Wednesday, March 01, 2006
கவி 14: எனக்கொரு கனவு
கனவு உண்டு
கல்லெறியப் பட்டுக்
காயப்பட்ட கனவு
உங்களால்
கேலிச் செய்யப்பட்டு
கண்ணீர் சிந்தும் கனவு
இருந்தும்...
அது
என் நம்பிக்கை
என் காயப்பட்டக் கனவுகளுக்கு
மருந்திடுவதே இப்போது எனக்கு
வாழ்க்கையாகிப் போனது
ஏனெனில்
எனக்குத் தெரியும்
என் கனவு
செத்துப் போன
மறுகணமே
நான் செத்துப் போவேன் என்று..
Friday, February 17, 2006
கதை 6: ஒரு அம்மாவின் டைரிக் குறிப்பு
அவசியம் உங்களுக்கு என் பெயர் தெரிய வேண்டுமானால் கொஞ்சம் பொறுங்கள்...
என்னைப் பற்றி சொல்ல என்ன இருக்கு..? என் உலகம் மிகவும் சின்னது. அதில் நானும்...என் இரண்டு தேவதைகளும் அடக்கம்... மூத்தவள் பெயர் ரியா...அடுத்தவள் பெயர் லயா...(எனக்குப் பிடித்தப் பெயர்). மூத்தவளுக்கு வயது 7, அடுத்தவளுக்கு வயது 6...
ரியா என்னுடைய நாடக ராணி... தொட்டதற்க்கெல்லாம் அழுது அடம் பிடித்து சாதிக்கும் குணம் கொண்டவள்...(அவங்க அப்பா மாதிரி).
லயா நிதானமானவள்... நல்லா சிரிப்பா...வேண்டியது கிடைக்காதப் போதும் அவக் கிட்ட இருந்து அந்த சிரிப்பு மறையாது... உலகம் என்னைக் காயப்படுத்தும் போது எல்லாம் எனக்கு மருந்துப் போடுறது லயாவோடச் சிரிப்பு தான்.
இந்த இரண்டு தேவதைகளும் தான் என்னோட ராஜகுமாரன் என்னோட இல்லைங்கற என் ஏக்கத்தை தாங்க எனக்கு சக்தி கொடுக்கிறவங்க... நான் சொன்ன ராஜகுமாரன் எனக்கு மூணாவதாப் பொறந்த பையன்... அவன் பேர் அஷ்வத்.
அஷ்வத் மத்த குழந்தைகள் மாதிரி கிடையாது... இறைவன் எனக்குன்னு விஷேசமாப் படைச்சப் பரிசு அவன். அவனுக்கு மூளை வளர்ச்சி கிடையாதுன்னு உலகம் சொல்லுது. அவனை என்னோட வச்சுப் பார்த்துக்க என்னால முடியல்ல. ஆசை இருந்தும் வசதி பத்தல்ல. அவனுக்கு அதிகமானக் கவனம் தேவைப்பட்டுச்சு. எனக்கு நேரம் போதல்ல. அதான் மனசைக் கல்லாக்கிட்டு அவனை ஒரு இல்லத்துல்லச் சேர்த்துட்டேன். அங்கே அவனை நல்லாக் கவனிச்சுகிறாங்க... அவன் சந்தோஷமா இருக்கான்.
இப்போ அவன் கிட்டார் எல்லாம் வாசிக்கிறான். ரஹ்மான் பாட்டுப் போட்டாத் துள்ளிக் குதிக்கிறான். அவன் சந்தோஷத்தைப் பார்த்து என் மனசும் ஆறுதலடையுது. வாரத்தில்ல இரண்டு நாள் அவனைப் போய் பார்க்கிறேன். ஒரு இரண்டு மணி நேரமாவது அவனோட இருக்கிறேன்.
லயாவுக்கு அவன் மேல பாசம் ஜாஸ்தி. அஷ்வத்தை யாராவது தப்பாப் பேசிட்டா அவ முகத்திலிருந்து சிரிப்புக் காணாமல் போயிடும். மாசம் ஒரு தடவை அஷ்வத்தைப் பார்க்க ரியாவும், லயாவும் என் கூட வருவாங்க.
சம்பளத் தேதியை ஒட்டி அந்தச் சந்திப்பு நடக்கும்.
அஷ்வ்த்துக்கு அவனுக்கு பிடிச்ச ஏ.ஆர்.ரஹமான் சி.டி. ரியாவுக்கு டெம்டெஷன் சாக்லேட், லயாவுக்கு கோல்ட் பிஷ் இதெல்லாம் வாங்கப் பணம் வேணுமே, அந்தப் பணம் சம்பளத்து அன்னிக்குத் தான் கிடைக்கும். அந்த ஒரு நாள் நான் என்னையே மறந்துப் போயிடுவேன். என் குழ்ந்தைகளின் ச்ந்தோஷத்துக்கு முன்னாடி என் மனசு ரெக்கை முளைச்சுப் பறக்கும்....
மத்தப்படி என் வழக்கமான வாழ்க்கை,
காலை 5 மணிக்கு ஆரம்பிக்கும்... லேசாக் கால்களில் அலை வருட பீச்சல்ல ஒரு மணி நேரம் நடப்பேன்.
ஆறு மணிக்கு போர்வைக்குள்ளே ஒளிஞ்ச்சுட்டு இருக்க என் இரண்டு குட்டி தேவதைகளையும் அவங்க உள்ளங்காலை என் விரலால வருடி எழுப்புவேன்.
அவர்களைச் சோப்புப் போட்டுக் குளிக்க வச்சு... சீவி.. சிங்காரிச்சு...ஸ்கூலுக்கு தயார் செய்வேன்.
ரியாவுக்கு முன் நெத்தியிலே ஒரு இரண்டு முடி புரள்ற மாதிரி முடி வாரி விடணும் அப்போத் தான் அவளுக்கு ச்ந்தோஷம். அந்தச் சந்தோஷத்துல்ல பச்சக்ன்னு என் கன்னத்துல்ல அழுத்தி ஒரு முத்தம் கொடுப்பாப் பாருங்க.. அந்தச் சுகம் எனக்கே எனக்காக ஆண்டவன் படைச்சது.
லயா ரொம்பச் சுத்தம் பார்ப்பா.. போடுற உடுப்புல்ல சின்ன அழுக்கு இருந்தாலும் அவ பட்டு முகம் சுருங்கிப் போயிடும்...ரொம்ப் பார்த்துத் துணியைத் துவைக்கணும் அவளுக்கு. I simply love my little angels.
அப்புறம் அவங்க கைப் பிடிச்சுட்டு ஸ்கூல்லுக்குக் கூட்டிட்டுப் போவேன். லயாவும், ரியாவும் மாறி மாறி ரைம்ஸ் சொல்லுற அந்த அழகை நான் அணு அணுவா ரசிச்சு அனுபவிப்பேன்...அப்படி ஒரு ஆனந்தம்.... அதில் இருக்கும்.
அம்மா டாட்டான்னு சொல்லிட்டு ரெண்டும் கிளாஸ் பார்த்து குடுகுடுன்னு ஓடும்.
ரியா மட்டும் யாராவது குழந்தையை அவங்க அப்பாக் கூட்டிட்டு வந்து பைக்கில்ல இருந்து இறக்கி விடுறதைப் பார்த்தா கண்கள்ல்ல ஒரு தீராத ஏக்கத்தோட அப்படியே பார்த்துகிட்டே நின்னுடுவா.
என் இதயம் அந்த வினாடிகளில் அபபடியே சுக்கு நூறா உடைஞ்சுப் போகும். கஷ்ட்டப்பட்டு என்னைக் கட்டுப்படுத்திகிட்டு ரியா கிட்டேப் போவேன். அவ கண்ணைப் பார்த்து நிதானமா அவங்க அப்பா அவளை எவ்வளவு நேசிச்சாருங்கறதைச் சொல்லுவேன். Her Dad was the best in the world ன்னு அவகிட்டே சொல்லுவேன்.
சொல்லும் போதே சில சமயம் என் கண் எனக்கேத் தெரியாம கலங்கிடும். என் கண் கலங்குறது தெரிஞ்ச உடனே லயா என் பக்கமா வந்து நின்னுக்குவா. பெரிய மனுஷி மாதிரி என் தோளை அழுத்திப் பிடிச்சுக்குவா. அவளுக்கு எல்லாம் தெரியுமோன்னுக் கூட நான் நினைப்பேன்.
"ம்மா ஒண்ணுமில்ல.. எல்லாம் சரியாப் போயிடும்"ன்னு அவ வயசுக்குரிய அந்த மழலைக் குரலில் அவச் சொல்லும் போது என் மனசு அப்படியே நெகிழ்ந்து நிக்கும்.
இரண்டு பேரையும் ஸ்கூல்ல விட்டுட்டு வீட்டுக்கு வந்துக் குளிப்பேன்... ஷ்வர்ல்ல தண்ணியைத் திறந்து விட்டுட்டு மனசு ஓயர மட்டும் அழுவேன்.... என் குழந்தைகளின் மனக்காயங்களுக்கு மருந்தாய் நான் தரும் பொய்களை நினைத்து தேம்பி தேம்பி அழுவேன்.
அவன்... ஆம் என் குழந்தைகளின் தகப்பன்.... என் கடைக்குட்டி லயா என் வயிற்றில இருக்கும் போது ஒர் இரவு என்னை ஒரேடியா உதறிட்டுப் போனதை அவங்க கிட்ட நான் எப்படி சொல்லுவேன்....
