் போனான்.?"

"அவன் முகத்தைத் தான் துண்டால்ல நல்லா மூடி கட்டி வச்சு இல்ல உதைச்சோம்... செல்லப்பனுக்கு எங்கிருந்து தான் வீரம் வந்துச்சோ.. ஏறி ஏறி மிதிச்சான்..."

"ம்ம் பழி தீர்த்துட்டீங்க இல்ல?"

"இத்தோடு எங்க ஆத்திரம் அடங்கவில்லை.. நந்தினி ட்யூஷன் முடிந்து தனியா வரும் வீதியில் அவளுக்காகக் காத்திருந்தோம்.. முக்குல்ல அவளை மடக்கி மிரட்டி எச்சரித்து அனுப்புவ்து தான் எங்கள் திட்டம்... ஆனா காசியின் சித்தி பையன் நந்தினி வந்ததும் திட்டத்தை மாத்திட்டான்.. மாப்பூ உன்னிய பார்த்து கருப்புத் தேவாங்குன்னு சொல்லிட்டான் இல்ல இவ அண்ணன்.. கருப்பு தேவாங்கு எப்படி முத்தம் கொடுக்குமோ அப்படி இவளுக்கு இப்போ முத்தம் கொடுடான்னு உசுப்பேத்த நம்ம செல்லப்பனும் போதையின் தயவில் பொங்கி எழுந்து விட்டான்.."

"அட பாவிகளா விவரம் வில்லங்கமா இலல் போயிருக்கு.."

"எனக்குப் பயங்கரமா ஏறிப் போச்சு.. நான் தட்டு தடுமாறி பாக்குறேன்.. ரெண்டு நந்தினி நிக்குறா அவளுக்கு நாலு கண்ணுல்ல இருந்து தண்ணீ வருது.. என் மனசுத் தாங்கல்ல.. டேய் வேணாம்டா பாவம் மிரட்டிட்டு போகச் சொல்லுங்கடான்னு சொல்லிப் பாக்குறேன்.. கைக்கலப்பு ஆகிப் போச்சு.. அந்த காசியோட சித்தி பையன் என்னப் பொழப்புப் பாத்தானோ அப்போ தெரியாது.. சட்டுன்னுக் கத்தி எடுத்து என் தோள்ல்ல குத்திட்டான்.. குப்புன்னு ரத்தம் பாத்ததும் காசி, செல்லப்பன் எல்லோருக்கும் போதை இறங்கிடுச்சு.. படுபாவிக தலை தெறிக்க என்னை விட்டுட்டு ஓடிப் போயிட்டாங்க... கண்ணைக் கசக்கி கசக்கிப் பாக்குறேன் இப்போ என் முன்னாடி நாலு நந்தினி...கண் இருட்டுது.. போயிடு போயிடுன்னு கையைக் காட்டிட்டு மயங்கி விழுந்துட்டேன்.

தட்டில் இருந்த முந்திரி பக்கோடாவும் முடிஞ்சுப் போச்சு...விச்சு வாங்க தேவ் இப்போ கிளம்புனாத் தான் நாம் சாப்பிட்டு படம் பாக்க போக கரெக்ட்டா இருக்கும். டிவியில் மேட்சும் முடிந்துப் போயிருந்தது. காரில் ஏறி கிளம்புனோம்.

"என்னாச்சு ஏதாச்சுன்னு எனக்குத் தெரியாது... எங்க வீட்டு டிரைவர் வந்து என்னியத் தூக்கிட்டு வந்து வீட்டுல்ல சேத்து இருககார். நம்ம கத்தி குத்து மேட்டரைக் கமுக்கமா முடிச்சு நம்ம பேமிலி டாக்டர் என்னைய் முழுசா எங்க வீட்டுல்ல ஓப்படைச்சுட்டார். தண்ணீப் போட்டதுக்காக எங்க அப்பா என் கூடப் பேசுறதையே விட்டுட்டார்..நான் மறுபடியும் ஸ்கூலுக்குப் போனேன்..வீட்டுக்குக் கூட என்னப் பாக்க வராதா பசங்க கிளாஸ் வாசல்ல என் கையைப் பிடிச்சுகிட்டு அழுதாங்க.. மனசு மறுகிருச்சு... பிளஸ் டூ எக்ஸாம் வந்துச்சு... அதுக்கு முன்னாடி எடுத்தப் படம் தான் அது.. பொண்ணுங்க வரிசையிலே இடம் இல்ல என் பக்கம் கொஞ்சம் இடம் இருந்துச்சு.. நந்தினியா வந்து நின்னா.. என்னைப் பார்த்துச் சிரிச்சா.. யாருக்கும் கேக்காத மெதுவா.. அன்னைக்கு நடந்ததுக்கு சாரி அப்புறம் தாங்க்ஸ்ன்னு சொன்னா. எனக்கு ரொம்ப நெருங்கி வந்து நின்னா.. எனக்கு ஒரு மாதிரி ஆகிப் போச்சு தேவ்.."

இரவுச் சாப்பாடு அதிகம் இல்லை.. ஒரு இரண்டு சப்பாத்தியோட முடிச்சுக்கிட்டு தியேட்டர் நோக்கிக் கிளம்பினோம்...வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆள் கையை ஆட்ட காரை ஓரம் கட்டினான் விச்சு...