ரியாவை அவன் ஒரு நாள் கூடத் தூக்கிக் கொஞ்சாத அந்த இரக்கமற்ற செயல்களை அந்த சின்ன உயிர்களுக்கு எப்படி விவரிப்பேன்..
அவன் செத்துப் போனான்... என் பிள்ளைகளுக்கும் எனக்கும் இருக்கும் வரை எந்த நிலையிலும் அவன் அன்பு காட்டவே இல்லை.... இது தான் உண்மை.... ஆனால்... இந்த உண்மைகளை நான் அவன் என்னிக்குச் செத்தானோ அன்னிக்கே அவனோடப் புதைச்சுட்டேன்.....
என் குழ்ந்தைகளுக்கு... ஒரு அன்பான தகப்பன் தேவை.. அதை என் பொய்கள் அவர்களுக்குக் கொடுக்கும்....
என்றாவது இந்தப் பொய்களுக்கு விடைக் கொடுக்கவேண்டி இருக்கும் அது வரை எனக்கும் என் டைரிக்கும் இந்தப் பொய்கள் சுமையாய் இருந்துவிட்டு போகிறது...
ஆங்...என் பெயரைத் தெரிஞ்சுக்குற ஆவல்ல இதுவரைக்கும் பொறுமையாப் படிச்சவங்களுக்கு என் பெயர் சொல்லணும் இல்ல... என் பெயர் அம்மா... இரண்டு குட்டித் தேவதைகளின் அம்மா....கூடவே ஒரு ராஜகுமாரனுக்கும்
கவி 13: உதிர்ந்த ரோஜா

வானத்தில் அந்தியின்
நாணக் கோலங்கள்
அந்தப் பொழுதில்
அரை நிலாவின்
அலங்கார வெளிச்சத்தில்
முழு நிலாவாய்
பக்கத்தில் நீயிருந்தாய்..
மறக்க முடியவில்லை..
நெஞ்சாம் கூட்டில்
பொன் முகம் புதைத்து
பொல பொலவென நீ
வடித்தக் கண்ணீர்..
இன்றும்
இமை மூடினால்
கண்ணுக்குள்
குளம் கட்டுதே...
பூவிரல் தூரிகையால்
என் மார்பின் மத்தியில்
நீ எழுதிய எழுத்து
உளியாய் உள்ளுக்குள்ளே
இறங்கி நிற்குதே...
மறக்க முடியவில்லை..
மரணம் என்னை
மொத்தமாய் விழுங்கும் வரை
மறக்கவும் முடியாத
நிமிடங்கள்...
அந்தி மாலையும்
அரும்பிய இரவும்
ஆரத் தழுவிய
ஆசை நிமிடங்கள்
வானம் வெறித்து
பார்க்க...
மொழி மறந்து
மௌனம் உடையாக
வார்த்தைகள் தொலைந்து
விழிகளில் தேட..
இதழ்கள் வழியே
இதயங்கள் இணைக்கும்
முயற்சியில்
நீயும் நானும்...
உன் மூச்சுகாற்று
உள்ளத்தைஉலையிலிட..
உள்ளும் புறமும்
உன் வாசம் படர..
உணர்வுகள் இடர...
ஒரு வினாடி
மின்னலாய்..
உன் பார்வை
உரசிப் போக....
இடை நெளிந்தாய்...
இருகரம் நடுவினில்
இடைவெளி
ஒரு கரம் உனது...
மறுகரம் எனது....
என் பெருமூச்சுகள்
என் அனுமதியின்றி
உன்னிடம் விடைக் கோரி நிற்க
என் பார்வையில் வெறுமை...
சூரியக் கூட்டுக்கு கதிர்கள்
திரும்பிக் கொண்டிருக்க
அன்று நான்
கண்டதும் உணர்ந்ததும்
இரண்டு அஸ்தமனங்கள்
நீ போனத் திசையில்
மணலில் ஓவியங்கள்
வெற்று பார்வை
நிறைக்கும்
உன் பாதச்சுவடுகள்...
விடியலுக்கு முன்பொழுது
இருட்டில் நானும்
எனக்கு துணையாக
உன் கூந்தல் விட்டுச் சென்ற
உதிர்ந்த ரோஜாவும்....
Wednesday, February 08, 2006
கவி 12:முகங்கள்

(இந்தக் கவிதை என் தாத்தாவின் நினைவாக எழுதப் பட்டது...புகைப்படங்களில் நான் காணக் கிடைத்த அந்த மனித அடையாளங்கள் என் தாத்தா என்பதை நான் நம்புவதற்கே எனக்கு நீண்ட கால அவகாசம் தேவைப்பட்டது...)
வாழ்ந்தும் வாழும் முதியவர்களுக்கு இந்தக் கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்...
ஒற்றை மனிதனுக்கு
எத்தனை முகங்கள்
தாய் பாலில் கழுவியெடுத்தப்
பச்சிளம் பூமுகம்
மழலையின் திரவியம் பூசிய
சிறு பிள்ளை முகம்
பருவத்தின் வாசலில்
பருக்கள் பூத்த முகம்
பால்யத்தைத் தொலைத்துத்
தடுமாறி தவித்த முகம்
இளமையில்
இரும்பு முகம்
இப்படி
எத்தனை முகங்கள்
மணமாலைக்குள்
மணக்கும் முகம்
சிரிப்பைச் சூடிய
சிங்கார முகம்
வாரிசை
வரவேற்ற பெருமை முகம்
முகம் மாற்றி
முகம் மாற்றி
முகவரி கிடைத்ததில்
முகத்திலும் வரிகள்
வாழ்க்கையில் ஏறுமுகம்
வாழ்ந்ததில் வற்றிப் போன முகம்
இறுகிப் போன
இயந்திர முகம்
இற்றுப் போன
இனறைய முகம்
ஒற்றை மனிதனுக்கு
எத்தனை முகங்கள்
தாத்தாவின் புகைப்படங்களைத்
தூசுத் தட்டிப் பார்த்து முடித்தேன்...
Monday, February 06, 2006
கவி11:ஒரு கிராமத்துக் காதல்...

ஒசந்தப் பனை மரத்தடியிலே...
ஒத்த உசுரா நிக்குறேனே சின்னப்புள்ள..
பட்டாளம்ப் போன மாமன்
பட்டாடை கொண்டு வருவான் என்று..
பாதையோரம் விழி பதிச்சு..
பச்சைக் கிளி ஒண்ணு காத்து நிக்குது....
கால்சட்டைப் போட்ட வயசுல்ல...
காதல் கடிதாசுக் கொடுத்து...
பாவி மனசைக் கலைச்சவரே...
பஞ்ச வர்ணமாப் பதிஞ்சவரே..
நெஞ்சமெல்லாம் பொங்குதய்யா
நித்தம் நித்தம் உன் நினைப்பில்...
கண்ணு ரெண்டும் நவாப்பழம்
கன்னம் ரெண்டும் ஆப்பிள் பழம்
கடிச்சுத் தின்னவா கண்மணியே
காதோரம் காதல் சொன்னவரே
உள்ளத்தின் இடுக்கில் எல்லாம்
உன் குரல் தான் கேட்குதய்யா...
உதட்டோடு விரலை உரசி...
உள்ளுக்குள் தீ வைத்தீரே..
இடுப்பின் இடைவெளியில்...
இதயத்தை சொருகிவிட்டுப் போனீரே..
மாராப்பை விலக்காம..
மனசை மட்டும் களவாடிப் போனீரே..
முகத்தோரம் குத்துதய்யா..
முள் முள்ளா உன் மீசை முடி
மூஞ்சுக்குள்ளே சுத்துதய்யா உன்
மூச்சுக் காத்தின் அனல் வீச்சு...
தலை முடிக்கு நாளாச்சு
தண்ணி வச்சு..
கோதிவிட்ட உன் கைவாசம்
கலந்திருக்கே என் கேசத்திலே..
ஓடக் கரையிலே வச்சு..
ஒத்தை முத்தம் நீ கேட்க..
வெக்கத்திலே நான் ஓட...
விழ போனவளைத் தாங்கி நீ பிடிக்க...
இப்பவும் செவந்துப் போகுது அந்த இடம்...
இனிப்பான் உன் நினைப்பு தான் காரணம்.
போருக்குப் போனவரே
போகையிலே சொன்னதென்ன?
காத்திரு செல்லக் கிளி...
கல்யாண வேளை வரும்..
கழுத்துக்கு தாலியும் மாலையும்
கையோடு கொண்டு வருவேன் நிச்சயமா...
சொன்னதைச் செய்யும் சொக்கத்தங்கமே...
சொந்தமெல்லாம் எதிர்பார்த்திருக்க...
ஊரு மொத்தமும் கூடியிருக்க
உனக்காக மட்டுமே
உசுரைப் புடிச்சிகிட்டு நான் இருக்க..
வானம் மழையைப் பூவாத் தூவ..
வந்தாயே ராசா...
மார் மேலத் தேசக்கொடி தாங்கி..
மாலையோட மதுரை வீரனாய்..
மண்ணுக்காகப் போராடிச் செயிச்சுப்புட்டு
மரணத்தேவன் கிட்டேத் தோத்தீராம்
சொன்னாங்க...
சொல்லிக்கிட்டாங்க..
தூரப்பயணம்...
துணை விட்டுப் போனவரே...
இங்கே...இப்போ....
ஓசந்தப் பனைமரத்தடியிலே...
ஒத்த உசுரா நிக்குறேனே சின்னப்புள்ள...
Thursday, February 02, 2006
கவி10: காதல் மாசம்

டீக் கடைகளில்
தினமும் புகையும்...
நண்பர்களின் சிகரெட்டுக்கு
ஊடே என் காதல்...
தங்கையின் கேலியிலும்...
விவரமறிந்த சித்தியின்
கிண்டலிலும்...
வெட்கப்பட்டுப் புன்னகைக்கும்..
என் காதல்....
வானொலிப் பெட்டியில்
நேயர் விருப்பமாய்
வாசிக்கப்படும்...
சின்னத்திரையில்
குறுஞ்செய்தியாய்
குறுக்கும் நெடுக்கும் ஓடும்...
என் காதல்...
மொட்டை மாடி
கட்டைச் சுவரில்...
சாயங்கால
கடற்கரை மணலில்...
தமிழ் பேசும்
என் காதல்...
எங்கும் எதிலும்...
திசைகள் எட்டிலும்...
கண்கள் தாண்டியும்...
ஆழங்கள் உயரங்கள் என
எல்லாவற்றிலும்...
என் காதல்
அவள் மனசு...
அது ஒன்றைத் தவிர...
Tuesday, January 31, 2006
Tuesday, January 24, 2006
கவி8: அவள்

தனிமையின் நிசப்தங்களில்
உதடுகள் முணுமுணுக்கும்
உச்சரிப்பில்
அவள்
பொழியும் மழையில்
என் விரல்கள்
துடைக்க மறுக்கும்
கண்ணீர்
அவள்
பின்னிரவின் இருட்டில்
விட்டம் வெறிக்கும்
வேளைகளில்
மெதுவாய் விலகும்
திரைச்சீலைகள்
அவள்
அரவமற்ற சாலையிலே
நடக்கும் பொழுதுகளில்
விரல் தொட்டிழுக்கும்
காற்று
அவள்
அசையும் காற்றில்
சலசலக்கும் இலைகள்
பேசும் ரகசியங்களில்
அவள்
எனக்குள் என்றுமே
ஆறாத காயமாய்
அவள்
என் சொல்ல முடியாத
வேதனையாய்
அவள்
எனக்கே எனக்கான
ரகசிய வலியாய்
அவள்
மரணத்தின் முத்தம்
என்னைச் சுத்தப்படுத்தும் முன்
என் கல்லறையின்
கடைசி கல்லில்
நான் எழுத்ப் போகும்
ரகசிய வாக்குமூலம்
அவள்
Thursday, January 19, 2006
கவி7: நம்பிக்கை
Tuesday, January 17, 2006
கவி6: மரணம்

எல்லா மரணங்களும்
கண்ணீர் மரியாதைப்
பெறுவதில்லை...
மறைமுகச் சிரிப்புக்களும்...
லேசான் நிம்மதி பெருமூச்சும்..
போதும்...ஒரு மரணத்தின்
மானம் பறிக்க...
வாக்கியத்தின்
வாழ்க்கைப் பறிப்பு
மரணம்...
மூச்சு காற்றின்
முற்று புள்ளி
மரணம்
என்று இருந்தது
ஒரு காலம்...
ஒவ்வொரு மரணத்திலும்
எதோ ஒன்று பிறக்கிறது...
அறியாமையின் மரண்த்தில்
ஞானம் பிறப்பது போல்...
வெறும் காதலுக்காய்...
எனக்குள் எதோ ஒன்று..
செத்துப் போனது...
சீ..தப்பு..தப்பு..
எதோ ஒன்று..
புதிதாய் பிறக்கிறது
Thursday, January 12, 2006
கவி5:தீவுகள்...தீர்வுகள்...
Tuesday, January 10, 2006
கதை5: நட்பென்னும் தீவினிலே - பகுதி 2
இந்தக் கதையின் முதல் பாகம் படிக்க இங்கே சொடுக்கவும்
நட்பென்னும் தீவினிலே - பகுதி 1
அலுவலக வேலை எதிர்பார்த்ததை விட சீக்கிராமவே முடிஞ்சுப் போயிடுச்சு மும்பை மாநகரம் அவசரத்திலும் அவசரமான நகரமாய் சுழன்று கொண்டிருந்தது. சென்னை, பெங்களூர் நகரங்கள் எவ்வளவோ தேவலாம்ன்னு நெனச்சுக்கிட்டேன். மறுநாள் மதியம் தான் சென்னைத் திரும்புதாய் திட்டம். என்னப் பண்ணுறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். எதிரில் இருந்த ஒரு மினி உணவகம் கண்ணில் பட்டது. நெல்லை புட் கோர்ட் என்ற அதன் பெயர் பிடித்ததோ என்னவோ தெரியல்ல..சாலையைத் தாண்டிப் போய் அந்த சாப்பாட்டுக் கடைக்குள்ளே நுழைஞ்சேன். சுமாரா ஒரு 20- 25 பேர் தாராளமா உட்கார்ந்து சாப்பிடலாம். நல்லா தூய்மையாவும் சுகாதாரமாவும் பராமரிப்பு இருந்தது. கல்லாப் பக்கம் பிரேம் செய்யப்பட்ட பெரிய கலைஞர் படம் மாட்டப்பட்டிருந்தது. பக்கத்துல்ல அதை விடக் கொஞ்சம் சின்னதா தளபதி படமும் மாட்டப்பட்டிருந்தது... திமுக அதிமுகவோ கட்சி சார்பு இல்லன்னாலும் கலைஞர். .தளபதி...அம்மான்னு சொல்லி பழகிருச்சு... நம்ம ஊர்கார பைய தான் இங்க கடைப் போட்டிருக்கான் போல இருக்கு..வாய் விட்டே சொன்னேன் வெளியூர் போய் நம்மாளுங்கப் படமோ... பேரையோ....அதுவும் நம்ம தமிழ் மொழியிலே பாத்தாலே வர்ற அந்த சந்தோஷமே தனி தான் போங்க. உள்ளூர்ல்ல தான் வேற்றுமை எல்லாம்... இதுக்குத் தான் உலகமே வானம்ன்னு சிறகை விரிக்கணுமோ என்னமோ?
ஆர்டர் பண்ண கும்பகோணம் காபி வரவும் அதை ரசிச்சு ருசிச்சுகிட்டே கடையை மேலும் நோட்டமிட்டேன்.
விஜய் நடிச்ச சிவகாசி படத்தின் பாட்டை சத்தமா வச்சிருந்தாங்க. " வடு மாங்கா.... செவியைக் கிழித்தது. அயலூர் போய் நம்மூர் குத்துப் பாட்டு கேட்டு ரசிப்பதிலும் ஒரு சுகம் இருக்கத் தான் செய்தது.
"இவ்வளவு பெரிய நகரத்துல்ல அமீதை எங்கே எப்படி போய் தேடுறது...ம்ஹூம்" நம்பிக்கைக் கொஞ்சம் கொஞ்சமாய் தடுமாற ஆரம்பித்தது.
ஆண்டவனாப் பார்த்து அமீதை என் கண் முன்னாடி அனுப்பி வச்சாத் தான் உண்டு.. எனக்குன்னு எந்த வழியும் பிடிபடல்ல.
நான் யோசனையில் இருக்கும் போதே பில்லை என் கையில் கொடுத்துட்டுப் போனான் கடைப் பையன். விலை கொஞ்சம் அதிகம் தான். பரவாயில்லை.. அந்தக் காபி சுவைக்குத் தாராளமாக் கொடுக்கலாம் ஒ.கே தான் எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். பாக்கெட்டில் இருந்து காசை எண்ணிக் கொடுத்துட்டு வெளியே நடையைக் கட்டினேன். மனம் என்னமோ யோசனையை விட்டு இறங்கவே இல்ல.ஆண்டவன் அமீதைக் கண்ணுல்ல காட்டுவானா என்ற அதே நினைப்புல்ல எதிரில் வந்தவர் மீது கவனிக்காமல் டமால்ன்னு மோதிட்டேன்.
அதே தான்.. நீங்க நினைப்பது மிகவும் சரியே
சாரி சொல்லணும்னு திரும்பி முகத்தைப் பாத்தா.... அவன் தான்...அவனே தான்.. அங்கே நின்று கொண்டிருக்கிறான்... ஆண்டவன் சத்தியமா.... நிச்சயமா... இருக்கான்.. நம்புங்கப்பா!!! நான் சொல்லுறேன் அனுபவிச்சு சொல்லுறேன்
"தேவா..." அந்த குரலைக் கேட்டு எவ்வளவு வருஷம் ஆகயிருக்கும். ரெண்டு பேரும் அப்படியே ஒருத்தரை ஒருத்தர் அணைச்சுகிட்டோம். வார்த்தைகள் வர்றல்ல. அந்த அணைப்பிலேயே சில... பல... பரஸ்பர விசாரிப்புக்கள் முடிஞ்சுப் போச்சு.
அமீது...இன்னும் கெத்து கூடி போயிருந்தான்.. லேசாத் தொப்பை. ம்ம் அதுவும் அவனுக்கு அழகாத் தான் இருந்தது. அதே வசீகரமான சிரிப்பு கொஞ்சம் கூடக் குறையாமல் அவன் முகத்தில் தவழ்ந்தது. வழக்கம் போல அவனைப் பார்த்ததும் அவன் உற்சாகம் எனக்கும் தொற்றி கொண்டது. என்னைப் பற்றி.. என் குடும்பத்தைப் பற்றி... ஜெராப் பற்றி....மனோப் பற்றி... ஊர் பற்றி....ம்ம்ம் விட்டுப் போன எல்லா விவரங்களையும் அவன் விசாரித்தான். பேச்சு சுவாரஸ்யத்தில் மறுபடியும் உணவகத்திற்குள் வந்தோம். அவன் சமோசா சுண்டல் தருவித்தான்.