"தேவ் இது தான் காசி.. என் ஸ்கூல் மேட்.. தியேட்டர்ல்ல வேலைப் பாக்குரான் ஓனர்.. இவங்க தியேட்டர்ல்ல தான் வேட்டையாடு விளையாடு படம் போட்டிருக்காங்க... மாப்பூ காசி இது நம்ம மெட்ராஸ் ஆபிஸ் பிரெண்ட் தேவ்..."

என்னைப் பார்த்து ஒரு புன்னகையோடு தலையாட்டியக் காசி விச்சுவிடம் எதோச் சொல்லிவிட்டு கிளம்பினான். எதோ அவசரம் என்று புரிந்துக் கொண்டேன்...

"சரி இப்போ செல்லப்பன் எங்கே இருக்கான்?"

"அவன் இப்போ யு-எஸ் போயிட்டான் ஓராக்கிள்ல்ல எதோ பெரிய லெவல்ல இருக்கான் பாத்து ரெண்டு வருஷம் ஆச்சு... கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க இருக்காங்க.. ஆள் தொந்தியும் தொப்பையுமா இருக்கானாம்.. சொன்னாங்க.."

"ஏய்.. என்னப்பா சிமெண்ட் ரோட்டுக்குப் போகமா இப்படி திரும்புற.. நேரு போன ரோட்டுல்ல நானும் போகலாம்ன்னு பாக்குறேன்.. வரும் போதாவது அப்படி வா... சரி சொல்லு இப்போ நந்தினி எங்கே இருக்கா? எப்படி இருக்கா?"

"தேவ்... நந்தினி இப்போ உயிரோட இல்ல்... அந்த சிமெண்ட் ரோட்ல்ல பிளஸ் டூ லீவுல்ல எதிரே வந்த லாரி மோதி ஸ்பாட்ல்லயே இறந்துட்டா...."

கொஞ்ச நேரத்துக்கு என்னால் எதுவும் பேசமுடியவில்லை..

விச்சுவே மௌனம் கலைத்தான்...

"தேவ்.. வரும் போதும் என்னாலே அந்த சிமெண்ட் ரோட்ல்ல வர முடியாது தேவ்.. என்னைத் தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே..."

இல்லை என்பதற்கு அடையாளமாய் என் தலையை அசைத்தேன்.. கார் தியேட்டரை நெருங்கி விட்டிருந்தது. எனக்கு எனோ படம் பார்க்கும் ஆசைத் தொலைந்துப் போயிருந்தது...

இது விச்சுவின் கதையா.. நந்தினியின் கதையா.. நீங்களே சொல்லுங்க...ப்ளீஸ்

Sunday, January 28, 2007

கதை 11: இது விச்சுவின் கதை - பகுதி 1

மூணு வருஷமா விச்சு காரைக்குடிக்கு வரச் சொல்லி கூப்பிடும் போதெல்லாம் என்னால எதாவது காரணத்துன்னாலே போக முடியாமலேப் காலம் ஓடிகிட்டு இருந்துச்சு.. போன முறை அவங்க பெரிய அண்ணாக் கல்யாணத்துக்குக் கூட எங்க செட் பசங்க எல்லாரும் போயிட்டு வந்தாங்க....

விச்சுக்கு என் மேலக் கொஞ்சம் வருத்தம் தான்.. ஆனாலும் அதை எல்லாம் காட்டிக்க மாட்டான். எப்போவும் போல என்னைப் பார்த்தாக் கலகலப்பாத் தான் பேசிகிட்டு இருக்கான். எனக்கும் வருத்தம் தான்.. எப்படியாவது ஒரு தரமாவது விச்சு வீட்டுக்குப் போயிட்டு வந்துடுணும்ன்னு திட்டம் போட்டுகிட்டேத் தான் இருந்தேன்...அந்த நேரம் பார்த்து தான் என்னோட நெருங்குன சினேகிதன் நாகப்பனுக்கு வலையப்பட்டியிலே கல்யாணம்ன்னு கார்ட் வந்து சேர்ந்துச்சு..

வலையப்பட்டியிலே இருந்து காரைக்குடி ரொம்பப் பக்கமாச்சே... விச்சு வீட்டுக்கு போயிட்டு வந்துர வேண்டியது தான்.. முடிவும் பண்ணிகிட்டேன். விச்சு இப்போ பெங்களூர்ல்ல ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியிலே வேலையா இருக்கான். கை நிறைய சம்பளம். அவனுக்கு ஒரு போனைப் போட்டு அந்த வாரக் கடைசியிலே நான் காரைக்குடி வர்ற தகவலைச் சொன்னேன்.. விச்சுவுக்கு ஒரே சந்தோஷம்.. அவனும் கிளம்பி ஊருக்கு வர்றதாச் சொன்னான்.. ஊர்ல்ல பாக்கலாம்ன்னு சொல்லிட்டுப் போனை கீழே வச்சேன்..

அடிச்சிப் பிடிச்சி வினாயகர் சதுர்த்திக்கு ரெண்டு நாள் முந்தி கோயம்பேட்டுல்ல இருந்து திருச்சிக்கு போற ஒரு டப்பா வண்டியிலே இடம் பிடிச்சு உக்காந்துகிட்டேன்...
பொதுவாப் பண்டிகை நேரத்துல்ல பாவப்பட்ட பயணிகள்ட்ட கிட்ட அகப்பட்ட வரையிலே சுருட்டணும்ங்கற முடிவுல்ல டிராவல்ஸ்காரங்க அடிக்கிற கொள்ளைக்கு நானும் தப்பல்ல.. திருச்சிக்கு 500 ரூபா டிக்கெட் செலவு... விச்சுவுக்குத் தெரிஞ்சா பொறிஞ்சுத் தள்ளிருவான்.. எதுவும் சட்டப் படி தான் செய்யணும்ன்னு தீவிரமா இருக்கிறவன் விச்சு...

விச்சுவை எனக்கு ஒரு நாலு வருஷமாத் தெரியும்.. நாங்க இரண்டு பேரும் ஒரு இரண்டு வருஷம் ஒரே இடத்துல்ல வேலைச் செஞ்சுகிட்டு இருந்தோம் அப்ப ஆரம்பமான நட்பு.. விச்சுக்கு அது முதல் வேலை... நெத்தியிலே பட்டை.. கழுத்துல்ல உத்திராச்ச கொட்டை.. எளிமையானக் காட்டன் சட்டை.. எப்பவும் முகத்துல்ல ஒரு அமைதி.. உதட்டோரம் தவழும் ஒரு சிரிப்புன்னு விசுவைப் பார்த்த உடனே எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு...

எதாவது ஒரு புத்தகம் படிச்சிகிட்டே இருப்பான் விச்சு... ஆன்மீகத்துல்ல ஆழம் எவ்வளவு உயரம் எவ்வளவுன்னு அளக்குற முயற்சியிலே சதா சர்வ காலமும் இருந்தான் விச்சு.. கிட்டத் தட்ட ஆரம்பக் காலத்துல்ல அவனுக்கு எங்க வட்டத்துல்ல சாமியார், ஞானப் பழம்ன்னு பாசமும் பரிகாசமும் சரி சம விகிததுல்ல கலந்தப் பலப் பட்டப் பெயர்கள் இருந்தன... அதுல்ல ஞானப் பழம் என்னுடைய உபயம்..

ஒரு சனிக்கிழமை விச்சு ரூமுக்குப் போனேன்.. ஏழு மணி இருக்கும்.. அதான் விச்சு ரூமுக்கு நான் முதல் முறையாப் போனது... ரூம்ல்ல பெரிய சைஸ்ல்ல திரிஷா படங்க.. 'சாமி' மாமியின் கிளுகிளூ படங்கள் அறையெங்கும் அலங்காரமா இருந்துச்சு...

"ஏன்டா விச்சா.. ரூம்ல்ல நீ தனியாத் தானேடா இருக்க..இதெல்லாம் யார் வேலை உனக்கு முன்னாடி ரூம்ல்ல இருந்தவன் விட்டுடுப் போன மாமி படமாடா..." நான் கேட்டு வைக்க..

"அய்யோ தேவ்.. இதெல்லாம் நானேப் பார்த்து பார்த்து சேர்த்து வாங்குனப் படமாக்கும்.. ஒரு நாள் இல்ல ஒரு நாள் என் தலைவியை நான் கல்யாணம் கட்டிக்கப் போறேன்.. இல்ல 2020ல்ல தமிழ் நாடு சி.எம் ஆக்கிட்டுத் தான் ஓய்வேன் இது சத்தியம்ன்னு கிட்ட வந்து என் தலையிலே கை வச்சான்.."

விச்சுவிடமிருந்து ஒரு கெட்ட வாடை வந்தது. என் பாரவையை அவன் அறையைச் சுத்தி ஓட விட்டேன்.. காலி பாட்டில்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய உருண்டுக் கிடந்தன...

தேவ் யார் ஞானப் பழம்... அப்போதும் சிரித்துக் கொண்டிருந்த விச்சு என்னைப் பார்த்துக் கேட்பது போல் இருந்தது...

காரைக்குடி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து நான் சேரும் போது மணி கிட்டத்தட்ட நாலு ஆகிப் போச்சு..

மதிய வெயில் கொஞ்சமும் குறையாமச் சுள்ளௌன்னு மொகத்துல்ல அடிச்சிகிட்டு இருந்துச்சு. சர்பத் கடை ஒண்ணு கண்ணுல்ல பட்டுச்சு.. சில்லுன்னு வாங்கிக் குடிக்கவும் விச்சு வந்து என் தோள்ல்ல கை வைக்கவும் சரியா இருந்துச்சு. கூலிங் கிளாஸ்.. பேடட் ஜீன்ஸ் பேண்ட்...கமான் கெட் மீ அயாம் சிங்கிள் ( COME ON GET ME I AM SINGLE)..
அப்படின்னு எழுதுன டீ ஷர்ட்.. ஆளே மாறி போயிருந்தான் விச்சு...

"தேவ்.. நீங்க கொஞ்சம் உடம்புப் போட்டுருக்கீங்கப் போலிருக்கு.. வீட்டுல்ல எல்லரும் சுகமான்னுக் கேட்டுகிட்டே .ஒரு சிகரெட்டை எடுத்துப் பத்த வச்சுக்கிட்டான்.

என்னோடச் சிரிப்புக்கு அர்த்தம் புரிஞ்சுதோ என்னவோ... என்னையும் டீ ஷ்ர்ட்டையும் மாறி மாறி பார்த்தான்..

"அய்யய்யோ தேவ்.. அப்படி எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துறாதீங்க... இது என் பர்த் டேக்கு எங்க டீம் பசங்க வாங்கிக் கொடுத்த கிப்ட்.. எங்க டீம்ல்ல நான் மட்டும் தான் பேச்சுலர். அதான் ஓட்டுணும்ன்னு இப்படி வாங்கிக்கொடுத்துட்டாங்க.."