"அமீது .. என் சமோசா சுண்டல் பிரியம் உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு... நீ எதையும் மறக்கல்லடா..."
அமீது கலகலன்னு சிரிச்சான். அவனுக்கு ஸ்பெஷல் டீ சொன்னான். கடைப் பையன் பவ்யமாக் கொண்டு வந்து கொடுத்தான்.
"அப்புறம்.. மாப்பு.. உன் சந்தோஷம் உன் முகத்திலேத் தெரியுது... இருந்தாலும் உன் வாயாலே உன் கதையக் கேட்கணும்டா... எப்படிப் போகுது உன் வாழ்க்கை?"
"அல்லா கருணையிலே வாழ்க்கை எந்தக் குறையுமில்லாம் நல்லாப் போகுதுப்பா."
"அண்ணே வேற எதாவது வேணுமா?" சமோசா சுண்டல் கொண்டு வந்து வைத்து விட்டு கேட்டான் கடைப் பையன். அவன்கிட்டே பணிவு அளவுக்கதிகமாவே இருந்ததுப் போல் எனக்கு தோன்றியது.
" அமீது.. பையன் ரொம்ப பழக்கமா அநியாயத்துக்கு பம்முறான்?" சமோசா சுண்டலை சுவைத்தப் படி கேட்டேன்.
" இங்கே எல்லாரும் நமக்கு பழக்கம் தான் வேண்டப்பட்டவங்கத் தான்"
" ஒஹோ.. மாப்பு இங்கே ரெகுலர் கஸ்டமரோ...அதான் இந்தக் கவனிப்பா?"
"மச்சான்.. ரெகுலர் தான் ஆனா கஸ்டமரா இல்ல... முதலாளியா.... இது நம்மக் கடை தான்"
எனக்கு ஆச்சரியம் ப்ளஸ் சந்தோஷம். நம்ம பையன் மும்பையிலே ரெஸ்டரண்ட் ( நண்பன் ஒனர் அப்புறம் இனி அதை கடை கிடைன்னு அசிங்கமாச் சொல்லிகிட்டு. இனி அது ரெஸ்டாரன்ட் தான்)
" மாப்பி தான் ஓனரா? எனக்கு ஒரே சந்தோஷம்டா"
"இதே மாதிரி இன்னும் ரெண்டு இருக்கு... ஒண்ணு செம்பூர்ல்ல.. இன்னொன்னு.. தாதர்ல்ல... புதுசா ஒண்ணு பாந்த்ராவில்ல ஆரம்பிக்கப் போறேன்..."
அட அட நம்ம பையப் பின்றான்டா. மனசுத் துள்ளிக் குதிச்சது.
" மச்சான் ஒரு நிமிஷம்..." என்று எழுந்து கல்லாப் பக்கம் போனான். நம்ம பைய ஜெயிச்சுட்டான்ங்கற விஷயத்தை உடனே ஜெராவுக்கும், மனோவுக்கும் சொல்லணும்னு மனசு துடிச்சுது..ம்ம்ம் செல்போன்ல்ல நம்பர் தட்டப் போயிட்டேன். இருக்கட்டும்..இப்போ வேணாம்.. அமீது கல்யாணத்துக்கு வந்தா அது ஒரு பெரிய சர்ப்பிரைஸா இருக்கும்ன்னு என் ஆர்வத்தை அடக்கி வச்சேன்.
அமீது கையிலே ஒரு சின்ன பார்சலோட வந்து உட்கார்ந்தான்.
"மும்பை வந்தப்போ என்கிட்டே எதுவுமே இல்ல... படிப்பை பாதியிலேப் பறக்கவிட்டுட்டு வந்துட்டேன்ல்ல.. நீ..ஜெரா.. மனோ.. மூணு பேரும் கொடுத்த உங்க செயின்.. மோதிரம்.. வாட்ச் மட்டும் தான் கையிலே..." அமீது குரலில் ஒரு வித விரக்தி தெறிச்சதை என்னாலே உணர முடிஞ்சுது.
"மும்பை வந்தப்போ ஒரு டீக்கடையிலே கிளாஸ் கழுவுற வேலைக் கிடைச்சுது.. ஆறு மாசம் அந்த வேலைச் செஞ்சேன்." அமீது குரல் உடைந்தது. அவனே அதைச் சரிப் பண்ணிகிட்டான்.
"கொஞ்சம் கொஞ்சமா கஷ்ட்டப்பட்டு.. ஒரு சின்ன டீக்கடை போட்டேன். அதுக்கு முதல் நீங்கக் கொடுத்த பொருள் தான் உதவியா இருந்துச்சு"
அவன் பார்சலைப் பிரித்தான். அதுக்குள்ள செயின்.. மோதிரம்.. வாட்ச்... ஏழு வருஷம் முன்னாடி நாங்க மூணு பேர் அவனுக்கும் அவன் காதலுக்கும் கொடுத்தக் காணிக்கை இருந்துச்சு. நான் கனமான மனசோட அதையெல்லாம் பார்த்துகிட்டு இருந்தேன்.
"என்னிக்காவது இதையெல்லாம் உங்க கிட்டேத் திருப்பிக் கொடுக்கணும்ன்னு தான் பத்திரமா வச்சிருந்தேன்... இந்தா வாங்கிக்க"
எனக்கு பக்கென்றது.அவன் குரலில் ஒரு வெறுமை ஒலிச்சுது. எனக்கு வெடவெடக்க ஆரம்பிச்சது.
"அமீது இப்போ எதுக்கு இதெல்லாம்... இது உன்னோடக் கல்யாணத்துக்கு எங்க கிப்ட் டா.. இதைத் திருப்பிக் கொடுக்காத.. கஷ்ட்டமாயிருக்குடா"
"கல்யாணமா.... வைக்கும் போது கூப்பிடுறேன் வந்து கிப்ட் கொடுங்க...."
அமீது குரல் இரும்பாய் ஒலித்தது.
எனக்கு அதற்கு மேலும் அவனை விவரம் கேட்டுக் காயப்படுத்தவும்... காயம் படவும்... திராணி இல்ல.
மூணு டம்ளர் தண்ணியை மடக் மடக்ன்னு குடிச்சேன். தொண்டைக்குள்ள இருந்த அடைப்பு அப்படியேத் தான் இருந்துச்சு.
"ஏன் தேவா.. அப்போ அந்த வயசுல்ல.. அப்படி நான் அவளைக் கூட்டிட்டுக் கிளம்புனது தப்புன்னு உனக்கு எப்போவாச்சும் தோணியிருக்காடா..?"
சென்னை செல்லும் விமானத்தின் அதிகமானக் குளிரையும் தாண்டி எனக்கு வியர்த்து கொட்டியது.
அமீதின் கேள்விக்குப் பதில் தெரிஞ்சும் என்னால் ஒன்றும் சொல்லமுடியாமல் போனது என் மனத்தைச் சுட்டது.
Monday, January 09, 2006
கதை5: நட்பென்னும் தீவினிலே - பகுதி 1
டர்ன்னு பைக் டையர் தேயுற சவுண்ட்... மாடியிலே இருந்து கீழேப் பார்த்தா... அமீது பையன் யமஹாவில்ல உறுமிகிட்டு நிக்குறான்... ஆகா... மாப்பிள்ளை செமஸ்டர் கொஸ்டின் பேப்பரை உஷார் பண்ணிட்டான் போல.. அதான் பாசத்தோடக் கொடுக்க வந்துருக்கான்னு நான் அடிச்சுப் புரண்டு மாடியிலே இருந்து இறங்கி வந்தேன்.
நான் படிப்பிலே ரொம்ப சூரன் எல்லாம் இல்லை... அதுக்குன்னு ம்க்கும் இல்லை. அமீது புலி... கணக்குல்ல பாயும் புலி... எங்களூக்கு எல்லாம் சொல்லித் தருவான். ஆளு அஜித் மாதிரி கலக்கல் கலரு...கமல் மாதிரி சகலகலாவல்லவன்.... மொத்ததுல்ல ரஜினி மாதிரி ஒரு சூப்பர் ஸ்டார் அவன்...
"என்னடா அமீது?... இங்கே... இந்நேரம்....இது நீ படிக்கிற நேரமாச்சே?
"ஒரு முக்கியமான விஷயம்...உன் உதவி தேவைப்படுது..."
" என் ...ன...?"
" நானும் பானுவும் லவ் பண்ற விஷயம் உனக்கு தெரியும் இல்ல"
"ஆமாத்... தெரியும்... "
"அதுல்ல.. இப்போ பிரச்சனையாயிடுச்சு... விவரம் பானு வீட்டுல்ல தெரிஞ்சுப் போச்சு... அவங்க வீட்டுல்ல ஒத்துக்கல்ல... வேற மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டாங்க"
"இப்போ என்னப் பண்ணப்போறீங்க?"
"மும்பையிலே என் பிரண்ட் ஒருத்தன் இருக்கான்... அங்கே போயிட்டாப் பாதி பிரச்சனைத் தீர்ந்த மாதிரி... அங்கேப் போகணும்"
" ஊரை விட்டு ஓடிப் போறீங்களா? "
" வேற வழி தெரியல்ல"
"இதுக்குப் பானு ஒத்துகிட்டாளா?"
"ரெண்டுப் பேருக்கும் வேற வழி இல்ல"
"சரி சரி...நான் என்னப் பண்ணனும்"
"ஒரு ரெண்டாயிரம் ரூபா பணம் வேணும்.. கிடைக்குமா?"
"என் கிட்டப் பணமெல்லாம் இல்ல.... " சொல்லிகிட்டு இருக்கும் போதே கழுத்துல்ல கிடந்த செயின் கையிலேத் தடுத்துச்சு... யோசிக்காம செயினைக் கழட்டி அவன் கையிலேக் கொடுத்தேன்.
"வச்சிக்க.. இது விலை கரெக்ட்டா தெரியாது..ஆனா என் கிட்ட இருக்கறது இது தான்டா.."
அமீது கண்கள் கலங்கிப் போச்சு... அவன் யமஹா போற வரைக்கும் தெருமுனையைப் பார்த்துகிட்டே நின்னேன்.
செமஸ்டர் அன்னிக்குக் காலையிலே... தேர்வை விட அமீது-பானு மேட்டர் தான் அதிகம் எல்லோராலும் ஆர்வமாய் விசாரிக்கப்பட்டது.
மொத்தக் கூட்டமும் எங்களைச் சந்தேகக் கண்ணோடு தான் பார்த்துச்சு....
"உண்மையைச் சொல்லுங்க.. அமீது உங்ககிட்டேக் கூடவா எதுவும் சொல்லல்ல... நம்ப முடியலியே"
"மூணு நாளா... வீட்டை விடு வெளியேவே வர்றல்ல... நானே பரீட்சை ஜூரத்துல்ல கிடந்தேன்..." இது எங்கள் பங்காளி மனோகரின் வாக்குமூலம்.
"அமீதை நண்பன்னு சொல்லுறதுக்கே வெக்கமா இருக்கு... எங்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லல்ல... இன்னிக்குக் காலையிலேத் தான் எனக்கு விஷயம் தெரியும்" சத்தியம் செய்த்து எங்கள் கூட்டாளி ஜெரால்ட்.
"அமீது இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்ல" ரொம்ப யதார்த்தமாப் பல்டி அடிச்சது நான் தான்....
சந்தேக விட்டு வளையத்தை மெதுவா உடைச்சோம்... மூணு மாசம் ஓடிப் போச்சு.... நான்..ஜெரால்ட்...மனோ... மூணுப் பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்கறதை வேணும்னு தவிர்த்தோம்....யதச்சையா கல்லூரிக்கு மார்க் லிஸ்ட் வாங்கப் போனப்போ மூணு பேரும் பார்த்துகிட்டோம். அப்போ ஜெராத் தான் முதல்ல ஆரம்பிச்சான்.
"அமீது என் கிட்டேச் சொல்லிட்டுத் தான் போனான்... பணம் கேட்டான்... இல்ல என் வாட்ச்சை கொடுத்தேன்...அப்புறம் செமஸ்டர் டைம்... எதுக்கு வீணா அதைப் பத்திப் பேசிகிட்டுன்னு சொல்லல்ல சாரி டா..."
" சாரி எல்லாம் வேண்டாம்... நான் என் மோதிரத்தைக் கொடுத்தேன்..... மனோச் சொல்லறதுக்குள்ளே நான் செயின் கொடுத்த விவரத்தைச் சொன்னேன்.
மூணு பேருக்கும் சிரிப்பு வந்துடுச்சு....
"வீட்டுல்ல செயின், மோதிரத்துக்கு என்னச் சொன்னிங்க..." ஜெராக் கேட்டான்.
"வேற என்னக் காணும்ன்னு தான் சொன்னோம்...." " அடப் பாவிகளா... நீங்களுமா?"
சிரிப்பு தொடர்ந்தது.
"நமக்கு எல்லாம் ஒரு பொண்ணோடப் பேசவே வெடவெடங்கும்.. "
"அவன் ஹிரோடா... ஒரு பொண்ணைத் தன் பின்னாடி வர வெச்சுட்டான்..."
"அவன் கில்லாடி" மாத்தி மாத்தி அமீதைப் புகழ்ந்தோம்.
அமீதும் பானும் சந்தோஷமா வாழ மனசார வாழ்த்தினோம். அப்புறம் நான் மேல எம்.பி.ஏ படிக்க சென்னைக்கும்.... மனோ எம்.சி.ஏ படிக்க ம்துரைக்கும்... ஜெரா ஒரு கம்பெனியிலே வேலைக் கிடச்சு பெங்களூர்க்கும் போயிட்டோம்.
வருஷத்துக்கு ஒரு தடவையோ... இல்ல 2 தடவையோ ஊர்ல்லப் பார்த்தாப் பெரிய விஷயம்.
அமீது குடும்பமும் சரி... பானு குடும்பமும் சரி... இந்த சம்பவத்துக்குப் பிறகு ஊரை விட்டுப் போயிட்டாங்க.. எந்த தகவலும் இல்ல...
படிப்பு முடிஞ்சு நல்ல வேலையும் கிடைச்சுது... அப்படியே வாழ்க்கை வேகமாப் போக ஆரம்பிச்சுது...
ஜெரா இப்போ அமெரிக்கால்ல இருக்கான்... கல்யாணம் ஆயிடுச்சு... ஒரு குட்டிப் பொண்ணு இருக்கா,,
மனோவுக்கு கல்யாணம் முடிவாகி இருக்கு... அவன் நிச்சயதார்த்துல்ல நாங்க மூணுப் பேரும் மறுபடியும் சந்திச்சோம்...
அப்போ அமீது பத்தி பேச்சுத் திரும்பிச்சு...
"மாப்பி அமீதை எப்படியாவது என் கல்யாணத்துக்குக் கூப்பிடணும்டா"
"என் கல்யாணத்துக்கு மிஸ் ஆயிடுச்சு... இப்போ இவன் கல்யாணத்துக்குக் கண்டிப்பாக் கூப்பிடணும்" ஜெரா சேர்ந்துக் கொண்டான். ஜெரா மூணு மாச விடுமுறையிலே வந்து இருந்தான். மனோ கல்யாணம் முடிஞ்சுத் தான் அமெரிக்காத் திரும்புவதாய் இருந்தான்.
"மீது மும்பை போய் 7 வருஷம் ஆச்சு... இப்போ அவனுக்கு பானுவுக்கும் அமீது ஸ்பீடுக்கு குறைஞ்ச பட்சம்... மூணு இல்ல நாலு குழந்தை இருக்கும்...." இது மனோ.
"அவனும் அவன் குடும்பமும் வந்தாக் கல்யாண வீடு களைக் கட்டும்னு சொல்லு"
"நாம் அமீதைத் தேடிக் கண்டுபிடிப்போம்...."
அதுக்கு ஏத்தா மாதிரி எனக்கும் அலுவலக் வேலையா மும்பைப் போற வாய்ப்பு ஒண்ணும் கிடைச்சுது..
இந்தக் கதையின் இரண்டாம் பாகம் படிக்க இங்கே சொடுக்கவும்நட்பென்னும் தீவினிலே - பகுதி 2
Monday, January 02, 2006
கவி4: உன்னிடம் கேட்கலாமா?

..
வழியிலே வீசி எறிய
வலிய வந்து வாங்கினாய்
என் இதயம்
கண்ணிலே தீ மூட்டி
கண்ணீரிலே அணைத்தாய்
என் காதல்...
புன்னகையில் பூத்து
மௌனத்தில் உதிர்கிறது
என் நேசம்
வார்த்தையில் வளர்த்து
வலியில் முடித்தாய்..
என் உறவு
குருடனின் கண்களுக்கு
கனவுகள் கொடுத்தது ஏன்?
பாலைவன பயணிக்கு
மழைவாசம் தெரிவிததது ஏன்?
பதில் வேண்டாம்...
கேட்க நினைத்தேன்
கேட்கிறேன்..
Saturday, December 24, 2005
கவி3: அவசரக் கவிதை

அதிகாலைப் பொழுதுகளில்
அவசரமாய் பூக்கும் பூக்கள்...
அந்த அழகின் சிரிப்பில்
அதனருகே இருக்கும் முட்கள்
அவ்வளவாய் தெரிவதில்லை....
விடலைப் பருவத்தில் காதல்
கத்தியின் கூர்முனை...
வீச்சரிவாளின் வேகம்,,,
தெறித்து விழும் வார்த்தை..
இலக்கு நானாகும் வரை
உணரவில்லை வலிக்குமென்று
மேடு பள்ளம்...
காடு மலை....
கல்.. முள்...
பார்த்துச் செல்லுவது
புரியவில்லை பயணம் தடைபடும் அரை
ஒரு முறை ஓவியம்
வாழ்க்கை....
தூரிகைக் கைகளில்
வண்ணங்கள் கண்களில்....
புரிதல்....
முயற்சிக்கிறேன்...
என்னால் முடியும் வரை...
கதை4: பழைய பனையோலைகள்


பழைய பனையோலைகள் - வைரமுத்துவோட புத்தகம் கையிலே இருந்துச்சு... படிக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி எதோ எனக்குள்ளே ஒரு ஞாபகம். எனக்கும் எதாவது பழைய பனையோலைகள் இருக்குமான்னு.. atleast காகித ஓலைகளாவது இருக்குமான்னு தேடிப் பார்க்குற ஆசை பீறிட்டுக்கிட்டு வந்துச்சு..டக்குன்னு வைரமுத்துக்கு ஒரு சின்ன பிரேக் விட்டுட்டு என் ரூம் பரணை மேல லூக் விட்டேன். ம்ம்ம் சோனி மியூசிக் சிஸ்டம் வாங்குன அட்டைப் பெட்டி அட்டகாசமா இருந்துச்சு...உள்ளே தான் என் பழைய காகித ஓலைகளின் குடியிருப்பு இருக்கும்.இன்னிக்கு சனிக்கிழமை வேற.. பசங்க வழக்கம் போல அவுட்டிங் பிளான் போட்டுச் சொதப்பி வைச்சுட்டானுங்க... முக்கியமா அந்த திருப்பெரும்புதூர்காரன் சுமதி தியேட்டர்ல்ல அப்படி இப்படி படம் போட்டா அங்கேயே செட்டில் ஆயிடுறான்.