இன்னொரு சர்பத் சொல்லியிருந்தேன் அதுவும் வந்தது.

"ம்ம் கோயிலுக்கு எல்லாம் போற இல்ல?"

"மனமே கோயில் அதுல்ல இருக்க சிந்தனையே இறைவன்... நீங்க படிச்சது இல்லையா... படிக்கணும் தேவ்.." என்ற படி சிரித்தான் விச்சு.

சர்பத்தும் சிகரெட்டும் ஒரே நேரத்தில் முடிந்தன.. விச்சு எனக்கும் சேர்த்து காசுக் கொடுத்தான். சான்ட்ரோ கார் ஒன்று பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே நின்றது. அதில் விச்சுவைத் தொடர்ந்து நான் ஏறினேன்.

கார் காரைக்குடி வீதிகளில் சீறி ஓடியது...

"ம்ம் காரைக்குடி நல்லாத் தான் இருக்கு.. பெரிய பெரிய வீடு... ஹே வேட்டையாடு விளையாடு.. புது படமெல்லாம் இங்கே ரிலீஸ் ஆகுமா?"

"தேவ்.. என்ன நினைச்சிங்க எங்க காரைக்குடி பத்தி... நேருவே நேர்ல்ல வந்துட்டுப் போயிருக்கார் தெரியும் இல்ல.. அழகப்பா செட்டியார் நேரு வரும் போது அவர வர்வேற்க தனியா சிமெண்ட ரோடே போட்டார்ன்னாப் பாருங்க.. எங்க ஊர் பெருமைய..." விச்சு உற்சாகமாச் சொல்லிகிட்டு வந்தான்.

விச்சுவின் வீடு அழகாயிருந்துச்சு. வீட்டு வாசலில் இருந்த பெரிய நாயைப் பார்த்தாக் கொஞ்சம் பயமா இருந்துச்சு. விச்சு ராம்போ என்ற அந்த நாயைப் பற்றி ஏற்கனவே என்னிடம் பலக் கதைகள் சொல்லியிருந்தான். ராம்போவிடம் என்னைப் பற்றி சொல்லியிருப்பானோ என்னவோ.. அது என்னைப் பார்த்து வாலாட்டியது.

விச்சுவின் பெற்றோர் அறிமுகம்.. வீட்டைச் சுற்றி பார்க்கும் படலம் என அரை மணி நேரம் செலவானது.. மாடியில் இருக்கும் விச்சுவின் அறைக்க்குப் போய் கால் நீட்டி உட்கார்ந்தோம்.

"அப்புறம் விச்சு.."

"என்ன தேவ் சொல்லணும்.. பெங்களூர் வாழ்க்கையும் அங்கேப் பொங்கி வழியுற டிராப்பிக்கும் கொஞ்சம் கொஞ்சமாப் பழகிப் போயிருச்சு.. ஆபிஸ் அம்சமா இருக்கு..மாமா வீட்டுச் சாப்பாடு.. ஐ பாட்ல்ல நம்ம இளையராஜா பாட்டு..சுஜாதாவோட திருவரங்கத்து தேவதைகளை நாலாவது வாட்டியாப் படிக்கிறேன்.. வாழ்க்கைப் போயிட்டு இருக்கு.." விச்சு சிரித்தான்.

"அண்ணனுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சு.. நீ மட்டும் தான் பாக்கி... எப்போ உனக்கு?" நான் மெதுவாக் கொக்கிப் போட்டேன்.

"என்ன அவசரம் தேவ்... மெதுவாப் பண்ணுவோம்..இப்போ இந்தாங்க ஈ.எஸ்.பி.என் பாருங்க.. ஓங்க மெட்ராஸ்ல்ல எல்லாம் இந்த சேனல் வராது..பெஸ்ட் ஆப் லாரா போடுறான் பாருங்க.." என டிவியில் மூழ்கினான் விச்சு..

"ஒரு வேளை நம்ம ஆபிஸ் வனிதா ஓ.கே சொல்லியிருந்தா.. இன்னேரம் ஒரு புள்ளக்கு நீயும் அப்பன் ஆகி இருப்பியோ" நான் அடுத்த கொக்கியைப் போட்டேன்..

"அஹா அந்த மேட்டரை இன்னும் நீங்க மறக்கல்லியா..விடுங்க தேவ் அந்தப் பொண்ணுக்கு இப்போ கல்யாணம் ஆகிருச்சு.. அதுவுல்லாமல் அப்படி எல்லாம் எனக்கு வனிதா மேல எந்த ஆசையும் கிடையாது.. சும்மா நீங்களும் பசஙக்ளும் சேர்ந்து என்ன ஓட்டுறதுக்கு அவ பெயர் ஒண்ணு மாட்டிகிச்சு.." அவன் மறுபடியும் டிவியில் லாரா விளாசுவதை கண் கொட்டாமல் பார்க்க ஆரம்பித்தான்.

தட்டில் இருந்த குழி பனியாரங்களின் சுவையில் நாக்கு சற்று களைத்துப் போயிருந்தது. நல்ல ருசி.. செட்டி நாட்டு பக்கம் பலகாரத்துக்கு குறைவு இருக்காதுன்னு தெரிஞ்சவ்ங்கச் சொன்னது சரியாத் தான் இருக்கு.விச்சுவின் ஸ்கூல் போட்டோக்களைப் புரட்ட ஆரம்பித்தேன்.