சரி நான் விஷயத்துக்கு வர்றேன்.. நானே கஷ்ட்டப்பட்டு அந்த மெகா சைஸ் பெட்டியை கீழே இறக்கி வைச்சேன். அச்சுன்னு ஒரு தும்மல்.
புதையலைக் கண்டவன் கணக்கா செம feelingaa பொட்டியைத் தொறக்கிறேன். அஞ்சாம் கிளாஸ் நோட் புக் ஒண்ணு கண்ணுல்ல படுது..பட்டாம்பூச்சி ஸ்டிக்கர் லேபல் போட்ட நோட்புக். அப்பா கூட மையிலாப்பூர் மாடவிதீயிலே அலைந்து ரவி புக் ஹவுஸ்ல்ல வாங்குன லேபல்.. என் முகத்திலே ஒரு ஸ்மைல்.. பிளாஷ் பேக் போயிட்டு ரிட்டர்ன் ஆகுறேன். நோட் புக்கைத் திறந்துப் பார்க்குறேன். சின்னதா ஒரு சிலுவை அடையாளம் முதல் பக்கத்துல்ல இருக்கு..ச்சே அந்த வயசுல்லேயே அப்படி ஒரு பக்தி எனக்கு..
P.K.Devnath V A, montfort preparatory school Rough note bookன்னு capital lettersல்லே எழுதி இருக்கேன். ம்ம்ம் என் பழைய பனையோலையில் கரையானின் படையெடுப்பு..ச்சே எரிச்சல் வருகிறது.
ஆஹா...... I will not talk in tamil in class.... I will not talk in tamil in class... ச்சே அந்த சின்ன வயசுல்ல எனக்கு என்ன ஒரு தமிழ் உணர்வு இருந்து இருக்கு.
தமிழுக்காக என் பிஞ்சு விரல் நொந்து நூலாக 300 தடவை imposition எழுதி இருக்கேனா பார்த்துக்கோங்க.அந்த இங்கீலிஷ் மிஸ் பேர் ஞாபகத்துக்கு வர்றல்ல. யோசிச்சுப் பார்க்குறேன். கண்டிப்பா என் கூட அப்போ சுப்பு அப்புறம் செந்தில் எல்லாரும் அந்த imposition எழுதி இருப்பாங்க. ஒரு சின்ன சந்தோஷம் தான். உங்க தகவலுக்கு, சுப்பு இப்போ சாப்ட்வேர் இஞினீயரா உலகம் சுத்திகிட்டு இருக்கான். செந்தில் டாக்டரா பல நோயாளிகள் நாடியைப் பிடிச்சுப் பார்த்துட்டு இருக்கான். நான்... உங்களுக்குத் தாந் தெரியுமே என் பழைய பனையோலைகளை புரட்டிகிட்டு இருக்கேன். ஒவ்வொருப் பக்கமா மெதுவாத் திருப்புறேன்.
ஆஹா ஒரு வட்டம் ( அது face)..அதுக்குள்ளே சின்னதா ரெண்டு புள்ளி ( அது கண்ணு) குறுக்கே ஒரு கோடு ( அது வாயாம்)... அப்புறம் பெருசா ரெண்டு காது.. குச்சி குச்சியா ரெண்டு காலு... அதுக்கு கீழே குறிப்பு வேற எழுதி இருக்கேன்..... PT master is a monkey-donkey .... இப்போ படிக்கும் போது கூட சிரிப்பு தாங்கல்ல..
அதே பக்கத்துல்ல... நான் ஒரு பெரிய ஆளூ.. ஹிந்தி படிக்கும் முக்கேஷ் தமிழில் என்னமோ எழுதி இருந்தான்.
அட அட... INDIA VS PAKISTAN...SCORE BOARD
Kapil dev - 100 Srikanth - 0 Vengsarkar - 25 Azharudhin - 23
ச்சே இந்தியா பாக்கிஸ்தான் கிட்டே தோத்துப் போயிருச்சு...பள்ளிக்கூடக் காலத்திலே ரொம்ப பிரபலமான விளையாட்டு.. பேர் book cricketங்கோ. அறிவியல் புத்தகத்தை புரட்டிப் புரட்டி விளையாடுற விறுவிறுப்பான விளையாட்டு.. அந்த புள்ளி விவரம் தான் இப்போ பார்த்துகிட்டு இருந்தேன்.
FLAMES , F அடிச்சு இருக்கு...L அடிச்சு இருக்கு...ஆஹா M மட்டும் அடிக்கப்படாமல் இருக்கு.. M FOR MARRIAGE...எனக்கு யாருக்கும் கல்யாணம்.. ஆ.. ஆர்.ரேணுகுமார்..என்னோட நண்பன் அவன்.. அந்த அறியா வயசுல்ல எனக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆகிடுமோன்னு எவ்வளவு பயந்துப் போயிருப்பேன் தெரியுமா? இப்போ நினைச்சு நினைச்சுச் சிரிக்கிறேன். ரேணு இப்போ ஆஸ்த்ரேலியாவிலே இருக்கான்.. அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல்ல. ஆனா எனக்கு ஆயிடுச்சு...
அட பாருடா பிலோமினா மிஸ் கையெழுத்து... VERY GOODன்னு எழுதி இருக்காங்க.. நான் படிக்கிற பையன்ங்கோ.
இன்னும் என்ன என்னமோ CARICATURES, FUN WORDS,CODE WORDS..அதை எல்லாம் இப்போ படிக்கும் போது மனசுக்குள்ளே ஒரு இனம் புரியாத சந்தோஷம்...பக்கத்துக்கு பக்கம் அனுபவிச்சு ரசிச்சு புரட்டிக்கிட்டு இருந்தேன்.
அடுத்த பக்கத்துல்ல ஆகா!!! மயிலறகு....ச்சே இன்னும் குட்டி போடலை... வருஷம் 15 ஆச்சு...இன்னும் குட்டி போடலை... REPRODUCTION சூத்திரங்கள் தெரியாதப் பருவத்தில் மயிலறகு நோட்புத்தகத்தோடு புணர்ந்து பிள்ளைப் பெற்று எடுக்கும் என்று ஒரு நிச்சயமான நம்பிக்கை.. யார் கொடுத்தா மயிலறகு? எதிர் வீட்டு மீனாம்பிகா அக்காவா?? இல்லை மாடி வீட்டு கலா அக்காவா??ம்ம்ம் பள்ளிக்கூட நண்பர்களா?? ஆங்.. ஞாபகம் வந்துறுச்சு.. நாங்க வாடகைக்குக் குடியிருந்த மயிலாப்பூர் வீட்டுக்கர வசந்தா அத்தை கொடுத்தாங்க.. கொடுக்கும் போது அந்த மீசை மாமா கிண்டல் பண்ணதா சிரிச்சது ஞாபகம் வந்துச்சு.
ஆனா இப்போ மனசுல்ல ஊசிக் குத்துனாப்பல்ல ஒரு வலி..
டக்குன்னு நோட் புக்கை மூடி வச்சுட்டு எழும்பிட்டேன்.
அந்த மாமா போன மாசம் இறந்து போயிட்டாங்க... நான் போகல்ல...
சிரிச்ச முகமாப் பார்த்த அத்தையை வேற எப்படியும் பார்க்க என்னாலே முடியாது...ரூமை விட்டு அவசரமாய் வெளியே வந்தேன். பைக்கை எடுத்துட்டு கடற்கரைப் பக்கமாப் போயிடேன்.சில நேரங்களில் சில விஷயங்களுக்கு அர்த்தம் புரிவதில்லை...அர்த்தம் தேடுவதிலும் அர்த்தம் இல்லை...
Friday, December 16, 2005
கவி2: சென்னையில் ஒரு மழைக்காலம்.

கண்ணிமைத் தாண்டி கண்...
கரைக் கட்டித் தெறித்து...
முகம் முழுக்க நனைத்து..
முத்தத்தால் என்னைப் புதைத்து...
என்னைச் செல்லமாய் சீண்டி...
என்னுள்ளே அனுமதியின்றி நீந்தி....
தன் வாசனை என்னில் பூசி...
தயக்கமின்றி என் தேகம் தீண்டி...
அடைபட்ட வாசல்கள் திறந்து...
அங்கத்தில் சங்கமம் ....
சித்தம் சில்லிட்டது...
சிறைபட்டது...
மொத்தமாய் கொடுத்தேன்...
முற்றிலும் நனைந்தேன்....
இன்னும் என்னைத் துவை...
இதயம் வரை நனை....
இது எனக்குப் பிடிச்சிருக்கு....
ஈரம் சொட்ட ...
பாதங்களை வருடி...
பாடங்களை முடித்து
வழிந்தோடும்...
வானத்தின் நீர்த் துளிகள்....
மழை.. சின்ன சின்னதாய் தூறல் பெருத்து...
மண்ணை முத்தமிட்டக் காதல் கண்டேன்......
பி. கு
(கவிதை எழுத காகிதம் தேடினேன்...
காதல் கொண்ட வான் மகள்... அதற்குள் கோபம் கொண்டாளோ...)
ம.பி.கு
(தொலைக்காட்சியில் மழை வெள்ளச் செய்திகள்...பறிகொடுத்த மக்களின் பரிதாபப் படங்கள். வெளியே வந்து நின்றேன். மழை விட்ட பாடில்லை... என் மீது தெறித்த மழை துளிகள் ஏனோ இப்போது தீயாய் சுடுகின்றன.)
Wednesday, December 14, 2005
கதை3 : நானும் என் கவிதையும் - பாகம் 3
"மச்சான் இது என்னப் பேச்சு .. நான் பார்த்தப் பொண்ணைத் தான் அப்பா ஒ.கே. பண்ணார்ப்பா"
முதல் பந்துல்லேயே என் விக்கெட் விழுந்த எண்ணம் உண்டானது. சுதாரித்து அடுத்த கொக்கியைப் போட்டேன். "ஓ!! பொண்ணுப் பார்த்து உனக்கும் பிடிச்சு உங்க அப்பாவுக்கும் பிடிச்சு ஓ.கே ஆயிடுச்சு கரெக்டா"
"அட விவரம் இல்லாதவன் மாதிரி பேசுற.. நீ சென்னையிலே தானேப் பொறந்து வளந்த.. மச்சான்.. இது லவ் மெரேஜ்டா... புரியுதா. அஞ்சு வருஷமா ஓடுது.. ஏன்டா உனக்கு சென்னையிலே ஒரு கேர்ள் பிரண்ட் கூடவா இல்ல... அங்கே எல்லாம் அஞ்சு வயசு பையன் கூட அஞ்சு.. ஆறு கேர்ள் பிரண்ட்ஸ் புடிச்சுடுறாங்களாம் " என்றான்.
"ஜெயா MSc வரைக்கும் படிச்சுருக்கா.. நமக்கு BScக்கு மேல அந்த கல்விக் கடல்ல நீச்சல் அடிக்க இஷ்ட்டம் இல்ல..."
ஓஹோ..பொண்ணுப் பேர் ஜெயாவா ( இவனுங்க எல்லாம் லவ் பண்ணுறானுங்க நானும் தான் UG,PG,PGDIB,NIIT ம்ம்ம்ம் பன்னாட்டு மென்பொருள் கம்பெனி வேற.. ஒரு மண்ணுக்கும் லாயக்கு இல்ல...இருக்கட்டும் இந்த வாட்டி இந்த கவிதையை வைச்சு அப்படியே மாலாவை மடக்கிற வேண்டியது தான்.)
"இதோ இந்த மோதிரம்.. அவளுக்காக நான் காதலனா வாங்குன பரிசு... அதான் கல்யாணத்துக்கு முன்னாடி அவ விரல்ல இதை ஒரு காதலனாப் போட்டு அழகுப் பார்க்கணும்...அதான் இப்போ போயிட்டு இருக்கோம்.."
எனக்கு வயிறு எரிந்தது.. அட பாவிகளா.. கடைசியா இந்த வேலையும் என்னிய பாக்க வச்சிட்டிங்களாடா.. கடுப்பில் அமைதியா உட்கார்ந்திருந்தேன். ஒரு மாதிரி என்னைத் தேத்திகிட்டு அவன் கிட்டே " ஏன் மாப்பிள்ளை.. வந்ததிலந்து பாக்குறேன்.. அமிர்தலிங்கத்தை காணுமே? கடையிலே வேலை அதிகமோ" என்று கேட்டேன்.
"ஓ சார் உன் சிறு வயசுக் கூட்டாளி இல்ல... அவன் அவங்க அண்ணன் கூட சேந்து கவுந்தப்பாடி பக்கம் தனி கடை வச்சு ரெண்டு வருஷம் ஆச்சு. அவனுக்கு கல்யாணம் எல்லாம் ஆயிடுச்சு. நாளைக்கு கல்யாணத்துக்குக் கண்டிப்பா வருவான்.. அப்போ பாரு.."
வாழ்க்கை எவ்வளவு வேகமாப் போயிகிட்டு இருக்கு... ம்ம்ம் கையாலெ சட்டைப் பையில் இருந்த காகித்தை ஒரு தடவைத் தொட்டுப் பார்த்துகிட்டேன். மாலாவைப் பத்தி மகேஷ் கிட்டே கேட்டுர வேண்டியது தான்.
பைக் கோயில் பக்கம் போய் நின்னுச்சு.
"மச்சான் நீயும் வர்றியா.. என் ஜெயாவை உனக்கு அறிமுகம் பண்ணி வக்கிறேன்."
"எப்படியும் நாளைக்கி காலையிலே அறிமுகம் ஆகத்தானே போறா..இப்போ நீ போ... இன்னிக்குக் காதலியா இருக்க வரைக்கும் இனிமை எல்லாம்... நாளைக்கு மனைவியான பிறகு அவ்வளவு தான்.. SO U GO AND ENJOY " பெரிய மனுஷன் டயலாக் எல்லாம் அள்ளி விட்டேன்.
'நாளையிலே இருந்து ஆயுசுக்கும் உன் வீட்டுல்ல ஜெயா டி.வி தான்.. இன்னிக்கும் இவ்வளவு நேரம் வறுக்கணுமா... எப்படியோ ஒரு வழியா வந்தியே.. போலாமா.." 7வது சிகரெட் புகையை வட்டம் வட்டமா விட்டுகிட்டு பைக் பார்த்து நடந்தேன்.
"மச்சான் ஒரு நிமிஷம் நில்டா..." நானும் நின்றேன்.
"என் ஜெயாவுக்கு உன்னைப் பார்க்கணுமாம்... இதோ வந்து இருக்காப் பாரு..."
நான் அவசரமா வாயிலிருந்து சிகரெட்டைக் கீழேப் போட்டுட்டுத் திரும்புனேன். என் முகத்தில் குறைஞ்சது ஒரு லிட்டர் அசடு வழிஞ்சு இருக்கும். ஒரு மாதிரியாச் சிரிச்சு... அவன் ஜெயாவுக்கு ஹாய் சொல்லுறதா இல்ல வணக்கம் சொல்லுறதான்னு குழம்பி எதுமே சொல்லாம மறுபடியும் ஒரு சிரிப்பு சிரிச்சு வச்சேன்.
"என்னை உங்களுக்குத் தெரியல்லியா..."ன்னு கேட்டாள். என் விழிகள் விரிந்தன.
ரொம்ப வருஷம் ஆச்சு நீங்க சம்மர் லீவுக்கு எங்க ஊருக்கு வந்து.. எப்படி இருக்கீங்க?
நீங்களும் இவங்க கடை அமிர்தலிங்கமும்.. சேர்ந்து பண்ண லூட்டி எல்லாம் உங்களுக்கு இப்போ ஞாபகம் இருக்கா?? போகட்டும் இந்த கவிதையாவது ஞாபகம் வருதா!!!
பொண்ணு பேர் மாலா.....
அவ ஜடை குரங்கு வாலா....
அவ கண்ணு கிரிக்கெட் பாலா..
அவங்க அப்பா பெரிய ஆளா...
ஜெயா கலகலன்னுச் சிரிச்சா.
எனக்குச் சுத்தமாப் பேச்சே வர்றல்ல. சிரிப்பு கூட தவணையிலேத் தான் வந்துப் போச்சு.
"ஆமா இப்போவும் கவிதை எல்லாம் எழுதிறீங்களாமே மகேஷ் சொன்னார்..எனக்கு கவிதைன்னா ரொம்பப் பிடிக்கும்.. எதாவது கவிதை இருந்தாக் கொடுங்க.. படிக்கிறேன்"
என் கை சட்டைப் பைக்குப் போய் தொட்டுப் பார்த்து கொண்டது
"இப்போ எதுவும் இல்லை.. அப்புறம் கட்டாயமாத் தர்றேன்" முகத்தில் ஒரு அவஸ்தையான புன்னகையோடு சொன்னேன்.
"சரிங்க டைம் ஆச்சு வீட்டுல்லத் தேடப் போறாங்க. இத்தனை வருஷம் கழிச்சு உங்களைச் சந்திச்சதுல்ல ரொம்ப சந்தோஷம். நாளைக்குக் காலையிலே பாக்கலாம்" அவனுடைய ஜெயா பை சொல்லிட்டுப் போனா.
"பொண்ணோட முழு பேர் என்ன?"
"மாப்பி... நீ முன்னாலே கிளம்பு நான் பின்னாலே வர்றேன்."
"டேய் எப்படி வருவே...?
"நான் பஸ் பிடிச்சு வந்துருவேன்...இப்போ எனக்குக் கோயிலுக்குப் போய் சாமி கும்பிடணும் போல இருக்கு.. அப்படியே கொஞ்ச நேரம் கோயில்ல உட்கார்ந்துட்டு வரணும் போல இருக்குடா..."
"ஓஹோ ஐயாவுக்கும் கல்யாண ஆசை வந்துடுச்சா. நல்லா வேண்டிக்க.... சீக்கிரமா வந்துடுடா"
சட்டைப் பையில் கவிதைப் பத்திரமா இருந்தது.. அந்த இடம் லேசா வலிச்சது...
பொட்டிக் கடைகாரரிடம்
(இந்தப் பதிவு முற்று பெறுகிறது.)