கிட்டத்தட்ட அவன் பள்ளி நண்பர்கள் எல்லாரையும் பற்றி அவன் என்னிடம் கதை கதையாய்ச் சொல்லியிருக்கிறான் என்பதால் ஆர்வத்தோடு படங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.. எல்லாப் படங்களிலும் விச்சு பக்தி பழமாய் புன்னகைப் பூத்துக் கொண்டிருந்தான்...

"யார்டா இந்தப் பொண்ணு.. உனக்கு ஸ்கூல் காலத்துல்ல பொண்ணுங்க சினேகிதம் எல்லாம் உண்டா..? அதுவும் இவ்வளவு கிட்டக்க நின்னு எடுத்துக்குற அளவுக்கு நெருங்குன சினேகிதமா?" இது கொக்கியா எனக்கேத் தெரியாத போதும் கேட்டேன்.

"இந்த்ப் போட்டோ இங்கேயா இருக்கு.... நந்தினியோடப் போட்டோவாச்சே...தேவ் அது ஒரு பெரியக் கதை..." விச்சுவின் முகத்தில் ஒரு இனம் புரியாத உணர்வு பளிச்சிட்டது. என்னால் அது என்ன வென்று அறிந்துக் கொள்ள முடியவில்லை..

வெயிட்டீஸ் படிக்கிற உங்களூக்கும் சந்தேகம் வந்து இருக்குமே.. இது விச்சுவின் கதைன்னு சொல்லிட்டு இப்போ நந்தினி ஒரு பெரியக் கதைன்னு டிராக் மாறுதேன்னு.. இன்னும் கொஞ்சம் வெயிட்டீஸ்ங்க...

நந்தினியின் கதையும் சொல்லுறேன்...சீக்கிரமாவேச் சொல்லுறேன்.. கதை விரைவில் பக்கம் 78ல் வெளிவரும்...

இது விச்சுவின் கதை - பகுதி 2

Monday, January 22, 2007

கவி 27: இன்னும் பெய்யும் மழை - 3


மழைப் பிடிக்குமா?
என கேட்டேன்
மழையில் முத்தம் பிடிக்கும்
என்கிறாய்
மழை வரட்டும்
என்றேன்
அவசரமாய்
அரை வாளி
தண்ணீரை தலையில் கவிழ்த்து விட்டு
என்னைப் பார்த்து
கண் சிமிட்டுகிறாய்

சாயங்காலம் வரை
அலுவலகம்
உன் ஞாபகம்
என்னருகே வேணும்
ஏதாவது கொடேன்..
கொஞ்சும் கெஞ்சலாய் நான்...
படுக்கை உதறி
அதில் உதிர்ந்து கிடந்த
உன் மல்லிகைப் பூக்கள்
சேகரித்து
என் சட்டைப் பையில் போட்டு
சிணுங்கலாய் சிரிக்கிறாய் நீ...

என்னது இது..
தொலைபேசியின் வண்ணம்
சிவப்பா மாறியிருக்கு?
ம்ம்ம்...அரைமணிக்கொரு தரம்
அலுவலகத்தில் இருந்து
கூப்பிட்டு
சிவக்க சிவக்க
முத்தம் கொடுத்துட்டு
எதுவும் தெரியாத மாதிரி
கேக்குறதைப் பார்..
செல்லமாய் முறைக்கிறாய் நீ..
சிரிக்கிறேன் நான்..

சாப்பாடு ருசியோ ருசி...
எப்படி?
சொல்ல மாட்டேன் என்று
அடம் பிடிக்கிறாய்..
போ.. நானே கண்டுபிடிக்கிறேன்..
உன் வெட்கத்தை
சமையலில்
சரி பாதி கலந்தாயோ?
உன் வெட்கத்தை
நான் தான் ஏற்கனவே
ருசித்திருக்கிறேனே...

நான் வீடு
திரும்பும் போது
என்னை வரவேற்க
என்ன உடுத்திக்கட்டும்
என்னைக் கேட்கிறாய்?
ம்ம் எப்பவும் போல
உன் புன்னகையை
உடுத்திக்கடா
நான் சொல்ல..
ம்ம்ம்.. அது இல்ல
உடையைச் சொல்லுங்க என்கிறாய்..
அட கொஞ்சம் பொறு..
நான் சீக்கிரம் வந்துடுறேன்..
என்னையே உடுத்திக்கோன்னு..
நான் சொல்ல
போய்யான்னு சொல்லிட்டு
போனை வைத்துவிடுகிறாய்..

இன்னும் பெய்யும் மழை - 1 படிக்க

இன்னும் பெய்யும் மழை - 2 படிக்க

Thursday, December 14, 2006

கவி 26:டிசம்பர் பக்கங்கள்

டிசம்பர் மாதம்..
போர்வைக்குள் தூக்கம்..
மெதுவாய் திறக்கும்
என் இமைகளின்
இடையினில்
பூக்களைச் செருகிச்
செல்கிறாய்...

உன் புன்னகை..

சூடு பறக்கும்
காலைக் காபி..
ம்ம்ம் பருகும் போது
பரவசம்....
கோப்பை நுனியில்
மிச்சமிருப்பது

உன் முத்தம்...

போர்வை விலக்கிச்
சோம்பல் முறிக்க...
தேகம் நெளிக்கிறேன்..
என் செல்கள்
ஒவ்வொன்றிலும்
முந்தைய இரவினில்
குடிப் புகுந்த

உன் வெட்கம்...