Tuesday, December 13, 2005
கதை3: நானும் என் கவிதையும் - பாகம் 2
(இதன் தொடர்ச்சியை நானும் என் கவிதையும் - பகுதி 3ல் படித்துக் கருத்து பதியுங்கள் - நன்றி)
Friday, December 09, 2005
கதை3: நானும் என் கவிதையும் - பாகம் 1
கூடவே அந்த ஆர்வத்துல்ல கொஞ்சம் கோளாறும் ஏற்பட்டுப் போச்சு...அதுக்கு அவன் தான் முழு முதல் காரணம். அவன் பேர் அமிர்தலிங்கம். தீவிரமான் ரஜினி ரசிகன். எனக்க்கு முதன் முதலா முன் நெற்றி முடியைக் கோதி விட சொல்லிக் கொடுத்தவன் அவன் தான். எனக்கு ஒரு 8 வயசா இருக்கும் போதுல்லருந்து அவன் நல்ல நண்பன். கோடை விடுமுறை நண்பன். அவன் எங்க மாமா கடையிலேத் தான் வேலைச் செய்ஞ்சான். எங்க மாமா ஈரோடு பக்கம் ஒரு ஊருல்ல மளிகை கடை வச்சு இருக்கார். நல்ல சுறுசுறுப்பான பையன். முக்கா டிரவுசர்... அஞ்சுக்கு மூணு பட்டன் போடத சட்டை....எப்பவும் பளிச்சுன்னு ஒரு சிரிப்பு... தெறிச்சு விழுவுற நக்கல் பேச்சு... இதெல்லாம் அவன் அடையாளம். என்னை விட மூணு. நாலு வருஷம் பெரியவன். ஆனா எனக்கு செம தோஸ்து. பக்கத்து டீ கடையிலே ஓடுற பாட்டு தான் எனக்கு முதல் கவிதை பாடம்.
அந்த கடை தான் பள்ளி கூடம்.. எங்க மாமாக் கடை அரிசி மூட்டை தான் பெஞ்ச்.. வாலி.. வைரமுத்து எல்லாம் அப்போ எனக்கு தெரியாது.. ஒரு பேப்பர் எடுத்துக்குவேன்.. பில் போடுற பேனா தான் எனக்கு எழுத்தாணி.. யோசிப்பேன்...யோசிப்பேன்... மணிக்கணக்கா...யோசிப்பேன். அப்புறம் எழுதுவேன் பாருங்க...
பொண்ணு பேர் மாலா.....
அவ ஜடை குரங்கு வாலா....
அவ கண்ணு கிரிக்கெட் பாலா..
அவங்க அப்பா பெரிய ஆளா...
இது எப்ப்டி இருக்கு ?? என்பேன் நான்.... அவன் ஆஹா.. ஓஹோ... என்பான்...
9வது விடுமுறை இப்படியேப் போச்சு..
மாலா ஆரிய மாலா DANCE...
அதுக்கு நீயும் நானும் FANS...
நம்ம எல்லாம் GENTLEMANS...(அப்போவே எனக்கு இங்கீலிஷ் புலமை ஜாஸ்த்தி)
ஓட்டுவோம்டா சூப்பரா VANS...
இது மொத்தமும் மாலாவோட அப்பாவுக்கு தெரியவர.. அவங்க அப்பா அந்த ஊர் பஞ்சாயத்து போர்ட் தலைவராம்.எங்க மாமாவுக்கு மிரட்டல் வர .. எனக்கு உருட்டல் வந்து நான் ஈரோட்டிலிருந்து சென்னைக்கு உடனே உருட்டப்பட்டேன்.
" தம்பி, இதெல்லாம் கிராமம். உங்க மெட்ராஸ் இல்லை.. இங்கே எல்லாம் அடக்கம் தேவை.." மாமாவின் பாச மொழிகள்.
"சின்ன பையன் எதோ விளையாட்டா செஞ்சுட்டான்.. விடுண்ணா..." என் அம்மாவின் சிபாரிசு எடுப்படவில்லை. "ம்ம் இவனா .. விவரமான பையன்.. இங்கேயிருந்தாக் கடைப் பசங்களையும் கெடுத்துடுவான்.. கூட்டிட்டு கிளம்பு" அவசர ஆணை. அந்த நாள் என் டைரியில் குறிச்சு வச்சுகிட்டேன். மாமனா நீ.. என் மாமாவிற்கும் எனக்கும் ஜென்மப் பகைக்கான வித்துப் போடப்பட்டது.. வாய்யா.. வா.. எப்போவது மெட்ராஸ்க்கு வருவெ இல்ல அப்போ உன்னைப் பார்த்துக்கிறேன். மன்சுக்குள் சபதம் போட்டுக் கொண்டேன். இதுக்கெல்லாம் காரணமான என் ரசிக மன்றத் தலைவனும் மற்றும் ஒரே உறுப்பினனும் ஆன அமிர்த்லிங்கம்..எதுவுமே தெரியாத்துப் போல் அரை கிலோ பருப்பை அதே மாலாவுக்குக் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான். எனக்கு கோபம் கிலோ கணக்கில் வந்தது... சரி அவன் பாவம்..மாமாவுக்குப் பயப்படுறான்.. என் கோபம் எல்லாம் அந்த மாலா மீது தான். நான் தலைக் குனிந்து நின்னேன்.. ஒரு கட்டத்துல்ல தலையை நிமிர்த்தி பார்ட்க்கிறேன்.. அவ முறைச்சு பார்ப்பான்னு நெனைச்சா.. அவ எனனைப் பார்த்து சுளுக்குனு சிரிக்கிறா...எனக்கு ஒரே அசிங்கமாப் போச்சு.. இப்போ என் கோபம் டன் கணக்கிலே ஏறி போச்சு...
அம்மாaaaaaaaaaaaaa... அந்த ஆளு தான் போ.. போன்னு சொல்லுறாரு இல்ல...வா போலாம்... மாமானாம் மாமன்...வாம்மா " என்ற என் குரல் எனக்கே கொஞ்சம் அந்நியமாய் தான் பட்டது.. மாலா இப்போ சிரிக்கவில்லை.. எனக்கு உள்ளுக்குள்ளேப் பயங்கர சந்தோஷம்...மாமா மூஞ்சி.. இடி விழுந்த கரண்ட் கம்பம் மாதிரி கருத்துப் போச்சு... எனக்கு அது இன்னும் சந்தோஷமாப் போச்சு.
அந்த கோடை விடுமுறை முடிஞ்சு கிட்டத்தட்ட 12 வருஷம் ஆச்சு...
எனக்கு இப்போ நல்லாவேக் கவிதை எழுத வருது. கல்லூரியிலே நிறைய போட்டிகள்ல்லே முதல் பரிசு வாங்கியிருக்கேன். என் கவிதைக்கு அங்கீகாரமாக் கம்பன் கழகத்தில் கூடப் பரிசு வாங்கியாச்சு.. நானும் இப்போ ஒரு கவிஞன். புதுக்கவிதையிலே புது விதி செய்யும் முயற்சியில் நான் இருந்த நேரம்.
"டேய்... நம்ம மகேஷ் கல்யாணம்டா..கண்டிப்பா நாம எல்லோரும் போகணும்.. நீயும் கண்டிப்பா வரணும்..என்னிக்கோ மாமாக் கூடச் சண்டைப் போட்டதுக்கு இன்னிக்கும் அடம் பிடிச்சா எப்படி? நீ கண்டிப்பா வர்ற.. உங்க அப்பா உனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துட்டாரு.." அம்மாவின் அன்பு கட்டளை.
மீற முடியாது. நான் கொஞ்சம் அம்மா பிள்ளை. சரி என்று தலை ஆட்டினேன். அந்த நிமிஷத்துல்ல இருந்து பழசு எல்லாம் பட்டுன்னு ஞாபகத்துகு வருது. டீ கடை.. அரிசி மூட்டை பெஞ்ச்... கொட்டாங்குச்சி பாட்டு...பில் பேனா.. பழைய பேப்பர்... என் முதல் கவிதை...( வரிகள் லேசாத் தான் ஞாபகம்.. சிலது இப்போ நானாச் சேர்த்துக்கிட்டது... அப்படீன்னா அப்போ எழுதுனது இதை விட மோசமாத் தான் இர்ந்து இருக்கும்ன்னு தெரிஞ்சிக்கோங்க)...
அமிர்தலிங்கம்.. அவன் கடை கதவுல்லே ஒட்டி வச்சு இருந்த தலைவரோட சிவா படத்துக் குதிரை ஸ்டில்....
அவன் என் கவிதைக்குக் கைததட்டி என்னை உசுப்பு ஏத்தியது..
அப்புறம் மாலா....மேல யோசிக்கிறேன்...முடியல்ல.. ம்ம்மாலா இப்போ எப்படி இருப்பா? அவக் கண்ணு இப்போ எப்படி இருக்கும்?
நினைப்பு அவளையேச் சுத்திச் சுத்தி வந்தது... பாவாடைத் தாவணிப் போட்டுக் குத்துவிளக்கு மாதிரி இருப்பாளோ இல்லை சுடிதார் போட்டுத் தூக்கலா இருப்பாளோ? (சென்னையிலே JEANS பார்த்துப் பார்த்துச் சலிச்சுப் போச்சு...) மனசுக்குள்ளே ஒரு சுகமானத் தவிப்பு... என்னையும் அறியாமல் மனசு ரெக்கை கட்டிப் பறக்க ஆரம்பிச்சுது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிக்குறேன்.. என் சட்டைப் பைக்குக்குள் அவளுக்காக எழுதுன கவிதை... இந்த கவிதையை அவளுக்குக் காட்டணும்.. இதோ ரயில் வந்துடுச்சு... மீதிக் கதையை ஊருக்குப் போயிட்டு வந்துச் சொல்லுறேன்... கொஞ்சம் பொறுத்துக்க்ங்க்....
(இதன் தொடர்ச்சியை நானும் என் கவிதையும் - பகுதி 2ல் படித்துக் கருத்து பதியுங்கள் - நன்றி)
நிறைவுப் பகுதிக்கு இங்கே நானும் என் கவிதையும் - பாகம் 3 இங்கேச் சுட்டவும்