ஜன்னல் வழியே
குளிர் காற்று
முகத்தில் அறைய
மூச்சு காற்றில்
மிஞ்சி நிற்கும்

உன் வெப்பம்.....

சன்னமாய் ஒலிக்கும்
சின்னதொரு பறவைக்
குரலின் வழியே
என் விடியல்
அறிவிக்கும்

உன் சிணுங்கல்...

இப்படி
டிசம்பர் மாதம்
என் டைரியின்
மொத்தப் பக்கங்களும்
சேமித்து வைத்திருப்பது

உன் காதல்...

Tuesday, December 05, 2006

கதை11:அப்பா - பாகம் 2

அப்பா பாகம் 1

மறுபடியும் பஸ் கிளம்பிப் போகவும் நான் டீ குடிச்சு முடிக்கவும் சரியா இருந்துச்சு.


சென்னையிலே ஒரு சாப்ட்வேர் கம்பெனியிலே எனக்கு வேலைக் கிடைச்சு வாழ்க்கை ஒரு மாதிரி ஓட ஆரம்பிச்சது. ரஞ்சனியும் சென்னைக்கு வந்துட்டா, ஒரு அனிமேஷன் கம்பெனியிலே வேலைக்குச் சேர்ந்துட்டா. அப்புறம் என்ன எங்கள் காதல் நாளுக்கு நானூறு எஸ்.எம்.எஸ் முந்நூறு மிஸ்ட் கால், இரு நூறு ஈ மெயில்ன்னு எல்லா சாப்ட்வேர் மக்கள் காதல் மாதிரி ரொம்ப ஜோராவே வளர்ந்துச்சு.

ஒவ்வொரு நாளும் ரஞ்சனி என் வாழ்க்கையில் எனக்கு கடவுளால் கிடைத்தப் பொக்கிஷ்ம்ன்னு வாழ்க்கையைக் கொண்டாட ஆரம்பிச்சேன்.

ஒரு நாள் என்னைப் பார்க்க ஒரு அம்பது வயசு மதிக்கத் தக்க நபர் ஒருத்தர் என் அலுவலகத்திற்கு வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் லேசாப் புன்னகைத்தார். அவர் முகத்தில் அந்த புன்னகையையும் மீறி ஒரு பயங்கர அழுத்தம் இருந்ததை என்னால சட்டுன்னு கவனிக்க முடிஞ்சது. கவனிச்சேன்.

"நீங்க தானே அஸ்வின்?"

"ஆமா.. ஆனா நீங்க யார்ன்னு எனக்குத் தெரியல்லயே? " என்று தாடையில் கை வைத்து சாக்ரட்டீஸ் போஸ் கொடுத்தேன்.

"நான் அப்பா.. ரஞ்சனியோட அப்பா.." என்று மறுபடியும் புன்னகைத்தார் அந்த மனிதர். நான் தடுமாற்றமாய் கைக்குலுக்கினேன்.

"உங்க் கூடக் கொஞ்சம் பேசணும்.." என்றார் ரஞ்சனியின் அப்பா.

"ஸ்யூர்..." என்ற படி அலுவலக நண்பனுக்கு ரிசப்ஷனில் இருந்து கால் செய்து அவசர வேலையா ஒரு மணி நேரம் வெளியே போறேன் அந்த மொக்கை மேனேஜரை எதாவதுச் சொல்லி சமாளிடான்னு சொல்லிட்டு ரஞ்சனியின் அப்பாவோடு கிளம்பினேன்.


அன்று மாலை ரஞசனியை நுங்கம்பாக்கம் காபி டேவில் சந்திக்கும் போது என் முகத்தில் சந்தோஷம் இல்லை.

"ரஞ்சு உண்மையாவே நீ என்னை லவ் பண்றீயா சொல்லு?"

"ஏன் நாலு வருஷமா வராத சந்தேகம் இப்போ திடீரென்னு வந்து இருக்கு.. உனக்கு என்னாச்சு?" அந்த மீன் கண்கள் என்னைக் கொக்கிப் போட்டப் படி பார்த்தன.

"ரஞ்சு நான் உங்க அப்பாவைப் பார்த்தேன்..பேசினேன்...உனக்கு அப்பா இல்ல செத்துப் போயிட்டார்ன்னு என் கிட்ட எதுக்காகச் சொன்ன?"
அவள் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து திரும்பி கொண்டேன்.. ரஞ்சனி எதுவும் பேசாமல் கட கடவென எழுந்து காபி டேவை விட்டு வெளியே நடந்தாள்.

எனக்கு என்ன செயவது என்றே தெரியவில்லை.. காபி ட்ரேவோடு என் முன் நின்ற சர்வரின் பரிதாபப் பார்வை இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. காபிக்கான பணத்தை அவசரமாய் பர்சில் இருந்து எடுத்து அவனிடம் கீப் த சேஞ்ச் சொல்லிக் கொடுத்து விட்டு ரஞ்சனியைத் தேடி ஓடினேன். பார்க்கிங்ல் நின்று கொண்டிருந்த ஸ்கூட்டி பெப்ல் அவள் ஏறி உட்கார போன நேரம் நான் குறுக்கேப் போய் கைக் கட்டிக் கொண்டு நின்றேன்.

"என்னை அப்படிப் பார்க்காதே.. நான் அழுதுடுவேன் " என்றாள் ரஞ்சனி

" ஏய் ஏய் இப்போ எதுக்கு அழுவாச்சி...ஏய் ரஞ்சு"

ஸ்கூட்டியில் இருந்து இறங்கி வந்தவள் என்னை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

"ப்ளீஸ் எங்க அப்பாவைப் பத்தி என் கிட்ட பேசாதே.. " அவள் கெஞ்சல் பார்வையில் எனக்கு மொத்தமும் உருகிப் போனது.

நான் ரஞ்சனியைத் தான் காதலிக்கிறேன் அவங்க அப்பா கதை எனக்கு எதுக்குன்னு அப்படியே ரஞ்சனியின் அப்பாவோடு எனக்கு நடந்த சந்திப்பை மொத்தமாய் மறந்துப் போனேன். காதல் குறைகளை ஆராய்வதில்லை.. ஆராய் முற்படும் பொழுது அங்கு காதல் நிற்பதில்லை.

பின்னொரு நாளில் மெரீனாப் பீச்சில் ஒரு மாலைப் பொழுதினில் ரஞ்சனி நான் கேட்காமலேப் பேசினாள்...

"அஸ்வின்...எனக்கு ரெண்டு வயசா இருக்கும் போது எங்க அப்பா எங்களை விட்டுட்டுப் போயிட்டார்.."

"இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாரா?"

"தெரியாது.. எங்கம்மா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாங்க"

"எனக்கு அப்பாங்கற மனுஷன் தேவைப் படும் போது அவர் வர்றல்ல.. இப்போ அவர் எனக்குத் தேவையே இல்ல.. "

அப்பா என்ற உறவினை உதறி ஒதுக்கியதற்கானக் காரணத்தை ஒரே வரியில் சுருக்கமாய் சொல்லிவிட்டாள் ரஞ்சனி..

"எங்கம்மா இன்னொரு கல்யாணம் பண்ணாலும் என்னை ஒதுக்கல்ல.. எதோ ஒரு ஹாஸ்ட்டல்ல சேத்து எதோ ஒரு வழியிலே எனக்குக் கரை சேர வழி காட்டுனாங்க...கண்ணன் சார் எனக்கு அப்பாவாக முடியல்லன்னாலும் ஒரு பாதுகாப்பாவது இருந்தார்"

"கண்ணன் சார் யார்?"

"எங்கம்மாவோட இரண்டாவது புருஷன்"

"அப்பாவாம் அப்பா.. எங்கேப் போனார்.. அவரைத் தேடி நான் காத்திருந்த சாயங்காலங்கள் எவ்வளவு தெரியுமா? ஒரு நாள் கூட அவருக்கு திரும்பி வர்ணும்ன்னு தோணல்லியே"
ரஞ்ச்னியின் கண்கள் கலங்கவில்லை. உதடுகள் ஒவ்வொரு மூறையும் அப்பா என்ற சொல்லை உச்சரிக்கும் போது துடித்தன.

நான் மௌனமாகவே இருந்தேன்.

"அஸ்வின் உனக்கு இது புரியாது .. இது இருபதைஞ்சு வருஷக் கோபம்... ஏக்கம்... தவிப்பு...வலி.. உறவுகள் வார்த்தையில் மட்டும் இல்ல.. அது ஒரு வாழ்க்கை அஸ்வின்.. பொறுப்புக்களைச் சுமந்து செய்யணும் அஸ்வின்.. இல்லன்னா HELL WITH ALL THE RELATIONS"

பீச்சில் சுண்டல் விற்றுக் கொண்டிருந்த பையன் ரஞ்சனியின் அலறல் சத்தம் கேட்டு ஒரிரண்டு சுண்டல் பாக்கெட்டுகளைத் தரையில் சிதற விட்டான்.

அதுக்குப் பிறகு ரஞ்சனியிடம் அவள் அப்பாவைப் பற்றி பேசுவதைக் கூடுமானவரை தவிர்த்தேன். அதையும் மீறி எப்போதாவது அந்தப் பேச்சு வந்தால் ரஞ்சனியின் அப்பா கோபம் கூடியதே தவிர கொஞ்சமும் குறையவில்லை.

இதற்கு பிறகு எனக்கும் ரஞ்சனிக்கும் கல்யாணம் நடந்தது. கண்ணன் சாரும் ரஞ்சனியின் அம்மாவும் வந்து ஆசிர்வதித்தார்கள். அவங்கப் பசங்க கூட வந்திருந்து வாழ்த்துனாங்க.. ரஞ்சனியின் அப்பாவும் என்னுடைய விருந்தாளியாய் வந்து மண்டபத்தின் ஒரு ஓரத்தில் நின்று எங்களை ஆசிர்வதித்தார்.

அதே ஊரில் எங்கள் இல்லறம் இனிதாய் தழைத்து ஓங்கத் துவங்கியது. சின்னச் சின்னச் சண்டைகள் அப்பப்போ ஊடல்கள் பின்னாடியே தொடரும் கெஞ்சல்கள் அப்புறம் கொஞ்சல்கள்ன்னு வாழ்க்கை நல்லாப் போச்சு.

ரஞ்சனிக்குத் தெரியாமல் மாதம் ஒரு முறை அவ அப்பாவை நான் போய் பார்த்துட்டு வர்றதை வழக்கமாக்கிட்டேன். ரஞ்சனிக்கும் அவ அப்பாவுக்கு உள்ள பல் ஒற்றுமைகளை என்னால உணர முடிஞ்சது... நாங்க நல்ல நண்பர்கள் ஆனோம்...எப்படியும் ஒரு நாள் ரஞ்சனியும் அவ அப்பாவையும் ஒண்ணு சேர்த்துடலாம்ன்னு நான் நம்பிகிட்டு இருந்தேன்..

இந்த நிலையிலேத் தான் எனக்கும் அவருக்குமான அந்தக் கடைசி சந்திப்பு நடந்துச்சு...

"அஸ்வின்.. தேங்க்ஸ்.. நீங்க எனக்குச் செயத் எல்லா விஷயங்களுக்கும் நன்றி"

அவர் இப்படி பேசும் போது எனக்கு ஒண்ணும் புரியல்ல. அவர் கையிலே ஒரு பழைய டைரி இருந்துச்சு. அதை என் கிட்ட நீட்டுனார். நான் அதை மறுக்காம வாங்கிகிட்டேன்.

"அஸ்வின் நான் அதிக நாள் இருப்பேன்ங்கற நம்பிக்கை எனக்கு இல்ல.. யூ நோ என் ஹெல்த் என்னுடையக் கன்ட்ரோல்ல இல்ல.. ஐ அம் டையிங்..." மறுபடியும் ஒரு புன்னகை.

"என்னுடைய வாழ்கையை நான் முடிக்கப் போறேன்.. ஆனா அதுல்ல முற்று புள்ளி அரையும் குறையுமாத் தான் இருக்கும்.. இந்த டைரி ரஞ்சனிக்கு நான் எழுதுனது.. ஆனா எந்தக் காரணம் கொண்டும அவ இதைப் படிக்கவோ பார்க்கவோ கூடாது.. என்னுடைய பாரத்தை உங்க மேல இறக்கி வைக்கிறேன்.. ஐ யாம் சாரி...."

"சார்.. உங்களுக்கும் ரஞ்சனிக்கும் ஏன் இந்த இடைவெளின்னு என்னால புரிஞ்சிக்க முடியல்ல.. நீங்க தப்பு பண்றவர் மாதிரியும் இல்ல...பட் இருந்தும்..." என நான் நீட்டி முழக்கினேன்.

"ரஞ்சனி அம்மாவை வேற பொண்ணுக்காக நான் விட்டுட்டு வர்றல்ல.. அவங்க அம்மா தான் என்னை இன்னொருத்தருக்காக விட்டுட்டுப் போயிட்டாங்க.." அதிராமல் அலட்டாமல் பேசினார் ரஞ்சனியின் அப்பா.

"கண்ணன் சாரா..." எனக்கு விக்கி வியர்த்துப் போச்சு.

"ப்ச் அது பத்தி பேச வேண்டாமே...தப்பு சரின்னு எதுவும் இல்ல...LET US GET ON WITH LIFE" மென்மையான குரலில் அமைதியாய் சொன்னார். புன்னகைக்க முயன்றார். அவர் முகம் மேலும் விகாரமடைந்தது.

அப்புறம் அவரோட சதாம் உசேன்ல்ல இருந்து இந்தியன் கிரிக்கெட் வரை பல விஷயங்கள் பேசிகிட்டு இருந்துட்டுக் கிளம்புனேன்.

அதுக்கு பிறகு இப்போ தான் அவரைப் பாக்கப் போறேன்...ஆனா அவர் என்னைப் பார்க்கப் போறதும் இலல் பேசப் போறதும் இல்ல..... கண் முழிச்சுப் பார்த்தப்போ பஸ் சேலம் புறநகரை அடைந்திருந்தது.

அவர் கொடுத்த டைரியை பையிலிருந்து எடுத்துத் திறந்துப் பார்த்தேன்...

அதில் ரஞ்சனிக்கு அவர் சேர்த்து வைத்திருந்த சொத்து விவரம்... ரஞசனியின் எல்.கே.ஜி காலம் முதல் கல்லூரி காலம் வரை அவள் அம்மா அவளுக்குச் செய்ததாய் ரஞ்சனி இந்த நிமிடம் வரை நம்பிக் கொண்டிருக்கும் அனைத்துச் செலவுகளுக்கான கணக்குகளும் தேதி வாரியாக தக்க ஆதாரங்களோடு இணைக்கப் பட்டிருந்தன...

கடைசி பக்கத்துல்ல அவரோடக் கையெழுத்தில்...

ரஞ்சு நான் உலகத்தின் சிறந்த அப்பாவா இல்லாமப் போயிருக்கலாம் ஆனா நீ நினைக்கிற அளவுக்கு மோசமான அப்பா இல்லம்மா....

எனக்குள் என் உணர்வுகளை அடக்க முடியவில்லை.. என் கிட்ட எதுக்கு இந்த டைரியைக் கொடுக்கணும்.. கொடுக்காமப் போயிருக்கலாமே.. இந்த சுமையை நான் எதுக்கு சுமக்கணும்....

எங்கிருந்தோ ரஞ்சனி அப்பாவின் குரல் என் காதில் கேட்டது...

"அஸ்வின்.. இனிமே நீ தானப்பா ரஞ்சனிக்கு அப்பா.... என்னுடைய அன்பையும் சேர்த்து அவளுக்குக் கொடுப்பீயா"

என்னப் பதில் சொல்வேன்...I THINK I HAVE A LIFE TIME TO ANSWER THAT QUESTION...!!!